26
மருதம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. இதனால் மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவுத் தொழில் புரிவோராவர். மருத நிலத்தலைவர்கள் வேந்தன் மகிழ்னன் ஊரன் கிழவன் என்றும் வேளாண்மை செய்யும் பொருட்டு வேளாளர் என்றும் அழைக்கப்பட்டனர்.
"வேந்தன் மேய தீம்புனல் உலகமும்" - தொல்காப்பியம். இவ்வாறு தொல்காப்பியம் மருதநில கடவுளாக வேந்தனை கூறுகிறது. ஆனால் பிற்கால நூல்கள் இந்திரனை மருதநில கடவுளாக கூறுகிறது.
மதுரை என்ற பெயர் மருதை என்பதன் சொல் என பலர் கருதுகின்றனர்.
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும் பொழுதுகளும் வைகறை, விடியல் என்னும் சிறுபொழுதுகளும் மருத நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
தெய்வம்: இந்திரன்.
மக்கள்: மள்ளர், உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்.
பறவைகள்: நாரை, குருகு, தாரா, அன்றில்.
விலங்குகள்: எருமை, நீர்நாய்.
மலர்கள்: தாமரை, கழுநீர், குவளை.
மரங்கள்: காஞ்சி, மருதம்.
உணவு: செந்நெல், வெண்நெல்.
பண்: மருத யாழ் v பறை : நெல்லரி.
தொழில்: களைகட்டல், நெல்லரிதல், கடாவிடல்.
நீர் நிலை : பொய்கை, ஆறு, மருத நிலத்தின் கருப்பொருட்கள்.
ஆற்றுப்படுகைகள் சேர்ந்த வளமான இடங்கள் மருதம் என அழைக்கப்பட்டன. இங்குக் காணப்பட்ட மருதப் பூவே இந்நிலத்திற்கு இப்பெயரை வழங்கியது. தமிழக ஆறுகளாகிய காவிரி, பெண்ணாறு, பவானி, நொய்யல், அமராவதி, பாலாறு, தாமிரபரணி, வைகை போன்றன இந்நிலப்பரப்பில் அடங்கும். இந்நில அமைப்பில் அடங்கும் தரை அமைப்பிற்கு ஏற்பத் தமிழக ஆறுகள் வட இந்திய ஆறுகளைப் போல் அல்லாது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியே பாய்கின்றன.
காவிரி ஆறு மைசூர் மாநிலத்திலுள்ள பிரமகிரியிலிருந்து ஊற்றெடுக்கிறது. இவ்விடம் தலைக்காவிரி எனவும் அழைக்கப்படுகிறது. தஞ்சை வரை ஓடி அங்கிருந்து முக்கோண வடிவில் வங்கக்கடலில் இணைகின்றது. கங்கையைப் போன்று காவிரியும் புனித நதியாகக் கருதப்படுகிறது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களது தலைநகர்கள் ஆற்றங்கரைகளிலேதான் அமைந்திருந்தன. சேர மன்னருள் ஒரு குறிப்பிட்ட மரபினரது தலைநகரான கரூர் அமராவதி ஆற்றங்கரையிலும், பாண்டியரின் தலைநகராகிய மதுரை வைகை ஆற்றங்கரையிலும் அமைந்திருந்தன.
மருத நிலத்தில் காணப்பட்ட சமமான தரைப் பகுதி, செழிப்புள்ள மண், போதிய நீர் வசதி ஆகியன ஏனைய நிலங்களைவிட இதனை வளமானதாக ஆக்கின. நெல், கரும்பு போன்றவை விளைய ஏற்ற இடமாக அமைந்ததால் இந்நிலப்பரப்பு தன்னிறைவு அடைந்து மக்கள் நிலையாகத் தங்கும் நகர வளர்ச்சிக்கு அடிகோலியது எனலாம். இப்பகுதியில் மக்கள் வாழ்ந்த இடங்கள் நகர், ஊர் என அழைக்கப்பட்டன. இம்மக்களின் தலைவர்கள் ஊரன், மகிழ்நன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர்.
மருத நிலத்து மக்கள் வாழ்க்கை:
ஏரிகள் அல்லது ஆறுகளைச் சார்ந்திருந்தது மருத நிலம். நிலவளமும் நீர் வளமும் உள்ள மருத நிலத்தில் மண் வளம் மிக்க வயல்களில் நெல்லைப் பயிரிட்டார்கள். எருதுகளையும், எருமைகளையும் பூட்டிய ஏர்களி னால் நிலத்தை உழுது, பண்படுத்தி எருவிட்டு விதை விதைத்து நீர்பாய்ச்சி நெல்லை விளைத்தார்கள். கரும்பையும் பயிரிட்டார்கள்.
காய்கறி முதலான உணவுப் பொருள்களையும் பயிரிட்டார்கள். நெல்லைப் பயிரிட்டு உணவுக்கு கட்டுப்பாடில்லாமல் வாழ்ந்தபடியினால் மருத நிலத்து மக்கள் வாழ்க்கை மற்ற நிலத்து மக்கள் வாழ்க்கையைவிட பலமடங்கு உயர்ந்திருந்தது. வாழ்க்கையில் அதிகம் கவலைப்படாமல் இருந்த இவர்களுக்கு ஓய்வும் கிடைத்தது. ஆகவே இவர்கள் நாகரிகம் பண்பாடும் பெற்று வாழ வாய்ப்பிருந்தது.
உலகத்திலே எல்லாத் தேசங்களிலும் மக்கள் நாகரிகம் பெற்ற இடம் ஆற்றங்கரைகளிலும் ஏரிக் கரைகளிலுந்தான் என்று வரலாறு கூறுகிறது. இது உண்மையே. தமிழ்நாட்டிலும் மக்கள் நாகரிகம் பெற்று வளர்ந்த இடம் ஆற்றங்கரைகளும் ஏரிக்கரைகளுமே.
ஆகவே மருத நிலத்திலே தான் தமிழருடைய நாகரிகமும் பண்பாடும் வளம் பெற்று வளர்ந்தன. கைத்தொழில்களும் கல்வியும் கலைகளும் வாணிகமும் செல்வமும் அரசியலும் அமைதியான வாழ்க்கையும் மருத நிலங்களிலே செம்மையாகச் செழித்து வளர்ந்தன. மருத நிலத்து மக்கள் கட்டடங்களையும் மாளிகை களையும் அரண்மனைகளையும் அமைத்துக் கொண்டு நாகரிகமாகவும் நன்றாகவும் வாழ்ந்தார்கள்.
இந்திரன் என்ற சொல்லுக்கு, 'வேதக் கடவுளரின் தலைவன்' என்று பொருள் . போருக்குச் செல்லும் முன்னர் இந்திரனையே மருத நில மக்கள் வணங்கினர். இந்திரன், பொன் இடியை ஆயுதமாகக் கொண்டவன். இந்திரனுடைய ஆயுதம் 'வஜ்ஜிராயுதம். வஜ்ஜிரம் என்றால், 'இடி' என்று பொருள். இந்திரன் ஐராவதம் என்னும் வெள்ளை யானையை வாகனமாகக்கொண்டவன். மருதநிலத்தின் மக்கள் வெள்ளாண்மை என அறியப்பட்ட உழவுத்தொழில் மருதநிலத்திலே வளர்ச்சி கண்டது. குறிப்பாக தாமிரபரணி ஆறு, காவிரி ஆற்றங்கரை பகுதியில் பழந்தமிழர் முழுமையான வெள்ளாண்மையில் ஈடுப்பட்டனர். இந்நிலங்களில் பெருநிலக்கிழார்கள் பாசணம் செய்தனர்.
தொல்காப்பியம் மருதநிலத்தில் வாழ்கின்ற மக்களெனத் தனியாகக் குறிப்பிடாமல்
"ஏனோர் பாங்கினும் எண்ணுங் காலை ஆனா வகைய திணைநிலைப் பெயரே" (தொல்.பொருள்-968)
என்று அந்தந்த நிலத்திற்குரிய, நிலப்பெயர் அடிப்படையில் மக்கட்பெயர் பகுக்கப்பட்டிருக்கும் என்று தொல்காப்பியர் சொல்கின்றார்.
நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் விளக்கம்
'உழவர் உழத்தியர் கடையர் கடைசியர்' (நம்பி. 23)
என இருவகை மருதநில மக்களைப் பற்றி எழுதியிருக்கின்றார்.
புறப்பொருள் வெண்பாமாலையின் சான்றுப்பாடலும்,
"களமர் கதிர்மணி காலோகம் செம்பொன்
வளமனை பாழாக வாரிக் – கொளன்மலிந்து
கண்ணார் சிலையார் கவர்ந்தார் கழல்வேந்தன்
நண்ணார் கிளையலற நாடு" (புறப்.15)
இவ்வாறு இலக்கணநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள உழவர், உழத்தியர், கடையர், கடைசியர், ஊரன், மகிழன், களமர் போன்ற ஒரு சில பெயர்களில் மருதநில மக்கள் அழைக்கப்பட்டமையை அறிய முடிகிறது.
கிபி 900-களில் சோழ ஆட்சியின் மீள் வருகையின் பின்னர் மருதநிலம் பெருவளர்ச்சி கண்டது. சோழர்கள் தொண்டை நாட்டையும், கொங்கு நாட்டையும் கைப்பற்றி அங்கிருந்த குறும்பர், வேட்டுவர் ஆகியோரையும் வென்று அவர்களின் நிலங்களில் வெள்ளாண்மை செய்துள்ளனர். அது மட்டுமின்றி இக்கால கட்டத்தில் அங்கு வெள்ளாளரை குடியமர்த்தி மருதநிலத்தை விரிவுபடுத்தியும் உள்ளனர். குறும்பர், வேட்டுவர், இருளர் மக்களில் பலரும் விவசாயக் கூலிகளாக மாற்றப்பட்டு மருத நிலத்தின் மக்களாக மாற்றப்பட்டதும் இக்கால கட்டத்தில் தான். இக்கால கட்டத்தில் எழுந்த திவாகர நிகண்டு
"களமர் தொழுவர் மள்ளர் கம்பளர்
வினைஞர் உழவர் கடைஞர் இளைஞர் (என்று அனையவை)
கழனிக் கடைந்தவர் (பெயரே)" (திவாகரம்.130)
என்று குறிப்பிடுகிறது. இதனைப் போன்றே பிங்கல நிகண்டு,
"களமர் உழவர் கடைஞர் சிலதர்
மள்ளர் மேழியர் மருதமாக்கள்" (பிங்கலம்.132)
என்று மருதநில மக்களில் ஆறு பிரிவினராகவும், மருதநில மக்கள்
"களமரே தொழுமரே மள்ளர்
கம்பளர் உழவரொடு
வினைஞர் கடைஞர்" (சூடாமணி.71)
என்ற ஏழு வகைப் பிரிவினர் என்று சூடாமணி நிகண்டும் கூறுகின்றன.
இந்திரன், இவர் வேதகால இந்து சமயத்தில், மிக முக்கியமான தேவர்களில் ஒருவராக உயர் நிலையில் வைத்து வணங்கப்பட்டவர்.
இந்துக்களின் மிகப்பழைய புனித நூலான ரிக் வேதத்தில் தலைமைக் கடவுளாகப் போற்றப்படுபவன் இந்திரனே. அவ்வேதத்திலுள்ள சுலோகங்களில் காற்பங்குக்கு மேற்பட்டவை இந்திரனைப் போற்றுவனவாகவே உள்ளன. இவனுடைய வீர தீரச் செயல்களைப் பற்றிய ஏராளமான குறிப்புக்கள் வேதங்களிலே காணப்படுகின்றன. மனத்தின் வேகத்தையும் கடந்த வேகத்தில் செல்லக்கூடிய தேரை உடையவனாகக் கூறப்படுகின்ற இந்திரன் ஐராவதம் என்னும் வெள்ளை யானையை வாகனமாகக் கொண்டவன் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இவன் வஜ்ஜிராயத்தை ஆயுதமாகக் கொண்டவர். இவன் போர்க்குணம் கொண்ட கடவுளாகச் சித்தரிக்கப்படுவதன் காரணமாகப் போருக்குச் செல்லும் வீரர்கள் இந்திரனை வணங்கிச் செல்வது வழக்கமாக இருந்திருக்கிறது. இந்திரனுக்கு ஜெயந்தன் என்னும் பெயருடைய ஒரு மகன் உண்டு என்று கூறப்படுகிறது. அமிர்தத்தை குடித்த தேவர்களில் ஒருவன். யாகங்களில் படைக்கப்படும் (படையலை) அக்கினி இந்திரன் முதலான தேவர்களுக்கு பகிர்ந்து தருகிறான்.
தொடர்ந்தும் தேவர்களின் தலைவனாகவே இந்திரன் மதிக்கப்பட்டாலும், வேதகாலத்துக்குப் பின்னர் அவன் நிலை தாழ்ந்துவிட்டது.ஆனால் ஆரியர்களால் உருவாக்கப்பட்ட ராமாயணத்தின் ஆரம்ப காலம் (கி.மு 6ஆம் நூற்றாண்டு) தொட்டே இந்திரன் பற்றிய இழிவான பேச்சுகள் தொடங்கிவிட்டது எனபதே உண்மை. வியாசரால் எழுதப்பட்ட ஜெயம் (கி.மு 5 ஆம் நூற்றாண்டு) எனப்படும் மகாபாரதத்திலும், புராணங்களிலும் இந்திரன் பெரிய அளவில் போற்றப்படவில்லை என்றே தெரிய வருகிறது.
என்னவாகும் மருதம் இனி, நீர்யின்றி சாயும் நிலங்கள் புல்யின்றி புதையும் மாடுகள். இறையின்றி இறக்கும்
எலிகள் திசைமாற்றி பறக்கும் கிளிகள், அடிவயிற்றில்
எஞ்சிய அமிலம், இனியில்லை தேன்கூடுகள், வாழ்வின்
மீத தேனையும் உறிஞ்ச வந்துவிட்டது மீதேன்.........!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro