Last part
இறுதி பாகம்
ஆம். வர்ஷினிக்கு தெரியும். ஆனால் எப்படி?
சற்றே பின்னோக்கி பயணிப்போம்...
அனைவரும் சுதாவின் வீட்டிற்கு செல்ல தயாரானார்கள். ஆனால், வர்ஷினிக்கு மட்டும் நிமலை தனியாக விட்டுச் செல்ல மனமில்லை. அதனால் பாதி வழியிலேயே காரை விட்டு இறங்கி, டாக்ஸி பிடித்துகொண்டு திரும்பி வந்தாள். அவள் இனியவர்களின் இருப்பிடம் வந்த போது, ராஜா நிமலிடம் கூறியது அவள் காதில் விழுந்தது.
"பிரைவேட் ஃபிலைட் ரெடியா இருக்கு" என்றான் ராஜா.
"நானும் ரெடி" என்றான் நிமல்.
"எல்லாரும் சாயங்காலம் திரும்பி வர லேட் ஆகும்னு பிரகாஷ் சொன்னான். நமக்கு நிறைய டைம் இருக்கு. நம்மளுடைய கல்குலேஷன் படி எல்லாம் சரியா நடந்தா, நம்ம ரெண்டரை மணி நேரத்துல ஊட்டி போயிடலாம். எல்லாரும் வரதுக்கு முன்னாடி, நம்ம திரும்பி வந்துடலாம்."
"கிளம்பலாம்"
எதற்காக நிமல் ஊட்டிக்கு செல்கிறான் என்று, அவள் ஒரு கணம் திகைத்து நின்றாள். அவளிடம் அவன் ஏன் அதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை? அது அவளுடைய பெற்றோர் சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்குமா? அவள் மீண்டும் சுதாவின் இல்லத்திற்கு திரும்பிச் சென்று, தான் மனத்தை மாற்றிக்கொண்டு, நிமலை பார்க்காமலேயே வந்து விட்டதாக கூறி விட்டாள்.
அன்று மாலை, தான் எங்குமே செல்லாதது போல் கட்டிக்கொண்டான் நிமல். அவளுடைய பெற்றோருக்கு எதிராக நிமல் ஏதோ செய்து கொண்டிருக்கிறான் என்று அவளுக்கு சந்தேகம் இருந்தது. நிமலின் கைப்பேசியின், செட்டிங்ஸ்ஸை, ஆட்டோ ரெக்கார்டிங்க்கு மாற்றினாள். அவள் எதிர்பார்த்தபடியே நிமலும், ராஜாவும் பேசிய உரையாடல், அவள் நினைத்தது சரி தான் என்று கூறியது.
கண்களை மூடி அமர்ந்தாள் வர்ஷினி. வர்ஷினியை பசியால் வாட விட்டதற்காக அவர்களை தண்டிக்க வேண்டும் என்று அவன் நினைத்திருக்கிறான். அதையே செய்தும் முடித்திருக்கிறான். வர்ஷினிக்கு அவளுடைய பெற்றோரை எண்ணி கவலையாயிருந்தது. ஏனென்றால், அவள் பசியின் கொடுமையை அறிந்தவள் ஆயிற்றே. நிமலின் மீது வருத்தப்பட ஒன்றுமில்லை. அவர்கள் மீது அவனுக்கு இருந்த கோபம் அவள் அறிந்தது தான். மேலும், அவன் செயலில், அவள் மீது அவன் கொண்ட காதலை தான் அவள் உணர்ந்தாள். அவளுடைய பெற்றோர் இறந்த செய்தியைக் கேட்டு, நிமல் அடைந்த பதட்டம் அவனுக்கு அதில் சம்பந்தமில்லை என்று எடுத்துக் காட்டியது. குமணனின் சொத்துக்களை அவன் ரிஷியின் பெயரில் எழுதியது, அவனுடைய மரியாதையை மேலும் கூட்டியது. அவளுடைய பெற்றோரை கொன்றது அவன் அல்ல. அவர்களை கொல்ல வேண்டும் என்ற எண்ணமும் அவனுக்கு இல்லை. அப்படி இருக்கும் பொழுது, அவன் மீது வருத்தம் கொள்வது அர்த்தமற்றது. அவன் இடத்தில் யார் இருந்தாலும் இதைத் தான் செய்திருப்பார்கள். அவனுடைய பெற்றோரை கொன்று, அவர்களுடைய சொத்துக்களை பறித்துக் கொண்டார் குமணன். சரியான நேரத்தில் விஸ்வநாதன் தம்பதிகள் அவனை பார்க்காமல் போயிருந்தால், நிமலின் வாழ்க்கை என்னவாகியிருக்கும்? அவன் அனாதையாகி இருப்பான்... அவன் வாழ்க்கை தடம் மாறியிருக்கும்... அவன் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால், குமணனின் மொத்த குடும்பத்தையும் பூண்டோடு அழித்திருப்பான். ஆனால் நிமல், அவனது விரோதத்தை அவள் மீதும் ரிஷியின் மீதும் காட்டியதே இல்லை. மாறாக துப்பாக்கி குண்டை ஏந்தி அவளை காத்திருக்கிறான். என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து தன் கண்களை திறந்தாள் வர்ஷினி.
தனக்குத் தானே பேசிக் கொண்டாள் வர்ஷினி.
"என்ன செய்றது? எதை பத்தி பேசுற? ஒன்னுமில்ல... ஆமாம், உனக்கு ஒன்னும் தெரியாது... ஆமாம், எனக்கு எதுவும் தெரியாது... நிமல் ஊட்டிக்கு போனது எனக்கு தெரியாது... நிமலும் ராஜாவும் பேசியதை நான் கேட்கவேயில்ல"
இது தான் நடந்தது...
இன்று...
"நீங்க ஆபீஸ் கிளம்பலயா?" என்றாள் வர்ஷினி.
"இன்னைக்கு நான் லீவு"
"ஏன்?"
"என் பொண்டாட்டியோட அன்பான பேச்சு என்னை சோம்பேறி ஆக்கிடுச்சு"
"அப்படின்னா, இன்னிக்கு நீங்க எதுவுமே செய்ய போறதில்லயா?"
"ஆமாம்... ஒன்ன தவிர..."
"என்னது?"
"உனக்கு தெரியாதா?"
"எனக்கு எதுவும் தெரியாது பா"
"ட்ராமா குயின்... உனக்கு எல்லாம் தெரியும். ஆனாலும், ஒன்னும் தெரியாத மாதிரி பாவனை பண்றது..." என்றான் கிண்டலாக.
"சில நேரங்கள்ல, வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும்னா, அப்படி இருக்கிறது அவசியம்" என்று புன்னகைத்தாள் வர்ஷினி.
நான்கு ஆண்டுகள் கழித்து
தனது அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நிமலுக்கு, தமிழகத்தின் பொருளாதார அமைச்சரான ராஜேந்திரனிடம் இருந்து அழைப்பு வந்தது.
"வணக்கம், ஃபைனான்ஸ் மினிஸ்டர், சார்..." என்றான் புன்னகையுடன்.
"வாயை மூடு டா" என்றான் ராஜா சிரித்தபடி.
"எப்படி இருக்க?"
"சந்தோஷமா இருக்கேன். குமணன் கேஸ்ல தீர்ப்பு, நமக்கு சாதகமா வந்திருக்கு"
"ஆமாம். கார்த்திக்குக்கு ஏழு வருஷமும், அப்ரூவரா மாறினதனால நிமேஷுக்கு அஞ்சு வருஷமும் கிடைச்சிருக்கு"
"ரொம்ப பெரிய தலைவலி முடிஞ்சிடுச்சு"
"ரிஷிகாவும், ஸ்ரேயாவும் எப்படி இருக்காங்க?" என்றான் நிமல்.
"ஸ்ரேயாவை பத்தி மட்டும் கேட்காதே. நான் வீட்ல தங்காம இருக்குறதுக்கு, ஏதாவது சாக்கு சொல்லி, ரிஷிகாவை கூட சமாளிச்சிட முடியுது. ஆனா, என் பொண்ணு ஸ்ரேயாகிட்ட ஒன்னும் வேலைக்கு ஆக மாட்டேங்குது. அவகிட்ட நான் அடியெல்லாம் வாங்குறேன்" என்று ராஜா கூற, வாய்விட்டு சிரித்தான் நிமல்.
"ராஜேந்திரனாவே இருந்தாலும், பெத்த பொண்ணுகிட்ட மண்டியிட்டு தான் ஆகணும்" என்றான் நிமல்.
"உண்மை தான், மச்சான்..."
"டைம் கிடைக்கும் போது வீட்டுக்கு வா"
"கண்டிப்பா வரேன். ரிஷிகா கூட சுதாவை பார்க்கணும்னு சொல்லிக்கிட்டு இருக்கா"
"மேக் இட் சூன்"
"ஷ்யூர்"
அவர்கள் அழைப்பை துண்டித்தார்கள். அப்பொழுது நிமலுக்கு வேறு ஒரு அழைப்பு வந்தது. அது ரிஷியிடம் இருந்து வந்தது. அழைப்பை ஏற்று பேசிய நிமல், பெருமூச்சு விட்டான்.
"எந்த சிக்னல்?"
"அடையார்"
"இன்ஸ்பெக்டர்கிட்ட ஃபோனை குடு"
ரிஷி இன்ஸ்பெக்டரிடம் ஃபோனை கொடுத்தான்.
"சொல்லுங்க" என்றார் இன்ஸ்பெக்டர்.
"நான் சண்டல் உட் சோப் கம்பெனி சிஈஓ நிமலன் பேசுறேன்"
"சார், நீங்களா? இந்தப் பையன் உங்களுக்கு வேண்டபட்டவனா, சார்?"
"அவன் என்னோட மச்சான். ஏதோ ஆர்வத்தில் பைக்கை எடுத்துக்கிட்டு வந்துட்டான் போல இருக்கு சார்"
"பரவாயில்ல விடுங்க, சார். ஆனா, ஜாக்கிரதையா இருக்க சொல்லுங்க. அவருக்கு வயசு பதினெட்டு தான் ஆகுது. ஏதாவது ஆச்சின்னா, பிரச்சனை பெருசாயிடும், சார். அதுக்காகத் தான் சொல்றேன்"
"நீங்க சொல்றது சரி தான், சார். நான் பார்த்துக்குறேன். நீங்க ஃபோனை அவன் கிட்ட குடுங்க"
ஃபோனை ரிஷியிடம் கொடுத்தார் இன்ஸ்பெக்டர்.
"சொல்லுங்க, மாம்ஸ்"
"நேரா வீட்டுக்குப் போ. மெயின் ரோடு வழியா போகாதே."
"சரிங்க, மாம்ஸ்"
"நீ பைக் எடுத்துட்டு வந்தது உங்க அக்காவுக்கு தெரியுமா?"
"அய்யய்யோ தெரியாது... தயவுசெய்து சொல்லிடாதீங்க. அவ என்னை கொன்னுடுவா"
"ஆமாம், இப்பெல்லாம் உங்க அக்காவுக்கு லேசில் கோபம் வந்துடுது. நீயும் அவகிட்ட எதுவும் சொல்லிடாத"
"சாரி, மாம்ஸ்... என்னால நீங்களும் அவகிட்ட பொய் சொல்ல வேண்டியதாயிடுச்சு"
"சரி விடு "
"மாம்ஸ்... "
"சொல்லு"
"நீங்க எப்ப வீட்டுக்கு வருவீங்க?"
"ஏன்? "
"நான் பைக்கை எடுத்துக்கிட்டு வந்தது அக்காவுக்கு தெரிஞ்சிருந்தா என்ன செய்றது?"
"நீ எங்க ரூமுக்கு போகாத"
"அப்படின்னா அக்கா நிச்சயமா கண்டுபிடிச்சுடுவா. நான் அமலை பார்க்க நிச்சயம் உங்க ரூமுக்கு போவேன்னு அக்காவுக்கு தெரியும்"
"சரி, வெயிட் பண்ணு நான் வரேன்"
நிமலுக்காக தெருமுனையில் காத்திருந்தான் ரிஷி. நிமல் வரவும் அவனை பின்தொடர்ந்து சென்றான்.
இனியவர்களின் இருப்பிடம்
ரிஷி, நிமலுடன் வருவதை பார்த்து ஓடிவந்தார் பார்வதி.
"ரிஷி, எங்க போயிருந்த? உன்னை வர்ஷினி தேடிக்கிட்டிருந்தா"
நிமலும், ரிஷியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"அவ உன்னோட பைக் ஷெட்ல இருக்கான்னு செக் பண்ணா... நீ பைக்குல போன விஷயம் அவளுக்கு தெரிஞ்சு போச்சு" என்றார் இரகசியமாக.
"மாம்ஸ்...." என்றான் ரிஷி தனது தலையில் கையை வைத்துக்கொண்டு.
"நீ கொஞ்ச நேரத்துக்கு எங்க ரூமுக்கு வராதே" என்றான் நிமல்.
அவனைப் பரிதாபமாகப் பார்த்தான் ரிஷி.
"அமலை நான் உன் ரூமுக்கு தூக்கிட்டு வரேன்"
"சரி" என்று கூறி விட்டு, தன் அறையை நோக்கி நடந்த ரிஷி, வர்ஷினியின் தீர்க்கமான குரலைக் கேட்டு நின்றான்.
"நில்லு ரிஷி..."
கண்களை இறுக்கமாய் மூடிக் கொண்டு நின்றான் ரிஷி. நிமலை நோக்கி திரும்பினாள் வர்ஷினி.
"இவன் பைக்கை எடுத்துக்கிட்டு வெளியில போயிருக்கான்... தெரியுமா உங்களுக்கு? அதுக்காகத் தான், அவனுக்கு பர்த்டே கிஃப்டா பைக்கை கொடுக்க வேண்டாம்னு நான் சொன்னேன்"
"அவனுக்கு பைக் பிடிக்கும். அதனால வாங்கி தந்தேன் "
"அவனுக்கு இன்னும் பத்தொம்போது வயசு ஆகல. கொஞ்சம் காத்திருந்து வாங்கி கொடுத்தா என்ன?"
"இப்போ என்ன ஆயிடுச்சு? அவன் தான் சேஃபா வீட்டுக்கு வந்துட்டான்ல?"
"ஆமாக்கா... என்னை சிக்னல்ல போலீஸ் பிடிக்கல... நம்பு கா" என ரிஷி கூற,
பல்லைக் கடித்தபடி தன் கண்களை சுழற்றினான் நிமல். பார்வதி ஐயோ என்று கண்ணை மூடிக் கொண்டார். வர்ஷினியின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. தான் உளறிக் கொட்டி வைத்த விஷயம் அப்போது தான் புரிந்தது ரிஷிக்கு.
"போலீசில் மாட்டினியா?" என்றாள்.
மென்று விழுங்கியபடி நிமலை பார்த்தான் ரிஷி, என்னை காப்பாற்றுங்கள் என்ற முகபாவத்துடன்.
"வர்ஷு..."
"அவன் போலிஸ்ல மாட்டினானா?"
"ஒரு ஃபோன் பண்ண உடனே போலீஸ் அவனை விட்டுட்டாங்க"
"இது எல்லாம் உங்களால தான். அவனுக்கு நீங்க ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கீங்க"
அங்கிருந்து நேரே தன் அறைக்குச் சென்றாள் கோபமாக. அவர்களின் ஒரு வயது மகன் அமல் அங்கு தூங்கி கொண்டிருந்தான். ரிஷியின் பிறந்தநாளுக்கு, நிமல் பைக்கை பரிசளித்த பின், இப்பொழுதெல்லாம் இனியவர்களின் இருப்பிடத்தில் இது தான் அடிக்கடி நடக்கிறது. ரிஷிக்கு இரு சக்கர வாகனம் வாங்கி தர வேண்டும் என்ற நிமலின் விருப்பத்தில், வர்ஷினிக்கு துளிகூட விருப்பம் இல்லை. ஏனென்றால், அவளுக்கு தெரியும், ரிஷி சும்மா இருக்கமாட்டான் என்று.
வர்ஷினியின் பின்னால் ஓடினான் ரிஷி.
"அக்கா, சாரிக்கா... ப்ளீஸ் மாமாகிட்ட கோச்சிக்காத"
"அவ என்கிட்ட கோச்சிக்க மாட்டா. அவளால நம்மள புரிஞ்சுக்க முடியாதா என்ன?" என்றான் அங்கு வந்த நிமல்.
அவனை பார்த்து முறைத்தாள் வர்ஷினி.
"உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப கேர்லெஸ் ஆயிடுச்சு... நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து அமலை என்ன செஞ்சு வைக்கப் போறீங்கன்னு தெரியல"
"அவன் அம்மா பிள்ளை" என்றார்கள் இருவரும் ஒரே நேரத்தில்.
"நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து அவனை மாத்தாம இருந்தா சரி"
"நீ என்னை மன்னிச்சிட்ட தானே, கா?"
"அதுல என்ன சந்தேகம்? அவளுக்கு உன்னை ரொம்ப பிடிக்குமே" என்றான் நிமல்.
முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கட்டில் மீது அமர்ந்து கொண்டாள் வர்ஷினி. இருவரும் சென்று அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்கள்.
"ஐ அம் சாரி கா. இன்னைல இருந்து, லைசென்ஸ் வாங்கற வரைக்கும், நான் நிச்சயமா பைக்கை தொட மாட்டேன். ப்ராமிஸ்" என்றான் ரிஷி.
சரி என்று புன்னகைத்தாள் வர்ஷினி.
"தேங்க்யூ, கா"
"ரிஷி... நீ கொஞ்சமாவது பொய்யை காப்பாத்த கத்துக்கணும்" என்றான் கிண்டலாக நிமல்.
"நீங்க சொல்றது சரி தான், மாம்ஸ். அக்காகிட்ட பொய் பேசவே எனக்கு வர மாட்டேங்குது. நான் என்ன செய்றது?" என்றான் பாவமாக.
தான் செய்ததை, தன் வாயாலேயே உளறிக்கொட்டி, மாட்டிக்கொள்வது ரிஷியின் வழக்கமாக இருந்தது. குறிப்பாக வர்ஷினியிடம் பொய் சொல்லவே அவனுக்கு வருவதில்லை.
தூங்கிக் கொண்டிருந்த அமல், எழுவதை அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் அனைவரையும் பார்த்த அமல், எழுந்தமர்ந்து புன்னகைத்தான். அவர்கள் மூவரும், அவனை தன்னிடம் வரச் சொல்லி கைநீட்ட, யாரிடம் செல்வது என்று அவன் ஒரு நொடி குழம்பிப் போனான். பின் வர்ஷினியை நோக்கி தாவினான்.
"நாங்க தான் சொன்னோமே, அவன் அம்மா பிள்ளைன்னு" என்றான் ரிஷி.
அடுத்த நொடி, வர்ஷினியின் கையிலிருந்து நிமலிடம் சென்றான். நிமல் அவன் கன்னத்தில் ஒரு முத்தமிட்ட உடன், அவனிடமிருந்து ரிஷியிடம் சென்றுவிட்டான். அவனை தூக்கிக்கொண்டு நின்றான் ரிஷி.
"அம்மா அப்பாவுக்கு டாட்டா சொல்லு" என்றான்
அவர்களை நோக்கி தன் கையை ஆட்டினான் அமல். அவனை தூக்கிக்கொண்டு தன் அறைக்கு சென்றான் ரிஷி. இது ரிஷி வழக்கமாய் செய்யும் வேலை. கல்லூரியில் இருந்து வந்த பின், சிறிது நேரம் அமலுடன் விளையாடினால் தான் அவனுக்கு தூக்கமே வரும்.
வர்ஷினியின் தோளை தன் கரத்தால் சுற்றி வளைத்துக் கொண்டு,
"ஆர் யூ ஆல்ரைட்?" என்றான் நிமல்.
"நீங்க ரிஷியை பாத்துக்கும் போது எனக்கு என்ன கவலை?"
"அப்புறம் எதுக்கு அவன்கிட்ட ஸ்ட்ரிக்ட்டா நடந்துக்கிற?"
"அதுவும் இல்லன்னா அவனை கையில பிடிக்க முடியாது"
"அவன் அப்படி எல்லாம் செய்ய மாட்டான். அவன் நல்ல பையன். என்னோட பார்வை, எப்பவும் அவன் மேல இருக்கும்... மறந்துடாத"
"எனக்கு தெரியும்" என்று சற்று நிறுத்திவிட்டு,
"ஜட்ஜ்மெண்ட் வந்துடுச்சு"
ஆமாம் என்று தலையசைத்தான் நிமல்.
"நியூஸ் பார்த்தேன்..." என்று தயங்கியவன்,
"நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். நீ அதை எப்படி எடுத்துக்குவேன்னு எனக்கு தெரியல. எது எப்படி இருந்தாலும், இதுக்கப்புறம் அதை உன்கிட்ட மறைக்க நான் விரும்பல... ஏன்னா, அது என்னை உறுத்திக்கிட்டே இருக்கு"
அவனை உறுத்திகொண்டு இருப்பது எது என்பதைப் புரிந்துகொள்ள வர்ஷினிக்கு கடினமாக ஒன்றும் இல்லை.
"வந்து... உங்க அம்மா அப்பாவை, ஊட்டியில் இருந்த கம்ப்யூட்டரைஸ்டு பங்களாவில் அடைச்சி வைச்சது நான் தான். ஆனா, அவங்களை கொல்லணும்ங்குறது என்னோட எண்ணம் இல்ல... பட்டினியா இருந்தா எப்படி இருக்கும்னு நான் அவங்களுக்கு காட்ட நெனச்சேன்"
"எனக்கு தெரியும்"
"என்ன....????"
அந்த விஷயத்தை அவள் எப்படி தெரிந்து கொண்டாள் என்று நிமலிடம் கூறினாள் வர்ஷினி. அதை கேட்டு திக் பிரம்மை பிடித்தவன் போல் நின்றான் நிமல்.
"எல்லாம் எனக்கு தெரியும். அதைப் பத்தி பேச நான் விரும்பல. அதை நான் மறந்த மாதிரி, நீங்களும் மறந்துடுங்க"
சாதாரணமாய் கூறிவிட்டு, மேலும் அங்கிருந்து அந்த பேச்சை வளர்க்க விரும்பாமல், கீழ் தளம் செல்ல எழுந்து நின்றாள் வர்ஷினி. சட்டென்று அவள் கரத்தை பற்றினான் நிமல், ஆர்ப்பரிக்கும் எண்ண சுழற்சியுடன்.
"நீ என்னை இவ்வளவு தூரம் நம்புறியா?"
"உங்களுக்கு தெரியாதா?"
நிமலின் கண்கள் குளமானது. அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.
"வர்ஷு, எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. எதையும் சொல்ல என்கிட்ட வார்த்தையே இல்ல. நீ என்ன சொல்லுவியோன்னு நினைச்சி ஒவ்வொரு நாளும் நான் செத்துக்கிட்டிருந்தேன். நீ என் மனசுக்கு எப்பேர்பட்ட நிம்மதியை கொடுத்திருக்கன்னு உனக்கு தெரியாது. இந்த உலகத்திலேயே நான் தான் ரொம்ப பெரிய அதிஷ்டசாலி. அப்படி உணர வச்ச நீ, என்னோட தேவதை. ஐ லவ் யூ சோ மச்"
"எனக்கு தெரியும். போனதைப் பத்தி பேசி, மனசை சங்கடப்படுத்திகாதிங்க"
சரி என்று தலை அசைத்து,
"இன்னைக்கு, அமல் ரிஷி கூட தூங்கட்டும்" என்றான்.
"ஏன்?"
"அமல் பிறந்ததுக்கு அப்புறம் நீ என்னை சுத்தமா மறந்துட்ட"
"அதனால?"
"என்னை உனக்கு ஞாபகப்படுத்தலாம்னு நினைக்கிறேன்"
"தூங்கிட்டு இருக்கிற சிங்கத்தை தட்டி எழுப்பாதீங்க. அப்புறம் அது உங்க மேல பாஞ்சிடும்" என்றாள் சிரிப்பை அடக்கியபடி.
அதைக் கேட்டு வாய் விட்டு சிரித்தான் நிமல்.
"அதையும் தான் பார்த்துடுவோமே"
"கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆச்சு... நீங்க என்கிட்ட வந்து"
"உனக்கு சிசேரியன் ஆச்சு... நீ பட்ட கஷ்டத்தை பார்த்த பிறகு, நான் எப்படி தைரியமா உன்கிட்ட வர முடியும்?"
தனது கைப்பேசியை எடுத்து ரிஷிக்கு ஃபோன் செய்தான் நிமல்.
"சொல்லுங்க, மாம்ஸ்?"
"அமல் என்ன செய்றான்?"
"ஆன்ட்டி அவனை பால் குடிக்க வச்சாங்க. நான் அவனை பார்க்குக்கு கூட்டிக்கிட்டு வந்தேன். நாங்க கொஞ்ச நேரம் கழிச்சு வரோம்"
"ஓகே"
வர்ஷினியை பார்த்து புன்னகைத்தபடி அழைப்பை துண்டித்தான் நிமல்.
"ரிஷி, அமலை பார்க்குக்கு கூட்டிட்டு போயிருக்கான்"
"மாமாவுக்கு ஏத்த மச்சான்" என்றாள் வர்ஷினி.
"எங்களுக்கு நடுவுல ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வேவ் ஓடிக்கிட்டு இருக்கு." என்ற நிமல், சிரித்தபடி வர்ஷினியை அணைத்துக்கொண்டான்.
வெகு நாட்களுக்கு பிறகு, அவர்கள் தங்களுக்காக நேரத்தை செலவிட்டார்கள். நிமலுக்கு தெரியும், ரிஷி சீக்கிரம் வர மாட்டான் என்று. அவர்களுக்கிடையில் தான் புரிதலின் அலை ஓடிக்கொண்டு இருக்கிறதே...!
முற்றிற்று
*ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...!* இன்று ஆரம்பமாகிறது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro