26 முதல் நாள்
26 முதல் நாள்
திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் ஒவ்வொருவராய் கலைந்து செல்ல தொடங்கினார்கள். அங்கு நிலைமை சரியில்லாததால், யாரும் அங்கு இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை மணிமாறன் குடும்பத்தினர்.
சிவகாமியும் வடிவுக்கரசியும் கூட கிளம்ப தயாரானார்கள். செல்வதற்கு முன் ஒரு முறை பூங்குழலியை பார்க்க விரும்பினார்கள். அவள் இருந்த அறைக்கு அவர்கள் வந்தவுடன், அவர்களை நோக்கி விரைந்த பூங்குழலி,
"அம்மா, இங்க என்ன நடக்குது? எதுக்காக எந்த முன்னறிவிப்பும் இல்லாம திடீர்னு மகிழன், கீர்த்தி கல்யாணம் நடந்தது?" என்றாள் ரகசியமாய்.
"உன் கல்யாணதன்னைக்கு இதையெல்லாம் சொல்லி, தேவையில்லாம உன்னை டென்ஷன் பண்ண வேண்டாம்னு தான் நான் எதையும் சொல்லல"
"டென்ஷனா? டென்ஷன் ஆகிற அளவுக்கு என்னமா நடந்தது?"
"கீர்த்தி கெஸ்ட் ரூம்ல தனியா இருந்தப்போ, மகிழன் அவ கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணானாம். அந்த பொண்ணோட அம்மா அப்பா அதை பெரிய பிரச்சனை பண்ணிட்டாங்க. வேற வழி இல்லாம, மணி அண்ணனும் மின்னலும் அந்த பொண்ணை மகிழனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சம்மதிச்சிட்டாங்க. பாவம் அவங்க" என்றார் கவலையாக.
"வேற வழி இல்லாம, அப்படினா என்ன அர்த்தம்?"
"கீர்த்தியோட அப்பா தான் அப்படி செய்ய சொல்லி கேட்டிருக்காரு"
"அதுக்கு கீர்த்தி சம்மதிச்சிட்டாளா?"
"அவ வேற என்ன செய்வா?"
முகத்தை சுருக்கினாள் பூங்குழலி. அவளுக்கு கீர்த்தியை பற்றி நன்றாகவே தெரியும். தன்னிடம் ஒருவன் தவறாய் நடந்து கொள்ள முயற்சித்தான் என்பதற்காக அவனையே திருமணம் செய்து கொள்ள கூடிய பெண் அல்ல அவள். எல்லாவற்றிற்கும் மேலாக, மகிழன் அவளிடம் தவறாக நடந்து கொண்டான் என்பதையும் அவளால் நம்ப முடியவில்லை... அதுவும் அவனது அண்ணனின் திருமணத்தில்...! அவளுக்கு ஏதோ தவறாய் தெரிந்தது. ஆனாலும் தன் மனதில் தோன்றிய எண்ணத்தை தன் அம்மாவிடமும் அத்தையிடமும் அவள் பகிர்ந்து கொள்ளவில்லை.
"நீ அவங்களைப் பத்தி எல்லாம் கவலைப்படாதே. உன்னோட வாழ்க்கையில மட்டும் கவனம் செலுத்து. மணியும் மின்னலும் தான் உனக்கு ரொம்ப முக்கியம். அவங்க கவலைப்படாம நடந்துக்கோ" என்றார் வடிவுக்கரசி.
வடிவுக்கரசி கூறியது ஏற்றுக்கொள்ளும்
விதத்தில் இல்லாவிட்டாலும், சரி என்று தலையசைத்தாள் பூங்குழலி. அவளால் எப்படி அவர்களை பற்றி கவலைப்படாமல் இருக்க முடியும்? இப்பொழுது அவர்களும் அவளைப் போலவே அந்த குடும்பத்தில் ஓர் அங்கம் அல்லவா?
மகிழனின் திருமணத்தால் வெறுத்துப் போயிருந்த மணிமாறனும் மின்னல்கொடியும், அதை வெளிப்படையாய் காட்டி, மலரவன், பூங்குழலியின் மனநிலையை கெடுக்க விரும்பவில்லை.
அவர்கள் வீட்டிலேயே தான் திருமணம் நடைபெற்றது என்றாலும், வீட்டிற்கு வந்த மருமகளை ஆலம் சுற்றி வரவேற்க அவர்கள் வாசலுக்கு அழைக்கப்பட்டார்கள்.
"நம்ம வீட்டு வழக்கப்படி, பொண்ணோட கையை பிடிச்சு மாப்பிள்ளை உள்ள கூட்டிக்கிட்டு போகணும்" என்றார் மின்னல்கொடி.
பூங்குழலி, மலரவனின் முகத்தை நிமிர்ந்து பார்க்க, கீர்த்தியோ தலை குனிந்து கொண்டாள். முதலில் மலரவன் அதை செய்யட்டும் என்று காத்திருந்தான் மகிழன். மலரவன் அதை செய்ய தயங்கவும் இல்லை. பூங்குழலியின் விரல்களோடு தன் விரல்களை பிணைத்துக் கொண்டு அவளுடன் நடக்க துவங்கினான் மலரவன்.
அதையே செய்யச் சொல்லி, மகிழனை நோக்கி சைகை செய்தார் மின்னல்கொடி. ஆனால் அவர்கள் எதிர்பாராத வண்ணம், தன் கழுத்தில் அணிந்திருந்த மாலையை கழற்றி தரையில் வீசி எறிந்து விட்டு தன் அறையை நோக்கி நடந்தான் மகிழன், கீர்த்தியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி. எந்த சடங்கையும் செய்யவோ கீர்த்தியை தொடவோ அவன் விரும்பவில்லை.
"மகிழா... போகாத நில்லு" என்று மணிமாறனின் கத்தலுக்கு அவன் செவி சாய்க்கவில்லை.
பூங்குழலியுடன் உள்ளே வந்த மலரவன், தன் தந்தையின் உரத்த குரலைக் கேட்டு நின்றான். மகிழன் தன் அறையை நோக்கி செல்வதை பார்த்த பின்பும் ஏனோ மலரவனுக்கு அவனை தடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை.
தன் அறைக்குச் சென்று உள்ளிருந்து கதவை தாழிட்டுக் கொண்டான் மகிழன். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்றிருந்த கீர்த்தியை ஏறிட்டார்கள் மணிமாறனும் மின்னல்கொடியும். அவர்கள் பார்வை தன்னை நோக்கி திரும்புவதை உணர்ந்த கீர்த்தி, தன் முகத்தை சோகமாய் மாற்றிக் கொண்டாள்.
மகிழனின் அறையை நோக்கி விரைந்த அவனது பெற்றோர்கள், அவனது அறையின் கதவை தட்டினார்கள். அதற்கு மேல் பொறுக்க மாட்டாத மலரவன், ஓடிச்சென்று அவன் அறையின் கதவை இடித்தபடி,
"மகிழா, மரியாதையா கதவை திற" என்று கத்தினான்.
கதவை திறந்த மகிழன் வழியை மறித்துக்கொண்டு நின்றான். மணிமாறன் ஏதோ கூற முயல, அவரை கையமர்த்திய மகிழன்,
"இது எனக்கும் அவளுக்கும் நடுவுல இருக்கிற பிரச்சனை. என்னை கட்டாயப்படுத்தி நீங்க கல்யாணம் தான் பண்ணி வைக்க முடியும். அதுக்கு மேல என்னை கட்டாயப்படுத்தி அவ கூட வாழ வைக்க முடியாது" என்றான் அங்கு வந்த கீர்த்தியை பார்த்தபடி.
"அவ இப்ப உன் பொண்டாட்டி" என்றார் மணிமாறன்.
"அவளை என் பொண்டாட்டியா நான் ஏத்துக்க மாட்டேன்" என்றான் உறுதியாய்.
"மகிழா..." என்றார் கெஞ்சலாய் மின்னல்கொடி
"அம்மா தயவுசெய்து உங்க நேரத்தை இங்க வேஸ்ட் பண்ணாதீங்க. நான் அவகிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணேன்னு என் மேல பழி சுமத்தினா... என்னை அவமானப்படுத்தினா...
எல்லார் முன்னாடியும் என்னை தலை குனிய வச்சா... அவ இந்த ரூமுக்குள்ள வராம இருக்குறது தான் மா அவளுக்கு நல்லது. இல்லைனா அவளை நான் அடிச்சே கொன்னுடுவேன்" என்றான் ஆபத்தான குரலில். அது கீர்த்தியை நடுங்கச் செய்தது.
"நீ உள்ள போ மா. அவன் என்ன செய்றான்னு நான் பாக்குறேன்" என்றார் மணிமாறன்.
"அப்படின்னா, இந்த வீட்டை விட்டு நான் நிரந்தரமா போயிடுவேன்" என்று எச்சரித்தான் மகிழன்.
அது அவன் குடும்பத்தாரை அதிர்ச்சி அடைய செய்தது.
"சரி, நீ என்கூட வா" என்றார் மின்னல்கொடி.
சரி என்று தலையசைத்து விட்டு கீர்த்தி அவருடன் செல்ல முயல,
"அவ இங்க இருந்து போனா, அதுக்கு அப்புறம் எப்பவுமே என் ரூமுக்குள்ள வரக்கூடாது" என்றான் மகிழன்.
நம்ப முடியாமல் அவனை ஏறிட்டார்கள் அவர்கள். தனது தம்பியின் பிடிவாதத்தை பார்த்த மலரவனே கூட அசந்துப் போனான்.
"நான் இங்கேயே இருக்கேன்" என்றாள் கீர்த்தி தன் கோபத்தை அடக்கி கொண்டு.
மணிமாறனும் மின்னல்கொடியும் ஏதும் செய்ய இயலாமல் நிற்க, பெருமூச்சு விட்ட மலரவன், தன் அறையை நோக்கி நடந்தான். அது கீர்த்தியை மேலும் கோபத்திற்கு உள்ளாகியது. இங்கே அவள் அவமானப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில், அவனுக்கு தன் மனைவியுடன் முதல் ராத்திரி கேட்கிறதா?
இந்த பெரிசுகளுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா? மகிழன் தன்னிடம் தவறாய் நடந்து கொண்டதை சுட்டிக்காட்டி அவனை நாலு அறை விட முடியாதா? எல்லோரும் உதவாக்கரைகள். பொறுமினாள் அவள்.
.........
தன் அறைக்கு வந்த மலரவன், கதவை சாத்தி தாளிட்டான். வெளியில் நடந்தவற்றை கேட்டுக்கொண்டு சோபாவில் அமர்ந்திருந்த பூங்குழலி, அவனை பார்த்தவுடன் எழுந்து நின்றாள். மலரவன் அவளை பார்த்து மென்மையாய் புன்னகைக்க, அவள் பதிலுக்கு புன்னகைக்கவில்லை. அவள் முகத்தில் கலவரம் தெரிந்தது.
"ரிலாக்ஸ்" என்றான்.
"நீங்க டிஸ்டர்ப்டா இல்லையா?"
"இருக்கு... ஆனா நம்ம எதுவும் செய்ய முடியாது" என்று கட்டிலில் அமர்ந்தான்.
"நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லலாமா?"
"நீ என்கிட்ட எது வேணாலும் சொல்லலாம். முதல்ல வந்து உட்காரு" என்றான்.
இருவருக்கும் இடையில் போதுமான இடைவெளி விட்டு கட்டிலில் அமர்ந்தாள். அதை கவனித்தான் மலரவன்.
"சொல்லு"
"எனக்கு என்னமோ அவரு இப்படி எல்லாம் செஞ்சி இருப்பார்னு தோணல"
"யாரு மகிழனா?"
"ஆமாம்"
"நீ ஏன் அப்படி நினைக்கிற?"
"எனக்கு தெரிஞ்ச வரைக்கும், அவர் எப்பவுமே அட்வான்டேஜ் எடுக்கணும்னு நினைச்சது இல்ல... என் கிட்ட. என்னை மீட் பண்ண ஒரு தடவை எங்க காலேஜுக்கு வந்தாரு. ஆனா என்னை மீட் பண்ணாமலேயே கிளம்பி போயிட்டாரு. மணி அங்கிள் கால் பண்ணதனால தான் அவர் அங்கிருந்து போனாருன்னு அதுக்கப்புறம் நான் தெரிஞ்சுகிட்டேன். அதுக்கப்புறம் அவர் எப்பவுமே என்னை டிஸ்டர்ப் பண்ணல"
"நீ என்ன சொல்ல வர?"
"ஒன்னும் இல்ல. ஏதோ உங்க கிட்ட சொல்லனும்னு தோணுச்சு"
"அவன் அப்படி செஞ்சி இருப்பான்னு நானும் நம்பல"
"நான் மேரேஜ் ஹால்ல சில பேர் பேசிக்கிட்டதை கேட்டேன்..." என்றாள் தயக்கத்துடன்.
சமதளப் பார்வையுடன் அவளை ஏறிட்டான் மலரவன். தலை குனிந்து கொண்ட பூங்குழலி,
"அந்தப் பொண்ணு உங்களை கல்யாணம் பண்ணிக்க விரும்பினாளாமே..." என்று தன் கண்ணிமைகளை மெல்ல அவனை நோக்கி உயர்த்தினாள்.
நமட்டு புன்னகை வீசினான் மலரவன்.
"அது உண்மையா?" என்றாள்.
"ஆமாம். உண்மை தான். அவ என்னை கல்யாணம் பண்ணிக்க விரும்பினா"
"அவங்க அம்மா அப்பா அந்த சம்பந்தத்தை கொண்டு வந்தாங்களா?"
"அவளே அந்த சம்பந்தத்தை கொண்டு வந்தா" என்று சிரித்தான்.
அதைக் கேட்டு வியந்த பூங்குழலி,
"எப்போ? நீங்க இந்தியாவுக்கு வந்த பிறகா?"
"இல்ல, நான் லண்டன்ல இருந்த போதே அவ எனக்கு ஃபோன் பண்ணா" தன் கைபேசியை எடுத்து அதை அவளிடம் கொடுத்தான்.
குழப்பத்துடன் அதை பெற்றுக்கொண்டாள் பூங்குழலி.
"அதை செக் பண்ணு"
"இல்ல... நான் அந்த அர்த்தத்தில் கேக்கல... நான் உங்களை சந்தேகப்படல"
"நீ என்னை சந்தேகப்படுறேன்னு நானும் சொல்லல. நீ அதைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு நான் நினைக்கிறேன்"
"இல்ல மலர். நான் கேள்விப்பட்டதை உங்கிட்ட கேட்டேன். அதுக்காக நீங்க எல்லாத்தையும் என்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்ல"
"சொல்லணும். நிச்சயமா சொல்லணும்" என்று வாட்ஸ் அப்பை திறந்து, தான் பிளாக் செய்த கீர்த்தியின் எண்ணை அவளிடம் காட்டினான்.
"எதுக்காக நீங்க அவ நம்பரை பிளாக் பண்ணிங்க?"
"அவ ஒரு இரிடேடிங் கேரக்டர். ஒட்டுமொத்த குடும்பமும் என்னை அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு தலையால தண்ணி குடிச்சாங்க. நான் இந்தியா வந்த பிறகும் அவங்க முயற்சி தொடர்ந்தது"
பெருமூச்சு விட்டாள் பூங்குழலி.
"அதை விடு, இது நம்ம ஃபஸ்ட் நைட்" என்ற அவனை விழி விரிய அதிர்ச்சியுடன் ஏறிட்டாள்.
"வேற ஏதாவது பேசலாம்னு சொன்னேன்" என்றான் தன் சிரிப்பை அடக்கியபடி.
"நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கிட்டு வரேன்" என்று எழுந்த அவள் கையைப் பிடித்தான் மலரவன்.
"இந்த டிரஸ் உனக்கு ரொம்ப நல்லா இருக்கு" என்றான் கள்ளச் சிரிப்புடன்.
"ஆனா ரொம்ப வெயிட்டா இருக்கு" என்றாள் அவன் கூறியதை தான் புரிந்து கொள்ளவில்லை என்பது போல.
"நான் அதைப் பத்தி பேசல" என்றான் அவன்.
அவளுக்கு நன்றாகவே தெரியும் அதன் அளவைப் பற்றித் தான் அவன் பேசுகிறான் என்று.
"ம்ம்ம், இது எனக்கு ரொம்ப நல்லா சூட் ஆகி இருக்கு"
கட்டிலை விட்டு எழுந்த அவன், அவளை தன்னை நோக்கி திருப்பி,
"நீ ரொம்ப ஸ்மார்ட்... நீ அஃபெக்ட் ஆகவே இல்ல அப்படிங்கற மாதிரி ரொம்ப நல்லா நடிக்கிற" என்றான் அவளது கண்களை பார்த்தவாறு.
அவள் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள,
"பூங்குழலி, போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கோ" என்றான் ஹஸ்கி குரலில்.
இப்பொழுது இவன் எதற்காக இப்படி ஹஸ்கி குரலில் பேசுகிறான்? அந்த இடத்தை விட்டு விரைவாய் அகன்ற பூங்குழலி தன் உடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்கு சென்று கதவை சாத்தி தாழிட்டுக் கொண்டாள். அவள் வருவதற்கு முன் தானும் உடைமாற்றிக் கொண்ட மலரவன், கட்டிலில் படுத்துக் கொண்டான்.
குளியலறையில் இருந்து வந்த பூங்குழலி, மலரவனுக்கு முதுகை காட்டிய வண்ணம் அடுத்த பக்கத்தில் படுத்துக்கொண்டாள்.
"பூங்குழலி... "
அவள் பின்னால் திரும்பிப் பார்க்க,
"குட் நைட்" என்றான்.
"குட் நைட்" என்றபடி மீண்டும் அவனுக்கு எதிர்ப்புறம் திரும்பிக் கொண்டாள் பூங்குழலி.
சிரித்தபடி விளக்கை அணைத்தான் மலரவன்.
மறுப்புறம், ஒன்றும் செய்ய முடியாமல் மகிழனின் அறைக்கு வெளியில் நின்றிருந்தாள் கீர்த்தி. அவள் மெல்ல அவனது அறைக்குள் எட்டிப் பார்க்க, அவன் படுக்கையில் படுத்துக்கொண்டு , விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.
"பரதேசி எப்ப தான் தூங்குவானோ தெரியலையே..." என்று எரிச்சலுடன் முணுமுணுத்தாள்.
அவளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அவள் உள்ளே வரக்கூடாது என்பதற்காக, வேண்டுமென்றே மகிழன் விழித்திருக்கிறான் என்று.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro