Part 29
பாகம் 29
அடுத்த மூன்று மாதங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து வர்ஷினிக்கு. ஆனால் நிமலுக்கோ, ராக்கெட் வேகத்தில் பறந்து சென்றது. வி பி கம்பெனியில் மிகவும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தான் நிமல். இருந்த போதிலும், வர்ஷினியை சந்திக்கும் சந்தர்ப்பம் எதையும் அவன் தவற விடவில்லை. அம்மன் கோவில் தான் அவர்கள் எப்போதும் சந்திக்கும் இடம். அந்த ஒரு இடத்திற்கு தான் அவள் பெற்றோரின் அனுமதியோடு அவளால் வர முடிந்தது.
ராஜேந்திரன் என்கின்ற ராஜாவும் தனது கட்சியில் மிகவும் பொறுப்பாக உழைத்துக் கொண்டிருந்தான். அவனுடைய அப்பா ராஜராஜன், அவனை அவர்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவராக நியமித்திருந்தார். அவன் முழுநேர அரசியல்வாதியாக மாறி விட்ட போதிலும், நிமலுக்கு மட்டும் எப்பொழுதுமே உயிர் தோழனாக தான் இருந்தான்.
வி பி கம்பெனி
நிமலை பார்க்க, அவனுடைய கம்பெனிக்கு திடீர் வருகை தந்தான் ராஜா. நேரே நிமலின் அறைக்குச் சென்று அவனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தான் ராஜா.
"வாவ்..." என்று கத்தியபடி அவனை கட்டியணைத்துக் கொண்டான் நிமல்.
"எப்படி மச்சான் இருக்க?" என்றான் ராஜா.
"நல்லா இருக்கேன், டா"
"உன்னுடைய இதயராணி எப்படி இருக்கா?"
"நான் உயிரோட இருக்கிற வரைக்கும், அவன் நல்லா தான் இருப்பா" என்றான் புன்னகையுடன்.
ராஜாவின் முகபாவம் மாறியது.
"குமணன் பத்தின உண்மையை நீ எப்போ வர்ஷினிகிட்ட சொல்ல போற?"
"நான் அதை அவகிட்ட எப்பவுமே சொல்றதா இல்ல"
"ஆனா ஏன்?"
"அவ ரொம்ப உடைஞ்சு போயிடுவா. அவங்க அப்பா ஒரு கொலைகாரங்கிறத அவளால தாங்கிக்கவே முடியாது"
"நீ அவரை பழி தீர்க்கும் போது, அவ அதை பத்தி தெரிஞ்சுக்க மாட்டாளா?"
"பழி வாங்கணும்னு நினைக்கிறது அவசியமா?" என்று அவன் கேட்க, பிரமித்துப் போனான் ராஜா.
"இது என்ன கேள்வி?" என்றான் நம்ப முடியாமல்.
"எனக்கு என்ன குறை? என்னுடைய அம்மா அப்பாவை இழந்ததுக்கு அப்புறம் கூட, எனக்கு வாழ்க்கையில எல்லா சந்தோஷமும் கிடைச்சிருக்கு. என்னைப் பெத்த அம்மா அப்பாவைப் போலவே, எனக்காக எதையும் செய்யவும், அன்பைப் பொழியவும் இன்னோரு அம்மாவும் அப்பாவும் இருக்காங்க. ஃபேமிலி, ஃபிரண்ட்ஸ், ஸ்டேட்டஸ், எல்லாம் கிடைச்சிருக்கு. சாதாரண ஒருத்தனால அதை எல்லாம் கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாது. அவ்வளவு வசதியா இருக்கேன். அப்படி இருக்கும் போது, நடந்து முடிஞ்ச ஒரு விஷயத்துக்காக, பழி வாங்கணும்னு நினைச்சு அவளுடைய சந்தோஷத்தை கெடுக்கணுமா? இப்போ என் மனசுல இருக்கிறதெல்லாம் வர்ஷினியை சந்தோஷமா பார்த்துக்கணும்ங்குறது தான். வேற எதுவுமே இல்ல... "
என்ன கூறுவது என்றே புரியாமல் அவனை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டு, பெயரிட முடியாத முகபாவத்துடன் நின்றான் ராஜா. அவனுக்கு தெரியும், குமணன் மீது நிமலுக்கு இருந்த வஞ்சம் எப்படிப்பட்டது என்று. அது அவன் மனதில் எரிமலைக் குழம்பை போல் கொதித்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது, வர்ஷினிகாக அந்த பழி உணர்வையே தியாகம் செய்ய தயாராக இருக்கிறான் நிமல். இதற்கு பெயர் தான் காதல் என்பதோ? காதலித்தவளின் சந்தோஷத்திற்காக இப்படி எல்லாம் கூட யாராவது செய்வார்களா?
"நீ என்ன நினைக்கிறேன்னு எனக்கு தெரியும். நான் குமணனை மன்னிக்கல. சொல்லப் போனா, எனக்கு அவர் மேல இருந்த கோபம் பத்து பங்கு அதிகமாகியிருக்கு. பெத்த பொண்ணுன்னு கூட பாக்காம வர்ஷினிகிட்ட எப்படி அவரால கடுமையா நடந்துக்க முடிஞ்சது? அவர் பெத்த பொண்ணுக்கே கருணை காட்டாதப்போ, எங்க அப்பா அம்மாவை கொன்னதுகாக அவர் மேல கோவப்படுறதுல என்ன அர்த்தம் இருக்கு? எங்க அம்மா அப்பாவை இழந்த பிறகும் எனக்கு எல்லாமே கிடைச்சிருக்கு. ஆனா, வர்ஷினிக்கு அப்படி இல்ல. எல்லாம் இருந்தும், எதுவுமே இல்லாதவ அவ."
"ஆனா அவளுக்கு நீ இருக்க"
"அதனால தான் அவளை நான் கஷ்டப்படுத்த வேண்டாம்னு நினைக்கிறேன். வர்ஷினின்னு வரும் போது குமணனை பழிவாங்குறதெல்லாம் எனக்கு முக்கியமாவே தெரியல. அவங்க அம்மாவை நம்ம அடிச்சப்போ அவ எப்படி அழுதா தெரியுமா...?" என்றான் உணர்ச்சிப் பெருக்குடன்.
அவனை ஆரத் தழுவிக் கொண்டான் ராஜா.
"உன்னை நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு, மச்சான். நீ பழி உணர்ச்சியால உன் வாழ்க்கையை கெடுத்துக்குவியோன்னு நான் பயந்தேன். நீ பிரச்சனையை ரொம்ப சாதாரணமா முடிச்சிட்டே. உன்ன மாதிரி ஒருத்தன் கிடைக்க, வர்ஷினி ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்"
"இல்ல ராஜா... அவ என் மேல வச்சிருக்கிற காதல் தெய்வீகமானது. அதை என்னால நிச்சயமா ஈடு செய்யவே முடியாது. அவ யாருக்குமே கிடைக்க முடியாத ஒரு பொக்கிஷம்... அவளுக்காக நான் எது செஞ்சாலும் அது தகும்"
ஆமாம் என்று தலையசைத்தான் ராஜா.
"அது சரி... நீ என்ன திடீர்னு இந்த பக்கம்....?"
"காரணம் இல்லாம நான் உன்னை பார்க்க வர மாட்டேனா?"
"வருவ... ஆனா, இளைஞரணி தலைவருக்கு அது அவ்வளவு ஈஸி இல்லயே..." என்று கூற, அதைக் கேட்டு கலகலவென சிரித்தான் ராஜா.
"உண்மை தான். நான் இங்க உன்னை அலர்ட் பண்ண வந்தேன்"
"என்ன விஷயம்?"
"உன்னுடைய கல்யாணம் அடுத்த மாசம் இருக்கும்னு நினைகிறேன்" என்று அவன் கூற,
"வர்ஷினிக்கு கல்யாண ஏற்பாடு பண்றாரா குமணன்?" என்றான் சிரித்தபடி.
"அதே தான்... ரெடியாயிரு"
"எப்பவுமே ரெடி தான்"
"வர்ஷினியையும் அலர்ட் பண்ணு. அவ பயந்துட போறா"
"ஆமாம். இதை பத்தி நான் அவகிட்ட பேசணும். இல்லன்னா, பயத்துல அவளுக்கு ஃபிட்ஸ் வந்தாலும் வரலாம்"
"அவளை பத்திரமா பாத்துக்கோ"
"நிச்சயமா... எங்க மேரேஜை பிளான் பண்ணிட்டு, உனக்கு சொல்றேன்"
"வெயிட்டிங்..."
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு நிமலிடமிருந்து விடை பெற்று சென்றான் ராஜா.
குமணன் இல்லம்
கல்பனாவிற்கு வருத்தம் தாங்கவில்லை. பங்குச்சந்தையில் நஷ்டத்திற்கு மேல் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருந்தார் அவர். குமணனிடம் கையெழுத்து வாங்கிய முத்திரை தாள்கள் எங்கே போயின என்று அவருக்கு ஒன்றுமே பிடிபடவில்லை. அவருடைய சிந்தனை துண்டிக்கப்பட்டது, சுதா உள்ளே நுழைந்ததை பார்த்த பொழுது.
"ஹலோ, ஆன்ட்டி"
"எப்படி இருக்க?"
"நல்லா இருக்கேன், ஆன்ட்டி"
"என்ன விஷயம்?"
"நான் நாளைக்கு சிங்கப்பூருக்கு போறேன், ஆன்ட்டி. போறதுக்கு முன்னாடி, வர்ஷினியை பாக்கலாம்னு வந்தேன்"
"அவளுடைய ரூம்ல இருக்கா"
சரி என்று தலையசைத்துவிட்டு முதல் மாடியை நோக்கி விரைந்தாள் சுதா. கட்டிலின் மீது அமர்ந்து எதையோ தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தாள் வர்ஷினி.
"வர்ஷினி"
சுதாவை பார்த்தவுடன் சந்தோஷம் தாங்கவில்லை வர்ஷினிக்கு. ஓடிச் சென்று அவளை அணைத்துக் கொண்டாள்.
"மை காட்... வாட் எ சர்ப்ரைஸ்...! உன்னை பார்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்"
"எனக்கும் தான். உன்கிட்ட ஒரு ஹேப்பி நியூஸ் சொல்லத் தான் வந்தேன். நீ தான் இந்த தடவையும் நம்ம காலேஜ் டாப்பர்..."
"நிஜமாவா...?" என்றாள் குதூகலமாக.
"ஆமாம்"
சட்டென்று வர்ஷினியின் முகம் மாறியது.
"அதனால எதுவும் மாறிட போறது இல்ல... அத விடு... நீ என்ன விஷயமா வந்த அதை சொல்லு..."
"நான் நாளைக்கு சிங்கப்பூர் போறேன்"
"உன்னுடைய கஸின் வீட்டுக்கு போறியா?"
"ஆமாம்"
"என்ன திடீர்னு?"
"பெரியம்மாவுக்கு ஆக்சிடெண்ட் ஆச்சில்ல... அவங்க கோமா ஸ்டேஜ்ல இருந்து வெளிய வந்துட்டாங்க. அவங்க சீக்கிரமாவே என் கல்யாணத்தை நடத்த நினைக்கிறாங்க. ஏன்னா, அவங்க தான் ரொம்ப நாள் உயிரோடு இருக்க மாட்டோம்ன்னு நினைக்கிறாங்க. ஆனா, அவங்க வீக்கா இருக்கிறதால, டாக்டர் ட்ராவல் பண்ண கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அதனால, இன்னும் ஒன்னு இல்ல ரெண்டு மாசத்துல எப்படியும் எனக்கு கல்யாணம் முடிஞ்சுடும். என் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு தடவை நான் அங்க வரணும்னு என்னுடைய கஸின் நச்சரிச்சிக்கிட்டே இருக்கா. அதனால நான் அங்க போகலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்"
"வாவ், அப்படின்னா நீ என் மாமியார் வீட்டுக்கு மருமகளாக போறியா?" என்று சிரித்தாள்.
"ஆமாம்.. எங்க அம்மா, பிரகாஷ் அம்மாவோட பேசினாங்க. அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம்"
"அப்படின்னா, நான் கல்யாணமாகி அங்க வரும் போது, நீ என்னை வரவேற்க போறேன்னு சொல்லு..."
அதைக் கேட்டு களுக்கென்று சிரித்தாள் சுதா.
"அஃப் கோர்ஸ்... நிச்சயமா..."
"அந்த குக்கரி புக்கை கொண்டு வந்தியா?"
தலையில் அடித்துக் கொண்டாள் சுதா.
"சாரி பா. நான் மறந்துட்டேன்..."
"எந்த நேரத்துல நீ அதை எனக்காக வாங்குனியோ, என்னால அதை படிக்கவே முடியல"
"பார்வதி ஆன்ட்டிகிட்ட தான் சமையல் கதுக்கணும்முனு உன் தலையில எழுதி இருக்கு போல..." என்று சிரித்தாள் சுதா.
"பார்க்கலாம்..." என்று கூறிவிட்டு வர்ஷினியும் சிரித்தாள்.
"நிமலை பாத்தியா?"
இல்லை என்று சோகமாய் தலையசைத்தாள்.
"போன மாசம், ரிஷியோட பர்த்டே அன்னைக்கு பார்த்தோம். அதுக்கப்புறம் அவரை பார்க்க சான்ஸ் கிடைக்கல"
"மாமா, மச்சானுக்கு என்ன கிஃப்ட் கொடுத்தாரு?"
"ஆப்பிள் ஐபேட்... அன்னைக்கி ரிஷி எவ்வளவு சந்தோஷமா இருந்தான் தெரியுமா..."
"யாரை எப்படி சந்தோஷபடுத்தணும் நிமலுக்கு நல்லாவே தெரியும்... சரி தானே?"
"சரி தான்..."
"நான் இன்னும் ஒரு மாசத்துக்கு இங்க இருக்க மாட்டேன்... மேல கூட ஆகலாம். நான் உனக்கு கால் பண்றேன்"
"உன் கல்யாண ஏற்பாடெல்லாம் எப்படி போகுதுன்னு எனக்கு சொல்லு" என்றாள் வர்ஷினி.
"கண்டிப்பா சொல்றேன். நான் கிளம்பட்டுமா...?"
"சரி" என்றாள் சோகமாக.
வர்ஷினியிடமிருந்து விடைபெற்றாள் சுதா.
இரவு
வழக்கம் போல, பத்து மணிக்கு நிமலிடமிருந்து வர்ஷினிக்கு கைபேசி அழைப்பு வந்தது.
"நான் உங்க காலுக்காக தான் காத்திருக்கேன்..."
"எனக்கு தெரியும். நானே உனக்கு சாயங்காலம் ஃபோன் செய்யலாம்னு நெனச்சேன். ஆனா, நீ போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சி இருப்பேன்னு எனக்கு தெரியும். அதனால தான் கால் பண்ணல"
"ஏதாவது முக்கியமான விஷயமா?"
"ஆமாம். என்னுடைய ஸ்வீட் ஹார்ட், ஃபைனல் எக்ஸாம்ஸ்ல, டிஸ்டிங்ஷன்ல பாஸ் பண்ணி இருக்கா..."
"அது எனக்கு தெரியும்"
"சுதா சொன்னாளா?"
"ஆமாம்"
"அதுல உனக்கு சந்தோஷம் இல்லயா?"
"அதுல சந்தோஷப்பட என்ன இருக்கு? எப்படியும் என்னை மேல படிக்க விடமாட்டாங்க"
"ம்ம்ம்... ஆனா என்னை பார்க்க உனக்கு ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு இல்ல?"
"எப்படி?" என்றாள் ஆர்வமாக.
"எக்ஸாமுக்கு முன்னாடி கோவிலுக்கு வந்து சாமிகிட்ட வேண்டிக்கிட்ட. எக்ஸாம் முடிச்சதுக்கப்புறம் தேங்க்ஸ் சொல்ல கோவிலுக்கு வர மாட்டியா?"
"வர முடியுமா, முடியாதான்னு தெரியலயே..."
"ட்ரை பண்ணி பாரு... உன் காலுக்காக நான் காத்திருப்பேன்"
"ஓகே "
"வருஷு..."
"ம்ம்ம்?"
"ஐ லவ் யூ"
"ஐ டூ லவ் யூ சோ மச்" என்றாள் புன்னகையுடன்.
"நாளைக்கு எப்படியாவது வர ட்ரை பண்ணு. உன்னை பார்த்து வருஷ கணக்கா ஆன மாதிரி இருக்கு..." என்றான் எதுவும் செய்ய முடியாத இயலாமையுடன்.
"நிச்சயமா ட்ரை பண்றேன். எனக்கும் உங்களைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு"
"தேங்க்யூ"
"உம்மா" என்று முத்தமிட்டுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள், நிமலின் முகத்தில் புன்னகையை வரவழைத்து.
மறுநாள் காலை
வரவேற்பறையில் அமர்ந்து, யாருடனோ ஃபோனில் பேசிக்கொண்டு இருந்தார் கல்பனா. அங்கு வந்த வர்ஷினி,
"அம்மா நான் டிஸ்டிங்ஷன்ல பாஸ் பண்ணிட்டேன்" என்றாள்.
"அதுக்கு?"
"கோவிலுக்கு போயிட்டு வரட்டுமா?"
சற்றே யோசித்தவர்,
"சரி... போயிட்டு சீக்கிரமா வா. கார்த்திக் ஃபேமிலி இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வராங்க" என்று கூறிவிட்டு ஃபோனில் பேசியபடி அங்கிருந்து சென்றார்.
"கார்த்திக் வீட்டில் இருந்து வருகிறார்களா?" மென்று விழுங்கினாள் வர்ஷினி. நல்ல வேளை, அவளுக்கு கோவிலுக்கு செல்ல அனுமதி கிடைத்துவிட்டது. நிலைமையை எப்படி சமாளிப்பது என்று நிமலிடம் கேட்க வேண்டும். சமையல் அறைக்குச் சென்றாள் வர்ஷினி.
"லக்ஷ்மி அக்கா, நான் பரீட்சையில பாஸ் பண்ணிட்டேன்" என்றாள்.
லட்சுமி அவளை பார்த்து புன்னகை புரிந்தாள். அது தான் முதல் முறை, அவள் வர்ஷினியை அவ்வளவு சந்தோஷமாக பார்ப்பது.
"கோவிலுக்கு எடுத்துக்கிட்டு போக ஏதாவது ஸ்வீட் இருக்கா கா?"
"நேத்து அம்மா பால்கோவா செய்ய சொன்னாங்க. இன்னைக்கு காலையில வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அதை எடுத்துக்கிட்டு போறீங்களா?"
"சரிக்கா. ஆனா, இவ்வளவு வேண்டாம்"
"நம்ம வீட்ல வேற யாரும் பால்கோவா சாப்பிட மாட்டாங்க. அதனால, கோவிலுக்கு கொண்டு போய் எல்லாருக்கும் கொடுங்க"
சரி என்று சந்தோஷமாய் தலையசைத்துவிட்டு லட்சுமியின் கையிலிருந்த டப்பாவை வாங்கி கொண்டு சென்றாள்.
கைபேசியில் இருந்து நிமலுக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு, கோவிலுக்கு கிளம்பினாள்.
அவர்கள் கோவிலை நெருங்கிய போது, ஓட்டுனருக்கு குமணனிடம் இருந்து அழைப்பு வந்தது.
"சொல்லுங்க, சார்"
"உடனே ஆஃபீசுக்கு கிளம்பி வா"
"நான், வர்ஷினி பாப்பாவோட கோவிலுக்கு வந்திருக்கேன் சார்"
"கோவில்ல விட்டுட்டீயா?"
"இப்ப தான் சார் வந்து சேர்ந்தோம்"
"டாக்ஸி பிடிச்சு அவளை வீட்டுக்கு போக சொல்லு. உடனே வா. ரொம்ப அர்ஜென்ட். நம்ம கெஸ்ட் ஒருத்தரை ஏர்போர்ட்ல டிராப் பண்ணணும்"
"சரிங்க சார்" என்று அழைப்பைத் துண்டித்தார்.
"அப்பா ஆஃபிசுக்கு அர்ஜெண்டா வர சொல்றார். உங்களை டாக்சி பிடிச்சி வீட்டுக்கு போக சொன்னாரு"
வர்ஷினியின் இதயம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது.
"நான் போய்க்கிறேன். நீங்க போங்க"
சரி என்று தலையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார் டிரைவர்.
கோவிலுக்குள் செல்வது போல் பாசாங்கு செய்து விட்டு, அவளுடைய கார் கண்ணை விட்டு மறைந்ததும், கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு, வெளியே ஓடிவந்தாள் வர்ஷினி. ஒரு ஆட்டோவை கையமர்த்தி, நிமல் வீட்டை நோக்கி பயணமானாள். திடீரென்று அவன் முன் தோன்றி, அவனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து, அவனது பெற்றோரிடம் ஆசி பெற எண்ணினாள் அவள்.
இனியவர்களின் இருப்பிடம்
வரவேற்பறையில் அமர்ந்திருந்த விஸ்வநாதன், மிகவும் மன அழுத்தத்துடன் காணப்பட்டார். கோவிலுக்கு செல்ல தயாராகி தரைதளத்திற்கு வந்தான் நிமல்.
"நான் உன்கிட்ட பேசணும்" என்றார் விஸ்வநாதன்.
கலக்கத்துடன் அவரை பார்த்தார் பார்வதி. அவர் ஏதோ அழுத்தத்தில் இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிந்தது.
"இப்போ நான் கோவிலுக்கு போறேன். வந்து பேசலாம்" என்றான் நிமல்.
"கோவிலுக்கா...? பரவாயில்லயே..." என்று கிண்டலாய் சிரித்தார் பார்வதி.
நிமலும் அவரைப் பார்த்து சிரித்தான்.
"வர்ஷினியை பார்க்க போறியா?" என்றார் விஸ்வநாதன் அமைதியாக.
ஆமாம் என்று தலையசைத்தான் நிமல்.
"ஓ... அப்படியா விஷயம்?" என்று மீண்டும் அவனை கிண்டல் செய்தார் பார்வதி.
சோபாவை விட்டு எழுந்து நின்றார் விஸ்வநாதன்.
"நீ செய்யறது எனக்கு சரியா படல... நீ செய்யறது ரொம்ப பெரிய தப்பு, நிமல்"
"ஏங்க இப்படி பேசுறீங்க? அவங்க ரெண்டு பேரும் காதலிக்கிறது உங்களுக்கு தெரியாதா?" என்றார் பார்வதி.
தன் கையை உயர்த்தி அவரை தடுத்தார் விஸ்வநாதன்.
"நம்ம குடோன்ல குமணனுடைய கம்பெனி சோப்பு கவரை பார்த்த போது, அவங்களுடைய கான்ட்ராக்ட் எல்லாம் கேன்சல் ஆனது உன்னால தான்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா அது பிசினஸ்... இதெல்லாம் நடக்கிறது சகஜம் தான். ஆனா, இது ஒரு பெண்ணோட வாழ்க்கை. நீ அவ வாழ்க்கையோட விளையாட என்னால அனுமதிக்க முடியாது"
"என்னங்க என்னென்னமோ பேசுறீங்க...?" என்று பதறினார் பார்வதி.
"வர்ஷினி வேற யாரும் இல்ல... குமணனுடைய பொண்ணு தான். குமணனை பழி தீர்க்க நீ அந்த பொண்ணை தூண்டில் மீனா பயன்படுத்துவன்னு நான் கனவுலயும் நினைக்கல" என்றார் வேதனையுடன்.
பல்லை கடித்துக்கொண்டு மென்று முழுங்கினான் நிமல். அவன் எதுவும் கூறும் முன், டமால் என்ற சத்தம் கேட்டு அனைவரும் திரும்ப, அங்கு அதிர்ச்சியுடன் நின்றிருந்தாள் வர்ஷினி. அவள் கொண்டு வந்திருந்த இனிப்பு கீழே விழுந்து கிடந்தது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro