Part 16
பாகம் 16
வர்ஷினியை வழியனுப்பிவிட்டு, நேரே கேன்டீனுக்கு வந்தான் நிமல், அவனுடைய நண்பர்கள் அங்கு இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன். அவனுடைய எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. அவர்களுடன் சுதாவும் இருந்தாள். வர்ஷினி வாங்கி கொடுத்த கைகடிகாரம், நிமிலின் கையில் இருந்ததை பார்த்து சந்தோஷம் அடைந்தாள் சுதா.
"உன்னுடைய ஃபர்ஸ்ட் டேட் எப்படி இருந்தது?" என்றான் ராஜா.
"அமேசிங்" என்றான் நிமல்.
"வர்ஷினி எங்க?" என்றாள் சுதா
"வீட்டுக்கு போய்ட்டா"
"நேரம் ஆயிடுச்சா?" என்றாள் சுதா கை கடிகாரத்தை பார்த்தபடி,
"சுழியன் மச்சம் இருக்கா?" என்றான் பிரகாஷ் ஆர்வமாக.
நிமல் இல்லை என்று தலையசைக்க, அவன் சோகமானான்.
"நேத்து தானே அவ்வளவு சுழியன் சாப்பிட்ட?" என்றான் ராஜா.
"பெரியம்மா செய்யுற சுழியனை எவ்வளவு சாப்பிட்டாலும் ஆசை தீராது" என்றான் பிரகாஷ்.
"வர்ஷினிக்கு சுழியன் ரொம்ப பிடிக்கும்" என்றாள் சுதா.
"எங்கிட்ட நீ ஏற்கனவே சொல்லியிருந்த. ஆனா, எல்லாத்தையும் காலி பண்ற அளவுக்கு அவளுக்கு பிடிக்கும்னு எனக்கு தெரியாது" என்றான் பிரகாஷ் சோகமாக.
விளையாட்டாய் அவன் தலையில் தட்டினான் ராஜா.
"நான் உன்கிட்ட கொஞ்சம் முக்கியமா பேசணும், சுதா" என்றான் நிமல்.
"வர்ஷினியை பத்தியா?" என்றாள் அமைதியாக.
"ஆமாம்... அவளைப் பத்தி தான்"
"அவளைப் பத்தி என்ன தெரியணும் உங்களுக்கு?"
"எல்லாம்... அவளைப் பத்தி ஒன்னு விடாம எல்லாம் தெரியணும்..."
"என்ன திடீர்னு?"
"அவ வாழ்க்கையில யாருக்கும் தெரியாத எதோ ஒன்னு மறைஞ்சிருக்கிற மாதிரி எனக்கு தோணுது. அவ சந்தோஷமா இல்லன்னு நான் ஆணித்தரமா நம்புறேன். அதை அவ என்கிட்ட சொல்ல தயங்குறதையும் என்னால புரிஞ்சுக்க முடியுது. அவளை நான் சங்கடபடுத்த விரும்பல. அதனால தான், அவளை பத்தி நான் உன்கிட்ட கேக்குறேன்"
சுதாவும் கூட, சற்று தயங்க தான் செய்தாள்.
"நான் அவளை அழ வைக்க வேண்டாம்னு நினைக்கிறேன். இல்லனா, நான் அவகிட்டயே கேட்டுடுவேன்" நிமல்
சரி என்று தலையசைத்தாள் சுதா.
"நீங்க நினைக்கிறது எல்லாமே சரி தான். நீங்க பாக்குற வர்ஷினிக்கு பின்னால, வேற ஒரு வர்ஷினி இருக்கா. அவ பெண் குழந்தையா பிறந்ததால அவங்க அம்மா அப்பா அவளை வெறுக்குறாங்க."
"என்ன பைத்தியகார தனம் இது? இதுல அவளுடைய தப்பு என்ன இருக்கு?"
"குமணன் குடும்பத்துல, கடந்த சில தலைமுறைகளில் பெண் குழந்தை பிறக்கல. அந்த தைரியத்துல, தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும்னு அவரோட ஃப்ரெண்ட்ஸ் கிட்ட ஒரு பெரிய *டீலை* பெட்டா காட்டினார் குமணன். எதிர்பாராத விதமா, பெண் குழந்தை பிறந்ததால, அந்த பெரிய டீல், அவர் கையை விட்டு நழுவி போயிடுச்சு. குமணன் வர்ஷினியோட அம்மாகிட்ட பேசுறதையே நிறுத்திட்டார். வர்ஷினிக்கும் ரிஷிக்கும் இடையில கல்பனா, மூணு தடவை அபார்ஷசன் பண்ணிட்டாங்க. ஏன்னா, அது எல்லாமே பெண் குழந்தை அப்படிங்கிறதால. வர்ஷினி பிறந்தப்போ, அவங்க அம்மா, அவளை தூக்க கூட இல்லன்னு சொன்னா, நீங்க நம்புவீங்களா? உங்களுக்கெல்லாம் தெரியாது, அவங்க வீட்ல அவ எப்படியெல்லாம் சித்திரவதை அனுபவிச்சிக்கிட்டு இருக்கான்னு. காரணமே இல்லாம அவளை அடிப்பாங்க. யாருக்கு கோவம் வந்தாலும் அவளைத் தான் அடிப்பாங்க. அவங்க வீட்ல ஏதாவது பிரச்சனைனாலே அவ பயந்து நடுங்குவா. அதனால, யார் முன்னாடியும் போகவே மாட்டா. எதுவும் பேசவோ, கேட்கவோ அவளுக்கு அனுமதி இல்ல."
சில நொடிகள் நிறுத்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு,
"நான் தான் அவளுக்கு தேவையான..." என்று கூற முடியாமல் மென்று முழுங்கினாள்.
"தேவையான என்ன...? என்றான் நிமல்.
"சானிடரி நாப்கின்ஸை கொடுக்குறேன்" என்றாள் கோபத்தை அடக்கிக் கொண்டு.
"ஒரு தடவை படுக்கையை கரையாக்கினதுக்காக அவங்க அம்மா அவளை அடிச்சி வெளுத்துட்டாங்க. அதிலிருந்து அவ, அந்த நாட்கள்ல தரையில தூங்க ஆரம்பிச்சா. அப்போதிலிருந்து தான், நான் அவளுக்கு அதை கொடுக்க ஆரம்பிச்சேன்."
பேச்சிழந்து நின்றான் நிமல். ஊரே போற்றும் ஒரு கவுரமான குடும்பத்தில், இப்படி எல்லாம் கூட நடக்குமா? அவர்கள் மனிதர்கள் தானா? தங்களுடைய மகளின் அடிப்படை தேவையை கூட நிறைவேற்றாமல், இவ்வளவு குவியலான பணத்தை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன தான் செய்யப் போகிறார்கள்?
"டயட் கண்ட்ரோல் இருந்ததால அவளுக்கு அல்சர் வரல. அவங்க அம்மா, அப்பா கோவமா இருக்கும் போதெல்லாம், அவளைப் பட்டினி போட்டுடுவாங்க. ஒரு நாள் கூட அவங்க சரியான நேரத்துக்கு அவளை சாப்பிட விட்டதில்ல. எத்தனையோ நாள் பட்டினியால அவ அவஸ்தைப்பட்டிருக்கா"
குமணனை நார் நாராய் கிழித்து எறிய வேண்டும் என்று தோன்றியது நிமலுக்கு. அவர் மீது அவனுக்கு இருந்த வெறுப்பு பன்மடங்காக உயர்ந்தது. ராஜாவும், பிரகாஷும் நம்பமுடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் உண்மையிலேயே அந்தப் பெண்ணைப் பெற்றவர்கள் தானா என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டது.
"அவளுடைய தம்பி ரிஷி தான் அவளுக்கு ஒரே ஒரு சப்போர்ட். அவனுக்கு வர்ஷினியை ரொம்ப பிடிக்கும். அவன் ரொம்ப சின்ன பையன். அவனால எவ்வளவு முடியுமோ அவ்வளவு தானே அவனால ஹெல்ப் பண்ண முடியும்...? அவங்க அம்மா அப்பாவுக்கு தெரியாம, அவளுக்கு நிறைய ஹெல்ப் பண்ணுவான். ஏதாவது ஒரு பிரச்சனை வந்தா, அந்த பழியை தன்னோட மேல போட்டுக்கிட்டு, அவனோட அக்காவை காப்பாத்துவான். நிறைய தடவை தற்கொலை பண்ணிக்க நினசிருக்கா வர்ஷினி. ஒருவேளை, அவங்க அவளை காப்பாத்திட்டா, அப்புறம் தினம்தினம் அவங்ககிட்ட சாகணும்னு பயந்துகிட்டு அதை அவ செய்யல. இப்ப உங்களுக்கு தெளிவா புரிஞ்சிருக்கும், ஏன் அவ உங்களுக்காக அவங்க வீட்டை விட்டு வர தயாரா இருக்கான்னு. வாழ்க்கையில எப்பவுமே கிடைக்காத ஒரு அரவணைப்பு, உங்ககிட்ட அவளுக்கு கிடைக்குன்னு அவ நம்புரா. அவ உங்களை உயிருக்கும் மேல காதலிக்கிறா. தயவுசெய்து அவளை எதுக்காகவும் தவிர்க்காதீங்க. அவ மேல கோவ படாதீங்க... அவ ஏதாவது தப்பு செஞ்சா, அவளை மன்னிச்சிடுங்க. அவளுக்கு இந்த உலகத்துல உங்கள விட்டா வேற யாருமே இல்ல. தயவுசெய்து அவளை காயப்படுத்திடாதீங்க"
அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்து, தலை குனிந்து கொண்டான் நிமல். அவன் கண்களிலிருந்து கண்ணீர் சிந்தியது. பிரகாஷும் ராஜாவும் கூட வெலவெலத்துப் போனார்கள். அதனால் தான் அவள் எப்போதும் சோகமாகவே காணப்பட்டாளா? தனது மணிபர்ஸை வெளியில் எடுத்து, ஒரு கட்டு பணத்தை எடுத்து, சுதாவிடம் நீட்டினான்.
"என்னை தப்பா நினைச்சுக்காத சுதா. அவளுக்கு என்ன்ன்ன(என்பதை அழுத்தி ) வேணும்னாலும் வாங்கி கொடு. நீ கொடுக்க மாட்டேன்னு இல்ல... என்னுடைய திருப்திக்காக... இப்போதிலிருந்து அவ என்னோட பொறுப்பு."
வல பக்கமாய் திரும்பி தன் கண்ணை துடைத்துக் கொண்டான். சமாதான படுத்தும் நோக்கில், அவன் தோளை மெல்ல அழுத்தினான் ராஜா.
"நான் கிளம்பறேன். நம்ம நாளைக்கு பாக்கலாம்" என்று கூறிவிட்டு,
புண்பட்ட இதயத்துடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றான் நிமல். அவனுடைய இதயத்தை, யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் இருந்தது அவனுக்கு. சுதா உதிர்த்துக் கொண்டிருந்த ஒவ்வொரு வார்த்தைக்கும், அவன் எவ்வளவு பலவீனம் அடைந்து கொண்டிருந்தான் என்பது அவனுக்கு மட்டும் தான் தெரியும். இது தான் அவளுடைய நிலைமையா? இப்படிப்பட்ட ஒரு வாழ்வை தான் அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாளா? அவன் இதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
ராஜாவும் பிரகாஷம் செய்வதறியாது நின்றார்கள்.
"இதையெல்லாம் நீ ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல, சுதா?" என்றான் பிரகாஷ்.
"சொல்லணும்னு தான் நினைச்சேன். ஆனா, அதெல்லாம் பரிதாபத்தை ஏற்படுத்துர மாதிரி இருக்கும். வர்ஷினியுடைய நிலையை, நிமல் அவராவே புரிஞ்சிக்கணும்னு நினைச்சேன். நிமல் உண்மையா அவளை நேசிச்சா மட்டும் தானே அது சாத்தியம்...? இப்போ அது நடந்திடுச்சு. எனக்கு ரொம்ப சந்தோஷம்"
"என்னால நம்பவே முடியல" என்றான் ராஜா.
"அவ ஏன் அவங்களுடைய வீட்டை விட்டு வர தயாரா இருக்கான்னு உங்களால புரிஞ்சுக்க முடியலயா? அவளோட அம்மா அப்பா நல்லவங்களா இருந்தா, அவ ஏன் அப்படி செய்ய போறா?"
ஆமாம் என்று தலையசைத்தார்கள் இருவரும்.
"முதல் முறை அவளை பார்த்த போதே அவனுடைய மனசுல ஏதோ உணர்ந்திருக்கான் நிமல். நீ வர்ஷினியை பத்தி கவலைப்பட வேண்டியதில்ல. அவ நிமலோட சந்தோஷமா இருப்பா" என்றான் பிரகாஷ்.
"நான் வர்ஷினியை பத்தி கவலை படல. குமணனை நினைச்சா தான் கவலயா இருக்கு" என்று சிரித்தான் ராஜா.
அவனை குழப்பத்துடன் பார்த்தாள் சுதா.
"குமணன் மேல அவனுக்கு இருந்த வெறுப்பு, இப்போ பத்து பங்கு அதிகமாகி இருக்கும். ஒரு நாள், குமணன் இரக்கமில்லாத நிமலை எதிர்கொள்ள போறாரு... அது நிச்சயம் நடக்கும்..."
"நிமலை ஜாக்கிரதையா இருக்க சொல்லுங்க. சொந்த பொண்ணு மேலேயே கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாம நடந்துகிற அவர், மத்தவங்க கிட்ட எப்படி நடந்துக்குவாருன்னு சொல்ல வேண்டிய அவசியமே இல்ல" என்றாள் சுதா.
"நிமலை நான் பாத்துக்குறேன்" என்றான் ராஜா.
"எல்லா பிரச்சினைகளையும் சமாளிச்சி, நிமல், வர்ஷினியை கல்யாணம் பண்ணிக்குவாரா?" என்றாள் சுதா தயக்கத்துடன்.
"நிச்சயமா பண்ணிக்குவான். அதுவும் அவளுடைய உண்மையான நிலை தெரிஞ்சதுக்கப்புறம், அவனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது... வர்ஷினியால கூட..." என்றான் ராஜா.
திருப்தி புன்னகை துளிர்த்தது சுதாவின் முகத்தில். அவளுக்கு வேண்டியதெல்லாம் அவளுடைய தோழியின் சந்தோஷம் மட்டும் தான்.
குமணன் இல்லம்
அன்று, வர்ஷினியின் மனநிலை, நிமலுக்கு நேர்மாறாக இருந்தது. அவளுடைய சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அவளுக்கு பிடித்த ஒருவருடன், ஒரு நாள் முழுவதையும் அவள் கழிப்பது அது தான் முதல் முறை. அந்த நாள் தான், முதல் முறையாய் அவள் சிரித்தது... சந்தோஷமாய் இருந்தது... ஒருவரின் மடியில் படுத்தது...! அவள் அன்று அழுவும் செய்தாள் தான். ஆனால், சாய்ந்து கொள்ள அவளுக்கு ஒரு தோள் இருந்தது... அவள் கண்ணீரை துடைக்க கரங்கள் இருந்தன... கடைசியாக, அவளுடைய எல்லாமுமாக இருக்கப் போகும் அந்த நபரை அவள் சந்தித்துவிட்டாள். அதை நினைத்து அவள் ஆனந்தத்தின் எல்லைக்கே சென்றாள்.
இனியவர்களின் இருப்பிடம்
இதயம் முழுக்க சுமையுடன், வீடு வந்து சேர்ந்தாள் நிமல். அவன் முகம், தோய்வாய் காணப்பட்டதை கவனித்தார் பார்வதி. அவர் அருகில் சென்று அமைதியாய் அமர்ந்தான் நிமல்.
"என்ன ஆச்சு நிம்மு? ஏன் டல்லா இருக்க?"
"தலை வலிக்குது மா" என்று பொய்யுரைத்தான்.
டீபாயின் மீதிருந்த தைலத்தை எடுத்து, அவனைத் தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டு, அதை அன்பாய் அவன் நெற்றியில் தடவி விட்டார் பார்வதி. அந்த செயல் அவனுக்கு வர்ஷினியின் வார்த்தைகளை ஞாபகப்படுத்தியது.
*நான் யாருடைய மடியிலும் படுத்ததே இல்ல*
சிறுவயதிலேயே தனது பெற்றோரை அவன் இழந்த போதிலும், அவனுடைய வாழ்க்கையில் சந்தோஷத்திற்கும், அன்புக்கும், அக்கறைக்கும் பஞ்சமே இருந்ததில்லை. ஆனால், அனைத்தையும் பெற்றிருந்தும் கூட, வர்ஷினிக்கு
அந்த அரவணைப்பு கிடைக்கவில்லை. எவ்வளவு பாவம் அவள்...! சொந்த பெற்றோர்களே அவளை எவ்வளவு கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறார்கள்...! பெற்றவர்கள் எப்பொழுதும், தங்களுடைய பிள்ளைக்கு நல்லதை மட்டும் தானே செய்வார்கள்? இவர்கள் பெற்றோர் என்று அழைக்க தகுதியற்றவர்கள். அவள், எப்படியெல்லாம் பசியில் துடித்தாளோ...! அந்த சமயங்களில் அவள் எப்படியெல்லாம் அழுதாளோ...! அவனால் தாங்கவே முடியவில்லை. அவன் கண்ணிலிருந்து கண்ணீர் உருண்டோடியது. பார்வதி அதை பார்க்கும் முன், கண்ணை துடைத்துக் கொண்டான்.
"எனக்கு தூக்கம் வர மாதிரி இருக்குமா. நான் என்னோட ரூமுக்கு போறேன்."
"ஃகாபி குடிச்சா, தலைவலிக்கு கொஞ்சம் பெட்டரா இருக்கும்"
"அப்புறமா குடிக்கிறேன் மா "
பார்வதி சரி என்று தலையசைத்தார். தன்னுடைய அறைக்கு சென்று கதவை தாளிட்டுக் கொண்டான் நிமல். பல்லை கடிதத்தபடி தரையில் முழங்காலிட்டு அமர்ந்தான். அவனுக்கு அவன் மீது கோபமாய் வந்தது.
முதலில் அவன், வர்ஷினியும் அவளுடைய அப்பாவை போல தான் இருப்பாள் என்று நினைத்தான். ஆனால் உண்மையோ, அவன் கனவிலும் நினைக்காத அளவிற்கு கொடுமை வாய்ந்ததாக இருக்கிறது. குமணன் ஒரு மிருகம் என்பது அவனுக்குத் தெரியும். குமணன் தன் பெற்றோருக்கு செய்த கொடுமைக்காக அவர் மீது கோபமாய் இருந்தான் நிமல். ஆனால் இப்பொழுது, தன்னுடைய சொந்த மகளுக்கு இப்படிப்பட்ட கொடுமைகளை செய்யும் ஒருவனிடம் கருணையை எதிர்பார்ப்பது வீண் என்று நினைத்தான். இன்று குமணனை பழிவாங்கவும், தண்டிக்கவும் அவனுக்கு மற்றுமொரு காரணம் கிடைத்திருக்கிறது. அவர் செய்த செயலுக்கான தண்டனையை, ஒரு நாள் அவர் அனுபவித்தே தீருவார்... தீர வேண்டும்...!
நிமலுக்கு ஒரு விஷயத்தில் பயம் ஏற்பட்டது. ஒருவேளை வர்ஷினிக்கு இந்த உண்மைகள் அனைத்தும் தெரிய வந்தால்? அவளுடைய அப்பாவின் உண்மையான முகமும், அவருக்கும், நிமலுக்கும் இடையில் இருக்கும் உண்மையான வன்மமும் தெரிய வந்தால்...? அப்போது அவள் என்ன செய்யப் போகிறாள்? ஏற்கனவே காயப்பட்டிருக்கும் அவளுடைய இதயம், இந்த விஷயத்தை தாங்குமா?
ஒருவேளை, அவள் அவனை தவறாக எடுத்துக் கொண்டு விட்டால் என்ன செய்வது? குமணனை பழி வாங்கத்தான் அவன் அவளை உபயோகப் படுத்திக் கொண்டான் என்று அவள் நினைத்து விட்டால் என்ன செய்வது? அப்படி ஒரு பொழுதும் நடக்கக் கூடாது.
எல்லாவற்றையும் விட அதிகமாய் அவனை பயமுறுத்தியது என்னவென்றால், ஒருவேளை அவனால் வர்ஷினியை திருமணம் செய்துகொள்ள முடியாமல் போனால் என்ன செய்வது? அவனை ஏமாற்றி, குமணன் அவளை வேறு யாருக்காவது திருமணம் செய்து வைத்து விட்டால் என்னாவது? அவன் அப்படி கோழையைப் போல் சிந்திப்பதை அவன் மனம் ஏற்கவில்லை. அவனை அது வன்மையாய் கண்டித்தது. குமணன் என்ன செய்தாலும், எல்லாவற்றையும் உடைத்தெறிந்து, எப்படியும் அவன் வர்ஷினியை மணந்தே ஆக வேண்டும், என்று தீர்க்கமாய் முடிவெடுத்தான் நிமல்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro