Part 32
பாகம் 32
கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர், கன்னத்தைத் தொடும் முன் அதை துடைத்தபடியே இருந்தான் நிமல். அன்று போல் அவன் என்றுமே உடைந்து போனதில்லை. வர்ஷினி அவனிடம் பேசவில்லை. அப்படி என்றால், அவள் அவனை நம்பவில்லை. விஸ்வநாதனின் வார்த்தைகளை அவள் முழுமையாய் நம்பிவிட்டாள். அவன் அவளை தூண்டில் மீனாய் பயன்படுத்தியதாக அவள் நினைக்கிறாள். அவன் மீது அவள் வைத்திருந்த நம்பிக்கை உடைந்து விட்டது. தன்னை கையாலாகாதவனாய் உணர்ந்தான் நிமல்.
"ரிலாக்சா இரு, நிமல்..." அவனை சமாதானப்படுத்த முயன்றான் ராஜா.
"எப்படி நான் ரிலாக்ஸ்ஸா இருக்கிறது? அவ என்கிட்ட பேச கூட தயாரா இல்ல..."
"அவ ஸ்டிரெஸ்ல இருக்கா. அவ கனவுல கூட நினைக்காத ஒரு விஷயத்தை எதிர்கொண்டிருக்கா. அவளுக்கு சுதாகரிச்சிக்க கொஞ்சம் டைம் கொடு. ஹாஸ்பிடல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆனதுக்கப்புறம், நிச்சயம் உனக்கு ஃபோன் பண்ணுவா. அவளால உன்கிட்ட பேசாம இருக்கவே முடியாது. ஒருவேளை, அதுக்கு அப்புறமும் அவ உன்கிட்ட பேசலனா, என்ன செய்யலாம்னு யோசி. அவ என்ன செய்றான்னு பார்த்துட்டு, அப்புறம் முடிவு பண்ணு"
ராஜா கூறுவதும் சரி என்றே பட்டது நிமலுக்கு. மருத்துவமனையிலிருந்து, வர்ஷினி வீட்டிற்கு சென்ற பின் பேசுவது என்று முடிவெடுத்தான் நிமல்.
மறுநாள்
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாள் வர்ஷினி. அவ்வளவு சீக்கிரம் அவளை வீட்டிற்கு அனுப்பிய போது, ஆச்சரியமாயிருந்தது வர்ஷினிக்கு. ஏனென்றால், அவளுக்கு தெரியும் அவள் பூரணமாக குணமாகவில்லை என்று. பெரும்பாலான காயங்கள் வெளியில் தெரியாமல் இருந்தாலும், உள்ளுக்குள் வலி இருந்து கொண்டே இருந்தது. அதை அவள் மருத்துவரிடமும் கூறியிருந்தாள்.
எதனால் அவள் சீக்கிரம் வீடு திரும்பினாள் என்று அவளால் ஊகிக்க முடிந்தது. அவளுடைய அப்பாவை பற்றி அவளுக்கு தெரியாதா? அவர் என்ன செய்ய காத்திருக்கிறாரோ...? ஒன்று மட்டும் நிச்சயம். இனி எப்பொழுதும் நிமலை பார்க்கும் சந்தர்ப்பம் அவளுக்கு கிடைக்கப் போவதில்லை.
குமணன் இல்லம்
ஆலம் சுற்றி அவளை வரவேற்றாள் லட்சுமி. அப்பொழுது தான் பள்ளிச் சுற்றுலாவில் இருந்து வந்த ரிஷி, ஓடி வந்து அவளை கட்டிக்கொண்டான்.
"எப்படிக்கா இருக்க?"
"நல்லா இருக்கேன்"
"நான் ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா?"
"தெரியும்" என்று சிரித்தாள்.
அவளுடன் அவளுடைய அறைக்கு வந்தான் ரிஷி.
"என்ன ஆச்சி, கா?"
"கோவிலுக்கு போனப்போ எனக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு"
"அப்பா, அந்த பைத்தியக்காரன் கார்த்திக் கூட உனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணியிருக்கார்ன்னு சொல்றாங்களே, அது உண்மையா, அக்கா?"
ஆமாம் என்று தலையசைத்தாள் வர்ஷினி.
"அந்த விஷயம் மாமாவுக்கு தெரியுமா?"
ஆம் என்று மறுபடியும் தலையசைத்தாள்.
"அப்ப சரி... மாமா செய்யப் போற சாகசத்தை பார்க்க நான் ஆவலா இருக்கேன்" என்றான் குதூகலமாக.
அவனை வாயடைத்துப் போய் பார்த்தாள் வர்ஷினி. சாகசமா? அப்படி நடக்கப் போகிறதா? அவளுக்கு நிமலிடம் பேச வேண்டும் என்று மனம் துடித்தது. ஆனால், அவனுக்கு ஃபோன் செய்ய அவள் தயாராக இல்லை. அவளுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை தீர்ப்பது அவசியம் என்று நினைத்தால், நிமலே பேசுவான். குளியலறையில் ஒளித்து வைத்திருந்த கைபேசியை எடுக்கச் சென்றாள் வர்ஷினி.
அவளுடைய கைபேசி அங்கு இல்லாததை பார்த்து அவள் பதற்றம் அடைந்தாள். அவளுடைய அறை முழுவதும் தேடிப்பார்த்தும் அவளுடைய கைபேசி கிடைக்கவே இல்லை. அது நிமல் வழக்கமாய் அவளுக்கு ஃபோன் செய்யும் நேரம். நிமலிடம் கேட்க வேண்டும் என்று மிக நீள கேள்வி பட்டியலை தன் மனதில் தயாரித்து வைத்திருந்தாள் வர்ஷினி. ஆனால், அவள் கைபேசி எங்குமே காணப்படவில்லை. பயத்துடன் கட்டிலில் அமர்ந்தாள்.
அப்பொழுது, வர்ஷினி அருந்த பால் எடுத்து வந்தார் கல்பனா. அவருடன் குமணனும் வந்தார். வர்ஷினிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
"இப்போ உனக்கு எப்படி இருக்கு?" என்றார் குமணன்.
"நல்.. லா... இருக்கேன் பா" என்று தட்டுத்தடுமாறி கூறி முடித்தாள்.
"இன்னும் ரொம்ப வலி இருக்கா?"
"இல்ல... பா..."
"ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க? நீ நிம்மதியா இருக்கணும். உனக்கு நாங்க இருக்கோம். நீ சந்தோஷமா இரு" என்று அவள் தோளை சுற்றி வளைத்து கொண்டார்.
தான் கனவு காண்கிறோமோ என்ற எண்ணம் ஏற்பட்டது வர்ஷினிக்கு. கண் இமைக்காமல் குமணனையே பார்த்துக்கொண்டு நின்றாள். அவர் திடீரென்று அவள் மீது காட்டிய அக்கறை, அவள் வயிற்றைக் கலக்கியது.
"இந்த பாலை குடிச்சிட்டு, ரெஸ்ட் எடுத்துக்கோ. காலையில சீக்கிரம் எழுந்துக்க வேண்டாம். நிம்மதியா தூங்கு. நீ சீக்கிரமா குணமாகி வரணும். ஏன்னா, அடுத்த வாரம் உனக்கு கல்யாணம்..." என்றார் கல்பனா.
"நீ எதையும் போட்டு மனசை குழப்பிக்காத. என்ன நடக்கணும்னு இருக்கோ அது தான் நடக்கும். ரெஸ்ட் எடுத்துக்கோ..." என்றார் குமணன்.
அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்றார்கள், வர்ஷினிக்கு பீதியை கிளப்பி விட்டு. கல்யாணமா? அதுவும் வரும் வரமா...? அவளுடைய கைப்பேசி அவளுடைய அறையில் இல்லை. அவளுடைய பெற்றோர்கள் தான் அதை அங்கிருந்து எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஒன்றுமே தெரியாதது போல் மிகவும் சாதாரணமாக அல்லவா இருக்கிறார்கள்...! அவள் இப்பொழுது என்ன செய்யப் போகிறாள்? ஆழமாய் மூச்சிழுத்து விட்டாள். இது தான் உண்மையில் நிமல் யார் என்பதை தெரிவிக்க போகும் சரியான தருணம். அவளுடைய தலையில் என்ன எழுதி இருக்கிறதோ...! குமணன் சொல்வது சரி தான். *என்ன நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ, அது தான் நடக்கும்* அதை யாராலும் மாற்ற முடியாது.
.....
நிமலின் பெயருடன் வர்ஷினியின் கைபேசி தொடர்ந்து அடித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்து பெருமையாய் புன்னகைத்தார் குமணன்.
"அந்த ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணுங்களேன். இருபத்தி எட்டாவது தடவையா அவன் கால் பண்றான்..." என்றார் கல்பனா.
"இல்ல... வர்ஷினி அவன் கூட பேச விரும்பலன்னு அவன் நினைச்சுக்கட்டும். அப்போ தான் அவகிட்ட பேச அவன் முயற்சி பண்ண மாட்டான். அவ மேல கோபம் வந்து அவளையும் வெறுப்பான்..."
"ஒருவேளை அவன் அவளை சந்திக்க வந்தா என்ன செய்றது?"
"சந்திக்கிறதா? நம்ம வீட்டுக்கு வந்தா? வரட்டும்... அவன் வாழ்க்கையில அது தான் கடைசி நாளா இருக்கும்... நம்ம தோட்டத்துல அவனை உயிரோட புதைச்சிடுவேன்" என்றார் குமணன்.
மறுபடியும் வர்ஷினியின் கைப்பேசி மணி அடித்தது.
"அதை சைலன்ட்லயாவது போடுங்களேன்..."
"மாட்டேன்... என்னுடைய வெற்றியை கொண்டாட விடு. அவன் கையாலாகாம தவிக்கிறது என் கண்ணு முன்னாடி தெரியுது. ஒரு விஷயத்தை சொல்லியே ஆகணும். அவன் மாறவே இல்ல. சின்ன வயசுல எப்படி எல்லா விஷயத்தையும் முடிச்சுக் காட்டணும்னு பிடிவாதமா இருப்பானோ, அதே பிடிவாதம் இன்னமும் அவன்கிட்ட இருக்கு. அவன் உடம்புல ஓடுறது குமரகுருபரன் ரத்தமாச்சே..."
"அதே பிடிவாதத்தோட, அவன் கல்யாண மண்டபத்துக்கு வந்தா என்ன ஆகும்?"
"வாய்ப்பே இல்ல... கல்யாண மண்டபம் ஏழு அடுக்கு பாதுகாப்போட இருக்க போகுது. ரொம்ப முக்கியமான விஐபிங்க மட்டும் தான் வருவாங்க. அவனுடைய சுண்டு விரலைக்கூட அவன் கல்யாண மண்டபத்துக்குள்ள வைக்க முடியாது." என்றார் இறுமாப்புடன்... விதி வகுத்திருக்கும் திட்டம் என்னவென்று அறியாமல்.
.....
தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை நிமலால். வர்ஷினி ஃபோனை எடுக்காததை பார்த்து ராஜாவுக்கும் கூட கவலையாகி போனது. முப்பத்தி இரண்டாவது முறையாக ஃபோன் செய்து விட்டு, அவள் எடுக்காததால் அழைப்பை துண்டித்தான் நிமல்.
"இப்போ என்ன செய்யிறது?" என்றான் ராஜா கவலையுடன்.
"வேற என்ன...? கல்யாணம் தான்" என்றான் பல்லை கடித்தபடி நிமல்.
"அப்படின்னா, நீ பிளான் *பி* யை செயல்படுத்த போறியா?"
"சந்தேகமில்லாம..."
"அது என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?"
ஆம் என்று தலையசைத்துவிட்டு தன்னுடை திட்டத்தை ராஜாவிடம் கூறினான் நிமல். அவனுடைய திட்டத்தை கேட்டு வாயடைத்துப் போனான் ராஜா. அவனுடைய திட்டத்தின் விளைவை நினைத்து பயந்தான் அவன். நிமல் தன் உயிரையே பணயமாக வைக்கிறான். அவன் குமணனுடன் மட்டுமல்ல, காமேஸ்வரனுடனும் மோத தயாராகி விட்டான். சமுதாயத்தின் இரு பெரும் சக்திகள் அவர்கள். நிமல் தோற்றால், குமணனும், காமேஸ்வரனும் , நிமலை கொல்லவும் தயங்க மாட்டார்கள். ஒருவேளை நிமல் வென்றால், அப்பொழுதும் அவர்கள் அவனை சும்மா விடமாட்டார்கள். என்ன ஒரு சூழ்நிலை இது?
"நீ எப்படிப்பட்ட ரிஸ்க் எடுக்கிறேன்னு உனக்கு தெரியுதா?" என்றான் ராஜா.
"ஆரம்பத்துல இருந்தே நான் ரிஸ்க் எடுக்க தயாரா இருந்தேன்... அது உனக்கும் தெரியும்"
"அப்போ குமணனுக்கு நீ யாருன்னு தெரியாது. ஆனா இப்போ, உன் ஜாதகமே அவர்கிட்ட இருக்கு. அவர் சாதாரணமானவர் இல்ல"
"நானும் சாதாரணமா வர்ஷினியை விட்டு கொடுக்கிறவன் இல்ல"
"அவங்க உன்னை கொன்னுடுவாங்க டா..."
"வர்ஷினியை விட்டு கொடுக்கிறதை விட, சாவறது எவ்வளவோ மேல். அந்த பொறுக்கி கார்த்திக் அவளை கல்யாணம் பண்ணிக்கட்டும்னு விட சொல்றியா?"
"நம்ம வேற ஏதாவது ஒரு வழியை தேடலாம்"
"இதை விட்டா, நமக்கு வேற எந்த வழியும் இல்ல. குமணன் வீட்டுக்குள்ள நம்மலால போக முடியாது. வர்ஷினியும் வெளியே வரமாட்டா. நம்ம வேற என்ன தான் செய்ய முடியும்?"
"உன் திட்டத்தை செயல்படுத்தினா, வர்ஷினியும் கூட உன் மேல ரொம்ப வருத்தப்படுவா..."
"இதை நான் செய்யலன்னா அவ வாழ்நாளெல்லாம் வருத்தப்படுவா. அவளை சமாதானப்படுத்த எனக்கு எப்பவுமே சந்தர்ப்பம் கிடைக்காது. கடைசி வரைக்கும் அவ என்னை தப்பாவே நினைச்சுக்கிட்டு இருப்பா. நான் அவளுக்கு சத்தியம் செஞ்சு கொடுத்து இருக்கேன். எனக்கு வேற வழியே இல்ல"
"அவ ஏற்கனவே உன்னை தப்பா நினைச்சுகிட்டு இருக்கா. உன் வாழ்க்கையோட முக்கியமான அடியை எடுத்து வைக்கிறதுக்கு முன்னாடி, அவகிட்ட உன்னை பத்தி தெளிய வைக்கிறது முக்கியம்னு உனக்கு தோணலயா?"
"எப்படி? என்னுடைய ஃபோனை அவ எடுக்கவே மாட்டேங்கிறா. ரிஷியும் ஸ்கூல் டூர் போயிருக்கான். அப்புறம் நான் எப்படி அவளுக்கு தெளிய வைக்கிறது? அவ வீட்டை சுத்தி இருந்த பாதுகாப்பை, மூணு பங்கு அதிகமாகிட்டாரு குமணன். அதை செய்ய இருக்கிறது இந்த ஒரு வழி தான்... கடைசி வழி..."
பெருமூச்சுவிட்டான் ராஜா.
"நான் ரெடி. ஆனா நான் வர்ஷினியை நினைச்சு ரொம்ப பயப்படுறேன். அவ உன்னை வெறுத்துடுவாளோன்னு எனக்கு பயமாயிருக்கு."
"என்னை அவ வெறுத்தாலும், அவளுக்கு எப்பவும் கிடைக்காத ஒரு நல்ல அம்மா, அப்பா கிடைப்பாங்க. என்னோட அம்மா அப்பா அவளுக்கு என்னை நிச்சயம் புரிய வைப்பாங்க."
"ம்ம்ம்... உன்னுடைய திட்டத்தை நம்ம எப்ப செயல்படுத்த போறோம்?"
"கல்யாணத்துக்கு முதல் நாள், அவளுடைய நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு பண்ணி இருக்காரு குமணன்"
"ஆமாம். அதே கல்யாண மண்டபத்துல ரொம்ப பிரமாண்டமான பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணியிருக்கார். ரொம்ப முக்கியமான விஐபிஸ் மட்டும் தான் அதுக்கு வர போறாங்க."
"அங்க தான் நம்ம அவளை தூக்க போறோம்..."
"ஓகே டன்"
மறுநாள்
சட்டசபை வளாகம்
தன் முன் வந்து நின்ற காமேஸ்வரனை அதிசயமாய்ப் பார்த்தார் ராஜராஜன். எப்பொழுதுமே காமேஸ்வரன் அவருடைய வழியில் வந்ததே இல்லை. எதிர்க் கட்சித் தலைவர்களான இருவரும், எப்பொழுதுமே ஒரு ஒழுங்கு முறையான இடைவெளியை பின்பற்றி வந்தார்கள். மேலும் ராஜராஜனுக்கு ஆச்சரியத்தை தரும் வண்ணம், அவருடன் கைகுலுக்க கை நீட்டினார் காமேஸ்வரன். புருவத்தை உயர்த்தியபடி அவருடன் கைகுலுக்கினார் ராஜராஜன். அங்கிருந்த அனைத்து கண்களும் அவர்கள் மீது தான் இருந்தன. அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை சுற்றியிருந்தவர்களால் கேட்க முடியாவிட்டாலும், அவர்களுடைய முகபாவங்கள் கவனிக்கப்பட்டு கொண்டிருந்தன. கைதேர்ந்த அரசியல்வாதிகளான அவர்கள், தங்கள் பகைமையை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் பேசத் துவங்கினார்கள்.
"ஆச்சரியமா இருக்கு... த கிரேட் காமேஸ்வரன் என்னோட கை குலுக்க நினைக்கிறாரு..." என்றார் ராஜராஜன் புன்னகையுடன்.
"எனக்கும் ஆச்சரியமா தான் இருந்தது, நீங்க என் மருமகளை பார்க்க ஹாஸ்பிடலுக்கு போனீங்கன்னு கேள்விப்பட்டப்போ..."
"நான் உங்க மருமகளை பார்க்க போகல. என் மகனுடைய ஃபிரண்டை பார்க்க போனேன்"
"அது நீங்க சொன்ன சாக்கு..."
"சாக்கா...?" என்று முகம் சுருக்கினார் ராஜராஜன்.
"நீங்க என்ன செய்ய நினைக்கிறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். அது நிச்சயம் நடக்கப் போறதில்ல... நான் நடக்க விட மாட்டேன்..."
"நீங்க என்ன சொல்றீங்க?" என்றார் ராஜராஜன்.
"இந்த தடவை, நீங்க ஜெயிக்க முடியாது. வர்ஷினியோட கல்யாணம் கார்த்திகோட தான் நடக்கும். நிமல் அவளை அடைய, அவனுக்கு உதவுறதா நினைச்சி, அதை மாத்த நினைக்காதீங்க..."
அதைக் கேட்டு ராஜராஜன் ஆச்சரியம் அடைந்தார். அப்படி என்றால் நிமலும் வர்ஷினியும் நண்பர்கள் இல்லையா...? அவர்களுக்குள் இப்படி ஒரு உறவு இருக்கிறதா?
"குமணனுடைய கம்பெனியை நஷ்டமடைய செஞ்சதுல நிமலுக்கு உதவியது ராஜா தான்னு எனக்கு தெரியும். அப்போ ராஜாவால அதை சுலபமா செய்ய முடிஞ்சது. ஏன்னா, அப்ப குமணன் கூட காமேஸ்வரன் இல்ல. ஆனா, இப்போ நடக்கப் போறது என் மகனோட கல்யாணம். உங்க மகனை இதிலிருந்து விலகி இருக்க சொல்லுங்க. நான் எவ்வளவு மோசமானவன்னு அவனுக்கு புரிய வையுங்க"
ராஜராஜனுடைய அரசியல் மூளை அனைத்து விஷயங்களையும் கூட்டி கழிக்க தொடங்கியது. அதற்காகத் தான் வர்ஷினியை பார்க்க வேண்டுமென்று நிமல் விரும்பினானா? உண்மையிலேயே நிமலுக்கு வர்ஷினி கிடைக்க ராஜா உதவிக் கொண்டிருக்கிறானா?
அவருக்கு ஒரு விஷயம் தான் புரியவே இல்லை. அது அவருடைய நண்பர் சொக்கலிங்கத்துக்கு ஏற்பட்ட இதய பிரச்சனை. வர்ஷினி மருத்துவமனையில் இருந்த அதே நாளில் தானே அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்? அது எப்படி நடந்தது? அது தற்செயலாய் நடந்ததா? அல்லது, அதிலும் ராஜாவின் கை இருக்கிறதா?
சொக்கலிங்கம் எந்த அளவிற்கு உடல் நலனில் அக்கறை உள்ளவர் என்பது ராஜராஜனுக்கு தெரியும். தினமும் உடற்பயிற்சியும், தவறாமல் மருத்துவ பறிசோதனையையும் செய்து கொள்பவர் அவர். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்று ராஜா அவரிடம் கூறிய போது, அவரால் அதை நம்பவே முடியவில்லை. ஆனால், சொக்கலிங்கமும் ராஜா கூறினான் என்பதற்காக மருத்துவமனையில் சேர்ந்துவிடுபவர் அல்ல. எந்த விஷயத்திற்காகவும் அவரை அவ்வளவு சீக்கிரம் சம்மதிக்க வைத்து விட முடியாது. அப்படி இருக்கும் போது, எப்படி இதை ராஜா சாத்தியமாக்கினான்? நிமல் வர்ஷினியை சந்திக்க வேண்டும் என்பதற்காக அவ்வளவு தூரமா முயற்சி மேற்கொண்டான் அவன்? நிமல் அந்த அளவிற்கா வர்ஷினி விஷயத்தில் உறுதியாய் இருக்கிறான்? அவன் உறுதியாய் இருந்தால் மட்டும் தான் ராஜா அவனுக்கு உதவுவான் என்பது அவருக்கு தெரியும். நிமலுக்காக சொக்கலிங்கத்தை பயன்படுத்தி ராஜா அதை செய்திருக்க வேண்டும். யாருக்கு தெரியும்? சொக்கலிங்கத்திற்கே கூட அதை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம். ராஜா நிமலுடன் கொண்டிருக்கும் ஆழமான நட்பை பற்றி ராஜராஜன் அறிந்திருந்தார். அவருடைய மகன் புத்திசாலித்தனமாய் விளையாடி இருக்கிறான். தன்னுடைய பெயரை மட்டும் அல்லாது, தன்னையே நேரடியாய் பயன்படுத்தி, மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிறான். அவன் அரசியலில் மிகப்பெரிய ராஜதந்திரியாய் வலம் வருவான் போல் தெரிகிறது.
"நிமல் வர்ஷினியை காதலிக்கிறானா?" என்றார் ஆச்சரியத்துடன்.
"உங்களுக்கு எதுவுமே தெரியாத மாதிரி பாசாங்கு செய்யாதீங்க. அரசியல்ல ரொம்ப சக்தி வாய்ந்தவர்னு நீங்க பெயர் எடுத்து இருக்கீங்க. நீங்க எடுக்கிற எல்லா விஷயத்துலயும் ஜெயிப்பிங்கன்னு உங்களுக்கு பேர் இருக்கு. இந்த விஷயத்தில் மூக்கை நுழைச்சி அந்தப் பெயரைக் கெடுத்துக்காதீங்க. இந்த முறை அப்படி நடக்காது"
"ஓ... அதனால தான் உங்க மகனுடைய கல்யாணத்துக்கு என்னை நீங்க அழைக்கலயா? உங்களுடைய பயத்தை பார்க்கும் போது தான், நான் எவ்வளவு சக்தி வாய்ந்தவன்னு எனக்கு பெருமையா இருக்கு" என்றார் எகத்தாளம் கொப்பளிக்க.
அவர் அங்கிருந்து செல்ல முயன்ற போது,
"ஒரு நிமிஷம்" என்றார் காமேஸ்வரன்.
ராஜராஜன் அவ்வளவு எகத்தாளமான வார்த்தைகளை சொன்ன பிறகு, அவரை எப்படி போக விடுவார் காமேஸ்வரன்? ராஜராஜன் சீண்டிவிட்டது அவருடைய கௌரவத்தை அல்லவா...? அதைக் கேட்ட பிறகு அவர் எப்படி சும்மா இருந்து விடுவார்? தன் உதவியாளரை அழைத்து சைகை செய்தார். அவர் ஒரு அழைப்பிதழை காமேஸ்வரனிடம் கொடுத்தார்.
"என் மகனுடைய கல்யாணத்துக்கு நான் உங்களை அழைக்கிறேன்" என்று கூறி, அந்த அழைப்பிதழை ராஜராஜனிடம் கொடுத்தார் காமேஸ்வரன்.
"ரொம்ப சந்தோஷம்" என்றார் சிரித்தபடி ராஜராஜன்.
அந்த அழைப்பிதழை காமேஸ்வரனின் கையிலிருந்து பெற்றுக்கொண்டு, அதை படித்தபடி, அங்கிருந்து நடக்கத் துவங்கினார். அதில் எழுதப்பட்டிருந்த முக்கியமான குறிப்பு, அவர் கவனத்தை கவர்ந்தது. பாதுகாப்பு கருதி, அழைப்பிதழ் இல்லாத யாரும், திருமண மண்டபத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். அதைப் பார்த்து புன்னகை புரிந்தார் ராஜராஜன். அதை தன் உதவியாளரிடம் கொடுத்து,
"பத்திரமா வச்சுக்கங்க" என்றார்.
காரில் ஏறி அமர்ந்து, ஓட்டுனரிடம்
"சொக்கலிங்கம் வீட்டுக்குப் போ" என்றார்
என்ன நடந்தது என்பதை தெரிந்துகொண்டே ஆக வேண்டும் அவருக்கு.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro