Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Part 39

பகுதி 39

ஸ்கேனிங் தவிர, வர்ஷியியின் மற்ற மருத்துவ பரிசோதனைகள் முடிந்தது. ஸ்கேனிங் அறையின் வெளியில், பார்வதியுடன் அமர்ந்து, அரை மணி நேரமாக தண்ணீரை குடித்துக் கொண்டிருந்தாள் வர்ஷினி, வயிறை ஸ்கேன் செய்ய. அவர்களின் முறைக்காக காத்திருந்தார்கள். அப்பொழுது, பார்வதிக்கு அவருடைய தங்கை தாட்சாயினியிடமிருந்து அழைப்பு வந்தது.

"சொல்லு தாச்சு..."

"அக்கா, சுதாவுடைய அம்மாவும் அப்பாவும், கல்யாண தேதியை முடிவு பண்ண அங்க வராங்க."

"இப்பவா?"

"ஆமாம் இன்னைக்கு நாள் நல்லா இருக்காம். அதனால நான் உன்னை வச்சி ஃபிக்ஸ் பண்ண சொல்லிட்டேன். இன்னும் அரை மணி நேரத்துல வந்துடுவாங்க. நம்ம பேசிக்கிட்ட மாதிரி, கல்யாண தேதியை நீயே முடிவு பண்ணிடு"

"அடக் கடவுளே... நான் ஹாஸ்பிடல் வந்திருக்கேனே..."

"எப்போ கா திரும்ப போவே?"

"நான் வர்ஷினிக்கு ஸ்கேன் பண்ண வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். எப்படியும் ஒரு மணி நேரம் ஆயிடும்"

"அய்யய்யோ.. நீ வீட்ல இருப்பேன்னு நான் அவங்களை கிளம்ப சொல்லிட்டேனனே"

"நான் உங்க மாமாவை போக சொல்லிட்டு, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நானும் போறேன்."

"சரிக்கா"

தாட்சாயணியின் குரலில் உற்சாகம் குறைந்ததை கவனித்தார் பார்வதி. அழைப்பைத் துண்டித்தார் அவர்.

"என்ன ஆச்சும்மா?" என்றாள் வர்ஷினி.

"சுதாவுடைய பேரண்ட்ஸ், கல்யாண தேதி ஃபிக்ஸ் பண்ண நம்ம வீட்டுக்கு வராங்களாம்"

"நிஜமாவா மா?" என்றாள் சந்தோஷமாக.

"ஆனா, நம்ம வீட்ல யாருமே இல்ல"

"நீங்க கிளம்பி போங்கம்மா. இல்லன்னா, அவங்க வருத்தப்படுவாங்க"

"உன்னை இங்க தனியா விட்டுட்டு நான் எப்படி போறது?"

"நான் ஸ்கேன் பண்ணிட்டு வெயிட் பண்றேன். நீங்க போயிட்டு காரை மட்டும் அனுப்புங்க"

என்ன செய்வது என்று தீவிரமாய் யோசித்தார் பார்வதி.

"நீ சொல்றதும் சரி தான். வீட்ல யாருமே இல்லன்னா அவங்க நிச்சயமா ஃபீல் பண்ணுவாங்க. நான் போயிட்டு, உனக்கு காரை அனுப்புறேன்."

"சரி, மா"

பாதுகாவலர்களை வர்ஷினியுடன் மருத்துவமனையில் விட்டு, கிளம்பினார் பார்வதி. காரில் அமர்ந்தவுடன் நிமலுக்கு ஃபோன் செய்தார்.

பார்வதி சென்ற சிறிது நேரத்தில் உள்ளே அழைக்கப்பட்டாள் வர்ஷினி. அவள் வெளியே வந்த பொழுது அவளுக்காக அங்கே நிமல் காத்திருந்ததை பார்த்து திடுக்கிட்டாள். அவனிடம் எப்படி பேசுவது என்று புரியாமல் எங்கோ பார்த்துகொண்டு நின்றாள்.

"அம்மா வீட்டுக்கு கிளம்பி போய்ட்டாங்கன்னு செக்யூரிட்டி கார்ட் சொன்னாரு. அதனால தான் வந்தேன்"

அவனிடம் பேசாமல், நடக்கத் தொடங்கினாள் வர்ஷினி. இங்குமங்கும் கவனமாய் பார்த்தபடி, அவளைப் பின்தொடர்ந்தான் நிமல். அவள் காரில் ஏறி அமர, காரை ஸ்டார்ட் செய்தான். அவள் ஜன்னலின் வழியே வெளியே பார்த்துக் கொண்டு வந்தாள்.

"வர்ஷு..." என்று அவன் அழைக்க,

முகத்தை திருப்பாமல், ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள் வர்ஷினி. அவளுடைய பார்வை, அவன் கையில் அணிந்திருந்த கடிகாரத்தின் மீது விழுந்தது. அவனுடைய பிறந்த நாளன்று அவள் பரிசாக அளித்த கைக்கடிகாரத்தை அவன் அணிந்திருந்தான். அன்று அவர்களுக்கு இடையில் நடந்த உரையாடல் அவள் நினைவுக்கு வந்தது.

{"எனக்கு ஒரு உதவி செய்றீங்களா?"

"நிச்சயம் செய்றேன்"

"நான் வாங்கிக் கொடுத்த வாட்ச்சை நீங்க ரெகுலரா யூஸ் பண்றீங்க..."

"ஆமாம்..."

"அப்படி பண்ணாதீங்க"

"ஏன்?" என்றான் குழப்பத்துடன்

"நம்ம காலேஜ் முடிஞ்சதுக்கு அப்புறம், என் கூட இருக்கணும்னு நினைக்கும் போது மட்டும் கட்டிக்கோங்களேன்..."

"நீ என்ன சொல்றேன்னு எனக்கு புரியல"

"இந்த வாட்சை பார்க்கும் போதெல்லாம், என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு நீங்க நினைக்கணும்"

"இந்த வாட்ச் என் கையில இல்லனாலும் நான் எப்பவும் அதை பத்தி தான் நினைச்சுட்டு இருக்கேன். வேற எதுவும் என் மனசுல இல்ல. நான் இந்த வாட்சை தினமும் கட்டினா என்ன?"

"நீங்க தினமும் யூஸ் பண்ணா, அது சீக்கிரம் பிஞ்சிடும். ஏன்னா, அது ரொம்ப லோ குவாலிடி வாட்ச். அதனால, என்னை எப்போ ரொம்ப மிஸ் பண்றீங்களா அப்ப மட்டும் கட்டிக்கோங்க..." என்றாள் கெஞ்சலாக.

"நீ என் பக்கத்திலேயே இருந்தா கூட, நீ என்கிட்ட மொத்தமா வர்ற வரைக்கும் நான் உன்னை மிஸ் பண்ணிகிட்டு தான் இருப்பேன்"}

என்ற அவர்களது உரையாடல் அவள் காதில் எதிரொலிக்க, அவள் மென்று முழுங்கினாள்.

"நீ என் மேல கோவமா இருக்கேன்னு எனக்கு தெரியும். அது தப்பும் இல்ல. நான் தப்பு செஞ்சேன் தான். ஆனா உன்னைப் பொறுத்தவரைக்கும் நான் எப்பவுமே தப்பானவனா இருந்ததில்ல. உங்க அப்பா அம்மாவை விட, நாங்க தான் முக்கியம்னு நீ எங்ககிட்ட வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ். அது தான் நீ... அது தான் நீ என் மேல வச்சிருக்கிற காதல். நான் சில தவறுகளை செஞ்சிருக்கலாம்... ஆனா, என்னைக்குமே உன்னை காயப்படுத்தணும்னு நான் நெனச்சது இல்ல. எனக்கு வேற வழி இருக்கல. அதனால தான் அப்படி எல்லாம் நடந்துகிட்டேன். ஏன்னா, உன்னை என்னால இழக்க முடியாது."

அவள் அவனை திரும்பி பார்க்கவில்லையே தவிர, அவன் பேசுவதை தடுக்கவும் இல்லை. அது நிமலுக்கு சந்தோஷத்தைத் தந்தது. அவன் மீது அவள் கோபமாக இருந்தாலும், அவன் தன் செயலுக்கான காரணத்தை சொல்ல வேண்டுமென்று நினைத்து, அதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்கியது அவனுக்கு நம்பிக்கையை வழங்கியது.

அவர்கள் இனியவர்களின் இருப்பிடம் வந்து சேர்ந்தார்கள். காரை விட்டு கீழே இறங்கி உள்ளே நடந்தாள் வர்ஷினி.

"வர்ஷினினினினி..."என்று, அவளை நோக்கி பாய்ந்து ஓடி வந்து, அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள் சுதா. வர்ஷினியும் சந்தோஷமாய் அவளை கட்டிக் கொண்டாள். சுதாவின் பெற்றோரின் பாதம் தொட்டு வணங்கினாள் வர்ஷினி.

"எப்படி இருக்க வர்ஷினி?" என்றார் சுதாவின் அம்மா, கங்கா.

"நல்லா இருக்கேன், ஆன்ட்டி"

"உன் ஃபிரண்டு, உன் கூடவே இருக்க, இங்கயே வந்துட போறா" என்றார் சுதாவின் அப்பா ராகவன்.

ஆமாம் என்று புன்னகைத்தாள் வர்ஷினி.

"உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு தெரிஞ்சி, சுதா எவ்வளவு சந்தோஷப்பட்டான்னு தெரியுமா...?"

வர்ஷினியின் கண்கள் அனிச்சையாய் நிமலின் பக்கம் திரும்பியது. நிமல் அவளின் முக மாற்றத்தை தான் கவனித்துக் கொண்டிருந்தான்.

"நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும்னு அவ ஆசைப்பட்டா. நீ காதலிச்சவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டதுல எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம்"

அவருக்கு புன்னகையை பதிலாக தந்தாள் வர்ஷினி. நிமலுக்கு சந்தோஷமாய் இருந்தது.

"நாங்க சுதா, பிரகாஷ் கல்யாண தேதியை ஃபிக்ஸ் பண்ணிட்டோம். இன்னும் பத்து நாள்ல கல்யாணம்" என்றார் ராகவன்.

அதைக் கேட்டு சந்தோஷப்பட்டாள் வர்ஷினி.

"ஆமாம்மா... உனக்கு தான் தெரியுமே... எங்க அக்கா ரொம்ப சீரியஸா இருக்காங்க. நீ சுதாவுக்கு கல்யாண வேலையில ஹெல்ப் பண்ணுவல்ல?" என்றார் கங்கா.

"நிச்சயமா, ஆன்ட்டி"

"நீங்க பேசிக்கிட்டு இருங்க. எனக்கு வர்ஷினிகிட்ட பேச வேண்டியது நிறைய இருக்கு" என்று கூறிவிட்டு, அவள் கையை பிடித்து இழுத்து சென்றாள் சுதா.

சுதா தன்னை நிமலின் அறையை நோக்கி இழுத்துச் செல்வதைப் பார்த்து, அவள் கையை பிடித்து நிறுத்தி, அவளை விருந்தினர் அறைக்குள் அழைத்துச் சென்றாள் வர்ஷினி. அந்த அறையில் தன் கண்களை குழப்பத்துடன் ஓடவிட்டாள் சுதா, தனக்கு ஒன்றும் தெரியாது என்பது போல் பாசாங்கு செய்து.

"நீ இங்க ஏன் இருக்க?"

பிரகாஷ் ஏற்கனவே அவளிடம் அனைத்தையும் கூறிவிட்டிருந்த போதிலும், வர்ஷினியின் பக்கத்தையும் கேட்க விரும்பினாள் சுதா. ஏனென்றால், ஒரு தரப்பு நியாயத்தை மட்டும் கேட்டு முடிவுக்கு வருவது சரியாக இருக்காது என்று அவள் நினைத்தாள்.

"சொல்லு, வர்ஷினி"

அவளை கட்டிக்கொண்டு அழுதாள் வர்ஷினி.

"எனக்கு ஒண்ணுமே புரியல சுதா. நிமல் என்னை ஏமாத்திட்டாருங்குறதை என்னால நம்பவே முடியல. அவர் அப்படி செய்ய மாட்டார்ன்னு என் மனசுக்கு தெரிஞ்சாலும், எல்லா சந்தர்ப்பமும் அவருக்கு எதிரா இருக்கு. எங்க ரெண்டு பேரோட கம்பெனியும் எதிரிங்கன்னு எனக்கு தெரியும். நிமல் எங்க அப்பாவை வெறுக்குறார்னும் எனக்கு தெரியும். எங்க கம்பெனிக்கு எதிரா அவர் ஏதாவது செய்யறது தப்பில்ல. ஏன்னா, அது பிசினஸ். ஆனா, நான் யாருங்குற உண்மையை எதுக்காக அவரோட அம்மா அப்பாகிட்ட அவர் மறைக்கணும்? அவங்க தான் என்னை மருமகளா ஏத்துக்க தயாரா இருந்தாங்களே...? அப்படி இருக்கும் போது, அதை சொல்றதுல அவருக்கு என்ன பிரச்சனை? அதோட மட்டும் இல்லாம, என்னை கல்யாணம் பண்ணிக்க, ரிஷியை துப்பாக்கி முனையில நிறுத்தினார்... எதுக்காக இப்படி எல்லாம் செய்யணும்? என்னால சத்தியமா நம்பவே முடியல. இதெல்லாம் செய்யும் போது, அவர் எவ்வளவு முரட்டுத்தனமா நடந்துகிட்டார் தெரியுமா?"

அவளுடைய முதுகை வருடி கொடுத்தாள் சுதா.

"வர்ஷினி, உன்னைப் பத்தி எனக்கு தெரியும். என்னை பத்தியும் உனக்கு தெரியும். எப்படிப்பட்ட பிரச்சனையா இருந்தாலும், நான் எப்பவுமே உனக்காக, உன் பக்கம் தான் இருந்திருக்கேன். நான் உன்கிட்ட ஒன்னே ஒன்னு தான் சொல்ல விரும்புறேன். அவங்க அம்மா அப்பாகிட்ட உண்மையை மறைச்சது தப்பு தான். ஆனா, அதுக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும்னு எனக்கு தோணுது. உன் காதலை ஏத்துகிறதுக்கு முன்னால, அவர் உன்கிட்ட என்ன கேட்டாருன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?"

ஒன்றும் கூறாமல் அவளை பார்த்தாள் வர்ஷினி.

"உங்க அப்பா நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகலன்னா, நீ என்கிட்ட வந்துடுவியான்னு கேட்டாரு"

ஆமாம் என்று தலையசைத்தாள் வர்ஷினி.

"எங்ககிட்ட அவர் ஒரு தடவை சொன்னார், 'உனக்கே விருப்பம் இல்லனாலும், அவர் உன்னை கல்யாணம் பண்ணி தான் தீருவேன்னு' ஆரம்பத்திலிருந்தே அவர் தெளிவா தான் இருந்தாரு. அதை செஞ்சு முடிக்க, அவர் எந்த அளவுக்கும் துணிவாருன்னு நான் நெனச்சேன். அதைத் தான் அவர் செஞ்சிருக்காரு... தயவு செய்து எல்லாத்தையும் யோசிச்சுப் பாரு"

அப்பொழுது சுதாவின் கைபேசி ஒலிக்கத் துவங்கியது. அவள் அழைப்பை ஏற்று பேசினாள்.

"சொல்லுங்கம்மா. சரி வறோம்"

அழைப்பைத் துண்டித்தாள் சுதா.

"ராஜா வந்திருக்காராம். பார்வதி ஆன்ட்டி நம்மளை வர சொல்றாங்க"

சரி என்று தலையசைத்துவிட்டு, சுதாவுடன் கீழ்தளம் வந்தாள் வர்ஷினி. அங்கு பிரகாஷும் ராஜாவும் அமர்ந்திருந்தார்கள். பிரகாஷை பார்த்தவுடன் சுதாவிற்கு சந்தோஷம் கட்டுக்கடங்காமல் போனது.

"நீங்க எப்ப வந்தீங்க?" என்றாள்.

"இப்ப தான் வந்தேன்"

"எப்படி இருக்க, சுதா?" என்றான் ராஜா.

"நல்லா இருக்கேன்"

"நீ எப்படி இருக்க, வர்ஷினி?" என்றான் தயக்கத்துடன் ராஜா.

நன்றாக இருக்கிறேன் என்பது போல் தலையசைத்தாள் வர்ஷினி.

"என்ன பா நீ அப்படி கேட்டுட்ட... அவ நிமல் கூட இருக்கா... அவளுடைய கனவெல்லாம் நினைவாயிடுச்சி. அப்படினா அவ சந்தோஷமா தானே இருப்பா...?" என்றார் சுதாவின் அம்மா.

வலிய புன்னகைத்தாள் வர்ஷினி.

"அவளுடைய கனவை பத்தியெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றார் பார்வதி.

"அத பத்தி மட்டும் கேட்காதீங்க. எப்ப பாத்தாலும் வர்ஷினியைப் பத்தியும் நிமலை பத்தியும் பேசுறது தான் சுதாவுடைய வேலையே." என்றார் கங்கா.

"அவ பேசினாதுல தப்பு ஒன்னும் இல்ல. அவங்க ரெண்டு பேரும், மேட் ஃபார் ஈச் அதர்ன்னு சொல்ற மாதிரி அவ்வளவு பாந்தமா இருக்காங்க" என்றார் ராகவன்.

நிமலுக்கு பறப்பது போல் தோன்றியது. சுதாவின் பெற்றோருக்கு அவன் மனதிற்குள் நன்றி கூறினான்.

"உங்க அம்மா, அப்பா எப்போ வராங்க பிரகாஷ்?" - ராகவன்

"அவங்க அக்காவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க ப்ளான் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அதனால, அவங்க எப்ப வராங்கன்னு சொல்லல" என்று சிரித்தான் பிரகாஷ்.

"அப்படின்னா, அவங்க எப்ப வேணாலும் இங்க இருப்பாங்கன்னு சொல்லுங்க..." -கங்கா

"அதே தான்" என்றான் பிரகாஷ்.

வர்ஷினியை பதற்றம் தொற்றிக் கொண்டது. அவள் விருந்தினர் அறையில் இருப்பதை பார்த்தால், பிரகாஷின் அம்மா என்ன நினைப்பார்? அவர் பார்வதியை போல் இல்லை என்று சுதா ஒருமுறை கூறியிருந்தாளே. இப்பொழுது என்ன செய்வது?

தாட்சாயணியிடம் ஏற்கனவே பார்வதி அனைத்தையும் கூறிவிட்டிருந்தார் என்பது அவளுக்கு தெரியாது அல்லவா? சட்டென்று அவள் முகத்தில் தோன்றிய பதற்றத்தை கவனித்தார் பார்வதி. அது ஏன் என்றும் அவருக்கு தெரியும்.

"அவ எப்பவுமே இப்படித் தான். ஏதாவது செய்ய நினைச்சா அதை நிச்சயம் செஞ்சிடுவா." என்றார் பார்வதி.

"ஒன்னு பண்ணுங்க... நீங்க எல்லாத்தையும் ரெடி பண்ணி, அவங்களை நீங்க சர்ப்ரைஸ் பண்ணிடுங்க" என்றார் ராகவன்.

"குட் ஐடியா" என்றான் ராஜா.

அப்பொழுது பார்வதியின் கவனம் ராஜாவின் மேல் திரும்பியது.

"நீங்க எப்படி இருக்கீங்க, இளைஞரணி தலைவரே?" என்றார் பார்வதி கிண்டலாக.

அதைக் கேட்டு களுக் என்று சிரித்தான் ராஜா.

"கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு, ஆன்ட்டி "

"பரவாயில்லயே... அவ்வளவு வேலைக்கு நடுவுலயும் உன் ஃபிரண்ட்டுக்காக நேரம் ஒதுக்கியிருக்கியே... "

"அது மட்டும் இல்ல, பெரியம்மா. எங்க கல்யாணத்துக்காக பெரிய பார்ட்டி அரேஞ்ச் பண்ணிகிட்டிருக்கான்" என்றான் பிரகாஷ்.

"நடத்துங்க... அந்த பார்ட்டிக்கு வர்ஷினிக்கும், சுதாவுக்கும் வேண்டிய ஹெல்பை நான் செய்யறேன்." என்றார் பார்வதி உற்சாகமாக.

"இப்படி ஒரு மாமியார் கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும்" என்றார் கங்கா.

அவர் கூறுவது உண்மை தான் என்பது போல புன்னகைத்தாள் வர்ஷினி.

"நாங்க கிளம்பறோம்." என்றார் ராகவன்.

சரி என்று பார்வதி தலையசைக்க, சுதா தன் பெற்றோருடன் கிளம்பி சென்றாள். அவர்களுடன் பிரகாஷும் ராஜாவும் செல்ல, அலுவலகம் கிளம்பினான் நிமல். பார்வதி அழைத்தவுடன், போட்டதை போட்டபடி விட்டுவிட்டு வந்ததிருந்தான் அவன்.

பார்வதியின் அருகில் வந்தமர்ந்தாள் வர்ஷினி.

"என்னம்மா யோசிக்கிறீங்க?" என்றாள்.

ஒன்றுமில்லை என்று தலையசைத்தார் பார்வதி.

"சித்தி இங்க வர போறதைப் பத்தி யோசிக்கிறீங்களா?"

அவளுக்கு பதில் கூறாமல் அமைதியாய் இருந்தார் பார்வதி.

"நான் ஒரு முடிவெடுத்து இருக்கேன் மா"

பார்வதி ஆர்வமானார்.

"நான் நிமல் ரூமுக்கு ஷிப்ட் ஆகுறேன்"

பார்வதியின் சந்தோஷம் எல்லை கடந்து கொண்டிருந்தது.

"உங்களை யாரும் கேலி பேச நான் விடமாட்டேன், மா"

"ஜனங்களுடைய கேலிப் பேச்சுல இருந்து எங்களை காப்பாத்த, நீ விருப்பம் இல்லாத எதையும் செய்ய வேண்டாம், வர்ஷினி"

"நீங்க அதை பத்தி கவலைப்படாதீங்க. நான் அவருடைய ரூமுக்கு போறேன் தான்... அதுக்காக நான் அவரை மன்னிச்சிட்டேன்னு அர்த்தமில்ல"

நிம்மதிப் புன்னகை பூத்தார் பார்வதி. இப்போதைக்கு அது போதாது? மீதி சங்கதியை நிமல் கவனித்துக் கொள்ள மாட்டானா?

"நானும் அதை தான் சொல்றேன். நீ அவனை மன்னிக்க வேண்டியதில்ல. கஷ்டபட்டு தான் அதை அவன் அடையணும். ஆனா, அவனோட ஒரே ரூம்ல தங்குறது உனக்கு சிரமமா இருக்கும். அவன் எவ்வளவு கஷ்டப்படுறான்னு இதுவரைக்கும் உனக்கு எதுவும் தெரியாது. ஆனா நீ அவன் கூட தங்கினா, அவன் எவ்வளவு வருத்தப்படுறான்னு நீ கண்கூடா பார்க்க வேண்டியிருக்கும். அவன் உன்கிட்ட பேச முயற்சி பண்ணுவான். அவன் மேல தப்பு இல்லன்னு நிரூபிக்க முயற்சி செய்வான். அவன் வேதனை படுறதை பார்த்து நீயும் வேதனைப்படுவ. அதை நினைச்சா தான் எனக்கு கவலையா இருக்கு"

அவர் கூறியதைக் கேட்டு திகைத்தாள் வர்ஷினி. உண்மையிலேயே நிமல் வேதனைப்பட்டு கொண்டு தான் இருக்கிறானா? அவளை விட்டு பிரிந்து இருப்பதால் கவலைப்படுகிறானா? அவன் வேதனைப் படுவதை பார்த்து அவளும் வேதனைப்பட போகிறாளா? அந்த எண்ணம், அவளை அசைத்து தான் பார்த்தது. அவனுடன் இருக்கப் போகும் நாட்கள், அவளுக்கு சவால்கள் நிறைந்ததாக தான் இருக்கப் போகிறது. ஆனால், அது அவளுக்கு நிச்சயம் வேண்டும். நிமல் என்ன தான் செய்ய போகிறான் என்று அவளுக்கு பார்க்கவேண்டும். சோபாவில் இருந்து எழுந்து நின்றாள்.

"எங்க போற?"

"என்னுடைய திங்க்ஸை எல்லாம் நிமல் ரூமுக்கு மாத்த போறேன்"

"நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்"

"பரவாயில்ல மா... நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்"

"நான் மட்டும் இங்க தனியா என்ன செய்யப் போறேன்? வா போகலாம்"

அவர்கள் விருந்தினர் அறையை நோக்கிச் சென்றார்கள். வர்ஷினியின் பொருள்கள் அனைத்தையும் பைகளில் நிரப்பி வைத்துவிட்டு, கோபாலனை அழைத்து அவற்றை நிமலின் அறைக்கு எடுத்துச் செல்ல கூறினார். கோபாலன் சந்தோஷமாய் தலையசைத்துவிட்டு அவற்றை நிமலின் அறைக்கு அள்ளிச் சென்றார். வர்ஷினியும் பார்வதியும் அவரை பின் தொடர்ந்து சென்றார்கள்.

நிமலின் அறையின் முகப்பில் நின்றாள் வர்ஷினி, அந்த அறையில் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட இனிமையான நினைவுகளை அசைபோட்டபடி.

"என்ன ஆச்சு, வர்ஷினி?"

"ஒன்னும் இல்லம்மா"

அவள் கையை பற்றி உள்ளே இழுத்தார் பார்வதி. அந்த அறையில், அறை சுவரின் அளவிற்கு, பிரம்மாண்டமாய் இருந்த தன்னுடைய புகைப்படத்தை பார்த்து திகைத்து நின்றாள் வர்ஷினி. அவளுடைய கண்கள் சட்டென்று கலங்கியது, பார்வதியோ உள்ளூர புன்னகைத்தார்.

நிமலின் அலமாரியில் வர்ஷினிக்கு இடம் ஒதுக்கி அவளுடைய பொருள்களை அதில் அடுக்க ஆரம்பித்தார். வர்ஷினியின் மனதில் இனம்புரியாத சங்கடம் தோன்றியது. இதே அறையில் தான் அவள் நிமலுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தாள். இங்கு வந்து சேர மிக ஆவலாய் இருந்தாள். ஒரே அறையில் அவனுடன் இருந்து கொண்டு, எப்படி அவனுடன் பேசாமல் இருக்க முடியும்? அவளுடைய பதற்றம் அதிகரித்தது.

அவளுடைய மாமியாரின் சந்தோஷமோ விண்ணைத் தொட்டது. அவர் நிமலை பற்றி நினைத்துக் கொண்டிருந்தார். வர்ஷினியை தன் அறையில் பார்த்தால் அவன் என்ன செய்வான்? தன்னுடைய அலமாரியில் வர்ஷினியின் பொருட்களை பார்க்கும் பொழுது அவனுக்கு எப்படி இருக்கும்? அவருக்கு ஆர்வமாய் இருந்தது.

அப்பொழுது, அவர்கள் நிமலின் கார் வரும் சத்தத்தை கேட்டார்கள்.

"அம்மா, எனக்கு தலை வலிக்கிற மாதிரி இருக்கு" என்றாள் வர்ஷினி.

பொங்கி வந்த சிரிப்பை, படாதபாடுபட்டு அடக்கினார் பார்வதி.

"நீ படுத்து ரெஸ்ட் எடுத்துக்கோ. சீக்கிரமே தலைவலி சரியாயிடும்"

"இல்லம்மா... காபி குடிச்சா, நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்"

"சரி இரு... நான் கொண்டு வரேன்"

"இல்ல மா... நானும் வரேன்" என்று அங்கிருந்த தலைதெறிக்க ஓடினாள் வர்ஷினி.

களுக்கென்று சிரித்தார் பார்வதி. எப்படி இருந்தாலும் அவள் மறுபடி இங்கே தானே வந்தாக வேண்டும்! நிமலின் அறை, இப்பொழுது அவளுடைய அறையாகவும் மாறிவிட்டது. எப்பொழுதும் அவளுடைய அறையாக இருக்கவும் போகிறது, என்று நினைத்தார் பார்வதி.

சமையலறையை நோக்கி சென்றாள் வர்ஷினி. அவள் படிக்கட்டிலிருந்து இறங்கி வருவதை பார்த்து, அவளை பார்த்துக் கொண்டு அப்படியே நின்றான் நிமல். அவள் தன் அறைக்குச் சென்றுவிட்டால் வெளியே வருவதே இல்லை. அவள் சமையலறைக்குச் சென்ற பின் தன் அறையை நோக்கி சென்றான் நிமல். தன் எதிரில் பார்வதி வருவதைப் பார்த்து புன்னகை புரிந்தான். அவனிடம் எதுவும் கூறாமல்,

"அவள் வருவாளே... உடைந்து போன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளே..." என்று பாடியபடி அவனைப் பார்த்து கண்ணடித்தார், சொல்ல நினைத்ததை பாடல் மூலம் கூறிவிட்டு. ஒன்றும் புரியாமல் நின்ற நிமலை பார்த்து சிரித்துவிட்டு சமையலறை நோக்கி சென்றார்.

உண்மையிலேயே அவனுக்கு ஒன்றும் புரியவில்லை தான். வர்ஷினி அவன் அறைக்கு வருவது நடக்காத விஷயம் என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும் போது, எப்படி அவன் புரிந்து கொள்வான்? அவனுக்கு வெறுப்பாய் இருந்தது. அவனால் ஒன்றுமே செய்ய முடியாத நிலையை நினைத்து, அவனுக்கு தன் மீதே கோபம் வந்தது. வர்ஷினி அவனுடன் ஒரே வீட்டில் இருந்த போதும், அவள் முகத்தை கூட சரியாக அவனால் பார்க்க முடியவில்லை.

அப்பொழுது, அவனுடைய கைபேசி அலறியது. அந்த அழைப்பு ராஜாவிடம் இருந்து வந்தது.

"ஹாய், ராஜா"

"வர்ஷினி உன் கூட பேசறது இல்லயா?"

"இல்ல" என்றான் சோகமாக.

"நீ ஏன் அமைதியா இருக்க? நீ தான் ஏதாவது செய்யணும்..."

"அவ கெஸ்ட் ரூமில் தங்கியிருந்தா நான் என்ன செய்றது? அவ என் முன்னாடி கூட வர மாட்டேங்குறா..."

"என்னடா சொல்ற நீ...? அவளை உன்னோட ரூமுக்கு தூக்கிக்கிட்டு வர முடியாதா உன்னால?"

"என்னால அதை செய்ய முடியாதுன்னு நினைக்கிறியா நீ? எவ்வளவு நேரம் ஆகும் எனக்கு, அவளை இங்க தூக்கிகிட்டு வர? நான் ஏற்கனவே தப்பு பண்ணியிருக்கேன்... அதனால தான் அவளுக்கு பிடிக்காத எதையும் செய்யக் கூடாதுன்னு நினைக்கிறேன். எனக்கு அவளோட மன்னிப்பு தான் வேணும். வேற எதுவும் இல்ல."

"ஆனா, ஒன்னும் செய்யாம காத்திருக்கிறது, எந்த விதத்திலும் உதவாது. நீ செஞ்ச தப்பை நீ தான் சரி செய்யணும்"

"சீக்கிரமே சரி செய்வேன்"

"உனக்கு, நான் இருக்கேன். அதை மறந்துடாத"

"எனக்கு தெரியும்"

"டேக் கேர்"

அழைப்பைத் துண்டித்து விட்டு, தன் உடையை எடுக்க, அலமாரியை நோக்கி சென்றான் நிமல்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro