Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Part 27

பாகம் 27

பரீட்சைக்கான இறுதி மணி ஒலித்ததாகிவிட்டது. ஆனால், இன்னும் சுதா வந்தபாடில்லை. வாசலை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி பரிச்சை கூடத்தினுள் நுழைந்தாள் வர்ஷினி. சிறிது நேரத்தில், பரிட்சை கூடத்தினுள் மூச்சு வாங்க ஓடி வந்தாள் சுதா. அவளைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டாள் வர்ஷினி.

"என்ன ஆச்சு?" என்று அவள் சைகையால் கேட்க,

"பிறகு பேசலாம்" என்று சுதாவும் சைகையால் பதில் சொன்னாள்.

பரீட்சை எழுதி முடித்துவிட்டு இருவரும் வெளியே வந்தார்கள்.

"என்ன பிரச்சனை, சுதா? ஏன் இவ்வளவு லேட்டா வந்த?"

"ஏன்னா, அம்மா வீட்ல இல்ல. நானே சமைச்சி சாப்பிட்டுட்டு வந்தேன். அதனால தான் லேட்"

"ஆன்ட்டி எங்க போனாங்க?"

"நேத்து நான் வீட்டுக்கு போறதுக்கு முன்னாடியே, அவங்க பெங்களூர் கிளம்பிப் போயிட்டாங்க"

"ஏன் அவ்வளவு அவசரம்?"

"என்னோட பெரியம்மாவுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. அவங்களை பாக்க அம்மா உடனடியாக கிளம்பி போய்ட்டாங்க."

"அவங்களுக்கு ஒன்னும் இல்லயே...? நல்லா இருக்காங்கல்ல?"

"அவங்க கோமா ஸ்டேஜுக்கு போயிட்டாங்க. அம்மா அவங்களை நெனச்சு சதா அழுதுகிட்டு இருக்காங்க. அவங்களுக்கு குழந்தை கிடையாது. என்னை தான் அவங்களுடைய சொந்த மகளா நெனச்சு எல்லாமே செய்வாங்க."

"நீ அவங்களை பாக்க பெங்களூர் போகலயா?"

"இன்னைக்கு நைட் கிளம்புறேன்"

"இதைப் பத்தி பிரகாஷுக்கு தெரியுமா?"

"நேத்து ராத்திரி ஃபோன்ல அவர் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன். என்னைப் பார்க்க இன்னைக்கு காலேஜிக்கு வரேன்னு சொல்லி இருக்கார்"

"நிமலும் என்னை பாக்க வரேன்னு சொல்லி இருக்கார். எப்படி அவர்கிட்ட பேச போறேன்னு தெரியல. ஏன்னா, எங்க கார் இந்நேரம் வந்திருக்கும்." என்றாள் சோகமாக.

இருவரும் அங்கிருந்து நடந்தார்கள்

"நீ அந்த குக்கரி புக்கை கொண்டு வந்து இருக்கலாம் இல்ல... உங்க அம்மா தான் பெங்களூர் போயிட்டாங்களே..."

"ஆமாம்ல... நான் மறந்தே போயிட்டேன். நான் பெங்களூரில் இருந்து வந்ததுக்கப்புறம் உனக்கு கொடுக்கிறேன்"

"ஓகே"

தரைதளத்தில் இருந்து அவர்களை பார்த்து கையசைத்தான் பிரகாஷ். தன் காரின் மீது சாய்ந்தபடி, அவர்களை பார்த்துக்கொண்டு நின்றான் நிமல்.

"அவங்க வந்துட்டாங்க" என்றாள் சுதா.

அவர்களுடைய கார் நிற்கிறதா என்று தேடிப்பார்த்தாள் வர்ஷினி. ஆனால், அங்கு அது இல்லாமல் போனதால், அவளுக்கு ஆச்சரியமாய் போனது. இது போல் இதற்கு முன் எப்போதும் நடந்ததில்லை.

அவள் கல்லூரி அலுவலகத்தை கடந்த பொழுது, அலுவலக பணியாளர் ஒருவர் அவளை அழைத்தார். குழப்பத்துடன் உள்ளே செல்ல, அவரிடம் தொலைபேசியின் ரிசீவரை கொடுத்தார் அவர். அவரிடமிருந்து வாங்கி பேசினாள் வர்ஷினி.

"நான் ராமு பேசறேன் மா"

அவர் வர்ஷினியின் கார் டிரைவர்.

"நம்ம கார் பஞ்சர் ஆயிடுச்சு. நான் சீக்கிரமா டயரை மாத்திக்கிட்டு வந்துடறேன்மா"

வர்ஷினியின் முகம் பூரித்துப் போனது.

"சரிங்க, அங்கிள்" என்றாள் சந்தோஷமாக.

அழைப்பை துண்டித்து விட்டு நிமலை நோக்கி பறந்து சென்றாள்.

காரின் பின் இருக்கையில் அமர்ந்து அவளுக்காக காத்திருந்தான் நிமல். அவனருகில் அமர்ந்து கதவை சாத்திக்கொண்டாள் வர்ஷினி.

"எங்க கார் டயர் பஞ்சர் ஆகிடுச்சு. கார் வர லேட்டாகும்" என்றாள் சந்தோஷமாக.

"நெஜமாவா...? பரவாயில்லயே..." என்றான் தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல.

"உங்ககிட்ட பேச டைம் கிடைக்குமோ கிடைக்காதோன்னு நான் ரொம்ப பயந்துகிட்டே இருந்தேன்"

"எனக்கு தெரியும்"

"இன்னைக்கு தான் நம்மளோட லாஸ்ட் டே" என்றாள் கவலையாக.

"என்ன நடந்தாலும் உடனுக்குடனே எனக்கு சொல்லிடு. நான் உனக்காக எப்பவும் காத்திருப்பேன். அதை மறந்துடாத"

"நான் எப்படி தான் உங்களை பார்க்காம இருக்க போறேன்னு எனக்கு தெரியல"

"நம்ம தினமும் வீடியோ கால்லில் பேசலாம்"

"ம்ம்ம்"

"ஆர் யூ ஆல்ரைட்?"

"நான் நல்லா தான் இருக்கேன்"

"நெஜமாவா?" என்று அவன் அவள் கையை பற்ற, அவள் என்றாள்.

"ஸ்ஸ்ஸ்" என்றாள்.

அவள் கை சிவந்து, கன்றிப்போய் இருந்தது. அதை பார்த்த பொழுது அவனுக்கு ஆத்திரம் தலைக்கேறியது. அவன் அவளைப் பார்க்க, அமைதியாய் தலை குனிந்து கொண்டாள் வர்ஷினி. தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, கன்றிப் போயிருந்தது கையில் முத்தமிட்டான்.

வர்ஷினி அவனிடம் தன் கன்னத்தை காட்ட,

"உன்னை அறைஞ்சாங்களா?" என்றான் கோபத்துடன்.

அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் வர்ஷினி ஒன்றும் கூறாமல்.

"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அந்த காட்டுமிராண்டிங்ககிட்ட இருந்து நான் உன்னை கூட்டிட்டு போயிடுவேன்"

"ம்ம்ம்"

"எந்த நேரமும், எல்லாத்துக்கும் தயாரா இரு... நீ எப்ப வேணா என்கிட்ட வர வேண்டியிருக்கும்..."

"நான் ஒவ்வொரு நிமிஷமும் ரெடியா உங்களுக்காக காத்துகிட்டு இருப்பேன்"

அவள் நெற்றியில் அன்பாய் முத்தமிட்டான். வர்ஷினியின் கார் உள்ளே நுழைவதை அவர்கள் பார்த்தார்கள்.

"நைட், எனக்கு கால் பண்ணு" என்று நிமல் கூற,

சரி என்று தலையசைத்துவிட்டு ராமு பார்க்கும் முன், காரை விட்டு கீழே இறங்கி ஓடிச் சென்றாள் வர்ஷினி. அவர்களுடைய கார் கல்லூரியை விட்டு வெளியே செல்லும் வரை, அவள் மீதே நிலைத்திருந்தது நிமலின் கண்கள்.

அப்பொழுது அங்கு ராஜா வர, அவனுடன் ஹை- ஃபை தட்டிக்கொண்டான் நிமல்.

"தேங்க்யூ மச்சி"

"எனி டைம்... உன் கூட பேச நேரம் கிடைச்சதுல வர்ஷினி சந்தோஷப்பட்டிருப்பா இல்ல?"

"ரொம்ப..."

"சொல்லியே ஆகணும் மச்சான், வர்ஷினி கார் டிரைவர், பயங்கரமான திறமைசாலி. எவ்வளவு குயிக்கா டயரை மாத்தினான் தெரியுமா?"

"ஆமாம். தன்னை சுத்தி இருக்க வேண்டிய ஆளுங்க எப்படிப்பட்டவங்கன்னு முடிவெடுக்கிறதுல, குமணன் கெட்டிக்காரன்... இறந்து போன என்னோட அப்பா மாதிரி இல்ல" என்றான் நிமல்.

"ரிலாக்ஸ் மச்சி"

"போகலாம் வா"

அங்கிருந்து காரை கிளப்பிக் கொண்டு சென்றார்கள் அவர்கள்.

குமணன் இல்லம்

அடிபட்டு கிடந்த கல்பனாவை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள் வர்ஷினி. அவர் நெற்றியில் மூன்று தையல்கள் போடப்பட்டிருந்தன. என்ன நடந்தது என்பதை லட்சுமி அவளிடம் கூறினார். கல்பனாவின் வீங்கிய முகம், வர்ஷினியை கவலையடையச் செய்தது. கல்பனாவிற்கு வேண்டியதை செய்ய வேண்டும் என்று அவள் நினைத்தாள். ஆனால் அவரிடம் செல்லவும் பயந்தாள். அதனால் அவள் அமைதியாய் தன் அறைக்கு சென்று விட்டாள்.

நிமலுக்கு ஃபோன் செய்து, தன் மனதில் இருப்பதை கொட்டி தீர்க்க நினைத்தாள். பத்து மணி ஆகட்டும் என்று காத்திருந்தாள். அப்போது நிமலே அவளுக்கு ஃபோன் செய்தான்.

"நிமல்..."

அவளுடைய குரல் ஈன சுரத்துடன் ஒலித்தது.

"என்ன ஆச்சு? ஏன் உன்னுடைய வாய்ஸ் டிஃபரண்ட்டா இருக்கு?"

"அம்மாவுக்கு இன்னைக்கு காலையில அடிபட்டுடுச்சி. மூணு தையல் போட்டிருக்காங்க"

நிமல் அமைதியாய் இருந்தான்.

"அவங்க முகம் வீங்கி போய் இருக்கு. பாவம்...!"

"எங்க அம்மா எப்பவுமே சொல்லுவாங்க, நம்ம எங்க போனாலும், நம்மளோட கர்மா நம்மளை சும்மா விடாதுன்னு. அப்போ நான் அதை நம்பல... இப்ப நம்புறேன்"

"நீங்க ஏன் அதை இப்ப சொல்றீங்க?"

"எந்த தப்பும் செய்யாத உன்னை அவங்க போட்டு அடிச்சாங்கல்ல...? அதனால தான் அவங்களுக்கு இன்னைக்கு அடிபட்டிச்சு..."

"தயவுசெய்து அப்படியெல்லாம் பேசாதீங்க, நிமல். என்ன இருந்தாலும் அவங்க என்னோட அம்மா இல்லயா?"

"என்ன இருந்தாலும் நீயும் அவங்க மகள் தான்னு அவங்க நினைக்கலயே... உன்னை ஒரு பொண்ணா கூட உங்க மதிக்கலயே"

"என்ன நிமல் இப்படியெல்லாம் பேசுறீங்க? உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லன்னா நீங்க பதறுவீங்க தானே?"

"நிச்சயமாக பதறுவேன். ஏன்னா, எங்க அம்மா அதுக்கு தகுதியானவங்க. உங்க அம்மாவுக்கு அந்த தகுதி இல்ல"

"அவங்க நல்ல அம்மாவா இல்லன்னா என்ன? நான் அவங்களுக்கு நல்ல மகள் தானே...? அப்போ நான் அவங்களுக்கு நல்லது தானே நினைக்கணும்?"

"அவங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி. இவ்வளவு கஷ்டப் படுத்தியும் தனக்கு நல்லதே நினைக்கிற ஒரு மகள் அவங்களுக்கு கிடைச்சிருக்கா... உனக்கு தான் அந்த அதிர்ஷ்டம் இல்ல"

"ஆனா, எனக்கு நீங்க இருக்கீங்க. எனக்கு நீங்க மட்டும் போதும்"

"அது எனக்கு கிடைச்ச கௌரவமா நான் நினைக்கிறேன்"

"நீங்க என்னுடைய பேரன்ட்சை வெறுக்காம இருந்தா, நான் இன்னும் சந்தோஷப்படுவேன்"

"சாரி வர்ஷினி... நீ என்கிட்ட ரொம்ப அளவுக்கு அதிகமா எதிர்பார்க்கிற"

"எனக்கு தெரியும் நீங்களும் என்னுடைய அப்பாவும் வியாபார எதிரிங்க. அந்த பகை நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல எப்பவுமே பிரதிபலிக்க கூடாதுன்னு நான் நினைக்கிறேன்"

"அப்படின்னா, நம்ம அவங்கள பத்தி பேசாம இருக்கறது நல்லது"

அமைதியானாள் வர்ஷினி.

"வர்ஷினி.... வர்ஷினி இருக்கியா...? என்கிட்ட பேசு"

அவனுக்கு மெல்லிய விசும்பல் ஒலி கேட்டது.

"வர்ஷினி நீ அழறியா?"

"நான் ரொம்ப அதிர்ஷ்டம் கெட்டவ. எனக்குன்னு இருக்கிறது, ரொம்ப குறைவான ஆட்கள் தான். அவங்களும் ஒருத்தரை ஒருத்தர் வெறுக்கிறாங்க. எங்க அப்பாவுக்கு உங்களையெல்லாம் பிடிக்காது... ஏன்னா, அவர் கெட்டவர். அது எனக்கு தெரியும். ஆனா நீங்க அப்படி இல்ல. உங்க ரெண்டு பேருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. நீங்க அவரை மாதிரி இல்ல. உங்களால அவரை மாதிரி ஆகவே முடியாது. ஏன்னா, நீங்க நிமல், குமணன் இல்ல. கெட்டவனா இருக்கறது தான் குமணனுடைய இயல்பு. பிசினஸ்ல நீங்க எதிரி. ஆனா அதுக்காக நீங்க ஒருத்தரை ஒருத்தர் வெறுத்து தான் ஆகணுமா...? உங்களை அப்படி பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு"

"எனக்கு என்ன சொல்றதுன்னு புரியல. ஏன்னா, இதை நான் உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கல. இந்த ஒரு காரணத்துக்காகத் தான் நான் உன் காதலை ஏத்துக்க தயங்கினேன். ஏன்னா, இந்த விஷயம் என்னை ஒரு நாள் சங்கடப்படுத்தும்னு நான் எதிர்பார்த்தேன். அது தான் இப்போ நடந்துகிட்டு இருக்கு"

"என்னை காதலிச்சதுக்காக நீங்க வருத்தப்படுறீங்களா, நிமல்?"

"நிச்சயமா இல்ல. ஆனா, நம்ம வாழ்க்கை எப்படி இருக்கப் போகுதுன்னு எனக்கு தெரியல. உன்னுடைய அப்பா அம்மாவை நீ சப்போர்ட் பண்ணாம இருக்கிற வரைக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது. எது நல்லது எது கெட்டதுன்னு நீ தெரிஞ்சிக்க வேண்டியது ரொம்ப அவசியம். மோசமானவங்களுக்கு நல்லவளா நடத்துகிறது என்னைக்குமே உனக்கு நல்லதில்ல. நீ அப்படி புத்தி இல்லாம இருக்கக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன்"

"சாரி நிமல். எங்க அம்மாவை அப்படி பார்த்த உடனே நான் ரொம்ப குழம்பிப் போயிட்டேன்... இதுல என்னோட தப்பு என்ன இருக்கு? நான் இப்படி தானே? அதுக்காக நீங்க அப்செட் ஆக வேண்டாம். நான் இனிமே அவங்களைப் பத்தி உங்ககிட்ட பேச மாட்டேன். புத்தியில்லாத பொண்டாட்டி உங்களுக்கு வந்துடுவான்னு நீங்கள் ஒன்னும் கவலை படவேண்டாம்"

"வருஷு..." கண்களை சுழற்றினான்.

"குட் நைட்"

"ஃபோனை கட் பண்ணா, நான் பொல்லாதவனா ஆயிடுவேன்..."

"இப்பல்லாம் நீங்க என்னை ரொம்ப மிரட்டுறீங்கன்னு உங்களுக்கு தோணலயா?"

"அப்படி செய்ய, எனக்கு எல்லா ரைட்ஸும் இருக்கு"

"நீங்க எது சொன்னாலும் நான் கேட்பேன். நீங்க என்னை மிரட்ட வேண்டிய அவசியம் இல்ல"

"ஐ அம் சாரி" என்று பெருமூச்சு விட்டான்.

"எனக்கு புரியுது"

"எங்களுடைய வியாபார எதிரிங்குறதுக்காக மட்டும் நான் உங்க அப்பாவை வெறுக்கல... நான் அவங்களை வெறுக்க வேற ஒரு காரணம் இருக்கு"

"அவங்க என்னை ரொம்ப கஷ்டப்படுகிறாங்கன்னு தானே...?"

"உனக்கு எல்லாம் தெரியும். ஆனாலும், நான் அவங்களை பொறுத்துப் போகணும்னு நினைக்கிற..."

"இல்ல... அவங்கள விடுங்க... அவங்களை உங்க தலையில ஏத்திக்காதீங்க"

"எப்படி உடனே உன் மனசை மாத்திக்கிற? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எமோஷனலா பேசின வர்ஷினியா நீ?"

"யாருக்காகவும் நான் உங்களை அப்ஸட் பண்ண வேண்டாம்னு நினைக்கிறேன். ஏன்னா, எனக்கு நீங்க மட்டும் தான் முக்கியம். உங்களுக்கு பிடிக்காத எதையும் நான் செய்ய விரும்பல..."

"நீ என்னை காதலிக்கிறதாலயா?"

"இல்ல... நீங்க என்னை காதலிக்கிறதால... நீங்க மட்டும் தான் என்னை காதலிக்கிறதால..."

"எப்பவும்...! படுத்து தூங்கு. குட் நைட்."

"குட் நைட்"

அவர்கள் அழைப்பைத் துண்டித்து கொண்டார்கள். நிமலுக்கு சற்று உறுத்தலாக இருந்தது. கல்பனாவை தண்டிக்க வேண்டும் என்ற கோபத்தில் அவன் வர்ஷினியை பற்றி யோசிக்காமல் விட்டு விட்டான். இறுதியில் அவள் சமாதானம் ஆகி விட்டாலும் கூட, அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவள் இன்று அழுது விட்டாள்... அவள் அழுகையை என்றும் பார்க்கக்கூடாது என்று நினைத்த அவனே இன்று அவளுடைய அழுகைக்கு காரணம் ஆகிவிட்டான் என்று வருந்தினான் நிமல்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro