Part 42
பாகம் 42
பார்வதியும் தாட்சாயணியும் காசிநாதன் குடும்பத்தை வரவேற்றார்கள். தாட்சாயணியை ஒப்புக்கு கட்டியணைத்தார் சந்திரா.
"எப்படி இருக்கீங்க, அண்ணி...? அண்ணன் எங்க?" என்றார் காசிநாதன்
"அவருக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருந்ததால, ஆஃபிஸுக்கு போயிருக்காரு. சீக்கிரம் வந்து உங்களை பாக்குறேன்னு சொல்லி இருக்காரு" என்றார் பார்வதி.
"இதை நான் எதிர் பார்த்தேன்" என்றார் சந்திரா ஏளனமாக.
அதற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காமல்,
"பிசினஸ்னா அப்படித் தான் இருக்கும்னு எனக்கு தெரியும், அண்ணி" என்றார் காசிநாதன்.
"எங்க உங்க புள்ள?" என்றான் நிமேஷ்.
"அவன் நம்மளை மாதிரி இல்லப்பா... அவன் ரொம்ப பிசி" என்றான் ஆகாஷ் கிண்டலாக.
"உன் மருமக கூட ரொம்ப பிசியா...? அவளையும் உன் பிள்ளை ஆஃபீஸுக்கு கூட்டிகிட்டு போயிட்டானா?" என்றார் சந்திரா.
அப்பொழுது, அனுவுடன் மாடியிலிருந்து இறங்கி வந்தாள் வர்ஷினி. அவளைப் பார்த்து அம்மாவும் பிள்ளையும் சிலையாகி போனார்கள். அவர்கள் கண்களில் பொறாமைத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"குமணன் பொண்ணு, ரொம்ப அழகா இருக்கா" என்றார் சந்திரா.
"அத சொல்லுங்க... அவள் வந்த வம்சாவளி அப்படிப்பட்டது" என்றான் நிமேஷ்.
தங்களுடைய குடும்பத்தை பற்றி தான் பேசுகிறார்கள் என்ற போதிலும், அவர்களுடைய பேச்சு, வர்ஷினிக்கு அறவே பிடிக்கவில்லை. பார்வதியோ என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார். நல்ல வேளை, அங்கு நிமல் இல்லாமல் போனது, என்று நினைத்தார்.
"நான் உன் மாமனாருடைய தம்பி. என் பேர் காசிநாதன். இவங்க என்னுடைய ஒய்ஃப் சந்திரா, சன் நிமேஷ்"
காசிநாதன் தன்னையும் தன் குடும்பத்தினரையும் வர்ஷினியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார், பார்வதி அதை செய்யும் வரை காத்திராமல்.
தன் கையை வர்ஷினியை நோக்கி நீட்டி,
"ஹாய், பியூட்டிஃபுல்..." என்றான் நிமேஷ்.
சில வினாடிகள் திகைத்து நின்றாள் வர்ஷினி. அவளுடைய உள்ளுணர்வு தவறாய் அலாரம் அடித்தது. அவன் பார்த்த பார்வை அவளுக்கு சரியாக படவில்லை. தன்னை சுதாகரித்துக் கொண்டு, தன் கைகளைக் கூப்பி,
"வணக்கம்" என்றாள்.
தன் புருவங்களை உயர்த்தி அவளை ஆழமாய் பார்த்தபடி தன் கையை மெல்ல இறக்கினான் நிமேஷ். அவளுடைய செய்கையில் எந்தக் கலங்கமோ, உள்ளர்த்தமோ இருக்கவில்லை.
அந்த சூழ்நிலையை மாற்ற நினைத்தார் பார்வதி.
"கோபால்..." என்று அவர் அழைக்க, கோபாலன் வந்தார்.
"இவங்களுக்காக ஒதுக்கி வச்சிருக்கிற ரூமுக்கு அவங்களை கூட்டிட்டு போங்க. ( சந்திராவின் பக்கம் திரும்பியவர்) ஃபிரெஷ் ஆயிட்டு வாங்க. சாப்பிடலாம்" என்றார்.
அவர்கள் கோபாலனுடன் சென்றார்கள். ஆனால், அவர்களுடைய பார்வை வர்ஷினியின் மீதே இருந்தது.
அவர்கள் அறைக்கு வந்தார்கள்.
"அம்மா, அவ எவ்வளவு அழகா இருக்கால்ல...!"
"சாதாரண அழகா...? அவ தேவதை மாதிரி இருக்கா... என் வயிறெல்லாம் பத்தி எரியுது... அந்த அனாதை பயலுக்கு மட்டும் எப்படி தான் எல்லாமே நல்லதா வந்து சேருதோ தெரியல..."
"நல்லதாவா... நான் ஆட போற ஆட்டத்தை பொறுத்திருந்து பாருங்க..."
"என்ன செய்யப் போற?"
"அவங்களுடைய ரிலேஷன்ஷிப் எப்படி இருக்குன்னு நம்ம தெரிஞ்சுக்கணும். அவன் கடத்திக்கிட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டதால, அந்த பொண்ணு அவன்கிட்ட நல்லபடியா நடந்துக்குவான்னு எனக்கு தோணல"
"அத செய்யும் போது அந்த பொண்ணுக்கு நம்ம மேல சந்தேகம் வரக்கூடாது. ஞாபகம் வச்சுக்கோ"
"அதை நான் பாத்துக்குறேன். இது இரண்டு கோடி சம்பந்தப்பட்ட விஷயம். நான் எப்படி அவ்வளவு சாதாரணமா விட்டுடுவேன்...?"
"அது சரி" என்று சிரித்தார் சந்திரா.
.......
வெகு தாமதமாக வீடு திரும்பினான் நிமல். அவனுக்கு தெரியும் சந்திராவும் நிமேஷும் அங்கு இருப்பார்கள் என்று. அவனை பார்த்தால் அவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அவர்கள் கண்ணில் பட்டு, வீட்டில் இருக்கும் சுமூக சூழலை கெடுக்க வேண்டாம் என்று நினைத்தான் நிமல். ஆனால், அவர்கள் அவனை அவ்வளவு சுலபத்தில் விட்டுவிடத் தயாராக இல்லை. அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்திருந்ததை பார்த்தான் நிமல். வலிய ஒரு சிரிப்பை உதிர்த்தான். சந்திராவும், நிமேஷும், வர்ஷினியையே கவனித்துக் கொண்டிருந்தார்கள். நிமலின் மீது கோபமாகவே இருந்த போதிலும், அவனைப் பார்த்தவுடன் வர்ஷினியின் கண்கள் மின்னியது. அது அவர்களுக்கு சோர்வை அளித்தது.
"எப்படி இருக்க நிமல்?" என்றார் காசிநாதன்.
"நல்லா இருக்கேன்" என்றான்.
"இப்படி கண்ணை பறிக்கிற மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைச்சா, அவன் ஏன் நல்லா இருக்க மாட்டான்?" என்றான் நிமேஷ்.
அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தான் நிமல். தன் பார்வையை பார்வதியின் பக்கம் திருப்பினாள் வர்ஷினி. அவர் நெளிந்து கொண்டிருந்தார். சோபாவைவிட்டு எழுந்து, நிமலிடம் சென்றாள் வர்ஷினி. அவன் கையில் இருந்த மடிக்கணினி பையை அவள் வாங்க, மலைத்து நின்றான் நிமல். ஆனால், அந்த மலைப்பை அவன் முகத்திற்கு கொண்டு வரவில்லை. அவள் தன்னிடம் சகஜமாய் இருப்பதை பார்த்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
"சாப்பிட்டீங்களா?" என்றாள்.
இல்லை என்று தலையசைத்தான் நிமல்.
"நீங்க போய் ஃப்ரெஷ் ஆகுங்க. நான் உங்களுக்கு சாப்பாடு எடுத்துகிட்டு வரேன்"
"நான் அப்புறமா சாப்பிடறேன்..." என்று வேண்டுமென்றே கூறினான். அவ்வளவு சீக்கிரம், அவளுடன் பேசுவதை நிறுத்த அவன் விரும்பவில்லை. அவர்களுடைய பேச்சை சற்றே வளர்க்க நினைத்தான்.
"ஏற்கனவே லேட் ஆயிடுச்சி... எப்ப சாப்பிட போறீங்க...? வாங்க..."
அவன் மேற்கையை தன் கையால் சுற்றி வளைத்து, அவனை தங்கள் அறையை நோக்கி இழுத்துச் சென்றாள். அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு அவளுடன் சென்றான் நிமல்.
தன் கையிலிருந்து, இரண்டு கோடி ரூபாய் கீழே விழுவதைப் போல் உணர்ந்தான் நிமேஷ்.
அவர்களின் அறைக்குள் நுழைந்தவுடன், நிமிலின் கையை சுற்றி வளைத்திருந்த தன் கையை எடுக்க நினைத்தாள் வர்ஷினி. அவள் அதை செய்யும் முன், தன் கையை அவள் கையின் மீது வைத்தான் நிமல்.
"நிமேஷ் நல்லவன் இல்ல. அவன் எதை செய்யவும் தயங்க மாட்டான். அவன்கிட்ட ஜாக்கிரதையா இரு"
ஒன்றும் கூறாமல், தன் கையை விடுவித்துக் கொண்டு, அங்கிருந்து கீழ் தளம் சென்றாள், அவனுக்கு உணவு கொண்டு வர.
அவன் சாப்பிட்டு முடித்த பின், வழக்கம் போல் தரையில் போர்வையை விரித்து படுத்துக் கொண்டாள் வர்ஷினி. நிமலின் விழுங்கும் பார்வையை சந்திக்க இயலாமல் கண்களை மூடிக் கொண்டாள். உண்மையிலேயே தன் கண்களால் அவன் அவளை விழுங்கிக் கொண்டு தான் இருந்தான்.
விளக்கை அனைத்த பின் இருவரும் உறங்க முற்பட்டார்கள். அவர்கள் அறையின் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்ட போது இருவரும் திடுக்கிட்டு கண் விழித்தார்கள். கையை நீட்டி விளக்கை எரியவிட்டான் நிமல். வர்ஷினியை அவன் பார்க்க, அவளும் கேள்விக்குறியோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். பார்வதியும் விஸ்வநாதனும் கதவைத் தட்டும் போது பெயரை சொல்லி அழைப்பார்கள். அப்படி என்றால், வந்திருப்பது வேறு யாரோ.
எழுந்து நின்று போர்வையை சுருட்டினாள் வர்ஷினி. அலமாரியைத் திறந்து, அந்த போர்வையை அதனுள் தூக்கி எறிந்து கதவை மூடினான் நிமல்.
கட்டிலில் படுத்து தன் கண்களை மூடிக்கொண்டு, தூங்குவது போல் பாசாங்கு செய்தாள் வர்ஷினி. நிமல் கதவை திறக்க, அங்கு சந்திராவும் நிமேஷும் நின்றிருந்தார்கள். அவர்களைப் பார்த்து முகம் சுளித்து, அவர்கள் உள்ளே நுழைந்து விடாமல் வழியை மறித்து நின்றான் நிமல், என்ன? என்ற முகபாவத்துடன்.
"இது புது இடம் இல்லயா? எங்களுக்குத் தூக்கமே வரல... அதான் உன்னை பார்த்துட்டு போலாம்னு வந்தோம்" என்றார் சந்திரா.
அப்பொழுதும், ஒன்றும் கூறாமல் அவர்களை பார்த்துக் கொண்டு நின்றான் நிமல். அவனைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான் நிமேஷ். உள்ளே நுழைய இடைவெளியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சந்திரா, அவனைப் பின்தொடர்ந்தார்.
கட்டிலில் படுத்திருந்த வர்ஷினியின் மீது நிமேஷின் பார்வை குத்திட்டு நின்றது. அந்த அறை முழுவதும் வெட்கமில்லாமல் திரிந்தார் சந்திரா. அலமாரியை திறந்தவர், அங்கு சுருட்டி வீசப்பட்டிருந்த போர்வையை பார்த்து நிமலையும் வர்ஷினியையும் சந்தேகக் கண்ணோடு பார்த்தார். அப்பொழுது, அவருக்கு ஒரு கைபேசி அழைப்பு வந்ததால், அங்கிருந்து வெளியே சென்றார். வர்ஷினியை பார்த்துக் கொண்டிருந்த நிமேஷின் பக்கம் திரும்பினான் நிமல்.
"என்னால நம்பவே முடியல... இவ்வளவு அழகான பொண்டாட்டியை எப்படித் தான் உன்னால தூங்க விட முடியுதோ..." என்றான் நிமேஷ், வர்ஷினியை பார்த்தபடி.
"வெளிய போ" என்றான் நிமல்.
"யா..." வெளியே செல்ல நடந்தவன், கதவருகில் நின்று, கதவை சாத்த வந்த நிமலை திரும்பிப் பார்த்தான்.
"பெரியம்மா, அடிக்கடி நம்மகிட்ட ஒரு விஷயம் சொல்லுவாங்க, உனக்கு ஞாபகம் இருக்கா?" என்றான்.
அவனுக்கு பதில் கூறாமல் தன் புருவத்தை சுருக்கினான் நிமல்.
"அவங்க நமக்கு அட்வைஸ் பண்ணிக்கிட்டே இருப்பாங்க... எதுவா இருந்தாலும் நம்ம ஷேர் பண்ணிக்கணும்னு..." என்றான் வர்ஷினியை பார்த்தபடி.
அடுத்த நொடி, நிமலின் முஷ்டி, அவன் வாயிலிருந்து ரத்தத்தை ஒழுக செய்தது. நிமலின் அடியின் வேகம் தாங்காமல், பின்னால் இருந்த தூணில் மோதிக் கொண்டான் நிமேஷ். அவன் சட்டையை பற்றி, மேலும் ஒரு அடி அடிக்க தன் கையை நிமல் ஓங்கிய போது, நிமேஷ் கூறியதை கேட்ட காசிநாதன், அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அவர் மீது ஒரு கோபப் பார்வையை வீசி விட்டு அங்கிருந்து சென்றான் நிமேஷ். பார்வதியும் தாட்சாயணியும் அங்கு நடந்த அமளியை கேட்டு ஓடி வந்தார்கள்.
"என்ன ஆச்சு?" என்றார் பார்வதி.
ஒன்றும் கூறாமல் தலையை குனிந்தபடி அங்கிருந்து சென்றார் காசிநாதன்.
"என் வர்ஷினி மேல அவன் கண்ணு வச்சான், அவனை நான் கொன்னுடுவேன்" என்றான் நிமல் சீற்றத்துடன்.
தன் அறைக்குச் சென்று கதவை சாத்திக் கொண்டான்.
"இந்த நிமேஷ் என்ன ஜென்மமோ தெரியலயே... இதுக்காகத் தான் நான் பயந்தேன் " என்றார் தாட்சாயணி.
"இன்னும் என்னென்ன பிரச்சனை செய்யப் போறான்னு தெரியல" என்றார் பார்வதி.
"வர்ஷினியை மட்டும் நம்ம தனியா விடவே கூடாது. யாரைவது அவ கூட இருக்க சொல்லு" என்றார் தாட்சாயணி.
சரி என்று தலையசைத்தார் பார்வதி.
.....
கோபம் கொப்பளிக்க சோபாவில் அமர்ந்திருந்தான் நிமல். அவனுடைய ரத்த சிவப்பான கண்கள், அவனுடைய கோபத்தை பறைசாற்றியது. எழுந்து கட்டிலில் அமர்ந்து அவனுடைய கோலத்தை பார்த்து கவலைப்பட்டாள் வர்ஷினி. நிமேஷ் கூறியதை அவள் கேட்டுவிட்டாளோ...? அவள் முகத்தைப் பார்த்தால் அப்படித் தான் தெரிகிறது. அவள் கட்டிலில் இருந்து கீழே இறங்க முயன்ற போது, நிமலின் கணீரென்ற குரல் அவளை தடுத்தது.
"ஸ்டே..."
அவளை நோக்கி வந்தான் நிமல்.
"வர்ஷு, ப்ளீஸ் பெட்ல தூங்கு. மறுபடியும் அவங்க எப்ப வந்து உள்ள நுழைவாங்கன்னு தெரியல. நான் சோஃபால தூங்குறேன்னு சொல்றேன்ல... புரிஞ்சுக்கோ"
அவனுடைய குரல், கடுமையாகவும் இல்லை, மென்மையாகவும் இல்லை. கட்டிலில் படுத்து கண்களை மூடிக்கொண்டாள் வர்ஷினி. அவள் பிடிவாதத்தை காட்டும் சமயம் இதுவல்ல என்பதால். நிம்மதி பெருமூச்சு விட்டு, பால்கனிக்கு சென்றான் நிமல். அவனுக்கு தூக்கம் பிடிக்கவேயில்லை.
சந்திரா மற்றும் நிமேஷின் நடவடிக்கை நிமலுக்கு சந்தேகத்தை அளித்தது. அவர்கள் அவனுக்கும் வர்ஷினிக்கும் இடையில் இருக்கும் உறவு முறையின் மூலத்தை அறிய முயல்கிறார்கள். அவர்கள் எப்பொழுதுமே அவனை மரியாதையாக நடத்தியது இல்லை. அப்படியிருக்க அவன் எப்படி இருக்கிறான் என்பதை தெரிந்து கொள்ள அவர்கள் ஏன் முனைப்பு காட்ட வேண்டும்?
நாளை அனைவரும் சுதாவின் இல்லத்திற்கு செல்கிறார்கள். அவர்களுடன் செல்ல நிமலுக்கு விருப்பம் இல்லை. ஏனென்றால், ஏதேனும் ஒரு பிரச்சனையை அவர்கள் கிளப்பிக் கொண்டே இருப்பார்கள். அதே நேரம், வர்ஷினியை அவர்களுடன் தனியாக அனுப்பவும் அவன் தயாராக இல்லை.
மறுநாள் காலை
சுதா மற்றும் பிரகாஷின் நிச்சயதார்த்தத்திற்கு, சுதாவின் வீட்டிற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள் வர்ஷினி. நிமல் தன் பின்னால் நிற்பதை உணர்ந்து, திரும்பினாள்.
"வர்ஷு, நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றான்.
அதற்கு அவள் சரி என்றும் கூறவில்லை, அங்கிருந்து செல்லவும் இல்லை. முகத்தில் எந்த பாவனையும் காட்டாமல் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
"நான் எல்லாத்தையும் இப்பவே முடிக்கணும்னு நினைக்கிறேன். தயவு செஞ்சு நான் சொல்றதை கேளு. எனக்கு உங்க அப்பாவை பிடிக்காதுங்குறது உண்மை தான். நான் அதை உன்கிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன். நம்ம அதை பத்தி நிறைய பேசியிருக்கோம். ஆனா, அவர் மேலே இருந்த கோவத்தை தீர்த்துக்க, உன்னை பயன்படுத்த நான் என்னைக்குமே நினைச்சதில்ல. நீ எனக்கு வேணும்னு தான் நான் உன்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்"
இந்த சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்தவளைப் போல, அவள் பேச ஆரம்பித்தாள்.
"நான் யாருங்குற உண்மையை எதுக்காக அம்மா அப்பாகிட்ட மறைச்சிங்க? என்னை முழு மனசோட ஏத்துக்க அவங்க தயாரா இருந்தப்போ, அதை அவங்ககிட்ட மறைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு? ஒருவேளை, அவங்க என்னுடைய அம்மா அப்பா மாதிரி இருந்திருந்தா, நீங்க உண்மையை மறைக்குறதுல நியாயம் இருக்கு. ஏன்னா, அவங்க எதையுமே புரிஞ்சுக்க மாட்டாங்க. ஆனா, உங்க அம்மா அப்பா அப்படியில்லயே... அவங்க யாருக்கும் கிடைக்காத வரப்பிரசாதம். அப்படி இருக்கும் போது, நான் குமணனுடைய மகள்னு நீங்க ஏன் அவங்க கிட்ட சொல்லல?"
இந்த ஒரு கேள்வியைத் தான் அவன் என்றுமே எதிர் கொள்ள விரும்பியதில்லை. இந்த கேள்வியின் பதில், எல்லா பிரச்சனையையும் முடிவுக்கு கொண்டு வரும் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. அவன் பதில் சொல்லிவிடலாம் தான்... ஆனால், அதன் பிறகு என்ன ஆகும்? தன்னுடைய அப்பா தான் நிமலின் பெற்றோரை கொன்ற கொலைகாரன் என்று தெரிந்தால், அவள் சந்தோஷமாக இருப்பாளா? அவர்களுடைய சொத்துக்கள் அனைத்தும், அவனுடைய பெற்றோரிடமிருந்து களவாடியது என்று தெரிந்தால் அவள் நிம்மதியாக இருப்பாளா?
எல்லாவற்றிற்கும் மேலாக, அவன் கூறும் பதிலே அவனுக்கு வினையாக முடிந்து விட்டால் என்ன செய்வது? தன்னுடைய பெற்றோரை கொன்றதற்காக, குமணனை பழிவாங்க தான் இதெல்லாம் செய்தான் என்று அவள் நினைத்து விட்டால் என்னாவது? அப்படி நினைத்து விடுவார்களோ என்று அஞ்சித் தான், அவன் பார்வதியிடமும் விஸ்வநாதனிடமும் உண்மையை மறைத்தான் என்று கூறினால் அவள் நம்புவாளா?
"நான் அதை செய்யணும்னு செய்யல"
"வேற எதுக்கு செஞ்சிங்க? நிச்சயமா, ஒரு தடவையாவது அம்மா உங்ககிட்ட என்னை பத்தி விசாரிச்சிருப்பாங்க... இல்லன்னு சொல்லுங்க பாக்கலாம்..?"
ஒன்றும் சொல்லாமல் மென்று முழுங்கினான்.
"அவங்க நிச்சயமா கேட்டிருப்பாங்க. அப்படியிருந்தும் நீங்க சொல்லல. ஏன்???? ஏன்னா, அவங்களுக்கு உண்மை தெரிஞ்சா, உங்களுக்கு அவங்களுடைய சப்போர்ட் கிடைக்காது. நீங்க செய்ய நினைச்சதை அவங்க செய்ய விட மாட்டாங்க... சரி தானே?"
இல்லை என்று வேதனையுடன் தலையை அசைத்தபடி அவள் கன்னத்தை தொட்டான். அவன் கையை பற்றியவள், அடுத்த நொடி அவனை இறுக்கமாய் அணைத்து கொண்டு, அவன் நெஞ்சில் முகம் புதைத்து அழ துவங்கினாள். நிமல், அதை எதிர்பார்க்கவில்லை என்றாலும் அவனும் அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.
"தயவுசெஞ்சி எனக்கு பதில் சொல்லுங்க, நிமல். உங்களை இந்த மாதிரி என்னால பாக்க முடியல. என்னோட நிமலை என்கிட்ட திருப்பி கொடுத்துடுங்க. நமக்குள்ள இருக்கிற இந்த இடைவெளியை என்னால தாங்கவே முடியல..." என்று கண்ணீர் வடித்தாள்.
இதற்கு மேல் எதையும் மறைப்பது வீண். நடப்பது நடக்கட்டும். அவளிடம் அனைத்தையும் கூறி விடுவது என்று தீர்மானித்தான் நிமல். அப்பொழுது, சாத்தியிருந்த அவர்கள் அறையின் கதவின் கீழே நிழலாடுவதை கவனித்தான். வர்ஷினியிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டவன் கதவை திறந்தான். அங்கு நிமேஷ் நின்று கொண்டிருந்தான். அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தானா? வெட்கமில்லாமல் பல்லைக் காட்டினான் நிமேஷ். அவனைப் பார்த்தவுடன் சங்கடமாய் போனது வர்ஷினிக்கு. நிமலுக்கு எப்படி இருந்திருக்கும் என்று கூறத் தேவையில்லை.
"நீங்க இன்னும் ரெடி ஆகலயா? பெரியம்மா கேக்க சொன்னாங்க" என்றான்.
விடுவிடுவென அங்கிருந்து வெளியேறினாள் வர்ஷினி. ஒரு கோபப்பார்வையை நிமேஷின் மீது வீசிவிட்டு, அவளைப் பின் தொடர்ந்து சென்றான் நிமல்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro