Part 34
பாகம் 34
ரிஷிக்காக தான் பார்க்கிங் லாட்டுக்கு வர்ஷினி வந்தாள். ஆனால், அவள் தேடியதோ நிமலை. தனக்கு பின்னால் யாரோ நிற்பதை உணர்ந்து திரும்பினாள் வர்ஷினி. அங்கு நிமல் நின்றுக் கொண்டிருந்தான். அவள் ஏதும் கூறுவதற்கு முன், அவள் கையை பற்றி, கார்த்திக் அணிவித்த மோதிரத்தை பார்த்தான் நிமல். அவன் முகம், கோபத்தை உமிழ்ந்தது. அவள் விரலிலிருந்து அந்த மோதிரத்தை உருவி எடுத்து, வீசி எறிந்தான். பறந்து சென்ற மோதிரத்தை பதட்டத்துடன் பார்த்தாள் வர்ஷினி.
"கார்ல உட்காரு" என்றான். அப்பொழுது அவன் முகம் கல்லை போல் இருந்தது.
"என்ன...?"
"கார்ல உட்காருன்னு சொன்னேன்"
"கார்லயா...? இங்க என்ன நடக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா?"
"என்ன நடந்ததுன்னு தான் நான் பார்த்தேனே... இப்போ நீ என் கூட வர..."
"விளையாடாதீங்க, நிமல்..."
"நான் விளையாடல..." என்றான் அவள் பேச்சை துண்டித்து.
"ரிஷி..." என்று அவள் ஆரம்பிக்க,
"நான் சொல்றத கேட்டா, அவன் சேஃபா இருப்பான்..."
"நீங்க என்ன சொல்றீங்க?"
"அவன் என்கிட்ட தான் இருக்கான். நீ என்னோட வந்தா, அவன் பத்திரமா உங்க அப்பா அம்மாகிட்ட போவான்"
"எனக்கு சீட்டு அனுப்புனது..."
"நான் தான்"
அவளால் அந்த அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. ரிஷியை காப்பாற்ற, நிமல் உதவுவான் என்று எண்ணியிருந்தாள் அவள். நிமல் இங்கு இருக்கிறான் என்று தெரிந்தவுடன் அவள் நிம்மதி அடைந்தாள். ரிஷிக்கு எதுவும் நடக்க அவன் விடமாட்டான் என்று எண்ணினாள். ஆனால், இங்கு எல்லாம் தலைகீழாக நடந்து கொண்டிருக்கிறது. நிமல் தான் ரிஷியை பிடித்து வைத்திருக்கிறான் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை.
"நீங்க என்ன செய்றீங்கன்னு தெரிஞ்சு தான் செய்றீங்களா?"
"என்ன செய்றேன்னு எனக்கு எப்படி தெரியாம இருக்கும்? எல்லாத்தையும் திட்டம் போட்டது நான் தானே..."
நிமலின் புதிய முகத்தை அவள் அன்று பார்த்தாள்.
"அப்படி திட்டம் போட்டது நீங்க தான்னா, நீங்க சொல்றதை நான் கேட்க மாட்டேன்..."
அவள் அங்கிருந்து செல்ல எண்ணிய பொழுது, அவள் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தான் நிமல்.
"விஷயம் எவ்வளவு சீரியசானதுன்னு புரிஞ்சுக்கோ... அங்க பாரு"
அவன் காட்டிய பக்கம் அவள் திரும்பிப் பார்க்க, ஒரு காரில் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்திருந்தான் ரிஷி. அவன் மயங்கியிருந்தான். அவன் நெற்றியில் ஒரு துப்பாக்கி வைக்கப்பட்டிருந்தது.
"உன் தம்பி உயிரோட இருக்கணுமா வேண்டாமா?"
"நீங்க இவ்வளவு கீழ்த்தரமா இறங்குங்வீங்களா?"
"இதையும் விட கீழ்த்தரமா இறங்குவேன்..."
"என்னை நீங்க தூண்டில் மீனா பயன்படுத்தினிங்களே, அந்த மாதிரியா?" என்றாள் வேதனையுடன்.
அவள் கூறியதைக் கேட்டு மென்று முழுங்கினான் நிமல். அவளுக்கு விளக்கம் கொடுக்க அது சந்தர்ப்பம் அல்ல. முதலில் அவளை இங்கிருந்து அழைத்துச் செல்ல வேண்டும். குமணன் மற்றும் காமேஸ்வரனுடைய ஆட்கள் பார்க்கும் முன் அந்த இடத்தை விட்டு கிளம்பியாக வேண்டும். தனக்கு பதிலளிக்காமல் அவன் அமைதியாய் நின்றதைப் பார்த்து மனம் உடைந்தாள் வர்ஷினி.
"நீங்க இவ்வளவு மோசமானவரா இருப்பீங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல"
"இப்போ உனக்கு பதில் சொல்ல எனக்கு நேரம் இல்ல"
அவள் கையை பிடித்து இழுத்து காரில் அமர வைத்தான். ஒரு நொடி நேரத்தையும் வீணாக்காமல், காரில் ஏறி அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தான்.
"என்னை எங்க கூட்டிட்டு போறீங்க?" என்று அவள் கேட்க, ஒரு கூரிய பார்வையை அவள் மீது வீசினான் நிமல்.
அவனுடன் வர எப்பொழுதும் தயாராக இருந்த அவள், அவனை இப்பொழுது இத்தனை கேள்விகள் கேட்கிறாள் அல்லவா...?
"அதை நீயே தெரிஞ்சுக்குவ"
குமணனும், காமேஸ்வரனும், ராஜராஜனை உள்ளே அழைத்துச் செல்வதைப் பார்த்தான் நிமல். அங்கிருந்து டாப் கியரில் காரை கிளப்பிக் கொண்டு சென்றான்.
இதற்கிடையில்....
இனியவர்களின் இருப்பிடம்
விஸ்வநாதனும் பார்வதியும் சோகமாய் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் நிமலை நினைத்து வருத்தப் பட்டார்கள். பார்வதி தன் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்தார்.
"இன்னைக்கு வர்ஷினிக்கு நிச்சயதார்த்தம்" என்றார் விஸ்வநாதன்.
"நீங்க தான் ஏற்கனவே சொன்னீங்களே" என்றார் அழுதபடி பார்வதி.
"இதுக்காகத் தான் நான் பயந்தேன். எனக்கு குமணனை பத்தி நல்லா தெரியும். அவர் நிச்சயம் நிமலை வர்ஷினிகிட்ட நெருங்கவே விடமாட்டார்"
ஒன்றும் கூறாமல் அழுதார் பார்வதி.
"நிமல் எங்க போயிருக்கான்னு தெரியுமா?"
"வர்ஷினிக்கு ஆக்சிடென்ட் ஆனதுக்கப்புறம், அவன் வீட்டில தங்குறதே இல்ல. அவன் எங்க போறான், எப்போ வரான், சாப்பிட்டானா, இல்லயா எதுவுமே தெரியல. எனக்கு அவனை நெனைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு. வர்ஷினிக்கு கார்த்திக் கூட கல்யாணம் ஆனதுக்கப்புறம் அவன் என்ன செய்ய போறான்னு எனக்கு ஒன்னும் புரியல"
"நம்ம என்ன செய்ய முடியும்? எல்லாம் விதிப்படி தான் நடக்கும். வர்ஷினி நிமலுடைய வாழ்க்கைல இல்ல போல இருக்கு" என்றார் விஸ்வநாதன்.
"நான், வர்ஷினி சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சேன். எப்பவுமே அந்த பொண்ணு சோகமாக இருக்கிறதை நான் கவனிச்சேன். நமக்கு அவ மருமகளா வந்தா, நம்மளால அவளை சந்தோஷமா வச்சுக்க முடியும்னு நம்பினேன். அவ எங்க இருந்தாலும் கடவுள் அவளை எப்பவும் சந்தோஷமா வைக்கட்டும்"
"என்னுடைய பயம் எல்லாம், கோவத்துல நிமல் ஏதாவது பைத்தியக்காரத்தனமா செஞ்சிடுவானோன்னு தான்... "
"அப்படி எல்லாம் அவன் எதுவும் செய்ய மாட்டான். அவன் ரொம்ப அப்செட்டா இருக்கான் தான். ஆனா அதுக்காக, அந்த மாதிரி எல்லாம் போற அளவுக்கு அவன் மோசமானவன் இல்ல. அவன் வர்ஷினியை ரொம்ப நேசிக்கிறான். அவ சந்தோஷமா இருக்கணும்னு தான் நினைப்பான். எனக்கு அவனைப் பத்தி தெரியும்"
"அப்படி இருந்தா சந்தோஷம் தான்" என்றார் விஸ்வநாதன்.
கல்யாண மண்டபம்
ராஜராஜனை முழு மரியாதையுடன் உபசரித்தார்கள் குமணனும் காமேஸ்வரனும். அந்த சந்தடியில் அவர்கள் வர்ஷினியை பற்றி நினைக்கவில்லை. ஆனால் கார்த்திக் அவளை பார்க்க வேண்டும் என்று நினைத்தான். அவள் அந்த மிகப்பெரிய கூடத்தில் இல்லாததால், மணமகள் அறைக்குச் சென்றான். அவளை தனியாக சந்திக்க வேண்டும் என்று ஆவலாய் இருந்தான் அவன். அவர்களுக்கு தான் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதே. இனி யார் அவனை தடுக்க போவது? அவள் அங்கும் இல்லாததால் கல்பனாவிடம் வந்தான்.
"ஆன்ட்டி, வர்ஷினி எங்க?"
இங்கும் அங்கும் தேடினார் அவர்.
"அவ இங்கயும் இல்ல, ரூம்லயும் இல்ல. நான் பார்த்துட்டேன்"
அவன் கூறியது கல்பனாவிற்கு பதட்டத்தை ஏற்படுத்தியது. அவர்கள் இருவரும் நன்றாய் தேடிப் பார்த்தார்கள். அவள் காணவில்லை என்று நிச்சயப்படுத்திக்கொண்டு, குமணனிடம் சென்றார்கள்.
விஷயத்தைக் கேள்விப்பட்டு காமேஸ்வரனும் குமணனும், அதிர்ச்சி அடைந்தார்கள். காமேஸ்வரனின் கண்கள், அவர்களுடைய இயலாமையை பார்த்து மர்ம புன்னகை புரிந்து கொண்டிருந்த ராஜராஜனின் பக்கம் அனிச்சையாய் திரும்பியது. அவருடைய அந்த புன்னகை, ராஜராஜனிடம் தான் கூறிய, இந்த முறை உங்களால் வெல்ல முடியாது என்ற வார்த்தையை காமேஸ்வரனுக்கு ஞாபகப்படுத்தியது. காமேஸ்வரனுக்கு கோபம் கொப்பளித்தது. இறுதியில் அவர் தோற்றுவிட்டார். அவர் ராஜராஜனை ஒரு நொடியில் சென்றடைந்தார்.
"கடைசியில உங்க நிஜமான நிறத்தை காட்டிட்டீங்கல்ல...?"
"எனக்கு இருக்கிறது ஒரே ஒரு நிறம் தான்னு நான் எப்பவுமே சொன்னதில்லயே..." என்றார் சிறிதும் பயப்படாமல் ராஜராஜன்.
"இதுக்காக நீங்க அனுபவிக்க போறீங்க"
"நீங்க ரொம்ப பேசுறீங்க காமேஸ்வரன்... பேசுறதை குறைசிட்டு செயலில் காட்ட பாருங்க... என்னை மாதிரி..."
"இந்த விஷயத்தை நான் சும்மா விடப்போறதில்ல"
"முடிஞ்சதை செய்யுங்க..." என்று கூறியபடி அங்கிருந்து சென்றார் ராஜராஜன்.
.....
அவர்கள் வழக்கமாக சந்திக்கும் கோவிலின் முன் காரை நிறுத்தினான் நிமல். அவனை கேள்வியுடன் பார்த்தாள் வர்ஷினி. அவளுக்கு பதிலளிக்காமல் காரை விட்டு கீழே இறங்கி, அவள் பக்க கதவை திறந்தான். அவள் இறங்காமல் அமர்ந்திருக்கவே, அவள் கையை பிடித்து இறக்கி, உள்ளே இழுத்துச் சென்றான்.
அவன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று ஓரளவு புரிந்தது வர்ஷினிக்கு. தன் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை அவள் எதிர்பார்த்திருந்தாள். ஆனால், நிச்சயமாக இது போல் அல்ல...! நிமல் தன்னிடம் இப்படி நடந்து கொள்வான் என்று அவள் எப்போதும் நினைத்ததில்லை.
அங்கு செய்து வைக்கப்பட்டிருந்த ஏற்பாடுகளை பார்த்த பொழுது, என்ன நடக்க இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாய் புரிந்தது வர்ஷினிக்கு. திருமணம்...! ஆம் அங்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அது அவள் வாழ்வில் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு தருணம். அவள் விரும்பிய அதே ஆண்மகனுடன் தான் அவளுடைய திருமணம் நடக்க இருக்கிறது. ஆனால் அது நடந்த விதம் அவளுக்கு வேதனையை அளித்தது.
அவர்களுக்காக அங்கு பண்டிதர் காத்துக் கொண்டிருந்தார். அவர்களை மாலையை மாற்றிக் கொள்ளும்படி கூறினார். மாலையை தன் கையில் வாங்கிக் கொண்டான் நிமல். வர்ஷினியின் முகத்தை பார்த்த அவனுக்கு, அதில் தெரிந்ததெல்லாம் ஏமாற்றம், துக்கம், சோகம், இயலாமை...! எதைப்பற்றியும் யோசிக்காமல் அடுத்தடுத்து பண்டிதர் கூறியதை செய்து, அவளை தன் மனைவியாக்கிக் கொண்டான் நிமல். அவள் கண்ணீர் சிந்தியதை பார்த்த பொழுது, அவன் மனம் வேதனை அடைந்தது. ஆனால் அவனும் தான் என்ன செய்வான்?
தங்கள் திருமணத்தைப் பற்றி மிகுந்த கனவுகளை கொண்டிருந்தாள் வர்ஷினி. அவளுடைய கனவின் நாயகன் நிமல் தான் என்ற போதிலும், நிஜத்தில் அவன் அனைத்தையும் பாழாக்கி விட்டான். அவள் விரல்களுடன் தன் விரல்களை கோர்த்துக் கொண்டு, அக்னியை வலம் வரத் தொடங்கினான் நிமல். நம்ப முடியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் வர்ஷினி. அவள் சலிக்காமல் ரசித்துக்கொண்டிருந்த அதே மனிதன் தானா இவன்? இல்லை... இவன் அந்த நிமல் இல்லை. இவன் ஒரு பாறை. அவளுடைய நிமல், அவளை அழ விடுபவன் அல்ல. அவன், அவளுடைய கண்ணீரை பார்க்க சகிக்காதவன்.
திருமண சடங்குகள் முடிந்து, நிமல் வர்ஷினியை பார்க்க, அவள் அவனுக்கு எதிர்ப்புறம் திரும்பி நின்று கொண்டாள்.
"என்னை என்ன கேட்கணுமோ இப்போ கேளு..." என்றான்.
அமைதியாய் நின்றாள் வர்ஷினி. இனி கேட்க என்ன இருக்கிறது? ரிஷியை கடத்தி வைத்துக் கொண்டு அவன் செய்த காரியம் அவளுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. அதுவும் துப்பாக்கி முனையில்...! நிமல் தங்களுக்கு பாதுகாவலனாக இருப்பான் என்று நினைத்தாள் வர்ஷினி. ஆனால் இல்லை. அவன் அவர்களுடைய பாதுகாவலன் இல்லை. அவன் அவர்களுடைய பாதுகாவலனாக இருக்க முடியாது.
நிமல் நடந்துகொண்ட விதம், அவளை சந்தேகப்பட செய்தது. அவன் தான் நிமலை போலவே நடந்து கொள்ளவில்லையே. அவள் பூஜித்த நிமல் இவன் அல்ல. இவன் வேறு யாரோ போல் தெரிகிறான். அவளுக்கு இவனை பிடிக்கவே இல்லை.
ராஜா கூறியது சரி தான். 'வர்ஷினி உன்னை வெறுக்கவும் வாய்ப்புள்ளது' என்று அவன் கூறியது சரி தான். அவள் காயப் பட்டிருக்கிறாள், மிக மோசமாக...! வர்ஷினியால் நிமலை வெறுக்க முடியாது என்பது உண்மை தான். ஆனால், அவன் முன்பு கொண்டிருந்த அதே இடத்தை தான் அவள் இதயத்தில் இப்பொழுதும் கொண்டிருக்கிறான் என்று கூறுவதற்கு இல்லை.
அவள் எதுவும் பேசாமல் நின்றதைப் பார்த்து, பல்லைக் கடித்தான் நிமல்.
"என்ன கேட்கணுமோ கேளுன்னு சொன்னேன்..." என்றான்.
"என்ன கேட்கணும்? நிமல் இல்லாத ஒருத்தனோட பேச நான் விரும்பல. நீங்க என்னோட நிமல் இல்ல. நீங்க இதயமே இல்லாதவன்... ஏமாத்துக்காரன்... ஐ ஹேட் யூ..."
தன் முகத்தை தன் கரங்களால் மூடிக்கொண்டு ஓவென்று அழுதாள் வர்ஷினி. அவள் அழுகையை எப்பொழுதும் பார்க்க விரும்பாதவன் அவன். இன்று அவளுடைய அழுகைக்கு அவன் காரணமாகிவிட்டான். அவளுடைய அந்த அழுகை தற்காலிகமானது என்று அவன் நம்பினான்.
அவள் கரத்தைப் பற்றிக்கொண்டு மீண்டும் தன் காரை நோக்கிச் சென்றான் நிமல். இந்த முறை அவனுடைய பிடி முன்பை போல் இறுக்கமாய் இல்லை. அவளை காரில் அமர வைத்து, இனியவர்களின் இருப்பிடம் நோக்கி காரை செலுத்தினான் நிமல்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro