Part 25
பாகம் 25
சாமி கும்பிட்டு முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்ல தயாரானாள் வர்ஷினி. அவர்களுக்கு அன்று பரிட்சை ஆரம்பமாகிறது. அப்பொழுது லட்சுமி, கார்ட்லெஸ் ஃபோனை அவளிடம் கொண்டு வந்து கொடுத்தாள். சுதாவை தவிர வேறு யாராக இருக்கப் போகிறார்கள்? ஏதாவது பிரச்சினையா? எதற்காக இந்த நேரத்தில் அவள் ஃபோன் செய்கிறாள்? லக்ஷ்மியிடமிருந்து ரிசீவரை வாங்கி பேசினாள்.
"சுதா..." என்றாள் அவசரமாக.
"ஹாய் பேபி..." என்று அவள் சர்வ சகஜமாக கூப்பிட, நிம்மதி பெருமூச்சு விட்டாள் வர்ஷினி.
"எக்ஸாமுக்கு தயாரா?" என்றாள் வர்ஷினி.
"நான் தயாராயிட்டேன். நீ...?"
"நானும் தயார் தான்"
"சரி, எதுக்கு இப்ப ஃபோன் பண்ண?"
"நீ அந்த சமையல் புக்கை படிச்சிட்டியா?"
"எக்ஸாம் டைம்ல நான் எப்படி அதை படிக்க முடியும்? எக்ஸாம் முடிஞ்சதுக்கு அப்புறம் படிக்கலாம்னு இருக்கேன்"
"அப்போ ஒன்னு பண்ணு"
"என்ன?"
"அந்த புக்கை எடுத்துகிட்டு வா. அம்மா படிக்கணும்னு சொன்னாங்க. எக்ஸாம் முடிஞ்சதுக்கு அப்புறம், நான் அதை உனக்கு திருப்பி கொடுக்கிறேன்"
"ஓகே"
"தேங்க்யூ"
"காலேஜ்ல பார்க்கலாம்"
அவர்கள் அழைப்பை துண்டித்து கொண்டார்கள். வரவேற்பறைக்கு வந்து, புத்தக அலமாரியில் இருந்த சமையல் கலை புத்தகத்தை எடுத்து, தன் பையில் திணித்துக் கொண்டு, கல்லூரிக்கு கிளம்பினாள் வர்ஷினி.
கல்லூரியில்
நிமலை தேடியபடியே காரை விட்டு கீழே இறங்கினாள் வர்ஷினி. ராஜா மற்றும் பிரகாஷுடன் நின்று கொண்டிருந்த அவன், அவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். அவளுடைய கார் காலேஜை விட்டு செல்லும் வரை மெல்ல நடந்தவள், அதன் பிறகு நிமலை நோக்கி ஓட்டம் எடுத்தாள்.
"ஹாய் வர்ஷினி" என்றான் ராஜா.
"ஹாய்... ஹாய் பிரகாஷ்..."
"ஹாய்" என்றான் பிரகாஷ்
"ஹாய் நிமல்"
"எல்லாத்தையும் கரைச்சு ஒரே மடக்கில் குடிச்சிட்டு வந்திருக்க போலிருக்கே" என்றான் நிமல் கிண்டலாக.
ராஜாவும் பிரகாஷம் களுக் என்று சிரித்தார்கள்.
"ஆமாம்... இது ஃபைனல் இயர் ஆச்சே..."
"ஆல் தி பெஸ்ட்"
"தேங்க்யூ சோ மச்" என்று தன் கைக்கடிகாரத்தை பார்த்தவள்,
"எனக்கு டைம் ஆச்சு" என்றாள்.
அவள் அங்கிருந்து செல்ல முயன்ற போது,
"எனக்கு விஷ் பண்ண மாட்டியா?" என்றான் நிமல் அதிர்ச்சியாக.
அவள் மாட்டேன் என்று தலையசைத்தாள்.
"ஏன்?"
அவள் அமைதி காத்தாள்.
"நான் கேட்டதுக்கு பதில் சொல்லு"
"நீங்க, எக்ஸாம் நல்லா எழுதணும்னு நான் காலையில வேண்டிக்கிட்டேன்"
"நான் அதைப் பத்தி பேசல. எனக்கு விஷ் பண்ணுன்னு சொன்னேன்"
மீண்டும் அமைதி.
"வர்ஷு..."
"நான் யாரையும் விஷ் பண்ண மாட்டேன். நான் விஷ் பண்ணா அது அவங்களுக்கு ராசியா இருக்காது"
"சயின்ஸ் டிபார்ட்மெண்ட்ல இருந்து கொஸ்டின் பேப்பர் எடுத்தா தான் நான் ஃபெயில் ஆவேன். நீ கவலைப்பட வேண்டாம். நான் நல்லா படிச்சிருக்கேன். நான் ஃபெயில் ஆனா கூட, அதை பத்தி நான் கவலைப்பட மாட்டேன். சோ விஷ் மீ"
"காட் ப்ளஸ் யூ"
"நான் என்ன உன்கிட்ட ஆசீர்வாதமா வாங்குறேன்?"
அங்கிருந்து அவள் செல்ல நினைத்தபோது,
"நான் எக்ஸாம் எழுத போறதில்ல... நான் வீட்டுக்கு போறேன்"
அதைக் கேட்டு அவளுக்கு திக்கென்றது.
"ஏன் இப்படி செய்றீங்க?"
"நீ என்னை விஷ் பண்ணல. அதனால, நான் அப்செட்டா இருக்கேன். அதனால, எனக்கு எக்ஸாம் எழுதற மூடு போயிடுச்சு. அதனால, நான் வீட்டுக்கு போறேன்..."
அவன் உண்மையிலேயே வெளியில் செல்ல முயன்றதை பார்த்து, அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
"நில்லுங்க நிமல்" என்று அவள் கத்த,
ஏதும் கூறாமல் நின்று அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
"தயவுசெய்து புரிஞ்சுக்கங்க"
"நீ அதிர்ஷ்டமான பெண்ணுன்னு நிரூபிக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடு"
*ஐயோ* என்றானது வர்ஷினிக்கு.
"என் திறமைல உனக்கு நம்பிக்கை இல்லயா?" என்றான்.
"இருக்கு..."
"பாத்தா அப்படி தெரியலயே..."
வேறு வழியில்லாமல்,
"ஆல் தி பெஸ்ட்" என்று அவள் கூற,
"தேங்க்யூ, செக்ஸி" என்று கண்ணடித்து சிரித்தான் நிமல்.
அதைக் கேட்டு வர்ஷினியின் கண்கள் பெரிதாக, அவள் ராஜாவும் பிரகாஷும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்த பொழுது, அவர்கள் எதையுமே கேட்காதவர்கள் போல புத்தகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தார்கள். அவன் கையைப் பிடித்து நறுக்கென்று கிள்ளினாள் வர்ஷினி. அவனோ வாய் விட்டு சிரித்தான்.
"நீயும்... உன் சென்டிமென்ட்டும்..." என்றான்
"நான் போகட்டுமா?"
"எக்ஸாம் நல்லா எழுது. அங்கயும் என்னை பத்தி யோசிச்சுக்கிட்டு இருக்காத..." என்று அவன் கூற,
"அது ரொம்ப கஷ்டம்" என்று சிரித்தாள் வர்ஷினி.
சிரித்தபடி அவளுடைய வகுப்பறைக்கு வந்தவள், அங்கே சுதா புத்தகத்தை வைத்துக்கொண்டு படித்துக் கொண்டிருந்தாள். அந்தப் புத்தகத்தை அவளிடமிருந்து பிடுங்கினாள் வர்ஷினி.
"புக்கை கொடு, வர்ஷினி"
"ஒரு வருஷத்துல பிடிக்காததை கடைசி நிமிஷத்துல படிக்க போறியா?"
"ஒரு சந்தேகம் அதை பார்த்துக்கிட்டு இருக்கேன்"
அவளிடம் அந்த புத்தகத்தை திருப்பிக் கொடுத்தாள் வர்ஷினி. தனது சந்தேகத்தை தீர்த்துக் கொண்டு, அந்த புத்தகத்தை மூடி வைத்தாள் சுதா.
"அந்த குக்கரி புக்கை கொண்டு வந்தியா?"
"ஓ எஸ்" அந்த புத்தகத்தை அவளிடம் கொடுத்தாள் வர்ஷினி.
"நம்ம எக்ஸாம் முடிஞ்ச உடனே உனக்கு நான் திருப்பி கொடுக்கிறேன்"
"ஓகே "
அப்பொழுது மணியடிக்க, அவர்களுடைய வகுப்பறைக்குள் சென்றார்கள் அவர்கள்.
மாலை / குமணன் இல்லம்
பள்ளியிலிருந்து வீடு திரும்பிய ரிஷி, வீடு அலங்கோலமாக கிடந்ததை பார்த்து குழம்பினான். புத்தக அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டிய புத்தகங்கள் வீடு முழுவதும் இறைந்து கிடந்தன. அந்தப் புத்தகங்களில் எதையோ பைத்தியக்காரியை போல் தேடிக்கொண்டிருந்தார் கல்பனா. அந்த அறையின் ஒரு மூலையில் முழங்காலை கட்டிக் கொண்டு அமர்ந்தபடி தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள் வர்ஷினி. அவளுடைய, வீங்கி சிவந்த முகம், கல்பனா அவளை நன்றாக அடித்திருக்கிறார் என்று கூறியது.
அவளிடம் ஓடிச் சென்று, அவள் முன் முழங்காலிட்டு அமர்ந்தான் ரிஷி. அவள் உடல் கன்றி போயிருந்தது.
"என்னக்கா இதெல்லாம்?"
தனக்கு ஒன்றும் தெரியாது என்று இடவலமாக தலையை ஆட்டினாள். எழுந்து நின்று கல்பனாவை நோக்கி திரும்பினான் அவன்.
"நீங்க என்ன தேடிக்கிட்டு இருக்கீங்க?" என்றான்.
"நேத்து, நான் ஒரு புக்குள்ள முக்கியமான பேப்பர் வச்சிருந்தேன். இன்னைக்கு அதை காணோம்"
"அக்கா, நீ அதை பார்த்தியா?"
இல்லை என்று தலை அசைத்தாள் வர்ஷினி.
"அது என்ன பேப்பர் மா?" என்று ரிஷி கேட்க, திகைத்து நின்றார் கல்பனா.
"அது.... ஒரு... முக்கியமான... பேப்பர்" என்று தடுமாறினார்.
"அது அப்பாவுடையதா?" என்றான்.
"இல்ல இல்ல..." என்று மேலும் பதறினார் கல்பனா.
அவரிடம் எதோ தவறு இருப்பதை உணர்ந்தான் ரிஷி. ஏனென்றால், அவர் எப்பொழுதும் தடுமாறியது இல்லை. தன் சகோதரியை காப்பாற்ற அதை பயன்படுத்திக் கொள்ள நினைத்தான் அந்த சிறுவன்.
"இருங்க, நான் அப்பாகிட்ட ஃபோன் பண்ணி கேக்குறேன்" என்று தன் கைபேசியை வெளியில் எடுத்தான்.
இரண்டு எட்டில் அவனை அடைந்து, அவன் கையிலிருந்து கைபேசியை பிடுங்கினார் கல்பனா.
"அவர் அதை எடுத்திருக்க மாட்டார்" என்றார்.
"எப்படிம்மா அவ்வளவு நிச்சயமா சொல்றீங்க? அக்காவும் எடுக்கல. எனக்கும் அதைப் பத்தி தெரியாது. அப்படின்னா அப்பா தானே எடுதிருக்கணும்...?"
"ரிஷி, நான் சொல்றத கேளு. உங்க ரெண்டு பேருக்கும் அதை பத்தி தெரியலன்னா விடுங்க. அவர்கிட்ட கேக்க வேண்டாம்" என்று கத்தினார்.
"நீங்க எதுக்கு மா இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க? நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு நெனச்சேன்"
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார் கல்பனா.
"எனக்கு தெரியும். அப்பா ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருக்காரு. இந்த மாதிரி நேரத்துல நம்ம அவரை டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு நமக்கு புரியணும்"
"நீங்களும் ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும், மா"
"என்ன?"
"உண்மை தெரியாம, நீங்களும் அக்காவை அடிக்கக் கூடாது. அவளுக்கும் ஃபீலிங்ஸ் இருக்கு. அடிச்சா அவளுக்கும் வலிக்கும். அவ உடம்பு எப்படி வீங்கியிருக்குன்னு பாருங்க..." என்ற அவனை அதிர்ச்சியுடன் பார்த்தார் கல்பனா.
அழுது கொண்டிருந்த வர்ஷினியை நோக்கி சென்ற ரிஷி, அவள் கையை பிடித்து, அழைத்துக்கொண்டு அவள் அறைக்கு சென்றான். செல்லும் முன், கல்பனாவை நோக்கி ஒரு கோபப்பார்வை வீச அவன் தவறவில்லை. அவன் எப்பொழுதும் வர்ஷினிக்கு துணையாக இருப்பவன் தான். ஆனால், இது தான் முதல் முறை, அவன் நேரடியாக கல்பனாவை தாக்குவது.
"ரொம்ப வலிக்குதா கா?"
கண்களைத் துடைத்தபடி இல்லை என்று தலை அசைத்தாள். அவளைப் பார்க்கவே அவனுக்கு பாவமாயிருந்தது. அவளை எப்படியாவது குதூகலப்படுத்த நினைத்தான்.
"எனக்கு ஒரு சந்தேகம்" என்றான்.
"என்ன?" என்றாள் மெல்லிய குரலில்.
"உன்கிட்ட பேசுறா மாதிரி, மாமா என்கிட்டயும் பேசுவாரா, கா?"
அவன் நினைத்தது போலவே, அவள் முகம் சட்டென்று புன்னகையுடன் மாறியது.
"நிச்சயமா பேசுவாரு. அவரு ரொம்ப ஸ்வீட்"
"நிஜமாவா?"
"ஆமாம்"
"அவர் நம்பரை சொல்லு" என்றான் அவன் கைபேசியை வெளியே எடுத்தபடி.
"ஏன்?" என்றாள் பதட்டமாக.
"நான் அவர்கிட்ட பேச போறேன்"
"வேண்டாம், ரிஷி"
"ஏன் கா? உன்னை மட்டும் அவர் எவ்வளவு அழகாக அவங்க அப்பா, அம்மாகிட்ட இன்ட்ரோடியூஸ் பண்ணி வச்சாரு...! என்னை மட்டும் அப்படி செய்ய மாட்டாரா? நீ தான சொன்ன, அவர் ரொம்ப ஸ்வீட்ன்னு...? நானும் தான் கொஞ்சம் பேசுறேனே" கெஞ்சினான்.
சரி என்று மெல்ல தலையசைத்தாள் வர்ஷினி. அவளுடைய சோகம் காற்றில் பறந்ததை உணர்ந்தான் ரிஷி. அவனக்கு சந்தோஷமாய் இருந்தது.
"மாமாவை கலாட்டா பண்ணலாமா...?"
"எப்படி?"
"அவர் ஏதோ தப்பு பண்ண மாதிரி நான் அவரை மிரட்ட போறேன்"
அதைக் கேட்டு வாயைப் பிளந்தாள் வர்ஷினி.
"நான் இப்போ டீன் ஏஜெர். என்னுடைய வாய்ஸ் மாறிப் போச்சு. அதனால யாரோ அவரை மிரட்டுறாங்கன்னு அவர் நினைப்பாரு" என்றான் குதூகலமாக.
"வேணாம் ரிஷி. அப்படி எல்லாம் செய்யாதே..."
"சும்மா விளையாட்டுக்கு தான் கா. அவர் நம்பரை சொல்லு"
வர்ஷினி, நிமலின் கைபேசி எண்ணை கூற, அவனுக்கு ஃபோன் செய்தான் ரிஷி. இரண்டாவது மணியிலேயே எடுத்து பேசினான் நிமல். ஸ்பீக்கரை ஆன் செய்தான் ரிஷி.
"யார் பேசுறீங்க?" என்றான் நிமல்.
"அது முக்கியமில்லை மிஸ்டர் நிமல்... நீங்க யாருன்னு எனக்கு நல்லா தெரியும்..."
"அதனால?"
"நீங்க என்னெல்லாம் செஞ்சுகிட்டு இருக்கீங்கன்னு யாருக்கும் எதுவும் தெரியாதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கீங்களா?"
அமைதியானான் நிமல்.
"நான் உங்களை அவ்வளவு சீக்கிரமா விடப் போறதில்ல"
வர்ஷினி தன் சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தாள்.
"விஷயத்துக்கு வா" என்றான் நிமல்.
"நீங்க, குமணனுக்கு தெரியாம என்ன செய்றீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்"
*அமைதி *
"வெளியே தெரியாம, அமைதியா செஞ்சா, யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்கன்னு நினைச்சிங்களா? உங்களுக்கு மேலே ஒரு திறமைசாலி நிச்சயம் இருப்பான். அதை மறந்துடாதீங்க" என்று கூறி வர்ஷினியை பார்த்து கண்ணடித்தான் ரிஷி.
மீண்டும் அமைதி.
"உங்க புத்திசாலித்தனத்தை நினைச்சு ரொம்ப பெருமைப்பட்டுக்காதிங்க. உங்களை விட குமணன் ரொம்ப புத்திசாலி. எந்த நேரத்துல வேணும்னாலும் நீங்க மாட்டிக்கலாம்..."
அதன் பிறகு அமைதியாக இருக்க முடியவில்லை நிமலால்.
"பாக்கலாம், அவர் என்ன செய்யராருன்னு... நானும் அந்த நாளுக்காகத் தான் காத்திருக்கேன்" என்று கூறிய
நிமலின் அடுத்த வார்த்தை, அவர்கள் இருவரையும், அதிர்ச்சி அடையச் செய்தது.
தொடரும்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro