Part 36
பாகம் 36
குமணனுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் நின்றார் விஸ்வநாதன்.
"வர்ஷினி எங்கேன்னு கேட்டேன்..." என்று உறுமினார் குமணன்.
"இவருடைய மகளை நீங்க கடத்திட்டதா உங்க மேலயும், உங்க மகன் நிமல் மேலேயும், குமணன் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காரு" என்றார் இன்ஸ்பெக்டர்.
"வர்ஷினி அவருடைய மகள் மட்டும் இல்ல, என்னுடைய மருமகளும் கூட" என்றார் காமேஸ்வரன்.
"வர்ஷினிக்கு இன்னும் கார்த்திக்கோட கல்யாணம் ஆகல" என்றார் விஸ்வநாதன்.
"நாளைக்கு அவங்களுக்கு கல்யாணம்" காமேஸ்வரன்.
அப்பொழுது அவர்கள், மாடி படிகளில் இருந்து வர்ஷினி இறங்கி வருவதைப் பார்த்தார்கள்.
"அதோ பாருங்க, அவ தான் என் மகள். இவங்க தான் அவளை கடத்திகிட்டு வந்துடாங்க" என்றார் குமணன்.
"கார்த்திக், போய் அவளை கூட்டிகிட்டு வா" என்றார் காமேஸ்வரன்.
கார்த்திக் அவளை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் ஓடினான். அவன் வர்ஷினியை தொட முயன்ற பொழுது, ஒரு சக்தி வாய்ந்த கரங்களால் அவன் கீழே தள்ளப் பட்டான். வர்ஷினிக்கு முன்னால் வந்து நின்றான் நிமல்.
"பாருங்க இன்ஸ்பெக்டர், அவன் எப்படி நடந்துக்குறான்னு... வர்ஷினியை எங்க கூட அனுப்பி வைக்கச் சொல்லுங்க" காமேஸ்வரன்.
"இவன் தான் நிமல். அவனை அரெஸ்ட் பண்ணுங்க. எவ்வளவு தைரியம் இருந்தா, என் மகளை கடத்திக்கிட்டு வந்திருப்பான்" என்றார் குமணன்.
"மஸ்டர் நிமல், நீங்க குமணன் மகளை கடத்திக்கிட்டு வந்தீங்களா?" என்றார் இன்ஸ்பெக்டர்.
தரையில் இருந்து எழுந்த கார்த்திக், மீண்டும் வர்ஷினியை நெருங்க முயன்றான்.
"என் ஒய்ஃபை தொட்டா, உன்னை கொன்னுடுவேன்" என்றான் நிமல்.
அப்பொழுது தான் அவள் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறை கவனித்தார்கள் அவர்கள். அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் என கூற வேண்டிய அவசியமில்லை.
"உனக்கு எவ்வளவு தைரியம் டா. இன்ஸ்பெக்டர், இவன் அவளை கடத்திகிட்டு மட்டும் வரல, காட்டாயப்படுத்தி கல்யாணமும் பண்ணிகிட்டான்..." சீறிய குமணன், வர்ஷினியின் பக்கம் திரும்பினார்.
"வர்ஷினி, அந்தத் தாலியை கழட்டி அவன் முகத்துல வீசி எறிஞ்சிட்டு வா"
நிமலை பதற்றம் தொற்றிக்கொண்டது. அதே பதற்றத்துடன் வர்ஷினியை ஏறிட்டான். விஸ்வநாதனும் பார்வதியும் கூட அவனுடைய நிலையில் தான் இருந்தார்கள்.
"ஏன் இன்ஸ்பெக்டர் இன்னும் சும்மா நிக்கிறீங்க? அவனை அரெஸ்ட் பண்ணுங்க" என்றார் குமணன்.
அப்பொழுது அவர்கள்,
"என்னை யாரும் கிட்னாப் பண்ணல" என்று வர்ஷினி கூறுவதைக் கேட்டனர்.
"ஆனா உங்க அப்பா, இவங்க உங்களை கடத்திடாங்கன்னு கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காரு"
"இன்ஸ்பெக்டர், அவ பயந்து போயிருக்கா... இவன் தான் அவளை மிரட்டி வச்சிருக்கணும்" என்று கத்தினார் குமணன்.
"நீங்க யாருக்கும் பயப்பட வேண்டாம். நாங்க இருக்கோம்" என்றார் இன்ஸ்பெக்டர்.
"இல்ல இன்ஸ்பெக்டர். எங்க அப்பா எனக்கு பிடிக்காத ஒருத்தரோட எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாரு. ( நிமலை காட்டி ) இவர் என்னோட முழு சம்மதத்தோட தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்"
நிமலின் நம்ப முடியாத பார்வை, வர்ஷினியின் மீது வேரூன்றியது. பார்வதி மனதார கடவுளுக்கு நன்றி கூறினார்.
"வர்ஷி...னி... நீ என்ன பைத்தியமா? அவனை நம்பாதே... என்னை பழிவாங்க தான் அவன் இதையெல்லாம் செய்றான். என் கூட வந்துடு" என்று சீறினார் குமணன்.
"இல்லப்பா... நான் வரமாட்டேன். எனக்கு கல்யாணம் ஆயிடிச்சு. நான் என் புருஷனோட தான் இருக்கணும். என் வாழ்க்கையை என்னை வாழவிடுங்க"
"நீ ரொம்ப தப்பான அடியை எடுத்து வைக்கிற... இது மூலமா வாழ்க்கையில ரொம்ப மோசமான அனுபவத்தை நீ அடைய போற. நான் உன்னை எச்சரிக்கிறேன்..."
"நான் ஏற்கனவே என் வாழ்க்கையில நிறைய மோசமான விஷயங்களை அனுபவிச்சுட்டேன் பா. அது உங்களுக்கு தெரியாதா?" கண்ணீர் மல்க கேள்விக் கணை தொடுத்தாள் அவள்.
பார்வதி நிமலை பார்க்க, அவன் மென்று முழுங்கினான்.
"நான் உனக்கு கடைசி சந்தர்ப்பம் கொடுக்கிறேன். நீ என்னோட வந்தா, நீ பேசினதை எல்லாம் நான் மன்னிச்சுடுவேன். இல்லன்னா நான் எவ்வளவு மோசமானவன்னு நீ பார்ப்பே" என்றார் எச்சரிக்கும் தொனியில்.
வர்ஷினியின் முன்னால் வந்து நின்றான் நிமல்.
"நீங்க எவ்வளவு மோசமானவரா இருந்தாலும் அதை பத்தி எங்களுக்கு கவலை இல்ல. உங்களால எங்களை எதுவும் செய்ய முடியாது. என் மனைவியை எப்படி பாதுகாக்கணும்னு எனக்கு தெரியும்" என்றான் நிமல்.
"உன்னுடைய வயசு, என்னுடைய அனுபவம்... என்னை குறைச்சி எடை போடாதே நிமலன்..." என்றார் ஒரு ராட்சசனை போல.
"என்னைவிட உங்களை பத்தி யாருக்கு நல்லா தெரிஞ்சிட போகுது? நினைவு தெரியறதுக்கு முன்னாடியே, உங்களுடைய மோசமான பக்கத்தை பார்த்தவன் நான். என்கிட்ட இருந்தும், என் மனைவிகிட்ட இருந்தும் விலகி நிற்கிறது தான் உங்களுக்கு நல்லது. இல்லன்னா, நான் உங்க மூச்சை நிறுத்துறதை யாராலும் தடுக்க முடியாது" என்று அவர் மீது நெருப்பை கக்கினான்.
நிமலின் கொப்பளிக்கும் கோபத்தை பார்த்து பின்வாங்கினார் குமணன், வர்ஷினியும் கூட. விஸ்வநாதனும் பார்வதியும் நிமலுக்காக வருத்தப்பட்டார்கள். அவன் கூறியதின் அர்த்தம் அவர்களுக்கு தெரியும் அல்லவா?
அவன் கர்ஜனையைக் கேட்டு கலங்கினாள் வர்ஷினி. அவளுடைய தற்போதைய நிலைக்கு இந்த இருவரும் சமமான காரணிகள். தங்கள் சுயநலத்திற்காக அவளை பலிகடாவாக்கியவர்கள். அவர்கள் இருவருமே ஒன்று தான். ஆனால், நேர் எதிரானவர்கள்.
அவள் குமணனுடன் செல்ல மறுத்து விட்டாள் என்பதற்காக நிமலை மன்னித்து விட்டாள் என்று அர்த்தமல்ல. அவளால் நிமலை அவ்வளவு எளிதில் மன்னிக்க முடியாது. அவள் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்ததற்கு காரணம், அவள் ஏற்கனவே பயணித்து வந்த பாதை, கல்லும் முள்ளும் நிறைந்தது. அங்கு அவள் இளைப்பாற, நிழல் என்பதே இல்லை. அவள் இப்பொழுது தேர்ந்தெடுத்திருக்கும் இந்த பாதை, பழைய பாதையை போல மோசமானதாக இருக்காது என்பது அவளுக்குத் தெரியும். இங்கு அவளுக்கு தோள்கொடுக்க பார்வதி இருக்கிறார். நிச்சயம் அது அவளுக்கு குமணனிடமோ, கல்பனாவிடமோ கிடைக்காது. அது மட்டுமல்லாமல், குமணன் நிச்சயம் அவளை கார்த்திக்கிற்கு திருமணம் செய்து வைத்து விடுவார். அதில் அவளுக்கு சிறிதும் உடன்பாடில்லை.
"இதுக்காக நீ வாழ்நாளெல்லாம் வருத்தப்பட போற. நான் உன்னை அவ்வளவு சீக்கிரம் விட்டுடுவேன்னு நினைக்காதே. உன்னுடைய நாளை எண்ண ஆரம்பிச்சிடு, வர்ஷினி" என்றார் குமணன்.
ஒரு தந்தையின் வாயிலிருந்து வந்த அந்த வார்த்தைகளை கேட்டு, நிமலின் பெற்றோர்கள் மட்டுமல்ல, இன்ஸ்பெக்டரும் கூட அதிர்ந்து தான் போனார். பல்லைக் கடித்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான் நிமல். ஒரு கொலைகார பார்வையை வர்ஷியின் மீது வீசி விட்டு அங்கிருந்து சென்றார் குமணன்.
அவள் பக்கம் வருத்தத்துடன் திரும்பினான் நிமல். ஆனால் வர்ஷினியோ, அங்கிருந்து விருந்தினர் அறையை நோக்கி ஓடிச் சென்றாள். பார்வதி அவளை பின் தொடர்ந்து சென்றார். அவருக்கு தெரியும், வர்ஷினி எந்த அளவிற்கு உடைந்து போய் இருக்கிறாள் என்று. அவர் எதிர்பார்த்தது போலவே அவள் அழுது கொண்டிருந்தாள்.
அவள் அருகில் அமர்ந்து, அவள் தோளை மெல்ல தொட்டார் பார்வதி. அவரை கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாள் வர்ஷினி.
"தயவுசெய்து அழாதேம்மா. அழறதால எதுவுமே மாறிடாது. என்னால உன்னை புரிஞ்சுக்க முடியுது. இது தான் வாழ்க்கை. அடுத்து நடக்கப் போறது என்னனு யாராலும் கணிக்க முடியாது. ஆனா, நம்மளை தயார்படுத்திக்கிட்டா, எல்லாத்தையும் எதிர்த்து ஜெயிச்சு வரலாம். கடந்த காலத்தை மறந்துட்டு நிகழ்காலத்தை ஏத்துக்கோ. உன்னுடைய எதிர்காலம் நல்லா இருக்கும்"
"நான் ஒரு அதிஷ்டம் கெட்டவ ஆன்ட்டி. எனக்கு எதுவுமே நல்லதா நடக்காது"
"வாட் த ஹெல்... இந்த மாதிரி பேசினா எனக்கு கெட்ட கோபம் வரும்... டோன்ட் யூ டேர்..."
பார்வதி, நிமலைப் போலவே பேசியதை பார்த்து, தன்னிலை மறந்து புன்னகைத்தாள் வர்ஷினி.
"நான் என்ன சொன்னேன்னு நீ இப்ப சிரிக்கிற?" என்றார், அவர் புரிந்து கொள்ளாதது போல.
"நீங்க நிமலை மாதிரி பேசுறீங்க ஆன்ட்டி" என்று கூறி விட்டு, அதன் பிறகு, தான் பேசியது என்ன என்பதை உணர்ந்து அமைதியானாள்.
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார் பார்வதி.
"நீ அதிர்ஷ்டம் இல்லாதவள்னு நினைக்கிறதை நிறுத்து. எந்த அம்மாவும் தன்னோட குழந்தைங்க இப்படி பேசுறதை விரும்பவே மாட்டாங்க. அதிலும் நிமலை பத்தி பேசவே பேசாத. இப்போதிலிருந்து எனக்கு இருக்கிறது ஒரே ஒரு குழந்தை தான். அது நீ தான். நான் இதுக்கு அப்புறம் உன் புருஷனை பத்தி எதுவும் கேட்க விரும்பல"
கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அழகாய் இடத்தை நிரப்பினார் பார்வதி. முதன் முறையாக, தன் மாமியாரின் வாயிலிருந்து, அவளுக்கு நிமலுடன் ஏற்பட்டிருந்த புதிய உறவுமுறையை கேட்டவுடன் வர்ஷினியின் தொண்டை வற்றி போனது. அப்பொழுது வரை, அவள் அதைப் பற்றி சிந்திக்கவே இல்லை. அவள் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக் கொள்ளாவிட்டாலும் நிமல் அவளுடைய கணவன். அதை யாராலும் மாற்றிவிட முடியாது. அது நிஜமான உண்மை. இறுதியில், நிமல் உண்மையிலேயே அவள் கணவன் ஆகிவிட்டான்.
"என்ன ஆச்சு, கண்ணா?" என்றார் பார்வதி.
"உங்களுக்கு அது ஈஸியா இருக்குமா, ஆன்ட்டி? உங்களுக்கே தெரியும், ரொம்ப க்ளோசா இருந்த அவரோட உங்களால பேசாம இருக்க முடியாதுன்னு. பிளீஸ் அப்படி செய்யாதீங்க, ஆன்ட்டி. உறவு முறையோட வேல்யூ உங்களுக்கு தெரியுமே..."
"நீ சொல்றது சரி தான். அதனால தான் நான் என் மருமககிட்ட பேசிகிட்டு இருக்கேன். நான் உறவுமுறையை மதிக்கிறேன். கல்யாணம்னா என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும். அது ஒரு புனிதமான உறவு. நான் என் மகனை பத்தி கவலை படல. நான் அவனை அவ்வளவு சீக்கிரம் மன்னிக்கிறதா இல்ல... நீயே அவனை மன்னிச்சாலும் கூட..."
வர்ஷினிக்கு சங்கடமாய் போனது. அவள் நிமலை மன்னிப்பதா? அது நடக்கக் கூடியதா? அவளால் மன்னிக்க முடியுமா? ரிஷியை அவன் என்ன செய்ய துணிந்தான் என்பதை நினைக்கும் பொழுது, எப்படி அவனை அவளால் மன்னிக்க முடியும்? அவளை சமாதானப்படுத்துவதை விட்டுவிட்டு, எப்படி அவன் அவளுடைய உணர்வுகளுடன் விளையாட துணிந்தான்? அவனை மன்னிப்பது நிச்சயம் நடக்காது.
"ஆன்ட்டி..."
"என்னை அம்மான்னு கூப்பிடு"
வர்ஷினிக்கு தொண்டை அடைத்தது.
"நான்... நான் இந்த ரூம்லேயே தங்கிக்கட்டுமா?"
இது பார்வதி எதிர்பார்த்தது தான். அவளுடைய முடிவில் அவருக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், இப்போதைக்கு அவர் எதுவும் கூறுவதற்கு இல்லை. அப்போதைக்கு அவர் ஒப்புக்கொண்டார்.
"இது உன் வீடு. உனக்கு எங்க தங்கணும்னு தோணுதோ, நீ அங்க தங்கலாம். என்ன வேணும்னாலும் என்னை கேளு. உனக்கு யாரும் இல்லன்னு நினைக்காதே. நான் இருக்கேன்..."
"சரிங்க... (சற்றே நிறுத்தியவள்) அம்மா..." என்று முடித்தாள்.
அவள் நெற்றியில் முத்தமிட்டார் பார்வதி. அம்மாவிடமிருந்து முதல் முத்தம்...
"சரி உனக்கு என்ன பிடிக்கும்ன்னு சொல்லு. நான் உனக்கு சமைச்சு கொடுக்கிறேன். எல்லாத்தையும் மறந்துட்டு, நம்மளுடைய புது உறவை கொண்டாடலாம்"
தன்னால் முடிந்தவரை அவளுடைய மனதை மாற்ற முயன்றார் பார்வதி.
வர்ஷினியோ, இதுவரை அவள் எப்போதும் கண்டிராத அந்த அதிகப்படியான அக்கறையை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் தவித்தாள். அவள் கனவு கண்டதைப் போல் நிமல் இல்லை என்றாலும், அவனால் தான் இன்று பார்வதி என்ற ஒரு அருமையான பெண்மணியை அம்மா என்று அழைக்கும் சந்தர்ப்பம் அவளுக்குக் கிடைத்திருக்கிறது.
"நீங்க என்ன சமைச்சாலும் நான் சாப்பிடுவேன், மா..."
சரி என்று தலையசைத்துவிட்டு, திருப்தி புன்னகையுடன் அந்த அறையை விட்டு வெளியேறினார் பார்வதி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro