Part 33
பாகம் 33
தன் முன் நின்ற ராஜராஜனை பார்த்த சொக்கலிங்கத்தின் முகம் வெளிறிப் போனது. இருதய நோயாளியான தனது நண்பன், விதவிதமான அசைவ உணவுகளை வெளுத்து கட்டி கொண்டு இருப்பதை பார்த்த ராஜராஜன் கையை கட்டிக் கொண்டு நின்றார். இருதய நோயாளிகள் இப்படி தான் உணவை உண்பார்களா? தன் நண்பனின் கூரிய பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை குனிந்து கொண்டார் சொக்கலிங்கம்.
"ஹார்ட் அட்டாக் வந்தவங்க இப்படிப்பட்ட சாப்பாடு சாப்பிடுவாங்கன்னு இது வரைக்கும் எனக்கு தெரியாது" என்றார்.
சொக்கலிங்கம் அமைதி காத்தார்.
"உனக்கு இதெல்லாம் ஒரு விளையாட்டா?"
"நிச்சயமா இல்ல ராஜு... ஒரு பெட்டுக்காக தான் பண்ணேன்"
"பெட்டா?" என்று முகம் சுருக்கினார் ராஜராஜன்.
"ஆமாம்... உனக்கு என்னை வந்துப் பார்க்க நேரமே கிடைக்கிறதில்ல. அது எனக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு. அது ராஜேந்திரனுக்கு தெரியும். நான் எப்பெல்லாம் 'உங்க அப்பா என்னை மறந்துட்டான்னு' சொல்றேன்னோ, அப்பெல்லாம், 'அவர் மனசுல உங்களுக்குன்னு ஒரு ஸ்பெஷல் இடம் இருக்கு. தேவைப்பட்டா, அவர் எல்லா வேலையையும் விட்டுட்டு நிச்சயம் உங்களை பார்க்க வருவார்ன்னு' அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பான். நான் சாகறதுக்கு முன்னாடி அப்படி நடக்குதான்னு பார்க்க நெனச்சேன். நீ கண்டிப்பா வருவேன்னு ராஜேந்திரன் பெட்டு கட்டினான். நீ என்னை பார்க்க ஹாஸ்பிடலுக்கு வந்தப்போ, நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா?"
"ஆனா, எதுக்காக ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆன?"
"அப்ப தான் நீ நம்புவேன்னு ராஜேந்திரன் தான் அட்மிட் ஆக சொன்னான்"
"ஆனா, நீ தான் பெட்டுல தோத்துட்டியே..."
"தோத்துக்காக நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்... எனக்காக நீ இருக்கல்ல..." என்று புன்னகைத்தார் சொக்கலிங்கம்.
ஆக, அவர் எதிர்பார்த்தது போல, இந்த மனிதனை அவருக்கே தெரியாமல் ராஜா பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்.
"சரி நான் கிளம்பறேன்" ராஜராஜன்.
"சாரி ராஜு... நாங்க வேணும்னு..."
அவர் பேச்சை துண்டித்தார் ராஜராஜன்.
"எனக்கு தெரியும். இந்த வயசுல இப்படியெல்லாம் யோசிக்க தான் செய்வோம். உன்னோட பிள்ளைங்க ஃபாரின்ல இருக்காங்க. உன்னோட மகளும் அவளுடைய வேலையில பிஸியா இருக்கா. அப்படின்னா, நமக்குன்னு யாரும் இல்லன்னு நீ யோசிக்கிறது சகஜம் தான்"
உணர்ச்சிவசப்பட்டார் சொக்கலிங்கம்.
"நான் ராஜேந்திரனுக்கு ரொம்ப கடமை பட்டிருக்கேன். அவன் தான் அடிக்கடி வந்து என்னை பாத்துகிறான்..."
அதைக் கேட்ட ராஜராஜனுக்கு ஆச்சரியமாயிருந்தது.
"அப்படியா?" என்றார்.
"ஆமாம்... பிள்ளை விஷயத்துல நீ ரொம்ப குடுத்து வச்சவன்..." என்றார் உணர்ச்சி மேலோங்க.
"வருத்தப்படாதே..."
"நீ என் கூட சேர்ந்து சாப்பிடலன்னா நான் ரொம்ப வருத்தப்படுவேன்"
களுக் என்று சிரித்தார் ராஜராஜன்.
"சரி" என்று, சாப்பிட அமர்ந்தார்.
அந்த நண்பர்கள் பழைய கதைகளை பேசிக் கொண்டு சாப்பிட துவங்கினார்கள். ஆனால் ராஜராஜனின் மனம், முழுதுமாக சாப்பாட்டில் நிலைத்தது என்று கூறுவதற்கில்லை. அவருடைய மனம், ராஜாவைப் பற்றிய எண்ணில்லா எண்ணங்களின் ஊடே சுழன்று கொண்டிருந்தது. அவருடைய நண்பரை, அடிக்கடி வந்து அவன் சந்தித்து கொண்டிருப்பது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம். இந்த மனிதனை, அவன் தன்னுடைய வேலைக்காக பயன்படுத்திக்கொண்ட அதே நேரம், இவரையும் சந்தோஷப்படுத்தி இருக்கிறான். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்... அவருக்கு தன் மகனின் மீது நம்பிக்கை வந்தது, அவன் எந்த தவறும் செய்ய மாட்டான் என்று.
ராஜராஜன் மனை
மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த ராஜா, ராஜராஜன் வீட்டினுள் நுழைவதை பார்த்து நின்றான். கட்சி அலுவலகத்தில் அவர்களுக்கு ஒரு முக்கியமான கூட்டம் இருக்கிறது.
"அப்பா, நீங்க இந்த நேரம் நம்ம ஆஃபீஸ்ல இருக்கணுமே..."
"நான் மீட்டிங்கை தள்ளி வச்சுட்டேன்"
"ஏன் பா?"
"சொக்கலிங்கத்தை பார்க்க போயிருந்தேன்..." என்று அவர் கூற, பதற்றம் அடைந்தான் ராஜா.
"நான் அவனோட வீட்டுக்கு போன நேரம், மட்டன் பிரியாணியும், சிக்கன் வருவலையும் வெட்டிக்கிட்டு இருந்தான்..." என்று நிறுத்தி விட்டு ராஜாவின் முகபாவத்தை கவனித்தார்.
"ஒரு ஹார்ட் பேஷன்ட், இதெல்லாம் சாப்பிடுறது நல்லதுன்னு நீ நினைக்கிறியா...?" என்று அவர் கேட்க, தலை குனிந்து கொண்டான் ராஜா.
"இன்னைக்கு காலையில காமேஸ்வரன் என்னை அசம்பிளி காம்ப்ளக்ஸில் சந்திச்சார். நீ உன்னுடைய ஃபிரண்டுகாக என்னெல்லாம் செஞ்சேன்னு எல்லா விஷயத்தையும் சொன்னார்..."
தடுமாறிப் போனான் ராஜா.
"சொக்கலிங்கத்தை பயன்படுத்தி என்னை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயி, உன்னோட ஃபிரண்டு அவனுடைய கேர்ள் ஃபிரண்டை பார்க்க வச்ச இல்லயா...?"
"சாரிப்பா... நான் நிமலுக்கு..."
அவன் பேச்சை துண்டித்து,
"உதவி செஞ்ச... இந்த விஷயம் காமேஸ்வரன் சம்பந்தப்பட்டதா இருக்கிறதுனால, அதைப் பத்தி என்கிட்ட சொல்லணும் உனக்கு தோணலயா?"
"நீங்க இதை எப்படி எடுத்துக்குவீங்கன்னு எனக்கு தெரியல"
"நீ நினைக்கிற மாதிரி இந்த விஷயம் அவ்வளவு சாதாரணமானது இல்ல. காமேஸ்வரனோட போட்டி போடுற அளவுக்கு உனக்கு திறமை இல்லன்னு நான் சொல்ல வரல. என்னுடைய முப்பது வருஷ அரசியல் வாழ்க்கையில, அவரை பத்தி நான் நிறையவே தெரிஞ்சிகிட்டிருக்கேன். எப்பவுமே காமேஸ்வரன் தன்னுடைய கௌரவத்தை விழ விடவே மாட்டார்"
"நான் அவருடைய கௌரவத்தை வீழ்த்த நினைக்கல. என்னுடைய ஃபிரண்டு, அவன் விரும்பிய பெண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்னு தான் நினைக்கிறேன்"
"குமணனும், விஸ்வநாதனும் வியாபார எதிரிங்க"
"அவங்க ரெண்டு பேரும், ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப விரும்பறாங்க பா"
"அது உண்மையா இருந்தா எனக்கு சந்தோஷம் தான். ஆனா ஒருவேளை, நிமல் இதையெல்லாம் குமணன் மேல இருக்கிற பகைமைல செஞ்சா, என்னை ரொம்ப மோசமானவனா பாப்பிங்க. ஏன்னா, இது ஒரு பெண்ணுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்டது. பெண் பாவம் பொல்லாதது"
"தப்பான ஒருத்தனுக்கு நான் உதவி செய்வேன்னு நீங்க நினைக்கிறீங்களா பா?"
"நட்பு எதை வேணும்னாலும் செய்யும்... எதையுமே யோசிக்காம. நீ அந்த தப்பை செய்ய வேண்டாம்ன்னு நான் நினைக்கிறேன்"
"நிச்சயமா இல்லப்பா. எனக்கு நிமலை பத்தி நல்லா தெரியும். அவன் உண்மையிலேயே வர்ஷினியை ரொம்ப காதலிக்கிறான்"
"குமணனும், காமேஸ்வரனும் அவ கல்யாணத்தை கார்த்திக் கூட நிச்சயம் பண்ணிருக்காங்க. அதுக்கு என்ன செய்யப் போறீங்க?"
"அந்தக் கல்யாணம் நடக்காது" என்றான் அமைதியாக
"அப்படின்னா எல்லாத்தையும் ஏற்கனவே நீங்க பிளான் பண்ணிட்டீங்க..." என்றார் புருவத்தை உயர்த்தியபடி.
ஆமாம் என்று தலையசைத்தான் ராஜா.
"நான் சேகரிச்ச இன்ஃபர்மேஷன்சை வச்சி பார்க்கும் போது, வர்ஷினியை நெருங்குகிறது அவ்வளவு சாதாரணம் இல்லை. தன் வீட்டை பாதுகாப்பு வளையத்துக்குள்ள வச்சிருக்கார் குமணன். அந்த வீட்டை நீங்க நெருங்கக் கூட முடியாது. அப்படி இருக்கும் போது, எப்படி அவளை சந்திக்க போறீங்க?"
"நிச்சயதார்த்த மண்டபத்துல"
"இன்விடேஷன் இல்லாத யாரையும் உள்ளே விட மாட்டாங்கன்னு உங்களுக்கு தெரியுமா?"
"தெரியும் பா. அதுக்கும் ஏற்பாடு பண்ணியிருக்கேன். நாளைக்கு இன்விடேஷன் கிடைச்சுடும்"
"தேவையில்ல..."
தன் கையில் வைத்திருந்த கோப்பில் இருந்த அழைப்பிதழை எடுத்து ராஜாவிடம் நீட்டினார் ராஜராஜன். அதை பார்த்த ராஜா ஆச்சரியப்பட்டான்.
"காமேஸ்வரன், என்னை இன்வைட் பண்ணி இருக்காரு..."
"நீங்க போக போறீங்களா?"
"நிச்சயமா... காமேஸ்வரனே கூப்பிட்டிருக்கும் போது, நான் எப்படி போகாம இருக்கிறது?"
"இந்த பிரச்சனைல நம்ம வர வேண்டாம்னு நிமல் நினைக்கிறான் பா"
"ஏன்?"
"ஏன்னா, அது நம்மளை நேரடியா பாதிக்கும்"
"இந்த விஷயத்தை அவன் தனியாவே செஞ்சிட முடியும்னு நினைக்கிறானா?" என்றார் ஆச்சரியமாக.
"இல்ல பா... நான் அவன் கூட இருப்பேன். ஆனா, நான் மண்டபத்துக்குள்ள போக மாட்டேன்."
"நீங்க ரெண்டு பேரும், எல்லாத்துக்கும் தயாரா இருக்கீங்க போல இருக்கு...?"
"காமேஸ்வரனும், குமணனும், எவ்வளவு பவர்ஃபுல்லான ஆளுங்கன்னு எங்களுக்கு தான் தெரியுமே பா..."
"வெல்... எப்படி இருந்தாலும் நான் பார்ட்டிக்கு போய் தான் ஆகணும். காமேஸ்வரன் கூப்பிட்டதுக்கு அப்புறம் என்னால போகாம இருக்க முடியாது. என்னுடைய சக அரசியல்வாதியான அவரை நான் மதிச்சி தான் ஆகணும். அதோட மட்டும் இல்லாம, நீங்க வேலையை முடிச்சதுக்கப்புறம், அவர் முகம் எப்படி போகுதுன்னு நான் பார்க்கணும்..." என்று சிரித்தார்.
எவ்வளவு தைரியம் இருந்தால், உன் மகனை இந்த விஷயத்தில் இருந்து எட்டி இருக்கச் சொல் என்று, காமேஸ்வரன் ராஜராஜனையே மிரட்டுவார்...! இந்த விஷயத்தில் அவர் நிச்சயம் வெல்ல முடியாது என்று காமேஸ்வரன் சவால் விட்டார் அல்லவா? பார்ப்போமே...!
"நான் மண்டபத்துக்கு உள்ளே வர்ற நேரத்தை, நீங்க தரமா பயன்படுத்துவீங்கன்னு நம்புறேன்" என்று மர்ம புன்னகை வீசினார் ராஜராஜன்.
அவர் கூறியதன் பொருளைப் புரிந்துகொண்டு, அவரை அணைத்துக் கொண்டான் ராஜா. எப்படி இதை செய்து முடிக்கப் போகிறோம் என்று யோசித்துக்கொண்டிருந்த ராஜாவுக்கு, ஆஹா என்றிருந்தது.
"தேங்க்யூ பா..."
"மென்ஷன் நாட்..." என்று சிரித்தார் ராஜராஜன்.
திருமண மண்டபம்
மிக ஆடம்பரமான அந்த திருமண மண்டபம், பாரதத்தின் பெரும் புள்ளிகள் அனைவரையும் வரவேற்று கொண்டு, குமணனையும் காமேஸ்வரனையும் போலவே, அலட்டலாய் ஜோலித்துக் கொண்டிருந்தது. குமணனும் காமேஸ்வரனும் விருந்தினர்களை வரவேற்று கொண்டிருந்தார்கள்.
அங்கு இருந்தவர்களிலேயே மிகவும் சோர்வுடனும், பயத்துடனும் காணப்பட்டது வர்ஷினி மட்டும் தான். நிச்சயதார்த்தத்திற்கு தயாராக அவளுக்கு துளியும் விருப்பமில்லை. தன்னுடைய வாழ்க்கை ஒரு மோசமான திருப்பத்தை எதிர்நோக்கி செல்கிறது என்று தெரிந்த பிறகு எப்படி அவளால் நிம்மதியாக இருக்க முடியும்? அவளை தயார்படுத்த வந்த அழகுக் கலை நிபுணர் வெறுத்துப் போனார். அவர் கொண்டு வந்திருந்த எதையும் வேண்டாம் என்று கூறிவிட்டு, வெகு எளிமையாய் தயாரானாள் வர்ஷினி.
அணைத்து முக்கியஸ்தர்களும் கூடியிருந்த, மிக பிரம்மாண்டமான கூடத்திற்கு அழைக்கப்பட்டாள் வர்ஷினி. தலை குனிந்த படியே வந்தாள் அவள். திடீரென்று, ஒரு இனம் புரியாத உணர்வு அவளை ஆட்கொண்டது. அவளுக்கு மிக பரிச்சயமான அந்த நபர், அவள் அருகில் இருப்பதுப் போல் தோன்றியது.
இங்கும் அங்கும் தேடியபடி, மேடையை நோக்கி நடந்தாள் வர்ஷினி. மேடையில் குமணன், கல்பனா, காமேஸ்வரன், மற்றும் கார்த்திக் அவளுக்காக காத்திருந்தார்கள். அங்கு குழுமியிருந்த மக்கள், கரகோஷத்துடன் வர்ஷினியை வரவேற்றார்கள்.
பதற்றத்துடன் கல்பனாவின் பக்கத்தில் நின்றாள் வர்ஷினி. அவள் மனதில் ஏதோ பட்டது... ஆனால், நிச்சயம் அது நல்லதாக படவில்லை. இனம் புரியாத ஒரு பயம் அவள் மனதை ஆட்கொண்டது. தலையை நிமிர்த்தியவளுக்கு, திக் என்றானது, அவள் இதயத்துக்கு சொந்தக்காரன் எதிரில் நின்றிருந்ததை பார்த்த போது, நிமல்...!
இதுவரை எப்பொழுதுமே பார்த்திராத கோபம் நிறைந்த ஒரு பார்வையை அவனிடம் கண்ட பொழுது அவள் கைகள் நடுங்கியது. அவனுடைய முகம் சீற்றத்துடன் காணப்பட்டது. கொதித்துக் கொண்டிருந்த அவனுடைய மனதை, அவன் முகமே வெளிப்படுத்தி காட்டியது.
அவளுடைய பதட்டத்தை பார்த்து, அவள் பார்த்த திசையில் திரும்பிப் பார்த்தார் குமணன். ஆனால், அங்கு யாரும் இருக்கவில்லை. அவள் பதட்டமாக தானே இருப்பாள் என்று நினைத்துக்கொண்டார் குமணன். ஏனென்றால், அவர் தான் அவ்வளவு நம்பிக்கையுடன் இருந்தாரே... நிமல் அங்கு வரவே முடியாது என்று!
"இது எங்கள் வாழ்வில் மிக அற்புதமான ஒரு தருணம்... குமணன் மற்றும் காமேஸ்வரன் குடும்பத்தினர், முறையான பந்தத்தில் நுழைகிறோம். என் மகளை, காமேஸ்வரனின் மகனுக்கு மனைவியாக்க, நான் மிகவும் சந்தோஷத்துடன் சம்மதிக்கிறேன்" என்றார் குமணன்.
அவர் காமேஸ்வரனை பார்க்க,
"ஒருவருக்கொருவர் மோதிரங்களை அணிவித்துக் கொண்டு, கார்த்திக்கும், வர்ஷினியும் அவர்களது வாழ்க்கைப் பயணத்தை துவங்க இருக்கிறார்கள்..." என்றார் காமேஸ்வரன்.
வர்ஷினியை நடு மேடைக்கு அழைத்து வந்து, கார்த்திக்கின் பக்கத்தில் நிற்க வைத்தார் கல்பனா. அவள் கையில் மோதிரத்தைக் கொடுத்து, அதை கார்த்திக்கின் கையில் அணிவிக்க சொன்னார் கல்பனா. அதை செய்ய அவள் தயங்க, கல்பனா அவள் கையை பிடித்து, அணிவிக்க செய்தார்.
இப்பொழுது கார்த்திக்கின் முறை. அவளுடைய இடது கை மோதிர விரலில் ஏற்கனவே ஒரு மோதிரம் இருப்பதை பார்த்து நின்றான் கார்த்திக். அது அவளின் பிறந்த நாள் அன்று, நிமல் அவளுக்கு அணிவித்த அதே மோதிரம் தான்.
"ஒரு நிமிஷம்..." என்ற கல்பனா,
வர்ஷினியின் விரலிலிருந்து அந்த மோதிரத்தை வெளியில் இழுத்தர். நிமல் அணிவித்த மோதிரம், தன் விரலில் இருந்து அகற்றபடுவதை பார்த்து கண் கலங்கினாள் வர்ஷினி. அகற்ற முடியாத அளவிற்கு அந்த மோதிரம் அழுத்தமாய் இருந்தது. ஆனால் கல்பனா அதைப் பற்றி கவலைப்படாமல், அதைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார். தலையை நிமிர்த்திய வர்ஷினியின் முகம்பாவம் மாறிப் போனது, நிமலை பார்த்த போது. 'நான் அணிவித்த மோதிரத்தை மாற்ற துணிந்தாயா?' என்று கேள்வி கணை வீசியது அவன் பார்வை. அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.
அவள் கண்ணீரை பார்த்த காமேஸ்வரன்,
"இருக்கட்டும் விடுங்க. நம்ம அப்புறமா அந்த மோதிரத்தை வெட்டி எடுத்துடலாம். நீ வலது கை மோதிர விரலில் மோதிரத்தை போடு" என்றார் கார்த்திக்கை பார்த்து.
சரி என்று தலையசைத்துவிட்டு, அவளது இடது கை ஆள்காட்டி விரலில் மோதிரத்தை அணிவித்தான் கார்த்திக், வானுயர எழுந்த கைதட்டல்களோடு. குமணனும் காமேஸ்வரனும் அனைத்தும் முடிந்துவிட்டது போல், ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி, தங்கள் வெற்றியை கொண்டாடிக் கொண்டார்கள்.
குமணன், காமேஸ்வரன், கார்த்திக் மற்றும் கல்பனாவும் அவரவர்களுடைய நண்பர்களை உபசரிக்க தொடங்கினார்கள்.
நிமல் நின்றிருந்த இடத்தில் அவனை தேடினாள் வர்ஷினி. அவன் அங்கு இல்லை. அவன் எங்கு சென்றான்? எதற்காக இங்கு வந்திருக்கிறான்? அவன் என்ன செய்யப் போகிறான்? ஏராளமான கேள்விகள் வர்ஷினியின் தலைக்குள் வட்டமிட்டன. ஒரு ஓரத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமைதியாய் அமர்ந்து கொண்டாள்.
திடீரென்று அந்த கல்யாண மண்டபம் பரபரப்பானது. அனைவரும் கிசுகிசுக்க தொடங்கினார்கள். குமணனின் விழிகள் அகல விரிந்தது, ராஜராஜன் தனது காரை விட்டு கீழே இறங்கி உள்ளே நுழைவதை பார்த்து. அவரை வரவேற்க வெளியே ஓடினார் குமணன். அவருடன் கல்பனாவும் ஓடினார். வேறு வழியின்றி, காமேஸ்வரனும், கார்த்திக்கும் அவர் பின்னால் விரைந்தார்கள். அவர்களைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் சென்றார்கள்.
"எங்க வீட்டு கல்யாணத்துக்கு நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம் சார்" என்றார் குமணன்.
"என்னுடைய நண்பர் காமேஸ்வரன், என்னை இன்வைட் பண்ணியிருக்கும் போது, நான் எப்படி வராம போவேன்?" என்று அவர் கூற காமேஸ்வரனை ஆச்சரியமாய் பார்த்தார் குமணன்.
"ராஜராஜன்கிட்ட இருந்து கிடைக்கிற கௌரவம், எனக்கு ரொம்ப சந்தோசத்தை தருது" என்றார் காமேஸ்வரன்.
"உங்க சந்தோஷத்துக்கு காரணமாயிருக்கிறதுல எனக்கும் சந்தோஷம்" என்றார் ராஜராஜன்.
இதற்கிடையில்...
தனியாய் அமர்ந்திருந்தாள் வர்ஷினி. பெரும்பாலோனோர், ராஜராஜனை வரவேற்க வெளியே சென்றுவிட்டார்கள். அவளும் வெளியே செல்லலாம் என்று நினைத்த போது, அங்கே வந்த மண்டபத்தின் பணியாளர், அவளிடம் ஒரு பழச்சாறு தம்ளரை கொடுத்தார். எனக்கு வேண்டாம் என்று தலையசைத்தாள் வர்ஷினி. அடுத்த நொடி, அவளுக்கு முன்னால் இருந்த மேஜையின் மீது அந்த பழச்சாற்றை வைத்து, அந்த தம்ளரின் அடியில் ஒரு சிறிய துண்டு காகிதத்தை வைத்தார் அந்த பணியாளர். அதைப் படிக்க சொல்லி அவளுக்கு சைகை செய்துவிட்டு அங்கிருந்து சென்றார் அவர்.
அது நிமலிடமிருந்து வந்திருக்கலாம் என்று அவசரமாய் எடுத்து படித்தாள் வர்ஷினி. அதைப் படித்த பொழுது அவளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
'உன்னுடைய தம்பி உயிரோடு இருக்க வேண்டுமென்றால், யாருக்கும் தெரியாமல், பின்பக்க வழியாக, தனியாக பார்க்கிங் லாட்டுக்கு வரவும்' என்று அதில் எழுதி இருந்ததை பார்த்து அவள் கை கால்கள் தடதடத்துப் போனது.
அந்த சீட்டை கொடுத்து அனுப்பியது நிமல் என்று அவள் நினைத்திருந்தாள். ஆனால், அதில் எழுதியிருக்கும் விஷயத்தை பார்த்த பொழுது, அது வேறு யாரிடமிருந்தோ வந்திருக்கிறது. ரிஷியை யாரோ கடத்தி இருக்கிறார்கள். அவர்கள் பணத்திற்காக தான் இதை செய்திருக்க வேண்டும். இப்பொழுது அவள் என்ன செய்வது? குமணனிடம் கூறினால் அவர்கள் ரிஷியை ஏதாவது செய்து விடுவார்களோ? சில நொடிக்குள் எது வேண்டுமானாலும் நடந்து விடலாமே...
நிமல் அங்கு இருப்பதை நினைத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். அவன் இருக்கிறான் என்ற நினைப்பு அவளுக்கு தைரியத்தை தந்தது. அவன் இருக்கும் வரை, அவளுக்கு எந்த தீங்கும் அவன் நேர விட மாட்டான். அவனுக்கு தான் ரிஷியை மிகவும் பிடிக்குமே... ரிஷியை காப்பாற்ற நிமல் உதவினால், குமணனிடம் அவன் நற்பெயர் பெறவும் வாய்ப்பு உள்ளது. யாருக்கும் தெரியாமல், மெல்ல பின்பக்க வழியாக, பார்க்கிங் லாட்டை நோக்கி சென்றாள் வர்ஷினி... தனியாக...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro