Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

37 பிறந்தநாள் பரிசுகள்

37 பிறந்தநாள் பரிசுகள்

மெட்ராஸ் பெனிஃபிட் ஃபண்ட் லிமிடெட் மேலாளரிடமிருந்து மலரவனுக்கு அழைப்பு வந்தது. அந்த எண்ணை பார்த்து கண்களை சுருக்கிய அவன், அந்த அழைப்பை ஏற்று,

"சொல்லுங்க சார்" என்றான்.

"சார் நாங்க பெரிய பிரச்சனையில மாட்டிக்கிட்டு இருக்கோம்" என்றார் மேலாளர்.

"என்ன பிரச்சனை சொல்லுங்க"

"உங்க மாமியாருக்கு எங்க மேல சந்தேகம் வந்திருக்கு சார்"

சில நொடி திகைத்து நின்ற மலரவன்,

"சந்தேகப்படுறாங்கன்னு எதை வச்சு சொல்றீங்க?" என்றான்.

"அவங்க இங்க வந்திருக்காங்க. அவங்க ஹஸ்பண்ட் எங்க கிட்ட போட்ட அமௌன்ட்க்காண அக்கவுண்ட்ஸ் டீடைல் எல்லாம் கேக்குறாங்க சார்"

மலரவன் அதிர்ச்சி அடைந்தான். எதற்காக சிவகாமி இப்படியெல்லாம் செய்கிறார்? இதைத் தெரிந்து கொண்டு அவர் என்ன செய்யப் போகிறார்?

"எங்களுக்கு என்ன பண்றதுன்னு தெரியல சார்"

"நீங்க அவங்களை எப்படியாவது ஹேண்டில் பண்ண பாருங்க"

"நாங்க முயற்சி பண்ணோம் சார். ஆனா நாங்க சொல்ற எதையும் கேட்க அவங்க தயாராக இல்ல"

"சரி அவங்க என்ன சொல்றாங்க?"

"எங்ககிட்ட பதில் இல்லாத நிறைய கேள்வி கேட்கிறாங்க சார்"

"அவங்க இப்ப எங்க இருக்காங்க?"

"என்னோட ரூமுக்கு வெளியில தான் சார் உட்கார்ந்து இருக்காங்க"

"அவங்களுக்கு என்ன வேணுமாம்?"

"தில்லைராஜனோட அக்கௌன்ட் டீடைல்ஸ் கேக்குறாங்க சார்"

"ஆனா ஏன்? நீங்க அவங்க கிட்ட அதை கொடுக்க முடியாது, அது உங்க ரூல்ஸ்க்கு எதிரானதுன்னு சொல்லுங்க"

"சொன்னோம் சார், அவங்களுக்கு தெரியாம அவங்களோட புருஷன் இவ்வளவு பணத்தை சேர்த்து வைச்சிருக்க முடியாதுன்னு சொல்றாங்க"

பெருமூச்சு விட்டான் மலரவன்.

"சார், நம்ம நினைச்ச மாதிரி, உங்க மாமியார் அவ்வளவு லேசுப்பட்டவங்க இல்ல சார். அவங்க அதிகமாவே சந்தேகப்படுறாங்க" என்று தலையை உயர்த்தியவர், அங்கு சிவகாமி நின்று கொண்டிருப்பதை பார்த்து மென்று விழுங்கினார்.

அவரை நோக்கி தன் கையை நீட்டினார் சிவகாமி. இதற்கு மேல் தான் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று புரிந்து கொண்ட மேலாளர், அவரிடம் கைபேசியை கொடுத்தார். அந்த கைபேசியை தன் காதில் வைத்தார் சிவகாமி.

"அவங்களை நாளைக்கு வர சொல்லுங்க. உங்களுக்கு அந்த ஃபைலை தேட டைம் வேணும்னு சொல்லுங்க" என்றான் மலரவன்.

"தேவையில்ல மலர்... நான் எதை தெரிஞ்சுக்க வந்தேனோ, அதை தெரிஞ்சுகிட்டேன்" என்றார் சிவகாமி.

சிவகாமியின் குரலை கேட்ட மலரவன் திகைத்து நின்றான்.

"இதுக்கு பின்னாடி நீங்க தான் இருப்பீங்கன்னு நான் சந்தேகப்பட்டேன். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா மலர், எந்த ஒரு பைனான்ஸ் கம்பெனியும், நம்ம பணம் கொடுக்கிறது சரியான ஆள் கிட்ட தானான்னு சரியா தெரிஞ்சுக்காம பணத்தை கொடுக்கவே மாட்டாங்க. அதுவும் பெரிய தொகைன்னு வரும் போது, அவங்க எத்தனை கேள்விகளை துருவித் துருவி கேட்பாங்கன்னு எனக்கு தெரியும். ஆனா இவங்க என்னை அப்படி எதுவும் கேட்கல"

தாங்கள் எந்த இடத்தில் கோட்டை விட்டோம் என்று புரிந்தது மலரவனுக்கு. சிவகாமி இவ்வளவு கூர் புத்தி உடையவராகவும், அவன் அனுப்பிய அலுவலர்கள் இவ்வளவு பெரிய தவறு செய்யக் கூடியவர்களாக  இருப்பார்கள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

"ஆன்ட்டி, நான் ஏன் இப்படி செஞ்சேன்னா..."

"அது எனக்கு தெரியும். மகிழன் பூங்குழலியை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டான். ஏன்னா, அவகிட்ட எதுவும் இல்ல. அவளுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கணும்னு அப்படி செஞ்சீங்க. சரி தானே?"

"நான் இதை பூங்குழலிக்காக மட்டும் செய்யல. உங்களுக்கும் நம்பிக்கையை கொடுக்கணும்னு தான் நான் செஞ்சேன். என்னை தப்பா எடுத்துக்காதீங்க"

"உங்களை நான் எப்படி தப்பா நினைப்பேன் மலர்? உண்மையை தெரிஞ்சிக்கணும்னு நெனச்சேன். அவ்வளவு தான். ஏன்னா, என் புருஷனைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். அவர் *உருப்படியா* ஏதாவது செஞ்சிருந்தா, நிச்சயம் என்கிட்ட சொல்லி இருப்பாரு. ஏன்னா, தான் செஞ்ச தப்பை தான் அவர் வழக்கமா என்கிட்ட மறைப்பார்"

"என்ன தப்பு?"

"எல்லாரையும் ரொம்ப சுலபமா நம்பிடுவாரு. அவரோட நல்ல மனசை அவரோட சித்தி மகன் தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டான்"

"நீங்க யாரை பத்தி பேசுறீங்க ஆன்ட்டி?"

"கைலாசத்தை பத்தி தான் பேசுறேன். அவருக்காக தானே இவர் ஷ்யூரிட்டி கையெழுத்து போட்டாரு...!"

"அவர் இப்போ எங்க இருக்காரு? உங்களுக்கு அவர் இருக்கிற இடம் தெரியுமா?"

"இல்லப்பா. அவர் சென்னையில் தான் இருந்தாரு. பூங்குழியோட அப்பா இறந்த பிறகு, நான் அவரை எங்கேயும் பார்க்கவே இல்ல"

"உங்களோட சொந்தக்காரங்க மூலமா அவர பத்தின டீடெயில்ஸை உங்களால வாங்க முடியுமா?"

"முயற்சி பண்ணா வாங்கலாம். ஆனா அது உங்களுக்கு எதுக்கு?"

"தெரிஞ்சுக்க தான் கேட்டேன்"

"ஓ..."

"ஆன்ட்டி ப்ளீஸ், இந்த விஷயத்தை பத்தி தயவு செய்து பூங்குழலி கிட்ட எதுவும் சொல்லிடாதீங்க"

பெருமூச்சு விட்ட சிவகாமி,

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல மலர்" என்றார்.

"இந்த பணத்தை ஏத்துக்கோங்க, ஆன்ட்டி"

"இந்த பணத்தை வச்சுக்கிட்டு நான் என்ன செய்யப் போறேன், மலர்? அவரே போனதுக்கு பிறகு இந்த பணம் எதுக்கு?"

"அவர் இருந்திருந்தா இந்த பணம் உங்களுக்கு தேவைப்பட்டிருக்காது, ஆன்ட்டி. அவர் இல்லாத நிலையில, உங்களுக்கு நிச்சயம் இது தேவை. அதோட மட்டுமில்லாம, அங்கிளை பத்தி எகத்தாளமா பேசுறவங்க வாயை நீங்க அடைக்கலாம் இல்லையா? அவங்க அப்படி பேசுறதை கேட்கும் போது உங்களுக்கு வருத்தமா தானே இருக்கு?"

நெகிழ்ந்து போனார் சிவகாமி.

"வெளியில் இருந்து பாக்குறவங்களுக்கு அவர் தற்கொலை பண்ணிக்கிட்டார் அப்படிங்கறது மட்டும் தான் தெரியும். ஆனா, அவர் கடைசி நாள்ல எப்பேர்ப்பட்ட மரண வேதனையை அனுபவிச்சு இருப்பார்னு யாருக்கும் தெரியாது. தன்னோட தம்பியை நம்பி ஏமாந்ததுக்காக அவருக்கு எவ்வளவு குற்ற உணர்ச்சி இருந்திருந்தா, அவர் தற்கொலை செஞ்சுகிட்டு இருப்பார்? தன்னோட மகளை காலணா இல்லாம விட்டுட்டு போறோமேன்னு அவர் தன்னைத்தானே சபிச்சுக்கிட்டு இருந்திருப்பார்... நீங்க நிம்மதியா இருந்தா, அவர் ஆத்மா சாந்தி அடையும் ஆன்ட்டி"

சிவகாமிக்கு தொண்டையை அடைத்தது.

"ரொம்ப தேங்க்ஸ் மலர். நானே கூட அவர் மேல கோவமா தான் இருந்தேன்"

"எனக்கு தெரியும். அதுல எந்த தப்பும் இல்ல. அதுக்காக நீங்க வருத்தப்படாதீங்க"

"ம்ம்ம்"

"வீட்டுக்கு போங்க ஆன்ட்டி" 

"ம்ம்ம்ம்" அழைப்பை துண்டித்தார் சிவகாமி.

நிம்மதி பெருமூச்சு விட்டான் மலரவன். அவனது திட்டம் மண்ணை கவி விட்ட போதிலும், சிவகாமி அவனை புரிந்து கொண்டதில் அவனுக்கு நிம்மதி தான்.

இன்னொரு விஷயத்தை எண்ணிய போது கூட அவனுக்கு திருப்தியாய் இருந்தது. வெகு நாட்களாய் தன் மனதில் தேக்கி வைத்திருந்த பூங்குழலியின் மீதான  காதலை, அவன் பூங்குழியிடம் கூறிவிட்டான். அதனால் தன் மனம் லேசானது போல உணர்ந்தான்.

மறுபுறம், அவனது காதலை எண்ணி வியப்பில் ஆழ்ந்திருந்தாள் பூங்குழலி. அவன் தன்னை ஆரம்பத்தில் இருந்தே காதலித்தான் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. அவர்களுக்கு இடையில் நிகழ்ந்த அந்த முதல் உரையாடலை அவள் எண்ணிப் பார்த்தாள். அவனது புதிய கோட்டை ஐஸ்கிரீமை கொட்டி அவள் பாழாகி விட்டாள். தில்லைராஜன் அவளை திட்டாமல் இருக்க, பொய் கூறி அவளைக் காப்பாற்றினான். அவளது பிறந்த நாளன்று அவளுக்கு நிச்சயம் வாழ்த்து கூறுவேன் என்று கூறியிருந்தான். ஆனால் அவன் அதை செய்யவில்லை. ஒருவேளை, அவளுக்கும் மகிழனுக்குமான திருமண பேச்சுகள் நிகழாமல் இருந்திருந்தால், அவன் அவளுக்கு வாழ்த்து கூறியிருப்பானோ? அவளுக்கு ஏதோ நினைவுக்கு வர, துணுக்குற்று தன் அறையை நோக்கி ஓடினாள்.

இதற்கிடையில்,

தன் அலுவலகத்தில் நடந்த ஒரு மீட்டிங்கில் இருந்தார் குமரேசன். தனது நிறுவனத்தின் டீலர்ஷிப்பை எப்படி அதிகப்படுத்துவது என்பது பற்றியான ஆலோசனைக் கூட்டம் அது.

திடீரென்று, அந்த ஆலோசனைக் கூடத்தின் கதவு, டமார் என்று திறந்தது. அந்த கூட்டத்தில் இருந்த அனைவரும் கதவை நோக்கி திரும்பினார்கள். அவர்களது முதலாளியின் மருமகன், கையில் பிராந்தி பாட்டிலுடன் நின்று கொண்டிருப்பதை பார்த்து அங்கிருந்தவர்கள் அனைவரும் திகைப்படைந்தார்கள். திகிலுடன் தன் நாற்காலியை விட்டு எழுந்து நின்றார் குமரேசன்.

"வணக்கம் மாமனாரே..." என்றான் மகிழன் தன் உடலை லேசாய் வளைத்து, வடிகட்டிய குடிகாரனை போல்.

"மகிழா, நீ இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?" என்றார் குமரேசன் பல்லை கடித்துக் கொண்டு.

"ஷ்ஷ்ஷ்... நீ என்னை கேள்வி கேட்கக்கூடாது. இங்க வர்ற எல்லா உரிமையும் எனக்கு இருக்கு. நான் உன் மாப்பிள்ளை. எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு என்னை மடக்குனேன்னு மறந்துட்டியா?"

அங்கிருந்தவர்கள், தங்கள் அருகில் இருந்தவர்களுடன் கிசுகிசுக்க துவங்கினார்கள்.

"ஹலோ ஜென்டில்மென்... இவரு என்னை எப்படி மடக்கினாருன்னு உங்களுக்கு தெரியுமா?" என்றான் மகிழன்.

அவனை நோக்கி விரைந்து சென்ற குமரேசன், அவன் தோள்களை பற்றி கொண்டு,

"மகிழன், பிஹேவ் யுவர்செல்ஃப்" என்றார்.

"எப்படி பிஹவ் பண்றது? உடம்புல வெறும் துண்டை மட்டும் கட்டிக்கிட்டு வந்து என் மேல விழுந்து, உங்க பொண்ணு என்கிட்ட பிஹேவ் பண்ணாளே... அப்படியா...?"

ஆத்திரம் கொப்பளிக்க தன் கண்களை இறுக்க மூடினார் குமரேசன்.

"நான் சொல்றதை நம்புங்க ஜென்டில்மென்.... அவ துண்டு மட்டும் தான் கட்டிக்கிட்டு இருந்தா... வெறும் துண்டு... அது ஏன்னு உங்களுக்கு தெரியுமா? அவ டிரஸ்ல ஜூஸ் கொட்டிக்கிச்சாம்" என்று இடிஇடியென சிரித்தான்.

"மூணாவது மனுசங்க வீட்ல தங்கி இருந்த ஒரு பொண்ணு, குளிக்கப் போறதுக்கு முன்னாடி அந்த ரூம் கதவை சாத்தி தாழ்பால் கூட போடாம, குளிச்சிட்டு வெளியில வரும் போது, வெறும் துண்டை மட்டும் கட்டிக்கிட்டு வெளியில் வருவாளா?"

"மகிழன்..." என்று கத்தினார் குமரேசன்.

"என்ன மாமனாரே... உன் பொண்ணுக்கு ஆம்பளைங்க முன்னாடி எப்படி போய் நிக்கணும்னு கூட நீ சொல்லி தரலையா?"

"இவன் குடிச்சிருக்கான்" என்றார் அங்கு இருந்தவர்களை பார்த்து குமரேசன்.

"ஆமாம்... அதுல என்ன புதுசு? நான் குடிப்பேன்னு உனக்கு தான் தெரியுமே... அது சரி... எதுக்காக என் ஃப்ரெண்டுக்கு நீ இருபத்தைந்து  லட்சம் கொடுத்த?"

சங்கடத்தில் தடுமாறினார் குமரேசன்.

"வெறும் துண்டு மட்டும் கட்டிக்கிட்டு உன் பொண்ணு காத்திருந்த ரூமுக்கு, என்னை கூட்டிக்கிட்டு வந்து விட்டதுக்காக அவனுக்கு அந்த பணத்தை நீ குடுத்தியா?" என்றான் எகத்தாளமாய்.

"மகிழன், இது தான் உன்னோட லிமிட். மரியாதையா என் ஆஃபீஸ்ல இருந்து வெளியில போ" உறுமினார் குமரேசன்.

"அதையே தான் நானும் சொல்றேன். என்னோட வாழ்க்கையில இருந்து உன் மகளை மரியாதையா வெளியில போக சொல்லு. இல்லன்னா..." என்று பேசுவதை நிறுத்திவிட்டு, சிரித்தபடி அங்கிருந்து நடந்தான் மகிழன்.

திகில் அடைந்து நின்றார் குமரேசன்.

"டிஸ்பெர்ஸ்..." என்றார் அங்கிருந்தவர்களை நோக்கி. அவர்கள் ஒவ்வொருவராய் அங்கிருந்து கலைந்து செல்ல துவங்கினார்கள்.

கோபமும் இயலாமையும் ஒரு சேர நின்றிருந்தார் குமரேசன். மகிழன் அவரை இப்படி அவமானப்படுத்துவான் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. அவர் மகிழனை குறைத்து எடை போட்டு விட்டார். அவர் நினைத்தது போல் மகிழன் இல்லை. அவனுக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்தது? எந்த தைரியத்தில் அவன் அவரது அலுவலகத்திற்கு வந்தான்? மணிமாறன் மீது அவனுக்கு மரியாதை இல்லையா? மணிமாறன் அவனுக்கு துணை நிற்கவில்லை என்று தெரிந்த பிறகும், அவன் அவரைப் பற்றி ஏன் யோசிக்கவில்லை? மணிமாறனிடம் மகிழணை பற்றி பேசுவது என்று தீர்மானித்தார் குமரேசன். அவர் ஒருவரால் மட்டும் தான் அவனை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் நம்பினார்.

.........

மலரவன் மணிமாறனின் அறைக்கு செல்வதை பார்த்தாள் பூங்குழலி. இப்போதைக்கு மலரவன் தங்கள் அறைக்கு வர மாட்டான் என்று அவளுக்கு நிச்சயமானதால், தங்கள் அறையை நோக்கி விரைந்தாள். கதவை சாத்திவிட்டு அலமாரிக்குச் சென்றவள், அங்கிருந்த ஒவ்வொன்றையும் கவனமாய் ஆராய்ந்தாள். அவள் எதிர்பார்த்தபடி எதுவும் கிடைக்காததால் அலுப்புடன் பெருமூச்சு விட்டாள்.

அப்போது அந்த அலமாரியின் மேலே வைக்கப்பட்டிருந்த பெட்டி அவள் கண்ணில் பட்டது. ஒரு நாற்காலியை எடுத்து வந்து போட்டு அதன் மீது ஏறி நின்று அந்த பெட்டியை கீழே இறக்கினாள். அதை திறந்து பார்த்த போது, அவள் எதிர்பார்த்த, மலரவனின் மயில் நீல நிற கோட்டு அதில் இருந்தது. அவனது பெற்றோரின் திருமண நாளன்று அவன் அணிந்திருந்த அதே கோட்டு தான் அது. அதை கையில் எடுத்தவள், அந்தக் கோட்டில் இன்னமும் ஐஸ்கிரீம் கரை அப்படியே இருந்ததை பார்த்து விழி விரித்தாள். எண்ணங்களின் கலவையாய் அதை வருடி கொடுத்தாள். அந்தப் பெட்டியில் ஒரு கைப்பையும், பார்பி பொம்மையும் இருந்தது. அந்த கைப்பையை அவள் எடுத்த போது, அதன் உள்ளிருந்து சத்தம் வந்தது. அந்தப் பையில் ஏதோ இருப்பதை உணர்ந்து, திறந்து பார்த்தாள். ஒரு வாழ்த்து அட்டை, உதட்டுச் சாயம், பேனா, மணி பர்ஸ், மற்றும் ஒரு தங்க மோதிரம் அதில் இருந்தது.

அந்த வாழ்த்து அட்டையை திறந்து படித்தவுடன், அவளது மெல்லிய  இதழ்கள் புன்னகையுடன் விரிந்தன.

*நான் இதுவரை சந்தித்ததிலேயே மிகவும் சுவாரஸ்யமான பெண்ணுக்கு, என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்* என்று எழுதி இருந்தது.

அந்த வாழ்த்து அட்டையை, தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கண்களை மூடி புன்னகைத்தாள் பூங்குழலி. அப்பொழுது கதவை திறக்கும் சத்தம் கேட்டு, கண்களை திறந்தாள். அவளை பார்த்தபடி, திகைப்புடன் நின்றிருந்தான் மலரவன்.  அந்த வாழ்த்து அட்டையை அணைத்துக் கொண்டு, அப்படியே நின்றாள். அதை கீழே வைக்க தோன்றவில்லை அவளுக்கு.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro