Part 37
பாகம் 37
விருந்தினர் அறையின் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு, முகம் சுளித்தாள் வர்ஷினி. ஏனென்றால், பார்வதி கதவை தட்ட மாட்டார். அது விஸ்வநாதனாக இருந்தால், அவள் பெயரை சொல்லி அழைப்பார். வந்திருப்பது நிமலாக இருக்குமோ என்று அவளுக்கு பதற்றம் ஏற்பட்டது. அவனை எப்படி எதிர்கொள்வது என்று அவளுக்கு புரியவில்லை. மெல்ல கதவை நோக்கி சென்றாள். கதவைத் திறந்து பார்த்தவளுக்கு, அங்கு கோபாலன் நின்று இருந்ததை பார்த்து நிம்மதி ஏற்பட்டது. அவர் உள்ளே வந்து, மூன்று பைகளை அங்கே வைத்தார்.
"இதெல்லாம் என்னது?" என்றாள் வர்ஷினி.
அவளைப் பார்த்து சிரித்து விட்டு, அங்கிருந்து பதில் கூறாமல் சென்றார் கோபாலன்.
"கோபாலன் அண்ணா, நில்லுங்க... பதில் சொல்லுங்க..."
அங்கிருந்து ஓடிப்போனார் கோபாலன். அவள் கோபாலனை அழைப்பதைக் கேட்டு அங்கு வந்தார் பார்வதி.
"என்ன ஆச்சு, வர்ஷு?"
"கோபாலன் அண்ணன் இந்த பேக்கை எல்லாம் கொண்டு வந்தார். என்னன்னு கேட்டா, எதுவுமே சொல்லாம ஓடிப் போய்ட்டாரு"
"அதை திறந்து பார்த்தா, என்னன்னு தெரிஞ்சிட போகுது..." என்றார் பார்வதி வர்ஷினியோ தயக்கத்துடன் நின்றிருந்தாள்.
"சரி, நான் பார்க்கிறேன்"
ஒரு பையை திறந்த போது, அதில் விதவிதமான டிசைனர் புடவைகள் இருந்தது.
"நிம்மு தான் இதை எல்லாம் உனக்காக அனுப்பியிருக்கான்"
மற்றொரு பையில், வேறு சில உடைகள் இருந்தன. அவை அனைத்தும், வர்ஷினி வழக்கமாய் அணியக்கூடிய விதத்தில் இருந்தன. அதையெல்லாம் பார்த்து பேச்சிழந்து நின்றாள் வர்ஷினி. அவளுடைய முகத்தை ஓரப் பார்வையால் கவனித்துக் கொண்டு தான் இருந்தார் பார்வதி.
கடைசி பையை திறந்து பொழுது பார்வதியே கூட திகைத்து தான் போனார். அதில் ஒரு பெண்ணுக்கு தேவையான அனைத்தும் இருந்தது. தன் விழிகளை அகல விரித்து, அவர் வர்ஷினியை பார்க்க, அவள் சிலை போல் நின்றிருந்தாள். அவள் இது வரை, *அ முதல் ஃ* வரை என்றால் என்ன என்பதை பார்த்ததே இல்லை. இப்பொழுது கண்ணெதிரில் பார்த்துக் கொண்டிருக்கிறாள். சோப்பும், தேங்காய் எண்ணெயும் என்றால் பரவாயில்லை. அதெல்லாம் சாதாரணமாக பெண்கள் உபயோகிப்பது தான். ஆனால் இங்கு, சேஃப்டி பின், ஹேர் டிரையர், நெயில் ஃபைல், ஃபுட் ஸ்க்ரப்பர், என எல்லாமே இருந்தது.
பார்வதிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ஏனென்றால், அவருடைய மகனை பற்றி பேச, அவருக்கு விஷயம் கிடைத்துவிட்டது அல்லவா... அலமாரியைத் திறந்து, அவற்றையெல்லாம் அதில் அடுக்கி வைக்க துவங்கினார்.
"இந்த பையனை என்னன்னு சொல்றது...? எப்படித் தான் அவனுக்கு இதெல்லாம் தெரியுதோ. உனக்கு தேவையானதை எல்லாம் என்னை வாங்க சொல்லியிருந்தா, நான் கூட இவ்வளவையும் வாங்கி இருக்க மாட்டேன். நிச்சயம் நிறைய விட்டுப் போயிருக்கும். இதெல்லாம் செய்யறதுல என்ன பிரயோஜனம் இருக்கு? இதெல்லாம் பெரிசாவா தெரியவா போகுது? அன்பை எப்படி வெளிப்படுத்தணும்னு அவனுக்கு தெரியலயே...! மடையன், மனசுக்குள்ள அவ்வளவு காதலை வச்சுக்கிட்டு, ஏதாவது பைத்தியகாரத்தனம் செஞ்சி தொலைக்கிறான். அது அவனை சேர்ந்தவங்களை காயப்படுத்திடுது. கோவத்துல எதையாவது செஞ்சுட்டு தனியா உட்கார்ந்து அழுவான். இந்தப் பையனை என்ன செய்யறதுன்னே புரியல" அவர் திரும்பிப் பார்க்க, தலைகுனிந்தபடி அமைதியாய் நின்றிருந்தாள் வர்ஷினி.
"நீ இதையெல்லாம் போட்டு உன் மனசை குழப்பிக்காத. குளிச்சிட்டு, சாப்பிட கீழே வா..."
வர்ஷினி ஏதோ சொல்ல நினைக்க, அவளை தடுத்தார் பார்வதி.
"வரமாட்டேன்னு சொல்லாத. எவ்வளவு நேரம் இந்த ரூமிலேயே அடஞ்சி கிடப்ப? நீ இப்படியே இருக்க கூடாது. எனக்காகவாவது வாயேன்..."
சரி என்று தலையசைத்துவிட்டு தன் உடைகளை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றாள் வர்ஷினி.
கோயம்புத்தூர்
விஸ்வநாதனின் ஒரே தம்பி, காசிநாதனை கேள்விக் கணைகளால் துளைத்துக் கொண்டிருந்தார் அவருடைய மனைவி சந்திரா.
"நான் அப்பவே சொன்னேன், அந்தப் பையன் நம்ம குடும்பத்துக்கு ஒரு பெரிய தலைவலியா இருக்க போறான்னு. இப்போ அவன் என்ன செஞ்சிருக்கான்னு பாருங்க. அவன் கடத்திக்கிட்டு போனது குமணனுடைய மகளை மட்டும் இல்ல, காமேஸ்வரனுடைய மருமகளையும் தான்."
"கார்த்திக் கூட, அவளுக்கு நிச்சயதார்த்தம் மட்டும் தான் முடிஞ்சிருந்தது"
"அதனால என்ன...? கமேஸ்வரன் சும்மா விடுவாரா? உங்க அண்ணனும் அண்ணியும் அவனை தலையில தூக்கி வச்சுக்கிட்டு ஆடினாங்க... கடைசியில அவன் புத்தியைக் காட்டிட்டான்..."
"அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க"
"அப்புறம் எதுக்கு, அவன் அவளை கடத்திட்டு போனானாம்...? அந்தப் பொண்ணு அவனை விரும்புறான்னு என்னால நம்ப முடியல"
"அதை அவளே போலீஸ்கிட்ட சொல்லிருக்கா. இப்போ, அவ எங்க அண்ணன் வீட்ல தான் இருக்கா. இதை விட வேற என்ன ப்ரூஃப் வேணும்?"
"அந்த பொண்ணு கௌரவமான குடும்பத்தை சேர்ந்தவ. குமணனுடைய பொண்ணு ஒரு அனாதையை காதலிப்பான்னு எனக்கு தோணல"
"தயவுசெய்து இந்த மாதிரி பேசறத நிறுத்து. எங்க அண்ணனும் அண்ணியும் இதைக் கேட்டா ரொம்ப வருத்தப்படுவாங்க"
"நான் உண்மையை தான் சொன்னேன். நான் சொன்னாலும் சொல்லலனாலும் அது தான் உண்மை"
அப்பொழுது,
"அப்பா எப்பவுமே அவரோட அண்ணன் குடும்பத்துக்கு தான் சப்போர்ட் பண்ணுவாரு. ஏன்னா, நம்மளவிட அவங்க அண்ணனை தான் அவருக்கு ரொம்ப பிடிக்கும். அது உங்களுக்கு தெரியாதா மா?" என்றான் அவர்களுடைய மகன் நிமேஷ்.
அவர்களுடைய ஒரே மகன் நிமேஷ். தங்களுடைய மகன் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் அளவிற்கு அவனிடம் எந்த தகுதியும் இல்லை. நிமேஷ், நிமலை அடியோடு வெறுப்பவன். அவனுக்கு நிமலை கண்டாலே பிடிப்பதில்லை.
மகன் கூறிய வார்த்தையை கேட்டு பெருமூச்சு விட்டார் காசிநாதன்.
"அந்த திமிர் பிடிச்சவனை ரொம்ப புகழுவீங்களே... பெரிய அறிவாளி, பெரிய புத்திசாலி, அப்படி, இப்படின்னு சொல்லுவீங்க...? நானும் அவனை மாதிரி இருந்தா உருப்படுவேன்னு சொல்லுவீங்க...? அதை இப்ப சொல்லுங்களேன்... நானும் ஒரு பணக்கார பெண்ணை கடத்திக்கிட்டு வந்துடவா...?" என்றான் நிமேஷ்.
"நீ தான் எப்பவும் அவன் செஞ்சதை செய்ய விரும்ப மாட்டியே... இப்ப மட்டும் ஏன் செய்யணும்னு நினைக்கிற? அது பொண்ணு விஷயம் அப்படிங்கிறதாலயா?"
"பாத்தீங்களா...? நான் சொல்லல, எப்பவுமே இவரு அவங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாரு" என்றான் நிமேஷ்.
"இதைப் பத்தி நம்ம பேச வேண்டிய அவசியமில்லன்னு நான் நினைக்கிறேன். நம்ம எதுக்காகவும் அவனைப் பாராட்டினது இல்ல. அதனால, அவன் செஞ்ச தப்பை சுட்டிக் காட்ட நமக்கு உரிமை கிடையாது. உங்களால என்னுடைய அண்ணனும் அண்ணியும் வருத்தப்படுறதை என்னால பொறுத்துக்க முடியாது. ஏன்னா, நம்மளை விட அவங்க ரொம்ப நல்லவங்க. அவங்க விஷயத்துல தலையிடாம இருக்கிறது தான் உங்களுக்கு நல்லது." ஜாக்கிரதை என்று அவர்களை எச்சரித்தார் காசிநாதன்.
அவர் அங்கிருந்து செல்லும்வரை காத்திருந்தார்கள் அவர்கள்.
"அம்மா, இது தான் நமக்கு..."
அவன் பேச்சை துண்டித்து,
"நல்ல சான்ஸ்ன்னு சொல்றியா?"
"ஆமாம்... ஏதாவது செய்யுங்க. அவனுக்கு நம்ம யாருன்னு காட்டணும்"
"அதை என்கிட்ட விடு. நான் பார்த்துக்கறேன்"
அவர்களுக்கு ஏன் நிமலை பிடிக்கவில்லை என்பது ஒன்றும் புரியாதது அல்ல. அவன் விஸ்வநாதனின் தத்துப்பிள்ளை. அவன் மட்டும் இல்லாவிட்டால், பிள்ளை இல்லாத விஸ்வநாதனுடைய அனைத்து சொத்துக்களுக்கும் நிமேஷ் ஒருவன் தானே வாரிசாக இருந்திருப்பான்...! தங்கள் குடும்பத்துடன் சிறிதும் தொடர்பில்லாத ஒருவனுக்கு, அவ்வளவு சொத்துக்களையும், அவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தையும் விட்டுக்கொடுக்க அவர்களுக்கு மனம் வருமா என்ன? தான் நிமலை வெறுத்ததோடு மட்டுமல்லாமல், நிமேஷின் மனதிலும் விஷத்தை பாய்ச்சினார் சந்திரா. அவர்கள் நிமலை அடியோடு வெறுத்தார்கள். அது நிமலுக்கும் தெரியும்.
இனியவர்களின் இருப்பிடம்
வர்ஷினியை உணவு மேஜைக்கு அழைத்து வந்தார் பார்வதி. அங்கு நிமல் இருக்கவில்லை. விஸ்வநாதனும் அவர்களுடன் இணைந்து கொண்டார். அவர்கள் சாப்பிட தொடங்கினார்கள்.
"நிமல் எதுவும் சாப்பிடலன்னு நினைக்கிறேன்" என்றார் விஸ்வநாதன் தயக்கத்துடன்.
அதைக் கேட்டு வர்ஷினியின் கை பாதியில் நின்றது. ஆமாம் என்று தலையசைத்தார் பார்வதி. ஒரு தட்டில் சாதம் வைத்து, கோபாலனை அழைத்தார்.
"இதை கொண்டு போய் நிமல்கிட்ட கொடுத்துட்டு வாங்க"
"சரிங்கம்மா" என்று அதை வாங்கிக் கொண்டு, அவன் அறையை நோக்கிச் சென்றார் கோபாலன்.
நிம்மதிப் பெருமூச்சுவிட்டார் விஸ்வநாதன். வர்ஷினியும் கூட... ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தட்டை திருப்பிக் கொண்டு வந்தார் கோபாலன்.
"நிமல் தம்பி பசி இல்லைன்னு சொல்லிட்டாரு. அவர் அப்புறமா சாப்பிடுறாராம்"
பார்வதிக்கு வருத்தமாய் போனது. வர்ஷினியோ தட்டில் கோடு வரைந்து கொண்டிருந்தாள்.
"இந்த மாதிரி பட்டினி கிடக்கிறது அவனுக்கு நல்லது இல்ல. அவன் ஒழுங்கா சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சுன்னு தெரியல" என்று வருத்தப்பட்டார் விஸ்வநாதன்.
நிமலுக்கு சாப்பிடவே பிடிக்கவில்லை. அவன் காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டான். அந்த நாள் அவன் வாழ்க்கையில் மறக்க முடியாதது. இந்த நாளுக்காகத் தான் அவனும் வர்ஷினியும் ஆவலோடு காத்திருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்திருந்த அந்த நாள் வந்த பொழுது, அவர்களால் அதை கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அவள், அவன் வீட்டில், அவனுடைய பெற்றோருடன் இருக்கிறாள். அவர்களுடன் சந்தோஷமாய் இணைந்து கொள்ள அவனால் முடியவில்லை. ரிஷியை பிணைக்கைதியாக பிடித்து வைத்தது தவறு என்பது அவனுக்கும் தெரியும். அவன் பேசுவதை அவள் ஒரு முறை கேட்டிருந்தால், அதை செய்ய வேண்டிய அவசியம் அவனுக்கு ஏற்பட்டிருக்காது. பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று அவனுக்கு புரியவில்லை. அவளுக்குத் திருமணமும் நிச்சயமாகிவிட்டதால், நிமல் நடுநடுங்கிப் போனான்.
அவள் 'ஐ ஹேட் யூ' என்று கூறிய வார்த்தைகள் அவனை உயிரோடு கொன்றது. அவளால் அவனை வெறுக்க முடியாது என்று அவனுக்கு தெரிந்த போதிலும், அவளுடைய வார்த்தைகள் அவனை காயப்படுத்த தான் செய்தன. அப்படிப்பட்ட வார்த்தைகளை மறுபடியும் கேட்க அவன் விரும்பவில்லை. அதைக் கேட்கும் தைரியம் அவனுக்கில்லை.
அவன் சற்று வெளியே சென்று வர விரும்பினான். ராஜாவுடன் பேசினால் சிறிது ஆறுதலாக இருக்கும் என்று நினைத்தான்.
அவன் வெளியே செல்வதை, சாப்பிட்டுக் கொண்டிருந்த விஸ்வநாதனும் பார்வதியும் கவனித்தார்கள். வர்ஷினி தலை குனிந்து கொண்டாள். அவனை சாப்பிட அழைக்குமாறு விஸ்வநாதனுக்கு சைகை செய்தார் பார்வதி.
"இந்த நேரத்துல எங்க போற நீ?" என்றார் விஸ்வநாதன்.
"ஆஃபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு பா" என்று பொய் உரைத்தான்.
"நீ எங்க வேணா போ... ஆனா, சாப்பிட்டுட்டு போ"
"இல்லப்பா, எனக்கு பசியில்ல" என்றான் நிமல் வர்ஷினியை பார்த்தபடி.
"அவன் போகடும் விடுங்க... அவன் தான் நம்மளை அவமானப்படுத்தணும்னு முடிவு பண்ணியிருக்கானே. உங்க மரியாதையை நீங்க ஏன் கெடுத்துக்குறீங்க? நம்மளை மதிக்கிறதா இருந்தா தானே அவன் சாப்பிடுவான்...?" என்றார் பார்வதி விஸ்வநாதனிடம்.
அவர் வேண்டுமென்றே தான் அப்படி கூறினார் என்று கூறத் தேவையில்லை. அப்பொழுது தானே, நிமல் மீது பார்வதி கோபமாக இருக்கிறார் என்பதை வர்ஷினி நம்புவாள்? பார்வதிக்காக வருத்தப்பட்டாள் வர்ஷினி. தன் மகனை பட்டினியாக இருக்க
அனுமதிப்பாரா பார்வதி? வந்து சாப்பிடுமாறு நிமலுக்கு சைகை காட்டினார் பார்வதி.
கண்களால் தன் அம்மாவிற்கு நன்றி கூறிவிட்டு வந்து அமர்ந்தான் நிமல். வர்ஷினிக்கு முன்னால் அமர்வதை தவிர்த்தான். அவளை சங்கடப்படுத்த அவன் விரும்பவில்லை. கோபாலனிடம் கொடுத்தனுப்பிய அதே தட்டை அவனிடம் கொடுத்தார் விஸ்வநாதன். அவன் அமைதியாய் சாப்பிடத் தொடங்கினான். ஆனால் அவனுடைய கண்கள் அமைதியாய் இல்லை. அவனை ஏறெடுத்தும் பார்க்காத, அந்தப் பெண்ணின் மீது அலைந்து கொண்டிருந்தது. 'உன்னை பார்த்து கொண்டிருக்க எப்பொழுதும் எனக்கு சலிக்காது' என்று முன்பு ஒரு முறை கூறிய அவள், இன்று அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.
சாப்பிட்டு முடித்து விட்டு தன் அறைக்கு சென்றான் நிமல். விஸ்வநாதன் இரவு உடையில், தன் அறைக்கு வந்ததைப் பார்த்து அவன் குழம்பினான்.
"உன் கூட இருக்க சொல்லி எனக்கு உத்தரவு" என்று சிரித்தார் விஸ்வநாதன்.
"ஐ அம் சாரி பா..."
"உங்க அம்மா எல்லாத்தையும் எங்கிட்ட சொன்னா. நீ கவலைப்படாத. உனக்கு நாங்க இருக்கோம்... சீக்கிரமே உன் கூட வர்ஷினியும் இருப்பா" என்றார்.
வேக நடை நடந்து சென்று, அவரை கட்டிப்பிடித்துக்கொண்டு ஓவென்று அழுதான் நிமல்.
"என்னை மன்னிச்சிடுங்க, பா. என்னால தான் உங்களுக்கு நிறைய பிரச்சனை... எனக்கு வேற வழி தெரியல, பா"
அவன் அணைப்பிலிருந்து விடுபட்டு,
"எனக்கு தெரியும். கார்த்திக் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு இருந்தா தான் நான் ரொம்ப வருத்தப்பட்டு இருப்பேன். நீ என் பிள்ளைன்னு சொல்ல எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. சரியான ஆம்பளைன்னா, உன்னை மாதிரி தான் முடிவெடுப்பான். தன்னை நம்பின பொண்ணை எப்பவும் கைவிடமாட்டான். அவ உன்னை தப்பா புரிஞ்சிருக்கா. நீ அதைப் பத்தி கவலைப்பட வேண்டாம். உண்மை வெளியில வர சில நாள் ஆகும்... ஆனா, நிச்சயம் வந்தே தீரும்."
ஆம் என்று தலையை அசைத்தான் நிமல்.
"சீக்கிரமே எல்லாம் சரியாயிடும். உங்க அம்மா, மருமகளோட ஜாலியா இருக்கா. அவ சீக்கிரமே நம்மளையும் அவங்களோட சேத்துக்குவா"
மென்மையாய் சிரித்தான் நிமல்.
"நிம்மதியா படுத்து தூங்கு... கொஞ்ச நாளைக்கு என்னை பொறுத்துக்கோ. வர்ஷினி உன்னை புரிஞ்சுகிட்டா, அதுக்கப்புறம் எங்ககிட்ட பேசவே உனக்கு நேரம் இருக்காது" என்றார் கிண்டலாக.
அப்படிப்பட்ட இனிமையான நாட்கள், தன் வாழ்வில் எப்போது வரப்போகிறதோ என்று ஏங்கினான் நிமல். அவனுடைய பெற்றோர்கள், அந்த நாட்களை அவன் வாழ்வில் சிக்கிரமே கொண்டு வந்து சேர்ப்பார்கள் என்று அவன் மனதார நம்பினான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro