Part 14
பாகம் 14
சுதாவை அவளது கைபேசியில் அழைத்து பேசினான் பிரகாஷ். கட்டிலில் அமர்ந்திருந்த சுதா, அவர்களுடைய திட்டத்தை கேட்டு, திகிலடைந்து கீழே எகிறி குதித்தாள்.
"உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? நீங்க எல்லாரும் என்ன செய்றீங்கன்னு தெரிஞ்சு தான் செய்றீங்களா?"
"எங்களுக்கு தெரியும் சுதா. நிமல் இப்பவே வர்ஷினியை பாக்கணும்னு சொல்றான்"
"அவரால நாளைக்கு வரைக்கும் காத்திருக்க முடியாதா? நீங்க மாட்டிக்கிட்டா என்ன ஆகுறது? அது உங்களோட மட்டும் போகாது, வர்ஷினிக்கும் பெரிய பிரச்சனையாயிடும்"
"வர்ஷினியை நினைச்சு நிமல் ரொம்ப வருத்தபடுறான். அவன் இப்பவே அவகிட்ட மன்னிப்பு கேட்கணும்னு நினைக்கிறான்"
"எல்லாம் சரி தான். ஆனா, நீங்க செய்யப் போற வேலை அவளுடைய நிலைமையை மோசமாக்கிடும். அவங்களுடைய வீடு முழுக்க செக்யூரிட்டிஸ், சர்வன்ட்ஸ், சிசிடிவி கேமராஸ் எல்லாம் இருக்கு. இவ்வளவையும் தாண்டி அவளால வெளியே வரவும் முடியாது, உங்களால உள்ளே போகவும் முடியாது."
பிரகாஷின் கையில் இருந்து கைபேசியை வாங்கி கொண்டான் நிமல்.
"சுதா, நான் நிமல் பேசுறேன். எனக்கு தெரியும், அவங்க வீட்டு பின் பக்கத்துல, ஒரே ஒரு இடத்துல மட்டும் கேமரா கிடையாது. அங்க ஒரு சின்ன கேட்டும் இருக்கு"
"ஆனா நிமல், நீங்க மாட்டிகிட்டீங்கன்னா, அவளுடைய வாழ்க்கை நரகமாயிடும்."
"நான் நிச்சயம் அவளை கம்பல் பண்ண மாட்டேன். அவ ரிஸ்க் எடுக்க பயந்தா நான் அவளை தொல்லை பண்ண மாட்டேன். ப்ளீஸ் அவகிட்ட ஒரே ஒரு தடவை கேளு. நான் அவகிட்ட நாளைக்கு கூட சாரி சொல்ல முடியும். ஆனா, அது ரொம்ப சாதாரணமா இருக்கும். நான் எவ்வளவு வருத்தப்படுறேன்னு அவளுக்கு தெரியணும்னு நினைக்கிறேன். எல்லாத்துக்கும் மேல, அவளுக்கு உடம்பு சரியில்லாதப்போ, அவ அழுது இன்னும் அவளுடைய உடம்பை கெடுத்துக்க வேண்டாம்னு நினைக்கிறேன். ப்ளீஸ் எங்களுக்கு ஹெல்ப் பண்ணு. உன்னால மட்டும் தான் அது முடியும். ப்ளீஸ்... "
அவனுடைய குரலில் இருந்த வருத்தத்தை சுதாவால் உணர முடிந்தது. அவன் கூறுவது சரி தான். ஒருவேளை வர்ஷினி அவனைப் பார்க்கத் துணியவும் தயாராக இருந்தால், என்ன செய்வது? அவர்களுக்கு அவள் உதவவில்லை என்று தெரிந்து கொண்டால், வர்ஷினி சுதாவின் மீது கோவம் கொள்ளவும் செய்யலாம். நிமல் என்று வந்துவிட்டால், வர்ஷினி ஒரு பைத்தியக்காரி. அவள் என்ன நினைப்பாள் என்று யாராலும் கணிக்க முடியாது. அவளுக்கு என்ன தேவை என்று அவள் முடிவு செய்து கொள்ளட்டும் என்று முடிவெடுத்தாள் சுதா.
காமேஸ்வரன் இல்லம்
காமேஸ்வரன் மிகுந்த ஆனந்தத்தில் இருந்தார். அவருடைய மகன், எப்படியோ குமணனின் நம்பிக்கையை பெற்று விட்டான் அல்லவா...!
"குமணனோட சோப்பு விஷயத்தைப் பத்தி ஏதாவது யோசிச்சியா?" என்றான் காமேஸ்வரன்.
"ஆமாம்பா... யாரோ புத்திசாலித்தனமா சோப்பை எல்லாம் மாத்தி இருக்காங்க. அது நிச்சயமா குமணன் கம்பெனியைவிட்டு வெளியில வந்ததுக்கப்புறமா தான் நடந்திருக்கணும்"
"அப்போ ஃபாரின் போன சரக்கு எப்படி மாறிச்சி?"
"அதை யாரு, எப்படி மாத்துனாங்கன்னு தான் ஒன்னுமே புரியல..."
"அதை விபி கம்பெனியிலிருந்து தான் யாரோ செஞ்சிருக்கணும்."
"எப்படி அவ்வளவு கன்ஃபிடன்ட்டா சொல்றீங்க?"
"ஏன்னா, அவங்களுடைய கம்பெனி தான் குமணன் கம்பெனிக்கு அடுத்த இடத்துல இருக்கு. குமணனுடைய காண்ட்ராக்ட் கேன்சல் ஆனா, அடுத்த இடத்துல இருக்குற அவங்களுக்கு தானே எல்லா கான்ட்ராக்டும் போகும்...?"
"பிரில்லியன்ட் பா... எப்படிப்பா இவ்வளவு ஈசியா எல்லாத்தையும் புரிஞ்சு வச்சிருக்கீங்க?"
"அரசியல் கட்சி நடத்துறதுனா சும்மான்னு நினைச்சியா? எந்த நேரமும் நம்ம விழிப்பா இருக்கணும். ஏதாவது ஒரு விஷயத்தில் முன்னேறி வரணும்னு நினைச்சா, உன்னுடைய கவனம் முழுக்க அதுல தான் இருக்கணும்"
"யூ ஆர் கிரேட் பா. இன்னிக்கு ராத்திரி டின்னருக்கு நான் அவங்க வீட்டுக்கு போகும் போது, அவரை அசத்திடலாம்னு சொல்லுங்க."
"இல்ல, அப்படி செய்யாதே"
"ஆனா ஏன்?"
"அவர் உன்கிட்ட கொடுத்திருக்கிற வேலை, ரொம்ப கஷ்டமா இருக்குன்னு காட்டிக்கோ. இந்த தடவை நீ அதை சீக்கிரமாக முடிச்சி கொடுத்தா ஒவ்வொரு தடவையும் அதையே அவர் எதிர்பார்ப்பார். அதனால, நீ அவருக்காக கஷ்டப்பட்டு வேலை செய்கிறதா கட்டிக்கோ"
"பிரமாதம் பா"
"குமணன் வீட்டுக்குப் போயி டின்னரை நல்லா என்ஜாய் பண்ணிட்டு வா. வர்ஷினியை மடக்க பாரு. அவ ரொம்ப அழகா இருப்பாளாம் தெரியுமா...?"
"நிஜமாவாப்பா?" என்றான் வாய் முழுவதும் பல்லாக.
வர்ஷினியின் புகைப்படத்தை அவனுக்கு காட்டினார் காமேஸ்வரன். அதை பார்த்து ஒரேயடியாய் விழுந்து போனான் கார்த்திக்.
"இப்படிப்பட்ட ஒரு பொண்ணு கூட வாழ்ந்தா, உன்னுடைய வாழ்க்கைக்கு ஒரு புது அர்த்தம் கிடைக்காது...?" என்று மேலும் அவனுக்கு ஆசை காட்டினார்.
"உங்களுடைய சாய்ஸ் எப்போதுமே பெஸ்ட் தான் பா..."
அங்கு வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருள்களை சுட்டிக்காட்டி,
"இந்த கிஃப்டை எல்லாம் அவங்க வீட்டுக்கு எடுத்துகிட்டு போ. இதை வச்சி குமணனுடைய ஓஃபையும், மகளையும் மடக்க உனக்கு உதவியாயிருக்கும்"
"சரிங்கப்பா..." என்றான் சிரித்தபடி.
வர்ஷினியின் புகைப்படத்தை கையோடு எடுத்துச் சென்றான் கார்த்திக். அதை கவனிக்க தவறவில்லை காமேஸ்வரன்.
குமணன் இல்லம்
எதிர்பார்த்ததைப் போலவே, அழுது கொண்டிருந்தாள் வர்ஷினி. தான் உயிர்வாழ எந்த காரணமும் இல்லை என்று தோன்றியது அவளுக்கு. நிமலின் வெறுப்பை அவளால் தாங்க முடியவில்லை. இன்னும் ஒரு நாள், அவன் அவளுடன் பேசாமல் இருந்தால், அவள் உயிரை விடவும் நேரலாம். அவள் எதுவும் சாப்பிடவில்லை... அதைப் பற்றி யாரும் கவலைப் படவும் இல்லை.
அவள் அறையின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்க, முகத்தை துடைத்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள் வர்ஷினி. கார்ட்லெஸ் ஃபோனுடன், லட்சுமி உள்ளே நுழைந்தாள்.
"உங்க ஃபிரெண்டு உங்ககிட்ட பேசணுமாம், பாப்பா"
சுதா ஒருத்தி தான், அவள் வீட்டில் இந்த சலுகைகளை கொண்ட ஒரே தோழி. லட்சுமியிடம் இருந்து கார்ட்லெஸ் ஃபோனை வாங்கிக்கொண்டாள் வர்ஷினி.
"ஹலோ..."
அவள் குரலே சுதாவிற்கு சொல்லியது, அவள் எந்த நிலையில் இருக்கிறாள் என்று.
"உங்க வீட்டுக்கு வெளிய, நிமல் காத்துகிட்டு இருக்காரு."
"என்ன....? ஆனா ஏன்?" என்றாள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன்.
"உன்னை பாக்குறதுக்கு"
"ஆனா, அவர் என் மேல கோவமா இருந்தரே"
"உன்னுடைய ஹெல்த் கண்டிஷனை பத்தி நான் அவர்கிட்ட சொன்னேன்"
"நெஜமாவா? அவர் என்னை மன்னிச்சிட்டாரா?" என்றாள் புன்னகைக்கு இடையில் கண்ணீருடன்.
"ஆமாம்... உங்க வீட்டுக்குப் பின்பக்கம் பாரு"
அவள் ஜன்னலின் அருகே ஓடிச்சென்று திரையை விலக்கினாள். ஆமாம்... அங்கு நிமல், கேட்டின் அருகே நின்று கொண்டிருந்தான்.
"சுதா, நிஜமாவே நிமல் இங்க வந்திருக்காரு" என்று பைத்தியக்காரியை போல் சிரித்தாள் வர்ஷினி.
"நீ எப்படி இப்ப வெளியில போவ?"
"கடவுள் புண்ணியத்துல, அம்மாவும் அப்பாவும் வீட்டில் இல்ல"
"ஆனா, ஸர்வன்டும், செக்யூரிட்டியும் இருப்பாங்களே...?"
"அவங்க எல்லாரும் சாயந்திரத்துல இருந்தே ரொம்ப பிசியா வேலை செஞ்சுகிட்டு இருக்காங்க. ஏன்னே தெரியல..."
"நீ அவங்களை சமாளிச்சுடுவியா?"
"ஆமாம்... நான் சமாளிச்சுக்கறேன்."
"தயவு செஞ்சி ரிஸ்க் எடுக்காத..."
"நான் ரிஸ்க் எடுத்து தான் ஆகணும்... என்னால நிமலை ஏமாத்த முடியாது"
"ஜாக்கிரதை..." என்றாள் கவலையாக சுதா.
"நான் பாத்துக்குறேன். நான் உன்கிட்ட அப்புறம் பேசுறேன். ரொம்ப தேங்க்ஸ், சுதா"
கண்ணைத் துடைத்துக் கொண்டு, அழைப்பை துண்டித்தாள் வர்ஷினி.
பெருமூச்சு விட்டாள் சுதா. அவள் வர்ஷினிக்காக மிகவும் கவலைப்பட்டாள். அவள் நிமல் மீது கொண்டிருக்கும் காதல் மிக அசாதாரணமானது. அது ஒவ்வொரு நொடியும் பூதாகரமாக வளர்ந்து கொண்டே செல்கிறது... எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி...!
அவர்கள் இப்பொழுது துணிந்து செய்ய இருக்கும் காரியத்தை நினைத்து பயந்து கொண்டிருந்தாள் சுதா.
ஆனால் வர்ஷினியோ, நிமலை தவிர வேறு எதை பற்றியும் சிந்திக்க தயாராக இல்லை. அவளுக்கு இப்போது வேண்டியதெல்லாம், அவள் நிமலை சந்தித்தாக வேண்டும்.
எதையும் காட்டிக் கொள்ளாமல் சர்வ சகஜமாக வெளியே வந்த அவளை கேள்விக்குறியோடு பார்த்தாள் லக்ஷ்மி.
"எனக்கு என்னவோ போல இருக்கு கா. கொஞ்ச நேரம் கார்டன்ல காத்து வாங்கட்டுமா?" என்றாள் கெஞ்சலாக.
லட்சுமி, சரி என்று தலையசைக்க, எந்த அவசரமும் காட்டாமல் மெதுவாய் நடந்து பின்புறம் வந்தாள் வர்ஷினி. கேட்டின் அருகில் நிமல் நிற்பதை கவனித்தாள் அவள். போட்கிளப் ரோடின் அமைதியான சாலையின் இரு மூலைகளிலும் நின்று கொண்டிருந்தார்கள் ராஜாவும், பிரகாஷும் எச்சரிக்கை உணர்வுடன்.
ஓடிச் சென்று, யாரும் பார்க்கும் முன், அவனை கேட்டின் அருகில் இருந்த ஜெனெரேட்டர் ரூமுக்கு இழுத்து வந்தாள். ஒரு நொடி கூட வீணாக்காமல், அவள் அவனை இறுக்கமாய் கட்டிப் பிடித்து மனதை விட்டு அழத் துவங்கினாள் அவனுக்கு அதிர்ச்சி அளித்து. நிமல் மிகவும் வேதனை அடைந்தான் என்று கூறத் தேவையில்லை.
"என் மேல கோவமா இருந்தா, என்னை திட்டுங்க... அடிங்க... ஆனா, என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க. நீங்க என்கிட்ட இருந்து விலகிப் போறத என்னால் தாங்கவே முடியல. நீங்க அப்படி பண்ணா, நான் செத்து போயிடுவேன். தயவு செஞ்சி என்னை மன்னிச்சிடுங்க..."
நிமலுடைய மனநிலையை வார்த்தையால் விவரிக்க முடியவில்லை. எதற்காக இந்தப் பெண் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறாள்? அவன் பேசாவிட்டால் அவள் இறந்து விடுவாளா? என்ன தான் பிரச்சனை அவளுக்கு? அவனுக்குள் என்ன நிகழ்கிறது?
ஏதும் புரியாமல் சிலைபோல் நின்றான் நிமல். அவனை, சுற்றி வளைத்திருந்த அவளுடைய கரங்கள் இறுகின. கிட்டத்தட்ட, அவன் நெஞ்சின்னுள்ளே புதைந்திருந்தாள் அவள். அவள் அப்படி அழுது கொண்டிருந்ததை பார்த்து கொண்டு, அதற்கு மேலும் அவனால் சும்மா இருக்க முடியவில்லை. அவள் எதிர்பார்க்கும் அந்த ஒரு அரவணைப்பை வழங்க, அவனும் அவளை கட்டி அணைத்துக் கொண்டான். வேதனையுடன் அவளுடைய தலையை வருடி கொடுத்தான். அவன் ஒன்றும் பேசவில்லை... சொல்ல வந்த வார்த்தைகளை, செயலால் வெளிப்படுத்தும் பொழுது, அங்கு வார்த்தைக்கு வேலையின்றி போகிறது. மெல்ல தன் முகத்தை உயர்த்தி அவனைப் பார்த்தாள் வர்ஷினி. அந்த மெல்லிய ஒளியிலும், அவள் முகம் சிவந்து போயிருந்ததை காண முடிந்தது அவனால். அவன் முகத்தை தன் கையில் ஏந்திக் கொண்டாள் அவள்.
"ஐ அம் சாரி... நான் உங்கள ரொம்ப காயப்படுத்திடேன்...உங்க பிறந்த நாளா அதுவுமா, உங்களை வருத்த பட வச்சிட்டேன்... என்னை மன்னிச்சிடுங்க..." என்று கொட்டி தீர்த்துவிட்டு,
அவன் எதிர் பாராத வண்ணம், அவன் இதழின் மீது இதழ் பதித்து, அவனை உச்சி வியர்க்க செய்து விட்டாள். அந்த இதழ் பரிமாற்றத்தில் நிமல் பங்கு பெறவில்லை என்றாலும், அவன் அதை விரும்பவில்லை என்று அர்த்தமல்ல. அது அவனை பரவசத்தில் ஆழ்த்தியது. அவன் உடல் செயலிழந்தது போல் உணர்ந்தான். அவளுடைய மென்மையான இதழ்கள், அவனிடமிருந்து விலகி சென்று விடுமோ என்ற ஏக்கம் ஏற்பட்டது அவனுக்கு. அந்தத் தெய்வீக உணர்வில் பங்கு கொள்ள வேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது. அடுத்த நொடியே, அதை நடைமுறைப் படுத்தினான். அவன் வாழ்விலேயே அது தான் மிக அழகான நேரம் என்பது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது அவனுக்கு.
அப்போது லட்சுமி, வர்ஷினியை அழைத்தாள். அது அவர்களை, திட்டுகிட்டு ஒருவரை விட்டு ஒருவர் விலகச் செய்தது. அப்பொழுது அவனுடைய தோட்டம் முழுவதும், வண்ணத்தை இழந்ததுவிட்டதைப் போல் உணர்ந்தான் நிமல். அந்த மயக்கம் தரும் இணைப்பு மீண்டும் வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு... இப்போது மட்டுமல்ல... அவனுடைய வாழ்க்கை முழுவதற்கும்.
அவனை தவிப்புடன் பார்த்தாள் வர்ஷினி. அவள் ஏதோ சொல்ல வேண்டும் என்று தவிப்பது அவனுக்கு புரிந்தது. மீண்டும் அவனுடைய முகத்தை தன் கையில் ஏந்தி, அவள் இதழ்களை அவன் இதழ் மீது எவ்வளவு அழுத்தமாக பதிக்க முடியுமோ அவ்வளவு அழுதமாக பதித்துவிட்டு, பெயரிட முடியாத நிலையில் அவனை விட்டுவிட்டு ஓடி சென்றாள்.
அந்த அழுத்தமான முத்தம், எழுதாத பல கதைகளை சொன்னது... அவளுக்கு அவனுடன் இருக்க வேண்டும்... அவனுடைய அருகிலேயே இருக்க வேண்டும்... அவனை விட்டு விலகிவிடக்கூடாது... அவற்றை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
இனியவர்களின் இருப்பிடம்
தன் அறையில், இங்கும் அங்கும் நிம்மதியின்றி உலவிக் கொண்டிருந்தான் நிமல். வர்ஷினிடைய செய்கைகள் தான் அவனுடைய நிம்மதியின்மைக்கு காரணம். அவள் தன்னை சந்திக்க மறுத்து விடுவாள் என்று அவன் நினைத்திருந்தான். ஆனால், அவள் அவனை சந்தித்தாள். வீட்டைவிட்டு வெளியே வர கூட பயப்படும் ஒரு பெண், கட்டு காவலுடன் இருக்கும் அவளுடைய வீட்டிலேயே அவனை சந்திப்பது என்பது சாதாரண விஷயமல்ல.
அவன் எவ்வளவு வருத்தமாக இருக்கிறான் என்று அவளுக்குத் தெரிவிக்க தான் அவளுடைய வீட்டிற்கு சென்றான் நிமல். ஆனால் அவளோ, அவள் மீது எந்த தவறும் இல்லாவிட்டாலும், அவனுடைய மன்னிப்புக்காக மன்றாடி, மன்னிப்பும் கேட்டு அவனை பேச்சிழந்து நிற்க வைத்து விட்டாள்.
அவனை அவள் முத்தமிட்ட போது, அவளுக்குள் தான் என்ன ஒரு உறுதி...! அவள் எவ்வளவு பயந்து போயிருந்தாள் என்பதை அவனால் உணர முடிந்தது. அவள், எக்காரணத்திற்காகவும் அவனை இழக்க தயாராக இல்லை என்பது தெள்ளத் தெளிவாய் புரிகிறது. அவளுடைய காதல் உண்மையானது அல்ல என்று கூறும் தைரியம் இருக்கிறதா அவனுக்கு? கூறத்தான் முடியுமா அவனால்? அது அவனுக்கு நல்லது தானா? அப்படி அளவுக்கு மீறி அவளை அவனுக்காக ஏங்க வைப்பது நியாயமா?
ஒரு வேளை, குமணனின் சதியால் இவன் தோற்கடிக்கப்பட்டால் என்னாவது? அந்த எண்ணமே நிமலை பலவீனம் அடைய செய்தது. இல்லை, அப்படி நடந்து விடக்கூடாது. கட்டிலின் மீது தொப்பென்று அமர்ந்தான் நிமல். ஏன் அவள் அவ்வளவு பலவினாமாய் காணப்பட்டாள்?
ஏதோ தவறு நடக்கிறது. அவளுக்கு வலிப்பு வருகிறது... அல்சர் இருக்கிறது... அவளுடைய பெற்றோரை விட்டு, அவனுடன் வர அவள் தயாராக இருக்கிறாள்... அவளுடைய கண்களில் எப்போதும் ஒரு சோகம் குடி கொண்டிருக்கிறது... அவளுடைய புன்னகை, அவளுடைய கண்களை போய் சேர்வதே இல்லை... உண்மையிலேயே அவள் சந்தோஷமாக தான் இருக்கிறாளா? அல்லது, அவன் அளவுக்கு அதிகமாய் சிந்திக்கிறானோ? அவனுடைய மனம் அமைதி அடையவில்லை. அவள் எதையோ மறைப்பதாக ஏன் தோன்றுகிறது? அது என்னவாக இருக்க முடியும்? அதை கண்டு பிடித்தாக வேண்டும், என்று நினைத்தான் நிமல்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro