50 கையும் களவுமாய்
50 கையும் களவுமாய்
மறுநாள்
மணிமாறனை விமான நிலையத்தில் விட்ட பின், முதல் நாள் பூங்குழியிடம் கூறியது போலவே வீட்டிற்கு வரவில்லை மலரவன். கைலாசம் விஷயமாய் முக்கியமான சிலருக்கு அவன் ஃபோன் செய்ய வேண்டியிருந்தது. வீட்டில் இருந்தால் அவன் அதை செய்ய முடியாது. அதனால் அலுவலகம் வந்தான். அவனுக்கு முன்னதாகவே மித்திரன் அங்கு வந்துவிட்டிருந்தான்.
"நான் சொன்னதை செஞ்சிட்டியா?" என்றான் மலரவன் மித்திரனிடம்.
"செஞ்சு முடிச்சிட்டேன். எல்லாம் ரெடி. பூபதி சார் செய்ய வேண்டியது மட்டும் தான் பாக்கி" என்றான் மித்திரன்.
"அவர் அதை செஞ்சிடுவார்" என்றான் மலரவன் நம்பிக்கையுடன்.
தன் கைபேசியை எடுத்து தனது வழக்கறிஞரான பூபதிக்கு ஃபோன் செய்தான். அந்த அழைப்பை உடனே ஏற்றார் பூபதி.
"நான் ரெடி ஆயிக்கிட்டு இருக்கேன், மலரவன். நம்மளுடையது தான் இன்னைக்கு முதல் கேஸ். கவலைப்படாதீங்க, நீங்க சொன்னதை நான் செஞ்சிடுவேன்" என்றார்.
"ஞாபகம் இருக்கட்டும் பூபதி சார். எதுவும் தப்பா போய்ட கூடாது. ஒன்னு தப்பாச்சின்னா, நம்மளுடைய மொத்த திட்டமும் பாழா போயிடும்"
"எதுவும் தப்பா போகாது. நீங்க உங்களுடைய வேலையை ஆரம்பிக்கலாம்"
"தேங்க்யூ சார்"
மித்திரனுடன் தான் செல்ல வேண்டிய இடம் நோக்கி கிளம்பினான் மலரவன். ஒரு மணி நேரத்தில் அவர்கள் சார்பதிவாளர் அலுவலகம் வந்து சேர்ந்தார்கள்.
ஒரு குறிப்பிட்ட நபரை கைப்பேசியின் மூலம் அழைத்தான் மித்திரன்.
"நாங்க இங்க வந்துட்டோம்" என்றான்.
"இதோ வந்துட்டேன் சார்" என்று அழைப்பை துண்டித்தான் அந்த பக்கம் இருந்தவன்.
சில நிமிடத்தில், அங்கு வந்த ஒரு மனிதன், அவர்களுடைய கார் கண்ணாடியை தட்டினான். அவனுக்கு காரின் கதவை திறந்து விட்டான் மித்திரன். அந்த மனிதன், அவர்கள் காரின் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டான்.
"குட் மார்னிங் சார்" என்றான் அவன், தன்னை திரும்பியும் பார்க்காத மலரவனை பார்த்தபடி.
"நான் சொன்னபடி செஞ்சிட்டீங்களா, ராம்?" என்றான் மித்திரன்.
"செஞ்சிட்டேன் சார், அவங்களுடைய நம்பர் பதினாறு. அவங்க நம்பர் வர மத்தியானம் ஆயிடும்... அதுக்கு மேலயும் ஆகலாம்"
"அதுக்கு மேல டைம் ஆனா, உனக்கு நான் பத்தாயிரம் ரூபாய் தரேன்" என்ற மித்திரன், சில இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அவனது பாக்கெட்டில் திணித்தான். அதைக் கண்ட அந்த மனிதன், முகம் முழுவதும் பல்லாய் சிரித்தான்.
"அதை செய்ய வேண்டியது என்னோட பொறுப்பு சார். நான் பார்த்துக்கிறேன் விடுங்க" என்றான்.
"செஞ்சிட்டு வந்து சொல்லுங்க" என்றான் மித்திரன் திடமாய்.
காரை விட்டு கீழே இறங்கிய ராம், சார்பதிவாளர் அலுவலகத்தின் உள்ளே சென்றான்.
"மலரா, ஏதாவது சாப்பிடலாம். டைம் ஆகும் போல தெரியுது"
"இல்ல மித்ரா. எனக்கு சாப்பிடற மூடே இல்ல. இந்த விஷயம் முடியட்டும்"
"நிச்சயம் முடிஞ்சிடும்... கவலைப்படாதே"
"தில்லை அங்கிள் எப்படி இவ்வளவு அப்பாவியா இருந்தார்னு எனக்கு புரியல. கைலாசத்தை பத்தி கொஞ்சம் கூட விசாரிக்காம, எப்படி இவ்வளவு பணத்துக்கான ஷுரிட்டியை அவர் கொடுத்தாரு?" என்றான் நம்ப முடியாமல்.
"தம்பியாச்சேன்னு அவர் அவனை நம்பியிருப்பாரு"
"இந்த அளவுக்கா?"
"அது நம்ம யாரை நம்புறோம் அப்படிங்கிறதை பொறுத்தது, மலரா. கைலாசம், தில்லை அங்கிளோட நம்பிக்கையை சம்பாதிச்சுருப்பான்"
"கைலாசம் பண்ண வேலை தெரிஞ்சா, சிவகாமி ஆன்ட்டியும், பூங்குழலியும் எப்படி ஃபீல் பண்ண போறாங்கன்னு எனக்கு புரியல. கைலாசத்துக்கு உதவி செய்யணும்னு தில்லை அங்கிள் மனசார நினைச்சி உதவி இருக்காரு. ஆனா, அவன் என்ன செஞ்சு வச்சு இருக்கான் பாத்தியா? அவன் அவரைக் கொன்னுட்டான். அவர் உயிர் போறதுக்கு காரணமா இருந்திருக்கான். இதுவும் ஒரு விதத்துல கொலை தான்" கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான் மலரவன்.
"அவனுக்கு ஒரு நல்ல பாடத்தை நம்ம சொல்லிக் கொடுப்போம்"
"அதனால என்ன பிரயோஜனம்? சிவகாமி ஆன்ட்டிக்கு அவங்களுடைய சொத்து திரும்ப கிடைக்கும். அதுல எந்த சந்தேகமும் இல்ல. ஆனா, தில்லை அங்கிளோட உயிர் போனது போனது தானே?"
அதற்கு பதில் கூற முடியவில்லை மித்திரனால். அதனால் அவன் அமைதி காத்தான்.
"குழலி அண்ணிகிட்ட நீ இதைப்பத்தி ஏதாவது சொன்னியா?"
"இல்ல. நான் இதைப் பத்தி அப்பாகிட்ட கூட எதுவும் சொல்லல"
"அவர் உன்கிட்ட இதைப்பத்தி எதுவுமேவா கேட்கல?"
"இல்ல. அவர் கேட்க மாட்டாரு"
"அவர் உன் மேல வச்சிருக்க நம்பிக்கைக்கு ஈடு இணையே இல்ல, மலரா"
"கைலாசம், தில்லை அங்கிளை ஏமாத்தின விஷயம் தெரிஞ்சா அவர் ரொம்ப நொறுங்கிப் போயிடுவாரு"
"குழலி அண்ணியும், சிவகாமி ஆன்ட்டியும் நொறுங்கிப் போக மாட்டாங்களா?"
"நிச்சயமா நொறுங்கித் தான் போவாங்க. தில்லை அங்கிளுக்கு நடந்தது அநியாயம். எனக்கு கைலாசம் மூஞ்சியை அடிச்சு உடைக்கணும்னு தோணுது"
"சான்ஸ் கிடைச்சா நிச்சயமா செய்யலாம்"
தன் கைக்கடிகாரத்தை பார்த்தான் மலரவன். அது மணி பத்தரை என்றது.
"இன்னும் ஏன் பூபதி ஃபோன் பண்ணாம இருக்காரு..???" மலரவன் புலம்பினான்.
"அவரோட அசிஸ்டன்ட் க்கு நான் ஃபோன் பண்ணி பாக்கட்டுமா?" என்றான் மித்திரன்.
"இன்னும் பதினஞ்சு நிமிஷம் பாக்கலாம். அதுக்கு அப்புறம் ஃபோன் பண்ணு"
மித்திரன் சரி என்று தலையசைக்க, சீட்டில் சாய்ந்தமர்ந்து கண்ணை மூடினான் மலரவன்.
இதற்கிடையில்...
குமரேசனின் பிஏவான ரஞ்சித்தின் வீட்டின் கதவை தட்டினான் மகிழன். ரஞ்சித்தின் மனைவி கதவை திறந்தார்.
"யாருங்க நீங்க?" என்றார் திருமதி ரஞ்சித்.
" உங்களை காப்பாத்த வந்த ரட்சகன்" என்றான் மகிழன்.
முகத்தை சுருக்கிய திருமதி ரஞ்சித்,
"நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல" என்றார்.
"உங்க புருஷனை போலீஸ்ல மாட்டி விடாம நான் தான் காப்பாத்த போறேன்" என்றான்.
அதைக் கேட்ட அவர், திடுக்கிட்டார்.
"நீங்க என்ன சொல்றீங்க? நீங்க யாரு? எதுக்காக போலீஸ் என்னோட புருஷனை அரெஸ்ட் பண்ணனும்?"
"நான் மகிழன்... குமரேசனோட மருமகன்"
அந்தப் பெண்மணியின் முகம் வெளிரி போனது.
"போலீஸ் என் புருஷன ஏன் அரஸ்ட் பண்ணணும்? அவர் எதுவும் செய்யலையே" என்றார் தடுமாற்றத்துடன்.
"அப்படியா? அவர் எதுவுமே செய்யலையா?"
அந்தப் பெண்மணியின் முகத்தில் ஈயாடவில்லை. தன் கணவர் என்ன செய்தார் என்று அந்த பெண்மணிக்கு தெரியாவிட்டாலும், ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை அவர் உணர்ந்தார்.
"அவர் எந்த தப்பும் செய்யல. நம்புங்க"
"இருக்கலாம். ஆனா அவரோட முதலாளியும் அவருடைய பொன்னும் செஞ்சது எல்லாமே தப்பு தான் தெரியுமா உங்களுக்கு? குமரேசனை போலீஸ் அரெஸ்ட் பண்ணாங்கன்னா, உங்க புருஷன் தப்பு செஞ்சு இருப்பாரா இல்லையான்னு எல்லாம் போலீஸ் யோசிக்க மாட்டாங்க. குமரேசன் கூட இத்தனை வருஷமா இருந்ததுக்காக அவரையும் தான் அரெஸ்ட் பண்ணுவாங்க"
அந்தப் பெண்மணியின் முகத்தில் பயம் தெரிந்தது.
"நீங்க எனக்கு உதவி செஞ்சா, என்னால உங்களுக்கு உதவ முடியும்"
"நான் என்ன செய்ய முடியும்? எப்படி உங்களுக்கு உதவ முடியும்?"
"கீர்த்தி எங்க அம்மாவோட காலை உடைச்சுட்டா"
"என்ன்னனது?" அவர் அதிர்ச்சி அடைந்தார்.
"தேங்காய் எண்ணெயை கீழே கொட்டி, எங்க அம்மாவை விழ வெச்சுட்டு எங்க வீட்டை விட்டு அவ வெளியே போயிட்டா. அவங்க வேற ஏதோ திட்டம் வச்சிருக்கிறதா நான் சந்தேகப்படுறேன். அது என்னன்னு எனக்கு தெரியணும்"
"ஆனா அது எனக்கு எப்படி தெரியும்?"
தன்னிடமிருந்த வீடியோவை அந்த பெண்மணிக்கு போட்டு காட்டினான் மகிழன். அதை பார்த்த அவர், வெடவெடத்து போனார்.
"என்கிட்ட திடமான சாட்சி இருக்கு. எனக்கு இதுவே போதும்... நான் என்ன வேணா செய்ய முடியும். ஆனா, அதுக்கு முன்னாடி, அவங்க திட்டம் என்னன்னு எனக்கு தெரியணும்"
"நான் என்ன செய்யணும்?"
"உங்க ஹஸ்பண்டோட ஃபோனை ஆட்டோ ரெக்கார்டிங்குக்கு மாத்துங்க. அவர் குமரேசன் கூட பேசுற ஃபைல்ஸை மட்டும் எனக்கு அனுப்பி வைங்க. அது போதும்"
"நான் அப்படி செஞ்சா, நிச்சயமா என் புருஷனை இந்த பிரச்சனையில இருந்து நீங்க விடுவிச்சிடுவீங்க இல்ல?"
"சத்தியமா விடுவிச்சுடுவேன்"
"சரி, நான் செஞ்சி கொடுக்கிறேன்"
"இதைப் பத்தி யாருக்கும் தெரிய கூடாது"
"தயவு செஞ்சு நீங்களும் இதை யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. என் புருஷனை காப்பாத்த தான் நான் இதை செய்றேன்"
சரி என்று தலையசைத்து விட்டு, அங்கிருந்து கிளம்பினான் மகிழன். அந்த பெண்மணி அவனுக்கு உதவுவாரா இல்லையா என்பது நிச்சயம் இல்லை. இருந்தாலும், பயத்தின் விதையை அவர் மனதில் அவன் விதைத்து விட்டான். எப்படியும் அது ரஞ்சித்திடம் பிரதிபலிக்கும். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
...........
பூபதியின் பெயரோடு மலரவனின் கைபேசி ஒளிர்ந்தது. அந்த அழைப்பை உடனே ஏற்றான் மலரவன்.
"சொல்லுங்க பூபதி சார்"
"நமக்கு ஸ்டே ஆர்டர் கிடைச்சிடுச்சு. நீங்க தாராளமா புரொசிட் பண்ணலாம். என்னோட அசிஸ்டன்ட், ஸ்டே ஆர்டரோட ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு வந்துகிட்டு இருக்கார்"
"தேங்க்யூ பூபதி சார். தேங்க்யூ சோ மச்"
"யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்"
மலரவன் பத்திரப்பதிவை தாமதம் செய்ய வேண்டும் என்று நினைத்தது இதற்காகத் தான். கைலாசம் மட்டும் சொத்தை அவர் பெயரில் மாற்றி எழுதி விட்டால் அவர்களால் எதுவுமே செய்ய முடியாது. அதனால் தான், அவர் அப்படி செய்யும் முன், தடுப்பாணை பெற வேண்டும் என்று நினைத்தான் மலரவன்.
அடுத்த அரை மணி நேரத்திற்குள்ளாக பூபதியின் உதவியாளர் அந்த தடுப்பாணையுடன் வந்து, மலரவனிடம் அதை ஒப்படைத்தார்.
அவர்கள் கைலாசத்தின் வருகைக்காக காத்திருந்தார்கள். என்ன வரிசை எண் சென்று கொண்டிருக்கிறது என்று அவர்கள் விசாரித்த போது, பதிணைந்து என்று கூறினார்கள். அடுத்த எண் கைலாசத்தினுடையது தான்.
தன் மாமனாரை ஏமாற்றிய அந்த மனிதனை காணும் ஆவலுடன் காத்திருந்தான் மலரவன். அப்போது கைலாசம் சார்பதிவாளர் அலுவலகத்தின் வளாகத்தில் நுழைந்தான். அவ்வளவு பெரிய ஏமாற்று வேலையை செய்திருக்கக் கூடும் என்று யாரும் நம்ப முடியாத எளிய தோற்றத்துடன் இருந்தான். அவன்.
கைலாசத்தின் எண் அழைக்கப்பட்டது. வங்கியாளருடன் அங்கு வந்திருந்த அவன், பத்திரத்தில் கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டான். வென்று விட்டோம் என்பது போன்ற பூரிப்பான புன்னகையுடன் கையெழுத்திட அவன் குனிந்த போது,
"அவரை அரெஸ்ட் பண்ணுங்க" என்ற குரல் கேட்டு நிமிர்த்தான்.
அங்கு காவலர்கள் நின்றிருந்தார்கள்.
"தில்லைராஜனை ஏமாற்றின குற்றத்திற்காக உங்களை நாங்கள் கைது செய்றோம். அவரோட சொத்துக்களை யாரும் விக்க கூடாது அப்படிங்கிறதுக்கான ஸ்டே ஆர்டர் இது" என்றார் ஆய்வாளர்.
கைலாசமும், வங்கியாளரும் பேயறைந்தது போல் ஆனார்கள்.
"நாங்க எதுவும் செய்யலையே சார்" என்றார் வங்கியாளர்.
"ரூல்ஸ் படி, ஜப்தி பண்ண சொத்தை நீங்க பப்ளிக்கா ஏலம் விட்டு இருக்கணும். அதை உங்க இஷ்டத்துக்கு விக்க உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது"
"நாங்க எல்லாத்தையும் ப்ராப்பரா செஞ்சிருக்கோம் சார்" என்றான் வங்கியாளன்.
"இல்ல. நீங்க செய்யல. உங்க பேங்க்ல கடன் வாங்குனது கைலாசம் தான். அவருக்கு தில்லைராஜன் கையெழுத்து போட்டிருந்தார். கைலாசம் கடனை கட்டலன்னு தான் நீங்க தில்லைராஜனோட சொத்தை ஜப்தி பண்ணீங்க. அப்படி இருக்கும் போது, இவ்வளவு ஷார்ட் பீரியட்ல இவ்வளவு பெரிய சொத்தை வாங்குற அளவுக்கு கைலாசத்துக்கு பணம் எங்கிருந்து கிடைச்சுது?" என்ற கேள்வி அவர்கள் எதிர்பாராத ஒரு நபரிடம் இருந்து வந்தது.
"இதையெல்லாம் கேட்க நீ யார்?" என்றான் கைலாசம்.
"மலரவன்... தில்லைராஜனோட மருமகன்..." என்றான் கோபமே வடிவாய் நின்றிருந்த மலரவன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro