Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Part 17

பாகம் 17

சந்தன கட்டைகளை கொள்முதல் செய்வதற்காக, நிமலை மைசூருக்கு அனுப்பினார் விஸ்வநாதன். அவர்களுடைய நிறுவனத்தின் தணிக்கைக்கு ஒரு வாரமே இருந்ததால், விஸ்வநாதனால் செல்ல முடியவில்லை. அதனால் நிமலை அனுப்பிவைத்தார். அதன் காரணமாக, அவன் ஒரு வாரம் கல்லூரிக்கு வரவில்லை.

அவனை பார்க்காமல் இருந்தது, வர்ஷினிக்கு மிகவும் வருத்தத்தை தந்தது. ஆனாலும் அது தவிர்க்க முடியாதது என்பது அவளுக்கு தெரியும். நிமல் கல்லூரிக்கு வந்தால், அவளை பார்க்காமல் இருக்க மாட்டான் என்று தெரிந்தும் கூட, தினமும் அவனுடைய வகுப்பறைக்கு சென்று, அவன் வந்து விட்டானா என்று பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தாள். ஒரே வாரத்தில் அவள் சற்று இளைத்து, அவள் முகம் பொலிவிழந்து போனதை, ராஜாவும் பிரகாஷும் கவலையுடன் பார்த்தார்கள்.

நிமலும் அவளை பார்க்காமல் தவித்தான். அவர்கள் முதல் *டேட்*க்கு சென்று வந்த பிறகு, அவன் அவளை சந்திக்கவே இல்லை. அவளை பார்க்க வேண்டும் என்று அவனுக்கும் ஆவலாக தான் இருந்தது. ஆனால் விஸ்வநாதனுடைய விருப்பத்திற்கு மாறாக நடக்க, அவன் விரும்பவில்லை. அதனால் மைசூர் கிளம்பி வந்து விட்டான்.

நிமலுக்கு கைப்பேசி அழைப்பு வந்தது, ராஜாவிடம் இருந்து.

"ஹாய் ராஜா... எப்படி இருக்க? ஏதாவது முக்கியமான விஷயம் இருக்கா?"

"நீ எப்போ திரும்பி வர போற? வர்ஷினி பாக்கவே எவ்வளவு பாவமா இருக்கான்னு உனக்கு தெரியுமா?"

"எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறாயா?"

"அவ பாவம் மச்சி..."

"எனக்கு தெரியும்டா. நான் இன்னைக்கு ராத்திரி இங்கிருந்து கிளம்புறேன். நாளைக்கு காலேஜ்க்கு வருவேன்."

"அப்பாடா... இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு"

"எனக்கும் தான். நாளைக்கு சந்திக்கலாம்"

"ஓகே"

அவர்கள் அழைப்பைத் துண்டித்து கொண்டார்கள். வர்ஷினி, சுதாவுடன் வருவதை கண்டான் ராஜா. கட்டை விரலை உயர்த்தி அவன் வர்ஷினியை பார்த்து புன்னகைத்தான்.

"நிமல் நாளைக்கு வரான்" என்றான்.

அதைக் கேட்டு அவள் முகம் பளிச்சிட்டது. இந்த வாரம் முழுதும் அவனைப் பார்க்காமல் அவனது நினைவாகவே இருந்தாள் அவள். அவன் இருந்தாலும், அவன் நினைவாகத்தான் அவள் இருப்பாள். ஆனால் இது, சோகமான நிலை. இந்த சிறிய இடைவெளியே அவளை வறுத்தெடுத்து விட்டது. அவள் முகத்தை பார்க்க முடியாமல் தான், ராஜா நிமலுக்கு ஃபோன் செய்தான்.

மறுநாள்

ராஜாவும், பிரகாஷும், இழந்த தங்கள் சக்தியை மீண்டும் பெற்றார்கள், நிமல் வந்ததால். அவனை பார்த்து வர்ஷினி அவனை நோக்கி ஓடிவந்தாள். அவள் முகம் வெளுத்துப் போயிருந்ததை கவனித்தான் நிமல். அவள் பலவீனமாகவும் இருந்தாள். அவளுக்கு என்ன ஆனது? அவளிடம் வந்தான் நிமல். புன்னகையுடன் அவன் முன் நின்றாள் வர்ஷினி.

"எப்படி இருக்கீங்க?"

"ஃபைன்..."

"அப்பா கொடுத்த வேலையை சரியாக செஞ்சீங்களா?"

"செண்ட் பர்செண்ட்..."

அவள் சரியாய் நிற்கவே தடுமாறுவதை அவன் கவனித்தான்.

"நீ நல்லா தானே இருக்க?" என்று அவள் தோளை தொட்டான். அவளுடைய உடல் நெருப்பாய் கொதித்தது.

"உனக்கு ஜூரம் அடிக்குது" என்றான் பதற்றதுடன்.

"ஆமாம்" என்றாள்

"அப்புறம் எதுக்கு காலேஜுக்கு வந்த?"

"வேற எதுக்கு? உங்களைப் பார்க்க தான். நான் உங்கள ரொம்ப மிஸ் பண்ணேன்"

என்ன பெண் இவள்? என்றானது நிமலுக்கு.

"ஆனா, உன்னோட உடம்பு நெருப்பா கொதிக்கிது"

"உங்களைப் பார்த்துட்டேன்ல...? இனிமே சரியாlயிடுவேன்"

"வா ஹாஸ்பிட்டலுக்கு போகலாம்"

"வேண்டாம் நிமல். நான் நல்லா இருக்கேன்"

"எதுவும் பேசாம என்னோட வரணும். புரிஞ்சிதா?"

ராஜாவை பார்த்து, *உனக்கு நான் பிறகு ஃபோன் செய்கிறேன்* என்று சைகையில் கூறினான் நிமல். அதற்கு ராஜா, சரி என்று தலை அசைத்தான்.

ஒரு ஆட்டோவை நிறுத்தி, அதில் அவளை அமரவைத்து, தானும் அமர்ந்து கொண்டான். இந்த முறை இருசக்கர வாகனத்தில் செல்ல அவன் விரும்பவில்லை. ஏனென்றால், அவர்கள் செல்வது உள்ளூர் மருத்துவமனை என்பதால் அது அவளுக்கு பிரச்சனையாகலாம். அவன் கையை சுற்றி வளைத்துக் கொண்டு, அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் வர்ஷினி. அவர்கள் மருத்துவமனையை வந்தடைந்தார்கள். டோக்கனை வாங்கிக்கொண்டு அவர்களுடைய முறைக்காக காத்திருந்தார்கள்.

"உனக்கு உடம்பு சரியில்லாத நேரத்தில, எதுக்காக இப்படி ரிஸ்க் எடுக்குற?"

"உங்களைப் பார்க்கணும்னு நினைச்சேன். நீங்க இன்னிக்கு வருவீங்கன்னு தெரியும். நாளைக்கும் கவர்மெண்ட் ஹாலிடே. அப்படி இருக்கும் போது நான் எப்படி இந்த சான்ஸை மிஸ் பண்றது?"

"எல்லாம் சரி தான். ஆனா, உனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா என்ன செய்யறது?"

அதற்கு ஒன்றும் கூறாமல் அமைதியாக இருந்தாள் வர்ஷினி. அவர்கள் வீட்டில் அவளை கவனித்துக் கொள்ள யாருமே அக்கறை காட்ட மாட்டார்கள் என்பதை அவள் எப்படி கூறுவாள்?

வர்ஷினி மருத்துவரின் அறைக்கு அழைக்கப்பட்டாள். அவளுடன் நிமலும் சென்றான். அவளைப் பரிசோதித்த மருத்துவர்,

"மை காட்... 109°... ரொம்ப ஹை ஃபீவர் இருக்கு. இந்த சமயத்தில் நீங்க கவனமா இருக்கணும். இல்லன்னா உங்களுக்கு வலிப்பு வர வாய்ப்பிருக்கு"

தலை குனிந்து கொண்டாள் வர்ஷினி.

"அவளுடைய ப்ரீவியஸ் மெடிக்கல் ஹிஸ்டரிய நீங்க தெரிஞ்சிக்கிறது அவசியம்ன்னு நான் நினைக்கிறேன் டாக்டர். அவளுக்கு சில ஹெல்த் இஷ்ஷுஸ் இருக்கு." என்றான் நிமல்.

"அப்படி ஏதாவது இருந்தா, இப்பவே சொல்லிடுங்க. அதுக்கு தகுந்த மாதிரி தான் மருந்து கொடுக்கணும். ஹை டோஸ் கொடுத்தா ஏதாவது பிரச்சனை ஆகும்"

"உன்னுடைய ஹெல்த் கண்டிஷன்ஸை நீயே சொல்றியா,  இல்லன்னா நான் சொல்லவா...?"

"எனக்கு அல்சர் இருக்கு. ஏற்கனவே ஃபிட்ஸ் வந்திருக்கு."

"என்னது...? நீங்க கன்சல்ட் பண்ற டாக்டர், இது எவ்வளவு டேஞ்சரஸ்ன்னு உங்களுக்கு சொல்லலயா? நீங்க ஃபிட்ஸ் பேஷன்ட். அப்படியிருந்தும், இவ்வளவு ஹை ஃபீவரோட எப்படி வீட்டில உக்காந்து இருந்திங்க...?"

நிமலின் பக்கம் திரும்பினார் மருத்துவர்.

"நீங்க இதையெல்லாம் கவனிக்கிறது இல்லயா? இவ்வளவு மோசமான ஜுரம் இருந்தா மறுபடி அவங்களுக்கு ஃபிட்ஸ் வரும். அல்சர் வேற... ஒல்லியா இருக்கணும்னு டயட்ல இருக்கீங்களா?"

எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருந்தாள் வர்ஷினி.

"இந்த காலத்து பசங்கள என்ன சொல்றதுன்னே தெரியல. என்னால அதிக டோஸ் கொடுக்க முடியாது. அவங்களுக்கு அல்சர் இருக்குறதால..."

மருந்து மாத்திரைகளை எழுதி, அதை நிமிலிடம் கொடுத்தார்.

"மெடிசன்ஸை மறக்காமல் சாப்பிட சொல்லுங்க. ஃபீவர் குறைய, வெட் ஸ்பாஞ்சிங் பண்ணுங்க. ரொம்ப முக்கியமா, அவங்க கம்ப்ளீட் ரெஸ்டில் இருக்கணும்."

"சரிங்க டாக்டர்" நிமல்.

மீண்டும் ஒரு ஆட்டோவை அமர்த்தி, தன் வீட்டிற்கு போகச்சொல்லி பணித்தான்.

"உங்க வீட்டுக்கு போறமா?" என்றாள் வர்ஷினி அதிர்ச்சியாக.

"ஆமாம். டாக்டர் உன்னை ரெஸ்டுல இருக்க சொன்னாங்களே கேட்கலயா?"

"ஆனா, ஆன்ட்டி என்ன நினைப்பாங்க?"

"நான் பாத்துக்குறேன்"

"ஆனா நிமல்..."

"நான் பாத்துக்கிறேன்னு சொல்லிட்டேன்ல...  இவ்வளவு அதிக ஜுரத்தோட நான் உன்னை எப்படி அனுப்ப முடியும்? நான் ரிஸ்க் எடுக்க தயாராயில்ல" என்றான்.

மீண்டும் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

"நீங்க என் மேல இவ்வளவு அபெக்ஷனா இருந்தா, நான் எப்படி உங்ககிட்ட வராம இருப்பேன்?"

அதைக் கேட்டு மெல்ல தன் கண்களை மூடினான் நிமல். அவளுடைய உடல்நிலையைப் பற்றி நன்கு அறிந்திருந்தும் கூட, அவனை பார்ப்பதற்காகவே இந்த அதிகமான ஜுரத்திலும் வந்திருக்கிறாள். ஆனால் அவளோ, அவன் அவள் மீது அதிகமான அன்பை பொழிவதாய் கூறுகிறாள். வாழ்நாள் முழுவதும் சேவை செய்தால் கூட, இந்தப் பெண்ணின் அன்புக்கு ஈடாக முடியாது. இந்த பெண் இப்படி உருகும் அளவிற்கு அவன் அப்படி என்ன செய்துவிட்டான்? இப்படிப்பட்ட தன்னலமற்ற உள்ளத்திற்கு அவன் அருகதையானவனா? தன்னைத் தானே கேட்டுக் கொண்டான் நிமல்.

அவர்கள் விடு வந்து சேர்ந்தர்கள். அவளை உள்ளே அழைத்துச் சென்றான் நிமல். அவளை பார்த்தவுடன் சந்தோஷமானார் பார்வதி.

"ஹாய் என்ஜிஃப்..."

"அவளுக்கு ஹை டெம்ப்ரேச்சர் இருக்கு மா. அவ வீட்ல யாருமே இல்லயாம். அதனால, நான் அவளை இங்க கூட்டிக்கிட்டு வந்தேன். இது அவளோட மருந்து."

அவள் நெற்றியை தொட்டுப் பார்த்து ஆமாம் என்று தலையசைத்தார் பார்வதி.

"கடவுளே.. என்ன இது, இப்படி கொதிக்குது...? அவளை உள்ள கூட்டிக்கிட்டு போ. நான் அவளுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வரேன். சாப்பிட்டுட்டு மருந்து சாப்பிடட்டும்" கூறியவறே சமையலறையை நோக்கி ஓடினார்.

"என்னோட வா"

சிறு அடிகளுடன் மெல்ல நிமலை பின்தொடர்ந்தாள் வர்ஷினி. யாராவது தங்களை பார்க்கிறார்களா என்று இங்குமங்கும் பார்த்தான் நிமல். அங்கு யாரும் இல்லாததால், அவளை தன் கையில் தூக்கிக்கொண்டு தன் அறையை நோக்கி நடந்தான். அவளை படுக்கையில் படுக்க வைத்தான். வர்ஷினி அவனை தீராத காதலுடன் பார்த்து, அவனை தடுமாற வைத்தாள்.

சிறிது நேரத்தில் கஞ்சியுடன் வந்தார் பார்வதி.

"நீங்க ரெண்டு பேரும் இங்க இருக்கீங்களா? நான் கெஸ்ட் ரூமில் இருப்பீங்கன்னு, அங்க போய் தேடிட்டு வரேன்" என்றார்.

வர்ஷினி சங்கடபட்டாள்.  பேச்சிழந்தான் நிமல். விருந்தினர் அறைக்கு அவளை அழைத்துச் செல்வதைப் பற்றி அவன் யோசிக்கக் கூட இல்லை. ஒருவேளை அவள் இந்த இடத்தை சேர்ந்தவள் என்பதற்காக இருக்கலாம்.

"இங்க கூட்டிட்டு வந்ததும் நல்லதா போச்சு... படிச்சுக்கிட்டே நீ அவளையும் கவனிச்சிக்கலாம்"

ஆமாம் என்று தலையசைத்தான் நிமல்.

"இந்த கஞ்சியை குடிச்சிட்டு, மாத்திரை போட்டுக்கோ..."

மெல்ல எழுந்து அமர்ந்தாள் வர்ஷினி. பார்வதியின் கையில் இருந்து கஞ்சி கிண்ணத்தை பெற அவள் முயன்ற பொழுது, பார்வதியே அவள் பக்கத்தில் அமர்ந்து, அவளுக்கு கஞ்சியை ஊட்டிவிட்டு, அவளை உணர்ச்சிவசப்பட வைத்தார். அவளுடைய கண்கள் கலங்கிவிட்டன.

"உனக்கு உட்கார கஷ்டமாக இருக்காடா?" என்றார்.

இல்லை என்று தலை அசைத்தாள் வர்ஷினி.

"அப்புறம் எதுக்கு அழறே?" என்றார் அக்கறையுடன்.

"என் கண்ணுல ஏதோ விழுந்துடுச்சுன்னு நினைக்கிறேன்"  கண்ணை கசக்குவது போல் பாசாங்கு செய்தாள்.

அவளை பார்க்க பாவமாய் இருந்தது நிமலுக்கு.

கஞ்சியை ஊட்டி முடித்து விட்டு அவளுக்கு மாத்திரையை கொடுத்தார் பார்வதி. அவரிடமிருந்து வாங்கி அதை விழுங்கினாள் வர்ஷினி.

"நான் சிம்பிளான லன்ச் ப்ரிப்பர் பண்றேன். அது வரைக்கும் நீ நிம்மதியா தூங்கு."

நிமல் பக்கம் திரும்பி,

"நிம்மு, நீ அவ கூட இங்கயே இரு. ஏதாவது வேணும்னா எனக்கு கால் பண்ணு"

சரி என்று நிமல் தலையசைக்க அங்கிருந்து சென்றார் பார்வதி. அவர் செல்வதை, வைத்த கண் வாங்காமல் ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருந்தாள் வர்ஷினி.

"நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி. இவ்வளவு அன்பான அம்மா உங்களுக்கு கிடைச்சிருக்காங்க" என்று தன்னை மறந்து உளறிக் கொட்டினாள்.

"ஆமாம்... இப்ப நீ தூங்கு"

தன் கையை அவனை நோக்கிக் நீட்டி, பற்றி கொள்ளுமாறு சைகை செய்தாள் வர்ஷினி. அவள் கையை அவன் பற்றிக் கொள்ள, மெல்ல அவனை இழுத்தாள். அவள் அருகில் வந்து அமர்ந்தான் நிமல்.

"நான் என்னைக்கு உங்க வீட்டுக்கு வரப் போறேன்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு. நீங்க... உங்க அம்மா... உங்க எல்லாரையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உங்க கூட, நான் இருக்க போற நாளை நினைச்சா, எனக்கு எக்ஸைடடா இருக்கு"

"எதிர்காலத்தைப் பத்தி ரொம்ப யோசிக்காதே" அவன் சாதாரணமாய்ச் சொல்ல,
அந்த வார்த்தைகள் அவளை பதட்டமடையச் செய்தன.

"ஏன் அப்படி சொல்றீங்க? நீங்க என்னை விட்டுட மாட்டீங்கல்ல?"

"ரிலாக்ஸ்..."

"அப்படி ஏதாவது நடந்தா, நான் செத்துடுவேன்"

"எதுக்காக எப்ப பாத்தாலும் சாவை பத்தியே பேசுற?" என்றான் பல்லை கடித்துக்கொண்டு கோபமாக.

"ஏன்னா, நீங்க தான் என்னுடைய வாழ்க்கை. நீங்க இல்லனா சாவு தானே மிஞ்சும்? உங்களுக்கு தெரியுமா, எதுக்காக இந்த பாவப்பட்ட வாழ்க்கையை வாழணும்னு நான் பலதடவை நெனச்சிருக்கேன். அப்ப தான், என்னுடைய கேள்விக்கு விடையா நீங்க என்னுடைய வாழ்க்கையில வந்தீங்க. நீங்க மட்டும் எனக்கு கிடைச்சிடிங்கன்னா, நான் பட்ட கஷ்டம் எதுவுமே எனக்கு பெருசா தெரியாது. ஏன்... இதைவிட மோசமான நிலையையும் நான் தாங்கிக்க தயாரா இருக்கேன்..."

"நீ ஏற்கனவே ரொம்ப வீக்கா இருக்க. தயவு செஞ்சி உன்னை ஸ்டிரஸ் பண்ணிக்காத. "

"நீங்க தான் என்னோட ஸ்டிரெஸ் பஸ்டர். நீங்க என்கூட இருந்தா, என்னுடைய எல்லா ஸ்டிரெஸும் காணாம போயிடும். உங்களுக்கு தெரியாது நான் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழறேன்னு"

"எனக்கு தெரியும், வர்ஷினி"

"நிஜமாவா?"

ஆமாம் என்று தலையசைத்தான் நிமல்

"என்னை பத்தி விசாரிச்சி தெரிஞ்சுகிட்டீங்களா?"

மறுபடியும் ஆமாம் என்று தலை அசைத்தான்.

"எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னை பத்தி கவலைப்பட நீங்க இருக்கீங்க..."

அவனால் எதுவும் கூற முடியவில்லை... கூறுவதற்கு எதுவும் இல்லை.

"நீங்க எப்பவும் என் கூட இருப்பிங்கல்ல...? என்ன நடந்தாலும், நான் உங்க கூடவே இருக்கணும். நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்குவேன்னு எனக்கு சத்தியம் பண்ணி குடுங்க."

"நம்ம இதைப் பத்தி அப்புறமா பேசலாம். முதல்ல உனக்கு ரெஸ்ட் தான் முக்கியம். எதை பத்தியும் யோசிக்காம கொஞ்ச நேரம் தூங்கு. ப்ளீஸ்..."

"சத்தியம் பண்ண மாட்டீங்களா?" என்றாள் தலையை சாய்த்துக் கொண்டு பாவமாய்.

சில நொடி யோசித்த பின், அவள் தலையில் கை வைத்து, தலையை அசைத்தான் நிமல்.

"எது எப்படி இருந்தாலும், நான் உன்னை கல்யாணம் பண்ணிக்குவேன். அதை யாராலும் தடுக்க முடியாது... உன்னால கூட... போதுமா?"

சந்தோஷத்தில் அவளுடைய முகம் மிளிர்ந்தது. அவனுடைய நெற்றியில் முத்தமிட்டு, சந்தோஷத்தை வெளிப் படுத்திக் கொண்டாள்.

"சரி தூங்கு"

மாட்டேன் என்று தலையசைத்தாள்.

"இப்போ என்ன?"

"நான் உங்ககிட்ட ஒன்னு கேட்டா என்னை தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே?"

"என்ன?" என்று மென்று முழுங்கினான்.

"வந்து..."

"என்ன வேணும் உனக்கு?"

"நான் உங்களை கட்டி பிடிச்சுகட்டுமா?"

அவள் மீது பரிதாபப் படுவதைத் தவிர வேறு என்ன செய்வதென்று புரியவில்லை அவனுக்கு. கண்ணை மூடிக்கொண்டு சரி என்று தலையசைத்தான். அவனைத் தன் பூங்கரங்களால் ஆசையாய் சுற்றி வளைத்துக் கொண்டாள்... என்னவோ அது தான் அவளை குணப்படுத்தும் மாமருந்து என்பதைப் போல. அவன் தோளில் தன் முகம் புதைத்துக் கொண்டாள். மெல்ல தன் கரங்களை உயர்த்தி, அவளை தன் கரங்களால் பாதுகாப்பாய் அரவணைத்துக் கொண்டான் நிமல். அப்போது, அவளுக்கு எப்பொழுதும் இப்படி ஒரு பாதுகாப்பை வழங்குவேன், அவளை எப்பொழுதும் தன்னிடம் இருந்து விலகிச் செல்ல விடமாட்டேன் என்று மனதில் உறுதி மொழி எடுத்துக் கொண்டான் நிமல்.

அவன் கையை கெட்டியாய் பற்றிக்கொண்டு, படுத்து கொண்டாள் வர்ஷினி நிம்மதியுடன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro