Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

33 சகோதரர்கள்

33 சகோதரர்கள்

காசோலை குறித்து பூங்குழலி திருப்தி அடைந்து விட்டாள். ஆனால் சிவகாமியால் திருப்தி அடைய முடியவில்லை. அவருக்கு தன் கணவனை பற்றி நன்றாகவே தெரியும். தில்லைராஜன் எதையுமே அவரிடம் இருந்து மறைத்ததில்லை, விஷயம் எவ்வளவு கடுமையானதாய் இருந்தாலும் சரி. அப்படி இருக்கும் போது, தனது சேமிப்பு குறித்து அவர் எப்படி அவரிடம் கூறாமல் போனார்?

உணவருந்த அனைவரும் உணவு மேஜையில் கூடினார்கள். மகிழனும், கீர்த்தியும் கூட அங்கு வந்தார்கள். சிவகாமியை கண்ட மகிழன் சங்கடத்திற்கு உள்ளானான். ஆனால் சிவகாமியோ அவனை சட்டை செய்யவே இல்லை. அதை மலரவன் கவனித்தான். அனைவருக்கும் உணவு பரிமாறி விட்டு, மின்னல்கொடியும், பூங்குழலியும், தத்தம் கணவர்களின் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்கள்.

"எனக்கு தில்லையை நெனச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு. எவ்வளவு யோசனையோட இருந்திருக்கான் பாரு" தில்லைராஜனை வாயார புகழ்ந்தார் மணிமாறன்.

அவர் ஏன் அப்படி கூறினார் என்று மகிழன் ஒருவனைத் தவிர அனைவரும் புரிந்து கொண்டார்கள். அந்த காசோலை குறித்த விவகாரம் நடந்த போது அவன் வீட்டில் இல்லை அல்லவா? அவன் குழப்பம் அடைந்தான். தன் குடும்பத்தை நிராதரவாய் விட்டுச் சென்ற ஒரு மனிதனைப் ஏன் தன் தந்தை புகழ்கிறார்? எல்லாவற்றையும் தான தர்மம் செய்து ஒழித்து அழித்த மனிதனைப் பற்றி புகழ என்ன இருக்கிறது? அவனுக்கு புரியவில்லை.

"கடைசியில, சிவகாமியும், பூங்குழலியும் கோடீஸ்வரங்களா ஆயிட்டாங்க" என்றார் மணிமாறன் வேண்டுமென்றே.

பூங்குழலியை ஒன்றும் இல்லாத பிச்சைக்காரி என்று கூறி  நிராகரித்ததற்காக, அவர் மகிழனை வேண்டுமென்றே குத்திக் காட்டுகிறார் என்று மலரவனும் புரிந்து கொண்டான்.

பூங்குழலிக்கு சங்கடமாய் போனது. ஏனென்றால், அவரது உள்நோக்கத்தை அவளும் புரிந்து கொண்டாள்.

"ஆமாம்பா, தில்லை அங்கிள் பத்து கோடி ரூபாயை டெபாசிட் பண்ணி வச்சிருப்பாருன்னு நான் நினைச்சு கூட பாக்கல. இந்த பணத்தை அவர் எப்படி மறந்து போனாருன்னு தெரியல" என்றான் மலரவன், 'கையில காலானா இல்லாத உனக்கு ஏன் இவ்வளவு கோபம்?' என்று பூங்குழலியை கேட்ட கீர்த்தியை கவனித்தவாறு. 

அதைக் கேட்ட மகிழன் வியந்து போனான். பூங்குழியை தட்டிக் கழித்ததற்காக வருத்தப்பட வேண்டுமா வேண்டாமா என்று அவனுக்கு புரியவில்லை. வருத்தப்படக் கூடாது என்று அவன் நினைத்த போதும், அவனால் வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. மிக மோசமான வாழ்க்கைத் துணை கிடைக்க பெற்ற அவனால் எப்படி வருத்தப்படாமல் இருக்க முடியும்? அவன் தலை குனிந்து கொண்டான்.

அவனுக்காக மலரவன் வருத்தப்படவில்லை. அவன் ஏன் வருத்தப்பட வேண்டும்? மகிழன்  பூங்குழலியை நிராகரித்ததால் தானே, அவன் அவளை திருமணம் செய்து கொள்ள முடிந்தது? அவன் யோசித்தது அதை மட்டும் தான்.

சாப்பிட்டு முடித்த பின்,

"நான் ஆன்ட்டியையும் அத்தையையும் அவங்க வீட்ல விட்டுட்டு வரேன்" என்றான் மலரவன்.

"நானும் உங்க கூட வரேன்" என்றாள் பூங்குழலி.

"வேண்டாம். நானும் மின்னலும் போயிட்டு வறோம்" என்றார் மணிமாறன்.

"ஆமாம், நாங்க போறோம்" என்றார் மின்னல்கொடி.

மலரவன் பூங்குழியை பார்க்க, அவள் சரி என்று தலையசைத்தாள். சிவகாமியும், வடிவுக்கரசியும் மணிமாறன் மற்றும் மின்னல்கொடியுடன் கிளம்பிச் சென்றார்கள். சிவகாமி புறப்படும் முன், அவரது காசோலையை அவரிடமே வழங்கினான் மலரவன். அவர்களை வழி அனுப்பிவிட்டு, தங்கள் அறைக்கு வந்தாள் பூங்குழலி. ஆனால் மலரவன் அவர்கள் அறையில் இல்லை. அவன் ஸ்டடி ரூமில் மித்திரனுடன் கைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தான்.

அந்தப் பக்கம் சென்ற மகிழன், அவன் பேசியதை கேட்டு நின்றான்.

"நெஜமாவா சொல்ற? ராகேஷுக்கு  இருபத்தஞ்சு லட்சம் கொடுத்தது குமரேசனா?"

அதைக் கேட்ட மகிழன் அதிர்ச்சி அடைந்தான் என்று கூறத் தேவையில்லை.

"எதுக்காக குமரேசன் ராகேஷுக்கு இருபத்தஞ்சு லட்சம் கொடுத்தாரு? அவங்க ரெண்டு பேருக்கும் என்ன சம்மந்தம்?" தான் பேசுவதை மகிழன் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்த மலரவன், வேண்டுமென்றே அந்த கேள்வியை எழுப்பினான்.

அந்தப் பக்கம் கேட்டுக் கொண்டிருந்த மித்திரன், ஒன்றும் கூறாமல் அமைதியாக இருந்தான். அவனுக்கு தெரியும் மலரவன் எதற்காக தன்னிடம் அந்த கேள்வியை கேட்டான் என்று.

"ராகேஷுக்கு புது பிசினஸ் தொடங்க குமரேசன் பணம் கொடுத்தார்னு என்னால நம்பவே முடியல. எந்த ஒரு அஸ்ஸுரண்ஸும் இல்லாம, அவர் ராகேஷை எப்படி நம்பினாரு? அவருக்கு ராகேஷை பத்தி என்ன தெரியும்? அவன் ஆஃபீஸ்லயே குடிப்பான்னு மகிழன் என் கிட்ட சொல்லி இருக்கான். அவனைப் பத்தி ஒழுங்கா விசாரிக்காம எப்படி அவனுக்கு அவர் பணம் கொடுத்தார்?" மகிழன் இதைப் பற்றி எல்லாம் யோசிக்க வேண்டும் என்பதற்காகவே மலரவன் அவற்றை கூறினான்.

"மகிழனைப் பத்தி ராகேஷ் நம்மகிட்ட என்ன சொன்னான்னு உனக்கு ஞாபகம் இருக்கா?" என்ற கேள்வி மகிழன்னை ஆர்வமாக்கியது.

"சினிமா தியேட்டர்ல, குடிச்சிட்டு ஏதோ ஒரு பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்க மகிழன் முயற்சி பண்ணான்னு சொன்னான்ல? மகிழனுக்கு ரீசண்டா குடிக்கிற பழக்கம் ஏற்பட்டிருக்குன்னு சொன்னான். ஆனா மகிழன் என்கிட்ட சொன்னது ஆப்போசிட்டா இருக்கு. மகிழனை பத்தி ராகேஷ் சொன்னதை நான் நம்பல. இப்போ எனக்கு ராகேஷ் மேல சந்தேகம் அதிகமாகி இருக்கு. அவன் மகிழனுக்கு எதிரா ஏதோ செய்றான்னு எனக்கு தோணுது. என்னோட கல்யாணத்துல குமரேசன் குடும்பம் நடத்தின நாடகத்துல அவனோட பங்கு இருக்குமோன்னு நான் சந்தேகப்படுறேன்"

மகிழனுக்கு தூக்கி வாரி போட்டது.

"ஆமாம் மித்திரா... அவன் தான் அன்னைக்கு மகிழனை குடிக்க வச்சிருக்கான். கரெக்டா கீர்த்தி பாத்ரூமில் இருந்து வெளியில் வருறதுக்கு முன்னாடி, அவன் அந்த இடத்தை விட்டு கிளம்பிட்டான். சரியா, கல்யாணமான அதே ராத்திரி அவனுக்கு குமரேசன் இருபத்தஞ்சு 
லட்சம் கொடுத்து இருக்காரு. இதெல்லாம் என்ன?"

"மலரா, நீ மகிழனை நம்புறேன்னு சொல்லு" என்றான் மித்திரன்.

"நிச்சயமா நான் மகிழனை நம்புறேன்"

"அவனுக்கு அது தெரியணும். அப்போ தான் அவன் உன்கிட்ட ஏதாவது ஹெல்ப் வேணும்னா கூட கேட்பான்" என்றான் மித்திரன்.

"எது எப்படி இருந்தாலும், நான் மகிழன் கூட நிப்பேன். அவன் ஏமாத்தப்பட்டான்னு தெரிஞ்சா, யாரா இருந்தாலும் நான் விடமாட்டேன். எல்லார் முன்னாடியும் அவன் அவ்வளவு அவமானப்பட்டு இருக்கான்"

மலரவனின் வார்த்தைகள் மகிழனை உருகச் செய்தது. அவன் கேட்ட ஒவ்வொரு கேள்வியும், அவனுக்கு சரியாய் பட்டது. எதற்காக குமரேசன் ராகேஷுக்கு பணம் கொடுக்க வேண்டும்? அவர்களுக்கிடையில் என்ன சம்பந்தம்? தான் வேண்டாம் என்று கூறிய பின்னும், எதற்காக ராகேஷ் தன்னை விருந்தினர் அறைக்கு வலுக்கட்டாயமாய் அழைத்துச் செல்ல வேண்டும்? இது அனைத்தும் அவர்களது திட்டமா? இந்த விஷயத்தில் அவர்களுக்கு ராகேஷ் உதவினானா? ராகேஷின் ரத்தம் கொதித்தது. ஒருவேளை இதில் ராகேஷின் கை இருக்கும் என்றால், அவனை மகிழன் சும்மா விட போவதில்லை.

அழைப்பை துண்டித்து விட்டு வெளியே வந்த மலரவன், அங்கு மகிழன் நின்று கொண்டிருப்பதை பார்த்தான். அவனது முகத்தில் கலவரம் பரவிக் கிடந்தது. அவனுக்கு மகிழனை பார்க்கவே பாவமாக இருந்தது. ஆனாலும் அவனால் இதில் செய்யக்கூடியது எதுவும் இல்லை. ஏனென்றால், குமரேசன் குடும்பத்தினரால் தான் எப்படி ஏமாற்றப்பட்டோம் என்ற  உண்மையை மகிழன் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

"நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் மலரா"

சொல் என்பது போல் தலையசைத்தான் மலரவன்.

"இதெல்லாம் உண்மையா? குமரேசன் ராகேஷுக்கு இருபத்தஞ்சு  லட்சம் கொடுத்தாரா?"

"உண்மை தான். மித்திரனோட ஃபிரெண்ட்  ஒருத்தன் இன்வெஸ்டிகேஷன் டீம்ல இருக்கான். அவன் தான் மித்திரனுக்கு இந்த விஷயத்தை சொல்லி இருக்கான். ராகேஷ் சில டாக்குமெண்ட்ஸ்ல சைன் பண்ணி கொடுத்ததா சொன்னானாம்"

"என்ன சுத்த பைத்தியக்காரத்தனமா இருக்கு...?  ராகேஷ் கிட்ட தான் சொல்லிக்கிற மாதிரி எந்த சொத்தும் இல்லையே...! அவன் இருக்கிறது வாடகை வீட்டில் தானே? அப்புறம் எந்த டாக்குமெண்ட்ல அவன் சைன் பண்ணியிருக்கப் போறான்? அடிமை சாசனமா எழுதிக் கொடுத்தான்?" என்றான் மகிழன் வெறுப்புடன்.

"அந்த டாக்குமெண்ட்ல என்ன எழுதி இருக்குனு எனக்கும் தெரியல. ஒருவேளை நீ தெரிஞ்சுக்க விரும்பினா, நான் விசாரிக்க சொல்றேன்"

"குமரேசனுக்கும் ராகேஷுக்கும் என்ன சம்பந்தம்னு எனக்கு தெரியணும்"

"நானும் கூட அதை தெரிஞ்சுக்கணும்னு தான் நினைக்கிறேன். நம்ம குடும்ப விஷயத்தை அடுத்தவங்க தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிறதுல எனக்கு உடன்பாடு இல்ல" என்று ஒரு நிமிடம் நிறுத்திய மலரவன்,

"ஒருவேளை உன் மாமனாரோட உனக்கு நல்ல உறவு ஏற்படணும்னு நினைச்சா, எனக்கு அதுல எந்த பிரச்சனையும் இல்ல" என்றான்.

"மாமனாரா? அவனெல்லாம் ஒரு மனுஷனா? எவ்வளவு மோசமான ஆட்டம் ஆடி, என் மேல பழி சுமத்தி, அவன் பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சான் அந்த ஆளு. எனக்கு காரணம் தேவையில்ல. உண்மை தான் வேணும்"

"நான் உனக்கு அதை சொல்ல முயற்சி பண்றேன்"

"ப்ளீஸ் மலரா, தயவுசெய்து எப்படியாவது அதை மட்டும் கண்டுபிடிச்சி சொல்லு"

"சரி"

"எனக்கு நீ இன்னொரு உதவி பண்ண முடியுமா?"

மகிழன் அவனிடம் என்ன கேட்கப் போகிறான் என்று புரிந்து போனது மலரவனுக்கு. அவன் அதை கூறும் முன்பே,

"நான் இதைப் பத்தி அப்பா கிட்ட பேசுறேன்" என்றான்.

பிரமித்து போனான் மகிழன். இதைத் தான் அவன் மலரவனிடம் கேட்க விரும்பினான்.

"தேங்க்ஸ் மலரா"

தலையசைத்து விட்டு அங்கிருந்து தன் அறைக்கு சென்றான் மலரவன். எதையோ யோசித்த மகிழன், வீட்டை விட்டு வெளியேறினான்.

இரவு உடையை மாற்றிக் கொண்டு கட்டிலில் அமர்ந்து காத்திருந்த பூங்குழலி, மலரவனை பார்த்ததும்

"எங்க போனீங்க?" என்றாள்.

"ஸ்டடி ரூம்ல இருந்தேன்"

"ஓஹோ"

"ஏன்? நீ என்னை தேடினியா?"

"ஆமாம் "

"எதுக்கு?"

"அம்மாவையும் அத்தையையும் வீட்டில விடுறதுக்கு, நீங்களும் அங்கிள் ஆன்ட்டி கூட போயிட்டீங்களோனு நினைச்சேன்"

"உன்கிட்ட சொல்லாம நான் போவேனா?"

"எனக்கு எப்படி தெரியும்? நமக்கு நேத்து தானே கல்யாணம் ஆச்சு..."

"சரி, அதை இப்போ தெரிஞ்சுக்கோ... உன்கிட்ட சொல்லாம நான் எங்கேயும் போக மாட்டேன்"

"நான் இதை ஞாபகத்துல வச்சிக்குவேன்" என்று கூறிவிட்டு படுத்துக்கொண்டாள் பூங்குழலி.

"பை தி வே பூங்குழலி..."

அவனை நோக்கி திரும்பினாள் பூங்குழலி. அவளை பார்த்த மலரவன் ஒன்றும் கூறவில்லை.

"என்ன?"

"ஒன்னும் இல்ல..."

முகத்தில் கேள்விக்குறியை தாங்கி கட்டிலில் எழுந்து அமர்ந்தாள் பூங்குழலி.

"நீங்க ஏதாவது சொல்லனுமா?"

"ஏதாவது இல்ல, நிறைய சொல்லணும்"

"சொல்லுங்க"

"இப்போ இல்ல... நீ தூங்கு"

அவனும் கட்டிலுக்கு வந்து படுத்துக் கொண்டான். குழப்பத்துடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் பூங்குழலி.  அவளைப் பார்த்து புன்னகைத்த மலரவன்,

"குட் நைட்" கூறிவிட்டு கண்களை மூடிக்கொண்டான்.

அவனைப் பார்த்தபடி பூங்குழலியும் படுத்துக்கொண்டாள். அவனது முகத்தில் தவழ்ந்த புன்னகை அவளுக்குள் என்னவோ செய்தது. அவன் அவளிடம் கூற நினைப்பது என்ன? இப்படி மறைத்து வைப்பதற்கு பதிலாக, அவன் அதை வெளிப்படையாய் கூறிவிட்டால் தேவலாம் என்று தோன்றியது. அவளும் தன் கண்களை மெல்ல மூடினாள்.

இருவரும் திடுக்கிட்டு கட்டிலின் மீது எழுந்து அமர்ந்தார்கள், மகிழனின் உரத்த குரலைக் கேட்டு. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். கதவை திறந்து கொண்டு வெளியே ஓடினான் மலரவன், விஷயம் என்ன என்று தெரிந்து கொள்ள. தன் கையில் பிராந்தி பாட்டிலை வைத்திருந்த மகிழன், தள்ளாட்டம் போட்டுக் கொண்டிருந்தான். அதைக் கண்ட மலரவன் அதிர்ச்சி அடைந்தான். அவன் அருகில் சென்று அவனது சட்டையின் காலரை கோவமாய் பற்றினான். அவனை அணைத்துக் கொண்ட மகிழன் அவன் காதில் ரகசியம் உரைத்தான்.

"நான் குடிக்கல, மலரா. நீ உன்னோட ரூமுக்கு போ. வெளியில வராத"

அவனை வியப்புடன் பார்த்தான் மலரவன்.

"அம்மாவும் அப்பாவும் வீட்ல இல்லன்னு எனக்கு தெரியும். ப்ளீஸ் உன் ரூமுக்கு போ மலரா"

மென்று விழுங்கியபடி அவனது சட்டையின் கலரை தளர்த்தினான் மலரவன்.

"மை டியர் பிரதர்... இந்த விஷயத்துல நீ தலையிடாதே... ப்ளீஸ் போயிடு" தன் கையில் இருந்த பிராந்தி பாட்டிலுடன் சேர்த்து, தன் கரங்களை குவித்து அவனிடம் கூறிய மகிழன், குடிகாரனை போல் தள்ளாடிய படி தன் அறைக்கு சென்றான்.

பெருமூச்சு விட்டான் மலரவன். மகிழன் எதையோ செய்ய திட்டமிட்டு இருப்பது அவனுக்கு புரிந்தது. அவர்களது அறையின் வாசலில் நின்றிருந்த கீர்த்தி, மகிழனை திகிலுடன் பார்த்துக் கொண்டு நின்றாள். மகிழன் என்ன ரகளை செய்ய காத்திருக்கிறானோ என்று எண்ணியபடி தன் அறைக்கு  சென்றான் மலரவன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro