Part 41
பாகம் 41
தன் மீது கோபத்துடன் நின்று கொண்டிருந்த தனது தோழியை பார்த்து திகில் அடைந்தான் பிரகாஷ். மாடர்ன் உடை அணிந்த அந்தப் பெண்ணை, ஒன்றும் புரியாமல் பார்த்தாள் வர்ஷினி.
அவள் தன்னை நோக்கி வருவதை பார்த்து பின்னால் நகர்ந்தான் பிரகாஷ். தன் தோளில் இருந்த பையை எடுத்து, அதை காற்றில் சுழற்றி பிரகாஷின் மீது ஒரு அடி போட்டாள் அவள். அவன் அங்கிருந்து ஓடுவதற்கு முன், அவன் தலை முடியை பற்றி, அவன் முதுகில் ஓங்கி ஒரு குத்து குத்தினாள். இவ்வளவு உரிமையோடு பிரகாஷை அந்தப் பெண் அடிக்கும் அந்த காட்சியை பார்த்து பேச்சிழந்து நின்றாள் வர்ஷினி. அதை பார்த்து, அந்த வீட்டில் இருப்பவர்கள் யாரும் அதிர்ச்சி அடையாமல் இருந்தது அவளுக்கு மேலும் அதிர்ச்சியை அளித்தது. அவள் மனதில் ஒரு விசித்திரமான எண்ணம் உதித்தது. அவள் நிமலையும் அடிப்பாளோ?
பிரகாஷிடமிருந்து நிமலை நோக்கி நகர்ந்த அந்த பெண்ணை பின்தொடர்ந்தது வர்ஷினியின் கண்கள். நிமலை அடைந்த அந்த பெண், அவனை நோக்கி தன் கையை நீட்டினாள். அவள் கையை பற்றி குலுக்கினான் நிமல்.
"எப்படி இருக்க, ப்ரோ?" என்றாள்
"நல்லா இருக்கேன்... வெல்கம் டூ இண்டியா..." என்றான் நிமல்.
"இது கொஞ்சம் கூட நியாயமே இல்ல. அவனை மட்டும் ஏன் நீ அடிக்கல?" என்றான் பிரகாஷ் தன் தோளை தேய்த்தவாரு.
"ஏன்னா, அவன் உன்னை மாதிரி இல்ல" என்றாள் அனு.
"அவன் உன்கிட்டயிருந்து என்ன விஷயத்தை மறைச்சான்னு தெரிஞ்சா, நீ அவனை கொன்னுடுவ..." என்று பொடி வைத்துப் பேசினாள் பிரகாஷ்.
"நீ என்ன சொல்ற?" என்றாள் அனு.
"அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சி... அது உனக்கு தெரியுமா?"
அதைக் கேட்டவுடன் அனுவின் முகம் மாறியது.
"ஆமாம்ல... நான் எப்படி அதை மறந்தேன்? எங்கே வர்ஷினி?" என்றாள்.
அதைக் கேட்டவுடன் வர்ஷினிக்கு ஆச்சரியமாய் போனது. இந்த பெண்ணுக்கு அவளை பற்றி தெரியுமா? அனுவின் கண்கள் வர்ஷினியின் மீது விழுந்தன. அவள் வர்ஷினியை நோக்கி சென்றாள்.
"நீ தானே வர்ஷினி...?"
ஆமாம் என்று தலையசைத்தாள் வர்ஷினி.
"உன்னை பார்க்கணும்னு நான் ரொம்ப ஆசையா காத்துக்கிட்டு இருந்தேன்..." என்றாள் நிமலை பார்த்தபடி.
"ஆனா, நிமல் உன் ஃபோட்டோவை காட்டவே இல்ல. அவன் உன்னை சஸ்பென்சா வச்சிருந்தான். நிமல் என்கிட்ட சொன்ன மாதிரியே, நீ ரொம்ப அழகா இருக்க"
நிமலை நோக்கி திரும்பினாள் அவள்.
"நீ சொன்னது உண்மை தான். அவ கண்ணு ரொம்ப சோகமா இருக்கு" என்றாள்.
*ஆமாம்* என்று நிமல் தலையசைக்க, அவர்கள் தன்னைப் பற்றி வெளிப்படையாக பேசுவதைப் பார்த்து சங்கடப்பட்டாள் வர்ஷினி.
"வர்ஷினியுடைய சோகமான கண்ணை பத்தி கூட நீங்க ரெண்டு பேரும் பேசிட்டிங்களா?" என்றான் பிரகாஷ் அதிர்ச்சியாக.
"அதனால தான், அவன் உன்னை மாதிரி இல்லன்னு சொன்னேன்" என்றாள் அனு.
"சுதாவுடைய கண்ணு எவ்வளவு அழகா இருக்கும்னு உனக்கு நான் அப்புறமா சொல்றேன்" என்று பல்லைக் காட்டினான் பிரகாஷ்.
தன் சிரிப்பை அடக்கியபடி தலை குனிந்து கொண்டாள் வர்ஷினி.
"நான் அனு... உன் ஹீரோவுடைய ஃப்ரெண்ட் கம் சிஸ்டர்..."
"நீ என்னோட ஃபிரண்ட் கம் சிஸ்டர் இல்லயா?" என்றான் பிரகாஷ்.
"நீ யாருன்னே எனக்கு தெரியாது" என்றாள் அனு.
"உன்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேன்னு நிமல் என்கிட்ட சொல்லியிருந்தா, நானும் உஷாராகி இருப்பேன். இவன் என்கிட்ட சொல்லவே இல்ல" முகத்தை பாவமாக வைத்துக் கொண்டான் பிரகாஷ்.
"இதெல்லாம் ஒருத்தர் சொல்லி செய்யக் கூடாது" என்றாள் அனு.
அவர்களை புரியாமல் பார்த்துக் கொண்டு நின்றாள் வர்ஷினி. விஸ்வநாதனுடைய நண்பரின் மகள் அனு. நிமலை, விஸ்வநாதன் தம்பதிகள் தத்தெடுத்தது முதற்கொண்டு, கல்லுரி வரை அவர்கள் ஒரே வகுப்பில் படித்து வந்தார்கள். அனு இளங்கலை பட்டம் முடித்தவுடன், அனுவின் குடும்பம் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தது. நமது நண்பர்கள் மூவருக்கும் அவள் தான் ஒரே தோழியாக இருந்தாள். இப்பொழுது, பிரகாஷின் திருமணத்திற்காக பார்வதி அவளை வரவழைத்திருக்கிறார்.
வேறு ஒரு காரணத்திற்காகவும் தான் அவளை இங்கு வரவழைத்தார் பார்வதி. அனு எல்லோரிடமும் வெகு சீக்கிரமே பழகிவிடும் தன்மை உடையவள். வர்ஷினியிடமும் அவள் சீக்கிரமே நெருங்கி பழகுவாள் என்று நினைத்தார் பார்வதி. இந்த சமயத்தில், வர்ஷினியுடன் யாராவது ஒருவர் இருக்க வேண்டும் என்பது அவசியம் என்று எண்ணினார் அவர். சுதா கல்யாண பெண் என்பதால், அவளால் அதை செய்ய முடியாது. பார்வதிக்கும் உறவினர்களை கவனிக்கவும் வரவேற்க்கவுமே நேரம் சரியாக இருக்கும். சந்திராவும், நிமேஷும் இங்கு வரும் பொழுது, வர்ஷினியை தனியாக விட, அவருக்கு விருப்பமில்லை. அதனால், வர்ஷினியை பாதுகாக்கும் பொருட்டு, யாராவது ஒருவர் அவளுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தார் பார்வதி. அதற்கு அனு தான் சரியான ஆள் என்றும் அவர் நம்பினார்.
"அனு, போய் குளிச்சிட்டு வா. சாப்பிடலாம்" என்றார் பார்வதி.
"ஆமாம், ஆன்ட்டி. எனக்கு ரொம்ப பசிக்குது"
"நான் உன்னுடைய பேக்கை கொண்டு வரேன்" என்று கூறிவிட்டு அவளுடைய பையை எடுத்துக் கொண்டான் பிரகாஷ்.
அவனுடன் சென்றாள் அனு.
"அக்கா, கோபாலனை எனக்கு ஒரு காபி கொண்டு வர சொல்லேன்" என்றார் தாட்சாயணி.
"கோபால் மார்க்கெட்டுக்குப் போயிருக்காரு. உனக்கு, நான் காபி போட்டு தரேன்" என்று சமையலறைக்கு சென்றார் பார்வதி.
அவரை பின்தொடர்ந்து சென்றாள் வர்ஷினி.
"நீ அவங்க கூட இரு... நான் போட்டுக் கொண்டு வரேன்" பார்வதி.
"அம்மா, எனக்கு சமைக்க கத்து குடுங்க. எனக்கு ஒன்னுமே தெரியாது... காபி போடக் கூட தெரியாது"
"அதனால ஒன்னும் தப்பில்ல. நான், தாட்சாயணி, கோபாலன் எல்லாரும் இருக்கோம். நாங்க பாத்துக்குவோம்..."
"இல்லம்மா... நான் இப்படி இருக்கக் கூடாது. உங்ககிட்ட சமையல் கத்துக்கணும்னு எனக்கு ஆசை. சுதாகிட்ட கூட அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பேன்"
அப்பொழுது, சட்டென்று அவளுக்கு சமையல் புத்தகம் ஞாபகத்திற்கு வந்தது. சுதாவுக்கு ஃபோன் செய்து, அதைக் கொண்டு வருமாறு கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
"உனக்கு விருப்பம் இருந்தா, நான் நிச்சயம் சமையல் சொல்லி தரேன்"
"இப்போ நான் காபி போடட்டுமா?"
"தாராளமா செய். சமையல்ல கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் மெஷர்மென்ட். எல்லாத்தையும் கரெக்டான அளவில் சேர்த்தா, சமையல் தப்பா போகவே போகாது. டேஸ்ட்டும் மாறாது. இந்த சின்ன தம்ளர் பாலுக்கு, ஒன்றரை ஸ்பூன் சர்க்கரையும், ஒரு ஸ்பூன் காபி பவுடரும் போடணும்."
சரி என்று தலையசைத்துவிட்டு அவர் கூறியதை செய்தாள் வர்ஷினி.
"இப்போ இதை குடிச்சு பாரு. நான் போடுற காபி மாதிரியே இருக்கும்"
அதை ருசித்துப் பார்த்துவிட்டு ஆமாம் என்று தலையசைத்தாள் வர்ஷினி.
"எல்லாருக்கும் நீயே காபி போடுறியா?" என்றார் பார்வதி.
*சரி* என்று, எல்லோருக்கும் காபி கலந்துவிட்டு, ஒரு கப்பில் மட்டும் சற்று தூக்கலாக சர்க்கரை கலந்தாள் வர்ஷினி. பார்வதி சொல்லும் முன்பாகவே, வர்ஷினியாகவே அதை செய்ததைப் பார்த்து, அவருக்கு ஆச்சரியமாய் போனது. அந்த காபி யாருக்கு என்பதும் அவருக்கு தெரியும். உள்ளூர சிரித்துக்கொண்டார்.
"இதுல மட்டும் ஏன் சர்க்கரை அதிகமாக போட்ட?"
"இல்ல... நிமல் எப்பவுமே சர்க்கரை அதிகமாக சாப்பிடுவார்... அவர் கேன்டீன்ல கேட்கும் போது பாத்திருக்கேன். அவருக்கு பிடிச்ச மாதிரி காபி போடலன்னா, இது கூட தெரியலன்னு சித்தி ஏதாவது நினைச்சுக்க போறாங்கன்னு தான்..." என்று இழுத்தாள்.
"உன்னை பாக்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு" என்று போலி சோகம் காட்டினார் பர்வதி.
காபி ட்ரேயை எடுத்துக்கொண்டு வரவேற்பறைக்கு வந்தாள் வர்ஷினி. சிறு புன்முறுவலுடன் அவளை பின்தொடர்ந்தார் பார்வதி. நிமலின் கப்பை எடுத்து அவனிடம் நீட்டினாள்,
"உங்களுக்கு சக்கரை அதிகமா..." என்று கூறியபடி. அவளை நம்ப முடியாமல் பார்த்தான் நிமல்.
சந்தோஷமாய் நின்றிருந்த தன் அக்காவை பார்த்து, தானும் சந்தோஷப்பட்டார் தாட்சாயணி. அனைவருக்கும் காபி கொடுத்தாள் வர்ஷினி.
"நீ எதுக்காகம்மா நின்னுகிட்டு இருக்க? நீயும் எங்ககூட உட்காரு. நிமலா, கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து, அவளுக்கு உன் பக்கத்துல இடம் கொடு..." என்றார் தாட்சாயணி.
சற்று நகர்ந்து வர்ஷினிக்கு இடம் கொடுத்தான் நிமல். 'கீழே விழுந்து விடுவாளோ' என்பது போல் ஓரத்தில் அமர்ந்தாள் வர்ஷினி.
"அவளை பிடிச்சுக்கோ. கீழே விழுந்திட போறா..." என்று சிரித்தார் லிங்கேஸ்வரன்.
அவள் கையை மென்மையாய்ப் பற்றி, அவளை தன்னை நோக்கி இழுத்தான் நிமல். நிமலை உரசிக்கொண்டு, ஒன்றும் செய்ய முடியாமல் அமர்ந்தாள் வர்ஷினி.
அப்பொழுது, விஸ்வநாதனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பு யாரிடம் இருந்து வருகிறது என்று பார்த்த பொழுதே அவருடைய முகம் தோய்ந்து போனது. எடுத்து பேசுமாறு சைகை செய்தார் பார்வதி. வேறு வழியின்றி எடுத்து பேசினார் விஸ்வநாதன்.
"சொல்லு காசி... சரி... கண்டிப்பா... ஓகே... " பேசி முடித்து, அழைப்பைத் துண்டித்து, நிமலையும் பார்வதியையும் பார்த்தார்.
"அவங்க கிளம்பிட்டாங்க... இன்னும் ரெண்டு மணி நேரத்துல இங்க இருப்பாங்க" என்றார்.
சோபாவைவிட்டு எழுந்து நின்றான் நிமல்.
"நான் கிளம்புறேன்" என்று கூறிவிட்டு யார் பதிலுக்கும் காத்திராமல் அங்கிருந்து விறுவிறுவென நடந்து சென்றான்.
விஸ்வநாதனை கவலையுடன் பார்த்தார் பார்வதி. அங்கிருந்த அனைவரது முகத்திலும் கலவரம் தெரிந்தது. சட்டென்று சூழ்நிலை மாறியதை கவனித்தாள் வர்ஷினி.
"போய் அவங்கள கூட்டிகிட்டு வாங்க" என்றார் பார்வதி.
"அவங்களை கூட்டிக்கிட்டு வர டிரைவரை அனுப்பு. நான் சாயங்காலம் வந்து அவங்களை பாக்குறேன்" என்றார் விஸ்வநாதன் தன் கை கடிகாரத்தை பார்த்தபடி.
அவரும் அங்கிருந்து கிளம்பிச் செல்ல பெருமூச்சு விட்டார் பார்வதி.
"அவங்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்னு மாமா நினைக்கிறார்" என்றார் தாட்சாயணி.
"அதைப் பத்தியெல்லாம் அவங்க கவலைப்பட மாட்டாங்க. நீங்க முக்கியத்துவம் கொடுத்தாலும் கொடுக்கலனாலும், அவங்க வேலையை அவங்க செய்வாங்க" என்று சிரித்தான் ஆகாஷ்.
அங்கு வர இருப்பவர்களை பற்றி அவர்கள் கூறியதை நினைத்து பெருமைப்பட்டாள் வர்ஷினி, அவர்கள் செய்ய போகும் வேலை என்ன என்பதை அறியாமல். அங்கிருந்த மற்றவர்களுக்கு அதன் பொருள் புரிந்துதானிருந்தது.
"அம்மா, சமையல் செய்ய நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்" என்றாள் வர்ஷினி.
"வேண்டாம்... கோபாலனை, அவனுடைய தம்பிகளை கூட்டிக்கிட்டு வர சொல்லியிருக்கேன். அவங்க எல்லாத்தையும் பாத்துக்குவாங்க. நீ சும்மா இரு..."
"அக்கா சொல்றது சரி தான். இந்த வேலையை எல்லாம் நீ இழுத்துப் போட்டுகாதே. நீ இஷ்டப்பட்டு வேலை செய்றத பார்த்தா, ஜனங்க உன்னை வேலை வாங்க தயங்க மாட்டாங்க. அது நிச்சயம் நிமலை கோபப்படுத்தும்" என்றார் தாட்சாயணி.
அதைக்கேட்டு ஒன்றும் புரியாமல் நின்றாள் வர்ஷினி.
"இந்த அனுபவம் எல்லாம் உனக்கு இல்லன்னு நினைக்கிறேன். ஜாக்கிரதையா இரு. எங்க ஜனங்களை பத்தி உனக்கு தெரியாது" என்றார் லிங்கேஸ்வரன்.
*அவர் கூறுவது உண்மையா?* என்பது போல் பார்வதியை பார்த்தாள் வர்ஷினி. ஆமாம் என்று தலையசைத்தார் பார்வதி. அதற்கு வர்ஷினியின் முகம் போன போக்கைப் பார்த்து, களுக்கென்று சிரித்தாள் அனு.
"வர்ஷினி, என்னோட ரூமுக்கு வரியா?" என்றாள் அனு.
வர்ஷினி சரி என்று தலையசைக்க, அவளை இழுத்துக் கொண்டு ஓடி சென்று தன் அறையின் கதவை சாத்திக் கொண்டாள் அனு.
"என்னுடைய திங்க்ஸ்ஸை எல்லாம் அரேஞ்ச் பண்ண போறேன். நீ என் கூட இருந்து பேசிக்கிட்டு இருந்தா எனக்கு போர் அடிக்காது"
சரி என்று தலை அசைத்தாள் வர்ஷினி. வர்ஷினியை பேச சொல்லி விட்டு, விடாமல் பேசிக் கொண்டே இருந்தாள் அனு.
"உனக்கு என்னைத் தெரியுமா?"
தெரியாது என்று தலையசைத்தாள் வர்ஷினி.
"இந்த பசங்க, லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா எப்படித் தான் ஃபிரண்டை மறந்து போறாங்களோ எனக்கு புரியவேயில்ல. நாங்க எப்ப ஃபோன்ல பேசினாலும், நிமல் உன்னை பத்தி மட்டும் தான் பேசிக்கிட்டே இருப்பான். ஆனா, என்னை பத்தி உனக்கு ஒன்னுமே தெரியல. நீங்க ரெண்டு பேரும், தினமும் மணிக்கணக்கா பேசுவீங்கன்னு நிமல் சொன்னான். அப்படி என்ன தான் பேசுவீங்க? ஸ்வீட் நத்திங்ஸா...?"
ஒன்றும் கூறாமல் அவளைப் பார்த்தாள் வர்ஷினி. அவள் கேள்விக்கு என்ன பதில் கூறுவது? அவர்கள் பேசிய பேச்சுக்கள் எவ்வளவு இனிமையானவை...!
"சரி... சரி... நான் எதுவும் கேட்க மாட்டேன். அந்த பேச்செல்லாம் எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும்" என்று அவனைப் பார்த்து கண்ணடித்தாள்.
"உனக்கு ஒரு விஷயம் தெரியுமா, நிமல் காதலிக்கவே கூடாதுன்னு பிடிவாதமா இருந்தான்"
அவளை விழி விரிய பார்த்தாள் வர்ஷினி.
"காலேஜ்ல அவனுக்கு நிறைய புரொபோசல்ஸ் வந்தது. ஆனா அவன் எதுக்கும் அசைஞ்சி கொடுக்கல. அவனுக்கு இருந்த ஒரே எண்ணமெல்லாம், விஸ்வநாதன் அங்கிளுடைய பிசினஸை தூக்கி நிறுத்தணும் அப்படிங்குறது மட்டும் தான். அவங்களுக்கு நன்றியோட இருக்கணும்னு அவன் நினைச்சான். அவங்க இவனைப் பத்தி பெருமையா நினைக்கணும்னு ஆசைப்பட்டான். அது தான் நிமல் மேல எனக்கு ஒரு அதீத மரியாதையை ஏற்படுத்திச்சி..."
அதனால் தான் அவன், குமணனுடைய நிறுவனத்தை, கீழே இறக்க வேண்டுமென்று அவ்வளவு முனைப்புடன் இருந்திருக்கிறான் என்று எண்ணினாள் வர்ஷினி
"நம்ம ரெண்டு பேரும் இதுக்கு முன்னாடி சந்திச்சது இல்ல. ஆனா உன்னைப் பத்தியும் உங்க காதலைப் பத்தியும் எனக்கு எல்லாமே தெரியும். ஒவ்வொரு தடவை நிமல் உன்னை பத்தி பேசும் போதும், நீ அவனை எவ்வளவு ஆழமா காதலிக்குறேன்னு எனக்கு புரிஞ்சுது. அவனுக்கு அப்படிப்பட்ட ஒருத்தி கிடைச்சதை நினைச்சி எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. உங்க ரெண்டு பேரையும் நேரில் பார்க்கணும்னு நான் ரொம்ப ஆசையா இருந்தேன். ஆனா நான் எதிர்பார்த்த மாதிரி நீங்க ரெண்டு பேரும் இல்ல. உங்களுக்கு நடுவுல ஏதோ ஒன்னு மிஸ் ஆகுது. நீ அவனோட சந்தோஷமா இல்லயா? அவன் மேல நீ ஏதோ அதிருப்தியில இருக்கேன்னு எனக்கு தெரியுது. நிமலை நீ நம்பலயா? அவன் மேல உனக்கு இருந்த நம்பிக்கை போயிடுச்சா? இந்தக் கேள்வியை உன்னை கேட்க எனக்கு உரிமை இருக்கான்னு எனக்கு தெரியல. ஆனா நீங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருக்கணும்"
"உனக்கு என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சிருக்கு. உனக்கு தெரிஞ்ச வரைக்கும், நான் அவரை வெறுப்பேன்னு நினைக்கிறாயா? அவர் மேலே எனக்கு சந்தேகம் வரும்னு நீ நம்புறியா?"
"அப்புறம் அவன்கிட்ட பேச விடாம எது உன்னைத் தடுக்குது?"
"எனக்கு ஒரு கேள்விக்கு பதில் வேணும். அந்த பதில் கிடைக்காத வரைக்கும், நான் அவர்கிட்ட பேச மாட்டேன்"
"நிச்சயமா நிமல்கிட்ட இருந்து உனக்கு அந்த பதில் கிடைக்கும். ஆனா, நீ தான் அவனுக்கு சான்ஸே கொடுக்கலயே..."
"நான் எதுக்கு அவருக்கு சான்ஸ் கொடுக்கணும்? நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க அவரைப் பத்தி? என்னை பாக்குறதுக்காக ராஜாவுடைய அப்பா, ராஜராஜனையே ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்தாரு. காமேஸ்வரனுடைய இரும்பு வளையத்தை கடந்து, என்னை கடத்திகிட்டு வந்தாரு. அவர் மனசு வச்சா, எப்பேர்ப்பட்ட இரும்பு கோட்டையையும் கடந்து போற தைரியம் அவருக்கு இருக்கு. அவர் குடியிருக்கிற என்னுடைய இதயத்துக்குள்ள அவரால வர முடியாதா? அவர் எவ்வளவு நாள் தயங்கி நிற்கிறாருன்னு நானும் பாக்குறேன்"
அந்த அறையை விட்டு சென்றாள் வர்ஷினி... பேச்சிழந்து நின்றாள் அனு.
வர்ஷினி, அனுவின் அறையிலிருந்து வெளியே வந்தபொழுது, அவள் கைபேசி அழைத்தது. சுதாவின் எண்ணைப் பார்த்து அவள் மனம் சற்று அமைதியடைந்தது. அழைப்பை ஏற்றவள், சுதா ஏதும் கூறுவதற்கு முன்,
"என் சமையல் புக்கை கொண்டு வரலன்னா, ரொம்ப மோசமான வர்ஷினியை நீ பார்ப்ப" என்றாள்.
"அதை நீயே எங்க வீட்லயிருந்து எடுத்துக்கலாம்... நாளைக்கு எங்க வீட்டுக்கு நிச்சயதார்த்தத்துக்கு வரும் போது..."
"நாளைக்கு நிச்சயதார்த்தமா?" என்றாள் ஆர்வமாக.
"ஆமாம்... கரெக்டா வந்துடணும்..."
"கண்டிப்பா..."
அதே நேரம்... சுதாவுடைய அம்மாவும், அந்த விஷயத்தை தாட்சாயணியிடம் கூறினார். கோயம்புத்தூரில் இருந்து வந்த குடும்பமும், இனியவர்களின் இருப்பிடத்தில் நுழைந்தது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro