💕33💕
தன்யாவின் வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் விக்கித்து நின்றவனின் இதயம் மூச்சுக்காற்றை சுவாசிக்க இயலாமல் திணறியது.
'என் அம்மாவின் வேதனையில் பிறந்தவனா நான்? துன்பத்தின் நினைவுச் சின்னம் என்றால் என்னை காணும்பொழுதெல்லாம் என் அம்மாவின் விழிகளில் வெறுப்பு தானே தோன்றியிருக்க வேண்டும். மாறாக அந்த விழிகளில் ஒரு நொடி கூட என் மேல் எவ்வித சலிப்பும் தோன்றியதில்லையே, அந்தளவுக்கு என் மேல் அன்பு வைத்து இருந்தவர்களின் மனதை சிறிதும் புரிந்துக் கொள்ளாமல் இவர்களின் பேச்சை கேட்டு வீட்டை விட்டு வந்து எவ்வளவு பெரிய தவறிழைத்து விட்டேன்!' என்று விழிகளில் நீர் பெருகி வழிய தனக்குள் மறுகிய தருண், அடுத்த நொடி வேகமாக தன்னறைக்கு சென்று எல்லாவற்றையும் பேக் பண்ண ஆரம்பித்தான்.
தன்யா கூறுவதை வைத்துப் பார்த்தால் இவர்கள் என் அம்மாவை என்னென்ன கொடுமையெல்லாம் செய்திருப்பார்களோ தெரியவில்லையே என்று அவனுடைய உள்ளம் உலைக்களமாய் கொதிக்க ஆரம்பித்தது.
ஓரளவுக்கு எனக்கு நினைவு தெரிந்து அப்பா எங்கள் வாழ்வில் வந்தப் பிறகு தானே நானும், அம்மாவும் சிரிக்கவே ஆரம்பித்தோம். எங்களுக்கு தேவை என்று எதையும் கேட்கவே தேவையில்லாமல் பார்த்துப் பார்த்து செய்தவரை ஒரு நிமிடம் சிந்தை கலங்கியதால் விட்டுப் பிரிந்து வந்து விட்டேனே... அப்பா இன்னும் ஊரிலிருந்து வந்திருக்க மாட்டாரே, அவருக்கு நான் வீட்டை விட்டு வெளியேறியதை அம்மாவும், கருணும் தெரியப்படுத்தியிருப்பார்களா?
'கருண்... ஐ ஆம் சாரிடா! இத்தனை நாட்களாக உன்னை வீட்டின் கடைக்குட்டியாக செல்லம் கொஞ்சி விட்டு, இப்பொழுது அத்தனை பாரத்தையும் உன் தலையில் சுமற்றி விட்டு வந்து விட்டேனே... நீ என்ன செய்கிறாய்? தனியாக அம்மாவை எப்படி சமாளிக்கிறாயோ தெரியவில்லையே...' என்று ஏதேதோ தனக்குள் பிதற்றியபடி விரைவாக காரை எடுத்தான் தருண்.
சத்தம் கேட்டு வீட்டினுள் இருந்து வெளியே எட்டிப்பார்த்த தன்யா அவனை தடுக்க முயலவில்லை. அவனும் அவள் நினைவில்லாமல் கிளம்பி விட்டான்.
'இவர்களின் வாடை நம் வீட்டில் படாமல் இருக்க நம் குடும்பத்திலிருந்து நான் ஒருவன் ஒதுங்கி விட்டால் போதும் என்று எவ்வளவு பெரிய தப்பு கணக்கு போட்டு விட்டேன். என்னை பிரிந்து நீங்கள் அனைவரும் சில காலம் வருந்தினாலும் பிறகு எல்லாம் சரியாகி விடும் என்று எண்ணினேனே... ஆனால் என்னாலேயே இந்தப் பிரிவை முழுதாக நான்கு நாட்கள் கூட தாங்க முடியுவில்லையே எந்த நேரம் வெடித்துக் கிளம்புமோ என்றிருந்த உணர்வுகளை நொடிப்பொழுதில் அவள் பற்ற வைத்து விட்டாளே!' என்ற எண்ணம் தோன்றவும் இதயத்தில் தன்யாவின் முகம் நிழலாடியது.
வீட்டை நெருங்கி கொண்டிருந்தவன், 'எனக்குள் இருந்த குற்ற உணர்விலும், பதட்டத்திலும் அவளிடம் எதுவும் சொல்லாமல் வந்து விட்டேனே!' என்று வருந்தினான்.
'சரி... இப்பொழுதிருக்கும் சூழ்நிலையில் என் மனம் அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது அப்படியே இருக்கட்டும், அப்பா வந்த பிறகு இது தொடர்பாக முடிவு செய்வோம். நிச்சயம் நான் கிளம்பியதற்காக அவள் மகிழ தான் செய்வாள் கோபிக்க மாட்டாள்!' என்று எண்ணியவனின் முகம் அவள் நினைவுகளில் இளகியது.
வீட்டு வாசலில் காரை நிறுத்தியவனின் இதயத் துடிப்பு தன்னால் எகிற, ஏதோ ஒரு எண்ணத்தில் கிளம்பி சென்றவனின் மனம் தற்பொழுது தன் தவறை சுட்டி காட்டி இடித்துரைத்தது.
'நான் அந்த வீட்டிற்கு தான் சென்றிருந்தேன் என்பது தெரிந்தால் அம்மாவின் வேதனை நினைவுகள் கிளறப்படுமா? இதை சொல்லாமலும் மறைக்க முடியாதே... தன்யாவின் பேச்சை எடுக்கும் பொழுது உண்மை வெளிவந்து தானே தீரும். ஆனால் அம்மா இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது தெரியாமல் நான் எப்படி அவ்வீட்டு தொடர்பான பேச்சை எடுக்க முடியும்?' என குழம்பியபடி விரல்களை நெருக்கியவனுக்கு, சட்டென்று கமலாவின் நினைவு தோன்றியது.
'அத்தையை வீட்டிற்கு அழைத்தால் என்ன? அப்பாவிற்கும், அவர்களுக்கும் இடையே எந்த ஒளிவுமறைவும் கிடையாது. அதேபோல் அம்மாவும் அவர்களை சகோதரியாக தான் பார்க்கிறார்கள், இந்த சூழ்நிலையை சமாளிக்க அவர்கள் ஒருவரால் தான் முடியும்!' என்று முடிவெடுத்தவன் கமலாவின் நம்பரை அழுத்தினான்.
"ஹலோ தருண்! என்னடாப்பா பெரிய மனுஷா இந்த அத்தையின் நினைவெல்லாம் இன்னும் உனக்கு இருக்கிறதா என்ன?" என்று எடுத்தவுடனே கேலிப் பேசினாள் கமலா.
தன் மேல் அக்கறை கொண்ட ஒரு உறவு என்ற நினைவில் அவனுக்கு தொண்டையை அடைத்தது.
அவனுடைய அமைதி கமலாவை யோசிக்க வைத்தது. சித்துவும் ஊரில் இல்லை, இன்று விடுமுறை நாள் அல்லவா எப்பொழுதும் சிந்து பேசும் பொழுது தானே இவனும், கருணும் பேசுவார்கள். இன்று இவனே அழைத்து விட்டு அமைதி காக்கிறானே...
"எதுவும் பிரச்சினையாப்பா?" என்று மெதுவாக வினவினாள்.
"ஆமாம் அத்தை... பிரச்சினை தான், அதுவும் என்னால். அப்பாவும் ஊரில் இல்லை அம்மாவுடன் கொஞ்ச நேரம் நீங்கள் இருந்தால் நன்றாக இருக்கும். உடனே கிளம்பி வர முடியுமா? தொந்திரவு கொடுப்பதற்கு சாரி அத்தை!" என்றான் தருண் வருத்தமாக.
"உதைப்படுவாய் ராஸ்கல்... வேலைக்கு சென்றால் பெரிய ஆள் ஆகி விடுவீர்களோ? தொந்திரவாம்... மன்னிப்பாம்... உன்னை நேரில் வந்து கவனித்துக் கொள்கிறேன் போனை வைத்து விட்டு வாங்கி கட்டிக் கொள்ள தயாராக இரு!" என்றபடி அவள் போனை வைக்கவும் இவன் முகம் மலர்ந்தது.
அத்தை எப்பொழுதுமே இப்படித்தான், கூச்ச சுபாவத்தில் இவன் ஒதுங்கி ஒதுங்கி இருந்தாலும் அவள் விடவே மாட்டாள். தானாக உரிமையெடுத்து அவனை செல்லம் கொஞ்சுவதும், அதட்டுவதும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவள் வருகிறேன் என ஒத்துக் கொண்டதே அவனுக்கு யானை பலம் வந்தது போலிருந்தது.
'சரி... செய்ததற்கான பலனை சந்தித்துதானே ஆக வேண்டும், எவ்வளவு நேரம் தயங்கி கொண்டு வாசலிலேயே நின்றிருப்பாய்?' என தனக்குள் கேள்வி எழுப்பியவன், ஓர் ஆழ் மூச்சை உள்ளிழுத்து வெளியிட்டு விட்டு சாற்றியிருந்த கதவை நோக்கி நடந்தான்.
தயக்கத்துடன் காலிங்பெல்லை அழுத்தியவன் தவிப்போடு காத்திருக்க, கதவை திறந்து விட்டு நின்றவன் கருண்.
தம்பியின் முகத்தை கண்டதும் மற்றவை மறந்துப் போக பிரிவொன்றே பிரதானமாக நினைவு வந்து அவனை ஆவலுடன் நெருங்கினான் தருண்.
அண்ணனை கண்ட சந்தோசத்தில் சட்டென்று மலர்ந்து தானும் ஓரடி முன்னே எடுத்து வைத்தவனின் விழிகள் சட்டென்று கலங்கி நாசி விரிந்தது. இதழ்கள் துடித்து முகத்தில் வீம்பு பிறக்க வேகமாக அவனை விட்டு விலகி உள்ளே செல்ல முயன்றான் அவன்.
'என்னை விட்டு விட்டுப் போனவன் தானே!' என்ற கோபம் அதில் தெரிய, அதை உணர்ந்தப் பெரியவன் அவனை விட விரைவாக முன்னே வந்து அவன் தோள்களைப் பற்றினான்.
"கருண்மா... ப்ளீஸ்டா கண்ணா, அண்ணாவை மன்னித்து விடு புத்தியில்லாமல் நடந்து விட்டேன். இனி சத்தியமாக உங்களை எல்லாம் விட்டு நான் எங்கும் போக மாட்டேன். என்னிடம் பாராமுகமாக மட்டும் இருந்து விடாதே, நிச்சயமாக என்னால் அதை தாங்கி கொள்ள முடியாது!" என்று தவித்தபடி அவனை இறுக அணைத்துக் கொண்டான்.
"என்னை விடு நான் உன்னிடம் பேசவே மாட்டேன், நீ இங்கிருந்து வெளியேறினால் நாங்கள் எப்படி அதை தாங்கி கொள்வோம் என்பதை நீ கொஞ்சமேனும் யோசித்துப் பார்த்தாயா? அப்படியென்ன நீ இந்த வீட்டை வெறுத்து வெளியேறும் அளவுக்கு நாங்கள் தவறிழைத்து விட்டோம்?" என்று அவனை விலக்கி தள்ளிப் பொரிந்து கொட்டினான் கருண்.
"ஐயோ... அப்படியெல்லாம் எதுவும் இல்லைடா..." என வேதனையுடன் மறுக்க ஆரம்பித்தவன், "தருண்!" என்ற மெலிந்த குரலின் ஓசை கேட்டு வேகமாக அங்கே திரும்பி பார்த்தான்.
படுக்கையறையின் வாயிலில் லேசாக சாய்ந்தபடி ஓய்ந்து போய் நின்றிருந்த சிந்துவை கண்டதும், மற்றதை மறந்தவன் அம்மா என்று கூவியபடி ஓடிச் சென்று அவளை கட்டிக்கொண்டு சிறுப்பிள்ளையென கதறி அழ ஆரம்பித்தான்.
அவனை அணைத்துக் கொண்டவளின் விழிகளும் அருவியை பிரவகிக்க கண்களை துடைத்தபடி அவர்களிடம் வந்தான் கருண்.
"அண்ணா! செய்வதையெல்லாம் செய்து விட்டு ஓவர் சீன் போடாதே..." என கேலிப் பேச முயன்றவன், "முதலில் அம்மாவை உட்கார வை, நான்கு நாட்களாக சரியாக சாப்பிடாமல் மிகவும் சோர்ந்துப் போய் இருக்கிறார்கள்!" என்று வேதனையுடன் முடித்தான்.
இதயத்தில் வலி பிறக்க சிந்துவை கட்டிலில் அமர வைத்தவன் தரையில் அமர்ந்து அவள் மடியில் முகம் புதைத்துக் கொண்டான்.
தருண் திரும்பி வந்து விட்டதில் கருண் மனம் அமைதியடைந்து விட்டாலும், உண்மை அறிந்த மற்ற இருவரின் நெஞ்சங்களும் பதிலறியா பல கேள்விகளுடன் அலைப்புற்றிருந்தது.
விரல்கள் தன் போக்கில் அவன் தலையை வருட சுவரை வெறித்துக் கொண்டிருந்தாள் சிந்து. உள்ளம் ஊமையாய் அழுதது, இத்தனை வருடங்களாக நன்றாக போய் கொண்டிருந்த தங்கள் வாழ்வில் யாருடைய கண்ணடி பட்டு இப்படியொரு சூழ்நிலை உருவானது.
"அண்ணா! இந்தா லெமன் ஜியூஸ், எனக்கு தெரிந்த மாதிரி போட்டிருக்கிறேன். இவ்வளவு நாட்களாக சின்னப் பையனாக செல்லம் கொஞ்சி விட்டு திடீரென அந்தரத்தில் விட்டுவிட்டு போய் விட்டாய். அப்பாவும் இல்லாமல் அம்மாவை சமாளிக்க மிகவும் சிரமப்பட்டுவிட்டேன். உன்னை விசாரிக்கும் அப்பாவிடமும் பதில் சொல்ல முடியாத நிலை, ஷ்... அப்பா என்ன ஒரு கஷ்டம்டா சாமி?" என மேலே பார்த்து பெருமூச்செரிந்தவன், "ம்... எடுத்துக் கொள், அம்மாவையும் குடிக்க வை!" என்றபடி சிந்துவின் அருகில் அமர்ந்தான்.
மடியில் இருந்து தலையை உயர்த்திய தருணின் முகத்தை கண்டு திகைத்த கருண், "ப்ச்... அது தான் செய்வதை எல்லாம் செய்து விட்டு திரும்பவும் வீட்டிற்கு வந்து விட்டாய் அல்லவா, போகிறதென்று விட்டுத் தொலை. ஏன் அதையே நினைத்துக் கொண்டு முகத்தை இப்படி வீங்க வைத்து கொண்டிருக்கிறாய்?" என்று அதட்டினான்.
"அவன் எப்படிடா விடுவான்? இன்னமும் தான் அவன் கேள்விக்கு நான் பதில் கூறவில்லையே!" என்று உணர்ச்சியற்ற விழிகளால் அவன் முகத்தை கூர்ந்தாள் சிந்து.
"அம்மா!" என்று அவள் கரங்களை எடுத்து தன் கன்னங்களில் தாங்கி கொண்டவன், "ஐ ஆம் சாரிமா... நான் அப்படி கேட்டிருக்க கூடாது தான், என் கழுத்தை நெருக்கிக் கொண்டிருந்த சூழ்நிலையில் செய்வதறியாமல் அனைத்தையும் செய்து விட்டேன்!" என்றான் வேதனையுடன்.
"என்ன சூழ்நிலை, என்ன பிரச்சினை? அப்பொழுது அண்ணா ஏன் வீட்டை விட்டுப் போனான் என்ற விவரம் உங்களுக்கு ஏற்கனவே தெரியுமாம்மா என்னிடம் ஏன் சொல்லவில்லை நீங்கள்?" என்று கேள்வி எழுப்பினான் கருண்.
அவன் கேள்வியை அலட்சியம் செய்தவள் தருணிடம் கேள்வி எழுப்பினாள்.
"இத்தனை ஆண்டுகளாக உருவாகாத கழுத்தைப் பிடிக்கின்ற சூழ்நிலை திடீரென்று எப்படி உதயமாகியது?"
அக்கேள்விக்கு பதில் சொல்ல திராணியற்று தருணின் தலை கவிழ்ந்தது. இருவரிடமும் தென்பட்ட இறுக்கம் கண்டு கருண் பார்வையாளராக மாறிப் போனான்.
"ம்...?" என்ற சிந்துவின் உந்துதலில் நிமிர்ந்தவன், "வேண்டாம்மா!" என்றான் கெஞ்சலாக.
தன்யா கூறியதை வைத்து தன் தாயின் இருண்ட பக்கம் அது என்பதை ஊகித்தறிந்து இருந்தவன் தந்தை அருகில் இல்லாத நிலையில் அவளிடம் அதை வெளிப்படுத்தி துன்பத்தை தூண்டிவிட்டு விடக் கூடாதே என தயங்கினான்.
அவன் பதிலற்று இருக்கவும், "உன்னை தான் கேட்கிறேன் சொல்லுடா?" என்றாள் அதிகாரமாக.
"அது என்னால் முடியாது!" என்றவன் வேகமாக எழுந்து தன்னறைக்கு செல்ல முயல, அவனுடைய கரம்பற்றி தடுத்தாள் அவள்.
"அன்று உன் வாயிலிருந்து அந்தக் கேள்வி பிறந்ததற்கும், இந்த வீட்டை விட்டு வெளியேறியதற்கும் தகுந்த பதிலை கூறி விட்டு தான் நீ இங்கிருந்து அசைய வேண்டும்!" என்றாள் உத்திரவிடும் தொனியில்.
"அம்மா! இதற்கான பதில் நம் இருவருக்குமே வேதனையை தான் கொடுக்கும் என்பதை என்னை விட நன்றாக அறிந்திருக்கும் நீங்களே ஏன் அதை தூண்டி துருவுகிறீர்கள்?"
"இத்தனை தூரம் வந்தப் பிறகு இன்னும் என்னடா வேதனை மிச்சமிருக்கிறது? சரி இதற்கு பதில் சொல் கடந்த நான்கு நாட்களாக எங்கே இருந்தாய் நீ?" என்று அவன் தோள்களைப் பற்றி வினவினாள் சிந்து.
இதற்கு மேலும் அவளிடம் உண்மையை மறைக்க இயலாமல், "சிவகாமி பாட்டி வீட்டில்!" என்றான் தருண் இறங்கிய குரலில்.
தோள்களைப் பற்றியிருந்த கரத்தில் நடுக்கத்தை உணர்ந்தவன், "அம்மா!" என பதற்றத்துடன் அழைத்து வேகமாக அவள் கரங்களை தன் கரங்களில் எடுக்க, வெறிக் கொண்டவள் போல் அவனை உதறித் தள்ளியவள், "ஓ! உன் பிறப்பின் இரகசியம் அறியப் போனாயோ?" என்றாள் எகத்தாளமாக.
அந்த வார்த்தைகளை தாங்க முடியாமல், "அம்மா!" என்று அலறினான் தருண்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro