Part 15
பாகம் 15
தன்னை எதற்காக கல்பனா அலங்காரித்து கொண்டிருக்கிறார் என்று புரியவில்லை வர்ஷினிக்கு. அவளை நல்ல படாடோபமான ஆடை அணிந்துகொள்ளுமாறு கூறினார் கல்பனா. அது அவளை மேலும் குழப்பியது. அவர்கள் வீட்டில் கார்த்திக்கை பார்த்த போது, அவளுக்கு காரணம் புரிந்தது. கூடவே அவளுக்கு நடுக்கமும் ஏற்பட்டது. இதற்காக தான் அவள் பயந்து கொண்டிருந்தாள். இதை பார்க்கும் போது, குமணன் தன் முடிவில் எவ்வளவு திடமாய் இருக்கிறார் என்று புரிந்தது அவளுக்கு.
"வா டா... எல்லாம் உனக்கு பிடிச்ச சமையல் தான் இன்னைக்கு" என்று குமணன் கூறிய போது அவளால் நம்ப முடியவில்லை.
இது தான் முதல் முறை, அவர் அவளை அப்படி அன்புடன் அழைப்பது. அது கார்த்திக்குக்காக ஆடும் நாடகம் என்று அவளுக்கு தெரிந்திருந்தாலும் அவளுக்கு அது பிடித்திருந்தது. கார்த்திக் எவ்வளவு முயன்றும், வர்ஷினி அவனை ஏரேடுத்தும் பார்க்கவில்லை. அவனுக்கு அது பிடித்திருந்தது. அவன் வர்ஷினியை பார்த்த மாத்திரத்திலேயே, வேரோடு சாய்ந்தான்.
"கார்த்திக், இவ என்னோட பொண்ணு வர்ஷினி..."
நிமிர்ந்து பார்க்காமல், புன்னகைத்தாள் வர்ஷினி.
"கார்த்திகை இன்ட்ரடியூஸ் பண்ண வேண்டிய தேவையே இல்ல. அவன் ரொம்ப பாப்புலர்." என்று இடி இடியென சிரித்தார். குமணன். என்னவோ அது பெரிய நகைச்சுவை என்பது போல.
"ஆனாலும், அது என்னோட டூட்டி. இவரு கார்த்திக், காமேஸ்வரனோட ஒரே மகன்." அவர் கார்த்திக்கின் முதுகை தட்டிக்கொடுத்தார்.
"அவரை யாருக்கு தெரியாம இருக்கும்?" என்றார் கல்பனா.
வர்ஷினியை இழுத்து வந்து கார்த்திக்கின் அருகில் அமர வைத்தார் கல்பனா.
"நீ எந்த காலேஜில படிக்கிற?"
"சுரதா காலேஜ்"
"எங்களோட கட்சி ஆஃபீஸ்ல இருந்து ரொம்ப பக்கத்துல தான் உங்க காலேஜ் இருக்கு. யாராவது உன்கிட்ட வாலாட்டினானா என்கிட்ட சொல்லு. அவங்களை நான் பாத்துக்குறேன்"
ஏதும் சொல்லாமல் அமைதி காத்தாள் வர்ஷினி. சந்தேகமில்லாமல் அவள் நிமலை தான் நினைத்தாள். அவனுக்கு கார்த்திக்கை பற்றி தெரிந்தால் என்ன செய்வான்?
"எங்க அக்காகிட்ட யாரும் மிஸ்பிஹேவ் பண்ண மாட்டாங்க. ஏன்னா அவ யார் வம்புக்கும் போகமாட்டா..." என்றான் ரிஷி.
"பார்த்தா அப்படித்தான் தெரியுது" என்று அவன் கண்களை வர்ஷினியின் மீது அவன் ஒடவிட்டது ரிஷிக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.
"சாப்பிடலாமா?" என்றார் குமணன்.
"ஓ எஸ்..."
சாப்பிடும் பொழுதும், சாப்பிட்டு முடித்த பின்னரும், பேசிக்கொண்டே இருந்தான் கார்த்திக்.
"நான் இப்ப வரேன் ஆன்ட்டி. உங்களுக்காக நான் நிறைய கொண்டு வந்திருக்கேன்" என்று கூறிவிட்டு வெளியே சென்றான் கார்த்திக்.
காமேஸ்வரன் கொடுத்தனுப்பிய பரிசு பொருட்களை கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்தான்.
"தேங்க்யூ சோ மச் கார்த்திக். யூ ஆர் ஸோ ஸ்வீட்" என்றார் கல்பனா.
"இட்ஸ் மை ப்ளஷர்"
அவர்களுடைய பரிசுப் பொருட்களை பிரித்து பார்க்கும்படி கேட்டுக் கொண்டான். வைர நெக்லெசை பார்த்து வாயைப் பிளந்தார் கல்பனா. ரிஷிக்கு, பிளேஸ்டேஷன் ஃபைவ் தந்த போதிலும், அவன் ஆர்வம் காட்டிவில்லை. ஏனென்றால், அவனிடம் ஏற்கனவே ஒன்று இருந்தது. தனது பரிசை பிரித்துப்பார்க்க தயங்கினாள் வர்ஷினி. அதை அவள் கையிலிருந்து வாங்கி, கார்த்திக்கே திறந்து கட்டினான். அது மாணிக்க கற்களால் ஆன பிரேஸ்லெட்.
"உனக்கு இது பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்" என்றான்
ஒன்றும் சொல்லாமல் புன்னகை புரிந்தாள் வர்ஷினி. கல்பனாவை பார்த்து சைகை செய்தார் குமணன். அதைப் புரிந்து கொண்ட கல்பனா,
"அது அவளோட கைக்கு ரொம்ப அழகா இருக்கும்..." என்றார்.
அதை அவசர அவசரமாய் தன் கையில் அணிந்து கொண்டாள் வர்ஷினி, கல்பனா, கார்த்திகை அதை அவள் கையில் அணிவிக்க சொல்லி கேட்டு விட போகிறாரோ என்று. அவளுடைய கையில், அது உண்மையிலேயே மிக அழகாக இருந்தது. சிகப்பு நிறக் கற்களால் ஆன அந்த பிரேஸ்லெட், அவளுடைய கையில் மின்னியது. கை கடிகாரத்தை பார்த்தான் கார்த்திக் அப்பொழுது மணி ஒன்பது நாற்பத்தி ஐந்து.
"நேரமாச்சு. நான் கிளம்புறேன், அங்கிள். உங்க சோப்பு விஷயமா நான் முக்கியமான ஒரு ஆளை பார்க்க வேண்டியிருக்கு."
"தேங்க்யூ சோ மச் கார்த்திக்"
"பரவாயில்லை அங்கிள்"
அவனை வழியனுப்ப அனைவரும் வெளியே வந்தார்கள். கார்த்திக் தனது நடையை தாமதப்படுத்தி, வர்ஷினியின் முன் நின்றான். அவள் கையை பிடித்து,
"கொடுத்து வச்ச பிரேஸ்லெட்... பை டார்லிங்" என்றான் அவளுக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தி.
தன் கையில் இருந்த அந்த மாணிக்க பிரேஸ்லெட்டை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள் தூக்கம் பிடிக்காத வர்ஷினி. இதைப்பற்றி நிமலிடம் கூறியே ஆக வேண்டும். அவனாகவே தெரிந்து கொண்டால் வருத்தப்படுவான். மறுநாள், இந்த விஷயத்தைப் பற்றி நிமலிடம் பேசவேண்டும் என்று எண்ணியபடி கட்டிலில் படுத்துக்கொண்டாள்.
மறுநாள்
ராஜாவுடனும், பிரகாஷுடனும் பேசிக்கொண்டிருந்தான் நிமல். தன் காரை விட்டு வர்ஷினி இறங்குவதை கவனித்தான். அவர்களுடைய கார் கிளம்பிச் செல்லும் வரை காத்திருந்தான் நிமல். முதல் நாள், தன்னுடைய வீட்டில், அவனிடம் தான் நடந்து கொண்டதை நினைத்தபோது அவளுக்கு சங்கடமாய் இருந்தது. நிமல் தன்னை நோக்கி வருவதை பார்த்து அவள் நின்றாள். அவன் அவளிடம் ஒரு காகித பையை கொடுத்தான். அவள் அவனைப் பார்க்காமல் தலை குனிந்து நின்றாள். அவள் ஏன் அப்படி இருக்கிறாள் என்று அவனுக்குப் தெரியும்.
"வர்ஷினி..."
தலையை நிமிர்த்தி அவனை பார்த்தாள். அவளிடம் அந்த பையை கொடுத்தான். அவனிடமிருந்து குழப்பத்துடன் அதை பெற்றுக் கொண்டாள்.
"கேர்ள்ஸ் ரூமுக்கு போய், இந்த டிரஸ்ஸை சேஞ்ச் பண்ணிக்கிட்டு வா. நான் கேம்பஸுக்கு வெளியில காத்திருக்கேன்"
அதன் பிறகு அவன் அங்கு காத்திருக்க வில்லை. அவள் தன்னுடைய திட்டத்திற்கு ஒத்துக் கொள்கிறார்களா இல்லையா என்று அவன் கேட்கவில்லை. அவன் கூறியபடியே, அவள் பெண்கள் அறைக்கு சென்று, உடை மாற்றிக் கொண்டாள். அந்த உடை, அவள் உடை அணியும் விதத்திற்கு நேர்மாறாக இருந்தது. நிமலை தேடிக்கொண்டு, கேம்பஸை விட்டு வெளியே வந்தாள். தன்னுடைய பைக்கில் அமர்ந்தபடி அவளுக்காக காத்திருந்தான் நிமல்.
இப்பொழுது அவளுக்கு புரிந்து போனது, எதற்காக இந்த மாதிரியான உடையை அவன் அவளுக்கு கொடுத்தான் என்று... யாரும் அவளை அடையாளம் கண்டுவிட கூடாது என்பதற்காகத் தான். துப்பட்டாவால் தன் முகத்தை மறைத்து கொண்டு அவன் அருகில் வந்தாள். தனது வண்டியை உயிரூட்டி, அவளை அமரும்படி அவன் சைகை செய்தான். பின்னால் ஏறி அமர்ந்து கொண்டு அவன் தோளின் மீது கையை வைத்துக் கொண்டாள். இது தான் அவளுடைய முதல் இருசக்கர வாகன சவாரி. அவளுக்கு அது மிகவும் பிரமிப்பாக இருந்தது.
நீண்ட தூர பயணத்திற்கு பிறகு, நகரத்தை விட்டு வெளியே வந்தார்கள். அங்கு ஒரு சிறிய கோவில் இருந்தது. கோவிலின் உள்ளே ஒரு மணிவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. அந்த இடம் மனதிற்கு இதமளித்தது. உள்ளே கோவில் இருப்பது தெரியாத அளவிற்கு, அடர்த்தியான மரங்களும் செடி கொடிகளும் புதர்களும் சூழ்ந்திருந்தது. அங்கு ஒரு பழைய சிமென்ட் பெஞ்ச் இருந்தது. இருவரும் அதில் அமர்ந்தார்கள்.
"இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு. இப்படி ஒரு இடத்தை நான் இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்ல."
அவள் உண்மையிலேயே எப்போதும் இல்லாத சந்தோஷத்துடன் அன்று காணப்பட்டாள். அருமையான காற்றும், கிராமம் போன்ற சூழ்நிலையும் அவளை வெகுவாக கவர்ந்திருந்தது.
"இங்க இப்படி ஒரு இடம் இருக்குன்னு நீங்க எப்படி கண்டுபிடிச்சீங்க?"
"சின்ன வயசுல, எங்க அப்பா என்னை இங்க அடிக்கடி கூட்டிட்டு வருவாரு அப்போ இந்த இடத்தை ரொம்ப நல்லா மெயின்டெயின் பண்ணிக்கிட்டு இருந்தாங்க"
"ஓ..."
"இப்போ உனக்கு உடம்பு எப்படி இருக்கு?"
"ஐ அம், ஆல் ரைட்"
"ஐ அம் சாரி... எனக்கு தெரியாது நீ ஹாஸ்பிடல்ல..."
"எனக்கு தெரியும். என்னுடைய உண்மையான நிலை தெரிஞ்சிருந்தா நீங்க கோவப்பட்டு இருக்க மாட்டீங்க"
ஆமாம் என்று வருத்தத்துடன் தலையசைத்தான் நிமல்.
"எதுக்கு உனக்கு வலிப்பு வந்தது? உனக்கு இப்படி அடிக்கடி ஆகுமா?"
"ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸானா வரும்"
"அன்னைக்கு நீ ஸ்டிரஸ் ஆகிற அளவுக்கு என்ன நடந்துச்சு?"
"அப்பா என்னுடைய கல்யாணத்தை ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காரு"
"கார்த்தி கூட தானே...?"
அவனை ஆச்சரியமாய் பார்த்தாள் வர்ஷினி.
"உங்களுக்கு எப்படி தெரியும்?"
"நான் தான் உன்கிட்ட சொன்னேனே... நான் உன்னை காதலிக்க ஆரம்பிச்சுட்டா, நீ எப்பவுமே என்னுடையவளா தான் இருப்பேன்னு... "
"எனக்கு ரொம்ப பயமா இருக்கு"
"நீ எதுக்காகவும் பயப்பட வேண்டிய அவசியம் இல்ல. நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்"
"ஆனா, நீங்க எப்படி சமாளிப்பீங்க?அவங்க எவ்வளவு பவர்ஃபுல்லான ஆளுங்கன்னு உங்களுக்கு தெரியுமா?"
"நீ என் கூட இருந்தா, நானும் பவர்ஃபுல்லான ஆளு தான்"
"என்ன நம்புங்க. எனக்கு உங்களை தவிர வேறு எதுவுமே வேண்டாம். நான் உங்க கூட இருக்க என்ன வேணா செய்வேன்"
அவன் ஆழமாய் அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, அவள் சங்கடத்துடன் தனது முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, தனது பேச்சை மாற்றினாள்.
"எனக்கு இந்த இடம் ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த அருமையான காத்துல தூங்கினா எவ்வளவு நல்லா இருக்கும் இல்ல...?"
"தூங்கணும்னு தோணுச்சுன்னா தூங்கு. வா, என் மடியில படுத்துக்கோ"
அவளுடைய அனுமதிக்காக காத்திராமல், அவள் தோளை பிடித்து இழுத்து, அவளை தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டான். அவளுக்கு ஆரம்பத்தில் பதட்டமாய் தான் இருந்தது. அவள் தலையை தன் மடியில் அவன் லேசாய் அழுத்திக் கொண்டு, வருடிக்கொடுத்தான். அது அவளை ஆசுவாசப்படுத்தியது.
ஓரிரு நிமிடத்தில், தன் தொடையில் ஈரத்தை உணர்ந்தான் நிமல், அவன் அணிந்திருந்த கெட்டியான ஜீன்சையும் மீறி. வர்ஷினி அமைதியாய் அழுது கொண்டிருந்ததை பார்த்து பதட்டம் அடைந்தான்.
அவளுக்கு திடீரென்று என்ன ஆனது? சிறிது நேரத்திற்கு முன்பு கூட அவள் சந்தோஷமாக தானே இருந்தாள்?
"வர்ஷினி... என்ன ஆச்சி? உனக்கு, உங்க அம்மா அப்பா ஞாபகம் வந்துடுச்சா? உனக்கு வீட்டுக்கு போகணுமா?"
இல்லை என்று அவசரமாய் தலையசைத்தாள்.
"உங்க கூடவே இருந்துட முடியும்ன்னா, நான் மறுபடி எங்க வீட்டுக்கு போகவே மாட்டேன். நான்... நான் இது வரைக்கும் யாருடைய மடியிலும் படுத்ததேயில்ல. அந்த சந்தர்ப்பம், என்னுடைய வாழ்க்கையிலேயே எனக்கு இப்ப தான் கிடைச்சிது... உங்களால... அதனால தான் நான் கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன்."
நிமலால் அதை நம்பவே முடியவில்லை. யாருடைய மடியிலும் படுத்ததே இல்லையா? அது எப்படி சாத்தியம்?
"உங்க அம்மா மடியில கூடவா நீ படுத்ததில்ல?" என்றான் நம்ப முடியாமல்.
அவள் இல்லை என்று தலை அசைத்தாள்.
"சுதா சொன்னா, உங்க அம்மா உன்னை ரொம்ப பொத்தி பொத்தி வைப்பாங்கன்னு... "
உண்மையை கூற முடியாமல், தன் உதட்டை கடித்து, அழுகையை கட்டுப்படுத்த முயன்றாள் வர்ஷினி. அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான்.
"நான் உன்கிட்ட ஏதோ கேட்டேன்"
அவன் தோளில் சாய்ந்து அழுதாள் அவள்.
"நீ எதுவும் சொல்லலன்னா எனக்கு உண்மை எப்படி தெரியும்?"
தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் வர்ஷினி.
"அதை விடுங்க நிமல். நம்ம உங்க பிறந்த நாளை கொண்டாட தானே இங்கே வந்தோம்... அதைச் செய்யலாமே"
"ஆனா..."
"நான் ஏற்கனவே உங்க பிறந்தநாளை சொதப்பிட்டேன். அதையே மறுபடியும் செய்ய வேண்டாம்"
"நீ அதை சொதப்பல. அதை மறந்துடு. நான் உன்னை பத்தி தெரிஞ்சுக்க நினைச்சேன் அவ்வளவு தான்."
"எனக்கும் நீங்க எல்லாத்தையும் தெருஞ்சுக்கணும்னு தான் ஆசை. நானும் எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லணும்னு தான் நினைக்கிறேன். ஆனா, அது இன்னிக்கு வேண்டாம். இது நம்முடைய முதல் டேட். அது சந்தோஷமா போகட்டும்"
அவன் யூகம் சரிதான் போலிருக்கிறது. அவள் ஏதோ மன கவலையில் இருக்கிறாள். எதுவும் கை நழுவி செல்வதற்கு முன், அவனுக்கு அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால், கேட்டால் அவள் மீண்டும் அழத் தொடங்கலாம். அவள் கண் கலங்கினாலே மனம் பாடாய் படுகிறது.
தன் பையிலிருந்து, தங்கநிற காகிதத்தால் சுற்றப்பட்டிருந்த ஒரு சிறிய டப்பாவை வெளியில் எடுத்து அவனிடம் கொடுத்தாள் வர்ஷினி.
"திறந்து பாருங்க"
அதை அவன் திறக்க, அதில் மிக சாதாரணமான ஒரு கைக்கடிகாரம் இருந்தது. தனது மனதில் ஏற்பட்டிருந்த குழப்பத்தை முகத்தில் காட்டாமல் அவளை பார்த்தான்.
"இது என்னோட சேவிங்ஸ்ல வாங்கினது. சாரி, என்னால உங்களுக்கு காஸ்ட்லியான வாட்ச் வாங்கி கொடுக்க முடியல"
இது மேலும் ஒரு குழப்பம். இந்தியாவின் மிகப் பிரபலமான ஒரு தொழிலதிபரின் மகளிடம் பணம் இல்லையா? இப்போது அவனுக்கு நிச்சயமாக போனது, யாருக்கும் தெரியாத ஒரு துயரம் அவள் வாழ்வில் இருக்கிறது என்று.
"நீ எது கொடுத்தாலும் அது எனக்கு பெருசு தான். ரொம்ப நல்லா இருக்கு"
அதை அவளிடமே திருப்பிக் கொடுத்தான். சோகமாய் அவனைப் பார்த்தாள் வர்ஷினி.
"என்ன பாக்குற...? கட்டிவிடு..." தன் கரத்தை அவளை நோக்கி நீட்டினான்.
சரி என்று புன்னகையுடன் தலையசைத்துவிட்டு, அவன் கையில் அந்த கைக்கடிகாரத்தை கட்டி விட்டாள்.
தன்னுடைய பையிலிருந்து ஒரு டப்பாவை எடுத்து அவளிடம் கொடுத்தான் நிமல். அதில் சுழியன் இருந்ததை பார்த்து, அவள் முகம் சந்தோஷத்தில் பிரகசித்தது.
"அம்மாவோட பிரிபரேஷன்..."
"எனக்கு இது ரொம்ப பிடிக்கும்"
"எனக்கு தெரியும். அதனால தான் அம்மாவை செய்ய சொன்னேன்."
"நான் உங்ககிட்ட இதை பத்தி சொன்னதே இல்லயே. எப்படி உங்களுக்கு தெரிஞ்சிது?"
"உன்னை பத்தி தெரிஞ்சிக்கிறதை விட எனக்கு வேற முக்கியமான வேலை இல்ல."
அவள் கையை மென்மையாய் பற்றினான்.
"ஏன்னா, நான் உன்னை ரொம்ப காதலிக்கிறேன்"
மறுபடியும் அவள் கண்கள் கலங்குவதை கவனித்தான் அவன். எதற்காக அவள் எல்லாவற்றிர்க்கும் உணர்ச்சிவசப்படுகிறாள் என்று புரியவே இல்லை அவனுக்கு. அவனுக்கு எதிர்ப்புறம் திரும்பி, தன் கண்ணீரை மறைத்துக் கொண்டு, அந்த சுழியனை சுவைத்தாள் அவள். அதன் பிறகு அவளை அழவைக்கும் எதையும் அவன் கேட்கவில்லை.
சுழியனை சாப்பிட்டு முடித்து, அந்த இடம் முழுக்க சுற்றி திரிந்தாள் வர்ஷினி. பூக்களை பறித்துகொண்டும், கற்களை தூக்கி எறிந்துகொண்டும் இருந்தாள் அவள்.
கை கடிகாரத்தை பார்த்து,
"போகலாமா...? உங்க கார் வர்றதுக்கு முன்னாடி நாம காலேஜ்க்கு போயாகணும்" என்றான் நிமல்.
சரி என்று சந்தோசமாய் தலையசைத்தாள் வர்ஷினி. அவன் கையைப் பற்றி அவனுடைய கண்களை சந்தித்தாள். "என்ன?" என்பது போல் அவளை பார்க்க, புன்னகையுடன் அவனை கட்டியணைத்துக் கொண்டாள் அவள். அவனும் அதை மனதார ஏற்றான்.
அந்த நாளை இனிமையாய் கழித்துவிட்ட சந்தோஷத்தில், அவர்கள் இருவரும் அங்கிருந்து புறப்பட்டார்கள். இந்த முறை, எந்த தயக்கமும் இல்லாமல், அந்த பயணத்தை சந்தோஷமாய் அனுபவித்தாள் வர்ஷினி. அவள் தன்னிடம் எந்த தயக்கமும் இல்லாமல் பழகியது, அவனுக்கு மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஒரு சேர தந்தது. அவர்கள் நகர எல்லைக்குள் நுழைந்த போது, தன் முகத்தை மீண்டும் துப்பட்டாவால் மறைத்துக் கொண்டு, அவன் முதுகில் சாய்ந்து, அவனது இடையை தன் கரங்களால் வளைத்துக்கொண்டாள். அவள் அதை உளப்பபூர்வமாய் செய்ததை அவன் உணர்ந்தான்.
கல்லூரிக்கு சென்று, அவளை இறக்கி விட்டான். அவள் நேரே பெண்களின் அறைக்குச் சென்று, மீண்டும் தனது உடையை மாற்றிகொண்டு தயாரானாள். அவளுக்காக காத்திருந்த காரில் ஏறி அமர்ந்து கொண்டு, அவளையே பார்த்துக்கொண்டிருந்த நிமலை பார்த்து அழகு புன்னகை பூத்துவிட்டு சென்றாள். என்றுமில்லாமல் இன்று அவள் மிகவும் புத்துணர்ச்சியுடன் காணபட்டாள்.
அவள் கிளம்பி சென்றவுடன், மீண்டும் கல்லூரிக்குள் வந்தான் நிமல். அவன் சுதாவை தேடினான். அவனுக்கு வர்ஷினியைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்டாக வேண்டும். அனைத்தையும் என்றால், ஒன்று விடாமல் எல்லாவற்றையும் தான். சுதா தானே அதற்கு சரியான ஆள்...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro