Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Part 18

பாகம் 18

இனியவர்களின் இருப்பிடம்

நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்தாள் வர்ஷினி. உண்மையைக் கூற வேண்டும் என்றால், அது தான் அவள் உறங்கிய முதல் நிம்மதியான தூக்கம். ஏன் இருக்காது... அவள் இருக்குமிடம் அப்படிப்பட்டதாயிற்றே...!

அவள் அருகிலேயே அமர்ந்திருந்தான் நிமல். அங்கிருந்துச் செல்ல வேண்டுமென்று அவனுக்குத் தோன்றவேயில்லை. அவளுடைய மாசற்ற முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். விதியின் விளையாட்டை அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. குமணன், அவனுடைய பெற்றோரை கொன்றவன். அவன் குமணன் மீது ஆத்திரம் அடைய, அவனுக்கு நியாமான காரணம் இருக்கிறது. ஆனால் இப்பொழுதோ, அவன் குமணனுடைய மகளை காக்க வேண்டும் என்று துடிக்கிறான். அவன் அவளை காக்க வேண்டும் என்று நினைப்பது வேறு யாரிடமிருந்தும் இல்லை, குமணனிடமிருந்தே தான். இதெல்லாம் என்னவென்றே அவனுக்குப் புரியவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக, அவள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அவன் மீது காதல் கொண்டிருக்கிறாள்.  அவளுடைய காதலை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இந்தப் பெண்ணின் பாவப்பட்ட முகத்தைப் பார்த்து அவளுடைய பெற்றவருக்கு எப்படித் தான் அவளை சித்திரவதை செய்ய மனம் வந்ததோ... பாவம், இந்த சிறிய வயதில், அவளுக்கு தான் எவ்வளவு கஷ்டம்...! அவன் கண்ணோரம் ஒரு துளி நீர் உருண்டோடியது. 

எவ்வளவு சீக்கிரம் அனைத்தையும் கற்றுக் கொள்ள முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கற்றுக் கொண்டு, வியாபாரத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான் நிமல். அதற்காகத் தான் அவன் மைசூருக்கு சென்று வந்தான். ஏனென்றால், திருமணத்திற்காக அவன் அதிக காலம் எடுத்துக் கொள்ள முடியாது. குமணன் வர்ஷினியின் திருமணத்தை ஏற்கனவே முடிவு செய்துவிட்டார். அவர் எந்த நேரத்திலும் எந்த முடிவும் எடுக்கலாம். அதற்கு இவன் தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் அந்த காட்டுமிராண்டி கூட்டத்திடம் இருந்து அவன் வர்ஷினியை காப்பாற்ற முடியும். மெல்ல அவள் தலையை வருடி விட்டான்.

வர்ஷினியை பற்றிய எண்ணத்தில் மூழ்கியிருந்ததால், வெளியிலிருந்து ஒருவர் தன்னை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை கவனிக்கவில்லை நிமல். அவர் வேறு யாருமல்ல பார்வதி தான். நிமலின் கலங்கிய கண்களை பார்த்து அவர் பேச்சிழந்து போனார். அவர் நிமல் அழுவதை பார்த்து வெகு காலமாகிவிட்டது. இப்பொழுதெல்லாம், அவன் தன் மன கலக்கத்தை வெளியில் காட்டிக் கொள்வதே இல்லை. ஆனால் இப்பொழுது அவன் அழுகிறான்... வர்ஷினியின் தலையை அன்பாக வருடிக் கொடுக்கிறான்... இவையெல்லாம் அவருக்கு ஏதோ ஒன்றை தெள்ளத் தெளிவாய் விளக்கியது.

வர்ஷினியின் மீது தனிப்பட்ட முறையில் அவன் ஆர்வம் காட்டிய போதே பார்வதிக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்படியென்றால், அவர் சந்தேகம் சரி தான். மெல்ல பின்னோக்கி நகர்ந்தார், அவர் பார்த்ததை நிமல் தெரிந்து கொள்ள வேண்டாம் என்று...! மறுபடியும் லேசான சத்தம் எழுப்பியவாறு அதிர்ந்து நடந்தார், தன் வருகையை நிமல் உணர்ந்து கொள்ளட்டும் என்று. அவர் எண்ணியது போலவே அவர் வருகை புரிந்து கொண்டு அங்கிருந்து எழுந்து நின்றான் நிமல்.

"நிம்மு, லன்ச் ரெடியாயிடுச்சு நீ வர்ஷினி எழுந்துகுறதுக்கு முன்னாடி சாப்பிட்டுடு."

"இல்லம்மா... நான் அவ கூட சேர்ந்து சாப்பிடுறேன்"

"நம்ம சாப்பிடுற ஹெவி ஃபுட்டை அவ சாப்பிட முடியாது. அவளுக்கு சிம்பிளா தான் சமைச்சிருக்கேன். அவ முன்னாடி எப்படி நீ நல்ல சாப்பாடு சாப்பிடுவ?"

"நீங்க அவளுக்கு என்ன சமைச்சிங்க?"

"ரசமும், துவையலும் அப்புறம் கொஞ்சம் உருளை கிழங்கு காரமில்லாம..."

"நானும் அதையே சாப்பிட்டுக்குறேன்"

"ஆனா, ஏன்?"

"அவ இப்ப தான் நம்ம வீட்டுக்கு முதல் தடவையா வந்திருக்கா... அதனால, அவள விட்டுட்டோ, இல்ல வேற சாப்பாடோ, எனக்கு சாப்பிட தோணல மா"

"சரி, அப்போ உங்களுக்கு சாப்பாடு நான் இங்க கொண்டு வந்துடட்டுமா?"

"வேண்டாம்மா. நான் அவளை கீழே கூட்டிகிட்டு வறேன். அவ எப்படி இருந்தாலும் காலேஜுக்கு திரும்பிப் போய் ஆகணும்ல..."

"சரி அப்ப நானும் உங்க கூடவே சாப்பிடுறேன்"

வேண்டாம் என்று கூறவில்லை நிமல். உண்மையில் சொல்லப் போனால், அவனுக்கும் அது தான் வேண்டும். வர்ஷினி விரும்பும்  இந்த குடும்ப கட்டமைப்பை தான், அவன் அவளுக்கு வழங்க வேண்டும் என்று நினைத்தான். பார்வதியும் அவளுடன் உணவு உண்டால் அவள் நிச்சயம் சந்தோஷப்படுவாள்.

அங்கிருந்து தீவிர யோசனையுடன் சென்றார் பார்வதி. அவருடைய மகனின் செய்கைகள் எல்லாம், புதிதாய் இருக்கிறது... அவன் இதற்கு முன்  எப்பொழுதும் செய்யாதவையாக இருக்கிறது. அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் உறவு, சாதாரணமாக தோன்றவில்லை அவருக்கு.

விபி கம்பெனி குடோன்

தங்களுடைய அனைத்து சரக்குகளையும் பாதுகாக்கும் குடோனை பார்வையிட சென்றார் விஸ்வநாதன். அவர் அதை பார்வையிட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டது. அதன் பொறுப்பை நிமல் ஏற்றுக் கொண்டிருந்ததால், அவர் அங்கு வருவதில்லை. அங்கு, நிமல் இல்லாத நிலையிலும், பணியாளர்கள் மிக அக்கறையுடன் பணி செய்து கொண்டிருப்பதை பார்த்து அவர் ஆச்சரியம் அடைந்தார். நிமல் அனைத்தையும் அற்புதமாய் அவனுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறான் என்று மனதிற்குள் அவனை பாராட்டினார்.

அங்கிருந்த ஒரு அறை பூட்டப்பட்டிருந்தது. அது இதற்கு முன் பூட்டப்பட்டதில்லை. அவர் அதை நோக்கி சென்று, அங்கு பணி செய்து கொண்டிருந்த ஒரு பணியாளனை அழைத்து, அதை திறக்கும்படி கூறினார்.

"மன்னிச்சுடுங்க சார். நிமல் சாருடைய உத்தரவு இல்லாம, அதை திறக்க எங்களுக்கு அனுமதி இல்ல." என்று அவர் கூறியதை கேட்டு மூக்கின் மீது விரலை வைத்தார் விஸ்வநாதன்.

அவர் தான் இந்த இடத்தின் முதலாளி என்பதை, அவர்கள்  மறந்து விட்டார்களா? இந்த தொழிலாளி, சிறிதும் பயமோ தயக்கமோயின்றி அவரை தடுத்து நிறுத்துகிறான். அவர் இந்த இடத்திற்கு வருவதை நிறுத்தி சில மாதங்கள் தான் ஆகிறது. இந்த சிறிய காலகட்டத்திற்குள், நிமல் எப்படி அனைத்தையும் அவன் கைக்கு கொண்டு சென்றான் என்று அவருக்கு வியப்பாயிருந்தது.

அவருடைய மகனின் நிர்வாகத் திறமை, வியப்புக்குரியதாய் இருக்கிறது. தொழிலாளர்களை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது, ஒரு முதலாளிக்கு அவ்வளவு சுலபம் அல்ல. ஏராளமான முன் அனுபவம் இருந்தும், அவரால் சாதிக்க முடியாத ஒரு விஷயத்தை, இந்த இளம் வயதில் எப்படி நிமல் சாதித்து விட்டான் என்று அவருக்கு புரியவில்லை. அவருக்கு நிமலை நினைத்துப் பெருமையாக இருந்தது.

மீண்டும், பூட்டியிருந்த அந்த அறையின் மீது அவர் கவனம் திரும்பியது. அந்த அறையில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது.

"நீங்க உங்க *பாஸ்* சொல்றதை கேட்கணும் தான். ஆனா, உங்க பாஸுக்கு, நீங்க என்னை மறுத்து பேசுனீங்கன்னு தெரிஞ்சா சந்தோஷப்படுவாரா?" என்று விஸ்வநாதன் கேட்க,

அங்கிருந்த தொழிலாளர்கள் தலைகுனிந்து நின்றார்கள். அவர்களுக்கு தெரியும், நிமல் விஸ்வநாதன் மீது கொண்டுள்ள மரியாதை. நிச்சயம் நிமல் இப்படிப்பட்ட செய்கையை விரும்ப மாட்டான். ஒருவேளை, நாளை அவனே கூட விஸ்வநாதனை அழைத்து வந்து, அந்த அறையை திறந்து காட்டக்கூடும். விணே அவன் கோபத்திற்கு ஆளாவதற்கு பதிலாக, விஸ்வநாதனுக்கு, அவருக்குரிய மரியாதையை வழங்குவது என்று தீர்மானித்தார்கள் அவர்கள்.

"நான் உங்க பாஸ்கிட்ட பர்மிஷன் வாங்கணும்னா, நான் அவர் கிட்ட பேசுறேன்" என்று தனது மொபைலை வெளியில் எடுத்தார்.

"மன்னிச்சிடுங்க சார். நாங்க அந்த அர்த்தத்துல சொல்லல"

"நீங்க மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்ல. உங்க பாஸ் செய்ய சொன்னதை தானே நீங்க செஞ்சீங்க...?"

அவர்களில் ஒருவர் சாவியை எடுத்து அந்த அறையின் பூட்டை திறந்தார். உள்ளே நுழைந்த விஸ்வநாதன் அதிர்ச்சியில் உறைந்தார். அங்கு குமணனின் *பியூர் சாண்டல்* சோப்பின் உறைகள் ஒரு மூலையில், மலையென குவித்து வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகில் சோப்புகளும் குவியலாகக் கிடந்தன. அதில் ஒன்றை எடுத்து முகர்ந்து பார்த்து அவர், பின்னோக்கி அவர் முகத்தை இழுத்தார். அந்த சோப்பில் துர்வாசனை வீசியது. அவர் விஷயத்தை புரிந்து கொண்டார்.

"இங்க என்ன நடக்குது?" என்றார்

தொழிலாளர்கள் வியர்த்து போனார்கள்.

"இதைப் பத்தி நான் நிமல்கிட்ட எதுவும் கேட்க மாட்டேன். இப்பவாவது சொல்லுங்க"

"குமணன் சாம்ராஜ்யத்தை தரைமட்டமாக்கணும்னு தான் சார், நிமல் சார் இதை எல்லாம் செய்றார். அதனால தான் அவங்களுடைய சோப்பை மாத்திட்டாரு. அவர் எதிர்பார்த்த மாதிரியே, அவங்க எல்லா காண்ட்ராக்டையும் இழந்துகிட்டு இருக்காங்க. நம்மளுடைய கம்பெனி, அவங்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறதால, அவங்க கையைவிட்டுப் போன எல்லா கன்ராக்ட்டும் நமக்கு வந்துடுச்சு."

அதைக் கேட்டு அவருக்கு தூக்கி வாரி போட்டது. அதை கூறும் போது, அந்த தொழிலாளியின் முகத்தில் தெரிந்த பரவசம், அவரை பயத்திற்கு உள்ளாக்கியது. இப்பொழுது தான் அவருக்கு புரிந்தது, நிமல் எவ்வளவு அழகாக யாருக்கும் தெரியாமல் காய்களை நகர்த்திக் கொண்டு இருந்திருக்கின்றான் என்று. குமணன் தனது அனைத்து ஒப்பந்தங்களையும் இழந்தபோது அவருக்கு குழப்பம் ஏற்பட்டது. அதற்கு பின்னால் இருப்பது நிமல் தானா?

குமணன் மீது நிமல் கொண்டிருந்த வெறுப்பு அவருக்கு கவலையை அளித்தது. நிமல் சர்வசாதாரணமாய் பழகுவதை பார்த்து, அவன் ஓரளவு மனம் மாறி விட்டான் என்று நினைத்தார் அவர். ஆனால் அவர் நினைத்தது தவறு. அவன் மனதில் இன்னும் எரிமலை குழம்பு கொதித்துக் கொண்டு தான் இருக்கிறது. இது அவர் எதிர்பாராதது.

இனியவர்களின் இருப்பிடம்

சிறிது நேரத்திற்குப் பின் வர்ஷினி, தூக்கத்திலிருந்து கண் விழித்தாள். அவள் அருகில் அமர்ந்திருந்த நிமலை பார்த்து புன்னகைத்தபடி, தன் நெற்றியில் வைக்கப்பட்டிருந்த ஈர துணியை தொட்டுப்பார்த்தாள். மருத்துவரின் அறிவுரைப்படி, அதை நிமல் தான் வைத்திருக்க வேண்டும். அவன் எதிர்பாராத விதமாய், எழுந்து அமர்ந்து, அவனை அணைத்துக் கொண்டாள் வர்ஷினி.

"எனக்கு வேண்டியதெல்லாம் இது தான். நான் ஒவ்வொரு காலையிலும், தூங்கி எழுந்துக்கும் போது, உங்க முகத்தை தான் பார்க்கணும்னு நினைக்கிறேன்"

"கூடிய சீக்கிரம் அது நடக்கும்" என்றான் அவள் தோளை லேசாய் தட்டியபடி.

அதைக் கேட்டு அவள் பரவசம் அடைந்தாள்.  வழக்கம் போல் அவள் கண்கள் கலங்கியது. *அழாதே* என்பது போல் தலையை அசைத்து, அவள் கண்ணீரை துடைத்து விட்டான் நிமல். பக்கத்தில் வைத்திருந்த குளிர்ந்த நீரில் துணியை நனைத்து, அவள் முகத்தை மெல்ல அவன் துடைத்து விட, அவள் பனிக்கட்டியாய் உருகிப் போனாள். அவள் நெற்றியைத் தொட்டு பார்த்து,

"ஃபீவர் நல்லா குறைஞ்சு போச்சு. சாப்பிட்டுட்டு மாத்திரை போட்டுக்கோ. நீ சாயங்காலத்துக்குள்ள நல்லா ஆயிடுவ."

அவள் சரி என்று தலையசைத்தாள்.

"வா போகலாம்"

கட்டிலை விட்டு கீழே இறங்கி, தனது ஆடையை சரி செய்து கொண்டு, நிமலை பின்தொடர்ந்தாள் வர்ஷினி. பார்வதியும் தனக்காக சாப்பிடாமல் இருப்பதை பார்த்து, அவளுக்கு ஆச்சரியமாய் போனது.

"இப்ப எப்படி இருக்க?"

"எவ்வளவோ பரவாயில்ல, ஆன்ட்டி"

"சரி... இப்போ சாப்பிடலாம். மாத்திரை போட்டுகிட்டா சரியாயிடும். கவலைப்படாதே, இந்த தடவையும் உனக்கு கஞ்சி கொடுத்து நான் போர் அடிக்க மாட்டேன்." என்று அவர் சிரிக்க, வர்ஷினியும் சிரித்தாள்.

"ரசம், துவையல், உருளைக்கிழங்கு வறுவல் இருக்கு. நான் அதிக காரம் போடல."

அவர்கள் மூவரும் உணவருந்த தொடங்கினார்கள். அவர்களும் அதே ரசம், உருளைக்கிழங்கு சாப்பிடுவதை பார்த்தாள் வர்ஷினி. ஏனென்றால், அங்கு மேலும் சில கிண்ணங்களில் வேறு வகை உணவுகளும் வைக்கப்பட்டிருந்தன.

"நீங்க ஏன் இதை சாப்பிடுறீங்க?" என்றாள்.

நிமல் பார்வதியை பார்த்தான். பார்வதி அவளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று விரும்பினான் நிமல்.

"நீ எங்களுடைய விருந்தாளி. உனக்கு போரிங்கான சாப்பாடு குடுத்துட்டு, நாங்க மட்டும் எப்படி நல்ல சாப்பாடு சாப்பிடுறது?"

"பரவாயில்ல, ஆன்ட்டி. நீங்க சாப்பிடுங்க"

"உனக்கு நிமலை பத்தி தெரியாது. அவன் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா, யாராலயும் மாத்தவே முடியாது"

அவர் கூறியதைக் கேட்டு, தங்கள் விஷயத்தை எண்ணி புன்னகைத்தாள் வர்ஷினி. அவள் எதை நினைத்து புன்னகைக்கிறாள் என்று புரிந்து கொண்டான் நிமல்.

வர்ஷினிக்கு இன்னும் கூட சாப்பிட வேண்டும் என்று தோன்றியது. உணவு அவ்வளவு அருமையாய் இருந்தது. அவள் ஒரு கரண்டி சாதத்தை எடுத்த பொழுது அவளை தடுத்தான் நிமல்.

"நிறைய சாப்பிடாத... சாப்பாடு ஒத்துக்கலன்னா வாமிட் வரும்..."

முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு கையை எடுத்து விட்டாள் வர்ஷினி.

"நிம்மு உன்னோட நல்லதுக்கு தான் டா சொல்றான். கவலைப்படாதே. உனக்கு உடம்பு சரி ஆனதுக்கப்புறம், உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு, நான் சமைச்சு கொடுக்கிறேன்" என்றார் பார்வதி.

சரி என்று சந்தோஷமாக தலையசைத்தாள் வர்ஷினி. அவர் கூறியது நிமலுக்கு மிகவும் பிடித்திருந்தது. சாப்பிட்டு முடித்து வரவேற்பறைக்கு வந்து அமர்ந்தார்கள் அவர்கள். அப்பொழுது திடீரென்று வர்ஷினிக்கு தலைசுற்றியது. அவள் தலையை பிடித்துக் கொண்டு, நிற்கவே தடுமாறினாள். அவளை சோபாவில் அமர வைத்து, அவள் பக்கத்தில் அமர்ந்தார் பார்வதி.

"என்ன ஆச்சும்மா?"

"தலை சுத்துது, ஆன்ட்டி"

"கொஞ்ச நேரம் படுத்தா சரியாயிடும்" என்று அவளை தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டார்.

அவருடைய செய்கை வர்ஷினியை தடுமாற வைத்தது. இந்த அம்மாவும், பிள்ளையும், செய்கையாலும் மனதாலும் ஒன்றுபட்டவர்கள். அந்த மனதை அள்ளும் காட்சியை காண, அவர்கள் அருகில் அமர்ந்தான் நிமல். எதிர்காலத்தில், மிகச் சிறந்த மாமியார்-மருமகளாக அவர்கள் இருப்பார்கள் என்று நினைத்தான் அவன்.

"நிம்மு, அவங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணி, இன்னைக்கு வர்ஷினி இங்கேயே இருப்பான்னு சொல்லு"

அவர்கள் இருவரும் அதிர்ந்தார்கள்.

"நீ தானே சொன்னே அவங்க வீட்ல யாருமே இல்லன்னு... அவளை நம்ம பாத்துக்கலாம்"

"அவங்க இந்த நேரம் வந்திருப்பாங்க. நான் சொல்றது சரி தானே?" என்றான் நிமல்.

ஆமாம் என்று அவசரமாய் தலையசைத்தாள் வர்ஷினி.

"கவலைப்படாதீங்கம்மா. ஒரு நாள் அவளை நான் அழைச்சிக்கிட்டு வரேன்" என்று இரட்டை அர்த்தத்தில் கூறினான்.

அவன் கூறியதை கேட்டு வர்ஷினியின் விழிகள் விரிந்தது. பார்வதியோ, எதையும் புரிந்து கொள்ளாதவர் போல் சந்தோஷமாய் தலையசைத்தார்.

பார்வதியின் கையில் மருதாணி வைத்திருந்ததை கவனித்தாள் வர்ஷினி. அவர் கைப்பற்றி அதை பார்க்க,

"உனக்கு ஃபீவர் இல்லன்னா உனக்கும் வச்சு விடுவேன்" என்றார்.

"ஆமாம் அது ரொம்ப கோல்ட்" என்றான் நிமல்.

"நிமல், உன்னை இங்க கூட்டிட்டு வருவான்ல, அப்ப நான் உனக்கு வச்சிவிடுறேன்" என்ற அவரைப் பார்த்துப் புன்னகைத்தார்கள் அவர்கள் இருவரும்.

வர்ஷினி கிளம்பும் நேரம் வந்தது. பார்வதியிடம் விடைபெற்றுக் கொண்டு, அறைமனதாய் அங்கிருந்து கிளம்பினாள், அவரை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே.

பார்வதிக்கு கூட மனம் வேதனைப்பட்டது. அந்தப் பெண்ணின் மீது ஏதோ இனம் புரியாத கரிசனம் அவருக்கு தோன்றியது. அவளுடைய குடும்பத்தைப் பற்றி கேட்காமல் விட்டு விட்டோமே என்று வருத்தப்பட்டார். நிமல் மறுபடியும் அவளை இங்கு அழைத்து வரும் போது கேட்டு விடுவது என்று தீர்மானித்தார்.

காரில்

"உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ்" என்றாள்.

"ஓ... அப்படியா?"

அவள் ஆமாம் என்று தலையசைத்தாள்.

"என்கிட்ட ரொம்ப ஃபார்மலா இருக்காத."

"நானும் இருக்கக் கூடாதுன்னு தான் நினைக்கிறேன். ஆனா இன்னைக்கு நான் பார்த்தது எல்லாமே, நான் கனவிலும் நினைக்காத ஒன்னு. இந்த மாதிரி, ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு, சந்தோஷமா இருக்கிற குடும்பத்தை தான் சொர்கம்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்" அவள் உணர்ச்சி வசப்பட்டாள்.

"நீயும் சீக்கிரம் அந்த சொர்க்கத்துக்கு வந்துடுவ"

"அந்த நாளுக்காக நான் காத்திருக்கேன்"

புன்னகையுடன் தலையசைத்தான் நிமல்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro