Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

55 வியூகம்

55 வியூகம்

காவல் நிலையத்தில், சோகமே வடிவாய் அமர்ந்திருந்தார் ரஞ்சித். இந்த சூழ்நிலையை தான்  ஒரு நாள்  எதிர்கொள்ள நேரிடும் என்பதை அவர் அறிந்தே இருந்தார். சமீப காலத்தில், குமரேசனின் நடவடிக்கைகள் பெருமளவிற்கு மாறிப் போயிருந்தது. மற்றவர்களது வெறுப்பை சம்பாதிக்கும் விஷயங்களை அவர் செய்ய ஆரம்பித்திருந்தார். மணிமாறனையும் அவரது குடும்பத்தையும் அவர் குறி வைத்திருந்தார். அவர்களது பலம் அறிந்த பின், அதை செய்ய அவர் எப்படி துணிந்தார் என்று தான் அவருக்கு புரியவில்லை.

சட்டென்று காவல் நிலையம் சூடெறி போக, தன் பார்வையை நுழைவு வாயிலின் பக்கம் திருப்பினார் ரஞ்சித். அவர் எதிர்பாராத மூவர் காவல் நிலையத்தினுள் நுழைந்தார்கள். பட்டென்று தன் முகத்தை திருப்பிக் கொண்ட அவர், அவர்களை பார்க்க அவமானப்பட்டு கொண்டு, தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டார்.  அவர்கள் அங்கு வேறு விஷயமாக வந்திருக்கிறார்கள் என்று அவர் எண்ணினார்.

மகிழனின் நண்பனான ஆய்வாளர் அவனை பார்த்து புன்னகைத்தார்.

"என்ன விஷயம் சார்?" என்றார் அவர்.

"மிஸ்டர் ரஞ்சித்தை பெயில்ல எடுக்க நாங்க இங்க வந்திருக்கோம்" என்றார் பூபதி.

அதைக் கேட்ட ரஞ்சித் திடுக்கிட்டார். நம்ப முடியாத பார்வையுடன் எழுந்து நின்றார். தான் கொண்டு வந்த பிணை ஆணையை ஆய்வாளரிடம் வழங்கினார் பூபதி. அவர்களிடம் வந்த ரஞ்சித்,

"இவங்க என்னை யார்கிட்டயும் பேசவே விடல" என்றார்.

"அவர் குமரேசன் கிட்ட பேசணும்னு சொன்னாரு. இந்த கேஸ்ல மெயின் கல்ப்ரிட்டே அவர் தான். அவர் விஷயமா தான் நாங்கள் இவரை அரெஸ்ட் பண்ணி இருக்கோம். அதனால தான் நாங்க அவர்கிட்ட பேச இவரை விடல" என்றார் ஆய்வாளர்.

"எதுக்காக நீங்க என்னை அரெஸ்ட் பண்ணீங்க சார்?" என்றார் ரஞ்சித்.

"நாங்க ராகேஷை அரெஸ்ட் பண்ண நேரத்துல இருந்தே குமரேசன் மேல சந்தேகத்தில் தான் இருக்கோம். அவருக்கு டிரக்ஸ் டீலிங்கில் சம்பந்தம் இருக்குமோன்னு நாங்க சந்தேகப்படுறோம். அதனால தானே அவர் ராகேஷுக்கு வலிய போய் உதவி செஞ்சிருக்காரு? இல்லன்னா காரணமே இல்லாம அவனுக்கு எதுக்காக இவர் இருபத்தைந்து லட்சம் கொடுக்கணும்?" என்றார் ஆய்வாளர்.

மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்தார் ரஞ்சித். ராகேஷுக்கு எதற்காக குமரேசன் இருபத்தைந்து லட்சம் கொடுத்தார் என்று தான் அவருக்கு தெரியுமே.

"அதுமட்டுமில்ல, அவர் வேற ஏதோ பெருசா பிளான் பண்றதா எங்களுக்கு தெரிய வந்திருக்கு அதுக்கான ஆதாரம் கூட எங்ககிட்ட இருக்கு. அவரோட ஃபோனை நாங்க டாப் பண்ணி இருக்கோம்" மகிழன் கூற சொன்ன பொய்யை கூறினார் ஆய்வாளர். அது ரஞ்சித்தை தவிப்பில் ஆழ்த்தியது.

"ரஞ்சித்தோட பெயில் ஆர்டரை ஏத்துக்க உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா?" என்றான் மலரவன்.

இல்லை என்று தலையசைத்தார் ஆய்வாளர்.

பூபதி கொடுத்த பிணை ஆணையை பெற்று, அதில் கையொப்பமிட்டு கொடுத்தார் ஆய்வாளர். ஆனால் ரஞ்சித்துக்கு தெரியாது, அந்த ஆய்வாளர், அந்த வழக்கை பதியவே இல்லை... பூபதி அவரிடம் கொடுத்தது, பிணை ஆணையே இல்லை என்பது. அது கலப்படமில்லாத ஒரு சுத்தமான நாடகம்.

அவர்களுடன் நடந்தார் ரஞ்சித்.

"நான் கோர்ட்ல ஒரு கேசை அட்டென்ட் பண்ண வேண்டி இருக்கு" என்றார் பூபதி.

"ஓகே பூபதி சார். நீங்க கிளம்புங்க" என்றான் மலரவன்.

தனது காரில் அந்த இடத்தை விட்டு கிளம்பினார் பூபதி.

"உங்களை நான் ட்ராப் பண்றேன்" என்றான் மலரவன்.

ரஞ்சித் சரி என்று தலையசைத்து, அவனது காரில் ஏறி அமர்ந்தார். மகிழன் காரை ஸ்டாட் செய்ய விழைந்த போது, மலரவன் அவனை தடுத்தான். அவனைக் கேள்விக்குறியுடன் பார்த்தான் மகிழன்.

பின்னால் அமர்ந்திருந்த ரஞ்சித்தை நோக்கி திரும்பிய மலரவன், குமரேசனுக்கும், வில்லிமுக்கும் இடையில் நடந்த கைபேசி உரையாடலை போட்டு காட்டினான். ரஞ்சித் அதிர்ச்சி அடைந்தார். அவரை விட அதிகம் அதிர்ந்தது மகிழன் தான். கோபத்தில் பல்லை கடித்தான் அவன்.

"எவ்வளவு தைரியம் இருந்தா அவன் அண்ணியை கொல்ல திட்டம் போடுவான்? இன்னும் நீ எதுக்காக காத்துகிட்டு இருக்க, மலரா? அவனை உள்ள தள்ள இந்த எவிடன்ஸ் போதுமே" என்றான் மகிழன்.

"அதை நான் நிச்சயம் செய்யத்தான் போறேன். இந்த விஷயம் எவ்வளவு ஆபத்தானதுன்னு ரஞ்சித் தெரிஞ்சுக்கணும்னு தான் நான் வெயிட் பண்ணினேன்" கூறிவிட்டு ரஞ்சித்தை ஏறிட்டான் மலரவன்.

"நீங்க என்ன நினைக்கிறீங்க ரஞ்சித்? குமரேசனை அரெஸ்ட் பண்ண இந்த எவிடன்ஸ் போதும் தானே?"

ஆம் என்று தலையசைத்தார் ரஞ்சித்.

"குமரேசன் கூட ஆரம்பத்துல இருந்தே இருந்தது நீங்க தான். குமரேசனை அரெஸ்ட் பண்ணும் போது, விசாரணைக்காகவாவது உங்களையும் அரெஸ்ட் பண்ணுவாங்க"

"இப்போ நான் என்ன செய்யணும்?"

"நான் சொன்னபடி நீங்க கேட்டா, இந்த கேஸ்லயிருந்து உங்களை விடுவிக்க என்னால முடியும்" என்ற மலரவன் மகிழனை ஏறிட்டான். அவன் ஆம் என்று ஆமோதித்தான்.

"நீங்க சொல்றதை நான் கேட்கிறேன்" என்றார் ரஞ்சித்.

"காரை ஸ்டார்ட் பண்ணு" என்றான் மலரவன்.

மகிழன் காரை ஸ்டாட் செய்தவுடன்,

"ராகேஷ் வீட்டுக்கு போ" என்றான் மலரவன்.

அவனை பொருள் பொதிந்த பார்வை பார்த்தான் மகிழன். அவனது பார்வையின் பொருளைப் புரிந்து கொண்ட மலரவன், ஆம் என்று தலையசைத்தான். குதூகலமாய் காரை செலுத்தினான் மகிழன்.

*நானும் உன்னுடன் வருகிறேன்* என்று மலரவன் கூறிய போது, அதற்கு ஏதாவது காரணம் இருக்கும் என்று அவன் எதிர்பார்த்தான். இப்பொழுது அது ஏன் என்று அவனுக்கு புரிந்தது. குமரேசன் சுதாகரித்துக் கொள்ளும் முன் இந்த விஷயத்தை முடிக்க நினைக்கிறான் மலரவன். அதனால் தான் வேகமாய் செயல்படுகிறான். ரஞ்சித்தை தங்களுடன் பார்க்கும் ராகேஷ், வேறு வழியின்றி அவர்களிடம் சரண் அடைந்து தான் தீர வேண்டும். அதன் பிறகு,  நாலா திசைகளில் இருந்தும் குமரேசனை வளைத்து விட முடியும். அவருக்கு தப்பிக்க வேறு சந்தர்ப்பமே இருக்காது என்று எண்ணியபடி காரை செலுத்தினான் மகிழன்.

மலரவனும், மகிழனும் ராகேஷின் வீட்டின் முன் சென்று இறங்கினார்கள். ரஞ்சித் காரில் தான் அமர்ந்திருந்தார்.

"உன்னோட பிளான் என்ன மலரா?" என்றான் மகிழன்.

அவனிடம் அதை விவரித்தான் மலரவன்.

"ஓகே"

"நான் இங்கேயே இருக்கேன். ஏன்னா, ரஞ்சித்தை முழுசா நம்ப முடியாது. அவரை இந்த சீன்ல கொண்டு வராம நம்ம இதை முடிக்க முடியாது" என்றான் மலரவன்.

"ரொம்ப தேங்க்ஸ் மலரா" என்றான் மகிழன்.

"ஆல்வேஸ்..." புன்னகைத்தான் மலரவன்.

"அவங்க மோசமானவங்கன்னு நிரூபிக்கிறதை விட, நான் தப்பு செய்யாதவன்னு நிரூபிக்கிறது தான் எனக்கு ரொம்ப முக்கியம்" என்றான் மகிழன் நெகிழ்ச்சியுடன். ராகேஷை எப்படி இந்த விஷயத்தில் பேச வைப்பது என்று புரியாமல் இருந்தான் மகிழன். அதை, அவன் சார்பாய் மலரவன் செய்தது அவனுக்கு பெரு மகிழ்ச்சியை தந்தது.

ராகேஷின் வீட்டினுள் நுழைந்தான் மகிழன். சோபாவில் படுத்துக் கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தான் ராகேஷ். மகிழனை பார்த்த அவன், அதிர்ச்சியுடன் எழுந்து நின்றான்.

"எப்படி இருக்க நண்பா...? இல்ல... மாஜி நண்பா" என்றான் மகிழன்.

மகிழன் எதற்காக அங்கு வந்திருக்கிறான் என்று புரியாத ராகேஷ் தினறினான். ஆனால் அவன் ஏதோ திட்டத்தோடு வந்திருக்கிறான் என்று மட்டும் அவனுக்கு புரிந்தது. ஏனென்றால், வெகு நாட்களுக்குப் பிறகு அவன் அங்கு வந்திருக்கிறான். மகிழனுக்கு அவன் மீது அழுத்தமான சந்தேகம் இருப்பது அவனுக்கு தெரியும். இருந்தபோதிலும், மகிழன் இடையில் அவனை சந்திக்க முயலவே இல்லை. அப்படி இருக்கும் போது, இப்பொழுது எதற்காக வந்திருக்கிறான்?

"உனக்கு என்னை ஞாபகம் இருக்கான்னு எனக்கு தெரியல. நீ தான் இப்போ இருபத்தி அஞ்சு  லட்சத்துக்கு முதலாளியாச்சே" என்றான் மகிழன்.

ராகேஷ் தலைகுனிந்து கொண்டான்.

"என் முகத்தைக் கூட உன்னால பார்க்க முடியலையா?" என்றான் மகிழன் கிண்டலாய்.

தலைநிமிர்ந்து அவனை உறுதியுடன் நோக்கினான் ராகேஷ்.

"நீ என்ன நினைக்கிறன்னு எனக்கு தெரியும். நான் எதுக்காக இங்க வந்திருக்கேன்னு நினைக்கிற இல்லையா? நீ என் முதுகுக்கு பின்னாடி என்ன செஞ்சேன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு"

"இல்ல மகிழா, நீ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்க"

"நீ சொல்றது உண்மை தான். நீ ஒரு நல்ல ஃபிரண்டுன்னு நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டேன்"

"நீ என்னை நம்பலங்கறது எனக்கு ரொம்ப வேதனையை தருது மகிழா. இல்லாத ஒரு குற்றத்தை உன் மேல சுமத்தி நான் ஏன் உன் வாழ்க்கையை நாசம் பண்ணனும்? உன்னை நான் வேற ஒருத்தனா வேறுபடுத்தி பார்த்ததே இல்ல. என்னை பொறுத்த வரைக்கும், நீயும் நானும் ஒன்னு தான். நான் உனக்கு நல்லதை தான் நினைச்சிருக்கேன்" உணர்ச்சிப் பெருக்குடன் கூறி, தான் செய்த தவறை மறைக்க முயன்றான் ராகேஷ்.

முகத்தில் எந்த பாவமும் இன்றி, கல் போல நின்றான் மகிழன். உலகிலேயே நகைப்புக்கு உரிய விஷயம் என்னவென்றால், எதிரில் இருக்கும் மனிதன் பொய் தான் கூறுகிறான் என்று தெரிந்த பின்பும், அதை கேட்டுக் கொண்டிருப்பது.

"கூட பழகின ஃபிரண்டு நம்மை ஏமாத்தினா, அது எந்த அளவுக்கு வேதனையை கொடுக்கும்னு எனக்கு தெரியாதா?"  தனது நாடகத்தை தொடர்ந்தான் ராகேஷ்.

"உனக்கு தெரியாது... கூட பழகுன ஃபிரண்டு ஏமாத்துனா, அது எவ்வளவு வேதனையை கொடுக்கும்னு உனக்கு நிச்சயமா தெரியாது... அந்த வேதனையை நீ அனுபவிச்சதில்ல... நான் அனுபவிச்சிருக்கேன்"

"இல்ல மகிழா, நீ என்னை புரிஞ்சுக்கல"

இரண்டு எட்டு எடுத்து வைத்து, அவன் சட்டையின் காலரை பற்றிய மகிழன், அவனை ஜன்னலை நோக்கி இழுத்துச் சென்றான்.

"அங்க பாரு" என்று அவனது காரை சுட்டிக்காட்டினான்.

அவனது காரில் அமர்ந்திருந்த ரஞ்சித்தை பார்த்து வெலவெலத்து போனான் ராக்கேஷ்.

"அது யாருன்னு உனக்கு தெரியுதா?"

தன் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியை மறைக்க முடியவில்லை ராகேஷால்.

"அவரு அப்ரூவரா மாறிட்டாரு. குமரேசன் என்னவெல்லாம் செஞ்சாருன்னு இப்போ தான் போலீஸ்ல ஸ்டேட்மென்ட் கொடுத்துட்டு வராரு. உனக்கும் குமரேசனுக்கும் இடையில என்ன நடந்ததுன்னு எங்களுக்கு தெரிஞ்சு போச்சு. இப்பவும், நீ எதுவும் செய்யலன்னு சொல்லுவியா?"

மகிழனின் கோபம் அதிகரிப்பதை உணர்ந்தான் ராகேஷ்.

"அங்க பாரு, ரஞ்சித் கூட இருக்கிறது யாருன்னு... என்னோட அண்ணன் மலரவன். உனக்கு தான் அவன் எப்படிப்பட்டவன் தெரியுமே..." என்று மகிழன் கூறியது, மலரவன் சொல்லிக் கொடுத்து பேசியது அல்ல, அவனாகவே பேசியது.

"இப்பவும் உன்னோட பொய்யை நீ காப்பாத்த முடியும்னு நினைக்கிறியா?"

மகிழனின் கரங்களைப் பற்றிக் கொண்டான் ராகேஷ்.

"என்னை மன்னிச்சிடு மகிழா, தயவு செஞ்சி என்னை மன்னிச்சிடு. நான் பணத்துக்காக அப்படி பண்ணிட்டேன். பணத்தைக் காட்டி என்னோட ஆசையை தூண்டிவிட்டார் குமரேசன். நான் கனவுல கூட நினைச்சு பார்க்க முடியாத ஒரு பெரிய தொகையை கொடுத்தார். அது தான் என்னை பேராசைக்காரனா மாத்திடுச்சு. என்னை மன்னிச்சிடு"

"மன்னிக்கிறதா? நீ எனக்கு செஞ்ச துரோகத்தால நான் இழந்தது ஏராளம். குடிகாரன்னு பேர் எடுத்தேன்... எல்லாருக்கும் முன்னாடி அவமானப்பட்டேன்... என்னோட அப்பா கூட என்னை நம்பல. என் அண்ணன் ஒருத்தன் தான் என் நம்பினான். அவன் மட்டும் என்னை தடுக்கலன்னா, உன்னை நான் எப்பவோ கொன்னிருப்பேன்... உன்னை மட்டும் இல்ல, அந்த குமரேசனையும், அவன் பெத்து வைச்சிருக்கிற அந்த பன்னியையும் தான். நீ செஞ்சதை கடைசி வரைக்கும் நாங்க கண்டுபிடிக்காமலேயே விட்டுடுவோம்னு நினைச்சியா? இல்ல, கண்டுபிடிச்சா உன்னை சும்மா விட்டுடுவோம்னு நினைச்சியா?"

"மகிழா, தயவுசெய்து என்னோட வாழ்க்கையை கெடுத்துடாத..."

"என்னோட வாழ்க்கையை நீ கெடுத்தியே... அதுக்கு என்ன செய்ய போற?"

"நீ என்ன சொன்னாலும் செய்றேன்..."

"உன்னோட உதவி எங்களுக்கு தேவையில்ல. உன்னோட உதவியை எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்ல. குமரேசன் தன் வலையில தானே சிக்கிக்கிட்டான். அதனால தான் ரஞ்சித் இப்போ எங்க கூட இருக்காரு. குமரேசன் கூட இருந்தா, தன்னுடைய கதை கந்தலாயிடும்னு அவருக்கு தெரியும்"

அது மேலும் ராக்கேஷை கலவரத்தில் ஆழ்த்தியது.

"நீ விதைச்சதை அறுக்க தயாரா இரு"

"மகிழா, ப்ளீஸ் நான் சொல்றதை கேளு..."

மலரவன், ரஞ்சித்துடன் உள்ளே நுழைவதை கண்ட ராகேஷ், கெஞ்சுவதை நிறுத்தினான். மலரவனை நோக்கி ஓடிச் சென்ற அவன், மலரவனின் கால்களை பற்றிக் கொண்டான்.

"அண்ணா தயவு செய்து என்னை காப்பாத்துங்க. நீங்க என்ன சொன்னாலும் நான் செய்றேன். தயவு செய்து என்னை போலீஸ்ல மட்டும் பிடிச்சு கொடுத்திடாதீங்க"

"முதல்ல எழுந்திரு" திடமாய் வந்தது மலரவனிடமிருந்து.

எழுந்து நின்ற ராகேஷை, மலரவன் கூர்மையான பார்வை பார்க்க, தலை குனிந்தான்.

"நான் என்ன சொன்னாலும் செய்வியா?"

"நிச்சயமா செய்வேன் ணா..."

"குமரேசன் உன்னை என்ன செய்ய சொன்னாரு?"

"மணிமாறன் சாரோட பார்வைல, மகிழனை குடிகாரனா காட்ட சொன்னாரு"

"நீ அதை எப்படி செஞ்ச?"

"கொக்கோகோலாவுல பிராந்தியை மிக்ஸ் பண்ணி,  மகிழனை அதை  ஆஃபீஸ்ல குடிக்க வச்சேன். என்னோட வேலையை காப்பாத்த, உண்மையை சொல்லாம, அந்த பழியை மகிழன் ஏத்துக்கிட்டான்"

"அப்புறம்?"

"உங்க கல்யாண நாள் அன்னைக்கு, நான் அவனை கட்டாயப்படுத்தி கெஸ்ட் ரூமுக்கு கூட்டிகிட்டு போனேன். கீர்த்தி அவனுக்காக அங்க பாத்ரூம்ல காத்திருந்தா. அவனை வலிய குடிக்க வச்சிட்டு, பிராந்தி பாட்டிலோட அவனை அங்க விட்டுட்டு நான் போயிட்டேன்"

"அப்புறம்?"

"மகிழன் தன் கிட்ட தப்பா நடந்ததா கீர்த்தி எல்லாரையும் நம்ப வச்சா. மகிழன் குடிச்சதை ஏற்கனவே பார்த்திருந்த மணிமாறன் சாரும் அதை நம்பினார். அதனால, அவனை கீர்த்தியை கல்யாணம் பண்ணிக்க வச்சாரு"

"எதுக்காக கீர்த்தி மகிழனை கல்யாணம் பண்ணிக்க நினைச்சா?"

"அவ உங்களைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சா. ஆனா நீங்க அவளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காம, பூங்குழலி அண்ணியை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. அதை அவளால தாங்க முடியல. உங்க குடும்பத்துக்கு ஒரு பாடத்தை சொல்லிக் கொடுக்கணும்னு நினைச்சா. அதனால மகிழினை கல்யாணம் பண்ணிக்கிட்டா. அவகிட்ட இருக்கிற பணத்தை காட்டி மகிழனை ஆள முடியும்னு அவ நினைச்சா. அவனை வச்சி உங்க குடும்பத்தை பிரிக்கவும் திட்டம் போட்டா"

"உன்னை நம்பின ஒரு ஃபிரண்டை ஏமாத்துறோமேன்னு உனக்கு கொஞ்சம் கூட உறுத்தவே இல்லையா?"

தலைகுனிந்தான் ராகேஷ்.

"அவளோட எண்ணம் என்னன்னு தெரிஞ்ச பிறகு கூட, பணத்துக்காக நீ இதை செஞ்சிருக்க இல்ல?"

"சத்தியமா இல்ல ண்ணா. உங்க கல்யாணம் முடியற வரைக்கும் அவங்க எதுக்காக இதை செய்ய சொன்னாங்கன்னு எனக்கு தெரியாது. அவ உண்மையிலேயே மகிழனை விரும்புகிறதா தான் நான் நெனச்சேன். அதனால தான் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணினேன்"

"அவ அவனை உண்மையிலேயே மகிழனை விரும்பறதா இருந்தா, அவங்களுக்கு உன்னுடைய ஹெல்ப் எதுக்கு தேவைப்பட போகுது?"

"அவளோட அப்பா தான் உங்களை அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்பட்டதா அவ சொன்னா.  ஆரம்பத்துல அவங்க எண்ணம் சத்தியமா எனக்கு தெரியாது"

"அப்புறம் நீ எப்படி தெரிஞ்சுகிட்ட?"

"நான் குமரேசன் கிட்ட பணம் வாங்க போன போது, அவர் தன்னோட மனைவி கிட்ட பேசிகிட்டு இருந்ததை நான் கேட்டேன். அதனால தான் நான் அரஸ்ட் ஆனபோது அவர் எனக்கு ஹெல்ப் பண்ணாரு. நான் போலீஸ் கிட்ட உண்மையை சொல்லிட கூடாதுன்னு தான் அவர் அதை செஞ்சாரு"

"சரி, எங்க கூட வா"

"அண்ணா ப்ளீஸ் வேண்டாம் அண்ணா"

"நீ இதுல பயப்பட ஒன்னும் இல்ல. இப்ப தான் ரஞ்சித் என்கிட்ட ஒரு புது விஷயத்தை சொன்னாரு"

ரஞ்சித்தை பார்த்த மலரவன், *சொல்லுங்கள்* என்பது போல் சைகை செய்ய,

"உங்க மொத்த குடும்பத்தையும் முடிக்க குமரேசன் பிளான் பண்ணியிருக்காரு. அதனால தான் நான் ரொம்ப பயந்து போய், என் குடும்பத்தோட சென்னையை விட்டு போயிடனும்ன்னு முடிவு பண்ணினேன்"

மகிழனின் இரத்தம் கொதித்தது. இந்த விஷயம் தன் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு ஆபத்தாய் இருந்ததை கண்ட ராகேஷ் படபடப்புக்கு ஆளானான்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro