Part 12
பாகம் 12
ஒரு வாரத்திற்கு பிறகு
குமணன் இல்லம்
குளியலறையில் சோப்பு இல்லாததைக் கண்டு எரிச்சல் அடைந்தார் குமணன். துண்டை சுற்றிக்கொண்டு, வெளியே வந்தார்.
"கல்ப....னா..." என்று காட்டுகத்து கத்தினார்.
"என்ன ஆச்சுங்க?" என்று பரபரத்தார் கல்பனா.
"உன்னால ஒரு சாதாரண விஷயத்தை கூட கவனிக்க முடியாதா? இதைக்கூட செய்யாம வீட்ல என்ன செஞ்சுகிட்டு இருக்க? பாத்ரூம்ல சோப்பு இருக்கான்னு கூட பாக்க முடியாதா உன்னால? உதவக்கரை... போய் சோப்பு கொண்டுவா... "
கல்பனாவுக்கு உதர ஆரம்பித்தது. வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்காக ரிஷி, எல்லா சோப்பையும் எடுத்து சென்றுவிட்டதை அவர் சுத்தமாக மறந்தே போனார். அவர் கார் ஓட்டுநரை அழைத்து, அருகில் இருக்கும் கடையில் இருந்து, அவர்களுடைய கம்பெனியின் சோப்பை வாங்கி வருமாறு உத்தரவிட்டார். குமணனின் கோபத்தை பற்றி நன்றாக அறிந்த அந்த ஓட்டுநர், சோப்பு வாங்கிவர தலைதெறிக்க ஓடினர்.
இரண்டே நிமிடத்தில், மூச்சு வாங்க ஓடி வந்து, சோப்பை கல்பனாவிடம் கொடுத்தார். மீண்டும் குமணன் கத்த ஆரம்பிக்கும் முன், அதை எடுத்துச் சென்று அவரிடம் கொடுத்தார் கல்பனா. ஆனால் அவருடைய கெட்ட நேரம், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கத்தி கூச்சல் போட்டார் குமணன். அவரிடம் வழங்கப்பட்ட சோப்பு மிக மோசமான வாசனை வீசியது. அது அவர்களுடைய நிறுவனத்தின் சோப்பே அல்ல. ஆனால், அது அவர்களுடைய நிறுவனத்தின் பெயர் அச்சிடப்பட்ட மேலுறைக்குள் இருந்தது. இது எப்படி நடந்தது? அவருடைய நிறுவனத்தின் சோப்புகள் உலக பிரசித்தி பெற்றவை. அவருடைய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக அனைத்து ஒப்பந்ததையும் ரத்து செய்த பொழுது, அவருக்கு காரணம் விளங்காமல் இருந்தது. இப்பொழுது அவருக்கு புரிந்துவிட்டது, அவருக்குத் தெரியாமல் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது. உடனடியாக அனைத்தையும்... அனைவரையும் சோதனைக்கு உள்ளாக்க வேண்டும்... குமணன் எச்சரிக்கையானார்.
கல்லூரி
வழக்கம் போல, நிமலை சந்தித்த பிறகு வகுப்பிற்குள் நுழைந்தாள் வர்ஷினி. சுதா அவள் காதருகே குனிந்து,
"திங்கக்கிழமை என்ன ஸ்பெஷல்ன்னு உனக்கு தெரியுமா?"
"என்ன ஸ்பெஷல்?"
"உன்னுடைய இதயத்தின் சக்ரவர்த்திக்கு பிறந்தநாள்..." என்றாள் கிண்டலாக.
"நிஜமாவா?" என்றாள் விழி விரிய.
"எஸ்"
"ஏன் நீ முன்னாடியே சொல்லல?"
"எனக்கு இப்ப தானே தெரியும்"
"கடவுளே... இப்ப நான் என்ன செய்யுறது? இன்னும் ரெண்டு நாள் தானே இருக்கு?"
"நீ கவலைப்படாதே... நீ என்ன செஞ்சாலும் நிமிலுக்கு பிடிக்கும்"
"அதுக்காக நான் சும்மா இருக்க முடியாது..." என்று எதையோ தீவிரமாய் யோசித்தவள்,
"நான் அவர் கூட வெளியில போனா எப்படி இருக்கும்?" என்றாள் ஆவலாக.
"நீ நிஜமா தான் சொல்றியா?" என்று கேட்டாள் அதிர்ச்சியாக சுதா.
"என்னால அவருக்கு அதை தானே செய்ய முடியும்...? ப்ளீஸ் ப்ளீஸ் பிரகாஷ்கிட்ட சொல்லிடாத... அவருக்கு சர்ப்ரைஸ் குடுக்கப் போறேன்"
"நடத்து..." என்றாள் புன்னகையுடன் சுதா.
"என்கிட்ட ஐநூறு ரூபா இருக்கு. அதுல நிமலுக்கு ஒரு வாட்ச் வாங்கிட்டு வரியா? ஏன்னா, என்னால வெளியில் போக முடியாதுல்ல..." கவலை மேலோங்கியிருந்தது அவள் குரலில்.
சுதாவிற்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது. மிக வசதியான குடும்பத்தை சேர்ந்த நிமல், அவள் கொடுக்கும் ஐநூறு ரூபாய் பெருமானமுள்ள சாதாரண கைகடிகாரத்தை விரும்புவனா?
"மேல கொஞ்சம் பணம் போட்டு, நல்ல வாட்ச்சா நான் வாங்கிட்டு வரேன்" என்றாள் சுதா.
"என்னை தப்பா நினைச்சுக்காத சுதா. இது நான் கொண்டாடுற நிமலுடையை முதல் பிறந்தநாள். என்னால முடிஞ்சதை நான் அவருக்கு வாங்கி தர நினைக்கிறேன்." என்று சற்றே நிறுத்தியவள்,
"அவர் அதை யூஸ் பண்ணலனாலும் பரவாயில்ல" என்றாள் மெல்லிய குரலில் வருத்தமாக.
"சரி, நான் வாங்கிட்டு வரேன்" என்றாள் சுதா.
"தேங்க்ஸ் சுதா... அது யாருக்கும் தெரிய வேணாம்"
"சரி பா..."
.......
உணவு இடைவேளையின் போது, வர்ஷினியும் சுதாவும் கேன்டீனுக்கு வந்தார்கள். நமது நண்பர்கள் அவர்களுக்காக அங்கே காத்திருந்தார்கள். அவர்களின் அருகில் சென்று அமர்ந்து கொண்டார்கள் அவர்கள் இருவரும்.
"ஹாய், எப்படி இருக்க?" என்றான் நிமல்.
"இதே கேள்வியை காலையில தான் கேட்டீங்க" என்றாள் வர்ஷினி.
"நான் கேட்டு நாலு மணி நேரம் ஆச்சு. நீ ஒரு அல்சர் பேஷண்ட். உனக்கு எப்போ உடம்பு சரியில்லாம போகும்ன்னு எனக்கு தெரியாது இல்ல?"
"நான் எவ்வளவு உடம்பு சரியில்லாம இருந்தாலும், உங்களை பார்த்தா சரியாயிடுவேன்" என்றாள்.
அதைக் கேட்டு சிரித்தபடி தன் கண்களை சுழற்றினான் நிமல். இது போல வர்ஷினி பேசுவது நிமலுக்கு மிகவும் பிடித்திருந்தது.
"சரி உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு"
அவன் ஏன் அதை கேட்கிறான் என்று புரிந்து போனது அவளுக்கு. அவனுடைய பிறந்த நாளன்று அவளுக்காக அதை அவன் கொண்டு வரப் போகிறான். அவள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள். அவனுடன் சிறிது விளையாட நினைத்தாள்.
"எனக்கு உங்களைத் தான் பிடிக்கும்"
"ஆனா, உன்னால என்ன சாப்பிட முடியாது" என்றான் கிண்டலாக.
"யார் சொன்னது? கல்யாணத்துக்கு அப்புறம் நான் உங்களை எப்படி சாப்பிட போறேன்னு பாருங்க" என்றாள்.
அவள் அதை வேடிக்கைக்காக தான் கூறினாள். ஆனால், நிமல் வேறு விதமாய் யோசித்தான். அவன் இதழோர புன்னகையை உதிர்த்தவாரு அவளைப் பார்த்து குறும்பாய் சிரிக்க, அதில் ஒளிந்திருந்த அர்த்தம் புரிந்தபோது, அவளுக்கு சங்கடமாகி போனது. மெல்ல தன் தலையை தாழ்த்தி கொண்டாள்.
"நீ என்னை சாப்பிடும் போது, நான் மட்டும் உன்னை சாப்பிடாம விட்டுடுவேனா?" என்று அவன் அவள் காதில் ரகசியம் உறைக்க, அவள் கன்னம் சிவந்து போனது.
அதை பார்த்து மந்திரத்தால் கட்டுண்டவன் போல் மயங்கி நின்றான் நிமல். அவள் வெட்கப்படும் போது மேலும் அழகாக இருந்தாள். அவள் வெட்கப்பட்டு அவன் பார்ப்பது அதுவே முதல் முறை.
"வெட்கப்படுறதை நிறுத்து. இப்பவே உன் கன்னத்தை கடிக்கணும் போல இருக்கு எனக்கு" என்று அவன் கூற, அவள் வயிற்றில் யாரோ மத்தால் கடைவது போல் இருந்தது.
அவள் மெல்ல தன் இமைகளை அவனை நோக்கி உயர்த்தினாள். மேசைக்கு அடியில் அவள் கையை பற்றி, அவள் ரத்த செல்களை நடுங்க வைத்தான் நிமல். சிறிது நேரத்தில் அவளுக்கு இருந்த நடுக்கம் மெல்ல அமைதியானது.
"இப்போ சொல்லு, உனக்கு என்னை தவிர, வேற என்ன பிடிக்கும்...?" என்றான் புன்னகையுடன்
அவளும் புன்னகை புரிந்து,
"எனக்கு எல்லாமே பிடிக்கும்" என்றாள்.
"குறிப்பா என்ன?"
"எனக்கு பிடிக்காததுன்னு எதுவுமே இல்ல. எது கொடுத்தாலும் சாப்பிடுவேன்..."
"அப்படின்னா, நீ உண்மையிலேயே என்னை சாப்பிடறத பத்தி தான் பேசுனியா?" என்றான் சிரித்தபடி.
ஆமாம் என்று புன்னகையுடன் தலையசைத்து அவள் தலையை குனிந்து கொண்டாள்.
நிமலின் மனம் ஒரு நிமிடம் சட்டென்று நின்றது. எல்லாவற்றையும் விரும்பி சாப்பிடுவாள் என்றால், அவளுக்கு எப்படி அல்சர் வந்தது? எங்கேயோ இடிக்கிறதே...? அதன் பிறகு எதைப்பற்றியும் நிமல் பேசவில்லை. அவளுடைய அல்சர் மீதே அவன் நினைப்பு இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை இரவு
வர்ஷினியால் அமைதியாய் ஓரிடத்தில் அமர்ந்திருக்கவே முடியவில்லை. அவள் இங்குமங்கும் உலவி கொண்டே இருந்தாள். நாளை நிமலுக்கு பிறந்தநாள். அதை பற்றி ஆர்வத்துடன் சிந்தித்துக் கொண்டே இருந்தாள். மறுநாள் அணிந்துகொள்ள அவளுக்கு மிகவும் பிடித்த உடையை எடுத்து வைத்தாள். இரவு பன்னிரெண்டு மணிக்கு சரியாக ஃபோன் செய்து அவனுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தாள்.
அவளுடைய அம்மாவும் அப்பாவும் உறங்கி விட்டார்களா இல்லையா என்று தெரிந்து கொள்வதற்காக, தண்ணீர் எடுக்கும் சாக்கில் அறையைவிட்டு வெளியே வந்தாள் வர்ஷினி. அவர்கள் பேசுவதைக் கேட்டு அப்படியே நின்றாள். ஏனென்றால், அவர்கள் இருவரும் அவளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
"நீங்க நிஜமாத்தான் சொல்றீங்களா? உண்மையிலேயே காமேஸ்வரன், வர்ஷினியை அவருடைய மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைப்படுறாரா?"
"ஆமாம். நானும் இந்த சந்தர்ப்பத்திற்காக தான் காத்துகிட்டு இருந்தேன். பாரு, வர்ஷினியை வச்சி நான் எப்படி காய் நகர்த்துறேன்னு. வரப்போற எலெக்ஷன், என்னுடைய எல்லா எதிரிகளுக்கும் முடிவு கட்ட போகுது. காமேஸ்வரன் ஜெயிச்சதுக்கு அப்புறம் என்னை யாராலும் தொட முடியாது. நான் மிகப் பெரிய சக்தியா உருவெடுக்க போறேன்..." என்று கொக்கரித்தார்.
அதைக் கேட்ட வர்ஷினியின் கால்கள் தட தட வென ஆடியது. அவளுக்கு அவள் தந்தையை பற்றி நன்றாகவே தெரியும். அவளுடைய திருமணத்தை அடிதளமாக வைத்து அவர் மிகப்பெரிய திட்டம் தீட்டி கொண்டிருக்கிறார். இந்த திருமணத்தை எப்படியும் நடத்தியே தீர வேண்டும் என்று அவர் உறுதியாக இருப்பார். கார்த்திக்கை மணந்து கொள்ள சொல்லி அவளைக் கட்டாயப் படுத்துவார். அப்படி என்றால், நிமலின் நிலைமை என்னாவது? ஒருவேளை அவர் நிமலை ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வது? அவர் நிமலை கொல்ல கூட தயங்க மாட்டார். அவளுடைய அப்பா எவ்வளவு கருணையற்றவர் என்பது அவளுக்கு தெரியும். அவள் தன்னுடைய உடல் நரம்புகள் இறுக்கமாவதை உணர்ந்தாள். அவள் உடல் பலவீனம் அடைந்தது. அவளுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு, தன் நினைவிழந்து தரையில் விழுந்தாள். அவள் மிக அதிகமான மன அழுத்தத்திலோ, பயத்திலோ இருக்கும் பொழுது, அவள் வலிப்புக்கு ஆளாவாள். அப்படி நடப்பது இது மூன்றாவது முறை.
அவள் கை கால்கள் வெட்டி இழுப்பதை பார்த்து, லட்சுமி பெருங் கூச்சலிட்டாள். அவள் கூச்சலை கேட்டு குமணனும், கல்பனாவும் ஓடிவந்தார்கள். அவளை தூக்கிக் கொண்டு காரை நோக்கி ஓடினார் குமணன். வர்ஷினி, அவருடைய துருப்புச்சீட்டு ஆயிற்றே.
.......
மறுபுறம், தனது பிறந்தநாளன்று வர்ஷினியை பார்க்க மிக ஆவலாய் இருந்தான் நிமல். நிச்சயம் சுதா, அவனுடைய பிறந்தநாளை பற்றி அவளிடம் கூறியிருப்பாள் என்று அவனுக்கு தெரியும். அவளிடமிருந்து பெரிதாக எதுவும் இல்லாவிட்டாலும், அவள் என்ன செய்ய போகிறாள் என்ற எதிர்பார்ப்பு அவனுக்கு இருந்தது. அவள் தன் மீது கொண்டிருந்த காதலை முழுதாய் அறிந்தவன் ஆயிற்றே அவன். தனது நண்பர்களிடம் கூட அதைப் பற்றி சொல்லி பெருமை அடித்துக் கொண்டான்.
வர்ஷினி தனக்கு ஃபோன் செய்வாள் என்று இரவு முழுவதும் தூங்காமல் அவனுடைய கைப்பேசியை கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான் நிமல். ஆனால் அவளிடமிருந்து அழைப்பு வரவே இல்லை. சரியாக பன்னிரெண்டு மணிக்கு, அவனுடைய பெற்றோர்களும், பிரகாஷ் மற்றும் ராஜாவும் அவனுக்கு வாழ்த்துக்கள் சொல்லி கேக் வெட்டிய போது கூட, அவனுடைய மனது வர்ஷினியின் மீதே இருந்தது. அவளிடம் கைபேசி இல்லாவிட்டால் என்ன, அவளுடைய வீட்டின் லேண்ட் லைனில் இருந்து அவளால் அவனிடம் பேச முடியாதா? ஒருவேளை, அவள் வேறு ஏதாவது திட்டமிட்டிருக்கலாம். தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு விடியற்காலையில் உறங்கிப் போனான் நிமல்.
கல்லூரி
ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டு கல்லூரிக்கு வந்தான் நிமல். இந்த உலகிலேயே மிக அருமையான ஒரு உணர்வு, நாம் பிறரால் ஆராதிக்கபடுவது தான். வர்ஷினி தான் அவனுக்கு சதா அந்த உணர்வை வழங்கி கொண்டேயிருக்கிறாளே...!
தனது கை கடிகாரத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தான் நிமல். வழக்கமாக அவள் கல்லூரிக்கு வரும் நேரம் கடந்து விட்டிருந்தது. வகுப்பிற்கு மட்டம் அடித்துவிட்டு அவளுக்காக காத்திருந்தான். ஒருவேளை அவள் அவனுக்காக சிறிது தாமதமாக வரலாமோ என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது.
முதல் பாடவேளை... இரண்டாம் பாடவேளை... கடந்ததுகொண்டிருந்து... வர்ஷினி வரவில்லை. ஏமாற்றமும், வெறுப்பும் அவனை பிடுங்கித்தின்றது. நேரம் கடக்க, கடக்க அவனுடைய வெறுப்பு கோபமாக மாறியது. அவனால் அந்த அலட்சியத்தை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அவள் அவனைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள்? அவள் எதற்காக இப்படி அவனை ஏமாற்றினாள்?
அந்த நாள் முழுவதும் அவள் கல்லூரிக்கு வராமல் போகவே, அதை மிகப் பெரிய அவமானமாக நினைத்தான் நிமல். அவள் மட்டும் அவன் முன் வந்திருந்தால், அவன் அவளை கண்களாலேயே எரித்திருப்பான். அவன் மனது அவ்வளவு குமுங்கி கொண்டிருந்தது. எப்படி அவள் இவ்வளவு அலட்சியமாக இருக்க முடியும்? அவள் தானே அவனுக்கு முதலில் வாழ்த்துக் கூற வேண்டியவள்?
அவளுக்கு எப்போதுமே அவளுடைய குடும்பம் தான் முக்கியம். அப்பாவிற்கு இது பிடிக்காது, அம்மா என்னை திட்டுவார்கள், நான் வீட்டிற்கு செல்ல வேண்டும், எனது தம்பியுடன் இருக்க வேண்டும்.... எப்பொழுதும் அவளுக்கு அவளுடைய வீட்டை பற்றிய கவலை தான். அப்படி இருக்கும் பொழுது, அவளுடைய அப்பாவை மீறி அவள் எப்படி அவனை திருமணம் செய்து கொள்வாள்? ஒருவேளை அவளுடைய அப்பாவின் விருப்பபடி அந்த பொறுக்கி கார்த்திக்கை மணந்து கொள்வாளோ? கோபம் தலைக்கேறி கொண்டிருந்ததால், அவன் கண்டவற்றையும் யோசிக்க ஆரம்பித்தான்.
எல்லாவற்றிற்கும் மேலாக, அவள் அவனுக்கு ஒரு தடவை கூட ஃபோன் செய்யவே இல்லை. அது தான் அவனுடைய மிக மோசமான பிறந்தநாள் என்று நினைத்தான் நிமல். எந்த பிறந்தநாளுக்கும் அவன் இப்படி ஏமார்ந்ததில்லை. அவளுக்கு என்ன தான் பிரச்சனை? அவனுக்கு தலையே வெடித்துவிடும் போல இருந்தது.
சுதாவும் குழப்பம் அடைந்தாள். நிமிலின் பிறந்தநாளை குறித்து வர்ஷினி எவ்வளவு ஆர்வமாக இருந்தாள் என்று அவளுக்கு மட்டும் தானே தெரியும்? அவள் இரண்டு முறை வர்ஷினியின் வீட்டிற்கு ஃபோன் செய்தாள். ஆனால், யாரும் ஃபோனை எடுக்கவே இல்லை.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro