Part 28
பாகம் 28
பரிட்சைகள் அனைத்தும் முடிந்து விட்டதால், மிகவும் சோகமாக இருந்தாள் வர்ஷினி. இனி அவளால் கல்லூரிக்கு செல்ல முடியாதல்லவா. நிமலை பார்க்கவும் இனி சந்தர்ப்பம் கிடைக்காது.
அப்போது அவளுடைய அறைக்கு வந்த ரிஷி, அவளை சாப்பிட அழைத்தான். அவனுடன் சென்றாள் வர்ஷினி. இப்பொழுது கல்பனா ஓரளவு தேறி இருந்தார்.
"அம்மா, உங்களுக்கு இப்ப பரவாயில்லயா?" என்றாள்.
"ம்ம்ம் "
"ரொம்ப வலிக்குதாம்மா?"
"இப்போ பரவாயில்ல"
அமைதியாக சாப்பிட தொடங்கினாள் வர்ஷினி.
"நம்ம நாளைக்கு ஒரு கல்யாணத்துக்காக செங்கல்பட்டு போறோம்." என்றார் கல்பனா.
"ஆனா, நாளைக்கு அக்காவுக்கு கடைசி எக்ஸாம் இருக்கே" என்றான் ரிஷி.
அவனை வெறித்துப் பார்த்தாள் வர்ஷினி. ஏனென்றால் அவளுக்கு பரிட்சை முடிந்து விட்ட விஷயம் அவனுக்கு தெரியும். ரிஷி பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான். உன்னிடம் அப்புறம் பேசுகிறேன் என்று கண்ணால் ஜாடை காட்டினான்.
"ஓ அப்படியா...? சரி அப்போ நீ இங்க இரு. நாங்க ரிஷியை மட்டும் கூட்டிக்கிட்டு போறோம். லட்சுமி உன் கூட இருப்பா. நாங்க விடியற்காலையிலேயே கிளம்பிடுவோம். கொஞ்சம் லேட்டா தான் வருவோம்."
சரி என்று தலையசைத்த வர்ஷினியை
ரிஷி அதிர்ச்சியுடன் பார்த்தான். அவளோ வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள். திருமணத்திற்கு செல்ல பிடிக்காமல் தான் ரிஷி அப்படி ஒரு பொய்யைக் கூறினான். ஆனால் அது இப்போது அவனுக்கே விணையாகிவிட்டது.
"நானும் அக்காவோட இருக்கேனே..." என்றான்.
"இல்ல... யாரும் வரலன்னா அப்பா கோச்சிக்குவார்"
அய்யோ என்றானது ரிஷிக்கு. சாப்பிட்டு முடித்து விட்டு அவரவர் அறைக்கு சென்றார்கள். ரிஷி வர்ஷினியின் அறைக்கு ஓடிவந்தான்.
"எனக்கு எக்ஸாம் இருக்குன்னு ஏன் பொய் சொன்ன?"
"அக்கா, கல்யாணத்துக்கு போனா ஒரே வெறுப்பு... ஆளாளுக்கு என்னென்னமோ கேள்வி எல்லாம் கேப்பாங்க... அப்பறம் தனியா இருக்கணும். ஒரே போர்... நானும் உன்கூட சேர்ந்து தப்பிக்கலாம்னு பார்த்தேன். ஆனா வசமா மாட்டிகிட்டேன்" என்றான் சோகமாக.
"சரி, சீக்கிரம் போய் படு. நாளைக்கு காலையில சீக்கிரமா எழுந்திருக்கணும்."
"குட் நைட் கா"
"குட் நைட்"
அவர்கள் தங்கள் அறைகளுக்குச் சென்றார்கள்.
வர்ஷினிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. எதிர்பாராமல் மடியில் வந்து விழுந்த சந்தர்ப்பம் இது. நிமலை சந்திக்க அவளுக்கு கிடைத்திருக்கும் கடைசி சந்தர்ப்பம்.
நேரே குளியலறைக்கு ஓடி சென்றாள். அங்கு தான் அவள் கைபேசியை ஒளித்து வைத்திருந்தாள். அதை வெளியில் எடுத்து நிமலுக்கு ஃபோன் செய்தாள். உடனடியாகக் எடுத்து பேசினான் நிமல்.
"ஹாய், நீ நல்லா இருக்கல்ல?"
"நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லத் தான் உங்களுக்கு ஃபோன் பண்ணேன்"
"ஏதாவது பிரச்சனையா?" என்றான் பதட்டமாக.
"நாளைக்கு எல்லாரும் செங்கல்பட்டுக்கு ஒரு கல்யாணத்துக்கு போறாங்க. நம்ம மீட் பண்ணலாமா?"
"நீ போகலயா?"
"எனக்கு நாளைக்கு கடைசி எக்ஸாம் இருக்குன்னு அம்மா நினைச்சுகிட்டு இருக்காங்க" என்றாள் ரகசியமாக
"அப்படியா?" என்றான் உற்சாகமாக.
"ஆமாம். என்னை எங்கேயாவது கூட்டிட்டு போறீங்களா, ப்ளீஸ் ப்ளீஸ்..."
"நிச்சயம் கூட்டிகிட்டு போறேன். சினிமாவுக்குப் போலாமா?"
"சினிமாவுக்கு வேண்டாம். உங்க பிறந்தநாள் அன்னைக்கி கூட்டிக்கிட்டு போனீங்களே, அங்க கூட்டிட்டு போங்க"
"ஓ... அந்தக் கோவிலுக்கா?"
"ஆமாம்"
"சரி. நான் நம்ம காலேஜ்ல உனக்காக காத்திருப்பேன்..."
"தேங்க் யூ"
"வாயை மூடு. எல்லாத்துக்கும் தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு..."
"எஸ் யுவர் ஹானர்..."
"பைத்தியம்..."
"நிமல் பைத்தியம்..." என்று கூறியபடி, சிரித்துக்கொண்டு அழைப்பை துண்டித்தாள்.
அவளை நினைத்தபடி கட்டிலின் மீது சாய்ந்தான் நிமல். வர்ஷினி தன் வாழ்க்கையாகவே மாறிப் போவாள் என்று அவன் கனவிலும் நினைத்ததில்லை.
மறுநாள்
வர்ஷினியின் குடும்பத்தார், விடியற்காலையிலேயே திருமணத்தில் கலந்துகொள்ள செங்கல்பட்டு கிளம்பி சென்றார்கள்.
வர்ஷினியிடம் கூறியபடி அவளை அந்த கோவிலுக்கு அழைத்துச் செல்வதற்காக, அவளுக்காக கல்லூரியில் காத்திருந்தான் நிமல். தன் உடையை மாற்றிக் கொண்டு, முகத்தை மூடியபடி, அவனுடைய இருசக்கர வாகனத்தில் வந்து அமர்ந்தாள் வர்ஷினி. இந்த முறை, நிமிலின் தோளில் சாய்ந்து கொண்டு, வசதியாய் அமர்ந்து கொண்டாள் அவள்.
அவர்கள் அந்த கோவிலுக்கு வந்து சேர்ந்தார்கள். கடந்த முறை போலவே, இந்த முறையும் அவள் அந்த இடத்தின் தனிமையையும், அமைதியையும் விரும்புவாள் என்று எதிர்பார்த்தான் நிமல். ஆனால் அவனுக்கு ஆச்சரியம் அளிக்கும் வண்ணம், அவள் அவனை விட்டு ஒரு நொடி கூட பிரியவே இல்லை. அங்கிருந்த ஒரு சிமெண்ட் பெஞ்ச்சில் அவன் தோளில் சாய்ந்த வண்ணம் அவன் அருகிலேயே அமர்ந்திருந்தாள்.
"உங்கள பார்க்காம இருக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு. மிச்சம் இருக்குற நாளை எப்படித் தான் நான் தள்ள போறேனோ தெரியல"
"நீ என்னை எப்ப பார்க்கணும்னு சொன்னாலும், நான் உன் முன்னாடி இருப்பேன்... சரியா...?"
"இப்பவே என்னை உங்க கூட, உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக முடியாதா?"
"எனக்கு கொஞ்சம் டைம் குடுடா. நான் செட்டில் ஆகணும்ல? எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் உன்னை கூட்டிகிட்டு போறேன். என்னை நம்பு"
"எனக்கு தெரியும், நீங்க என்னை கல்யாணம் பண்ணிகுவீங்க"
அவள் கையை இறுகப் பற்றியபடி, ஆமாம் என்று தலையசைத்தான் நிமல்.
அப்பொழுது திடீரென்று இருசக்கர வாகன இரைச்சல் கேட்டது. சில இளைஞர்கள், ஒலி எழுப்பிய வண்ணம், கலாட்டா செய்து கொண்டு வருவது போல் தெரிந்தது. வருவது யாரென்று தெரிந்த பொழுது, வர்ஷினியின் மூச்சே நின்று விடும் போல் இருந்தது. அது வேறு யாருமல்ல, கார்த்திக்கும் அவனுடைய நண்பர்களும் தான்.
அவர்கள் அமர்ந்திருந்த சிமெண்ட் பெஞ்சுக்குப் பின்னால் விழுந்து, வர்ஷினியையும் தன்னோடு இழுத்து அனைத்துக் கொண்டான் நிமல். நல்ல வேளை, அவர்களுக்கு ஒளிந்து கொள்ள ஒரு இடம் இருந்தது.
அப்போது ஒரு தொலைபேசி அழைப்பு வர, பேசுவதற்காக அங்கு நின்றான் கார்த்திக். அவனுடைய நண்பர்களும் அவனுடன் நின்றார்கள். ஒரு புதருக்கு பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிமலின் இருசக்கர வாகனத்தை அவர்கள் கவனிக்கவில்லை.
"இந்த இடம் சூப்பரா இருக்கு மச்சி" என்றான் ஒருவன்.
"ஒரு நாள் இங்க வறோம்... தண்ணி அடிக்கறோம்... மட்டையாகுறோம்" என்றான் இன்னொருவன்.
"இன்னொரு நாள் வரலாம். இப்போ கிளம்பலாம். பார்ட்டிக்கு நேரம் ஆச்சு" என்றான் கார்த்திக்.
அவர்கள் அங்கிருந்து சென்றார்கள்.
நிம்மதிப் பெருமூச்சுவிட்டான் நிமல். அவன் அங்கிருந்து எழ முயன்ற பொழுது, அவனை எழவிடாமல் அழுத்திப் பிடித்தாள் வர்ஷினி. திகைப்புடன் அவளைப் பார்த்தான் நிமல்.
ஏதோ, நாளையே உலகம் அழிந்துவிடும் என்பது போலவும், இன்று ஒரு நாள் தான் அவளுக்கு இருப்பது போலவும், தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டு, அவன் அழகு முகத்தை அங்குலம் அங்குலமாய் ரசித்துக் கொண்டிருந்தாள் வர்ஷினி, அவனை சங்கடத்திற்கு உள்ளாக்கி. மெல்ல தன் கையை உயர்த்தி அவன் முகத்தை வருடினாள். நிமலின் இதயம் தாறுமாறாய் துடித்தது. தன்னுடைய உணர்வுகளை இறுக்கமாய் தன் கையில் பிடித்துக் கொண்டு, அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான் நிமல். அவன் மீது படுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை பற்றி அவளுக்கு எந்த சங்கடமும் இருக்கவில்லை. அவனுடைய நெற்றியில் மெல்ல இதழ் பதித்து, அவனின் சங்கடத்தை மேலும் கூட்டினாள். தன் மென்மையான இதழ்களால் அவன் முகத்தை வருடினாள். அவன் இதழ்களின் மீது தன் இதழ்களை வைத்து அவனை முத்தமும் இடாமல், தூரமும் விலகாமல் இருந்து அவனை சோதித்தாள்.
அவளை தன் மடியில் ஏந்தியபடி அவன் எழுந்து அமர, அவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள் வர்ஷினி. அவளைக் கீழே அமர வைக்க அவன் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவனுடைய முயற்சியை மேலும் தொடர விடாமல், தன் இதழ்களால் அவன் இதழ்களை சிறை படுத்தி, அவனை தீயின் மீது அமர்த்தினாள் வர்ஷினி. அவ்வளவு நேரம், அவன் கையில் பிடித்து வைத்திருந்த அவனுடைய கட்டுப்பாடு காற்றில் பறந்தது. அதன் பிறகு அவனுடைய மனம் அவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இல்லை. அவள் ஆரம்பித்ததை அவனும் தொடர்ந்தான்.
*நெருக்கம்* எனும் நெருப்பு அவர்களை சுற்றி பற்றி எரியத் தொடங்கியது. அந்த நிமிடம் உலகையே மறந்த அவர்கள், எதுவும் செய்ய தயார். அப்பொழுது, மரத்தின் மீது இருந்து விழுந்த எறும்பு, நிமலின் காலை கடித்தது. அது வானில் பறந்து கொண்டிருந்த அவனை, பூவுலகிற்கு அழைத்து வந்தது. தான் இருந்த நிலையை பார்த்து அவன் அதிர்ச்சி அடைந்தான். வர்ஷினி தன் மீது அமர்ந்திருந்த நிலை, அவனை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவன் அவளை நகர்த்த முயன்ற பொழுது, அவள் அவனை தடுதாள்.
"வர்ஷு, சொல்றத கேளு..."
"நான் பிரக்னென்ட் ஆயிட்டா, எங்க அப்பா, என்னை உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துடுவாருல்ல...?"
"மாட்டாரு... கருவை கலைப்பாரு... இல்லனா உன்னை கொன்னுடுவாரு"
"நீங்க என்னை உங்களுடையவளா ஆக்கிக்க மாட்டிங்களா?"
"நீ எப்பவுமே என்னுடையவள் தான். சரியான நேரம் வரும் போது, அதை முறைப்படி செய்யணும்னு நான் நினைக்கிறேன். நீ என்னுடைவள்னு நிரூபிக்க, இது சரியான நேரமில்ல."
"நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்குவீங்க தானே?"
"சத்தியமா பண்ணிக்குவேன். நீ என்னை நம்பலயா?"
நம்புகிறேன் என்று தலையசைத்தாள்.
"நீ எதுக்காகவும் கவலைப்பட வேண்டாம். நீ நினைக்கும் போது நான் உனக்காக ஓடி வருவேன். எனக்கு ஆறு மாசம் டைம் கொடு. என்னை வளர்த்து ஆளாக்கின, எங்க அப்பா அம்மாவுக்காக நான் ஏதாவது செய்யணும்னு நினைக்கிறேன்"
வளர்த்து ஆளாக்கிய என்று அவன் கூறியதை அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வழக்கமாய் எல்லா பிள்ளைகளும் கூறுவது தானே அது? அவள் சரி என்று தலை அசைத்துவிட்டு, அவனை மீண்டும் அணைத்துக் கொண்டாள். அன்பாய் அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தான் நிமல்.
"நீ எதுக்காகவும் பயப்படாதே. நான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன். நிமலும், வர்ஷினியும் எப்பவும் ஒன்னா தான் இருக்கப் போறோம்."
"நீங்க என்னை விட்டுட மாட்டீங்கல்ல?"
"என் மூச்சை விட்டாலும் விடுவேனே தவிர உன்னை விடமாட்டேன்"
அவனது அணைப்பிலிருந்து வெளியேறி, உணர்ச்சிகளால் கட்டுண்ட அவன் முகத்தை பார்த்தாள். அழுதமாய் அவன் இதழ் மீது இதழ் ஒற்றினாள். அவள் அங்கிருந்து செல்ல நினைத்த பொழுது, அவள் கையை பிடித்து நிறுத்தினான் நிமல்.
"வர்ஷு, நீ தான் எனக்கு எல்லாமே... நம்ம ரெண்டு பேரும் எப்பவும் ஒன்ன தான் இருப்போம். ஏன்னா, நம்ம ரெண்டு பேரும் ஒருத்தருக்காக ஒருத்தர் பிறந்தவங்க. உன்கிட்ட இருந்து பிரிஞ்சிருக்கிறது ரொம்ப பெரிய தண்டனை. ஏன்னா, நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல" என்றான் உணர்ச்சி பொங்க.
கண்ணீர் சிந்தியபடி, அவனை அணைத்துக் கொண்டாள் வர்ஷினி.
"நீங்க இல்லனா நான் செத்துடுவேன்"
"எனக்கு தெரியும்டா" அவள் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்து விட்டான் நிமல்.
"உனக்கு லேட் ஆகுது. உன் கார் வந்துடும்"
மெல்ல அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள். அவளுடைய கண்கள் அமைதியற்று காணப்பட்டது. ஒன்றும் செய்ய இயலாமல் நின்றான் நிமல். அவனுக்கென்று சில பொறுப்புகள் இருக்கின்றன. தனக்கு ஒரு முகவரியை கொடுத்த அப்பா அம்மாவிற்கு செய்ய வேண்டிய கடமை அவனுக்கு பாக்கியிருக்கிறது. அதை மட்டும் அவன் செய்து முடித்து விட்டால், அதன் பிறகு அவனை யாராலும் தடுக்க முடியாது.
அவர்கள் கல்லூரியை நோக்கி பயணமானார்கள். வழக்கம் போல அவனை அணைத்தபடி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் வர்ஷினி.
அவளைக் கல்லூரியில் இறக்கிவிட்டு, அவள் அங்கிருந்து செல்லும் வரை அவளையே பார்த்துக்கொண்டு நின்றான் நிமல். அவன் மனது பாரமாக இருந்தது. எவ்வாறு அவளை சீக்கிரம் திருமணம் செய்வது என்பது குறித்து தான் அவன் மனதில் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro