49 புரிதல்
49 புரிதல்
மித்திரனின் கடும் முயற்சியால் லண்டன் செல்வதற்கான தனது விமான பயண சீட்டை பெற்றார் மணிமாறன். தனது ட்ராவல் ஏஜென்சி நண்பன் மூலமாக அதை பெற்றான் மித்திரன். அதை அவன் மலரவனிடம் கொடுக்க, மலரவன் மணிமாறனிடம் கொண்டு வந்து சேர்த்தான்.
அன்பு இல்லம்
வீட்டிற்கு வந்த மலரவன் நேராக மணிமாறனின் அறைக்குச் சென்றான். அனைவரும் மின்னல்கொடியுடன் அங்கு தான் இருந்தார்கள். அனைவரும் அவனைப் பார்க்க, அவனோ பூங்குழலியை பார்த்து மென்மையாய் புன்னகைத்தான்.
"மலரா, மித்திரன் டிக்கெட்டுக்கு ஏற்பாடு பண்ணிட்டானா?" என்றார் மணிமாறன்.
"ஆமாம் பா" என்றபடி தன் பாக்கெட்டில் இருந்த பயணச்சீட்டை எடுத்து அவரிடம் கொடுத்தான் மலரவன்.
"நல்ல காலம், எங்க கிடைக்காம போகுமோன்னு பயந்துட்டேன்" என்றார் மணிமாறன்.
"நீங்க உங்க திங்ஸை எல்லாம் பேக் பண்ணிட்டீங்களா?" என்றான் மலரவன்.
"இன்னும் இல்ல" என்றார் வருத்தத்தோடு.
"ஒன்னும் பிரச்சன இல்ல. நான் பண்ணி தரேன்"
"நீயா?"
"ஆமாம் நான் தான்"
"இல்ல மலரா, பரவால்ல. நானே பண்ணிக்கிறேன்"
"அப்பா, சும்மா காமெடி பண்ணாதீங்க. நீங்க வேலைக்கு போகும் போதே, கர்சீஃப் முதல் கொண்டு கார் சாவி வரைக்கும் உங்களுக்கு தேவையானதை அம்மா தான் எடுத்து கொடுப்பாங்க..."
சங்கடத்துடன் தன் நெற்றியை சொறிந்தார் மணிமாறன்.
"பரவாயில்லப்பா... பீல் பண்ணாதீங்க. நான் தான் ஹெல்ப் பண்ண இருக்கேனே"
பெண்கள் அனைவரும் புன்னகையுடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
"நான் கொஞ்சம் ஃப்ரெஷ் ஆயிட்டு வந்துடறேன்..."
அவன் அங்கிருந்து செல்ல முயல,
"நான் உங்களுக்கு காபி கொண்டு வரட்டுமா?" என்றாள் பூங்குழலி.
சரி என தலையசைத்தான் மலரவன். அவனுக்கு காபி கலந்து கொண்டு வர சமையல் அறைக்கு சென்றாள் பூங்குழலி. முகம் கை கால் கழுவிக்கொண்டு குளியலறையை விட்டு மலரவன் வெளியே வந்த அதே நேரம், காபி குவளையுடன் அறைக்குள் நுழைந்தாள் பூங்குழலி.
"தேங்க்யூ" என்ற அவனைப் பார்த்து புன்னகைத்தாள் பூங்குழலி.
காப்பியை குடித்து முடித்துவிட்டு மீண்டும் மணிமாறனின் அறைக்கு நான் சென்றான் மலரவன். அது பூங்குழலிக்கு வியப்பளித்தது. லண்டன் செல்ல முடியாமல் போனதற்காக தன்னை மலரவன் சமாதானப்படுத்துவான் என்று அவள் எண்ணியிருந்தாள். ஆனால் அவன் அது பற்றி கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. ஏன் அவன் ஏதோ கலவரத்தில் இருப்பது போல் தோன்றுகிறது? அவனை ஏதாவது கவலை வாட்டுகிறதா? அவனை பின்தொடர்ந்து அவளும் மணிமாறனின் அறைக்கு வந்தாள்.
மணிமாறனுக்கு தேவையான பொருட்களை அவரது பெட்டியில் அடுக்க துவங்கினான் மலரவன். அவன் செய்வதை கவனத்துடன் பார்த்துக் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல், தனது கைபேசியில் அவற்றை குறித்தும் வைத்துக் கொண்டார் மணிமாறன்.
"என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க?" என்றார் மின்னல் கொடி.
"மலரவன் செய்றதை கவனிச்சு, அவன் என்னென்ன எடுத்து வைக்கிறான்னு நோட் பண்ணிக்கிட்டு இருக்கேன். அடுத்த தடவை, எனக்கு தேவையானதை, உன்னை டிஸ்டர்ப் பண்ணாம நானே எடுத்து வச்சுக்குவேன்" என்றார்.
அவர் கூறியதை கேட்டு சிரித்த மலரவன்,
"அம்மா, அப்பா உங்களை சார்ந்து இல்லாம இருக்க பிளான் பண்றாரு" என்றான் கிண்டலாய்.
"இல்ல மலரா, நான் அவளை சாராம இருக்க பிளான் பண்ணல. நான் எவ்வளவு தப்பு பண்ணி இருக்கேன்னு இப்ப தான் எனக்கே புரியுது. நம்ம ஒருத்தரை சார்ந்து இருக்கிறது தப்பில்ல. ஆனா நமக்கு என்ன வேணும்னு கூட தெரியாம இருக்கிறது ரொம்ப பெரிய தப்பு. நம்ம வேலைகளையாவது நம்ம செஞ்சுக்குற அளவுக்காவது நம்ம நம்மளை பழகிக்கணும். அப்போ தான் இப்படிப்பட்ட சங்கடத்தை எல்லாம் தவிர்க்க முடியும்"
"இப்போ நீங்க சங்கடப்படுறீங்களா?" என்றான் மலரவன்.
"ரொம்ப சங்கடமா தான் இருக்கு. எனக்கு தேவையானதை கூட எனக்கு எடுத்து வைக்க தெரியல. உண்மைய சொல்லப் போனா, எனக்கு என்னென்ன வேணும்னு கூட எனக்கு தெரியல"
"நீ மாறனை ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கேன்னு தெரியுது, மின்னல்" என்றார் வடிவுக்கரசி.
ஒன்றும் கூறாமல் புன்னகை புரிந்தார் மின்னல்கொடி.
"உண்மை தான் கா. அவளால தான் நான் இப்படி இருக்கேன். அவ எந்த வேலையையும் எப்பவுமே என்னை செய்ய விட்டதே இல்ல" என்றார் மணிமாறன்.
"அப்பா, ரொம்ப அப்பாவி மாதிரி பேசாதீங்க. நீங்க அம்மாவை எப்படி எல்லாம் சுத்தல்ல விடுவீங்கன்னு அவங்களுக்கு மட்டும் தான் தெரியும்" என்று சிரித்தான் மலரவன்.
சங்கடத்தில் நெளிந்தார் மணிமாறன்.
பொருட்களை அடுக்கி முடித்த மலரவன், அந்த பெட்டியை மூடி ஓரமாய் வைத்தான்.
"முடிஞ்சிடுச்சா?" என்றார் மணிமாறன்.
"முடிஞ்சிடுச்சு. உங்களுக்கு நாலு நாளைக்கு வேண்டிய எல்லா திங்ஸும் அதுல இருக்கு"
"ரொம்ப தேங்க்ஸ் மலரா"
"மை பிளஷர்... "
"மகிழனை எங்க ஆள காணோம்?" என்றார் மணிமாறன்.
"கீர்த்தி வீட்டை விட்டு போனதுக்கு பிறகு நான் அவனை இன்னும் பாக்கல" என்றார் மின்னல்கொடி.
"அவன் வருவான்" என்ற மலரவனை குறுகுறுவென பார்த்தார் மணிமாறன்.
"அவன் ஆஃபீஸ்ல இருக்கான்" என்றான் மலரவன்.
"ஒ... அவன் ஆபிசுக்கு போயிட்டானா?" என்றார் மின்னல்கொடி
ஆம் என்று தலையசைத்தான் மலரவன்.
அவன் இவ்வளவு நேரம் செய்ததையெல்லாம் அமைதியாய் கவனித்துக் கொண்டிருந்த பூங்குழலி ஒன்றை கவனித்தாள். மலரவன் அவனது தந்தையை கிண்டல் செய்தான், சிரித்தான், சகஜமாய் பேசினான் ஆனாலும் அவனிடம் ஏதோ ஒன்று குறைந்தது.
"மலரா, வா போய் சாப்பிடலாம்" என்றார் மணிமாறன்.
"நான் தண்டபாணி கிட்ட சாப்பாட்டை இங்கேயே எடுத்துக்கிட்டு வர சொல்லி இருக்கேன். எல்லாரும் அம்மா கூட சேர்ந்து சாப்பிடலாம்" என்றான் அவன்.
அதை கேட்ட மின்னல்கொடி, இதமாய் புன்னகைத்தார். அவர்களுடைய சாப்பாட்டை கொண்டு வந்தான் தண்டபாணி. பூங்குழலியை ஏறிட்டான் மலரவன். அவன் பார்வையை புரிந்து கொண்ட பூங்குழலி, அனைவருக்கும் உணவு பரிமாறினாள். அவர்கள் அனைவரும் பேசியபடி சாப்பிட்டார்கள்.
"அம்மாவுக்கு கால் சரியாகிற வரைக்கும், நம்ம எல்லாரும் ஒன்னா இங்கேயே டின்னர் சாப்பிடலாம்" என்றான் மலரவன்.
அனைவரும் சரி என்றார்கள்.
சாப்பிட்டு முடித்து, தங்கள் அறைக்கு வந்தார்கள் மலரவனும், பூங்குழலியும். பூங்குழலி அவனை அமைதியாய் கவனித்துக் கொண்டிருந்தாள். மலரவன், மலரவனை போல் இல்லாமல், முற்றிலும் மாறுபட்டு காணப்பட்டான். கட்டிலில் படித்துக் கொண்ட அவன், விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அருகில் வந்து அமர்ந்த பூங்குழலி அவனை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து சிறிதாய் புன்னகைத்தான் மலரவன்.
"என்ன பிரச்சனை?" என்றாள் அவள் கவலையோடு.
ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்து குறுநகை புரிந்தான் மலரவன். அவனது அந்த ஜாடையை நம்பாத அவள், தன் கண்களை சுருக்கினாள்.
"எனக்கு ஒன்னும் இல்ல" என்றான் அவன்.
*நான் நம்பவில்லை* என்பது போல் தலையசைத்தாள் அவள். தன் கையை நீட்டி அவளை *என்னிடம் வா* என்பது போல் தலையசைத்தான் அவன். அவள் அவன் அருகில் வந்ததும் அவளை தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான்.
"என்ன ஆச்சுங்க? எதுக்காக ஒரு மாதிரியா இருக்கீங்க?"
"ஒரு மாதிரியாவா இருக்கேன்?"
"ஆமாம்"
"நாளைக்கு எல்லாம் சரியாயிடும்"
"ஏதாவது பிரச்சனையா?"
"ஆமாம். பிரச்சனை தான்"
தன் தலையை உயர்த்தி அவனை அவள் பார்க்க, அவன் லேசாய் புன்னகைத்தான்.
"என்னால உங்களுக்கு இதுல எதுவும் ஹெல்ப் பண்ண முடியாதா?" என்றாள்.
முடியாது என்பது போல் அவன் தலையசைக்க, பூங்குழலியின் முகம் சோகமாய் மாறியது. தன்னை தேற்றிக்கொண்ட அவள்,
"ஒன்னும் கவலைப்படாதீங்க. எது உங்களை கவலையா வச்சிருக்குன்னு எனக்கு தெரியல. பிரச்சனை எதுவா வேணும்னாலும் இருக்கட்டும். நீங்க கண்டிப்பா அதை செஞ்சு முடிப்பீங்க. உங்களுக்கு முன்னாடி இருக்கிற பிரச்சனை ஒன்னுமே இல்லாம போகும்"
"விஷயத்தை உன்கிட்ட சொல்லாம மறைச்சு வச்சிருக்கிறதுக்காக என் மேல உனக்கு கோவமா?"
"இல்ல. என்கிட்ட மறைச்சி வச்சிருக்கீங்கன்னா, அதுக்கு சரியான காரணம் இருக்கும்னு நான் நம்புறேன்"
"தேங்க்ஸ், என்னை நம்புறதுக்காக"
"உங்க அப்பா உங்களை கண்ணை மூடிக்கிட்டு நம்புறதை நான் பாக்குறேன். அவருக்கு உங்க மேல கொஞ்சம் கூட சந்தேகமே இல்ல. உங்களுக்கு வைஃபா இருந்துகிட்டு, உங்களை நம்புற விஷயத்துல, நானும் அவரை ஃபாலோ பண்ணனும்னு நினைக்கிறேன்"
"தேவையில்ல.... நான் நிறைய பிரச்சனைகளை சால்வ் பண்றதை அவர் பார்த்திருக்காரு. அதனால தான் அவர் என்னை அவ்வளவு நம்புறாரு. உனக்கு அப்படிப்பட்ட அனுபவம் கிடைக்கிற வரைக்கும், நீ கண்ணை மூடிக்கிட்டு அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்ல"
"நான் கான்ஃபிடண்டா தான் இருக்கேன்"
"இன்னும் ரெண்டு நாள்ல என்ன விஷயம்னு நான் உனக்கு சொல்றேன்"
"என்கிட்ட நீங்க சொல்லலைனாலும் எந்த பிரச்சனையும் இல்ல"
"பூங்குழலி, ஒரு விஷயத்தை ஞாபகம் வச்சுக்கோ. நான் உன்கிட்ட எதையும் வேணும்ன்னு மறைச்சு வைக்க மாட்டேன். அப்படி செய்யணும்னு எனக்கு எந்த எண்ணமும் கிடையாது. அதை நீ புரிஞ்சிக்குவேன்னு நினைக்கிறேன்"
"எனக்கு தெரியும். நம்ம ஒருத்தரை ஏமாத்தணும்னு நினைக்கும் போது தான் அப்படி எல்லாம் செய்வோம். நீங்க அப்படி செய்ய மாட்டீங்க..."
"ம்ம்ம், நான் நாளைக்கு விடியற்காலையில அப்பாவை ஏர்போர்ட்ல டிராப் பண்ணுறதுக்கு போகணும். அங்கிருந்து வீட்டுக்கு வர மாட்டேன். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அதனால அப்பாவை விட்டுட்டு, அங்கிருந்து அப்படியே கிளம்பி போயிடுவேன்"
சரி என்று தலையசைத்த பூங்குழலி,
"சரி, அப்படின்னா சீக்கிரம் படுத்து தூங்குங்க. காலையில உங்களுக்கு எழுந்துக்க முடியாம போகப் போகுது..." என்றாள்.
"ம்ம்ம்"
கண்களை மூடிய பூங்குழலி,
"நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?" என்றாள்.
"என்ன கேட்கணும் கேளு"
"ஏன் எப்பவும் என் பெயரை முழுசா சொல்றீங்க? நீங்க மத்தவங்களை மாதிரி என்னை குழலின்னு கூப்பிட்டதே இல்லையே..."
"ஏன், அப்படி கூப்பிட்டா உனக்கு பிடிக்குமா?"
"அப்படி இல்ல. பெரும்பாலும் என்னை எல்லாரும் குழலின்னு தான் கூப்பிடுவாங்க. ஆனா நீங்க மட்டும் தான், ஒவ்வொரு தடவையும் என் பெயரை முழுசா பூங்குழலின்னு கூப்பிடுறீங்க"
"ஏன்னா, நம்ம பேர்ல இருக்கிற பொருத்தத்தை உடைக்க வேண்டாம்னு நான் நினைக்கிறேன்"
"என்ன பொருத்தம்?"
"பூங்குழலினா பூ மாதிரி மென்மையான கூந்தலை உடையவள்ன்னு அர்த்தம். நான் மலரவன்... பூவுக்கு இன்னொரு பேர் மலர்... நம்ம ரெண்டு பேரோட பேருக்கும் பொருத்தத்தை கொடுக்கிற அந்த பூவை உன் பேரில் இருந்து எடுக்க நான் விரும்பல" என்றான் மலரவன்.
"எல்லா விஷயத்தையும் இப்படி தான் நீங்க ஆழ்ந்து யோசிப்பீங்களா?"
"என் மனசுக்கு நெருக்கமான விஷயத்தை ஆழமா யோசிக்கிறது என் வழக்கம்"
"உங்க லாஜிக் படி பார்த்தா, *குழலில், மலரை* சூட முடியும் தானே?"
"ஆமாம் முடியும் தான்... உன்னை நான் குழலின்னு கூப்பிடனும்னு நீ விருப்பப்பட்டா, நான் அப்படி கூப்பிடுறேன்" புன்னகைத்தான் மலரவன்.
"வேண்டாம். நீங்க எப்பவும் போலவே என்னை கூப்பிடுங்க"
புன்னகையுடன் அவனை அணைத்துக் கொண்டாள் பூங்குழலி. வெகு சீக்கிரமே அவள் உறங்கிப் போனாள். ஆனால் மலரவனுக்கு தூக்கமே வரவில்லை. அவன் எடுத்துக் கொண்டிருக்கும் காரியத்தை செய்து முடிக்கும் வரை அவனுக்கு தூக்கம் வரப்போவதில்லை.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro