Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Part 46

பாகம் 46

மறுநாள் காலை

பார்வதியிடமிருந்து விடைபெற தயாரானார் தாட்சாயணி. வர்ஷினியும் சுதாவும் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டார்கள். அவர்கள் இன்று காஞ்சிபுரம் செல்கிறார்கள்.

"ஹாப்பி ஜர்னி" என்றாள் வர்ஷினி

"உனக்கும் தான்" என்றாள் சுதா

"எனக்கா? நான் எங்கயும் போகலயே..."

"நான் வாழ்க்கைப் பயணத்தை சொன்னேன்" என்றாள் சுதா.

புன்னகையுடன் தலையசைத்தாள் வர்ஷினி.

"நான் உங்க எல்லாரையும் மிஸ் பண்ணுவேன்" என்றார் பார்வதி.

"நானும் தான், கா. கல்யாணம் ரொம்ப வேகமாக நடந்து முடிஞ்சிடுச்சி. இல்லன்னா, இன்னும் கொஞ்ச நாள் இங்க தங்கியிருக்கலாம்"

"நான் ரிசப்ஷனுக்கு வரலன்னு தப்பா நினைச்சுக்காதே" என்றார் பார்வதி.

"நிச்சயமா இல்ல... நீ முதல்ல நிமலையும் வர்ஷினியையும் கவனி. அவங்க சந்தோஷமா இருந்தா போதும்"

சரி என்றார் பார்வதி. அப்போது தனது பையுடன் அங்கு வந்தாள் அனு.

"சீக்கிரம் திரும்பி வந்துடு" என்றார் பார்வதி.

"ஓகே, ஆன்ட்டி" என்று அவர்களுடன் கிளம்பி சென்றாள் அனு.

......

தூக்கத்திலிருந்து கண் விழித்தான் நிமல். அவன் தலை, வெடிப்பது போல் வலித்தது. தலையை பிடித்தபடி எழுந்து அமர்ந்தவன், தான் கட்டிலில் படுத்திருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தான். நேற்று நடந்தவற்றை அவன் நினைவு படுத்த முயன்றான். ஆனால், அவனுக்கு எதுவுமே நினைவுக்கு வரவில்லை. அவனுக்கு எதுவுமே நினைவுக்கு வரவில்லை என்றாலும், ராஜா அவனை குடிக்க வைத்தது நினைவுக்கு வந்தது. அவனை பதட்டம் ஆட்கொண்டது. குடிபோதையில் அவன் என்ன செய்து வைத்தானோ தெரியவில்லையே... ஏற்கனவே, பல பிரச்சனைகள் அவன் தோளில் அமர்ந்து அழுத்திக் கொண்டிருக்கின்றன... போதாததற்கு இது வேறா...?

அப்பொழுது அவனுடைய பார்வை, பக்கத்து மேஜை மீது வைக்கப்பட்டிருந்த மாத்திரையின் மீது விழுந்தது. அதன் அருகில் ஒரு கண்ணாடி டம்ளரில் எலுமிச்சைப்பழ சாறும் வைக்கப்பட்டிருந்தது. அதை அங்கு வைத்தது யார்? அதை எடுத்து ஒரே மடக்கில் குடித்து முடித்தான். அது அவனுக்கு தேவை. அதைப் பற்றி யோசித்தபடியே குளியலறைக்குச் சென்றான்.

அவன் கீழ்தளம் வந்த பொழுது, வீடு நிசப்தமாய் இருந்தது. எல்லோரும் எங்கு போனார்கள்? அப்பொழுது தான், அவர்கள் அனைவரும் இன்று காஞ்சிபுரம் செல்வதாகக் கூறியது நினைவுக்கு வந்தது. தனது அலைபேசியை எடுத்து ஆகாஷுக்கு ஃபோன் செய்தான்.

"ஹாய் நிம்மு, உன் ஹாங்-ஓவர் எப்படி இருக்கு?"

"ரொம்ப மோசமா இருக்கு. நீங்க கிளம்பிட்டீங்களா?"

"ஆமாம்... உன்னை நாங்க சீக்கிரமே வர்ஷினியோட பாக்கணும்"

"ஹோப்ஃபுலி... எல்லாரையும் கேட்டேன்னு சொல்லு"

"ஷ்யூர்"

நிமல் அழைப்பை துண்டித்தான். வர்ஷினி, காலை உணவை மேசையின் மீது எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அவள் அருகில் வந்து பின்னால் நின்றான். அதை வர்ஷினியும் உணர்ந்து தான் இருந்தாள்.

"ஆக்சுவலி... நேத்து நைட்..." என்று தயங்கினான்.

"வந்து சாப்பிடுங்க" என்ற வர்ஷினியை திகைப்புடன் பார்த்தான் நிமல். ஏனென்றால், அங்கு யாருமே இல்லை என்ற போதும், அவள் அவனிடம் பேசினாள்.

அவனுக்கு சிற்றுண்டியை பரிமாறிவிட்டு, அவள் அங்கிருந்து செல்ல நினைத்த பொழுது, அவள் கையைப் பற்றி தடுத்த அவனை திரும்பி பார்த்தாள் வர்ஷினி.

"ஐ அம் சாரி... ஐ ட்ராங்க் லாஸ்ட் நைட்"

"ராஜா தான் உங்களை குடிக்க வச்சார். எனக்கு தெரியும்..."

நிம்மதிப் பெருமூச்சுவிட்டான் நிமல்.

"அம்மாவும் அப்பாவும் எங்க?"

"அம்மா கோவிலுக்கு போயிருக்காங்க. சீக்கிரம் வந்துடுவாங்க. அப்பா ஆஃபீஸ்க்கு போயிருக்காரு"

"ஆர் யூ ஆல்ரைட்?"

ஆம் என்று தலையசைத்தாள் வர்ஷினி.

"நமக்குள்ள நடந்த எல்லாத்துக்கும் சாரி..."

"முதல்ல சாப்பிடுங்க. நம்ம அப்புறம் பேசிக்கலாம்... நான் உங்களுக்கு டீ கொண்டு வரேன்"

சரி என்று தலை அசைத்தான் நிமல், இன்று அனைத்தையும் பேசி தீர்த்து விடுவது என்று எண்ணிக் கொண்டு. அப்பொழுது அவனுக்கு ராஜாவிடம் இருந்து ஃபோன் வந்தது.

"ஹலோ, ராஜா..."

"நீ எங்க இருக்க?"

"வீட்ல தான்"

"உன்னை நான் பார்க்கணும்"

"ஏதாவது சீரியசான விஷயமா?"

"ரொம்ப சீரியஸ். நம்ம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். என்னுடைய ஸோர்ஸ் வார்ன் பண்ணியிருக்காங்க. குமணன் சிலபேரை அஸைன் பண்ணியிருக்கிறாராம்..."

"என்னை கொல்லவா?"

"உன்னை மட்டும் இல்ல. வர்ஷினியை ஜாக்கிரதையா பாத்துக்கோ"

"இந்த மாதிரி ஒரு கேடுகெட்ட அப்பாவை நான் எங்கயும் பார்த்ததில்ல" என்றான் பல்லைக் கடித்தபடி.

"துரதிஷ்டவசமா, அவரு நம்ம வர்ஷினியோட அப்பா..."

"நான் உயிரோட இருக்கிற வரைக்கும் அவரால வர்ஷினியை எதுவும் செய்ய முடியாது"

"வர்ஷினியை காப்பாத்த நீ உயிரோடு இருக்க வேண்டியது அவசியம். அதை மறந்துடாதே"

"அவளை நான் பாத்துக்கிறேன்"

"வர்ஷினியை வீட்டைவிட்டு வெளிய வர வேண்டாம்னு சொல்லு"

"சரி"

"முடிஞ்சா பார்ட்டி ஆஃபீஸுக்கு வா. இதுக்கு நாம ஏதாவது செஞ்சாகணும்"

"நிச்சயம் வரேன்"

நிமல் அழைப்பை துண்டித்த போது, பார்வதி வீட்டினுள் நுழைந்தார்.

"அம்மா, வர்ஷினியை ஜாக்கிரதையா பாத்துக்கோங்க"

"ஏதாவது பிரச்சனையா?"

"ரொம்ப சீரியசான விஷயம், மா. புரிஞ்சுக்குவீங்கன்னு நினைக்கிறேன்"

அதைக் கூறும் போது அவன் பதட்டமாக காணப்பட்டான். அவனுக்காக தேனீர் கொண்டு வந்த வர்ஷினி, அதை அவனிடம் கொடுத்தாள். வேகவேகமாய் அதை குடித்துவிட்டு, அந்த குவளையை அவளிடம் கொடுத்தான். நேரத்தை வீணாக்காமல் ராஜாவைப் பார்க்க கிளம்பி சென்றான். வர்ஷினிக்கு வருத்தமாய் போனது. பிறகு பேசலாம் என்று அவள் கூறினாளே... பிறகு ஏன் அவசரமாய் சென்று விட்டான்?

மாலை

வர்ஷினி, பார்வதியுடன் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். அப்பொழுது பார்வதியின் கைபேசி ஒலிக்கத் தொடங்கியது. அந்த அழைப்பு, விஸ்வநாதனிடம் இருந்து வந்தது. அந்த அழைப்பை ஏற்று பேசினார் பார்வதி.

"நீங்க எங்க இருக்கீங்க? ஏன் இன்னும் வீட்டுக்கு வரல?"

"நம்ம நிமல் கார் ஆக்சிடென்ட் ஆயிடுச்சி"

அதை கேட்டு அதிர்ந்து சோபாவில் இருந்து எழுந்தார் பார்வதி.

"என்னங்க சொல்றிங்க...? நிமல் கார் ஆக்சிடென்ட் ஆயிடுச்சா...?" என்று கூச்சலிட்டு, வர்ஷினியை திடுக்கிட வைத்தார்.

அதைக் கேட்ட உடனேயே, வர்ஷினியின் கண்கள் கலங்கின. நேற்று குடித்திருந்த போது, நான் நாளைக்கே செத்துட்டா என்ன செய்வ? என்று கேட்டான் நிமல். இன்று உண்மையிலேயே அவனுக்கு விபத்து நேர்ந்து விட்டது. அவனுக்கு என்ன ஆனதோ! அவன் எப்படி இருக்கிறானோ தெரியவில்லையே, என்று பறிதவித்தாள் வர்ஷினி.

"இப்ப தான் எனக்கு மெசேஜ் வந்தது. நான் ஸ்பாட்டுக்கு போறேன். நான் வர லேட் ஆகும்" என்றார் விஸ்வநாதன்.

"இருங்க... ஆக்சிடெண்ட் நடந்தது எங்க?"

"எனக்கும் சரியா எங்கன்னு தெரியல. டென்ஷன்ல அதை கேட்க நான் மறந்துட்டேன். நிமல் வீட்டுக்கு தான் வந்துகிட்டு இருந்தான். சரி, நான் அப்புறம் பேசுறேன்"

அவர் அழைப்பை துண்டித்தார். தொப்பென்று சோபாவில் அமர்ந்தார் பார்வதி. அவருடைய தோளை பதட்டத்துடன் பற்றினாள் வர்ஷினி.

"நிமலுக்கு என்ன ஆச்சும்மா? அவர் நல்லா இருக்காருல்ல? அம்மா ஏதாவது சொல்லுங்க. நீங்க இப்படி இருக்குறத பாத்தா எனக்கு பயமா இருக்கு" என்று கண்ணீர் மல்க கெஞ்சினாள்.

"நிமலோட காருக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. அவனுக்கு என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியல..."

"அம்மா, நான் அவரைப் பார்க்கணும். நான் அக்சிடன்ட் ஆன இடத்துக்கு போறேன்" என்று எழுந்து நின்றாள்.

பார்வதியும் எழுந்தார்.

"நானும் உன் கூட வாரேன். வா போகலாம்" என்றார் கண்ணீர் பெருக.

இருவரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார்கள். பார்வதி கார் ஓட்டுனரை அழைத்தார். அவர்கள் அப்படி ஓடி வருவதைப் பார்த்து, நேரத்தை வீணாக்காமல் காரை ஸ்டார்ட் செய்தார் ஓட்டுனர்.

"ஆஃபிசுக்கு போங்க" என்றார் பார்வதி.

நிமல் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வரும் பொழுது தான் இந்த விபத்து நடந்தது என்று விஸ்வநாதன் கூறினார் அல்லவா...? அதனால் அலுவலகம் நோக்கி சென்றார்கள். இருவரும் இடை விடாமல் அழுது கொண்டிருந்தார்கள்.

"கடவுளே.... என் பிள்ளைய என்கிட்டயிருந்து பறிச்சி, என்னை தாண்டிச்சிடாத" என்று புலம்பினார் பார்வதி.

அவர் முகத்தை வெறித்துப் பார்த்தாள் வர்ஷினி. பறித்து கொள்ளவதா? அதற்கு என்ன அர்த்தம்? அப்படி என்றால், நடந்தது அவ்வளவு மோசமான விபத்தா? நிமலுக்கு ஏதாவது நேர்ந்து விட்டதா? அவள் உலகமே இருண்டு போனதை போல் உணர்ந்தாள். அவளுடைய தலைக்குள் பெருவெடிப்பு நிகழ்ந்தது.

சற்று தூரத்தில், மக்கள் கூட்டமாக இருப்பதை அவர்கள் பார்த்தார்கள். அங்கு ஒரு கார், மரத்தில் மோதியிருந்தது. அதன் முன் பகுதி மொத்தமாய் நொறுங்கிப் போயிருந்தது. பயத்தில் பார்வதியின் கையை கெட்டியாய் பற்றிக் கொண்டாள் வர்ஷினி. அவர்கள் காரை விட்டு கீழே இறங்கினார்கள். அந்த கூட்டத்தின் இடையே விஸ்வநாதன் இருப்பதை கவனித்தார்கள். அவர் இன்ஸ்பெக்டருடன்  பேசிக் கொண்டிருந்தார். நிமலுக்கு என்ன ஆனது என்பதை தெரிந்து கொள்ள, அவர்கள் விஸ்வநாதனை நோக்கி ஓடினார்கள்.

அப்போது, சற்று தூரத்தில், இருட்டில், யாரோ கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தாள் வர்ஷினி. சரியாய் பார்க்க முடியாததால், கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். அந்த இருட்டின் சாயலில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தான் நிமல், ஃபோனில் பேசி முடித்துவிட்டு.

எதைப் பற்றியும் கவலைப் படாமல், அவனை நோக்கி ஓடின வர்ஷினியின் கால்கள். அந்த இடத்தில் வர்ஷினியை பார்த்து திகைத்து நின்றான் நிமல். அவள் தன்னை நோக்கி ஓடி வருவதைப் பார்த்து, ஒன்றும் புரியாமல் அப்படியே நின்றான். அடுத்த நொடி அவன் மீது பாய்ந்து, அவன் கழுத்தை கட்டிக்கொண்டு ஓவென்று அழுதாள் வர்ஷினி.

இப்பொழுது நடந்து கொண்டிருப்பது உண்மை தான் என்பதை  நம்பவே முடியவில்லை அவனால்.  தன்னை சுதாகரித்துக் கொள்ள சில வினாடிகள் தேவைப்பட்டது நிமலுக்கு. அது உண்மை தான் என்று அவன் உணர்ந்த போது, அவனுடைய கைகள் வர்ஷினியை சுற்றி வளைத்துக் கொண்டன. இந்த நிமிடங்கள் அவன் வாழ்வில் இவ்வளவு சீக்கிரம் வரும் என்பதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

அழகிய புன்னகையுடன் கண்களை மூடிக்கொண்டான் நிமல். பிரேக் பிடிக்காமல் தாறுமாராய் ஓடிய காரிலிருந்து கீழே குதித்து, சாலையில் உருண்ட பொழுது அவன் உடலில் ஏற்பட்டிருந்த அனைத்து விதமான காயத்தின் வலிகளையும் மறந்து போனான் அவன். உண்மையில் சொல்ல போனால், அவன் பட்ட காயத்தின் விளைவு இப்படி இருக்கும் என்றால், அவன் எவ்வளவு காயப்படவும் தயார்.

அவர்களை ஒன்றாய் பார்த்து  விஸ்வநாதனும் பார்வதியும் சந்தோஷத்தில் திளைத்தார்கள். தங்கள் பிள்ளைகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று மனதார விரும்பியவர்கள் ஆயிற்றே அவர்கள்...!

அந்த அழகிய தருணம் தந்த பரவசத்தில் மேலும் மேலும் மூழ்கி கொண்டிருந்தான் நிமல். வர்ஷினியோ எதார்த்தத்தை உணர்ந்தாள். தன்னை சுற்றி இருந்த பிடி தளர்ந்ததை உணர்ந்தான் நிமல். கண்களை திறந்து, சங்கடத்துடன் தலைகுனிந்து நின்ற வர்ஷினியை கண்டான். அவளைத் தன் கரங்களில் இருந்து விடுவித்தான்.
தன்னை பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்த தன் பெற்றோரை பார்த்து, அவனும் புன்னகை பூத்தான்.

அப்பொழுது தூரத்தில் நிமல் கண்ட காட்சி, அவன் மூச்சை நிறுத்தியது. முகமூடி அணிந்த ஒரு மனிதன், வர்ஷினியை துப்பாக்கியால் குறி வைத்திருந்தான். ஒரு நொடியும் தாமதிக்காமல் காற்றைப் போல் சுழன்று, வர்ஷினியை லேசாய் தள்ளிவிட்டான். அந்த இரக்கமற்ற துப்பாக்கி குண்டு, அவனுடைய இதயத்திற்கு வெகு அருகில், அவன் நெஞ்சை துளைத்துச் சென்றது. சொல்லவொண்ணா அதிர்ச்சியடைந்த வர்ஷினி, நிமல் தன்னை நோக்கி வலி நிறைந்த புன்னகை சிந்துவதை பார்த்து திகைத்து நின்றாள். அவள் கன்னத்தை மெல்ல பற்றி,

"ஐ லவ் யூ, வர்ஷு..." என்று கூறியபடி அவள் மீது சரிந்தான் நிமல்.

ஆர் சி மருத்துவமனை

அவசர சிகிச்சைப் பிரிவின் வெளியே கல்லைப் போல் அமர்ந்திருந்தாள் வர்ஷினி. அவளுடைய கண்கள், அருவியைப் போல் விடாமல் கண்ணீரை சொரிந்து கொண்டே இருந்தன. நான்கு மணி நேரமாக, நிமல் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறான்.

அவன் கூறிய ஐ லவ் யு, வர்ஷு அவள் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. அதை அவனிடமிருந்து அவள் ஏற்கனவே பல முறை கேட்டிருந்தாலும், அவன் அதை கூறிய சூழல் அதற்கு மேலும் முக்கியத்துவத்தை கூட்டியது. துப்பாக்கி குண்டை தன் நெஞ்சில் வாங்கிக் கொண்டு, அவளிடம் சாவை நெருங்க விடாமல் செய்துவிட்டு அல்லவா அவன் அதை கூறினான்...! அவனுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் என்னாவது? அந்த எண்ணமே அவளின் இதயத்தை கூறு போட்டது. மருத்துவமனை வளாகத்தில் இருந்த சிறிய கோவிலை நோக்கி ஓடினாள் வர்ஷினி. இந்த உலகை வழிநடத்தும் மகா சக்தியின் முன் மண்டியிட்டு அமர்ந்து கை கூப்பினாள்.

"பெத்தவங்கன்னு சொல்லக் கூடியவங்க  என்னோட  இருந்தும் கூட, பிறந்ததிலிருந்தே நான் அனாதையா தான் இருந்தேன். எனக்கு நீங்க ஒரு அழகான பாதையை காட்டினீங்க. ஆனா, என் கையாலேயே நான் அதை பாழக்கிட்டேன். என் நிமலை காப்பாத்துங்க. எனக்கு அவர் வேணும். அவரை எனக்கு திருப்பி கொடுத்துடுங்க." என்று வேண்டினாள்.

அப்பொழுது தன் தோளை யாரோ தொடுவதை உணர்ந்து திரும்பினாள். கலங்கிய கண்களுடன் அங்கு நின்றிருந்தார் பார்வதி. அவரைக் கட்டிக் கொண்டு அழுதாள் வர்ஷினி.

"என்னை மன்னிச்சிடுங்க, மா. என்னால தான் நிமலுக்கு இந்த நிலமை. நான் ஏற்கனவே உங்ககிட்ட சொன்னேன். நான் ஒரு அதிர்ஷ்டம் கெட்டவ. இன்னைக்கு அது உண்மையாயிடுச்சு பாத்திங்களா? நான் நிமலை கொன்னுட்டேன்"

தன்னிடம் இருந்து அவளை பின் நோக்கி இழுத்தார் பார்வதி.

"ஷ்ஷ்ஷ்... நிமல் பிழைச்சிட்டான்னு சொல்லத் தான் நான் இங்க வந்தேன்..." என்றார் பார்வதி.

"நிஜமாவா மா?" என்றாள் கண்ணீரும் புன்னகையும் கலந்த முகத்துடன்.

ஆமாம் என்று தலையசைத்தார் பார்வதி.

"நான் ஏற்கனவே உன்கிட்ட சொன்னேன்ல? உன்னைப் பத்தி இப்படி எல்லாம் பேசாதேன்னு? நீ என்னோட மக. நிமலும் நீயும் எனக்கு ஒன்னு தான். உனக்கு வர்ற ஆபத்திலிருந்து அவன் உன்னை காப்பாத்தி தான் ஆகணும். அது தான் நல்ல புருஷனுக்கு அழகு. இன்னொரு தடவை உன்னை அதிர்ஷ்டம் இல்லாதவன்னு சொல்லாத. அப்படி சொன்னா, நான் உங்கிட்ட பேசறதை நிறுத்திடுவேன்"

"ஐ அம் சாரி, மா... நான் இனிமே அப்படி சொல்ல மாட்டேன்"

"உன் புருஷன் ஆபத்தான கட்டத்தை தாண்டிட்டான். அவனுக்கு எதுவும் ஆகாதுன்னு எனக்கு தெரியும். ஏன்னா, உன்னோட மன்னிப்பை வாங்காம அவன் சாக மாட்டான். நீ அனுகிட்ட சொன்னியாம், ஏதோ ஒரு கேள்விக்கு பதில் வேணும்னு... அது என்னன்னு என்கிட்ட கேளு. நான் உனக்கு பதில் சொல்றேன்"

வேண்டாம் என்று தலையசைத்தாள் வர்ஷினி.

"நான் சொல்றதை நம்பு. என் நிம்மு உன்னை ரொம்ப காதலிக்கிறான். தன்னை நிரூபிச்சி காட்ட, அவனுக்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் குடு..."

"நான் யாரையும் எதுவும் கேட்க விரும்பல, மா. எனக்கு எந்த கேள்விக்கும் பதில் வேண்டாம். எனக்கு நிமல் மட்டும் தான் வேணும்... என் வாழ்நாள் முழுக்க... வேற எதை பத்தியும் எனக்கு கவலை இல்ல..."

"ரொம்ப சந்தோஷம்... வா, போய் அவனை பார்க்கலாம்"

அவர்கள் இருவரும் அவசர சிகிச்சைப் பிரிவை நோக்கிச் சென்றார்கள்.

விஸ்வநாதன், மருத்துவரான தன் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

"புல்லட் ஹார்ட்டுக்கு ரொம்ப க்ளோசா பட்டிருக்கு. நல்லவேளை அவன் இதயத்துக்கு எதுவும் ஆகல..." என்றார் மருத்துவர்.

"நிமலை காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி" என்றார் விஸ்வநாதன்.

அப்பொழுது அங்கு பார்வதியும் வர்ஷினியும் வந்தார்கள்.

"இவங்க தான் நிமலோட வைஃப்" என்று மருத்துவருக்கு அவளை அறிமுகம் செய்து வைத்தார் விஸ்வநாதன்.

"கவலப்படாத மா... உன் புருஷனுக்கு ஆயுசு கெட்டி" என்றார் மருத்துவர்.

"தேங்க்யூ, டாக்டர்" என்றாள் வர்ஷினி.

"நான் உன் ஹஸ்பன்டுக்கு ஃபேமிலி டாக்டர். அவனை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும். அவன் ரொம்ப ஸ்ட்ராங்... சீக்கிரமே வீட்டுக்கு வந்துடுவான்"

"நான் அவரை பாக்கலாமா டாக்டர்?"

"ஒய் நாட்? அவனைப் பார்க்க விடாம, மிஸஸ் நிமலை தடுக்க, யாருக்கு தைரியம் இருக்கு? அப்படி செஞ்சா, அந்த படவா என்னை கொன்னுடுவான்" என்று சிரித்தார் மருத்துவர்.

வெட்கப் புன்னகை பூத்தபடி, அவசர சிகிச்சைப் பிரிவில் நுழைந்தாள் வர்ஷினி.

"தேங்க்யூ, தியாகு... என் மருமகள் மூடை நீ லைட் ஆக்கிட்ட"

"விடுடா... போய் உன் மகனை பாரு"

சரி என்று தலையசைத்தார் விஸ்வநாதன். அங்கிருந்து சென்றார் மருத்துவர். விஸ்வநாதனை உள்ளே நுழையாமல் தடுத்தார் பார்வதி. அவர் வர்ஷினிக்கு இந்த சந்தர்ப்பத்தை அளிக்க நினைத்தார்.

அவசர சிகிச்சைப் பிரிவின் அறைக்குள் நுழைந்த வர்ஷினியின் கால்கள் நகர மறுத்தன. அவளுடைய இதயம் ரத்தக் கண்ணீர் வடித்தது, நிமலின் நிலையை பார்த்த போது. அவனருகில் ஓடி சென்று, அவன் கரத்தை தன் கரங்களால் பற்றிக் கொண்டு, கண்ணீருடன் அவன் நெற்றியில் முத்தமிட்டாள் வர்ஷினி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro