Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

28 பூங்குழலியின் பதிலடி

28 பூங்குழலியின் பதிலடி

புயலைப் போல சமையலறைக்குள் நுழைந்த பூங்குழலி, அங்கு கீர்த்தி காப்பியை குவளையில் ஊற்றிக் கொண்டிருப்பதை கண்டாள். அவளை தன்னை நோக்கி இழுத்த பூங்குழலி, அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். அந்த அறை, அவளது உடலை நடுக்கம் காண செய்ததால், தன் கன்னத்தை பற்றி கொண்டு அதிர்ச்சியுடன் நின்றாள் கீர்த்தி.

"என்னைப் பத்தி நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க?ஹாங்? நான் எப்படி ஆம்பளைங்களை வளச்சு பிடிக்கிறேன்னு கேட்டல? அதைப்பத்தி நீயேன் என்கிட்ட கேக்குற? நீ தான் அதுல கை தேர்ந்தவளாச்சே. உன்னோட லட்சணம் என்னன்னு ஏற்கனவே என் புருஷன் எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டாரு. என் புருஷனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி நீ எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கியா? உன்னோட இம்சை தாங்க முடியாம தானே உன்னோட நம்பரையே அவர் பிளாக் பண்ணி வச்சிருந்தாரு..! அவரை மடக்கிப் பிடிக்க நீ என்ன எல்லாம் செஞ்சேன்னு எல்லாமே எனக்கு தெரியும். உன்னோட பாட்சா அவர்கிட்ட பலிக்கலன்னு தெரிஞ்சதுக்கு பிறகு, அவரோட தம்பி மேல பொய்யான பழியை சுமத்தி அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டது எனக்கு தெரியாதா? இதுக்கப்புறம் ஏதாவது என்னை பத்தி பேசுன, உன்னோட நாக்கை இழுத்து வச்சு அறுத்துருவேன் ஞாபகத்துல வச்சுக்கோ"

அவளை நோக்கி ஓரடி முன்னேறிய பூங்குழலி,

"என்னோட புருஷன் இங்கிருந்து அமைதியா போனதுக்கு காரணம், நீ சொன்னதை ஏத்துக்கிட்டதால இல்ல. நீ பேசுறதை எல்லாம் கேட்டுக்கிட்டு நான் அமைதியாக இருக்கக் கூடாதுன்னு அவர் நினைக்கிறாரு. என்னை தரகுறைவா பேசுறவளோட பல்லை நான் உடைக்கணும்னு நினைக்கிறாரு. அவர் ஆசைப்பட்டதை தான் இப்ப நான் நிறைவேத்தி இருக்கேன். இன்னொரு தடவை என்னோட வழியில் குறுக்கிட்டா, உன் பல்லை உடைக்க நான் தயங்க மாட்டேன்" தன் விரல்களை கீர்த்தியின் முகத்தருகே சொடுக்கினாள், எச்சரிக்கும் தொணியில்.

"உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னை கைநீட்டி அடிப்ப?" என்றாள் கீர்த்தி.

"எனக்கு தைரியம் இருக்கு. என்னை தரகுறைவா பேசுற அளவுக்கு உனக்கு தைரியம் இருந்தா, என்னோட மரியாதையை காப்பாத்திக்கிற தைரியம் எனக்கும் இருக்கு. உன்னோட மரியாதையை காப்பாத்திக்க நீ முயற்சி பண்ணு. ஏன்னா உன்னோட புருஷன் உனக்காக வந்து நிற்க மாட்டார். ஆனா, என் புருஷன் அதை செய்வார். அது தான் உனக்கும் எனக்கும் இருக்கிற வித்தியாசம்"

தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்ட பூங்குழலி, தனக்கும் மலரவனுக்கும் காபி கலக்க துவங்கினாள்.

"கைல காலணா இல்ல... உனக்கு ஏன் இவ்வளவு திமிரு?" என்றாள் கீர்த்தி பல்லை கடித்துக் கொண்டு.

"உன்கிட்ட தான் நிறைய பணம் இருக்கே... அதை வச்சுக்கிட்டு நீ என்ன கிழிக்க போற? என்கிட்ட பணம் இல்ல தான். ஆனா என் பக்கத்துல என் புருஷன் இருக்காரு. அவர் தான் என்னோட சொத்து. என்னோட பிரச்சனை எல்லாத்தையும் என் கூட நின்னு எதிர்க்க அவர் தயாரா இருக்காரு. என்னை மாதிரி ஒரு பொண்ணுக்கு அதைவிட வேற என்ன வேணும்?"

தன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு சிலை போல் நின்றாள் கீர்த்தி. காபிக் குவளைகளுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினாள் பூங்குழலி.

தங்கள் அறைக்கு வந்த பூங்குழலி, அதில் ஒரு குவளையை மலரவனை நோக்கி நீட்டினாள். அதை புன்னகையுடன் பெற்றுக் கொண்டான் மலரவன்.

கட்டிலில் அமர்ந்து கொண்டு காப்பியை பருக துவங்கினாள் பூங்குழலி, சிரித்தபடி காப்பி குடித்துக் கொண்டிருந்த மலரவனை மீண்டும் மீண்டும் பார்த்தபடி.

"உனக்கு கை வலிக்குதா?" என்றான் புன்னகை மாறாமல்.

"வலியை பத்தி எல்லாம் வாரியர்ஸ் கவலைப்பட மாட்டாங்க" என்றாள்.

அதைக் கேட்டு சிரித்தான் மலரவன். அப்பொழுது பூங்குழலியின் மனதில் ஏதோ உரைத்தது.

"எனக்கு கை வலிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றாள்.

அவளுக்கு பதில் கூறாமல் சிரித்தபடி காப்பியை குடித்தான் மலரவன்.

"நீங்க அங்க தான் இருந்தீங்களா?" என்ற அவள் கேள்விக்கும் புன்னகையே பதிலாய் வந்தது.

"சொல்லுங்க..."

"ஆமாம். நான் அங்க தான் இருந்தேன். நீ அவளை லெஃப்ட் ரைட்டு வாங்கினதை எப்படி நான் மிஸ் பண்ணிடுவேன்?"

சிரித்தபடி அவனிடமிருந்து காலி குவளையை பெற்றுக் கொண்டு அங்கிருந்து நடந்தாள் பூங்குழலி.

"பூங்குழலி" புன்முறுவல் தவழ அவளை அழைத்தான்.

அவள் நின்று திரும்பி அவனை பார்க்க,

"சிரிச்சுக்கிட்டே இரு, நீ சிரிக்கிறதை பார்க்கும் போது மனசுக்கு இதமா இருக்கு" என்றான்.

சிரித்தபடி அங்கிருந்து சென்றாள் பூங்குழலி. அவள் மனம் நிறைவாய் இருந்தது.

இதற்கிடையில்,

மகிழனின் அறைக்கு சென்றாள் கீர்த்தி. அவள் தன் அறைக்கு வந்ததை பார்த்து அவளை சத்தம் போட அவன் எத்தனித்த போது, அவள் கூறியதைக் கேட்டு நின்றான்.

"பூங்குழலி என்னை அறைஞ்சிட்டா. அவ என்னை எப்படி அறையலாம்னு தயவு செய்து வந்து கேளுங்க"

எதையோ யோசித்த மகிழன், மலரவனின் அறையை நோக்கி நடந்தான். மகிழ்ச்சி துள்ளலுடன் அவனை பின்தொடர்ந்தாள் கீர்த்தி. மலரவனின் அறையின் கதவை அவன் தட்ட, மலரவன் கதவை திறந்தான். கீர்த்தியுடன் அங்கு வந்திருந்த மகிழனுக்கு முன்னால் வந்து நின்றாள் பூங்குழலி.

"நீங்க அவளை அறைஞ்சிங்களா?" என்றான் பூங்குழலியை பார்த்து.

மலரவன் அவனுக்கு பதில் கூற விழய, அவனை கையமர்த்தினான் மகிழன்.

"சொல்லுங்க"

"அவ என்னை இன்சல்ட் பண்ணினா. என்னோட கேரக்டரை கேள்விக்குறியாக்கினா"

"உங்க கிட்ட நான் காரணத்தை கேட்கல"

"ஆமாம் நான் அவளை அறைஞ்சேன்"

"ஒரு சின்ன விஷயத்தை கூட உங்களால சரியா செய்ய முடியாதா? அவ சொல்லி தான் நான் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு. அவ கன்னத்துல எந்த அடையாளமும் தெரியல. எப்படி அறையணும்னு மலரவன் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க" என்றான்.

"உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?" சீறினாள் கீர்த்தி.

" எங்க அண்ணி அடிக்கிற அளவுக்கு போயிருக்காங்கன்னா நீ நிச்சயமா ஏதாவது ஏடாகூடமாக செஞ்சிருப்ப. அவங்க அவ்வளவு சீக்கிரம் உணர்ச்சிவசப்படக் கூடியவங்க இல்ல" என்றான் மகிழன் மற்ற மூவரையும் வாயடைக்க செய்து.

"வந்த முதல் நாளே உன்னுடைய சகுனி வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டியா?" மகிழன் எரிந்து விழ பின் வாங்கினாள் கீர்த்தி.

அவர்கள் பேசுவதை கேட்டபடி அங்கு வந்த மின்னல்கொடி பதட்டமானார்.

"என்ன ஆச்சு பூங்குழலி? எதுக்காக நீ கீர்த்தியை அறைஞ்ச?"

"மா, இந்த விஷயத்துல நீங்க தலையிடாம இருக்கிறது தான் உங்களுக்கு நல்லது. அவ அண்ணியோட கேரக்டரை கேவலமா பேசி இருக்கா. அதுக்கு தான் அண்ணி பதிலுக்கு கொடுத்து இருக்காங்க. அதோட அந்த விஷயம் முடிஞ்சு போச்சு. இதோட நீங்க விட்டுடுங்க" என்றான் மகிழன்.

"மகிழன் சொல்றது சரி தான். இந்த விஷயத்துல நீங்க தலையிட வேண்டாம். அவங்க பிரச்சனையை அவங்களே தீர்த்துக்கட்டும். அதனால தான், என் பொண்டாட்டியை அவமானப் படுத்தின இடத்துல நான் இருந்த போதும் எதுவும் செய்யாம  இருந்தேன்" என்றான் மலரவன் கீர்த்தியை முறைத்தவாறு.

"நீ அங்க தான் இருந்தியா?" என்றான் மகிழன்.

ஆமாம் என்று தலையசைத்தான் மலரவன்.

"அவ அண்ணியை என்ன சொன்னா?" என்றான்

"அதை விடு மகிழா"

"சொல்லு மலரா, அவ மனசுல என்ன இருக்குன்னு நான் துல்லியமா தெரிஞ்சுக்க நினைக்கிறேன்"

"இருக்கலாம், ஆனா நடந்ததை திரும்ப சொல்லி, என் மனைவியை சங்கடப்படுத்த நான் விரும்பல" என்ற மலரவனின் பேச்சு பூங்குழலியின் மனதை உருக்கியது.

"நீ தான் அங்க இருந்தியே. நீயே அவளை ஓங்கி ஒரு அறை விட வேண்டியது தானே?" என்றான் மகிழன்

"இன்னொரு தடவை அப்படி நடந்தா, நான் அதை நிச்சயம் செய்வேன்" என்றான் எச்சரிக்கும் தொணியில்.

"என்னை பத்தி உங்க மனசுல நீங்க என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? நான் இந்த வீட்டோட மருமக. எனக்கு மரியாதை இருக்கு. அதை நீங்க யாரும் புரிஞ்சுக்க மாட்டீங்களா?" என்றாள் கீர்த்தி முகத்தை சோகமாய் வைத்துக்கொண்டு.

"நம்மளுடைய நடத்தை தான் நமக்கு மரியாதையை கொண்டு வந்து சேர்க்கும். நீ அடுத்தவங்களை அசிங்கப்படுத்தனும்னு நினைச்சா உன்னை யார் மதிப்பா?" என்றான் மலரவன் காட்டமாக.

"மலரா கோபப்படாதே. அமைதியா இரு" என்றார் மின்னல்கொடி.

"நான் அமைதியா தான் மா இருக்கேன். அவ பேசினதை கேட்டு எனக்கு வந்த கோபத்துக்கு நான் மட்டும் அதை வெளியில காட்டி இருந்தா, இப்போ அவ உயிரோடவே இருந்திருக்க மாட்டா" என்றான் மலரவன்.

கீர்த்தி மட்டும் அல்ல, பூங்குழலி கூட சற்று ஆடித்தான் போனாள் அவனது கோபத்தை பார்த்து. அந்த குடும்பத்தின் தவறான நரம்பை தொட்டுவிட்டோம் என்று உணர்ந்தாள் கீர்த்தி.

சரியாய் அதே நேரம் மலரவனுக்கு மித்திரனிடமிருந்து அழைப்பு வந்தது. கள்ள சிரிப்புடன் அந்த அழைப்பை ஏற்றான் மலரவன்.

"சொல்லு மித்திரா"

"நீ சொன்ன மாதிரியே ராகேஷஷை போலீஸ் அரெஸ்ட் பண்ண வச்சுட்டேன்"

"என்னது? ராகேஷை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்களா? ஆனா ஏன்?" என்றான் தனக்கு எதுவும் தெரியாதது போல.

ராகேஷின் பெயரைக் கேட்டவுடன் கீர்த்தியின் முகம் இருண்டு போனது. மகிழனும் அதிர்ச்சி அடைந்தான்.

"இந்த பிளானோட மாஸ்டர் மைண்டடே நீ தானே? அப்புறம் எதுக்கு என்கிட்ட காரணம் கேக்குற?" என்றான் மித்திரன்.

"அப்படியா? என்னால நம்ப முடியல... ராகேஷா அவன் வீட்டில் 25 லட்சம் வச்சிருந்தான்?"

"என்ன சொல்ற மலரா? ரெண்டு நாளைக்கு முன்னாடி தானே, செலவுக்கு பணம் இல்லைன்னு அவன் என்கிட்ட ஆயிரம் ரூபா கடன் வாங்கினான்" என்றான் மகிழன் அதிர்ச்சியுடன்.

"ஓஹோ, உன்கூட மகிழன் இருக்கானா?" என்றான் மித்திரன் நிலைமையை புரிந்து கொண்டு.

"அதே தான்..."

"சரி சரி நடத்து"

"என்ன சொல்ற? அவன் போதை மருந்து பழக்கம் உள்ளவனா?" என்றான் மலரவன் தன் முகத்தில் அதிர்ச்சி காட்டி.

"என்னது ராகேஷ் ட்ரக்கிஸ்டா?" மகிழனும் அதிர்ந்தான்.

"சரி பாக்குறேன்" என்று அழைப்பை துண்டித்தான் மலரவன்.

"என்ன ஆச்சு மலரா?" என்றான் மகிழன்.

"ராகேஷ் தன் வீட்ல போதை மருந்து வச்சிருக்கிறதா போதை மருந்து தடுப்பு போலீசுக்கு இன்ஃபர்மேஷன் கிடைச்சிருக்கு. அவங்க அவன் வீட்டை ரவுண்ட் அப் பண்ணி செக் பண்ணி பார்த்தப்போ, அவன் வீட்ல 25 லட்சம் வச்சிருந்தானாம்"

அவனது பேச்சுக்கு ஊடே புகுந்து,

"அது அவனோட பணமா இருக்கலாம்ல " என்றாள் கீர்த்தி அவசரமாய்.

"அது என்னோட பணம்னு அவன் சொல்றத எல்லாம் போலீஸ் நம்ப மாட்டாங்க. அந்த பணம் அவனுக்கு எப்படி கிடைச்சிதுனு அவன் சொல்லி ஆகணும். அதாவது, அந்த பணத்தை அவன் *யார்கிட்ட இருந்து* எதுக்காக வாங்கினான்னு அவன் சொல்லணும். அவன் சொல்லலனாலும் போலீஸ் அவனை உண்மையைக் கக்க வச்சிடுவாங்க" என்றான் மலரவன்.

திகில் அடைந்தாள் கீர்த்தி. என்ன  எதிர்பாராத பிரச்சனை இது? ராகேஷ் அவர்களை நடுரோட்டிற்கு இழுத்து விட்டு விடுவான் போலிருக்கிறதே.

"அவன் என்ன சொல்றான்னு பாக்கலாம்" என்றான் மலரவன்.

அந்த இடத்தை விட்டு நைசாக நழுவி சென்றாள் கீர்த்தி. அதை கவனிக்க தவறவில்லை மலரவன்.

"குழலி நீ என்கூட வா" என்றார் மின்னல்கொடி.

மலரவனை பார்த்துவிட்டு அவள் அங்கிருந்து செல்ல முயல, அவள் கரத்தை பற்றி தடுத்து நிறுத்தினான் மலரவன்.

"அவள் ஏன் கீர்த்தியை அடிச்சான்னு நீங்க அவகிட்ட கேள்வி கேட்கிறதா இருந்தா, நான் அவளை உங்க கூட அனுப்ப மாட்டேன்" என்றான்.

"என்ன நடந்துச்சுன்னு தாண்டா நான் கேட்க போறேன்" என்றார் மின்னல்கொடி.

"அதை இங்கேயே கேளுங்களேன்"

"நான் ஒன்னும் உன் பொண்டாட்டியை முழுங்கிட மாட்டேன்"

அவன் பிடித்திருந்த கரத்தை விடுவித்த பூங்குழலி,

"நீங்க தானே சொன்னீங்க, எல்லாத்தையும் நான் தான் ஹாண்டில் பண்ணனும்னு? விடுங்க நான் பார்த்துக்கிறேன்" என்று மின்னல்கொடியுடன் சென்றாள் பூங்குழலி.

"நடந்ததுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் மலரா" என்றான் மகிழன்

மெல்ல தன் தலையசைத்தான் மலரவன்.

"ரொம்ப தேங்க்ஸ்" என்றான் மகிழன்

"எதுக்காக?"

"அப்பா கூட என் பேச்சை நம்பாத போது, நீ என்னை நம்புன. எனக்கு அது பலத்தை கொடுத்துச்சி"

"ஆனா, அதனால எந்த பிரயோஜனமும் இருக்கலையே... "

"நான் அந்த மாதிரி நடந்து இருப்பேன்னு நீ நினைக்கிறியா மலரா?"

இல்லை என்று தலைசைத்தான் மலரவன்.

"ஏன்?"

"என்னோட கல்யாணத்துல நீ குடிச்சிருப்பேன்னு என்னால நம்ப முடியல. அப்படின்னா, அதுக்கப்புறம் நடந்த எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை தானே?"

"ரொம்ப தேங்க்ஸ்'

"ராகேஷ் பத்தி நீ என்ன நினைக்கிற?"

"அவனால தான் நான் அப்பாவோட கண்ணுல ஒரு குடிகாரனா தெரிஞ்சேன்"

"நீ என்ன சொல்ற?" என்றான் மலரவன்.

"ஆபீசுக்கு அவன் தான் சரக்கு கொண்டு வந்தான். அது தெரியாம, நான் அதை குடிச்சிட்டேன். ஏன்னா, அவன் அதை கோக் பாட்டில்ல கொண்டு வந்து இருந்தான். அங்கிருந்து நான் என்னோட கேபினுக்கு வரும் போது அப்பா என்னை பார்த்தாரு. அப்போ தான் நான் ஆபீஸ்ல குடிச்சேன்னு அவர் தப்பா நினைச்சுக்கிட்டாரு. உண்மையை சொன்னா ராகேஷுக்கு வேலை போயிடும்னு தான் நான் அப்பா கிட்ட உண்மையை சொல்லல. ஆனா அந்த ஒரு விஷயம் என்னோட வாழ்க்கையையே தலைகீழா புரட்டிப் போடும்னு நான் நினைச்சு பாக்கல"

"கவலைப்படாத. எல்லாம் மாறும்" என்றான் மலரவன்.

"அப்படியா?" என்று வலி நிறைந்த புன்னகை சிந்தி விட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான் மகிழன்.

மகிழனுக்காக வருத்தப்பட்டான் மலரவன். எவ்வளவு சாமர்த்தியமாக அவனை குமரேசன் மாட்டி விட்டடிருக்கிறார் என்று அவனுக்கு புரிந்தது. அதில் ராகேஷ் அவருக்கு உறுதுணையாய் இருந்திருக்கிறான். இதற்கு பின்னால் நடந்த நிகழ்வுகள் மகிழனுக்கு தெரிய வந்தால் அவன் என்ன செய்யப் போகிறான் என்று அவனுக்கு புரியவில்லை. அதன் பிறகு அவன் கீர்த்தியை என்ன செய்வான்? அவனுக்கு பதட்டமாய் இருந்தது, கீர்த்தியை நினைத்து அல்ல, மகிழனின் எதிர்காலத்தை நினைத்து...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro