Part 3
பாகம் 3
குமணன் இல்லம்
உடைந்து கிடந்த பூஜாடியின் பக்கத்தில் நடுங்கியபடி நின்றிருந்தாள் வர்ஷினி. எப்பொழுது வேண்டுமானாலும் அவளுக்கு அடி விழலாம். அவள் எதிர்பார்த்தபடியே அங்கு கோபமாய் வந்தார் கல்பனா. அந்த பூஜாடியை யார் உடைத்தது என்ற கேள்வியை கூட அவர் எழுப்பவில்லை. வர்ஷினியை அடிக்க தன் கையை ஓங்கினார்.
அப்போது...
*மாம்* என்ற வார்த்தையை கேட்டு அவர் அப்படியே நின்றார். வர்ஷினியின் தம்பி ரிஷியின் குரல் தான் அது.
"சாரி, மாம்... கை தவறி அந்த ஜாடியை நான் உடச்சிட்டேன்" என்றான்
கல்பனாவின் முகம் உடனடியாக சகஜமாய் மாறியது.
"இதை உடச்சது நீயா கண்ணா? பரவாயில்ல விடு... "
அவர் பார்வை வர்ஷினியின் பக்கம் திரும்பியது.
"எதுக்கு மரம் மாதிரி நிக்கிற? அவன் கையில, கால்ல குத்துறதுக்கு முன்னாடி அதை கிளீன் பண்ணு"
"சரிமா"
அதை சுத்தப்படுத்த, முழங்காலிட்டபடி தரையில் அமர்ந்தாள் வர்ஷினி. ரிஷியின் தலையைச் செல்லமாய் வருடிவிட்டு, அங்கிருந்து சென்றார் கல்பனா.
"தேங்க்யூ, ரிஷி"
"எனக்கு ஏன் கா தேங்க்ஸ் சொல்ற?"
"அம்மாகிட்டயிருந்து நீ என்னை காப்பாத்திட்ட"
"அதை நான் எப்பவுமே செய்வேன், கா"
வர்ஷினியின் கண்கள் கலங்கின. இந்த சின்னப் பையன் மட்டும் இல்லாவிட்டால் அவள் எப்பொழுதோ இறந்து போயிருப்பாள். இந்த இரக்கமற்ற மனிதர்கள், அவளை எப்பொழுதோ கொன்று புதைத்திருப்பார்கள்.
"நீ எழுந்திரு கா" அவள் தோளைப் பிடித்துத் தூக்கி விட்டான்.
"லட்சுமி அக்கா..." என்று வேலைக்காரப் பெண்ணை கூப்பிட்டான்.
லட்சுமி உடனடியாக அங்கு ஓடி வந்தாள்.
"இதை கிளீன் பண்ணுங்க" என்றான் ரிஷி.
வர்ஷினியின் கரத்தைப் பற்றி, அவளுடைய அறைக்கு அவளை அழைத்துச் சென்று, அவளை கட்டிலின் மேல் அமர வைத்தான்.
"நான் உன்னை என்ன கேட்டேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?" என்றாள் வர்ஷினி.
"உன்னை கோவிலுக்கு கூட்டிட்டு போகணும்... அதானே?"
ஆமாம் என்று தலையசைத்தாள் வர்ஷினி.
"நான் உன்னை கோவிலுக்கு கூட்டிகிட்டுப் போறேன். ஆனா, என்னை உள்ளே வரச்சொல்லி நீ கம்பல் பண்ணக் கூடாது. டீலா?"
"ஆனா..."
"அக்கா, உன்னை சினிமாவுக்கு கூட்டிட்டு போக சொல்லு, நான் சந்தோஷமா கூட்டிட்டு போறேன். ஆனா, எப்ப பாத்தாலும் ஏன் கா கோயிலுக்கு போகணும்னு கேக்குற? அது ரொம்ப போரிங் தெரியுமா...?"
"சரி, இந்த ஒரு தடவை என்னை கோயிலுக்குக் கூட்டிகிட்டு போ. சனிக்கிழமை போகலாமா?"
"போகலாம். எனக்கும் அன்னிக்கு ஸ்கூல் லீவு தான்"
அப்பொழுது ரிஷியின் பார்வை, அவள் நெற்றியில் இருந்த காயத்தின் மீது பட்டது.
"இன்னும் இந்த காயம் ஆறலையா?"
"நேத்து இருந்ததைவிட இன்னைக்குக் கொஞ்சம் பரவாயில்ல"
"அப்படித் தான் தெரியுது. உன்னை அடிச்ச ஆளை நான் பாக்கணும். நல்லாத் திட்டணும்"
"அவர் வேணும்னு அடிக்கல"
"தெரியும் கா, ஆனாலும்..."
"நிமல் கெட்டவர் இல்ல. என்னை அடிச்சதுக்காக சாரி கேட்டு, என்னுடைய காயத்துக்கு ரெண்டு தடவை மருந்தும் போட்டு விட்டார்."
"அப்படியா...? அப்படின்னா சரி. நான் அவரை மன்னிச்சிட்டேன்." என்றான் பெரிய மனிதன் தோரணையில்.
அதைக்கேட்டு புன்னகைத்தாள் வர்ஷினி.
"என் கூட வா. நான் உனக்கு பேண்ட்-எய்ட் போட்டு விடுறேன்" என்று கூறிவிட்டு அவள் கையைப் பிடித்து வரவேற்பறைக்கு இழுத்து வந்தான் ரிஷி.
அவளை சோபாவில் அமர வைத்து, அவள் காயத்துக்கு மருந்திட்டான். அதைச் செய்யும் பொழுது, கல்பனா அவர்களைப் பார்க்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான் ரிஷி. அப்போது தான் அவர் மேற்கொண்டு வர்ஷினியை திட்ட மாட்டார்.
இனியவர்களின் இருப்பிடம்
நிமலுக்கு இருப்புக்கொள்ளவில்லை. ராஜாவின் வார்த்தைகளில் தவறு ஏதுமில்லை. உண்மையில் சொல்லப் போனால், அது சரி தான். தூக்கம் பிடிக்காமல் கட்டிலின் மீது புரண்டுக் கொண்டிருந்தான்.
*வர்ஷினியை பார்க்கும் போது பாவமாக இல்லை...? ஆனால், அவள் பாவமாக இருந்தால் இவனுக்கு என்ன வந்தது? இவன் என்ன பாவப்பட்டவர்களின் பாதுகாவலனா? அலைபாயும் உன் மனதை அடக்கிவிட்டு, மரியாதையாய் தூங்கு* என்று தனக்குத் தானே ஆணையிட்டு, தலையணை அணைத்துக் கொண்டுப் படுத்துக் கொண்டான் நிமல்.
மறுநாள்
வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த நிமல், தன் வகுப்பறையைவிட்டு வெளியே வரவே இல்லை. ஆனால், அது உண்மையிலேயே அவனுக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவனுடைய உடல், வகுப்பறையில் இருந்ததே தவிர, அவனுடைய மனம், வேறு எங்கோ வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
அவன் எதை நிரூபிக்க முயல்கிறான் என்று ராஜாவுக்கும் பிரகாஷுக்கும் புரிந்தது. அதே நேரம், அவனுடைய தவிப்பும் அவர்களுக்குப் புரிந்தது.
"பிரகாஷ், எனக்கு தலைவலிக்குது. வாயேன் கேன்டீன் போயி ஒரு காஃபி குடிச்சிட்டு வரலாம்... " என்றான் ராஜா.
"போகலாம். நீயும் வரியா நிமல்?" என்றான் பிரகாஷ்.
"நான் வரல. நீங்க போங்க" என்றான் நிமல்.
அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்றார்கள். முதல் மாடியில் இருந்து பார்த்து, அவர்கள் இருவரும் கேன்டினுக்குள் நுழைவதை உறுதிப் படுத்திக் கொண்டான் நிமல். பிறகு அங்கிருந்து ஓட்டமாய் ஓடினான் வர்ஷினியின் வகுப்பறையை நோக்கி...!
நிமலை தங்கள் வகுப்பறையில் பார்த்தவுடன், வர்ஷினியின் வகுப்பு பெண்கள் குதுகலமானார்கள். ஏதோ படித்துக் கொண்டிருந்த வர்ஷினி, அவனைப் பார்த்துவிட்டு, தன் கையில் இருந்த புத்தகத்தின் பால் குனிந்து கொண்டாள். அந்த வகுப்பறை முழுவதும் தன் கண்களை இங்கும் அங்கும் ஓடவிட்டான் நிமல், யாரையோ தேடுவது போல. அவனுடன் கிரிக்கெட் விளையாடும், அந்த வகுப்பை சேர்ந்த அந்த மாணவனும், சுதாவும் அங்கு இல்லை என்பதை தெரிந்து கொண்டான். நேராக வர்ஷினியை நோக்கி சென்றான்.
"கைலாஷ் எங்க போனான்னு உனக்கு தெரியுமா?" என்றான்.
தெரியாது என்று வர்ஷினி தலையசைக்க, மற்றொரு பெண் அவனுக்கு பதில் கூறினாள்
"அவன் இன்னிக்கு ஆப்சென்ட்" என்று.
"அப்படியா?" அவன் கேட்க, ஆமாம் என்று அந்த பெண் மறுபடியும் தலை அசைத்தாள்.
அவன் கவனம், மறுபடியும் வர்ஷினியின் மீது திரும்பியது.
"இப்போ நீ எப்படி இருக்க?" என்று வழக்கமாய் கேட்கும் கேள்வியைக் கேட்டான்.
அவளும் வழக்கம் போல, நன்றாக இருக்கிறேன் என்று தலையசைத்தாள்.
"என்னுடைய பேச்சை நீ கேக்க ஆரம்பிச்சிட்ட போல இருக்கு...? இன்னைக்கு உன்னோட காயத்துக்கு நீ பேண்ட்-எய்ட் போட்டிருக்கியே... நைஸ் டு சீ யூ அகைன். டேக் கேர். பை"
அங்கிருந்து நேராக கிரிக்கெட் கோசை பார்க்கச் சென்றான்.
"கைலாஷ் இன்னிக்கி ஆப்சென்டாம், சார்" என்றான்.
"அதனால?" என்றார் கோச் குழப்பத்துடன்.
"நீங்க தானே சார், அவனை இங்க கூட்டிட்டு வர சொன்னிங்க?"
"ஆமாம்ல..? நான் மறந்துட்டேன். நாளைக்கு அவனை என்னை வந்து பார்க்கச் சொல்லு" என்றார்.
"ஓகே சார்"
அவர்களுடைய கிரிக்கெட் கோச்சுக்கு சிறிது ஞாபகமறதி. சாதாரண விஷயங்களை எளிதில் மறந்துவிடுவார். அவரை *ஆமாம்*, *இல்லை* என்று எளிதாக சொல்ல வைத்து விட முடியும். சிறிது புத்திசாலித்தனம் இருந்தால் போதுமானது. ராஜா, பிரகாஷின், கண்களில் படும்வரை, வேண்டுமென்றே கிரிக்கெட் கோச்சின் அறையின் அருகில் நின்று கொண்டிருந்தான் நிமல். அப்பொழுது தான், கிரிக்கெட் கோச் தான் கைலாஷை அழைத்து வருவதற்காக அவனை வர்ஷினியின் வகுப்பிற்கு அனுப்பினார் என்று அவன் கூறும் போது அவர்கள் நம்புவார்கள்.
அவன் நினைத்த படியே, அவர்கள் அவன் கூறியதை நம்பினார்கள்... திருத்தம்... நம்பியது போல் பாசாங்கு செய்தார்கள்.
நிமலுக்கு ஒருவாறு புரிந்தது, அவன் ஏன் வர்ஷினியை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று. அவனுக்கு அவளைப் பிடித்திருக்கிறது. *பார்த்தவுடன் காதல்* என்பதை அவன் எப்போதும் நம்பியதில்லை. சொல்லப் போனால், அதைப் பற்றி பேசியவர்களை அவன் கிண்டலடித்துக் கொன்றிருக்கிறான். ஆனால் இப்பொழுது, அவன் நேரடியாக பாதிக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. முதலில், அவன் அவள் மீது கொண்டிருப்பது ஒரு பரிதாப உணர்வு என்று தான் எண்ணியிருந்தான். ஆனால் அப்படி இல்லை. ராஜா எப்போது அவளைப் பற்றி நினைக்காதே என்று கூறினானோ, அப்போதிலிருந்து அவன் மனம் தவியாய் தவிக்கிறது. முதலில் இருந்ததைவிட இப்போது அதிகமாக அவளைப் பற்றிய எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கிறது. அது தான் அவனுடைய உயிர் நண்பர்களிடம் கூட பொய்யுரைக்க வைத்தது. அவர்களிடம் அவன் இதை பற்றி பேச வேண்டும் என்று நினைத்தான்.
மறுநாள்- சனிக்கிழமை
வாக்களித்தபடியே வர்ஷினியை கோவிலுக்கு அழைத்துச் சென்றான் ரிஷி. அவன் காரில் அமர்ந்து கொண்டு மொபைலில் கேம் விளையாட ஆரம்பித்துவிட்டான். வர்ஷினி கோவிலுக்குள் சென்றாள். தன் மனதில் இருப்பதை கொட்டிவிட, அவளுக்கென்று இருப்பது அந்த இறைவி மட்டும் தான். வழக்கம் போல, தனக்கே தனக்கென்று யாரையாவது கொடுக்கச் சொல்லி, அந்த அம்மனிடம் கண்ணை மூடி வேண்டிக் கொண்டாள்.
அவள் கண்ணை திறந்த பொழுது, ஒரு அருமையான காட்சி அவள் கண்முன் கண்டாள். அது வேறொன்றும் இல்லை, அவளை சமீபத்தில் வெகுவாய் கவர்ந்த நிமலுக்கு, நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி பிரசாதத்தை ஊட்டிவிட்டார். அந்தப் பெண்மணி அவனுடைய அம்மாவாக இருக்க வேண்டும். அம்மாவுடைய அன்பை என்றுமே அடைந்திராத அவளின் உதடுகளில், ஒரு ஏக்க புன்னகை மலர்ந்தது. நிமலுக்கும் அவனுடைய அம்மாவிற்கும் இடையில் ஒரு நல்ல புரிதல் இருந்தது அவளுக்கு புரிந்தது.
அவர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவளுடைய காதுகளில் விழாவிட்டாலும், அவர்கள் ஏதோ ஸ்வாரசியமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுடைய முக பாவங்களில் இருந்து அவளுக்கு புரிந்தது. அங்கிருந்த ஒரு தூணின் பின்னால் மறைந்து நின்று கொண்டு, அவர்களை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சிறிய புன்னகையுடன். அவர்கள் அவள் இருக்கும் திசையை நோக்கி நடக்கத் தொடங்கிய பொழுது, அந்த தூணின் பின்னால் மறைந்து கொண்டாள். மறுபடியும் அந்த தூணின் பின்னாலிருந்து மெல்ல அவள் அந்த திசையை நோக்கி பார்க்க, அவர்கள் அங்கு இல்லை.
அப்பொழுது,
"நான் இங்க இருக்கேன்" என்ற நிமலின் குரலை கேட்டு, திடுக்கிட்டு திரும்பினாள். அவன் ஒரு குறும்பு புன்னகையுடன் நின்றிருந்தான்.
"எதுக்காக எங்களைப் பார்த்துக் ஒளிஞ்சிகிட்ட?"
"நான் ஒன்னும் உங்களைப் பார்க்கலயே... நான் ஏன் உங்கள பாத்து ஒளியணும்?" என்று தடுமாறினாள்.
"நீ இந்த தூணுக்கு பின்னாலயிருந்து, எங்களை எட்டி எட்டி பார்த்ததை தான் நான் பார்த்தேனே..."
"இல்ல... நான் உங்களை பார்க்கல..."
அப்போது நிமலுடன் இருந்த அந்தப் பெண்மணி அங்கு வந்தார்.
"நிம்மு... இது யாரு?" என்றார்
"கேர்ள் ஃபிரண்ட்" என்றான் நிமல்.
வர்ஷினியின் கண்கள் விரிவடைந்தது. அந்த பெண்மணியோ முகத்தை சுருக்கினார்.
"கேர்ள் ஃபிரண்டா?"
"எனக்கு ஃபிரண்டா இருக்கிற ஒரே ஒரு கேர்ள்... இவ என்னோட ஜூனியர்" என்று வர்ஷினி பார்த்து புன்னகைத்தான்.
"ஒ... நான் பார்வதி. உங்க சீனியரோட அம்மா" என்று கூறிவிட்டு, தன் கையை அவளை நோக்கி கைகுலுக்க நீட்டினார். ஆனால் அதற்கு முன், தன் கைகளை கூப்பி
"வணக்கம், ஆன்ட்டி" என்றாள் வர்ஷினி.
"வணக்கமா...? நிம்மு... உன்னுடைய ஜூனியர், உன்னை மாதிரி இல்ல போல இருக்கே..." என்றார் நிமலை பார்த்தபடி.
"என்னை மாதிரி யாரும் இருக்க முடியாது, மா..." என்றான் தன் காலரை உயர்த்திவிட்டு.
"அவ நல்ல பொண்ணா இருக்கான்னு சொல்ல வரேன்..." எனறார் சிரிப்பை அடக்கியபடி.
நிமல் அவரைப் பார்த்து முறைக்க, வர்ஷினி களுக்கென்று சிரித்தாள். அவளுடன் ஹை-ஃபை தட்ட தன் கையை வர்ஷினியை நோக்கி உயர்த்தினார் பார்வதி. அதைப் புரிந்து கொள்ளாமல், தன் முகத்தை பின்னோக்கி இழுத்தாள் வர்ஷினி.
"ஹேய் கூல்... ஹை-ஃபை தட்ட தான் கையை தூக்கினேன்..." என்றார்.
"உங்களை மாதிரி ஒரு அம்மா, என்னை மாதிரி ஒரு பொண்ணோட ஹை-ஃபை தட்டுவாங்கன்னு தெரியாது" என்றாள்.
பார்வதியும் நிமலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள், அவள் கூறிய வார்த்தைகள், அவர்கள் இதயத்தை ஏதோ செய்ததால். அந்த சூழ்நிலையை லேசாக்க நினைத்தார் பர்வதி.
"இங்க பாருமா, இந்த பையன் காலேஜில் உன்கிட்ட ஏதாவது வம்பு பண்ணா, நீ எனக்கு ஃபோன் பண்ணி சொல்லு. நான் அவனைக் கவனிச்சிக்கிறேன். இல்லன்னா, உன்னுடைய ஃபோன் நம்பரை எனக்கு கொடு" என்றார்.
"என்கிட்ட ஃபோன் இல்ல, ஆன்ட்டி"
"என்னது...? உன்கிட்ட ஃபோன் இல்லயா?" என்றார் அதிர்ச்சியாக.
இல்லை என்று தலை அசைத்தாள். அவள் ஏதோ வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்த ஏலியனை போல, அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் நிமல். இந்தக் காலத்தில், ஃபோன் இல்லாமல் ஒரு பெண்ணா?
"நம்பவே முடியலயே. சரி உன்கிட்ட ஃபோன் இல்லன்னா பரவாயில்ல. என்னுடைய நம்பரை எழுதிக்கோ. உங்க வீட்ல லேண்ட்லைன் இருந்தா, எனக்கு நீ அது மூலமா ஃபோன் பண்ணு. நிம்மு எனக்கு ஒரு பேப்பர் கொடு."
"தேவையில்ல, ஆன்ட்டி" என்று அவள் கூற, அம்மாவும், பிள்ளையும் ஏமாற்றமடைந்தார்கள்.
"நீங்க உங்க நம்பரை சொன்னா, நான் மனப்பாடம் பண்ணிக்குவேன்." என்றாள்.
அதைக் கேட்டு இருவர் முகத்திலும் புன்னகை மலர, பார்வதி அவருடைய கைபேசி எண்ணை கூறினார்.
"நான் கிளம்புறேன், ஆன்ட்டி..."
"உன் பெயரைச் சொல்ல மாட்டியா?"
"நீங்க அவளை *என்ஜிஎஃப்* ன்னு கூப்பிடலாம்" என்றான் நிமல்.
"என்ஜிஎஃப்?"
"நிமலோட கேர்ள் ஃப்ரெண்ட்" என்றான் வேண்டுமென்றே.
"என் பேரு வர்ஷினி, ஆன்ட்டி" என்றாள் சங்கடத்துடன்.
"நல்ல பேரு"
அப்பொழுது அவர்கள் *அக்கா* என்று யாரோ அழைப்பதை கேட்டார்கள். அது ரிஷி தான். அவன் அவர்களை நோக்கி வந்தான்.
"எவ்வளவு நேரம் கா சாமி கும்மிடுவ?" என்று கேட்டுவிட்டு, பார்வதியையும் நிமலையும் கேள்விக் குறியுடன் பார்த்தான்.
"இவர் என்னோட சீனியர். இவங்க அவருடைய அம்மா" என்று அவர்களை அறிமுகம் செய்து வைத்தாள்.
நிமலை நோக்கி தன் கையை நீட்டி,
"ஐ அம், ரிஷி" என்றான்.
அவன் கையைப் பற்றி,
"ஐ அம், நிமல்" என்றான்.
"நீங்க தான் எங்க அக்காவோட நெத்தியை கிரிக்கெட் ஆடி கிழிச்சதா?" என்றான் அதிர்ச்சியாக.
அவள் நெற்றியில் இருந்த ஆறாத காயத்தை அப்போது தான் கவனித்தார் பார்வதி. வர்ஷினியோ தர்மசங்கடத்தில் இருந்தாள். அவள் மெல்ல நிமலை பார்க்க,
*அவனுக்கு என்னைத் தெரியுமா?* என்பது போல தன் புருவத்தை உயர்த்தினான் நிமல்.
அவர்கள் எதுவும் கூறுவதற்கு முன்,
"அந்த பொண்ணு நீ தானா? உனக்கு காயம்பட்டதுக்காக அவன் ரொம்ப வருத்தப்பட்டான். உன்கிட்ட சாரி சொல்லணும்னு சொன்னான்." என்றார் பார்வதி.
"எனக்கு தெரியும். அக்கா சொன்னாங்க, அவர் சாரி சொல்லி, அவங்க காயத்துக்கு இரண்டு தடவை மருந்து போட்டுவிட்டாராம்."
தன் மகனை அதிசயமாய் பார்த்த பார்வதி,
"அப்படியா விஷயம்?" என்றார் பொருள் பொதிந்த பார்வையோடு.
"நேரமாச்சி நாங்க கிளம்புறோம், ஆன்ட்டி" என்று ரிஷியை தன்னுடன் இழுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினாள் வர்ஷினி.
நிமலை நோக்கி கையசைத்துவிட்டு, அவளை பின்தொடர்ந்தான் ரிஷி. தன் கைகளைக் கட்டிக்கொண்டு, கிண்டலாய் நிமலைப் பார்த்துப் புன்னகைத்தார் பார்வதி.
"என்னால தான் அவளுக்கு காயம்பட்டுச்சி. அதனால தான் மருந்து போட்டு விட்டேன்" என்றான்.
"நான் உன்னை ஒன்னுமே கேட்கலயே..." என்றார் கிண்டலாக.
"நீங்க ராஜா, பிரகாஷ் கூட சேர்ந்துக்கிட்டு என்னை கிண்டல் பண்ண கூடாதுன்னு தான் நான் இதை உங்ககிட்ட சொல்றேன்"
"நான் அதை செய்ய மாட்டேன்னு நினைக்கிறியா?" என்று அவன் காலை வாரினார்.
"அம்மா, ப்ளீஸ்..."
"எதுக்கு இந்த ப்ளீஸ்?"
"உங்களை நிறுத்த தான்"
"நான் ஆரம்பிக்கிறதுக்கோன்னு நெனச்சேன்" என்று சிரித்தார்.
தன் கண்களை சுழற்றிவிட்டு, அங்கிருந்து நடக்கத் தொடங்கினான் நிமல். அவனை வம்பிழுத்தபடி அவனை பின்தொடர்ந்தார் பார்வதி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro