Part 44
பாகம் 44
பிரகாஷின் அறையில், ஆகாஷுடன் அமர்ந்திருந்தாள் அனு.
"இந்த நிமேஷ், இவ்வளவு கேவலமானவனா இருப்பான்னு நான் நினைச்சு கூட பாக்கல" என்றான் ஆகாஷ்.
"அதுல வருத்தப்பட எதுவும் இல்ல... அவன் கேவலமானவன் தான்..." என்றான் பிரகாஷ்.
"இப்போ நம்ம என்ன செய்றது?" -ஆகாஷ்
"ராஜா வரேன்னு சொல்லியிருக்கான். அவன்கிட்ட இதுக்கு ஒரு தீர்வு நிச்சயமா இருக்கும்..." - அனு
அதே நேரம், அந்த அறையில் நுழைந்த ராஜா, அனுவின் தலையில் தட்டினான்.
"எப்படி இருக்க?" என்றான் ராஜா.
"அப்பாடா, இப்பவாவது இதைக் கேட்க உனக்கு நேரம் கிடைச்சுதே..."
"நான் ரொம்ப பிஸினு உனக்கு தெரியாதா?"
"ஆமாம்... உனக்கு நிமல் கல்யாணத்தை பிளான் பண்ண டைம் இருக்கும்... அவனுக்கு பார்ட்டி கொடுக்க டைம் இருக்கும்... ஆனா, எனக்குன்னா மட்டும் டைம் இருக்காது" என்று அலுத்துக் கொண்டாள்.
"அதுக்கும் இதுக்கும் வித்தியாசம் இருக்கு. நீ கூட யார் கூடவாவது ஓடி போறேன்னா சொல்லு, நான் எவ்வளவு கஷ்டப்பட்டு அதுக்காக வேலை செய்றேன்னு பாரு..." என்று சிரித்தான்.
அவனைப் பார்த்து ஒரு பெரிய கும்பிடு போட்டாள் அனு.
"போதும்டா சாமி. நம்ம ரொம்ப முக்கியமான வேலை செய்ய வேண்டியிருக்கு. நான் ஓடிப் போறதை பத்தி அப்புறம் யோசிக்கலாம்"
"நான் ஒரு பிளான் வச்சிருக்கேன். அதை எல்லாரும் கவனமா கேளுங்க. ஏதாவது சின்னதா தப்பானா கூட, மொத்த பிளானும் சொதப்பிடும்"
தனது திட்டத்தை கூறினான் ராஜா.
"ஒரு விஷயத்துல மட்டும் கவனமாயிரு. உன்னோட பிளான், நிமல் பக்கம் திரும்பிடக் கூடாது. நாளுக்கு நாள் இங்க பிரச்சனை அதிகமாயிட்டே போகுது. பிரச்சனையை தீக்க போயி, புது பிரச்சனை உருவாயிட போகுது..." என்றாள் அனு.
"எனக்கு தெரியும். எனக்கு வர்ஷினியை பத்தியும் தெரியும். அவளுக்கு என்ன வேணுமுன்னும் தெரியும். அதனால, அதை என்கிட்ட விடுங்க. நான் பாத்துக்குறேன்"
"இந்த பிளானுக்கு நான் ரெடி" என்றான் ஆகாஷ்.
"நானும் ரெடி" என்றான் பிரகாஷ்.
"டேய், மட சாம்பிராணி... நீ கல்யாண மாப்பிள்ளை. அதை மறந்துடாதே" என்று சிரித்தான் ராஜா.
"ஆமாம்ல..." என்று பல்லைக் காட்டினான் பிரகாஷ்.
"ஏதாவது செஞ்சு, இந்த பிரச்சனை முடிஞ்சா போதும்..." என்றாள் அனு.
"கவலைப்படாதே... முடிச்சுடலாம்" என்றான் ராஜா.
......
வர்ஷினி சகஜமாக இருப்பதை பார்த்து எரிச்சல் அடைந்தான் நிமேஷ். அவன் எதிர்பார்த்தது போல் அவள் நடந்து கொள்ளவில்லையே. உண்மையிலேயே நிமல் அவளிடம் தன்னுடைய கடந்த காலத்தை பற்றிய உண்மையை கூறி விட்டானா? அவர்களுடைய உறவு அவ்வளவு வலுவானதா? அல்லது, அவனைக் காப்பாற்ற வர்ஷினி பொய்யுரைக்கிறாளா? அப்படி என்றால், அவன் எப்படி இரண்டு கோடியை குமணனிடமிருந்து பெற முடியும்?
அப்பொழுது அவனுடைய அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் குமணனுடைய எண் ஒளிர்ந்ததை பார்த்து அவன் பெருமூச்சுவிட்டான். இப்பொழுது வர்ஷினி, நிமல் உறவுமுறையை பற்றி அவர் கேட்டால் என்ன சொல்வது என்று எண்ணியபடி அழைப்பை ஏற்றான்.
"நீ எனக்கு கால் பண்ணுவேன்னு நான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். ஏன் எனக்கு கால் பண்ணாம இருக்க?" என்றார் குமணன்.
"உங்களுக்கு ஒரு நல்ல மெசேஜ் கொடுக்கணும்னு தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்"
"அதுல வெயிட் பண்ண என்ன இருக்கு? ஆமா, இல்லன்னு சொல்ல வேண்டியது தானே...?"
"அதுல தான் பிரச்சனையே... உங்க பொண்ணு, நிமல் கூட சந்தோஷமா இல்லன்னு எனக்கு நிச்சயமா தெரியும். ஆனா, சந்தோஷமா இருக்கிற மாதிரி அவங்க நடிச்சிகிட்டு இருக்காங்க. அதனால தான் கொஞ்சம் டைம் ஆகுது..."
"அது தான் விஷயம்னா, நீ ஒன்னும் கிழிக்க வேண்டிய அவசியம் இல்ல. என் பொண்ணை என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்..."
"இல்ல, இல்ல, உங்களுக்கு தேவையான மெசேஜை, நாளைக்கு நான் நிச்சயம் கொடுப்பேன்..."
"இது தான் நான் உனக்கு கொடுக்கற கடைசி சான்ஸ்... இதை நீ செய்யலன்னா பணத்தை மறந்துடு"
"அப்படி நடக்காது"
அழைப்பை துண்டித்து விட்டு வர்ஷினியை தேடினான் நிமேஷ். அவள் தன் கைகளில் மெஹந்தி இட்டு முடித்துவிட்டு தன் அறையை நோக்கி சென்றாள். அவள் எதிரில் வந்து நின்றான் நிமேஷ்.
"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..."
"என்ன?" என்பது போல் அவனை பார்த்தாள்.
"நீங்க உண்மையிலேயே நிமல் கூட சந்தோஷமா தான் இருக்கீங்களா?"
இந்தக் கேள்வி வர்ஷினிக்கு எரிச்சலூட்டியது.
"நீங்க சந்தோஷமா இல்லன்னு எனக்கு தெரியும். நீங்க ராணி மாதிரி வாழ வேண்டியவங்க. ஆனா..."
"இங்க பாருங்க, நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நானும் நிமலும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறோம் "
"நீங்க பொய் சொல்றீங்க"
"என்ன உங்க பிரச்சனை? எதுக்காக என்னோட வாழ்க்கையில மூக்கை நுழைக்கிறீங்க? என்னுடைய வாழ்க்கையை பத்தி பேச நீங்க யாரு?" என்று உறுமினாள்.
"நான் உங்களை விரும்புறேன்..." என்று அவன் கூற, ஓரடி பின்னால் நகர்ந்தாள் வர்ஷினி அதிர்ச்சியுடன்.
"நீங்க சந்தோஷமா இருக்கணும். உங்களை மாதிரி ஒரு பொண்ணுக்கு புருஷனா இருக்க நிமல் தகுதியில்லாதவன். உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்"
அடுத்த நொடி, அவன் கன்னத்தில் அழுத்தமாய் ஒரு அறை விழுந்தது. தன்னை அறைந்த வர்ஷினியை அதிர்ச்சியுடன் பார்த்தான் நிமேஷ். உயர்ந்தெழுந்த வர்ஷினியின் குரலை கேட்டு, அங்கு வந்த பார்வதி திகைத்து நின்றார்.
"உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா, என்கிட்ட இந்த மாதிரி பேசுவ? இன்னும் ஒரு வார்த்தை என்னையும் நிமலையும் பத்தி பேசின, உன்னை கொன்னுடுவேன். உன்னுடைய நல்ல நேரம், நீ பேசினதை என் புருஷன் கேக்கல. அவர் மட்டும் கேட்டிருந்தா, நீ இந்நேரம் பொணமாகி இருப்ப. உனக்கு கொஞ்சம் கூட வெட்கமே கிடையாதா? அண்ணி ஸ்தானத்துல இருக்கிற ஒரு பொண்ணுகிட்ட எப்படி பேசணும்ங்குற மரியாதையை முதல்ல கத்துக்கோ..." அங்கிருந்து கிளம்ப எத்தனித்த அவள், பார்வதி நின்றிருப்பதை பார்த்து சங்கடப்பட்டாள்.
அங்கு நடந்தவற்றை பார்த்த சந்திரா பொருமி கொண்டிருந்தார்
"அவன் கேட்டதுல என்ன தப்பு இருக்கு? நீ எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு நாங்க தான் பாக்குறோமே..." என்றார் சந்திரா.
"நான் சந்தோஷமா இல்லன்னு உங்ககிட்ட வந்து சொன்னேனா? எனக்கு கூட தான் காசி அங்கிள் உங்க கூட சந்தோஷமா இல்லன்னு தோணுது... அதுக்காக நீங்க அவரை டைவர்ஸ் பண்ணிடுவீங்களா?" என்று தரமான கேள்வியை கேட்டாள்.
சந்திரா வாயடைத்துப் போனார். பார்வதியும் தான்... ஆனால், பெருமிதத்துடன்.
"நான் வார்ன் பண்றேன். உங்களுடைய லிமிட்டை க்ராஸ் பண்ணாதீங்க. அப்படி செஞ்சா, மோசமான வர்ஷினியை பாப்பீங்க"
"இதெல்லாம் என்ன பார்வதி? நீ ஏன் அமைதியா இருக்க? இது தான் பெரியவங்ககிட்ட பேசுற முறையா? இப்போ அவ என் காலை பிடிச்சி மன்னிப்பு கேட்கலனா, நான் இந்த நிமிஷமே இங்கிருந்து போயிடுவேன்" என்று எம்பி குதித்தார் சந்திரா.
"வர்ஷினி..." என்று பார்வதி அழைக்க, வர்ஷினிக்கு வேதனையானது, அவர் மன்னிப்பு கேட்கச் சொல்வார் என்று எண்ணி.
"வா நாம போகலாம். நிறைய வேலை இருக்கு" என்றார் பார்வதி.
ஓடிச்சென்று அவரை கட்டி பிடித்து கொண்டாள் வர்ஷினி. சந்திராவோ, அவர்கள் மீது தனது பார்வையால் நெருப்பை வாரி கொட்டினார்.
"நீ இங்கிருந்து கிளம்பலாம். இன்னும் ரெண்டு மணி நேரத்துல கோயம்புத்தூருக்கு ஒரு ஃபிளைட் இருக்கு" என்றார் பார்வதி, வர்ஷினியை அணைத்தவாரே.
"இதுக்காக நீ வருத்தப்பட போற..."
"ஏற்கனவே நான் ரொம்ப வருத்தத்தோட தான் இருக்கேன், உன்னை இங்க கூப்பிட்டதுக்காக. எவ்வளவு தைரியம் இருந்தா என் மருமகளையும் மகனையும் பத்தி நீ பேசுவ...? நீ முதல்ல சின்னவங்ககிட்ட எப்படி நடந்துக்கணும்னு கத்துக்கோ"
"இது ஒன்னும் உன் வீட்டு கல்யாணம் இல்ல. நான் இங்க இருக்கணுமா வேணாமான்னு தாட்சாயணி முடிவு பண்ணட்டும்" என்றார் சந்திரா.
அப்பொழுது அவர்கள்,
"நீ கிளம்புறதுல எனக்கு எந்த அடச்சேபனையும் இல்ல" என்ற தாட்சாயணியின் குரலைக் கேட்டார்கள்.
அங்கு நின்றிருந்த தாட்சாயணியை புன்னகையுடன் பார்த்தார் பார்வதி.
"எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. உண்மையை சொல்லப் போனா, நீங்க இல்லன்னா, இங்க எந்த பிரச்சனையும் இருக்காது" என்றார் தாட்சாயணி.
"உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?"
"இல்லயே..."
"நாங்க போக மாட்டோம்..."
"ஏன்...? குமணன் கூட வியாபாரம் பேசியிருக்கீங்களே அதுக்காகவா...?" என்று அவர் ஆகாஷை பார்க்க,
குமணனுடன் நிமேஷ் பேசிய ஆடியோவை, தன் கைபேசியில் பதிவு செய்திருந்ததை அவன் ஓட விட்டான். சந்திரா மற்றும் நிமேஷின் முகங்கள் இருளடைந்து போனது. அவர்களை நினைத்து வெட்கப்பட்டார் பார்வதி. வர்ஷினியின் நிலையோ பரிதாபமாக இருந்தது. குமணன் தன் மீது கோபமாக இருக்கிறார் என்று அவளுக்கு தெரியும். ஆனால் அவர் இவ்வளவு கீழ்த்தரமாக இறங்குவார் என்று அவள் நினைக்கவில்லை.
"நீங்க இவ்வளவு மோசமா இருப்பீங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல... உறவு முறைக்கு எந்த மதிப்பும் இல்லயா? எல்லாமே உங்களுக்கு பணம் மட்டும் தானா?" என்றார் தாட்சாயணி.
அவருக்கு எந்த பதிலும் கூறாமல் அங்கிருந்து சென்றார் சந்திரா.
"நான் சொல்றதை ஞாபகத்துல வச்சிக்கோ. உன்னை உங்க அப்பாகிட்ட இருந்து யாராலயும் காப்பாத்த முடியாது..." என்று வர்ஷினியை பார்த்து கூறிவிட்டு பொறுமியபடி சென்றான் நிமேஷ்.
"நீ பயப்படாதே. நிமல் உன்கிட்ட யாரையும் நெருங்க விட மாட்டான்" என்றார் பார்வதி.
"அக்கா சொல்றது சரி தான். நீ அவங்க பேச்சை பெரிசா எடுத்துக்க வேண்டாம்" என்றார் தாட்சாயணி.
சரி என்று தலையசைத்து விட்டு அங்கிருந்து அனுவுடன் சென்றாள் வர்ஷினி.
"அக்கா, வர்ஷினியை ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க. ராஜாவுடைய பார்ட்டி முடிஞ்ச உடனே, நாங்க இங்கயிருந்து கிளம்புறது தான் நல்லதுன்னு நினைக்கிறேன்"
"ஏன் அப்படி சொல்ற?"
"ஆமாம்கா... நாங்க இங்க இருந்துகிட்டு, விருந்து அது இதுன்னு சுத்திக்கிட்டு இருந்தா, வர்ஷினியும் எங்க கூட வர வேண்டியிருக்கும்... அவ பாதுகாப்பா இருக்கிறது தான் முக்கியம்."
"நீ சொல்றதும் சரி தான். பாரு, நம்ம ஜனங்களையே நமக்கு எதிரா திருப்பிட்டாரு குமணன்..."
"அதனால தான் சொல்றேன். பார்ட்டி முடிஞ்சதும் நாங்க காஞ்சிபுரத்துக்கு கிளம்பறோம்"
சரி என்று தலையசைத்தார் பார்வதி.
.......
நடந்தவற்றை அனு கூறிய போது, ஆச்சரியம் அடைந்தான் நிமல். வர்ஷினி எப்படி எல்லாம் சந்திராவையும் நிமேஷையும் விளாசி விட்டாள் என்பதையும், விர்ஷினி நிமேஷை அறைந்தாள் என்பதையும் அவனால் நம்பவே முடியவில்லை. திடீரென்று அவளுக்கு இவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்தது? ஒரு நல்ல மனைவி, தன் கணவனின் மரியாதையை காக்க எந்த அளவிற்கும் துணிவாள் என்பது ஆண்மகனான அவனுக்கு எப்படி புரியும்?
மறுநாள்
மோசகாரர்களை வெளியேற்றிய பின், அனைத்தும் நல்லபடியாக நடந்தது. பிரகாஷ், சுதாவின் திருமணமும் இனிதே நிறைவடைந்தது. சுதாவை திருமணத்திற்கு தயார் செய்வது முதல், முதலிரவு அறைக்குள் அனுப்பி வைக்கும் வரை, அந்த நாள் முழுவதும் அவளுடனேயே இருந்தாள் வர்ஷினி.
அதன் பிறகு தங்கள் அறைக்கு வந்து, உடை மாற்றிகொண்டு கட்டிலில் விழுந்தாள். அன்று போல் அவள் என்றுமே களைப்புடன் இருந்ததில்லை. படுத்த உடனேயே உறங்கிப் போனாள்.
அவள் உறங்குவதை பார்த்து பெருமூச்சு விட்டான் நிமல். அவள் அருகில் வந்து அமர்ந்து அவள் உறங்குவதை பார்த்து கொண்டிருந்தான். இனியவர்களின் இருப்பிடத்திற்கு வந்த பின், அவள் உறங்கும் ஆழ்ந்த உறக்கம் இது தான்.
அவளுக்கு இனிமையான வாழ்க்கையை வழங்க வேண்டும் என்று அவன் எண்ணியிருந்தான். ஆனால் விதியின் கணக்கு வேறு விதமாக இருந்தது. அது அவன் நினைத்ததை செய்ய விடாமல் அவனை தடுத்தது. ஆனால், இது வெகு நாட்களுக்கு நீடிக்க கூடாது. கூடிய விரைவிலேயே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்தபடி சோபாவில் படுத்தான் நிமல்.
மறுநாள்
வர்ஷினியும் சுதாவும் பார்ட்டிக்காக தயாராகிக் கொண்டிருந்தார்கள். சுதாவின் சந்தோஷமான முகபாவனைகளை கவனித்துக் கொண்டிருந்தாள் வர்ஷினி.
"நேத்து இராத்திரி நினைவுல இருந்து இன்னும் ஒருத்தர் வெளிய வரல போல இருக்கே..." என்றாள் கிண்டலாக.
வெட்கம் தாங்கமல் தலை குனிந்து கொண்டாள் சுதா. அவள் அருகில் அமர்ந்து அவள் கண்ணத்தை கிள்ளினாள் வர்ஷினி.
"எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீ நெனச்ச மாதிரியே உன்னுடைய கல்யாணம் பிரகாஷ் கூட நடந்துடுச்சு"
சுதாவின் முகம் மாறியது.
"நீ நினைச்ச மாதிரி தான் உன் கல்யாணமும் நடந்திருக்கு. ஆனா, உன் முகத்துல சந்தோஷமே இல்லயே..."
வர்ஷினியின் கண்கள் கலங்கின.
"இது உன்னுடைய வாழ்க்கை. நீ நினைச்சா, அதுல சந்தோஷத்தை கொண்டு வர முடியும்"
"இல்ல சுதா. நான் இனிமே யார்கிட்ட இருந்தும் எதையும் எதிர்பார்க்க தயாரா இல்ல. ஏன்னா, மறுபடியும் ஏமாந்து வருத்தப்பட நான் தயாரா இல்ல"
"வாழ்க்கையில எதுவுமே நிலையில்ல... எல்லாமே மாறும்... ஆனா அதுக்கு நீ மனசு வைக்கணும். நான் கேக்கறதுக்கு பதில் சொல்லு, உன்னால நிமலை வெறுக்க முடியுமா? அவரை காதலிக்கிறதை நிறுத்த முடியுமா?"
ஒரு நொடி கூட தாமதிக்காமல்,
"முடியாது... ஏன்னா, நான் அவர் மேல வச்ச காதல் உண்மையானது. உனக்கு தெரியாதா, நான் எந்த அளவுக்கு பைத்தியக்காரத்தனமா அவரை காதலிச்சேன்னு? நிமல் கூட என்னோட எதிர்காலத்தைப் பத்தி எப்படி எல்லாம் கனவு கண்டேன்னு... நான் என்னையே அவருக்கு தர தயாரா இருந்தேன்... "
அதைக் கேட்டு திடுக்கிட்டாள் சுதா.
"நீ கல்யாணத்துக்கு முன்னாடியே உன்னுடைய கன்னித்தன்மையை நிமல்கிட்ட இழந்துட்டியா?"
இல்லை என்று தலை அசைத்தாள் வர்ஷினி.
"நிமலுகாக அதை செய்ய நான் துணிஞ்சேன்..."
"அப்படின்னா...? என்ன ஆச்சு?"
"நிமல் ஒத்துக்கல..."
"ஏன்?" என்றாள் ஆச்சரியமாக சுதா.
"ஏன்னு எனக்கு தெரியல... அவர் மனசுல என்ன இருக்குன்னு தான் எனக்கு ஒண்ணுமே புரியலயே."
பெயர் கூற முடியாத முகபாவத்துடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தாள் சுதா. அவளுடைய பார்வைக்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை வர்ஷினிக்கு.
"ஆமாம் சுதா. என்னை ப்ரக்னென்ட் ஆக்கிடுங்கன்னு நான் கேட்டப்போ அவர் மறுத்துட்டார். அந்த நேரத்துல நான் ரொம்ப பைத்தியக்காரத்தனமா அவரை காதலிச்சிக்கிட்டிருந்தேன்"
"இப்பவும் நீ பைத்தியக்காரி தான். உன்னுடைய மனசு அமைதியா இல்ல. அதனால தான் உன்னால சரியா யோசிக்க முடியல"
"நீ என்ன சொல்ற?"
"உன்னை உண்மையிலேயே தூண்டில் மீனா பயன்படுத்தணும்னு நிமல் நினைச்சிருந்தா, உங்க அப்பாவை பழிவாங்க, அதை விட ஒரு நல்ல சான்ஸ் அவருக்கு கிடைக்குமா? நீயே வலிய போய் உன்னை கொடுக்க தயாராக இருந்த போதும் அவர் வேண்டாம்னு மறுத்திருக்கிறார்னா, அவர் மனசுல அப்படி ஒரு எண்ணம் இல்லன்னு தானே அர்த்தம்? உங்க அப்பாவை தலை குனிய வைக்க, அதை அவரால பயன்படுத்தி இருக்க முடியாதா? ஆனா அவர் ஒத்துக்கலயே..."
வர்ஷினி சிலையாகிப் போனாள்.
"அவர் வேண்டாம்னு மறுத்தப்போ, என்ன சொன்னாரு...? தயவுசெய்து யோசிச்சு சொல்லு"
"ஆறு மாசம் காத்திருக்க சொன்னார். அதுக்கப்புறம் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னாரு"
"அப்பறம்...?"
சுதாவை கட்டிக்கொண்டு ஓவென்று அழுதாள் வர்ஷினி. அவள் முதுகை தட்டிக் கொடுத்தாள் சுதா.
"ஏன் அழற?"
"என்னை விடுறதுக்கு பதில், மூச்சையே விட்டுடுவேன்னு சொன்னார்..."
"உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அவர் சத்தியம் பண்ணி இருந்தார்ல...?"
ஆமாம் என்று தலையசைத்தாள் வர்ஷினி.
"அதைத் தான் டி அவர் செஞ்சிருக்காரு. அவர் உன்னை உண்மையா காதலிக்கிறார். அதனால தான், உன்னை விட அவருக்கு மனசு வரல. உனக்கு சத்தியம் பண்ண மாதிரி, உன்னை கல்யாணம் பண்ணி அவங்க வீட்டுக்கு தான் கூட்டிட்டு போனாரு. அவர் உன்னை ஏமாத்திட்டாருன்னு இப்பவும் நினைக்கிறாயா? எனக்கு அப்படி தோணலடி..."
வர்ஷினியின் அணைப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள் சுதா.
"கல்யாணத்துக்கு அப்புறம் உன்கிட்ட எப்பயாவது கடுமையா நடந்துக்கிட்டாரா?"
இல்லை என்று தலையசைத்தாள் வர்ஷினி.
"உங்க கல்யாணத்தை காரணம் காட்டி உங்க அப்பாவை அவமானப்படுத்தினாரா?"
மறுபடியும் இல்லை என்று தலையசைத்தாள் வர்ஷினி.
"ஏன்...? யோசிச்சு பாரு... அவரோட காதலும் உண்மையானது தான்..."
தன் முகத்தைக் கையால் மூடிக் கொண்டு கதறி அழுதாள் வர்ஷினி.
"இப்பவும் எதுவும் கெட்டுப் போகல. உன்னால எல்லாத்தையும் சரி செய்ய முடியும். இருக்கிற எல்லா பிரச்சினையையும் குப்பைத் தொட்டியில போட்டுட்டு, அவர் கூட உட்கார்ந்து பேசு... அவர் பேசுறதை நிதானமா கேளு. பேசித் தீராத பிரச்சனையே இல்ல... "
அப்பொழுது, பிரகாஷ் கதவை தட்டினான். ஓடிச்சென்று கதவை திறந்தாள் சுதா.
"கிளம்பலாமா?" என்றான்.
சுதா திரும்பி வர்ஷினியை பார்க்க, அவள் போகலாம் என்று தலையசைத்தாள்.
"நேரமாகுது, நாம போகலாம்"
"நிமல் எங்க காணோம்?" என்றாள் சுதா.
"அவன் காலையிலயிருந்து ராஜாவோட தான் இருக்கான். வர்ஷினியை நம்ம கூட்டிக்கிட்டு போகலாம்."
"போகலாமா வர்ஷினி?"
"முகத்தை கழுவிட்டு ரெண்டு நிமிஷத்துல வரேன்"
சரி என்று தலையசைத்துவிட்டு அங்கிருந்து சென்றான் பிரகாஷ். முகத்தை கழுவிவிட்டு, அழகான புன்னகையை அணிந்து கொண்டு வந்தாள் வர்ஷினி. அவளை சந்தோஷமாய் தழுவிக்கொண்ட சுதா, வர்ஷினியிடம் மாற்றத்தை உணர்ந்தாள்.
கையை கோர்த்தபடி, அவர்கள் இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro