Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Part 21

பாகம் 21

நன்றாய் உறங்கிக் கொண்டிருந்தாள் வர்ஷினி. அவள் தலையணையின் அடியில் வைத்திருந்த ஃபோனின் அதிர்வலைகள், அவளுடைய தூக்கத்தை இடையூறு செய்தன. அது நிமலிடமிருந்து வந்த வீடியோ கால் என்பதால், விளக்கை ஒளிர விட்டு, கண்ணை கசக்கியபடி, தூக்க கலக்கத்துடன் பேசினாள்.

"நிமல்..."

"ஹாப்பி பர்த்டே, மை டியர் தூங்குமூஞ்சி" என்று அவன் சொல்ல,

திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் வர்ஷினி. கண்களை நன்றாக விரித்து, அவளுடைய கைபேசியின் திரையை பார்த்த பொழுது, ஒரு சாக்லேட் கேக்கை கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தான் நிமல். அதன் மீது குத்தி வைக்கப்பட்டிருந்த பாடும் மெழுகுவர்த்தி, மெல்லிய சத்தத்துடன், அழகாய் ஒரு வட்டம் அடித்து நின்றது. அப்பொழுது பிரகாஷும், ராஜாவும் *ஹாப்பி பர்த்டே டூ யூ* என்று பாடிக்கொண்டு கைபேசியின் திரைக்குள் வந்தார்கள். வர்ஷினி சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போனாள் என்று கூற வேண்டிய அவசியம் இல்லை.

"அழுதா, உதை வாங்குவ" என்று அவளை மிரட்டினான் நிமல்.

கண்ணீர் அவள் கன்னத்தில் உருண்டோடும் முன், துடைத்துக்கொண்டாள் வாஷினி.

அந்த கேக்கை வெட்டி அவளுக்கு ஊட்டுவதைப் போல் பாசாங்கு செய்தான் நிமல். அவளும் அதை சாப்பிடுவது போல் பாசாங்கு செய்தாள். ஒரு கேக் துண்டை வெட்டி, பிரகாஷ் அதை சாப்பிட முயல, அதை அப்படியே அவன் முகத்தில் அப்பினான் ராஜா. அதை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள் வர்ஷினி. பிரகாஷ், அதையே ராஜாவிற்கு செய்வதற்கு முன், ஒரு பெரிய துண்டை எடுத்து ஒரு டப்பாவில் பத்திரப்படுத்திக் கொண்டான் நிமல். அவர்களுடைய அலப்பறையை பார்த்து, வர்ஷினி புன்னகைத்தது நிமலுக்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் தந்தது.

"படுத்து தூங்கு. அப்போ தான் காலையில பார்க்க ஃபிரஷ்ஷா இருப்ப"

சரி என்று தலையசைத்தாள் வர்ஷினி.

"குட் நைட்"

"உண்மையிலேயே இந்த நைட்டு தான் என்னுடைய வாழ்க்கையிலேயே *குட்* நைட்" என்றாள் ஆனந்த கண்ணிருடன்.

நிமலுக்கு தெரியும், அவன் அவளை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டான் என்று. அவனுக்கு வேறு வழி இல்லை. இந்த சந்தோஷமெல்லாம் கிடைக்க தகுதியானவள் வர்ஷினி.  இதற்கு முன், வர்ஷினி எப்போதும் அவளுடைய பிறந்த நாளை கொண்டாடியது இல்லை என்று அவனுக்கு தெரியும். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், நிமல் அவளுக்கு கொடுத்த முக்கியத்துவம், வர்ஷினியை எங்கெங்கோ அழைத்துச் சென்றது.

கல்லுரி

சமையல் கலை புத்தகத்தை, வர்ஷினிக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்தாள் சுதா.

"வாவ்....தேங்க்யூ சுதா..."

"மென்ஷன் நாட். நானும் அதைப் படிக்கணும். நிறைய யூஸ் ஃபுல்லான டிப்ஸ் அதுல இருக்கு. கொஞ்ச நாள் கழிச்சி, நான் அதை உன்கிட்ட இருந்து வாங்கிக்கிறேன் "

"ஷ்யூர்..."

"வா போகலாம்"

"எங்க?"

"உன்னுடைய கிங்கை பாக்கலயா?"

ஆமாம் என்று புன்வகையுடன் தலையசைத்துவிட்டு, அவளை பின் தொடர்ந்தாள் வர்ஷினி. வர்ஷினிக்கு பிறந்தநாள் பரிசாக, அழகிய மணிபர்சை கொடுத்தான் ராஜா. பிரகாஷ் அவளுக்கு சாக்லேட் கொடுக்க, நிமல் கையை கட்டிக்கொண்டு அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடம் வந்தாள் வர்ஷினி.

"எங்க என்னோட கிஃப்ட்?"

"உனக்கு கிஃப்ட் வேணும்னா நீ என் கூட வரணும்"

"எங்க"

"வந்து பாரு"

நிமல் சுதாவை பார்த்து புன்னகைக்க, அவள் சரி என்று தலை அசைத்தாள். வர்ஷினியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான் நிமல். அவனுடைய கார் நின்றதைப் பார்த்து ஆச்சரியமானாள் வர்ஷினி.

"கார்ல வந்தீங்களா?"

"ஆமாம். உன்னை ஒவ்வொரு தடவையும் போர்த்தி கூட்டிக்கிட்டு போக வேண்டாம்னு நினைக்கிறேன். அதுவும். இன்னைக்கு நம்ம சிட்டிகுள்ள போகப்போறோம்."

"நீங்க என்னை எங்க கூட்டிட்டு போக போறீங்க?"

"கவலைப்படாதே. நான் ஒன்னும் உன்னை முழுங்கிட மாட்டேன்" என்று சிரித்தான் நிமல்.

அவனுடைய கார், *இனியவர்களின் இருப்பிடத்தில்* நுழைந்ததை பார்த்து தர்மசங்கடபட்டாள் வர்ஷினி.

"என்ன நிமல், உங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்க...? ஆன்ட்டிக்கு நம்ம மேல சந்தேகம் வரப்போகுது"

"வராது"

அவன் காரை விட்டு கீழே இறங்கி, அவள் பக்க கதவை திறந்து விட்டான்.

"எனக்கு ரொம்ப பயமா இருக்கு. ஆன்ட்டி என்ன நினைக்க போறாங்கனு தெரியல"

"அவங்க ஒன்னும் நினைக்க மாட்டாங்கன்னு சொன்னேன்ல... வா... "

தனது கால் சட்டைப் பையில் இருந்து சாவியை எடுத்து, அவன் கதவை  திறந்ததை பார்த்து அவள் விழி விரித்தாள்.

"ஆன்ட்டி வீட்ல இல்லயா?"

"இல்ல"

"அங்கிள்?"

"சித்தியை பார்க்க அவங்க  காஞ்சிபுரம் போயிருக்காங்க"

அவர்கள் வீட்டினுள் நுழைந்தார்கள்.

"சித்தின்னா?"

"பிரகாஷ் அம்மா"

"அப்போ வேலைக்காரங்களை தவிர வேற யாரும் இல்லயா?"

"வேலைக்காரங்க கூட இல்ல... நானும் நீயும் மட்டும் தான்"

"நெஜமாவா....? எவ்வளவு சூப்பரான பர்த்டே கிஃப்ட்..." என்றாள் சந்தோஷமாக.

அவளிடம் ஒரு அட்டை டப்பாவை கொடுத்தான்.

"போய், சேஞ்ச் பண்ணிகிட்டு வா"

"இது என்னது?"

"ஸாரி"

"ரெட் கலரா?"

"கிரீன் கலர்"

"ஆனா, உங்களுக்கு ரெட் கலர் தானே பிடிக்கும்?"

"அதனால தான் அதை வாங்கல" என்று கண்ணடித்தான்.

"என்ன திடீர்னு ஸாரி?"

"ஏன்னா, நான் உன்னை புடவைல பார்த்ததே இல்ல. அதனால தான்"

நிமலின் அறைக்கு சென்று, சில நிமிடங்களில் புடவையை மாற்றிக் கொண்டு வந்து கதவை திறந்தாள் வர்ஷினி. அவளுக்காக வெளியே காத்திருந்த நிமல், உள்ளே வந்தான். அவள் புருவத்தை உயர்த்தி *எப்படி இருக்கிறது?*  என்றாள்.

"அவ்வளவு ஒன்னும் மோசமில்ல" என்றான் கிண்டலாக.

அதை கேட்டு அவள் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே...

"அப்படின்னா இந்த ஸாரியை நான் கழட்டிட போறேன்..."

"சரி கழட்டு" என்றான் கையை கட்டிக்கொண்டு.

"நீங்க வெளிய போங்க"

"போக மாட்டேன்"

"அப்போ நான் வேற ரூமுக்கு போறேன்"

"எங்க போனாலும் நானும் வருவேன். உன்னுடைய பிறந்தநாளில் அது தான் என்னுடைய சபதம்"

"நீங்க நல்லவனே இல்ல"

"அப்பாடா... ஒரு வழியா இப்பவாவது உனக்கு புரிஞ்சுதே... இதை தான் நான் எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன்"

"ஏன்?" என்றாள் குழப்பமாக.

"நல்லவனா நடிக்கிறது ரொம்ப கஷ்டம் தெரியுமா...? இப்போ நான் கெட்டவன்னு உனக்கு தெரிஞ்சு போச்சி. இனிமே என்ன வேணாலும் செய்யலாம்..."

"ஓ அப்படியா, என்ன செய்வீங்க...? வாங்க, செய்யுங்க பாக்கலாம்..."

அவள் அவனை நோக்கி நகர, அவன் பின் நோக்கி நகர்ந்தான். அவள் இப்படி துணிச்சலுடன் கேட்பாள் என்று அவன் எதிர் பார்க்கவில்லை. அவளுடைய கையைப் பற்றிக் கொண்டான்.

"நான் என்ன செய்வேன்னு உண்மையிலேயே நீ பாக்கணுமா?" என்றான் இதழோர புன்னகையுடன். அவள் பதிலைக் கேட்டு அவன் புன்னகை மறைந்தது.

"நீங்க அப்படி ஏதாவது செஞ்சா, நான் உங்களை தடுப்பேன்னு நினைக்கிறீங்களா?"

அவன் வாயடைத்துப் போனான்.

"இப்படிக் கிறுக்குத்தனமா இருக்காதே" என்று அவள் கையை பிடித்து சமையல் அறையை நோக்கி அழைத்துச் சென்றான்.

"என்ன சாப்பிடுற?"

"ஏதாவது..."

 "காபி?"

"யா..."

அவர்கள் சமையல் அறைக்கு வந்தார்கள்.

"உனக்கு காபி போட தெரியாதுன்னு எனக்கு தெரியும்" என்றான்.

ஆமாம் என்று சோகமாய் தலையசைத்துவிட்டு,

"ஆனா நான் கத்துக்குவேன்"

"அது உன்னோட இஷ்டம்"

"இல்ல, நான் நிச்சயமா கத்துக்குவேன்"

இரண்டு கப் காபி தயாரித்து அவளிடம் ஒன்றை நீட்டினான். ஒரு வாய் குடித்துவிட்டு, சப்புக் கொட்டினாள் வர்ஷினி.

"எங்க வீட்டில எந்த குக்கும் இந்த மாதிரி டேஸ்டா காபி போட மாட்டாங்க" என்றாள்.

அதைக்கேட்டு களுக்கென்று சிரித்து,

"தேங்க்ஸ்" என்றான்.

அப்பொழுது வர்ஷினியின் மனதில் ஒரு பைத்தியக்கார எண்ணம் தோன்றியது. காதல் என்பதே பைத்தியக்காரத்தனம் தானே...!

காபியை குடித்து கப்பை மேடையின் மீது வைத்துவிட்டு, அவன் கன்னத்தை பிடித்து நறுக்கென்று கிள்ளினாள்.

"என்னோட ஸாரியை பத்தி நீங்க சொன்னதுகாக இது..." என்று அங்கிருந்து ஓடிப்போனாள். அவளை துரத்திக் கொண்டு ஓடி வந்தான் நிமல். பின்னாலிருந்து அவள் இடையை சுற்றி வளைத்து, காற்றில் வட்டமடிக்க, அவள் கலகலவென சிரித்தாள். அவளைத் தன் மடியில் ஏந்திக் கொண்டு, மூச்சு வாங்க  சோபாவில் அமர்ந்தான். அவன் தோளின் மீது சாய்ந்து கொண்டாள் வர்ஷினி.

அவனை நோக்கி திரும்பி, தனது சேலை முந்தானையால் அவன் முகத்தில் இருந்த வியர்வை முத்துக்களை துடைத்துவிட்டாள். மெல்ல புன்னகைத்தான் நிமல். அவர்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளி குறைந்து கொண்டே போவதை அவன் உணர்ந்தான். அவன் கன்னத்தில், அவள் முத்தமிட்ட பொழுது, அவன் மென்று முழுங்கினான்.

"என்னோட பர்த்டேக்கு நீங்க எனக்கு இப்படி தான் விஷ் பண்ணியிருக்கணும்"

"நான் இந்த மாதிரி குழந்தை முத்தமெல்லாம் கொடுக்க மாட்டேன்" என்றான் சிரித்தபடி.

"அப்போ...?"

"அன்னைக்கு உங்க வீட்டு ஜெனரேட்டர் ரூம்ல எனக்கு கொடுத்தியே..." என்றான் அவள் நெற்றியில் விழுந்த கூந்தல் கற்றையை ஒதுக்கி விட்ட படி.

"உங்களை யார் தடுத்தா?"

"நான் ஏற்கனவே உன்கிட்ட சொன்னேன், நான் நல்லவன் இல்ல" என்று சிரித்தான்.

"உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா....? நானும் கூட ரொம்ப நல்லவ இல்ல"

அது கேட்டு களுக்கென்று சிரித்தான் நிமல்.

"நிஜமாவா?"

"நான் எவ்வளவு கெட்டவன்னு காட்டட்டுமா?"

அவள் மூக்கை பிடித்து லேசாக கிள்ளினான்.

"பைத்தியக்காரி.... கீழே இறங்கு"

மாட்டேன் என்று தலையசைத்தாள்.

"என்னை தேவையில்லாம கெட்டவனா மாத்தாத"

"நீங்க ஏற்கனவே கெட்டவன் தானே?"

"நம்ம காலேஜுக்கு போகலாம்"

"ஏன்?"

"இங்க, என்னோட கன்னித் தன்மைக்கு எந்தப் பாதுகாப்பும் இல்ல" என்றான் கிண்டலாக.

எழுந்து நின்று அங்கிருந்து அவன் செல்ல முயன்ற பொழுது அவள் அவன் கையை கரங்களைப் பற்றிக் கொண்டாள்.

"உங்க கன்னித்தன்மையை நீங்க இழந்தா, நானும் என்னுடையதை இழப்பேன். ஆனா, நான் அதுக்காக வருத்தப்பட மாட்டேன்" என்றாள்.

"நீ என்ன பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா?"

"நான் புரியாம பேசுறேன்னு நீங்க நினைக்கிறீங்களா? என்னுடைய மைண்ட்ல உங்களை தவிர வேறு எதுவுமே இல்ல. என்னுடைய வாழ்க்கை முறையை பத்தி உங்களுக்கு தெரியுமா? நான் எப்படி வாழ்ந்துகிட்டு இருக்கேன்னு உங்களுக்கு தெரியுமா?"

அவள் அழ போகிறாளோ என்று சங்கடப் பட்டான் நிமல்.

"எனக்கு எவ்வளவோ கனவுகள் இருக்கு... யாரை பத்தியும் கவலைப்படாம, உங்க கூட கைய கோர்த்துகிட்டு ரோட்டில் தைரியமா நடக்கணும்... நேரம் போறதே தெரியாம உங்ககிட்ட மணிகணக்கா பேசிக்கிட்டே இருக்கணும்... நீங்க எங்க இருக்கீங்களோ, அந்த இடம் தான் எனக்கு எல்லாமும்... என்னுடைய கனவெல்லாம் நினைவாகும் போது, நீங்க என்னுடைய வாழ்க்கையில எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்னு உங்களுக்கு புரியும். என்னோட முகத்துல தெரியிற சிரிப்பும், சந்தோஷமும், நீங்க எனக்கு கொடுத்தது... இந்த உலகமே எனக்குப் பரிசா  கிடைச்சா கூட, உங்களுக்கு முன்னாடி எனக்கு அதெல்லாம் வெறும் தூசு தான்..." அவள் கண்ணிலிருந்து கண்ணீர் சிந்தியது.

அவளைத் தன் பக்கம் இழுத்து ஆதரவாய் அணைத்து கொண்டான்.

"ஒன்னு புரிஞ்சிக்கோ. நீ இல்லாம நானும் முழுமை அடைய மாட்டேன்... ப்ராமிஸ்... நான் உன்னை கல்யாணம் பண்ணிக்குவேன்... எப்பவும் உனக்காக நான் இருப்பேன்... நம்ம ரெண்டு பேரும் எப்பவும் ஒன்னா தான் இருப்போம்" என்றான் நிமல்.

தன் அணைப்பில் இருந்து அவளை விடுவித்து, தன் கால் சட்டை பையிலிருந்து ஒரு சிறிய டப்பாவை எடுத்தான். அதில் ஒரு வெள்ளை தங்கத்தில் ஆன மோதிரம் இருந்தது. அதை அவளுடைய விரலில் மாட்டி விட்டான்.

"இன்னைக்கு நம்ம நிச்சயதார்த்தம்னு நினைச்சுக்கோ. எதுக்காகவும் நீ கவலைப்படாதே. சீக்கிரமே, அஃபிஷியலா நம்ம கல்யாணம் நடக்கும். எத்தனை குமணனும், காமேஸ்வரனும் வந்தாலும் அதை தடுக்க முடியாது."

சரி என்று புன்னகைத்தாள் வர்ஷினி.

"இந்த ரிங் ஏதுன்னு கேட்டா என்ன சொல்லுவ?"

"சுதா கொடுத்தான்னு சொல்றேன்"

"அது சில்வர் ரிங்குனு சொல்லிடு"

சரி என்று தலையசைத்துவிட்டு,

"நம்ம போகலாமா?" என்றாள்.

"எனக்கு எதுவும் இல்லயா?" என்றான் பல்லை காட்டியபடி.

"யாரோ என் கூட இருக்க ரொம்ப பயந்த மாதிரி இருந்துதே..."

அதைக்கேட்டு வாய்விட்டு சிரித்தான் நிமல்.

"வா சாப்பிடலாம்"

"லன்சா...? யாரு சமைச்சது?"

"நான் தான். கோபால் அண்ணா ஹெல்ப் பண்ணாரு"

"நெஜமாவா?" என்றாள் ஆச்சரியமாக.

"ஆமாம் வா"

உணவு மேஜைக்கு வந்து, அவளுக்கு உணவு பரிமாறினான் நிமல்.

"நீங்க சாப்பிடலயா?"

அவளுக்கு பரிமாறிய தட்டை கையில் எடுத்துக்கொண்டு அமர்ந்தான்.

"அப்போ எனக்கு?" என்றாள்

சாதத்தை எடுத்து அவள் வாயை நோக்கி நீட்ட, அவள் அவனை வியப்புடன் பார்த்தாள்.

"எல்லாத்துக்கும் எமோஷன் ஆகாதே. சாப்பிடு"

"நான் ரொம்ப கொடுத்து வச்சவ"

"ஷ்ஷ்ஷ்... சாப்பிடும் போது பேசக்கூடாது"

அடுத்த வாய் சாதத்தை ஊட்டிவிட்டான். வர்ஷினிக்கு சாப்பாடு என்றால் மிகவும் பிடிக்கும் தான். ஆனால், இன்று சாப்பாட்டின் மீது அவள் கவனம் செல்லவில்லை. ஏனென்றால், உணவுக்கு மேலே, சுவைபதற்கு அவளுக்கு நிறைய விஷயம் இருந்தது...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro