Part 19
பாகம் 19
பங்குச்சந்தையில் தனக்கு ஏற்பட்டிருந்த நஷ்டத்தை, எவ்வாறு சரி கட்டுவது என்பதை பற்றி தீவிரமாய் சிந்தித்தபடி இருந்தார் கல்பனா. அவர் எவ்வளவு தான் யோசித்த போதிலும், அவருடைய மனதில் எந்த ஒரு வழியும் பிறக்கவே இல்லை. இறுதியில் ஒரு அருமையான உபாயம் தோன்றியது அவருக்கு. அவருடைய முகம் பிரகாசம் அடைந்தது. அவர்களுக்கு புறச் சென்னையில் ஒரு நிலம் இருந்தது. பல வருடங்களுக்கு முன், அதை வாங்கியிருந்தார் குமணன். இந்நேரம், நிச்சயம் அவர் அதை மறந்திருப்பார். அந்த நிலத்தை, அவருக்கு தெரியாமல், அவருடைய கையெழுத்தைப் பெற்று விற்று விட்டால், ஏராளமான பணம் கிடைக்கும். அதை பங்குச் சந்தையில் முதலீடு செய்து, தன் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தார் கல்பனா.
அவருடைய திட்டத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் மீனா. இந்த விஷயம் குமணனுக்கு தெரிந்து விட்டால், அவர்களுடைய கதி என்னவாகும் என்று பயந்து நடுங்கினாள் அவள்.
"இது என்னமோ, நல்ல ஐடியாவா எனக்கு தெரியல மேடம்" என்று மனதில் பட்டதைக் கூறினாள்.
"நமக்கு வேற வழி இல்ல. என்னால வெறுங்கையோட உட்கார்ந்துகிட்டு இருக்க முடியாது. கையில சல்லிக்காசு இல்ல. அதனால இதை நான் நிச்சயம் செஞ்சு தான் தீருவேன்."
"ஒருவேளை, உங்க திட்டத்தை குமணன் சார் தெரிஞ்சுகிட்டா என்ன ஆகுறது?"
"அவருக்கு அந்த நிலத்தைப் பத்தி ஞாபகம் இருக்க வாய்ப்பே இல்ல. அதை நாங்க வாங்கி பல வருஷம் ஆயிடுச்சு. அவர் நிச்சயம் அதை மறந்து போயிருப்பார். நீ எனக்கு ஸ்டாம்ப் பேப்பரை மட்டும் வாங்கி குடு. மிச்சத்தை நான் பாத்துக்குறேன்."
"அதுல என்ன எழுதிக் கொண்டு வரணும்?"
"அய்யய்யோ... எதுவும் எழுதிடாத. எனக்கு பிளான்க் பேப்பர்ஸை மட்டும் கொடு. அவர்கிட்ட கையெழுத்து வாங்கினதுக்கு அப்புறம், நம்ம என்ன எழுதணுமோ எழுதிக்கலாம். ஒருவேளை அவர் அதை படிச்சா கூட நான் மாட்டிக்கமாட்டேன். எழுதாத பத்திரமா இருந்தா, வேற யாராவது மாட்டிகுவாங்க. நான் தப்பிச்சுடுவேன்"
"சரிங்க மேடம். நாளைக்கு நான் வாங்கிட்டு வரேன்"
கல்பனா நிம்மதிப் பெருமூச்சு விட்டார். அவருடைய பிரச்சனை விரைவில் தீரப் போகிறது அல்லவா...
இனியவர்களின் இருப்பிடம்
அன்று அரசு விடுமுறை என்பதால், அவர்களுடைய இறுதியாண்டு ப்ராஜக்டை பற்றி, நிமலுடன் ஆலோசனை செய்ய, நிமிலின் வீட்டுக்கு வந்திருந்தான் ராஜா.
"பிரகாஷ் எங்க?" என்றான் ராஜா.
"அவன் எங்க போனான்னு எனக்கும் தெரியல" என்றான் நிமல்.
ஒரு தட்டில், சுட சுட, கமகமக்கும் மசால் வடைகளையும், அதற்கு தொட்டுக்கொள்ள காரமான தேங்காய் சட்டினியும் கொண்டு வந்து அவர்களுக்கு முன் வைத்தார் பார்வதி.
"வாவ்.... தேங்க்யூ, ஆன்ட்டி" என்றான் ராஜா, ஒன்றை எடுத்தபடி.
"அப்பா நல்லா இருக்காரா?" என்றார் பார்வதி.
"வழக்கம் போல பிசியா இருக்காரு" என்றான்.
"படிப்பு முடிஞ்சதுக்கு அப்புறம், நீயும் உங்க அப்பாவோட சேர்ந்து, பிஸி ஆயிடுவல்ல?"
"நீங்க சொல்றது ரொம்ப சரி மா. ராஜா, நம்ம மாநிலத்தின் எதிர்கால மந்திரி. நான் அவனை வெள்ளை வேட்டி சட்டையில் பாக்கணும்னு ரொம்ப ஆர்வமா காத்துக்கிட்டு இருக்கேன்" என்று சிரித்தான் நிமல்.
"இவனுக்கு எப்ப பார்த்தாலும் என்னை கிண்டல் பண்றது தான் வேலை. நான் எப்படி தான் அந்த டிரஸ்ஸை போட்டுக்கிட்டு சுத்த போறேனோ எனக்கு தெரியல" என்று சலித்துக் கொண்டான் ராஜா.
"அந்த ட்ரெஸை தான் போடணும்னு ஏதாவது ரூளா?" என்றான் நிமல்.
"அதைப் பத்தி அப்பாகிட்ட தான் கேக்கணும். ஒரு வேளை, அது அவசியம் இல்லன்னு இருந்தா, நம்மளுடைய மந்திரி சபையையும், அமெரிக்கன் மந்திரிசபை மாதிரி, கோட்டு, சூட்டுக்கு மாத்திட வேண்டியது தான்" என்றான் சிரித்தபடி ராஜா.
அப்பொழுது அவர்கள், பிரகாஷ், சுதாவுடன் வருவதைப் பார்த்தார்கள். சுதாவை வெகுநாள் கழித்து பார்ப்பதால் சந்தோஷமானார் பார்வதி.
"எப்படி இருக்க, சுதா?"
"நான் நல்லா இருக்கேன், ஆன்ட்டி "
"வர்ஷினி இப்போ எப்படி இருக்கா?" என்று பார்வதி கேட்க, ஒன்றும் புரியாமல் நிமலை பார்த்தாள் சுதா.
"நேத்து அவளுக்கு ஜுரம்" என்றான் நிமல்.
"ஆமாம். நிமல் தான் அவளை இங்க அழச்சிக்கிட்டு வந்தான். ரொம்ப வீக்கா இருந்தா." என்றார் பார்வதி.
"எனக்கு அதைப் பத்தி எதுவும் தெரியலயே, ஆன்ட்டி" என்றாள் சுதா.
"நீ அவளை பார்க்கலயா?"
"இல்ல, நேத்து முழுசும் நான் அவளை பார்க்கல"
"ஓ..." சற்று நிறுத்தியவர்,
"இன்னைக்கு எல்லாரும், எங்க கூட சாப்பிடுங்க"
"ஷுர் ஆன்ட்டி"
பார்வதி சமையலறைக்கு சென்றார்.
"வர்ஷினிக்கு என்ன ஆச்சி?" என்றாள் சுதா.
"நேத்து அவளுக்கு பயங்கர ஜுரம். அப்படியே காலேஜுக்கு வந்திருந்தா. நான் அவளை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனேன். டாக்டர் அவளை ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க. அதனால, நான் அவளை இங்க கூட்டிட்டு வந்திட்டேன்"
"ஆனா, ஜுரத்தில எதுக்கு அவ காலேஜுக்கு வந்தா?"
"வேற எதுக்கு? நிமலை பார்க்கத்தான். அவனை ரொம்ப மிஸ் பண்ணதால, அவனை பார்க்க வந்தாளாம்" என்றான் பிரகாஷ்.
அதைக்கேட்டு பெருமூச்சுவிட்டாள் சுதா.
"அவளுக்கு நாளுக்கு நாள் பைத்தியம் அதிகமாயிகிட்டே போகுது... " என்று கூறிவிட்டு நிமலை பார்த்து,
"உங்க மேல..." என்றாள்.
நிமலுக்கும் அது தெரிந்தது தானே...!
"நான் அவகிட்ட பேசுறேன்" என்று தனது கைபேசியை எடுத்தாள்.
தாமதிக்காமல் அவள் ஃபோன் செய்ய, அந்த பக்கம் வேறு யாரோ எடுத்து பேசினார்கள்.
"நான் வர்ஷினியோட ஃப்ரண்ட், சுதா பேசுறேன். வர்ஷினி வீட்ல இருக்காளா?"
"..."
"சரி, நான் வெயிட் பண்றேன்"
அவள் கையிலிருந்து கைபேசியை வாங்கி, ஸ்பீக்கரை ஆன் செய்தான் பிரகாஷ். அவளுடைய புருவத்தை உயர்த்தி *என்ன?* என்று அவள் கேட்க, பிரகாஷ், நிமலை நோக்கி தன் கண்ணை காட்டினான். அப்பொழுது அவர்கள் வர்ஷினியின் குரலைக் கேட்டார்கள்.
"சுதா..."
"எப்படி இருக்க, வர்ஷினி?"
"நான் நல்லா இருக்கேன்" என்று மெல்லிய குரலில் சொன்ன அவளது குரல்,
"நேத்து என்ன நடந்துச்சு தெரியுமா?" என்று சந்தோஷமாய் ஒலித்தது.
"என்ன நடந்துச்சு?" என்றாள் சுதா அவளுக்கு ஒன்றும் தெரியாதது போல.
"நேத்து ஃபுல்லா நான் நிமலோட வீட்ல இருந்தேன். அவர் என்னை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிக்கிட்டு போனார்"
"ஹாஸ்பிட்டலுக்கு எதுக்கு?"
"ஏன்னா, நேத்து எனக்கு ஜுரம்"
"நிமல் உங்க வீட்டுக்கு வந்தாரா?"
"இல்ல, இல்ல... காலேஜிலிருந்து தான் கூட்டிட்டு போனாரு"
"உனக்கு ஜுரம் இருந்தப்போ, எதுக்காக நீ காலேஜுக்கு வந்த?"
"நிமலை பார்க்க" என்றாள் மெல்லிய குரலில்.
"அவ்வளவு ஜுரம் இருந்தப்போதும், அதை பத்தி கவலை படாம, காலேஜுக்கு வந்திருக்க..."
"அது எவ்வளவு ஒர்த் தெரியுமா...? நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு உனக்கு தெரியாது. நிமல் எனக்கு கொடுத்த முக்கியத்துவத்தை, இது வரைக்கும் எனக்கு யாருமே கொடுத்ததில்ல. அவர் என்னை எவ்வளவு நல்ல பார்த்துக்கிட்டார் தெரியுமா? அவங்க அம்மா, என்னை அவங்களோட சொந்த மகள மாதிரி பார்த்துக்கிட்டாங்க. நான் அவங்க வீட்டுக்கு போறதுக்கு, ரொம்ப எக்ஸைட்டடா இருக்கேன். இந்த சந்தோஷத்துல இப்பவே நான் செத்துப் போக கூட தயாரா இருக்கேன்"
நிமல் தலை குனிந்தபடி, அமர்ந்திருப்பதை பார்த்தாள் சுதா. ஒரு துண்டுச் சீட்டில் எதையோ எழுதி அவளிடம் கொடுத்தான் ராஜா. அதில் எழுதி இருப்பதை, வர்ஷினியிடம் கேட்குமாறு அவன், அவளுக்கு சைகை செய்தான். அதில் இருப்பதை பார்த்து அதிர்ந்தாள் சுதா. அவள், அதே அதிர்ச்சியுடன் பிரகாஷை பார்க்க, அவன் *கேள்* என்று சைகை செய்தான். சரி என்று தலையசைத்தாள் சுதா. அங்கு என்ன நடக்கிறது என்று நிமலுக்கு தெரியாது.
"நான் கேக்குறேன்னு தப்பா நினைச்சுக்காத, வர்ஷினி. ஒருவேளை, உன்னோட கல்யாணம் நிமலோட நடக்கலானா, நீ என்ன செய்வ?"
அந்தக் கேள்வியைக் கேட்டு, நிமல் தன் தலையை உயர்த்தி அவர்களை பார்த்தான்.
*நிசப்தம்*
"வர்ஷினி.... வர்ஷினி..."
"ம்ம்ம்..."
அவளுடைய மெல்லிய விம்மலை அவர்களால் கேட்க முடிந்தது.
"வர்ஷினி, நீ அழறியா...? நான் சும்மா தான்..."
"நான் செத்துடுவேன்... ஒரு வேளை, எங்க கல்யாணம் நடக்கலன்னா, நான் உயிரோட இருக்க மாட்டேன்"
"வாய மூடு, வர்ஷினி... இப்பல்லாம், ஏன் நீ எப்ப பாத்தாலும் சாவை பத்தி பேசுற?"
"ஏன்னா, உண்மையிலேயே நான் இப்ப தான் வாழணும்னு நினைக்கிறேன். நிமலை பாக்குற வரைக்கும் நான் வாழணும்னு ஆசை பட்டதே இல்ல. ஆனா இப்போ, நான் அவர் கூட வாழணும்... நான் அவரை ரொம்ப காதலிக்கிறேன், சுதா. எனக்குன்னு யாருமே இல்ல. எங்க அம்மாவுக்கு கூட என்னை பிடிக்கல. நிமல் இல்லாம வாழறதை விட, சாவறது எவ்வளவோ மேல் இல்லயா...?" என்றாள் அழுது கொண்டு.
கண்கள் கலங்கியபடி நிமலை பார்த்தாள் சுதா. அவனோ தன் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினான்.
"நீ தனியா இருக்கியா?" என்றாள் சுதா.
"ஆமாம். அம்மாவும் அப்பாவும் வீட்ல இல்ல"
"நிமல் கிட்ட பேசணுமா?"
"அவர் அங்க தான் இருக்காரா?" என்றாள் ஆர்வமாக.
"இல்ல. நான் இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க வீட்டுக்கு போயிடுவேன். போனதுக்கு அப்புறம், அவரை உன்கிட்ட பேச சொல்றேன்"
"ப்ளீஸ், ப்ளீஸ், சீக்கிரமா போயேன்"
"போறேன்"
அழைப்பை துண்டித்த சுதா, தன் தலையில் கை வைத்துகொண்டு, அமர்ந்து கொண்டாள்.
"எனக்கு ரொம்ப பயமா இருக்கு. குமணனுக்கு இந்த விஷயம் தெரிய வரும் போது, அவர் என்ன செய்ய போறாரோ தெரியல..."
"அவரால எதுவுமே செய்ய முடியாது. அப்படியே அவர் எதாவது செஞ்சாலும், அதை எப்படி முறியடிக்கணும்னு எனக்கு தெரியும். அவர் என்னைத் தடுத்து நிறுத்த முடியாது. வர்ஷினி என்னுடையவ" என்றான் நிமல் பல்லைக் கடித்தபடி கோபமாய்.
"ஆனா அவர், கார்த்திக் கூட அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடிவெடுத்திருக்கிறார்"
"அவர் கல்யாணத் தேதியை, ஊரறிய அறிவிக்கிற அந்த நாள், எங்க கல்யாணம் நடக்கும். கல்யாண தேதியை அறிவிச்ச சந்தோஷத்தை கூட அவரால அனுபவிக்க முடியாது" என்றான் தீப்பொறி பறக்க.
ராஜாவும், பிரகாஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். சுதாவோ வாயடைத்து போனாள். இதைத் தான் ராஜா எதிர்பார்த்தான். நிமலிடமிருந்து முடிவான ஒரு முடிவை. அதனால் தான் சுதாவை அந்த கேள்வியைக் கேட்குமாறு சொன்னான்.
"வர்ஷினி உங்ககிட்ட பேச காத்துக்கிட்டு இருப்பா" என்றாள் சுதா.
அவன், ஆமாம் என்று தலையசைக்க, தன் கைபேசியில் இருந்து அவளுக்கு மறுபடி ஃபோன் செய்தாள் சுதா. இந்த முறை, அந்த அழைப்பை வர்ஷினியே ஏற்றாள், அவள் நிமலின் அழைப்பிற்காக காத்திருந்ததால். தன்னுடைய கைபேசியை நிமலிடம் கொடுத்தாள் சுதா. நிமல் வர்ஷினியுடன் பேசுவதற்கு, அங்கிருந்து விலகிச் சென்றான்.
"இப்போ நீ எப்படி இருக்க? உடம்பு பரவாயில்லயா?"
"நான் நல்லா இருக்கேன்"
"மாத்திரை சாப்பிட்டியா?"
"ஐயோ... மறந்துட்டேன்..." என்று இழுத்தாள் வர்ஷினி.
"நான் அங்க வரணுமா?"
"எதுக்கு?"
"ஒழுங்கா மருந்து சாப்பிடாம இருக்கிறதுக்காக, உன்னை ரெண்டு அடி போட"
அதைக்கேட்டு களுக்கென்று சிரித்தாள் வர்ஷினி.
"வரப் போறீங்களா?"
"ஏன் வரமாட்டேன்? ஆனா, உங்க அப்பாவுக்கு நம்மள பத்தி தெரிஞ்சு போச்சுன்னா என்ன செய்வ?"
"ரொம்ப சந்தோஷப்படுவேன்"
"என்னது...? சந்தோஷப்படுவியா...? ஏன்?"
"அதுக்கப்புறம் மறைச்சு வைக்க எதுவுமே இருக்காது. நீங்க என்னை உங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போயிடுவீங்க..."
அவள் பதிலைக் கேட்டு அமைதியானான் நிமல்.
"கூட்டிக்கிட்டு போவிங்க தானே?"
"அதுல ஏதாவது சந்தேகமா?"
"நான் என் மேல சந்தேகப்படுவேனே தவிர, உங்க மேல எனக்கு சந்தேகம் வராது"
"வீட்ல யாரும் இல்லனா, நிம்மதியா ரெஸ்ட் எடு. தேவையில்லாம எதை பத்தியும் யோசிச்சுகிட்டு இருக்காத"
"ம்ம்ம்"
"பை"
"பை"
"வர்ஷினி"
"சொல்லுங்க நிமல்"
"ஐ லவ் யூ"
அதைக் கேட்டு அவள் பரவசம் அடைந்தாள் என்று சொல்ல தேவையில்லை.
"ஐ லவ் யூ டூ"
அவன் அழைப்பைத் துண்டிக்கும் முன், ரிசீவரை முத்தமிட்டாள் வர்ஷினி. கைபேசியை பார்த்து புன்னகைத்தான் நிமல்.
நடக்க வாய்ப்பே இல்லாத ஒரு விஷயத்தை பற்றி கூறும் போது, *அது உன் கனவில் மட்டும் தான் நடக்கும்* என்று கூறுவது வழக்கம். அப்படி நடக்கவே முடியாத ஒரு விஷயம் தான் இப்பொழுது நிமலின் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது. அவன் கிடைக்காவிட்டால், உயிரையும் விடத் தயாராக இருக்கும் ஒரு பெண், தன் வாழ்க்கைத் துணையாய் கிடைப்பாள் என்று அவன் கனவில் கூட நினைத்ததில்லை. அவளை அடைய, அவன் ஆற்ற வேண்டிய காரியம் நிறைய இருக்கிறது. அவள் மட்டும் அவன் கையிலிருந்து தவறி விடவே கூடாது... அவள் அவனுடையவள்... அவனுக்காக பிறந்தவள்... என்று நினைத்தான் நிமல்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro