Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Part 31

பாகம் 31

ஆர்கே மருத்துவமனை

கண்களை மூடி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள் வர்ஷினி. அவள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாளே
தவிர, அவளுடைய கண்கள் கண்ணீர் சிந்துவதை நிறுத்தவே இல்லை. அதை துடைக்க வேண்டும் என்றும் அவளுக்கு தோன்றவில்லை. அவளுடைய கரு விழிகள் மூடி இருந்த இமைகளுக்குள் இங்குமங்கும் ஓடிக் கொண்டே இருந்தன.  உணர்வுப்பூர்வமான ஏதோ ஒன்றைப் பற்றி அவள் சிந்தித்துக் கொண்டிருக்கிறாள் போல் தெரிகிறது. உணர்வுப்பூர்வமானது என்றால் அது நிமலை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? அவள் சுய நினைவு பெற்ற நிமிடத்திலிருந்து நிமலை பற்றி மட்டும் தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள். விஸ்வநாதன் உதிர்த்த வார்த்தைகள் அவள் தலைக்குள் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. எதிரொலித்துக் கொண்டு மட்டும் இல்லை... அவள் தலையை சம்மட்டியால் அடித்து கொண்டிருந்தது.

ஆழமாய் மூச்சை இழுத்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, விஷயத்தை நிதானமாய் ஆராயத் தொடங்கினாள்.

"சாகணும்னு நான் நெனச்சது  சரியா? எதுகாக நான் அப்படி ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்தேன்? நிமல் என்ன நெனச்சிருப்பார்...? இதெல்லாம் என்ன நிமல்...? நான் கேட்டதெல்லாம் உண்மையா இருக்க முடியுமா? எதுக்காக விஸ்வநாதன் அப்படி சொன்னார்? நிமல் என்னை தூண்டில் மீனா பயன்படுத்த நெனச்சாரா? அப்படி இருக்க வாய்ப்பே இல்லையே... எனக்கு தெரியாதா நிமலை பத்தி...? இது என்ன சிக்கல்? விஸ்வநாதன் சொன்னாரே, குமணனுடைய சோப்பு குவாலிட்டி பிரச்சனைக்கு பின்னால இருந்தது நிமல் தான்னு, அவர் சொன்னது சரியா இருக்கலாம். அது வியாபாரம். வியாபார எதிரிகளாக இருக்குறவங்க  இதெல்லாம் செய்றது தான். நிமல் அப்படி செய்திருக்கலாம் தான். ஆனா, நிச்சயம் அவர் என்னை ஏமாத்தியிருக்க மாட்டார். ஆனா, எதுக்காக அவர் என்கிட்ட அதை பத்தி எதுவுமே சொல்லல? என்கிட்ட எதையும் சொல்ல  அவர் விரும்பலயா? சொல்ல வேண்டியதில்லனு நினைச்சரோ? ( சற்று நிறுத்தியவள் ) ஒருவேளை, விஸ்வநாதன் சொன்னது  உண்மையா இருந்தா? ( அதை நினைத்த போதே, அவள் இதயத்தை யாரோ பிசைவது போல் இருந்தது அவளுக்கு. அப்படி ஒன்றை அவளால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.) இல்ல... நிமல் ஏமாத்துக்காரனா இருக்க வாய்ப்பே இல்ல... இருக்கவும் கூடாது... அப்படி இருந்தா, நிச்சயம் அதுக்கப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன். இன்னொரு தடவை சரியா முயற்சி பண்ணா சாக முடியாதா என்ன? ஆனா நான் எப்படி உண்மையை தெரிஞ்சுகிறது? நான் ஏன் தெரிஞ்சுக்கணும்? நிமல் உண்மையானவரா இருந்தா, எப்பாடுபட்டாவது அவரே அவரை நிரூபிச்சி காட்டட்டும். எனக்கு எல்லா உண்மையும் தெரியிற வரைக்கும், எவ்வளவு தான் என்கிட்ட பேச அவர் முயற்சி பண்ணாலும், நான் அவர்கிட்ட பேச போறது இல்ல. எனக்கு உண்மை தெரிஞ்சே ஆகணும். பார்க்கலாம்...  என்னை சமாதானப்படுத்த அவர் முயற்சி பண்றாரான்னு... பண்ணுவாரா...? மகமாயி... எங்களை காப்பாதுங்கமா"

எல்லா உண்மையையும் தெரிந்து கொள்ளாத வரை, அல்லது நிமல் எல்லா உண்மையையும் சொல்லாத வரை,  நிமலிடம் பேசுவதில்லை என்ற முடிவுக்கு வந்தாள் வர்ஷினி. கண்ணீரை துடைத்துக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

ஒரு விஷயம் அவளுக்கு பேராச்சரியத்தை அளித்தது. அவளுடைய அம்மா அப்பா இந்த விஷயத்தில் நடந்து கொண்ட விதம்... அவள் ஏன் இந்த இடத்திற்கு வந்தாள் என்று அவளிடம் ஒரு வார்த்தை கூடக் கேட்கவில்லை அவர்கள். அவளிடம் கோபமாகவும் நடந்து கொள்ளவில்லை. அது அவளுக்கு சொல்ல முடியாத ஆச்சரியத்தை அளித்தது. பெரும்பாலான நேரம், கல்பனா மருத்துவமனையிலேயே வர்ஷினியுடன் இருந்தார். அவர் வர்ஷினியை நன்றாக கவனித்துக் கொள்ளவும் தொடங்கியிருந்தார். அது இதற்கு முன் எப்போதும் நிகழ்ந்திராத ஒன்று. அது அவளுக்கு ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் அளித்தது.

இனியவர்களின் இருப்பிடம்

கட்டிலில் படுத்தபடி, நாளை வர்ஷினியை சந்திக்கப் போவதை பற்றி நினைத்து கொண்டிருந்தான் நிமல். அவனுடைய கவனம் சிதறியது, அவனுடைய கைபேசி ஒலித்த போது. அந்த அழைப்பு ராஜாவிடம் இருந்து வந்தது. உடனே எடுத்து பேசினான் நிமல், எழுந்து அமர்ந்து கொண்டு.

"ஹலோ ராஜா"

"நாளைக்கு காலைல 11 மணிக்கு, நீ வர்ஷினியை மீட் பண்ண போற. ஹாஸ்பிடலுக்கு வந்துடு"

"குமணனையும் கல்பனாவையும் என்ன செய்யப் போற?"

"குமணனுக்கு நாளைக்கு காலைல 11 மணிக்கு ரொம்ப முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு. கல்பனாவுடைய லேடீஸ் கிளப்ல நாளைக்கு ஆண்டு விழா ஃபங்ஷன். அதனால அவங்களும் அங்க இருக்க மாட்டாங்க. வர்ஷினியை சந்திக்க, நமக்கு இதைவிட ஒரு நல்ல சந்தர்ப்பம்  கிடைக்கவே கிடைக்காது"

"ஆனா குமணன் எப்படி விஷயத்தை ஃப்ரீயா விட்டார்?"

"அவரு ஃப்ரீயா விட்டார்ன்னு யார் சொன்னது? அவரு செக்யூரிட்டியை டபுளாக்கி இருக்காரு. வர்ஷினியோட ரூம் எண்ட்ரன்ஸ்ல கேமராவும் ஃபிக்ஸ் பண்ணி இருக்காங்க"

"அப்புறம் நம்ம எப்படி அவளை பாக்குறது?"

"அந்த மேஜிக்கை நீயே நேரில் வந்து பாரு"

"சரி"

அவர்கள் அழைப்பைத் துண்டித்து கொண்டார்கள். எப்படி ராஜா தன்னை வர்ஷினியிடம் அழைத்து செல்லப் போகிறான் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் நிமலின் மனதில் மேலோங்கியது.

மறுநாள்

பத்தரை மணிக்கே மருத்துவமனை வளாகத்திற்கு வந்துவிட்டான் நிமல். வர்ஷினி இருக்கும் இரண்டாம் தளத்திற்கு சென்றான். ராஜா வரும் வரை காத்திருக்க வேண்டுமே... அதனால அங்கிருந்த இரும்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டான். அவனுடைய கை கடிகாரத்தை மறுபடி மறுபடி பார்த்துக்கொண்டே இருந்தான். பாழாய் போன நேரம், மெது மெதுவாய் நகர்ந்து.

மணி பதினோன்று ஆனது. மருத்துவமனை திடீரென்று சூடேறி போனது. மருத்துவமனையின் ஊழியர்கள் இங்குமங்கும் ஓடுவதை பார்த்து குழம்பினான் நிமல். அப்பொழுது, இரண்டாம் தளத்தின் லிஃப்டின் கதவு திறந்தது. தமிழகத்தின் மிகவும் சக்தி வாய்ந்த அரசியல்வாதிகளில் ஒருவரான ராஜராஜன், அவருடைய மகன் ராஜேந்திரன் பின்தொடர, அதிலிருந்து வெளியே வந்தார். ஆச்சரியத்தில் நிமலின் விழிகள் விரிந்தன. சிலைபோல நின்றிருந்த நிமலை பார்த்து சிரித்தான் ராஜா. ராஜராஜனா...? அவர் எப்படி இங்கே வந்தார்.

அப்பொழுது ராஜராஜனும் நிமலை பார்த்தார்.

"நிமல்... நீ எங்க பா இங்க...?" என்றார்.

"எங்களுடைய காலேஜ் ஃபிரண்டு இங்க தான் பா அட்மிட் ஆகி இருக்கா. அவளைப் பார்க்கத் தான் நிமல் வந்திருக்கான்னு நினைக்கிறேன். நான் சொல்றது சரி தானே?" என்றான் ராஜா.

"ஆமாம் அங்கிள்"

"உன்னுடைய ஃபிரண்டு நல்லா இருக்காளா?"

"செக்யூரிட்டி ரொம்ப டைட்டா இருக்குறதால என்னால அவளை பாக்க முடியல, அங்கிள்"

அதை கேட்டு ஆச்சரியத்தில் புருவத்தை உயர்த்தினார் ராஜராஜன்.

"செக்யூரிட்டியா...? யார் அந்த பொண்ணு?"

"குமணனுடைய டாட்டர் பா"

விழிகளை அகல விரித்தார் ராஜராஜன்.

"ஓ... அப்படியா விஷயம்...? விஸ்வநாதனுடைய மகனை குமணன் தடுக்கிறதுல எந்த ஆச்சரியமும் இல்லயே" என்றார்.

"ஆனா, அவ எங்களுடைய ஃபிரண்ட் பா. அவளுக்கு பெரிய ஆக்சிடென்ட் ஆயிடுச்சி"

"அப்படியா? நீங்க அந்த பொண்ணை பார்க்கணுமா?"

ஆமாம் என்று தலையை அசைத்தார்கள் இருவரும். அப்பொழுது அந்த மருத்துவமனையின் டீன், ராஜராஜனை வரவேற்க ஓடிவந்தார்.

"நீங்க எங்க ஹாஸ்பிடலுக்கு வந்தது எங்களுக்கு ரொம்ப பெருமை, சார்" என்றார்.

"நான் என்னுடைய ஃபிரண்டை பார்க்க வந்தேன். அவனுக்கு ஹார்ட் அட்டாக் வந்ததால இங்க அட்மிட் ஆகி இருக்கான்"

நிமலுக்கு ஆச்சரியமாயிருந்தது. தனது நண்பனை பார்க்க தான் இங்கு வந்திருக்கிறாரா ராஜராஜன்? இது தற்செயலாக நடந்ததா?

யாரைப் பற்றி ராஜராஜன் பேசுகிறார் என்று அந்த மருத்துவருக்கு புரியவில்லை.

"சொக்கலிங்கம் சாரை பத்தி தான் அப்பா சொல்றாரு. அவங்க ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ்" என்றான் ராஜா.

"சரிங்க சார்... வாங்க போகலாம்" என்றார் டாக்டர்.

"அதுக்கு முன்னாடி, இங்க அட்மிட் ஆகி இருக்கிற  குமணன் மகளை பார்க்க நினைக்கிறேன்"

உள்ளுக்குள் துள்ளிக் குதித்தான் நிமல்.

"அவங்களும் இந்த ஃப்ளோரில் தான் இருக்காங்க"

தன்னை பின் தொடர நினைத்த தன்னுடைய ஆட்களை கையமர்த்தி விட்டு நடந்தார் ராஜராஜன். நிமலும் ராஜாவும் அவரை பின்தொடர்ந்தர்கள். வர்ஷினி இருந்த பகுதிக்கு அவர்கள் வந்தவுடன், அங்கிருந்த குமணனின் பாதுகாவலர்கள் எச்சரிக்கை அடைந்தார்கள். அங்கு வருவது யார் என்பதை புரிந்து கொள்ள அவர்களுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. யாருக்குத் தான் ராஜராஜனை தெரியாது? தலைமை பாதுகாவலன் அவரை நோக்கி ஓடி வந்து ஒரு பெரிய சல்யூட் அடித்தார்.

"வர்ஷினி எப்படி இருக்கா?" என்றான் ராஜா.

"நல்லா இருக்காங்க, சார்"

"நான் அவளை பார்க்கணும்" என்றார் ராஜராஜன்.

"தாராளமா பாருங்க, சார்"

தலைமை பாதுகாவலர் வர்ஷினியின் அறைக்கு அவர்களை அழைத்துச் சென்றார். நிமலை பார்த்து கண்ணடித்தான் ராஜா. நிமலுக்கு அதிர்ச்சி தாங்கவில்லை. வர்ஷினியை தன்னை சந்திக்க வைப்பதற்காகவே ராஜா அவனுடைய தந்தையை இங்கு அழைத்து வந்திருக்கிறானா? அதனால் தான், *பாதுகாவலர்களே நம்மை வர்ஷினியின் அறைக்கு அழைத்துச் செல்வார்கள்* என்று அவன் கூறினானோ? அவன் கூறிய வார்த்தையை உண்மையாக்கியதற்காக நன்றியுடன் புன்னகைதான் நிமல். அவன் கூறியபடியே, அவர்களை பாதுகாவலரே வர்ஷினி அறைக்கு அழைத்து வந்து விட்டார் அல்லவா...!

தன் கையை மடித்து நெற்றியின் மீது வைத்தபடி படுத்துக் கொண்டிருந்தாள் வர்ஷினி. கதவை திறக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு கண் விழித்தாள். மிக பிரபலமான அரசியல் தலைவரான ராஜராஜன் உள்ளே நுழைவதை பார்த்து அவள் ஆச்சரியம் அடைந்தாள். அவர் ராஜாவின் தந்தை என்பது அவளுக்கு தெரிந்தது தான் என்றாலும், அவர் இங்கு வருவார் என்பதை அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

அவருடன் நிமலை பார்த்தவுடன், அவளுடைய கண்கள் அனிச்சையாய் கலங்கியது.

"எப்படி இருக்கே மா?" என்றார் ராஜராஜன்.

தன்னை சுதாகரித்துக் கொண்டு எழுந்து அமர முயன்றாள் வர்ஷினி. லக்ஷ்மி அவள் அமர உதவினாள்.

"இருக்கட்டும் மா, நீ படுத்துக்கோ" என்றார் ராஜராஜன்.

"பரவாயில்ல, அங்கிள்" என்றாள் மெல்லிய குரலில்.

"குமணனுடைய மக, என் மகனுடைய ஃப்ரெண்ட்ன்னு எனக்கு தெரியாது"

சிரிக்க முயன்றாள் வர்ஷினி.

"உன் கல்யாணம் கார்த்திக்கோட நிச்சயமாகி இருக்குன்னு கேள்விப்பட்டேன்..."

அதிர்ந்து போய் அவரைப் பார்த்தாள் வர்ஷினி. ஏனென்றால், அதைப் பற்றித் தான் அவளுக்கே தெரியாதே...!

அவளுடைய பார்வை சட்டென்று நிமல் பக்கம் திரும்பியது. அவனுடைய பொருள் பொதிந்த பார்வை, அவள் மீதே இருந்தது.

"என்ன சொல்றது? குமணன் முடிவு எடுத்துட்டா மாத்திக்கவே மாட்டாரு... கடவுள் உன்னை சந்தோஷமா வைக்கட்டும்" என்றார் வருத்தத்துடன் ராஜராஜன்.

அதே மருத்துவமனையில், இதய பிரச்சனை என்று பொய் சொல்லி, ராஜாவின் வேண்டுதலுக்கு இணங்கி, சேர்ந்திருக்கும் தன் நண்பனை, உண்மை தெரியாமல் பார்க்க சென்றார் ராஜராஜன்.

வர்ஷினியின் அருகில், கட்டிலின் மீது அமர்ந்தான் நிமல். தலை குனிந்து கொண்டாள் வர்ஷினி.

"வர்ஷு..."

அவள் தலை நிமிராமல் அழுது கொண்டிருந்தாள். அவள் முகத்தை நிமிர்த்தினான் நிமல். அவன் வர்ஷினி தொடுவதை பார்த்து பதட்டமடைந்த லட்சுமி,

"ஏய்... யார் நீ?"  என்றாள்.

அவளைப் பார்த்து நிமல் வீசிய ஒரு கோபப்பார்வை, அவள் வயிற்றை கலக்கியது. அவளை பின்னால் போகச் சொல்லி சைகை செய்தான் ராஜா. பயத்துடன் பின்னோக்கி நகர்ந்தாள் லட்சுமி.

வர்ஷினியின் முகத்தை கையில் ஏந்திக் கொண்டான் நிமல்.

"வர்ஷு, என்னை பாரு..."

அவனைப் பார்க்காமல் கண்களை மூடிக்கொண்டாள் வர்ஷினி. தனக்கு முழு உண்மையும் தெரியும் வரை, தான் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பது என்று தீர்க்கமாய் இருந்தாள் அவள். அதனால், கண்களை இறுக்கமாய் மூடிக் கொண்டாள். அவள் நிமலின் முகத்தை ஒரு முறை பார்த்து விட்டால், அவள் கொண்டிருக்கும் பிடிவாதம் காற்றில் பறந்து விடும். அவனை கட்டிக்கொண்டு அவள் அழத் தொடங்கிவிடலாம்... அவளுக்கும் அப்படி செய்ய வேண்டும் என்று தான் தோன்றியது. ஆனால், எப்படி அவளை கண்ணை கட்டி காட்டில் விட்டது போன்ற நிலையில் நிமல் வைத்திருக்கலாம்? அதை செய்ததற்காக அவன் இதை அனுபவித்துத் தான் ஆகவேண்டும்.

"வர்ஷு, நீ என்னை நம்பலயா? நான் உன்னை காயப்படுத்துவேன்னு நினைக்கிறியா?"

அவனுடைய பலவீனமான குரல் அவள் மனதை பிசைந்தது.

"உன்னை என்னால தூண்டில் மீனா நினைக்க முடியுமா, வர்ஷு...?"

கண்ணை திறக்கவே இல்லை வர்ஷினி. மென்று முழுங்கினான் நிமல்.

"ஓகே ஃபைன்... ஒன்னு மட்டும் ஞாபகத்ததுல வச்சுக்கோ. நான் உனக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கேன். அதை நானும் மறக்கமாட்டேன், நீயும் மறக்காதே. நான் எந்த சத்தியத்தைப் பத்தி பேசுறேன்னு உனக்கு நல்லாவே தெரியும்..."

அவள் நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்து விட்டு ராஜாவுடன் அந்த அறையை விட்டு வெளியேறினான் நிமல்.

லக்ஷ்மியும், பாதுகாவலரும் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்றார்கள். இந்த விஷயம் குமணனுக்கு தெரிய வந்தால் என்னாவது என்று எண்ணிய பொழுது அவர்களுக்கு குலை நடுங்கியது.

உறைந்து போய் நின்றிருந்த லட்சுமியை பார்த்த வர்ஷினி, கண்ணை மூடி அமைதியாய் மீண்டும் படுத்துக் கொண்டாள். அவளின் அந்த செயல் லட்சுமியை ஆச்சரியப்படுத்தியது. வர்ஷினி அவ்வளவு சாதாரணமாக நடந்து கொள்வதைப் பார்த்த பொழுது அவளுக்கு பயமாகவும் இருந்தது.

கண்களை மூடிக் கொண்டிருந்த வர்ஷினியின் இதழ்கள், அழகான புன்னகையுடன் விரிவடைந்தது. அவளை பார்க்க அனைத்து கட்டுப்பாடுகளையும் உடைத்துக் கொண்டு நிமல் இங்கு வந்துவிட்டான். அவளிடம் பேச வேண்டும் என்று துடித்தான். இங்கு வர அவன் எவ்வளவு முயற்சிகளை செய்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வதில் அவ்வளவு ஒன்றும் சிரமம் இருக்கவில்லை வர்ஷினிக்கு. ராஜராஜனை நிமலுடன் பார்த்த பிறகும் அது அவளுக்கு புரியாமலா இருக்கும்? அவன் பதற்றத்துடன் காணப்பட்டான்... அவன் அப்படித் தானே இருப்பான்? ஆனால், அவனுடைய இந்த முயற்சிகள் அவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிளவை சரிகட்ட போதுமானதா? அவர்களுடைய வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்ட பிரச்சனையை சரிசெய்து விடுமா? இல்லவே இல்லை. அவள் அவனிடம் பேச வேண்டும் என்றால், அதற்கு முன் அவன் எல்லாவற்றையும் அவளிடம் கூறியாக வேண்டும். ஒன்றும் புரியாமல் அவளை அவன் இருட்டில் வைத்திருக்கக் கூடாது என்று நினைத்தாள் வர்ஷினி. தேவைப்பட்டால் எல்லாவற்றையும் அவளிடம் கூற காத்திருக்கிறான் நிமல் என்பது தெரியாமல்.

குமணன் இண்டஸ்ட்ரீஸ்

ஆர்கே மருத்துவமனைக்கு ராஜராஜன் வருகை தந்தார் என்பதை கேட்டு திடுக்கிட்டார் குமணன். முக்கியமாக, அவர் வர்ஷினியை சந்தித்தார் என்பது அவருக்கு பேராச்சரியத்தை தந்தது. எப்படி விஸ்வநாதனும் குமணனும் வியாபார எதிரிகளோ, அதே போல, ராஜராஜனும், காமேஸ்வரனும் அரசியலில் எதிரிகள். ராஜராஜன் வர்ஷினியை சந்தித்த விவகாரம் காமேஸ்வரனுக்கு தெரிந்தால், அவர் என்ன நினைப்பார்?

"எதுக்காக ராஜராஜன் வர்ஷினியை சந்திச்சாரு?"

"அவருடைய மகன் ராஜேந்திரனும், நம்ம பாப்பாவும் காலேஜில் ஒண்ணா படிச்சவங்களாம் சார்.  ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருக்கிற அவருடைய ஃபிரண்டை பார்க்க வந்த போது, அப்படியே நம்ம பாப்பாவையும் பார்த்தாங்களாம்" என்றார் அவருடைய மேலாளர்.

தன் புருவத்தை சுருக்கினார் குமணன். அவருக்கு எதுவும் சரியாக படவில்லை.

"செக்யூரிட்டிக்கு கால் பண்ணு"

சரி என்று தலையசைத்துவிட்டு, மருத்துவமனையில் நியமிக்கப்பட்டிருந்த பாதுகாவலருக்கு ஃபோன் செய்தார் மேலாளர்.

"எஸ் சார்"

 மேலாளரிடம் இருந்து ஃபோனை பிடுங்கினார் குமணன்.

"வர்ஷினியைப் பார்க்க யார் வந்தது?"

"ராஜராஜன் வந்தாரு, சார்"

"அவளைப் பார்க்கணும்னே வந்தாரா?"

"அவருடைய ஃபிரண்டை பார்க்க வந்தாரு, சார். அப்படியே நம்ம மேடமையும் பார்த்தாங்க."

"அவர் கூட வேற யார் வந்தது?"

குப்பென்று வியர்த்தது பாதுகாவலருக்கு.

"அவருடைய மகனும், மகனுடைய  ஃபிரண்டும் வந்தாங்க சார்"

"யார் அவன்?"

"தெரியல, சார்"

"சிசி டிவி புடேஜ்ல இருந்து அவனுடைய ஃபோட்டோவை எடுத்து எனக்கு உடனே அனுப்பு"

"சரிங்க, சார்"

அழைப்பைத் துண்டித்தார் குமணன். வர்ஷினியைப் பார்க்க அங்கு வந்து சென்றவனின் புகைப்படத்திற்காக காத்திருந்தார்.

இன்று நமக்குப் புதிதான ஒரு விஷயம் புரிந்தது. எதற்கும் அஞ்சாதவர் என்று பெயரெடுத்த குமணனை, பதைபதைக்க வைக்கவும் ஒரு வல்லவன் வந்துவிட்டான் என்பது. பாதுகாவலர் அனுப்பிய புகைப்படத்தை பார்த்த பொழுது, பல்லை கடித்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டார் குமணன். தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார் அவர். அப்படி என்றால், நிமலன் தனியாள் இல்லை. அவனுக்கு ராஜராஜனின் துணை இருக்கிறது. அவர் கணக்கிட்டது போல நிமலன் சாதாரணமானவன் அல்ல. வர்ஷினியை சந்திக்க ராஜராஜனையே மருத்துவமனைக்கு அழைத்து வர கூடிய அளவிற்கு அவன் பின்புலம் வாய்ந்தவன் என்றால், அவனால் எதுவும் செய்ய முடியும்.

"இன்னைகே வர்ஷினியை டிஸ்சார்ஜ் பண்ண சொல்லி டாக்டர்கிட்ட சொல்லு. அவளுக்கு மெடிக்கல் சப்போர்ட் அவசியம்னா, தினமும் வீட்டுக்கு ஒரு டாக்டரை அனுப்பி அவளை செக் பண்ண சொல்லு. அவ இனிமே ஹாஸ்பிட்டல்ல இருக்கக் கூடாது"

"ஓகே, சார்"

அந்த மேலாளர், மருத்துவருக்கு ஃபோன் செய்து, குமணன் கூறிய அனைத்தையும் ஒப்பித்தார். மருத்துவர் சிறிது தயங்கிய போதிலும், குமணனுக்கு எதிராக பேச அவர் விரும்பவில்லை. செய்ய வேண்டிய அனைத்து மருத்துவமனை சம்பிரதாயங்களையும் அவரே செய்து முடித்தார்.

குமணன் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். இப்போதிலிருந்து அவர் வர்ஷினியை அவருடைய முழு கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். அவருடைய வீட்டினுள் நுழையும் தைரியம், யாருக்கும் இருக்காது... முக்கியமாக நிமலுக்கு. அந்த தவறை செய்யும் அளவிற்கு நிமலன் முட்டாள் அல்ல என்பதும் அவருக்குத் தெரியும்.

உண்மை தான். அவர் வீட்டினுள் நுழையும் அளவிற்கு அவன் முட்டாள் அல்ல. அதற்காக, அவன் எங்குமே நுழைய துணிய மாட்டான் என்று கூறிவிட முடியாது அல்லவா? நிமலன் போட்டு வைத்திருக்கும் திட்டம் என்ன என்பது குமணனுக்கு எப்படி தெரியும்? வர்ஷினிக்காக அவன் தன் உயிரையும் பணயம் வைக்கத் துணிவான் என்பது அவருக்குத் தெரியாதே...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro