Part 22
பாகம் 22
குமணன் இல்லம்
தன் கையில் இருந்த முத்திரைத் தாள்களை பார்த்துக்கொண்டு நின்றார் கல்பனா. அதில் எப்படி குமணனின் கையெழுத்தை பெறுவது என்ற சிந்தனையுடன் இருந்தார் அவர். எவ்வளவு புத்திசாலித்தனமாக யோசித்த போதிலும், அவருடைய புத்திக்கு எதுவுமே எட்டவில்லை. ஏனென்றால், அவர் செய்ய இருப்பது மிகவும் அபாயகரமான விஷயம். ஒருவேளை அவர் பிடிபட்டால், அவருடைய கதை ஒட்டுமொத்தமாய் முடிந்து போகலாம். அவர் அவசரப்படாமல் காரியம் ஆற்ற வேண்டும். சரியான சந்தர்ப்பம் கிடைத்தாலே ஒழிய அவர் எந்த முயற்சியும் செய்யக் கூடாது என்று நினைத்தார். அப்போது வீட்டினுள் நுழைந்த வர்ஷினியை பார்த்தார் கல்பனா.
வெள்ளை தங்கத்தில் மோதிரத்தை அணிந்து கொண்டு, சுதா கொடுத்த சமையல்கலை புத்தகத்துடன், இங்கும் அங்கும் பதட்டமாய் பார்த்துக்கொண்டு அவள் உள்ளே நுழைந்தாள். அவள் எதிர்பார்த்தது போலவே கல்பனாவின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது. அவளுடைய மூச்சு, அவள் நுரையீரலை விட்டு வெளியேற மறுத்தது. புத்தக அலமாரியின் பக்கத்தில் அசைவின்றி அப்படியே நின்றாள். தன் கையிலிருந்த சமையல்கலை புத்தகத்தை மெல்ல அலமாரிக்குள் திணித்துவிட்டு, கல்பனாவை நோக்கி திரும்பினாள்.
"சீக்கிரம் ரெடியாகு. கார்த்திக் இங்க வரப் போறான்"
தலைகுனிந்தபடி சரி என்று தலையசைத்துவிட்டு, அவள் அங்கிருந்து செல்ல நினைத்தபோது,
"இரு"
அவள் அருகில் வந்து, மோதிரம் அணிந்திருந்த அவள் கையைப் பிடித்து இழுத்தார் கல்பனா.
"யார் இதை உனக்கு கொடுத்தது?"
"சுதா கொடுத்தா. இது தான் எங்களுக்கு கடைசி வருஷம்... அதனால..." என்றாள் திக்கித்தினறி.
"சரி. சீக்கிரமா போய் ரெடியாகு. ஏதாவது நல்ல ட்ரெஸ்ஸா போட்டுக்கோ"
சரி என்று அவசரமாய் தலையசைத்து விட்டு, விட்டால் போதுமென்று ஓடிப்போனாள் வர்ஷினி. அவளுடைய அறைக்கு வந்து நிம்மதி பெருமூச்சு விட்டாள். கார்த்திக் அவர்கள் வீட்டிற்கு வர கூடாது என்று அவள் கடவுளை வேண்டிக் கொண்டாள். அவன் அருகில் இருந்தாலே அவளுக்கு சங்கடமாய் போகிறது.
அவளுடைய வேண்டுதல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வரவிருக்கும் கட்சிக் கூட்டத்தை பற்றி விவாதிக்க, அவன் ஒரு மந்திரியுடன் செல்ல வேண்டியதாயிற்று. அதைப் பற்றி கல்பனா அவளிடம் கூறியபொழுது, அவளுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ஏனென்றால், அவளுடைய பிறந்தநாள் நினைவுகளில், நிமல் மட்டுமே இருக்கப் போகிறான் அல்லவா?
இனியவர்களின் இருப்பிடம்
பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்ததால், ராஜாவுடனும் பிரகாஷுடனும், நிமல் தனது பாடங்களில் கவனம் செலுத்த துவங்கினான். இறுதி பரீட்சைக்காக அவர்கள் மிக தீவிரமாய் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து மிகவும் சந்தோஷம் அடைந்தார் பார்வதி. ஆனால் விஸ்வநாதனோ, மிகவும் கவலையுடன் காணப்பட்டார். நிமலுக்கு குமணனுடன் இருந்த விரோதத்தை எண்ணியபடி அவருடைய அறையில் அமர்ந்திருந்தார். அவருக்கு காபி கொடுக்க வந்த பார்வதி, அவர் எதையோ தீவிரமாக யோசித்த படி அமர்ந்திருப்பதை பார்த்து மெல்ல அவர் தோளை தொட்டார். அவரிடம் இருந்து காப்பி குவளையை சிரித்தபடி பெற்றுக் கொண்டார் விஸ்வநாதன்.
"என்ன ஆச்சி? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?"
அவர் ஒன்றும் இல்லை என்று தலை அசைத்தார்.
"இல்லயே... உங்க முகம் வேற எதையோ சொல்லுதே..."
காபியை விழுங்கியபடி அவரைப் பார்த்தார் விஸ்வநாதன்.
"எனக்கு உங்களைப் பத்தி தெரியாது?"
"என்னைப் பத்தி உனக்குத் தெரியும்... நிமலை பத்தித் தெரியுமா?"
அவரைப் பார்த்து மெல்ல, கண்ணிமைதார் பார்வதி.
"அவனுடைய எதிர்காலத்தை நினைச்சாலே எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு. நம்மளுடைய கம்பெனியை அவன் சார்ஜ் எடுத்த பிறகு, அவன் என்ன செய்யப் போறானோன்னு எனக்கு பயமா இருக்கு. அவனுக்குக் குமணன் மேல இருக்கிற கோவம், என்னை குலை நடுங்க வைக்குது. அவனுடைய ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு எண்ணமும், குமணனை நோக்கித் தான் இருக்கு. அவனுடைய ஒவ்வொரு இரத்த செல்லிலும் குமணனுக்காண வெறுப்பு வளர்ந்துகிட்டே போகுது."
"நீங்க அவனை தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க. அவனுடைய இரத்தத்துல குமணன் மேல வெறும் வெறுப்பு மட்டும் இல்ல... வேற ஒருத்தருக்கான காதலும் வளர்ந்துகிட்டு இருக்கு."
"அவன் உன் மேல வச்சிருக்கிற அன்பை ரொம்ப அதிகமாக நினைச்சுக்காதே. அவனுடைய பழி உணர்ச்சியை உன்னால எதுவுமே செய்ய முடியாது."
"நான் என்னை பத்தி பேசல... அவனுடைய இதயத்தை முழுசா கொள்ளையடிச்சுட்ட வேற ஒருத்தரை பத்திப் பேசுறேன் "
"என்ன சொல்ற நீ?" என்றார் நம்பமுடியாமல்.
"நம்ம நிம்மு ஒரு பெண்ணை காதலிக்கிறான்"
"என்ன்ன்ன்னது....?" என்றார் அதிர்ச்சியாக.
ஆமாம் என்று தலையசைத்தார் பார்வதி சிரித்தபடி.
"என்னால இதை நம்ப முடியல"
"ஏன் நம்ப முடியல?"
"உனக்கு தெரியாதா, அவன் எப்படி உள்ளுக்குள்ள கொத்திச்சிக்கிட்டு இருக்கான்னு...? அவனுடைய பழி உணர்ச்சி எவ்வளவு மோசமானதுன்னு? அப்படி இருக்கும் போது, அவனுடைய இதயத்துல எப்படி அவன் இந்த மாதிரியான எண்ணத்துக்கு இடம் கொடுத்தான்?"
"அது தான் காதல். அது பர்மிஷன் எல்லாம் கேட்டுக்கிட்டு இதயத்தில் நுழையாது. காதல் என்கிற அருமையான உணர்வு ஏற்படும் போது, அதிலிருந்து யாராலும் தப்பிக்க முடியாது." என்று சிரித்தார் பார்வதி.
"அதெல்லாம் சாதாரணமானவங்களுக்கு தான் பொருந்தும். உன் மகன் விதிவிலக்கு... அவன் கடுமையான பாதையில பயணம் செய்றவன்"
"ஆனா, அவனுக்கு ஒரு மென்மையான இதயம் இருக்கிறத நீங்க மறந்துடாதீங்க. அவனுக்கு குமணன் மேல இருக்கிற கோபம் பூதாகரமானதா இருக்கலாம். ஆனா அதுக்கு நியாயமான காரணம் இருக்கு. அவனுடைய கோபத்தை அவன் எல்லார்கிட்டயும் காட்டுறதில்ல. அதே மாதிரி தான், அவனுடைய மென்மையான பக்கம் அந்த பொண்ணுகிட்ட வெளிப்பட்டிருக்கு. எப்படிப்பட்ட கடினமான இதயத்தையும் அசைச்சி பாக்கும் ஸ்பெஷல் பர்சன் எல்லார் வாழ்க்கையிலும் நிச்சயம் உண்டு."
"யார் அந்த பொண்ணு?" என்றார் ஆர்வமாக.
"வர்ஷினி... நம்ம நிம்மு கிரிக்கெட் விளையாடி நெத்தியை கிழிச்சானே..."
"ஓ... நீ, என்ஜிஃப் னு கூப்பிடுவியே...?"
"அவளே தான்..."
"உனக்கு நிச்சயமா தெரியுமா, அவன் உண்மையிலேயே அந்த பொண்ணு விஷயத்துல சீரியசா தான் இருக்கானா...?"
"எனக்கு நிச்சயமா தெரியும். அவன் ரொம்ப ரொம்ப சீரியஸா இருக்கான்... அந்தப் பொண்ணு அவனை விட்டாலும், அவன் நிச்சயம் அந்தப் பெண்ணை விடவே மாட்டான்"
"எப்படி இவ்வளவு கன்ஃபிடன்டா சொல்ற?"
"அந்த பொண்ணை அவன் எப்படி பாத்துகிட்டான் தெரியுமா?"
"பாத்துக்கிட்டானா..? எப்போ...? எங்க..? எப்படி...?"
"கொஞ்ச நாளைக்கு முன்னாடி, நம்ம வீட்ல தான்..."
"இங்க அவன் அவளை அழைச்சிகிட்டு வந்தானா?"
"ஆமாம்.. அன்னைக்கு அந்த பொண்ணுக்கு ரொம்ப ஜுரம். அவங்க வீட்ல யாரும் இல்லாததால அவன் அவளை இங்க கூட்டிட்டு வந்தான்."
"ஒருவேளை அவன் அதை நட்பு ரீதியா கூட செஞ்சிருக்கலாம் இல்ல?"
"அது நட்பா, காதலான்னு ஒரு அம்மாவுக்கு தெரியாதா? அந்தப் பொண்ணு தூங்கிக்கிட்டிருந்த போது, அவன் அவ பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்தான். நான் சமைச்ச எல்லாத்தையும் விட்டுட்டு, நான் அவளுக்காக சமைச்சதையே அவனும் சாப்பிட்டான். எல்லாத்துக்கும் மேல, அவளை பார்த்து அவன் கண் கலங்கினான்."
"இத என்னால நம்பவே முடியலயே.. நம்ம நிம்மு அழுதானா? ஆனா, அழறதுக்கு அங்க என்ன இருக்கு? வெறும் ஜுரம் தானே...?"
"அவளை அவங்க அம்மா அப்பா ரொம்ப கொடுமைப் படுத்துறாங்களாம்"
"கொடுமை படுத்துறாங்களா?ஆனா ஏன்? அவள் தத்துக் குழந்தையா?"
"இல்ல... பெண் குழந்தை..."
"என்ன முட்டாள்த்தனம் இது? இதெல்லாம் இன்னுமா இந்த நாட்டுல நடக்குது?"
"எனக்கும் இதெல்லாம் கஷ்டமாத் தான் இருக்கு. பாவம் அந்த பொண்ணு. நான் அவளைப் பார்க்கும் போதே என் மனசுல ஏதோ பட்டது. அது சரியாயிடுச்சி பாத்தீங்களா...?"
"ஒரு விஷயத்தை உறுதிப்படுத்திக்கோ. அந்த பொண்ணு மேல உன் பையன் வச்சிருக்குறது வெறும் பரிதாப உணர்வா இருந்துட போகுது... "
"நிச்சயமா இல்ல... அவ மேல அவனுக்கு பரிதாப உணர்வு இருக்கு. ஆனா அது வெறும் பரிதாபம் மட்டுமில்லை. நிமலே என்கிட்ட இத பத்தி சொல்லிட்டான். அவன் அவளை உண்மையா காதலிக்கிறான்"
விஸ்வநாதனின் முகத்தில் நிம்மதி ரேகைகள் படர்ந்தன. எப்படியோ, அவர் மகனுக்கு பழையவற்றை மறக்க வைக்க ஒருத்தி கிடைத்து விட்டாள்.
"நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி. அவன் உங்கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கிறான். பசங்க எப்பவுமே அந்த விஷயத்துல, அப்பாகிட்ட ஓரவஞ்சனையா தான் நடந்துக்கிறாங்க" என்றார் கவலையாக.
அதைக் கேட்டு பொய் கோபத்தை வரவழைத்துக் கொண்டார் பார்வதி.
"யாரு.... உங்க பிள்ளையா? நான் அவனை கையும் களவுமாக பிடிச்சதுக்கப்புறமா தான் அவன் ஒத்துக்கிட்டான். அவ்வளவு சீக்கிரத்தில் அவன் உண்மையை சொல்லவே இல்லயே... உங்ககிட்ட அதைப் பத்தி சீக்கிரமே சொல்லுவான் பாருங்க."
சற்று நிறுத்தியவர்,
"இந்த அப்பாங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கர்வம் ஜாஸ்தி. எல்லாம் தானாவே தன்னை தேடி வரணும்னு நினைப்பாங்க. அம்மாங்களுக்கு அந்த ரோஷம் எல்லாம் கிடையாது... வலிய போய் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும் நினைப்பாங்க. அதனால தான், எந்த தயக்கமும் இல்லாம எங்ககிட்ட பிள்ளைங்க எல்லாத்தையும் சொல்றாங்க" என்றார்.
"ஓகே... நான் ஒத்துக்கறேன்" என்றார் விஸ்வநாதன்.
"அது தான் உங்களுக்கு நல்லது" என்று சிரித்தார் பார்வதி.
"சரி, உன் மருமகளை பத்தி சொல்லு. அவ எப்படி இருப்பா?" என்றார் ஆர்வமாக.
"அழகா... லட்சணமா... சூப்பரா இருப்பா"
"என்னால அவளை பார்க்க முடியாதா?"
"யாரோ, வருங்கால மருமகள பார்க்க ரொம்ப ஆர்வமா இருக்குற மாதிரி தெரியுது..."
"ஏன் இருக்காது? என் பையனுடைய மனசையே அவ அசைச்சிட்டாளே... அப்ப அவ நிச்சயமா ஒரு எக்ஸ்ட்ராடினரி பர்சனா தான் இருக்கணும். அதனால நான் அவளை பார்க்க நினைக்கிறேன்"
"ஆமாம் அவளுடையது ஒரு தெய்வீக அழகு" என்று வேண்டுமென்றே கூறினார்.
"இந்த மாதிரி எல்லாம் என்னை வெறுப்பேத்தாத... நான் அவளை சந்திக்க முடியாதா? ப்ளீஸ் ஏதாவது பண்ணேன்..." என்றார் கெஞ்சலாக.
"அவ கோயிலுக்கு மட்டும் தான் வருவா. அத கூட நிச்சயமா சொல்ல முடியாது"
விஸ்வநாதனின் முகம் வாடிப்போனதை பார்த்து,
"நான் வேணும்னா முயற்சி பண்ணி பார்க்கிறேன்" என்றார்.
"உண்மையா தான் சொல்றியா?"
"ஆமாம்"
அங்கிருந்து நேரே நிமலின் அறையை நோக்கிச் சென்றார் பார்வதி. உள்ளே நுழைவதற்கு முன் கதவைத் தட்டினார். அவர் அப்படி செய்வதை பார்த்து பெருமூச்சுவிட்டான் நிமல்.
"உள்ள வாங்கம்மா"
சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தார்.
"இது உன்னுடைய ஃபைனல் இயர். அதுக்கு அப்புறம் நீ நம்ம கம்பெனியில் சேர்ந்துடுவ..."
"ஆமாம்"
"எல்லாம் நல்லபடியா நடக்கணும்னு கோவில்ல நான் ஒரு பூஜை ஏற்பாடு பண்ணியிருக்கேன். உனக்காகவும் வர்ஷினிகாகவும்"
நிமல் புன்னகைத்தான்.
"அவளையும் கோவிலுக்கு வர சொல்றியா?"
தன் கண்களை சுழற்றினான் நிமல்.
"எனக்காக டா"
"அவங்க அம்மா அப்பாவை பத்தி நான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லியிருக்கேன் இல்லம்மா... அவ வருவான்னு என்னால நிச்சயமா சொல்ல முடியாது"
"ஆனா, ஒரு தடவை அவ வந்தாளே"
"அவளோட தம்பி கூட்டிக்கிட்டு வந்தான்"
"இந்த தடவையும் அவளுடைய தம்பியை கூட்டிக்கிட்டு வர சொல்லேன்"
நிமல் ஏதோ சொல்ல வாய் எடுக்கும் முன் அவனுடைய கைபேசி சிணுங்கியது. வர்ஷினியின் கைபேசி எண், அவள் புகைப்படத்துடன் ஒளிர்ந்தது. தன் உதட்டை கடித்தான் நிமல்.
அவன் முகபாவத்தை பார்த்தவுடன் புரிந்து கொண்டார் பார்வதி, அந்த அழைப்பு யாரிடமிருந்து வந்திருக்கிறது என்று.
"என்ஜிஃபா?" என்றார் ஆர்வமாக.
ஆமாம் என்று நிமல் தலையசைக்க, அவன் கையிலிருந்து கைபேசியை பிடுங்கி பேசினார். வர்ஷினி எதுவும் கூறுவதற்கு முன்,
"ஹாய், இது நிமல் இல்ல. நிமலுடைய அம்மா..."
"எப்படி இருக்கீங்க, ஆன்ட்டி?"
"நான் நல்லா இருக்கேன். நீ நல்லா இருக்கியா?"
"நல்லா இருக்கேன், ஆன்ட்டி"
"பரீட்சைக்கு படிக்க ஆரம்பிச்சாச்சா?"
"ரொம்ப நாளைக்கு முன்னாடியே..."
"குட்... நான் உன்கிட்ட ஒன்னு கேக்கணும். கோவில்ல நான் ஒரு பூஜை வச்சிருக்கேன். நீயும் அதில் கலந்துகிட்டா எங்களுக்கு சந்தோஷமா இருக்கும்"
"எப்போ, ஆன்ட்டி?"
"வர்ற சனிக்கிழமை. அன்னைக்கு உங்களுக்கு காலேஜ் லீவு தான்"
"நான் நிச்சயம் வர முயற்சி பண்றேன்"
"முயற்சி தானா? நிச்சயமா சொல்ல மாட்டியா?" என்றார்.
"அம்மாகிட்ட பர்மிஷன் வாங்கிட்டு தான் சொல்ல முடியும், ஆன்ட்டி"
"சரி. ஆனா, நான் உனக்காக காத்திருப்பேன்"
"சரிங்க ஆன்ட்டி"
"நிமல் கிட்ட ஃபோனை கொடுக்கிறேன். பேசு"
அவர் நிமலிடம் கைபேசியை கொடுத்தார்.
"நீ வரப் போறியா?" என்றான் நிமல்.
"நான் ரிஷிகிட்ட கேக்குறேன்"
"அவனுக்கு இன்ட்ரஸ்ட் இல்லனா. ரிஸ்க் எடுக்காத"
"ஆனா ஆன்ட்டியை நான் எப்படி டிசப்பாயின்ட் பண்ண முடியும்?"
"அவங்க புரிஞ்சுக்குவாங்க" என்றான் பார்வதியை பார்த்தபடி.
முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார் பார்வதி. அவரைப் பார்த்து புன்னகைத்தான் நிமல்.
"எதுக்காக ஆன்ட்டி பூஜை அரேஞ்ச் பண்ணி இருக்காங்க?"
"அவங்க இதை அடிக்கடி செய்வாங்க. இந்த தடவை நம்ம எக்ஸாமுக்காக"
"நான் நிச்சயம் வர ட்ரை பண்றேன்"
"சூழ்நிலையைப் பார்த்து செய். புரிஞ்சுதா?"
"அதெல்லாம் இல்ல. நிச்சயமா நான் வருவேன்"
"வர்ஷு..."
"இந்த மாதிரி எல்லாம் நான் பூஜைக்கு போனதே இல்ல. முதல் தடவை, அதுவும் உங்க கூடவும், உங்க ஃபேமிலி கூடவும்... "
அவள் பேச்சை வெட்டி,
"நம்ம ஃபேமிலி..." என்றான்.
"அப்புறம் எப்படி நான் வராம இருக்கிறது?"
"நிச்சயமா வரப் போறியா?"
"நான் ரிஷிக்கு அவனுடைய ப்ராஜெக்ட்ல ஹெல்ப் பண்ணி கொடுத்தா, அவன் நிச்சயமா ஒத்துக்குவான்" என்று அவள் குதுகலமாய் சொல்ல களுக்கென்று சிரித்தான் நிமல்.
"அப்ப சரி"
"பூஜைக்கு பிரகாஷ் வரலயா?"
"எக்ஸாமுக்கு முன்னாடி அவனுடைய பேரன்ட்ஸை பாக்கணும்னு அவன் காஞ்சிபுரம் போயிருக்கான்"
"அப்படின்னா இந்த பூஜையை அவர் மிஸ் பண்ணிடுவார்..."
"நீ வேற... இதைவிட பெரிய பூஜையை, அங்க சித்தி ஏற்பாடு பண்ணியிருக்காங்க. அதுக்காகத் தான் அவன் அங்க போயிருக்கான்."
"நிஜமாவா?" என்று சிரித்தாள்
"ஆமாம். அம்மாவை விட, சித்தி இந்த விஷயத்தை எல்லாம் ரொம்ப நம்புவாங்க..."
"எதுக்காக ஆன்ட்டி என்னை பூஜைக்கு கூப்பிட்டாங்க?"
நிமல் அமைதியானான். பார்வதிக்கு அவர்களுடைய விஷயம் தெரியும் என்பதை அவன் வர்ஷினியிடம் கூறவில்லை.
"அவங்களுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு" என்றான்.
"ஆனா இது உங்க ஃபேமிலி ஈவன்ட்..."
"அம்மா, அப்படி எல்லாம் யோசிக்க மாட்டாங்க. அவங்க எல்லாரையும் சொந்த பிள்ளை மாதிரி தான் பாப்பாங்க"
"ஹவ் ஸ்வீட்..."
"ஆமாம்"
"இவ்வளவு ஸ்வீட்டான அம்மாவை நான் பார்த்ததே இல்ல"
"ஆனா, அவங்க ஸ்வீட்டான மாமியாரா இருப்பாங்கன்னு சொல்ல முடியாது" என்று கிண்டலடித்தான்.
"அவங்க ஸ்வீட்டான மாமியாரா இல்லன்னா என்ன? நான் ஸ்வீட்டான மருமகளா இருந்துட்டு போறேன்... அப்போ அவங்க என்னை புரிஞ்சுக்குவாங்க"
"ஓ... அப்படியா?"
"ஆமாம். நான் அவங்ககிட்ட இருந்து எல்லாத்தையும் கத்துக்குவேன்... அவங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்குவேன்... அப்போ அவங்களுக்கு என்னை நிச்சயம் பிடிக்கும்."
சற்று நிறுத்தியவள்,
"பிடிக்கும் தானே....?" என்றாள் கவலையாக.
"அவங்களுக்கு நீ எப்படி இருந்தாலும் பிடிக்கும். நான் தான் இருக்கேன்ல...? நான் பார்த்துக்கிறேன்... கவலைப்படாத"
"நீங்க ஒன்னும் பார்த்துக்க வேண்டாம்"
"ஏன்?"
"இந்த விஷயத்துல நீங்க தலையிடாதீங்க. நான் என் மாமியாரை பார்த்துக்கிறேன்"
"அடிப்பாவி... அவங்க உன்னை பூஜைக்கு கூப்பிட்டாங்க தான்... அதுக்காக என்னை துரத்துறது நல்லாவா இருக்கு...?"
"என்னோட லைஃப்ல எல்லாத்தையும் நான் பாக்கணும். நானே சமாளிக்கணும்... அது எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் சரி."
அவள் பேசுவதைக் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தான்.
"அதுக்காக நான் உங்களை டார்ச்சர் பண்ண மாட்டேன்னு அர்த்தமில்ல" என்று அவள் கூற வாய்விட்டு சிரித்தான்.
"நான் உன்னை ஒன்னு கேட்கலாமா?" என்றான் நிமல்.
"எது வேணும்னாலும்..."
"உங்க அப்பா என்னை பத்தி உன்கிட்ட மனசு கஷ்டப்படுற மாதிரி ஏதாவது சொன்னா என்ன செய்வ?"
"நிச்சயமா அவர் சொல்ல தான் செய்வார், நம்மள பிரிக்க... ஆனா, என்னை யாராலும் மாத்தவும் முடியாது, நம்மை யாராலயும் பிரிக்கவும் முடியாது..."
"ஐ லவ் யூ"
"எனக்கு தெரியும்... ஐ லவ் யூ டூ"
"ஜாக்கிரதையா இரு. யார் கையிலும் கிடைக்காத மாதிரி ஃபோனை பத்திரமா வை"
"நான் பாத்துக்குறேன்"
"சரி. போய் படி... நானும் படிக்க போறேன்"
"ஓகே. பை"
ரிசிவரை முத்தமிட்டு, வழக்கம் போல் அவனை பரவசத்தில் ஆழ்த்தினாள் வர்ஷினி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro