Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Part 20

பாகம் 20

எப்பொழுதும் சோகத்தையே தாங்கி நிற்கும் வர்ஷினியை, எப்படி சந்தோஷப்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தான் நிமல். ஏதாவது செய்து அவளை மகிழ்விக்க வேண்டும் என்று எண்ணினான் அவன். நையாண்டியும், குறும்பு செய்து ஏன் அவளுடைய இறுக்கத்தை போக்கக் கூடாது? இன்னும் இரண்டே மாதங்களில் அவர்களுடைய கல்லூரி வாழ்க்கை முடியப் போகிறது. அதன் பிறகு அவளை பார்ப்பது என்பது நடக்காத காரியம். அவளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க, அவன் ஏதாவது செய்தாக வேண்டும். அப்பொழுது அவனுடைய தோளில் மென்மையான தொடுதலை உணர்ந்து, திரும்பினான் நிமல். அங்கு பார்வதி, புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார்.

"என்னம்மா நீங்க இங்க?"

"நான் இங்க வரக்கூடாதா?"

"நான் அப்படி சொல்லலா மா"

"எனக்கு தெரியும்"

"என்ன விஷயம் சொல்லுங்க"

"எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல"

"நான் ஏற்கனவே உங்ககிட்டே நிறைய தடவை சொல்லியிருக்கேன். நீங்க என்கிட்ட என்ன வேணாலும் கேட்கலாம்"

"அப்பா, உன்னை பத்தி ரொம்ப கவலைபடுறாரு"

"எதுக்குமா?"

"நேத்து, அவர் நம்மளுடைய குடோனை போய் பார்த்திருக்கார். அங்க அவர், பியூர் சாண்டல் கவர்ல, லோ குவாலிடி சோப்பை பார்த்திருக்கார்."

அமைதியாய் இருந்தான் நிமல்.

"அவங்களுடைய கான்ட்ராக்ட் எல்லாம் கேன்சல் ஆயிடுச்சுன்னு கேள்விப்பட்ட போது, எங்களுக்கு குழப்பமா இருந்தது. ஏன்னா, அவங்களுடைய சோப், வேர்ல்ட் ஃபேமஸ். ஆனா, அந்த விஷயத்தில உன்னுடைய கை இருக்கும்னு நாங்க யோசிக்கவே இல்ல. இதெல்லாம் என்ன, நிம்மு? நான் ஒத்துக்குறேன், நீ கடந்து வந்த பாதை ரொம்ப கடினமானது. உனக்கு நடந்த மாதிரி வேற யாருக்கு நடந்தாலும், அவங்களும் இப்படித் தான் இருப்பாங்க. ஆனா, அதே நேரம் பழி வாங்குற வேகத்துல, நீ உன்னுடைய சந்தோஷத்தை இழந்துடாத."

அவர் கையைப் பற்றி, அவரை சோபாவில் அமர வைத்து, அவர் முன் மண்டியிட்டு அமர்ந்தான் நிமல்.

"தயவு செஞ்சி என்னை மன்னிச்சிடுங்க மா. நான் உங்களைக் காயப்படுத்திட்டேன். ஆனா, நான் நிச்சயமா எந்த தப்பும் செய்யல. தயவு செய்து என்னை நம்புங்க. நான் என்ன செய்றேன்னு எனக்கு தெரியும்மா."

"உன்னை நான் நம்புறேன். ஆனா, நீ என்கிட்ட சில விஷயங்களை மறைக்க ஆரம்பிச்சிருக்கேன்னு எனக்கு தோணுது" என்றார் அமைதியாக.

"நான் அதை வேணுமுன்னு செய்யல மா. அதைப் பத்தி நீங்க கேள்விப்பட்டா, ரொம்ப டென்ஷன் ஆயிடுவீங்கன்னு எனக்கு தெரியும். நான் உங்களை அப்படி பார்க்க விரும்பல"

"உனக்கு யார் சொன்னது, உன்னுடைய காதலைப் பத்தி தெரிஞ்சா, நான் டென்ஷன் ஆவேன்னு?"

அதைக் கேட்டு நிமல் வாயடைத்துப் போனான்.

"அந்த விஷயத்தை என்னால மோப்பம் பிடிக்க முடியாதுன்னு நினைச்சியா? இது வரைக்கும் கொஞ்சம் கூட விருப்பம் காட்டாத ஒரு விஷயத்துல, என்னுடைய மகன் விருப்பத்தை காட்டும் போது, அதை கூடவா நான் கவனிக்க மாட்டேன்?"

"இல்லம்மா..."

"உன்னுடைய சொந்த விஷயத்தை என்னோட நீ பகிர்ந்துக்க மாட்டியா?"

"உங்களைத் தவிர வேற யார் கிட்ட நான் அதையெல்லாம் பகிர்ந்துக்க போறேன்? காலேஜ் முடிஞ்சதுக்கு அப்புறம், நானே அதைப் பத்தி உங்ககிட்ட பேசலாம்னு இருந்தேன்"

"உனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு தானே?"

"ரொம்ப... அவகிட்ட ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி இருக்குன்னு தோணுது மா"

"எனக்கும் அப்படித் தான் தோனுது. போற போக்க பாத்தா, கல்யாணத்துக்கு முன்னாடியே நம்ம ரெண்டு பேரையும் அவ கட்டி போட்டுட்டா போலயிருக்கு..."

அதைக்கேட்டு சிரித்தான் நிமல்.

"அவங்க குடும்பத்தைப் பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா?"

இதோ வந்து விட்டதல்லவா சங்கடம்... வர்ஷினி வேறு யாருமல்ல, குமாணனுடைய மகள் தான் என்று அவன் எப்படி கூறுவான்? இப்பொழுது தான், அவன் குமணனுடைய சோப்புகளை மாற்றிய விஷயம் அவனுடைய அம்மாவுக்கு தெரிய வந்தது. வர்ஷினியை பற்றிய உண்மை பார்வதிக்கு தெரிய வந்தால், அவர் அதை எப்படி எடுத்துக் கொள்வார்? அவர்களுடைய உண்மையான காதலை புரிந்து கொள்வாரா? அல்லது வேறு விதமாய், அதை தவறாக எடுத்துக் கொள்வாரா? அதை பற்றி அவரிடம் கூற தக்க சரியான நேரமா இது?

"எதுக்காகம்மா கேக்கிறீங்க?"

"நான் சொன்னேன்ல, அவளுடைய கண்ணுல ஏதோ ஒரு சோகம் இருக்குன்னு. அதுக்காக தான் கேட்டேன்."

"நீங்க சொல்றது ரொம்ப சரி. அவங்க வீட்டுல அவளை ரொம்ப கஷ்டப் படுத்துறாங்க. அவ பொண்ணு அப்படிங்கறதால... பாவம் அவ."

"என்ன கொடுமைடா இது...! எப்படிப்பட்ட பெத்தவங்களா இருப்பாங்க அவங்க...! அவங்களுக்கு இதயமே கிடையாதா? எப்படி ஒரு குழந்தைகிட்ட மட்டும் இப்படி ஒருதலைபட்சமா நடந்துக்க முடியும்? எனக்கு அப்பவே சந்தேகம் இருந்தது. பாவம்... அவளுக்கு எவ்வளவு வருத்தமா இருக்கும்? நீ கவலைப்படாதே. கல்யாணத்துக்கு அப்புறம் அவளை நான் பாத்துக்கிறேன்" என்று வெள்ளந்தியாய் பேசிய அவரை, புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் நிமல். அதைக் கேட்டு அவனுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. பார்வதி அப்படித் தான். வர்ஷினியைப் பற்றி முழுதாய் தெரியாமலேயே அவர் இவ்வளவு கோபப்படுகிறார் என்றால், முழு கதையும் தெரிந்தால் என்ன சொல்வாரோ...! அவர்களின் திருமணத்திற்கு பிறகு வர்ஷினி, நிச்சயம் தாயன்பு என்றால் எப்படி இருக்கும் என்பதை பார்வதியின் மூலமாக தெரிந்து கொள்வாள், என்று முழுதாய் நம்பினான் நிமல்.

மறுநாள் கல்லூரியில்

எதையோ தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்த வர்ஷினியின் தோளைத் தட்டினாள் சுதா.

"என்ன யோசிச்சுக்கிட்டு இருக்க?"

"சமையல் கத்துக்கணும்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்"

"என்ன திடீர்னு?"

"நிமல் வீட்ல சாப்பிட்டேன். சாப்பாடு செம சூப்பரா இருந்தது"

"சரி, அதனால?"

"எனக்கு சுத்தமா சமைக்கவே தெரியாது"

"பார்வதி ஆன்ட்டி கிட்ட கத்துக்கோ"

"கண்டிப்பா கத்துக்குவேன். ஆனா, அதுக்கு முன்னாடி, கொஞ்சம் *பேசிக்* மட்டுமாவது கத்துக்கணும்னு நினைக்கிறேன்... பார்வதி ஆன்ட்டி எவ்வளவு சூப்பரா சமைக்கிறாங்க தெரியுமா?"

"அப்படியா...? நல்லா சமைக்கிறாங்களா? எனக்கு எப்படி தெரியும்? நான் தான் அங்க போனதே இல்லயே..." என்று கிண்டலாக கூறிய சுதாவை, விளையாட்டாய் தோளில் தட்டினாள் வர்ஷினி.

"நீ ரொம்ப லக்கி, சுதா. எப்ப வேணும்னாலும் நீ அவங்க வீட்டுக்கு போற..."

"என்னை விட நீ தான் ரொம்ப லக்கி. ஏன்னா, பிரகாஷோட அம்மா, பார்வதி ஆன்ட்டி மாதிரி ரொம்ப ஜோவிலா இருக்க மாட்டாங்க"

"அப்படியா?"

"ஆமாம். பிரகாஷோட அம்மா தாட்சாயணி, பார்வதி ஆன்ட்டியோட தங்கச்சி. ஆனா, அவங்க எப்பவுமே கெத்தா இருப்பாங்க."

"அவங்க ஃபேமிலி பத்தி எனக்கு சொல்லேன்..." என்றாள் ஆர்வமாக.

"பிரகாஷோட அப்பா பேர் லிங்கேஸ்வரன். தம்பி ஆகாஷ். அவன் பெங்களூரில் படிக்கிறான். நிமலோட அப்பாவுக்கு ஒரே ஒரு தம்பி. அவர் பேர் காசிநாதன். அவருடைய ஒய்ஃப் சந்திரா. அவங்களுக்கும் ஒரே பையன் தான், நிமேஷ். அவங்க கோயம்புத்தூர் இருக்காங்க"

"கொஞ்சம் *சின்ன பெரிய* குடும்பம் தான்"

"சீக்கிரமே நம்மளும் அந்த * சின்ன பெரிய* குடும்பத்தில் சேர போறோம்" என்று கண்ணடித்தாள் சுதா.

அப்பொழுது உணவு இடைவேளை மணி அடித்தது.

"வா கேன்ட்டினுக்கு போகலாம். நம்ம ஆளுங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க" என்றாள் சுதா.

அவள் கூறியது படியே அவர்கள் காத்திருந்தார்கள். வர்ஷினி கேன்டினுக்குள் நுழைய தயங்கியபடி பதட்டத்துடன் நிற்பதை பார்த்தான் நிமல். அவள் ஏன் அப்படி நிற்கிறாள் என்பதை பார்க்க, கேன்டினை விட்டு வெளியே வந்தான் நிமல்.

வர்ஷினியை நோக்கி, கார்த்திக் வருவதைப் பார்த்து, அவனுடைய நரம்புகள் புடைத்தன. அவன் வர்ஷினியை பார்க்க, அவளோ, *வேண்டாம்* என்று பயத்துடன் தலையசைத்தாள். அங்கேயே நின்றான் நிமல். வர்ஷினியிடம் வந்த கார்த்திக், அவளை அழைத்த விதம், அவனுக்கு எரிச்சலை தந்தது.

"எப்படி இருக்க, டார்லிங்?"

நன்றாக இருக்கிறேன் என்று தலையை அசைத்துவிட்டு குனிந்து கொண்டாள் வர்ஷினி.

"நான் கொடுத்த பிரேஸ்லெட் எங்க?" என்றான் அவள் கையை பிடித்து இழுத்தபடி. அது நிமலின் ரத்தத்தை கொதிக்க செய்தது. அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ராஜா, கார்த்திக்கை நோக்கி சென்றான். அவனைப் பார்த்து,

"நீங்க இங்க என்ன செய்ற?" என்றான் கார்த்திக்

"அந்தக் கேள்வியை நான் தான் உன்னை பார்த்து கேட்கணும். இது என்னோட காலேஜ். நீ ( அந்த வார்த்தையை அழுத்தி) இங்க என்ன பண்ற?" என்றான் ராஜா.

"உனக்கு வர்ஷினியை தெரியும்னு நினைக்கிறேன்... அவளை பார்க்க தான் வந்தேன்" என்றான் வர்ஷினியை பார்த்தபடி.

"ஓ... வர்ஷினி உன்னோட தங்கச்சியா?" என்றான் வேண்டுமென்றே, அவனுக்கு ஒன்றும் தெரியாது என்பதை போல.

அதைக் கேட்டு திடுக்கிட்டு போனான் கார்த்திக். ராஜாவோ, தனது சிரிப்பை அடக்க படாத பாடு பட்டான். வர்ஷினியாவது... தங்கையாவது...

*அவள், நான் திருமணம் செய்து கொள்ள போகும் பெண்* என்று கூற வேண்டும் என்று துடித்தான் கார்த்திக்.

ஆனால், வர்ஷினி *இல்லை* என்று மறுத்துவிட்டால் என்னாவது? ராஜாவின் முன் அவமானமாய் போய்விடாதா...? அவர்களுடைய திருமணம் தான் இன்னும் நிச்சயமாகவில்லையே.

"குமணன் அங்கிள் தான் வர்ஷினியை பாத்துக்க சொல்லி, என்கிட்ட கேட்டாரு. அதனால தான் அவளைப் பார்க்க வந்தேன்..."

"இது ஒரு ரெப்யூட்டெட் காலேஜ். நீ அவளைப் பத்தி கவலைப்பட வேண்டியதில்ல. இங்க படிக்கிற ஸ்டூடண்ட்ஸ்ஸுக்கு பொம்பளை பசங்களை எப்படி மதிக்கணும்னு நல்லாவே தெரியும். அதுவும் அவளுக்கு இது ஃபைனல் இயர். அவ ஏற்கனவே இரண்டரை வருஷமா இங்க படிச்சுக்கிட்டு தான் இருக்கா. நீ அவளைப் பார்த்துக்க ரொம்ப லேட்டா வந்திருக்க" என்ற பொழுது அவன் பார்வை நிமலின் மீது இருந்தது.

"இருந்தாலும் நாங்க ஜாக்கிரதையா தான் இருக்கணும். ஏன்னா, அவ குமணனோட டாட்டர்"

"அதுவும் சரி தான்" என்று சற்றே நிறுத்திய ராஜா,

"நேத்து நான் உன்னை ஹோட்டல் சில்வர் மூன்ல ஒருத்தர் கூட பார்த்தேன்" என்றான்.

அதைக்கேட்டு கார்த்திக் பதட்டமானான். ஏனென்றால், ராஜா சொன்ன அந்த ஒருத்தர், ஒரு *பெண்*.

"ஆமாம், ஒரு கான்ஃபரன்ஸ் அட்டன்ட் பண்ண போயிருந்தேன்" என்று வர்ஷினியை பார்த்தபடி பதறினான்.

ராஜா உள்ளூர நகைத்துக் கொண்டான்.

"முக்கியமான ஒரு வேலை இருக்கு, நான் கிளம்பணும். உனக்கு ஏதாவது வேணும்னா எனக்கு ஃபோன் பண்ணு" என்று வர்ஷினியை பார்த்து கூறிவிட்டு, அங்கிருந்து கிளம்பி சென்றான்.

அவன் அப்படி தலைதெறிக்க ஓடுவதைப் பார்த்து சிரித்தான் ராஜா. நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் வர்ஷினி. கார்த்திக்கை விழுங்கி விடுபவன் போல கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்த நிமலை பார்த்தாள் அவள்.

"போகலாம்" என்று ராஜா கூற,

அங்கேயே அசையாமல் நின்று கொண்டு, அவன் கையில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை அழுத்தி பிடித்து நொறுக்கிக் கொண்டிருந்தான் நிமல். அவன் கையிலிருந்து அந்த பாக்கெட்டை பிடுங்கிகொண்டு, அவன் கையை பிடித்து, உள்ளே இழுத்து வந்தான் ராஜா. அமைதியாய் அவர்களை பின்தொடர்ந்தாள் வர்ஷினி. அந்த பிஸ்கட் பாக்கெட்டை பிரகாஷிடம் வீசினான் ராஜா. அதைத் தன் காதருகில் வைத்து ஆட்டி பார்த்தான் பிரகாஷ்.

"இது பிஸ்கட் பாக்கெட்டா...? இல்ல வேற ஏதாவதா...?" என்று முகம் சுளித்தான் பிரகாஷ்.

"கார்த்திக்கோட எலும்பு" என்று சிரித்தான் ராஜா.

அந்த பாக்கெட்டை பிரித்து, அதை ஒரு தட்டில் கொட்டினான் பிரகாஷ். அது தூள் தூளாய் கொட்டியது.

"கடவுளே... பாவப்பட்ட கார்த்திக்கோட எலும்பை, நிமல்கிட்டயிருந்து காப்பாத்து" என்று சிரித்தான் பிரகாஷ்.

"அவன் பாவப்பட்டவனா? எவ்வளவு தைரியம் இருந்தா, அவன் வர்ஷினியை தொடுவான்...?" என்றான் பல்லை கடித்தபடி.

அவன் கூறியதைக் கேட்டு உள்ளூர நடுங்கினாள் வர்ஷினி. நிமலோ ஆத்திரத்தில் கொந்தளித்தான். மெல்ல அவன் கரத்தைப் பற்றினாள் வர்ஷினி. அந்த தொடுதல், அவனுடைய ஆத்திரத்தை குளிர வைத்தது என்று தான் கூற வேண்டும். தன் கண்களை மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான் நிமல். முதல் நாள் தான், அவளை சந்தோஷப்படுத்துவது பற்றி அவன் யோசித்தான். ஆனால் இன்று, அவள் முன், கோபப்படும்படி ஆகிவிட்டது.

தன் கரத்தை பற்றியிருந்த அவள் கரத்தின் மீது கை வைத்து,

"ஐ அம் ஆல்ரைட்" என்றான்.

அவனைப் பார்த்து புன்னகைத்தாள் வர்ஷினி. ஆனால் நிமலுக்கு தெரியும், அது முலாம் பூசப்பட்ட புன்னகை என்று. அப்போது, அவளுடைய *ஜிப்* திறந்திருந்ததை கவனித்தான் அவன். மெல்ல அவள் காதருகே குனிந்து,

"ஜிப்பை போடு" என்றான்.

பதற்றத்துடன் தன் முதுகை தொட்டு, தனது உடையின் ஜிப்பை அவள் மேலே இழுக்க முயன்றாள். ஆனால் அது சரியாகத் தான் இருந்தது. கேள்வியுடன் அவள் நிமலை பார்க்க,

"நான் உன்னோட பேக் ஜிப்பை சொன்னேன்" என்றான்.

சரசரவென ரத்தம் ஏறி, அவள் கன்னம் சிவந்து போனது.

"நீ என்ன நெனச்ச? ம்ம்ம்?" அவன் கிண்டலாக கேட்க, அவன் தொடையை கிள்ளினாள் வர்ஷினி.

"ஆஆஆஆ... வலிக்குது" அவன் சத்தமாய் கத்த,

"அவ என்ன பண்ணா?" என்றான் பிரகாஷ் ஆர்வமாக.

"நான் எப்படி அதை உங்ககிட்ட சொல்ல முடியும்?" என்றான் நிமல்.

வர்ஷினியின் விழிகள் விரிந்தன. அவன் தனது சிரிப்பைக் அடக்குவதை பார்த்து அவள் வாயைப் பிளந்தாள்.

"லவ்வர்ஸுக்கு நடுவுல, இதெல்லாம் சகஜம் தான். பாரு, நம்ம பிரகாஷ் எவ்வளவு வாங்கினாலும் அமைதியா இருக்கான்" என்றான் ராஜா கிண்டலாக.

இந்த முறை சுதா வாயைப் பிளந்தாள்.

"சுதா என்னை நம்பு. நான் ஒரு தடவை கூட, உன்கிட்ட அடி வாங்கினதை பத்தி அவங்ககிட்ட சொன்னதே இல்ல." என்று உளறிக் கொட்டினான் பிரகாஷ்.

"அப்படின்னா, நீ உண்மையிலேயே உதை வாங்கிகிட்டு தான் இருக்கியா, மச்சி?" என்றான் ராஜா.

தன்னைப் பார்த்து முறைத்த சுதாவை பார்த்து பல்லைக்காட்டி சிரித்தான் பிரகாஷ். அதைப் பார்த்து தன் தலையில் அடித்துக் கொண்டாள் சுதா. வர்ஷினியோ, வாய்விட்டு சிரித்தாள்.

அப்பொழுது, வர்ஷினியிடம் ஒரு அகராதியை கொடுத்தான் நிமல்.

"இந்தா, இதை வச்சுக்கோ"

"வீட்ல ஏற்கனவே இரண்டு டிக்ஷனரி இருக்கு"

"ஆனா, இந்த மாதிரி ஒரு டிக்ஷனரியை, நீ இதுக்கு முன்னாடி பார்த்திருக்க மாட்ட" என்றான் ராஜா.

தன்னை பார்த்து மர்ம புன்னகை புரிந்த அவர்களை, குழப்பத்துடன் பார்த்தாள் வர்ஷினி.

"அதை ஓபன் பண்ணு" என்றான் நிமல்.

அதை திறந்து பார்த்தவளுக்கு ஆச்சரியமாய் போனது. அதில் ஒரு கைபேசி இருந்தது. அந்த கைப்பேசி சரியாய் பொருந்தும் வகையில், அந்த அகராதி வெட்டி எடுக்கப்பட்டிருந்தது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது வெறும் அகராதி என்று தான் தோன்றும்.

"ஆனா, நிமல்..."

"இதை உன்னால பப்ளிக்கா யூஸ் பண்ண முடியாதுன்னு எனக்கு தெரியும். ஆனா, இதை உன்னால ஒளிச்சு வைக்க முடியும். எப்பவும் அதை சைலன்ட் மோடில் போட்டு வை. ஆஃப் பண்ணி வெச்சுட்டா ரொம்ப நல்லது. நான் உனக்கு கால் பண்ண மாட்டேன். நீ என்னை நம்பலாம். உன்னை நான் காண்டாக்ட் பண்ணணும்னு நெனச்சா, சுதா மூலமா அதை செய்வேன். இது உனக்காக மட்டும் தான். நீ என்னை எப்ப வேணும்னாலும் காண்டாக்ட் பண்ணலாம். தினமும் ராத்திரி, எல்லாரும் தூங்குனதுக்கு அப்புறம் எனக்கு ஃபோன் பண்ணு. நான் உன்னுடைய ஃபோனுக்காக காத்திருப்பேன். நான் உனக்கு எந்த நேரமும் அவைலபுலா இருப்பேன். ராஜா, பிரகாஷ் நம்பரும் அதில் இருக்கு. என்னை உன்னால காண்டாக்ட் பண்ண முடியலன்னா, நீ அவங்களை கூப்பிடலாம். ஓகேவா?"

அழகான புன்னகையை தன் முகத்தில் ஏந்திக்கொண்டு, கண் இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் வர்ஷினி. நிமல் அவர்களுக்கு இடையில் இருக்கும் கடினத் தன்மையை குறைத்து கொண்டிருக்கிறான் என்பதை புரிந்து கொள்வதில் அவளுக்கு எந்த சிரமும் இருக்க வில்லை. அவள் சரி என்று தலை அசைத்தாள்.

"உங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு தெரியாம இதை நீ ஒளிச்சு வைக்க முடியுமா?"

"என்னோட பெட்டுக்கு அடியில வச்சுக்கிறேன்"

"புக் செல்ஃபுலயும் வச்சுக்கலாம்"

"ஒருவேளை ரிஷி எடுக்கலாம்..."

"சரி, ஜாக்கிரதையா வச்சுக்கோ"

சரி என்று தலையசைத்தாள் வர்ஷினி. அவளுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அவள் எப்போது வேண்டுமானாலும் நிமலிடம் பேச முடியும் அல்லவா...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro