Part 10
பாகம் 9
குமணன் இல்லம்
கட்டிலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் வர்ஷினி. அவள் நிராகரிக்கப்பட்டவள்! அவளுக்கு ஒரு புது உலகத்தை காட்டியவனால், இதயபூர்வமாக அவளை புன்னகைக்க வைத்தவனால், அவளுடைய வலியை மறக்க வைத்தவனால், அவளுடைய புண்பட்ட இதயத்திற்கு இதம் தந்தவனால், அவள் நிராகரிக்கப்பட்டுவிட்டாள்.
அவள் எதற்காகவும் ஆசைபட்டதில்லை. முதல் முறையாக, அவள் ஒன்றை விரும்பினாள். ஆனால், அதுவும் கூட, அவளுக்கு எட்டா கனியாகிவிட்டது.
வெகு சொற்ப நாளிலேயே, மிக ஆழமாய் அவள் காதலிக்க துவங்கிவிட்ட அந்த மனிதன் இருக்கும் அந்த கல்லூரிக்கு சென்று மேலும் புண்பட அவள் பயந்தாள்.
அவளுடைய அறைக்கு ரிஷி வருவதைப் பார்த்து, தன் கண்களை துடைத்துகொண்டு, புன்னகைத்தாள் வர்ஷினி.
"நீ காலேஜுக்கு போகலயாக்கா?"
"ஃபவுண்டர்ஸ் டே ரிகர்சல்ஸ் நடக்கிறதால, எந்த கிளாஸும் நடக்கிறது இல்ல"
"எனக்கு உன்னுடைய ஹெல்ப் வேணும். ஏன்னா, அம்மா வீட்ல இல்ல"
"என்ன செய்யணும்?"
"வெள்ளத்தால பாதிக்கப் பட்டவங்களுக்கு எங்க ஸ்கூல்ல இருந்து ஃபண்ட் கலெக்ட் பண்ணி கொடுக்கப் போறாங்களாம். ஸ்டுடென்ட்சால முடிஞ்சத குடுக்க சொல்லி எங்க மேடம் கேட்டாங்க. நான் நம்ம வீட்லயிருந்து சோப்பை கொண்டு போய் கொடுக்கலாம்னு இருக்கேன்"
"சரி குடு"
"ஸ்டோர் ரூம்ல இருந்து அதை எடுத்துக் கொடு, கா"
"அம்மா திட்டினா என்ன செய்யுறது? முதல்ல அவங்க கிட்ட பர்மிஷன் வாங்கு"
"ஏற்கனவே அவங்ககிட்ட பர்மிஷன் வாங்கியாச்சு"
"அப்படினா சரி. வா எடுத்துக் குடுக்குறேன்"
இருவரும் ஸ்டோர் ரூமை நோக்கி வந்தார்கள். அங்கே ஒரு அட்டைப்பெட்டியில், *பியூர் சாண்டல்* சோப் என்று ஆச்சிடபட்டிருந்தது.
"ரொம்ப வெயிட்டா இருக்கும் போல இருக்கே" என்றாள் வர்ஷினி.
"சரி இரு. நான் டிரைவரை கூப்பிடுறேன்"
"வீட்டோட யூஸுக்கு கொஞ்சம் சோப்பை வச்சிட்டு போ"
"உனக்கு வேணுமா?"
"எனக்கு வேண்டாம். நான் நேத்து தான் ஒரு புது சோப்பை எடுத்தேன். அப்பா, அம்மாவுக்காக கேட்டேன்"
"நீ ஒன்னும் கவலைப்படாத கா. அம்மா கம்பெனியிலிருந்து வரவழைச்சிக்குவாங்க"
சரி என்று தலையசைத்தாள் வர்ஷினி.
"வீட்ல யாரும் இல்ல. அதனால, நீ ரெஸ்ட் எடு. நான் ஈவினிங் வந்து உன்னை பார்க்கிறேன், பை"
"பை"
ரிஷி பள்ளிக்கு கிளம்பி சென்றான். தன் அறைக்கு வந்து படுத்து கொண்டாள் வர்ஷினி. அவளுக்கு கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று தான் விருப்பம். அப்படி சென்றால், நிமலை பார்க்காமல் இருக்க முடியாது. அவனைப் பார்த்தால், அவளால் அவள் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது.
அங்கிருந்த அம்மன் படத்தை பார்த்த பொழுது அவள் அழுகை மேலும் வலுத்தது.
"ஏன் நீங்க என்னை நிமலை சந்திக்க வைச்சிங்க...? எதுக்காக, அவரை என் மேல அன்பை பொழிய வச்சீங்க...? எதுக்காக, அன்பின் ருசியை எனக்கு கட்டினீங்க...? எனக்கு கிடைக்காததை கொடுத்துட்டு, ஏன் அதை மறுபடி பறிச்சிக்கிட்டீங்க...? ஏன் எனக்கு இப்படி எல்லாம் நடக்குது? எப்பவும் கவலையிலேயே உழலனும்ங்குற அளவுக்கு நான் என்ன அவ்வளவு பெரிய பாவியா? என்னால எனக்கு பிடிச்சதை அடையவே முடியாதா? காலமெல்லாம் நான் கண்ணீர் வடிச்சிக்கிட்டு தான் இருக்கணுமா?" என்று கண்ணீர் மல்க தன் கரங்களால் முகத்தை மூடி அழுது கொண்டிருந்தாள்.
கல்லூரியில் அவளுக்காக காத்திருப்பது என்ன என்பது தான் அவளுக்கு தெரியாதே... அவள் வேண்டிக்கொள்வதற்கு முன்பாகவே, அவளுடைய இஷ்ட தெய்வத்தின் கருணை பார்வை அவள் மீது விழுந்து விட்டது என்பது அவளுக்கு எப்படித் தெரியும்?
கல்லூரி
வர்ஷினிக்காக காத்திருந்தான் நிமல். அவள் வராமல் போனது அவனுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அவள் ஏன் கல்லூரிக்கு வரவில்லை என்று அவனுக்கு புரியவில்லை. அவளுக்கு என்னவாயிற்று? ஏன் அவள் வரவில்லை? சுதாவிடம் கேட்பது என்று தீர்மானித்தான்.
அவள் பிரகாஷுடன் கேன்டீனில் காஃபி குடித்து கொண்டிருந்தாள். நிமல் அங்கு வந்ததைப் பார்த்து அவனுக்கும் ஒரு காஃபியை ஆர்டர் செய்தான் பிரகாஷ். அவன் வர்ஷினிக்காக காத்திருப்பதை காட்டிக் கொள்ளாமல் அவர்களின் அருகில் வந்தான்.
"நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணலன்னு நினைக்கிறேன்"
"எங்களை சுத்தி நிறைய பேர் இருக்காங்க... " என்று சிரித்தான் பிரகாஷ்.
"எங்க உன்னுடைய ஃபிரண்டு?" என்றான் சுதாவிடம்.
"யாரை கேக்கிறீங்க?" என்றாள் சுதா ஆர்வம் இல்லாமல்.
அவள் வேண்டுமென்றே தான் அப்படி கேட்கிறாள் என்பதை புரிந்து கொண்டான் நிமல்.
"நான் யாரைப் பத்தி கேக்ககுறேன்னு உனக்கு நல்லாவே தெரியும்"
"நீங்க ஏன் அவளை பத்தி கேட்கிறீங்க?"
அவளுடைய குரலில் இருந்த கோபம் அவனுக்கு புரிந்தது.
"அவ எப்பவும் உன் கூட தான் இருப்பா, அதனால கேட்டேன்"
"அவ இன்னைக்கு ஆப்சென்ட்"
"அவளுக்கு ஒன்னும் இல்லையே?"
"நான் கேட்கல"
"கேப்பியா?"
"கேப்பேன்... அவ நாளைக்கு காலேஜுக்கு வரும் போது"
"அவ குமணனுடைய பொண்ணாச்சே... அவ ஃபேமிலியோட சந்தோஷமா இருப்பா" என்றான் நிமல்.
"சந்தோஷமா...? அவ ஃபேமிலியோடவா...?" என்று கேட்ட அவளை கேள்விக்குறியுடன் பார்த்தான் நிமல்.
"நான் கிளாஸுக்கு போறேன்" என்று பிரகாஷிடம் கூறிவிட்டு அங்கிருந்து நடையைக் கட்டினாள்.
திடீரென்று அவளுக்கு என்ன ஆனது என்று யோசித்தான் நிமல்.
அன்று வர்ஷினி கல்லூரிக்கு வராமல் போனது அவனுக்கு மிகவும் எரிச்சலை தந்தது. அவளிடம் பேசியே ஆக வேண்டும் என்று அவன் மும்முரமாக இருக்கும் பொழுது அந்தப் பெண் ஏன் இப்படி செய்கிறாள்? அவள் எவ்வளவு சோகமாக அவனிடம் ஃபோனில் பேசினாள்...! அவன் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டதற்காக அவள் எவ்வளவு வேதனை அடைந்திருந்தாளோ...! இன்று விடுமுறை எடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது அவளுக்கு? அவன் பொறுமை இழந்தான்.
அந்த நாள், மிக நீளமான நாளாக அமைந்தது நிமலுக்கு. அந்த நாள் முழுவதும் அவன் நெருப்பில் இருப்பது போல் உணர்ந்தான். யாரிடமும் பேசாமல் வகுப்பறைக்கு சென்று அமர்ந்து கொண்டான். அவனுக்கு அவள் என்ன முடிவைத் தரப்போகிறாள்? ஒருவேளை அவனுடைய ஒப்பந்தத்தை ஏற்க அவள் மறுத்துவிட்டால்? அதன் பிறகு அவனால் நிம்மதியாக இருக்க முடியுமா? அவனுக்கு புரியவில்லை.
மறுநாள்
அன்று வர்ஷினியால் வீட்டில் இருக்க முடியவில்லை. ஏனென்றால், அன்று கல்பனா வீட்டில் இருந்தார். அவருடன் வீட்டில் இருப்பதை விட, கல்லூரிக்கு செல்வது எவ்வளவு மேல் இல்லையா...? அதனால் வேறு வழியின்றி கல்லூரிக்கு கிளம்பி சென்றாள் வர்ஷினி. தனது வகுப்பறையை விட்டு வெளியே வருவதில்லை என்று முடிவெடுத்து விட்டு தான் அவள் கல்லூரிக்கு சென்றாள். ஏனென்றால், அவள் நிமலை சங்கடப்படுத்த விரும்பவில்லை.
.....
வழக்கம் போல, கல்லூரிக்குள் நுழைந்து, தன் வகுப்பறையை நோக்கி நடக்கத் தொடங்கினாள் வர்ஷினி. வழக்கம் போல அவளுடைய பாவப்பட்ட இதயம் நிமலை தேடியது. அவன் எங்கும் தென்படாமல் போகவே, அவன் வேண்டுமென்றே ஒளிந்து கொண்டிருக்கிறான் என்று நினைத்துக் கொண்டாள் அவள்.
மழை வருவது போல, மேக மூட்டமாக காணப்பட்டது. சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது. தன் வகுப்பறைக்கு சென்ற வர்ஷினி, ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டாள். எதுவுமே செய்ய பிடிக்காததால் ஜன்னல் பக்கம் முகத்தை திருப்பினாள். மரத்தடியில் நின்று கொண்டு நிமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்த பொழுது, அவள் ரத்தம் உறைந்துவிட்டதை போல் உணர்ந்தாள். எதற்காக அவன் இப்படி பார்த்துக் கொண்டு நிற்கிறான்? அவள் தலை குனிந்து கொண்டாள். தன் கண்ணை மெல்ல உயர்த்தி அவன் அங்கே தான் இருக்கிறானா என்று பார்த்தாள். ஆம்... அவன் அங்கேயே நின்று கொண்டு, அதே பார்வையைத் தான் அவள் மீது வீசிக் கொண்டிருந்தான். அவன் ஏன் அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறான், அவன் அவளிடம் ஏதாவது சொல்ல நினைக்கிறனா?
அவனிடம் செல்ல வேண்டும் என்ற ஆவலை அவளால் கட்டுபடுத்த முடியவில்லை. வகுப்பறையை விட்டு வெளியே ஓடிவந்தாள். மூச்சிரைக்க அவன் முன் சென்று நின்றாள். அவனிடம் பேசலாமா வேண்டாமா என்பது அவளுக்கு புரியவில்லை. அவன் தான், நாம் இருவரும் நண்பர்கள் இல்லை என்று கூறி விட்டானே... அவனுடைய ஆழமான பார்வை, அவளுக்கு அவனிடம் பேசும் தைரியத்தை கொடுத்தது.
"நீங்க.... நீங்க... எனக்காக தான் காத்திருக்கீங்களா?"
*ஆமாம்* என்னும் தொனியில், தன் கண்ணை மெல்ல இமைத்தான்.
ஏன்? என்று அவள் கேட்கவில்லை. அவன் அவளுக்காக காத்திருக்கிறான், அதுவே அவளுக்கு போதுமானது. அதுவே அவளுக்கு சந்தோஷத்தை அளித்தது. ஆனால், அவன் கேட்ட கேள்வி, அவளுடைய சிரிப்பை மாயமாய் மறையச் செய்தது.
"உங்க அப்பா நம்ம கல்யாணத்துக்கு சம்மதிக்கலன்னா, நீ உங்க வீட்டைவிட்டு என் கூட வருவியா?"
அந்த கேள்வியை கேட்டு அசந்து தான் போனாள் வர்ஷினி. இன்னும் அவன் அவளுடைய காதலை ஏற்றுக் கொண்டதாக கூற கூட இல்லை. அதற்குள் திருமணத்தைப் பற்றிப் பேசுகிறான். இரண்டு நாட்களுக்கு முன்பு தான், அவளை யாரென்றே தெரியாதவன் போல் நடந்து கொண்டான். ஆனால் இன்று, வீட்டைவிட்டு அவனிடம் வரச் சொல்கிறான், என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
"வரமாட்டியா?" என்று கேட்ட அவன் குரலில் ஏமாற்றம் எதிரொலித்தது.
"எதுக்காக நீங்க இந்த கேள்வியை கேக்குறீங்க?"
"ஏன்னா, உங்க அப்பா நிச்சயம் நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டார். ஒரு நாள், உங்க அப்பாவா, நானான்னு, எங்க ரெண்டு பேர்ல ஒருத்தரை நீ தேர்ந்தெடுத்து தான் ஆகணும். ஒரு வேளை, நீ உங்க வீட்டை விட்டு வெளியே வர தயாரா இல்லன்னா, நீ உன் வழியை பார்த்துகிட்டு போய்கிட்டே இரு. ஒருவேளை, நீ தயாரா இருந்தா, உன்னுடைய காதலை நான் ஏத்துக்கிறேன். ஆனா, ஒரு விஷயம் ஞாபகத்துல வச்சிக்கோ. ஒரு வேளை நம்ம ரெண்டு பேரும் காதலிக்க ஆரம்பிச்சிடா, அதுக்கப்புறம், நீயே விரும்பலனா கூட, நான் உன்னை கல்யாணம் பண்ணியே தீருவேன். அதை மாத்த எந்த சக்தியாலும் முடியாது. நீ என்னுடையவளா தான் இருப்ப... எப்பவும்." என்ற அவனுடைய வார்த்தைகள் திடமாய் ஒலித்தது.
வர்ஷினியின் கண்கள் சிரிப்பதை பார்த்தான் நிமல். அவள் கண்கள் பிரகாசித்தன. அவள் *இல்லை* என்று தலையசைத்து அவனுக்கு ஏமாற்றத்தை வழங்கினாள். ஆனால், அவளுடைய அடுத்த வார்த்தைகள், அவனுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தன.
"எங்க அப்பாவை மட்டும் இல்ல, உங்களுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வருவேன்" சந்தோஷ கண்ணீருடன் கூறினாள் வர்ஷினி.
ஏன் கூறமாட்டாள்? நிமல் அவளுடைய வாழ்க்கையில் இருக்கவேண்டும் என்பது தானே அவள் விரும்பிய ஒன்றே ஒன்று...?
நிமல், அவளுக்கு இப்படி ஒரு உத்திரவாதத்தை வழங்குவான் என்று அவள் கனவிலும் நினைத்ததில்லை. அவன் அவளுடைய காதலை மட்டும் ஏற்கவில்லை, வாழ்நாள் முழுக்க அவளுடன் இருப்பேன் என்ற வாக்குறுதியை அளித்திருக்கிறான். இதை விட அவளுக்கு வேறு என்ன வேண்டும்?
கண்ணீருடன் அவள் புன்னகைத்ததை பார்த்து, ஏன் இந்தப் பெண் எல்லாவற்றிற்கும் இப்படி உணர்ச்சி வசப்படுகிறாள்? அவன் அவளது காதலை ஏற்றுக் கொண்டுவிட்டான் தான். ஆனால் அதே நேரம், அனைத்தையும் விட்டுவிட்டு வரவேண்டும் என்றல்லவா கூறினான்? அதைச் செய்வதில் அவளுக்கு எந்த கவலையும் இல்லையா? அம்மா, அப்பாவை விட்டுவிட்டு வரும் அளவிற்கு, அப்படி என்ன அவளுக்கு செய்துவிட்டான் அவன்? அவனுக்குள் எழுந்த கேள்விகளுக்கு விடை தேடிக் கொண்டிருந்தான் நிமல்.
எதிர்பார்த்தபடியே, மழை பெய்ய ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்த கட்டடத்தின் வராண்டாற்கு ஓடிச் சென்றான் நிமல். வர்ஷினியோ மழையில் சந்தோஷமாய் நனைந்து கொண்டிருந்தாள். இந்த பெண்ணுக்கு என்ன ஆனது?
அவள் மழையில் நனைந்து கொண்டிருந்ததை பார்த்த சுதா, அவளை நோக்கி ஓடி வந்தாள். அவள் கையைப் பிடித்து, பக்கத்தில் இருக்கும் கட்டிடத்தை நோக்கி இழுத்து செல்ல முயற்சித்தாள்.
"மழைல நினையாத... உனக்கு ஜுரம் வந்துட போகுது" என்றாள் சுதா.
வர்ஷினி, சுதாவை இறுக்கி கட்டிக்கொண்டு, அவள் கண்ணத்தில் முத்தமிட்டாள், சுதாவை குழப்பத்திற்கு உள்ளாக்கி. அதை பார்த்த நிமல் களுக்கென்று சிரித்தான்.
"நிமல், எனக்கு ஓகே சொல்லிட்டாரு" என்று சந்தோஷித்தாள்.
"நிஜமாவா சொல்ற?" என்றாள் நம்ப முடியாமல் சுதா.
"ஆமாம்"
இந்த முறை சுதா அவளை சந்தோஷமாய் அணைத்துக் கொண்டாள்.
தூரத்திலிருந்து அவற்றை பார்த்துக்கொண்டிருந்த நிமல்,
"வர்ஷினி எப்பவுமே சோகமா இருக்கா. அவ எல்லாத்துக்கும் அழறா. சோகமா இருந்தாலும் அழறா... சந்தோஷமாக இருந்தாலும் அழறா... ஆனா சிரிச்சிக்கிட்டே அழறா... அந்த அழுகையில் தான் எவ்வளவு வித்தியாசம்?" என்று நினைத்தான்.
தன்னையறியாமல் அவளுடைய குற்றமற்ற புன்னகையில் மூழ்கி கொண்டிருந்தான் நிமல். அவனுடைய புன்னகை மறைந்து சுய உணர்வு பெற்றான். அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? அவன் செய்து கொண்டிருப்பது சரியா? அவனுக்கும் குமணனுக்கும் இடையில் இருக்கும் விரோதம், ஒரு நாள் நிச்சயம் வர்ஷினியை பாதிக்கும். அப்பொழுது அவள் என்ன செய்வாள்? என்ன முடிவெடுப்பாள்?
அவன் ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தான். வர்ஷினியுடனான காதலில் வெகுதூரம் சென்று விடக்கூடாது... எல்லாவற்றிற்கும் தயாராக இருக்க வேண்டும்... வர்ஷினியை முழுவதுமாக நம்பி விடக்கூடாது. அவளுடைய அப்பா கட்டாயப் படுத்தினால், அவள் மனதை மாற்றிக் கொள்ளலாம். தன்னை தயார்படுத்திக்கொள்ள விழைந்தான், நிஜம் என்னவென்று தெரியாமல்...! இது வரை யாரும் காணாத ஒரு காதலை, அவன் வர்ஷினியிடம் காணப் போகிறான்... அதில் அவன், தன்னை முழுமையாய் தொலைக்க போகிறான்... உண்மையாக... ஆழமாக... எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro