Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Part 2

2 பாகம்

*இனியவர்களின் இருப்பிடம்* என்ற பெயர் பலகையைத் தாங்கிய அழகிய வீட்டினுள் நுழைகிறோம். அது, நம் கதாநாயகன் நிமலின் வீடு தான்.

நிமலின் பெற்றோர்கள், விஸ்வநாதனும், பார்வதியும்   மும்முரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது ஏதோ முக்கியமான விஷயமாக தெரிகிறது.

"இந்த தடவையும், குமணன் இண்டஸ்ட்ரீஸ் தான், காண்ட்ராக்டை ஜெயிச்சிருக்காங்க" என்றார் விஸ்வநாதன்.

"அது ஒன்னும் புதுசு இல்லயே" என்றார் பார்வதி சோகமாக.

"குமணன் எப்பவுமே குறுக்கு வழியில தான் ஜெயிக்கிறார். அவருக்கு எல்லா பெரிய மனுஷங்க கூடவும் நல்ல நட்பு இருக்கு. அதோட மட்டும் இல்லாம, அரசியல் செல்வாக்கும் அவருக்கு இருக்கு."

"நம்பிக்கையைக் கைவிடாதீங்க. நமக்கும் ஒரு காலம் வரும். இன்னும் ஆறு மாசத்துல, நிமல் உங்களோட பிசினெஸ்ல சேர்ந்துடுவான். அவனோட துணை உங்களுக்கு தெம்பைத் தரும்"

"நானும் அந்த நாளுக்காகத் தான் காத்திருக்கேன்"

அப்போது நிமலும், பிரகாஷும், அன்றைய கிரிக்கெட் போட்டியை பற்றி பேசிக் கொண்டு  வீட்டினுள் நுழைந்தார்கள்.

"நீ ஜெயிச்சுட்ட போல இருக்கே" என்றார் விஸ்வநாதன்  நிமலை பார்த்து .

"ஆமாம் பெரியப்பா. எங்க காலேஜ் ஜெயிச்சிடிச்சு" என்றான் பிரகாஷ்.

"கங்க்ராஜுலேஷன்ஸ்... சொன்ன மாதிரியே ஜெயிச்சிட்டீங்களே..." விஸ்வநாதன்.

"ஆமாம்பா. நாங்க, அஞ்சாவது தடவையா ஜெயிச்சிட்டோம்... இது தான் எங்களுக்கு கடைசி வருஷம். நான் இருந்த அஞ்சு வருஷமும், எங்க காலேஜ் வின் பண்ணது எனக்கு ரொம்ப சந்தோஷம்"

"அது டீம் ஒர்க் தானே?" என்றார் பார்வதி கிண்டலாக.

"அது வேணா டீம் ஒர்க்கா இருக்கலாம், பெரியம்மா. ஆனா, ஃபினிஷிங் கிரெடிட் நம்ம நிமலுக்குத் தான். என்னா அடி தெரியுமா...?"

நிமல், அவன் அடித்த அடியையும் நினைத்தான், அந்த அடியால் அடிபட்ட வர்ஷினியையும் நினைத்தான். அவனுடைய முகம் மாறியது. அதை அவன் அம்மா பார்வதி கவனித்தார்.

"என்ன ஆச்சி, நிம்மு?"

"ஒன்னும் இல்லம்மா" என்று அவசரமாய் தலையசைத்தான் நிமல்.

அவனை திடீரென மாற்றியது எது என்று புரிந்து புன்னகை புரிந்தான் பிரகாஷ். தன் புருவத்தை உயர்த்தி *என்ன?* என்று கேட்டார் பார்வதி.

"நிமல் அடிச்ச ஷாட், எதிர் டீமை மட்டும் கிழிக்கல, ஒரு பொண்ணோட நெத்தியையும் கிழிச்சிடுச்சி" என்றான் பிரகாஷ்.

"அடக்கடவுளே... அது எப்படிடா நடந்துச்சி?" என்றார் பார்வதி அதிர்ச்சியாக.

"அவளும் மேட்ச் பாக்க வந்தவ தான், பெரியம்மா" பிரகாஷ்.

"அவ எப்படி இருக்கான்னு தெரிஞ்சிகிட்டீங்களா இல்லயா?"

"அவ நெத்தி கிழிஞ்சு ரத்தம் வந்தது" என்றான் நிமல் சோகமாக.

"பாவம் அந்த பொண்ணு. அவளுக்கு தலை ரொம்ப வலிச்சிருக்கும்ல?" பார்வதி.

"கண்டிப்பா வலிச்சிருக்கும்" என்றான் பிரகாஷ்.

"ரொம்ப அழுதாளா?" பார்வதி.

"அழுதா" என்றான் நிமல்.

"பந்தைப் பாத்து அடிக்க முடியாதா உன்னால?" என்றார் பார்வதி.

"விளையாட்ல இதெல்லாம் சகஜம்" என்றார் விஸ்வநாதன்.

"அது விளையாடுறவங்களுக்கு... பார்க்க வந்தவங்களுக்கு இல்ல"
என்று கூறிவிட்டு, சமையலறையை நோக்கி சென்றார் பார்வதி. தன்னுடைய தவறு அதில் எதுவும் இல்லை என்றாலும், நிமல் அதற்காக வருந்தினான்.

மறுநாள்

தன் வகுப்பிற்கு செல்லாமல்   வர்ஷினிகாக காத்திருந்தான் நிமல். ராஜா கூறியது போல், அவளுடைய கார், சரியாக மணி அடிக்க பத்து நிமிடத்திற்கு முன் கல்லூரிக்குள் நுழைந்தது. அவள், அவசர அவசரமாக அவளுடைய வகுப்பை நோக்கி செல்வதைப் பார்த்தான் நிமல். அவள் முன் சென்று நின்றான் அவன்.

"ஹாய்..."

"ஹாய்..." என்று கூறிவிட்டு அங்கிருந்து அவள் செல்ல நினைத்த போது,

"உன்னோட சீனியர், உன்கிட்ட பேசும் போது, நீ அவனுக்கு ரெஸ்பெக்ட் குடுக்கணும்" என்ற
அவனைப் பார்த்து மென்று முழுங்கினாள் வர்ஷினி.

"இப்ப உனக்கு எப்படி இருக்கு?"

"பரவாயில்ல"

"ஆனா, உன்னுடைய காயம் இன்னும் அப்படியே இருக்கே. நீ மருந்து எதுவும் போடலயா?"

"போட்டேனே" என்று பொய் கூறினாள்.

"எதுக்காக நீ பேண்ட்-எய்ட்டை எடுத்துட்ட?"

"அது வந்து..."

"சரி வா..."

"எங்க?"

"உன்னோட காயத்துக்கு மருந்து போட"

"நோ தேங்க்ஸ்"

"நான் உன்னோட சீனியர். அதை மறந்துடாத. வா என்னோட"

"கிளாசுக்கு டைம் ஆச்சு"

"யாரோட கிளாஸ்?"

"தேவேந்திரன் சார்"

"அவர்கிட்ட நான் பேசிக்கிறேன்" என்றான் கூலாக.

"நீங்க போங்க. நான் பின்னால வரேன்..."

"ஏன்?"

"ப்ளீஸ்..." என்றாள் இங்குமங்கும் பார்த்துக்கொண்டு.

சரி என்று கூறிவிட்டு அவன் முன்னே செல்ல, சிறிது இடைவெளிவிட்டு அவனை பின்தொடர்ந்துச் சென்றாள் வர்ஷினி. அவர்கள் ஸ்போர்ட்ஸ் ரூமுக்கு வந்தவுடன், அவளை அமரும்படி சைகை செய்தான். தலை குனிந்தபடி அங்கு அமர்ந்தாள் வர்ஷினி.

"நேரா உட்காரு"

தன் தலையை மெல்ல உயர்த்தி அவனைப் பார்த்தாள். முந்தைய நாளை போலவே அவளுடைய காயத்திற்கு மருந்திட்டான் நிமல். இமைக்க மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் வர்ஷினி. அவள் தன்னைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்கும் தெரியும். அவன் காயத்திற்கு மருந்திட்டு முடித்தவுடன், மறுபடியும் அவள் தலை குனிந்துக் கொண்டாள்.

"நீ ஒன்னும் சின்ன குழந்தை இல்ல. நீ தான் உன்னை கவனிச்சிக்கணும். புரிஞ்சுதா?"  என்றான் அக்கறையுடன்.

சரி என்று தலையசைத்தாள் வர்ஷினி.

"இரு, நான் உன்னை உன்னோட கிளாஸ்ல விடுறேன்"

"பரவாயில்ல நானே போய்க்கிறேன்"

"ஆர் யூ ஷ்யூர்?"

"எஸ்"

அதன் பிறகு அவள் அங்கு ஒரு நொடி கூட தாமதிக்கவில்லை. அவன், அவளை, அவளுடைய வகுப்பில் கொண்டு விட்டால் என்ன நடக்கும் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள், அவர்களுடைய கல்லூரியின் *செய்தியாகி* விடுவார்கள். வேண்டாத வதந்திகளுக்கு அவர்கள் ஆளாக நேரிடும். அவர்கள் இருவரும் ஸ்போர்ட்ஸ் ரூமிற்கு வருவதை எத்தனை பேர் பார்த்தார்களோ தெரியவில்லை. அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடி போனாள்.

அவள் அப்படி விழுந்தடித்துக் கொண்டு ஓடுவதைப் பார்த்து புன்னகை புரிந்தான் நிமல்.

எப்போதும் சரியான நேரத்திற்கு வகுப்புக்கு வரும் வர்ஷினி, அன்று தாமதமாக வந்ததைப் பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்தார்கள், அவளுடைய பேராசிரியர் உட்பட.

"உன்னுடைய கார் டயர் பஞ்சர் ஆயிடுச்சா?" என்றாள் சுதா.

இல்லை என்று மூச்சு வாங்க தலையசைத்தாள் வர்ஷினி, தன் நெற்றியில் இருந்த பேண்ட்-எய்ட்டை காட்டியபடி.

"ஹாஸ்பிடலுக்கு போனியா?"

"நம்ம சீனியர் என்னை ஸ்போர்ட்ஸ் ரூமுக்கு கூட்டிகிட்டுப் போய் ட்ரீட் பண்ணாரு"

"எந்த சீனியர்?"

"நிமல்"

"ஒ... ஐ சீ"

"நான் வேண்டாம்னு சொல்ல, சொல்ல கேட்காம என்னை கூட்டிட்டு போயிட்டாரு" என்றாள் பதட்டமாக.

"உன்னை அடிச்சிட்டோம்ங்குற கில்ட்டில அப்படி செஞ்சருப்பார்."

சுதா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவளை காயப்படுத்தி விட்ட குற்ற உணர்ச்சியில் நிமல் அதை செய்கிறான் என்று அவள் நினைத்தாள்.

.....

நிமல் தங்கள் வகுப்பிற்கு வந்தான். அவனைப் பார்த்ததும் ராஜாவும், பிரகாஷும்  கிண்டலாக சிரித்துக் கொண்டார்கள்.

"யாரோ, யாரையோ ரொம்ப அக்கறையாக ட்ரீட் பண்ணிட்டு வர்றா மாதிரி தெரியுது" என்றான் ராஜா.

நிமல் தன் கண்களை சுழற்றினான்.

"அது வெறும் ட்ரீட்மென்ட்டா எனக்கு தெரியல" என்றான் பிரகாஷ் அவன் பங்குக்கு.

"ஷட் அப். என்னால தான் அவளுக்கு அடிபட்டது. அதனால தான் அவளை ட்ரீட் பண்ணேன். "

"உனக்கு ஞாபகம் இருக்கா ப்ரகாஷ்? போன வருஷம், இவன் பாக்ஸிங் பிராக்டிஸ் பண்ணிகிட்டு இருந்தப்போ, ஒருத்தனை தெரியாம குத்திடானே..." என்றான் கேலியாக ராஜா.

அதை கேட்டு களுக் என்று சிரித்த பிரகாஷ்,

"அவனுடைய பல்லு கூட உடைஞ்சு" போச்சு என்றான்.

"அவனை, இவன் இப்படி எல்லாம் ட்ரீட் பண்ணதா எனக்கு ஞாபகமே இல்ல." என்றான் ராஜா.

அவர்கள் நிறுத்த மாட்டார்கள் என்று புரிந்துகொண்டு, கடைசி இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான் நிமல். பிரகாஷும் ராஜாவும் அவனைப் பார்த்து சிரித்தார்கள். நிமல் அதைப் பற்றி கவலைப்படவில்லை.

உணவு இடைவேளையின் பொழுது,  நிமலை காணவில்லை. அவன் எப்பொழுதும் பிரகாஷுடனும் ராஜாவுடனும் தான் உணவு உண்பது வழக்கம். அவன் எங்கே சென்றான்? அவர்கள் அவனுக்காக கேன்டீனில் காத்திருந்தார்கள்.  சிறிது நேரத்திற்கு பிறகு நிமல் அங்கு வந்தான்.

"எங்க போயிருந்த?" என்றான் ராஜா.

"கிரிக்கெட் கோச் கூப்பிட்டாரு. அதான் பார்க்க போயிருந்தேன்."

"நாங்களும் கிளாஸில் தானே இருந்தோம்...? உன்னை யாரும் வந்து கூப்பிட்டதை நாங்க பாக்கலயே?"

"நீங்க பார்க்கலன்னா, அதுக்கு நான் என்ன செய்றது?" என்றான் பாந்தமாக.

பிரகாஷும், ராஜாவும்  முகத்தை சுருக்கினார்கள். அப்பொழுது பிரகாஷுக்கு ஃபோன் வந்தது. அது சுதாவிடம் இருந்து வந்தது.

"ஹாய்..."

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, எங்க கிளாசுக்கு நிமல் வந்திருந்தாராம். அப்போ நான்  கிளாஸ்ல இல்ல.  ஏதாவது முக்கியமான விஷயமா? அவர் ஏன் வந்தார்னு உனக்கு தெரியுமா?"

தான் புருவத்தை உயர்த்தி, பிரகாஷ் நிமலை பார்த்தான். 

"அவன் என்னைத் தேடி வந்திருப்பான்" என்று சமாளித்தான் பிரகாஷ்.

"நீ இங்க வந்தியா?"

"இல்ல. உன்னை பார்க்கப் போகப்போறதா சொல்லி இருந்தேன்"

"ஒ... ஏதாவது தேவைப்பட்டா கால் பண்ணு"

"ஷ்யூர்"

அழைப்பை துண்டித்தான் பிரகாஷ்.

"சுதாவுடைய கால்... அவ சொன்னா, யாரோ அவங்க கிளாசுக்கு போனாங்களாம் " என்றான் பிரகாஷ் சிரிப்புடன்.

அவனை ஏறெடுத்தும் பார்க்காமல், அமைதியாய் சாப்பிட்டான் நிமல், தான் பிடிபட்டு விட்டதை உணர்ந்து.

"ஓ, அப்படியா விஷயம்...? ஒரு வேலை, கிரிக்கெட் கோச்,  அவங்க கிளாஸ்ல இருந்தார் போலிருக்கு..." என்றான் ராஜா கிண்டலாக.

அவர்கள் இருவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.

"ஆமாம்... நான் அவங்க கிளாசுக்கு போனேன். இப்போ என்ன அதுக்கு?" என்றான் நிமல்.

"ஒன்னும் இல்லயே... தாராளமா போ. ஆனா, அதை ஏன் எங்ககிட்ட இருந்து மறைக்கிற?  ஃபிராங்கா சொல்லேன், நீ வர்ஷினியைப் பார்க்கத் தான் போனேன்னு..." ராஜா

"ஆமாம். நான் வர்ஷினியைப் பார்க்கத் தான் போனேன். சந்தோஷமா?"

சாப்பிட்டு முடித்துவிட்டு, அங்கிருந்து எழுந்து சென்றான் நிமல். பிரகாஷும் ராஜாவும், ஒருவரை ஒருவர் பொருள் பொதிந்த பார்வை பார்த்துக் கொண்டார்கள்.

"நீ என்ன நினைக்கிற?" என்றான் பிரகாஷ்.

"அவசரபட்டு எந்த முடிவுக்கும் வந்துடாத. அவன் உண்மையிலேயே அவ மேல இருக்கிற பரிதாபத்தில் கூட இதெல்லாம் செய்யலாம்... "

"உண்மை தான்" என்றான் பிரகாஷ்.

மாலை

வர்ஷினியின் வகுப்பறை இருக்கும் கட்டிடத்தின் முகப்பில் காத்திருந்த நிமல், அவள் வருவதைப் பார்த்தான். இன்றும் அவளுடைய நெற்றியில் பேண்ட்-எய்ட் இருக்கவில்லை. அவனைப் பார்த்து திடுக்கிட்டு நின்றாள் வர்ஷினி. சுதாகரித்துக் கொண்டு, தலை குனிந்தபடி அங்கிருந்து நடந்தாள்.

"ஹேய், நீ இப்ப எப்படி இருக்க?"

"நல்லா இருக்கேன்" என்றாள் நடந்துகொண்டே.

"பேண்ட்-எய்ட் எங்க?"

"கீழே விழுந்துடுச்சு"

"ஒன்னும் பிரச்சனை இல்ல. நாளைக்கு மறுபடியும் போட்டு விடுறேன்" என்றான் புன்னகையுடன்.

அவனை ஒரு குழப்ப பார்வை பார்த்துவிட்டு, அங்கிருந்து விரைந்து சென்றாள் வர்ஷினி. வழக்கம் போல அவளுக்காக கார் காத்திருந்தது. அவள் ஏறி அமர்ந்தவுடன் அங்கிருந்து பறந்து சென்றது. தன் கண்ணிலிருந்து அந்த கார் மறையும் வரை அதை பார்த்துக்கொண்டு நின்றான் நிமல்.

சிரித்துக் கொண்டே திரும்பியவனுடைய புன்னகை மறைந்தது, தனக்கு பின்னால் ராஜா, கேள்வி பார்வை பார்த்துக்கொண்டு  நிற்பதைப் பார்த்து. அங்கிருந்து செல்ல எத்தனித்த நிமலை, தடுத்து நிறுத்தினான் ராஜா.

"இதெல்லாம் என்ன நிமல்?"

"என்ன?"

"நீ என்ன செஞ்சுக்கிட்டு இருக்கேன்னு தெரிஞ்சு தான் செய்றியா?"

"நான் என்ன செஞ்சேன்?"

"நிமல் எப்பவும் செய்யாத வேலையெல்லாம் நீ இப்ப செஞ்சுகிட்டு இருக்க"

"என்னால அவ காயபட்டா... அதுக்காகத்தான் அதெல்லாம் நான் செய்றேன்"

"அவ்வளவு தானா?"

"ஆமாம், அவ்வளவு தான்"

"அது அப்படி இருந்தா ரொம்ப நல்லது. ஏன்னா நீ எங்கள மாதிரி இல்ல. உனக்குன்னு ஒரு குறிக்கோள் இருக்கு. அதை நீ மறந்துடாத"

"அந்த விஷயத்துல எதுக்காக நீ அவளை சம்பந்தபடுத்துற? என்னுடைய குறிக்கோளுக்கும் வர்ஷினிக்கும் எந்த சம்பந்தமும் இல்ல"

"அவளால உன்னுடைய கவனம் திசை மாறலாம்"
 
"யாராலயும் என்னுடைய கவனத்தை திசைத் திருப்ப முடியாது. அது உனக்கு நல்லாவே தெரியும். அது சுலபத்தில் மறக்குற விஷயமில்ல"

"எனக்கு அது நல்லாவே தெரியும். அதனால தான் நான் கொஞ்சம் பயந்தேன். உன்னுடைய செயலால அந்த பொண்ணு வருத்தப்பட நேரிடலாம். பாவம் அவ... அவளை ஹர்ட் பண்ணாத"

ராஜா என்ன கூற வருகிறான் என்று நன்றாகப் புரிந்தது நிமலுக்கு. அவன் வர்ஷினிக்கு  பரிந்து பேசுகிறான். அவன் பேசுவது தவறில்லை. இவனுடைய செயல், அந்தப் பெண்ணின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால், அவனுக்கு நிச்சயமாக புரியவே இல்லை, அவன் ஏன் அவள் பின்னால் ஓடுகிறான் என்று...! அவள் கண்ணில் கண்ணீரை பார்த்ததில் இருந்தே, அது அவன் இதயத்தை பிசைந்து கொண்டு இருக்கிறது. அவள் கண்களில் ஒரு சோகம் தெரிகிறது... அந்தக் கண்கள் அவனிடம் ஏதோ சொல்ல வேண்டுமென்று தவிப்பதாக தோன்றியது... அவனுக்கு தொண்டையை அடைத்தது.

"நீ என்ன சொல்றேன்னு எனக்கு புரியுது. நான் அதை பாத்துக்குறேன். இனிமே நான் அவளை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்" என்றான் நிமல்.

"தட்ஸ் கிரேட். லெட்ஸ் கோ..."

அவளை இனி இடையூறு செய்ய மாட்டேன் என்று நிமல் கூறியது உண்மை தான். ஆனால் அவனுக்கு  எப்படி தெரியும், அவன் மனதில் ஏற்கனவே அந்தப் பெண் இடையூறை ஏற்படுத்திவிட்டதால் தான் அவன் செய்யாத வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருக்கிறான் என்று?

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro