2 பிரச்சனையில் தில்லைராஜன்
2 பிரச்சனையில் தில்லைராஜன்
"இந்த பையனை நம்ம என்ன செய்யறது? நம்ம சொல்ற எதையும் இவன் கேட்கவே மாட்டேங்கிறானே..." வருத்தப்பட்டார் மணிமாறன்.
"அவனுக்கு விருப்பமில்லைன்னு தெரிஞ்ச பிறகு, நம்ம ஏன் திரும்பத் திரும்ப அவனை தொல்லை பண்ணணும்?" கேள்வி எழுப்பினார் மின்னல்கொடி.
"நீ என்ன பேசுற மின்னல்?"
"கல்யாணம்கிறது வியாபாரம் கிடையாது. அது லைஃப்டைம் கமிட்மென்ட். யாரையும் வற்புறுத்தி அதுல பிடிச்சி தள்ள முடியாது... முக்கியமா நம்ம மூத்த பிள்ளையை. அவனுக்கு பிடிக்காத எதையும் நம்ம ஃபோர்ஸ் பண்ணி செய்ய வைக்க முடியாது. அவன் பிடிவாதம் உங்களுக்கு தெரியாதா?"
ஆமாம் என்று தலையசைத்தார் மணிமாறன்.
"எதுக்காக குமரேசன் அண்ணன் மலர் கிட்ட அவர் பேசாம, கீர்த்தியை பேச விட்டாரு?" என்றார் அலுப்புடன் மின்னல்கொடி.
"ஆமாம், அந்த அந்த மடையன் எவ்வளவு பெரிய முட்டாள்தனத்தை பண்ணி வச்சிருக்கான் பாரு..."
"அவர் பேசியிருந்தா, அவர் வயசுக்கு மரியாதை கொடுக்கணும்னு நினைச்சு, கொஞ்சம் தன்மையா பேசி இருப்பான் மலரவன்... அவரு சொதப்பிட்டாரு" என்றார் அதிருப்தியுடன்.
"அந்தப் பொண்ணு வேற அவன் கிட்ட என்ன பேசினான்னு தெரியலயே..." என்றார் மணிமாறன்.
"சீக்கிரமே குமரேசன் அண்ணன் உங்களுக்கு ஃபோன் பண்ணுவாரு பாருங்க"
"பண்ணட்டும் பாக்கலாம்"
குமரேசன் ரெசிடென்சி
கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தாள் கீர்த்தி. அவள் வாழ்நாளில் எந்த ஆண்மகனும் அவளிடம் இவ்வளவு மோசமாய் பேசியதில்லை. அவன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் மலரவன்? ஒரு பெண் பிள்ளையிடம் எப்படி பேச வேண்டும் என்பது கூடவா அவனுக்கு தெரியாது? மரியாதைகெட்ட மடையன்...! அவளை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அவன் எப்படி கூறலாம்? அவளை நேரில் பார்க்காமலேயே எப்படி அவன் அந்த முடிவுக்கு வரலாம்? அவளை நேரில் பார்த்திருந்தால், அவளை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அவன் கூறி விட முடியுமா? நிச்சயம் முடியாது. அவளிடம் தவறாய் நடந்து கொண்டதற்காக நிச்சயம் வருத்தப்படுவான், என்று எண்ணினாள் கீர்த்தி, மலரவனை பற்றி முழுதாய் தெரியாமல்.
தன்னிடம் தவறாய் நடந்து கொண்டதற்காக அவனை வருத்தப்பட செய்ய வேண்டும் என்று எண்ணினாள் அவள். அவளை ஒருமுறை அவன் பார்த்து விட்டால், அவளை திருமணம் செய்து கொள்ள தயார் என்று அவன் கூறி விடுவான் என்று எண்ணினாள் அந்தப் பெண்.
அப்பொழுது அவளது அப்பா குமரேசன் வீட்டிற்குள் வருவதை அவள் பார்த்தாள். அவளது முகத்தை பார்த்தவுடனேயே குமரேசன் துணுக்குற்றார்.
"என்ன ஆச்சுடா?" என்றார் அன்பாய்.
"மலர் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டான்"
"என்ன்னனனது? என்ன சொல்ற நீ?"
"நான் பேசுறதை அவன் முழுசா கூட கேட்கல. அதுக்குள்ள எரிஞ்சு விழ ஆரம்பிச்சுட்டான்"
"அவன் அப்படியா நடந்துக்கிட்டான்?"
"ஆமாம் டாட். இந்த மாதிரி தலைக்கனம் பிடிச்சவனை நான் பார்த்ததே இல்ல. எவ்வளவு திமிரு அவனுக்கு..." அடி தொண்டையில் கத்தினாள் கீர்த்தி.
"நீ சும்மா இரு. நான் மாறன் கிட்ட பேசுறேன்"
"அவன் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டானா டாட்?"
"அது எப்படி பண்ணிக்காம போவான்? உன்னை ஒரு தடவை பார்த்தா அவன் ஃபிளாட் ஆயிட மாட்டானா?" இடியிடியென சிரித்தார்.
"என்னை பார்க்க அவன் இன்ட்ரஸ்ட் காட்டவே இல்லையே டாட்... ஒருவேளை அவன் என்னை கல்யாணம் பண்ணிக்கலனா என்ன செய்றது?"
"அவன் ஒரு சுயம்பு... யாரோட உதவியும் இல்லாம தன்னந்தனி ஆளா வெளிநாட்டில் போய் தன்னுடைய நிறுவனத்தை நிலை நிறுத்துறது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்ல. அதை செஞ்சவன் இப்படித் தான் இருப்பான். அவன் விஷயத்தை நான் பார்த்துக்கிறேன். நீ என்கிட்ட விடு"
அரை மனதாய் தன் அறைக்கு சென்றாள் கீர்த்தி. அவளுக்கு இருந்த நம்பிக்கையை அவள் இழந்து விட்டாள் என்று தான் கூற வேண்டும். இறுதியாய், அவளது தந்தையின் மீது அவளுக்கு நம்பிக்கை இருந்தது. ஒருவேளை அவர் அதை சாதித்து காட்டலாம்.
தனது கைபேசியை எடுத்த குமரேசன், மணிமாறனுக்கு ஃபோன் செய்தார். அவரது அழைப்பை ஏற்ற மணிமாறன்
"சொல்லு குமரா" என்றார்.
"மலர் மேல நான் ரொம்ப வருத்தத்துல இருக்கேன் மாறா"
"ஏன்? என்ன ஆச்சு?" என்றார் மணிமாறன், தனக்கு அது ஏற்கனவே தெரியும் என்பதை காட்டிக் கொள்ளாமல்.
"மலர், கீர்த்தியை இன்சல்ட் பண்ணிட்டான்"
"கீர்த்தியையா? எதுக்காக?"
"அவனுக்கு அவ கால் பண்ணப்போ"
"அவ ( என்பதை அழுத்தி) கால் பண்ணாளா? என்ன வேலை பண்ணிட்ட நீ?" அலுத்துக் கொண்டார்.
"ஏன்? அவனுக்கு கால் பண்ண கூடாதா?"
"நான் ஏற்கனவே மலரை பத்தி உன்கிட்ட சொல்லியிருக்கேன். நீ முதல்ல சூழ்நிலையை புரிஞ்சுக்கோ. அவன் கல்யாணம் பண்ணிக்கவே விருப்பமில்லாதவன்... தன்னோட தம்பியை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லிட்டவன்... அப்புறம் எப்படி அவன் இதை சாதாரணமாக எடுத்துக்குவான்? கீர்த்தி அவனுக்கு ஃபோன் பண்ணுவான்னு தெரிஞ்சிருந்தா, அவன்கிட்ட பேசவே நான் உன்னை விட்டிருக்க மாட்டேன். நீ தானே அவன் கிட்ட பேசுறேன்னு சொன்ன? நீ பேசியிருந்தா, மரியாதை நிமித்தமாவாவது உன்கிட்ட நல்லா பேசி இருப்பான். நீ எல்லாத்தையும் கெடுத்துட்ட..."
"ஆனா..."
"நான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன். அவன் ஒரு பேஷன் கிங். தினம் தினம் எத்தனையோ பொண்ணுங்கள சாதாரணமா கடந்து போறவன்... அவ்வளவு ஈஸியா ஒரு பொண்ணு கிட்ட அவன் மயங்கிடுவான்னு நினைச்சியா?"
"எங்க ப்ரொபோசலை பத்தி நீ அவன்கிட்ட சொல்லி இருப்பேன்னு நெனச்சேன்"
"நீ தானே சொன்ன, என்கிட்ட விடு, நான் பாத்துக்குறேன்னு? அப்புறம் எப்படி நான் பேசுறது? அவனே ஏற்கனவே ஒரு ப்ரோக்ராம் டென்ஷன்ல இருக்கான். மின்னலே அவன் கிட்ட பேச பயப்படுறா... நீ வேற இப்படி வேண்டாத வேலை செஞ்சு வச்சிருக்க"
"நாங்க அவனை அப்ரோச் பண்ண வேற வழியே இல்லையா?"
"சாரி குமரா... அவன் முடியாதுன்னு சொல்லிட்டா, அது முடியாது தான். அவன் மனசை மாத்திக்கவே மாட்டான்"
"ஒருவேளை அவன் சரின்னு சொல்லிட்டா?"
"கடவுளே நினைச்சாலும் அவனை தடுக்க முடியாது"
"அவன் இந்தியா வரும் போது நான் அவன்கிட்ட பேசி பார்குறேன்"
"முயற்சி பண்ணி பாரு" அழைப்பை துண்டித்து நிம்மதி பெருமூச்சு விட்டார்.
அவரை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் மின்னல்கொடி.
"அவன் இப்படியே தான் இருக்கப் போறானா?" என்றார் மணிமாறன்.
"அவனுக்கு வரப்போற பொண்டாட்டி ஏற்கனவே எங்கேயாவது பிறந்திருப்பா. சரியான நேரம் வரும் போது அவன் கிட்ட வந்து சேருவா... கீர்த்தியோ பார்த்தியோ அதை மாத்த முடியாது..."
"கீர்த்தி சரி... பார்த்தி யாரு?"
"யாருக்கு தெரியும்? உங்க பிள்ளை தான் சொன்னான், அவனுக்கு கீர்த்தியும் பிடிக்கலையாம், பார்த்தியும் பிடிக்கலையாம்" சிரித்தார் மின்னல்கொடி.
"நம்ம மகிழனோட கல்யாணத்தை முடிக்கிறது தான் நல்லதுன்னு எனக்கு தோணுது. இவனுக்காக காத்திருக்கிறது எனக்கு என்னமோ சரியா படல"
"ஆமாம். அப்ப தான் மகிழனுக்கும் பொறுப்பு வரும்" என்றார் மின்னல்
"இது சம்பந்தமா நம்ம தில்லைராஜனை போய் பாத்துட்டு வரலாம்"
"சரி"
லண்டன்
தனது வாட்ஸ்அப் எண்ணுக்கு, கீர்த்தி சில புகைப்படங்களை அனுப்பி இருந்ததை பார்த்த மலரவன் எரிச்சல் அடைந்தான். அவற்றிற்கு எந்த மதிப்பும் அளிக்காமல் டெலிட் செய்து, அவளது எண்ணை பிளாக் செய்தான்.
அது கீர்த்திக்கு மற்றும் ஒரு அடியாய் விழுந்தது. மலரவனை வளைத்து பிடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல என்றும் அவளுக்கு புரிந்து போனது. அவனை அவள் இதுவரை நேரில் கூட பார்த்ததில்லை. ஒரு பொருளாதார பத்திரிக்கையில் வந்திருந்த அவனது புகைப்படத்தை, குமரேசன் தான் அவளிடம் காட்டினார். லண்டனில் நடந்த ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சியை அவன் வழங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது. அவ்வளவு தான்... அந்த புகைப்படம் அவளை பைத்தியமாக்கி விட்டது. தான் அவனை மணந்து கொள்ள விரும்புவதாய் வெளிப்படையாகவே தன் தந்தையிடம் கூறினாள் கீர்த்தி. மணிமாறன் தனது தோழன் என்பதால், தன் மகளின் விருப்பத்தை சுலபமாய் பூர்த்தி செய்து விடலாம் என்று மனக்கோட்டை கட்டினார் குமரேசன். ஆனால், விரும்பியவர் எல்லாம் அடைந்து விடுவதற்கு, மலரவன் ஒன்றும் குச்சி மிட்டாயோ, குருவி ரொட்டியோ இல்லையே...! அவன் விண்ணில் ஜொலிக்கும் சந்திரன்... அதில் அனைவராலும் கால் பதித்து விட முடியாது...!
........
தில்லை அம்பலம்
மகிழனின் திருமணத்தை பேசி முடிக்க, மணிமாறனும், மின்னல்கொடியும், தில்லைராஜனை சந்திக்க வந்தார்கள்.
"வாம்மா மின்னலு..." என்று அவரை வழக்கம் போலவே குதூகலமாய் வரவேற்றார் தில்லைராஜனின் மனைவி சிவகாமி.
"எப்படி இருக்க சிவா?"
"நான் நல்லா இருக்கேன். மாப்பிள்ளை எப்படி இருக்காரு?"
"நல்லா இருக்கான். எங்கே என் மருமக?" என்றார் மின்னல்கொடி.
"அவ வீட்ல இல்ல. ஒரு கெட்டுகெதர். அடுத்த மாசம் அவ ஃபிரெண்டுக்கு கல்யாணம். அதனால எல்லா ஃப்ரெண்ட்ஸும் சேர்ந்து அவளை பார்க்க போயிருக்காங்க"
"அப்படியா? நான் அவளை பார்க்கலாம்னு நினைச்சேன்"
"நீங்க வரப் போறீங்கன்னு சொல்லி இருந்தா, நான் அவளை இருக்க சொல்லி இருப்பேன்"
"சேச்சே... இந்த கெட்டுகெதர் அவளுக்கு ரொம்ப முக்கியமானது. நான் அவளை எப்ப வேணா பாத்துக்க முடியும். ஆனா இன்னிக்கு அவ போகலன்னா, ஃபிரண்டுங்க கூட இருக்கிற ஒரு நல்ல சந்தர்ப்பத்தை அவ இழந்திருப்பா"
"நீ ரொம்ப அண்டர்ஸ்டாண்டிங்... மகிழன் அவளை கல்யாணம் பண்ணிக்கனும்னு விருப்பப்படுறதா இவர் வந்து சொன்ன போது, நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஏன்னா அவளுக்கு நீ மாமியாரா வரப் போறியே... அதனால..."
"போதும் சிவா, எனக்கு ரொம்ப ஐஸ் வைக்காதே, சளி பிடிச்சுக்க போகுது" என்றார் மின்னல் கொடி.
"நான் உனக்கு ஐஸ் வைக்கிறேன்னு நினைக்கிறியா? போ மின்னல், நீ ரொம்ப மோசம்..."
"அட, சும்மா விளையாட்டுக்கு தானே சொன்னேன்?"
"மின்னல், நீ தான் ரொம்ப வித்தியாசமான ஆளாச்சே ம்மா. வரப்போற மருமக கிட்ட சண்டை போடறதை விட, அவங்க அம்மா கிட்ட சண்டை போடேன்... வித்தியாசமா இருக்கும்" என்று சிரித்தார் தில்லைராஜன்.
"இது ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கே... சிவா, மின்னல் கூட சண்டை போட நீயும் ரெடியாயிடு" என்றார் மணிமாறன்.
மின்னல்கொடியும் சிவகாமியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, குபீர் என்று சிரித்தார்கள்.
"ஜாக்கிரதை மின்னல், இவங்க ரெண்டு பேரும் நம்மளை எதிரியாக்க பாக்குறாங்க. நம்ம அவங்க வலையில விழுந்திடக் கூடாது" என்றார் சிவகாமி.
"ஆமாம், அவங்களுக்கு நம்ம தான் டைம் பாஸ்... இவங்க போதைக்கு நம்ம தான் ஊறுகாய்..."
"விளையாடியது போதும்... நாங்க எதுக்கு வந்தோம்னு சொல்லிடுறோம். மகிழனுக்கும் பூங்குழலிக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ணலாம்னு வந்தோம்"
தில்லைராஜனும் சிவகாமியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"என்னாச்சு தில்லை?"
"எனக்கு கொஞ்சம் டைம் வேணும், மாறா"
"ஏண்டா? ஏதாவது பிரச்சனையா?"
"ஆமாம் அண்ணா. பிரச்சனை தான்" என்றார் சிவகாமி.
"நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன், மாறா. என்னோட சித்தி மகன் கைலாசத்துக்கு நான் ஷூரிட்டி கையெழுத்து போட்டேன். வியாபாரத்துல அடுத்தடுத்து ஏற்பட்ட நஷ்டத்தால, அவன் ரொம்ப மோசமான நிலைமையில இருந்தான். நான் உதவி செஞ்சா அவனோட வாழ்க்கை நல்லா இருக்கும்னு நினைச்சேன்..."
"எவ்வளவு பணம் ஷூரிட்டி கொடுத்திருக்க? "
"அம்பது கோடி"
"அம்பது கோடியா? என்னடா சொல்ற?"
"ஆமாம். அதோட மட்டும் இல்லாம, வட்டி வேற வளர்ந்து நிக்குது..."
"இதைப் பத்தி கைலாசத்து கிட்ட நீ பேசினியா?"
"அவன் சென்னையிலேயே இல்ல. ஃபோன் பண்ணா என்னோட காலை எடுக்க மாட்டேங்கறான்"
"இப்போ என்னடா பண்ணப் போற?"
"அவனை கானோம்னு போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்னு இருக்கேன்"
"அப்படி செய்யறது புத்திசாலித்தனம் இல்ல. அவனுக்கு கடன் கொடுத்த பேங்க்கருக்கு அவன் காணாம போன விஷயம் தெரிஞ்சா, உன்னை தான் பிடிப்பாங்க..."
"அவனை நம்பாதீங்கன்னு நான் எவ்வளவோ படிச்சு படிச்சு சொன்னேன் ண்ணா. இவர் தான் கேட்கல" என்றார் சிவகாமி பரிதாபமாய்.
"அவன் என்கிட்ட கதறி அழும் போது என்னால தாங்க முடியல, மாறா"
"நீ ஒன்னு பண்ணு. பேங்க்கர் உன் மேல ஏதாவது நடவடிக்கை எடுக்குறதுக்கு முன்னாடி, உன்னோட எல்லா சொத்தையும் சிவகாமி பேர்லயும், குழலி பேர்லயும் மாத்தி எழுது"
"சரி"
"நான் என்னோட லாயர் கிட்ட இதை பத்தி பேசிட்டு, எப்போ ரிஜிஸ்டர் பண்ணலாம்னு சொல்றேன்"
"ரொம்ப தேங்க்ஸ் மாறா"
"இதை பத்தி நீ ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல?"
ஒன்றும் கூறாமல் அமைதி காத்தார் தில்லைராஜன்.
"சரி விடு. முதல்ல இந்த பிரச்சனையில் இருந்து வெளியில் வர பாப்போம். அதுக்கு அப்புறம் கல்யாணத்தை வச்சுக்கலாம்"
"ரொம்ப தேங்க்ஸ் மாறா"
"எல்லாம் சரியாயிடும்னு நம்புவோம்"
அவர்களிடமிருந்து விடைபெற்று சென்றார்கள் மணிமாறனும் மின்னல்கொடியும்.
"இந்த பிரச்சனையில இருந்து நான் எப்படி வெளியில வரப் போறேன்னு தெரியல" என்றார் தில்லைராஜன்.
"உங்களை நீங்க ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதீங்க. அதான் மாறன் அண்ணன் எல்லாத்தையும் பாத்துக்கலாம்னு சொல்லிட்டாரு இல்ல..."
"அவங்க கல்யாண தேதியை முடிவு பண்ணலாம்னு ஆசையா வந்தாங்க... ஆனா..."
"நீங்க வருத்தப்படாதீங்க. எது நடக்கணும்னு இருக்கோ அது தான் நடக்கும்"
"எனக்கு ஒரு சந்தேகம்"
"என்ன சந்தேகம்?"
"நம்ம குழலியோட ஜாதகத்தை பார்த்த ஜோசியர் என்ன சொன்னார்னு உனக்கு ஞாபகம் இருக்கா?"
"என்ன சொன்னாரு?"
"அவளுக்கு வரப்போற புருஷன் நல்லா படிச்சவனா இருப்பான்னு சொன்னாரு இல்ல? ஆனா மகிழன், இன்னும் நாலு அரியரையும் முடிக்காம இருக்கானே..." என்று சிரித்தார்.
அப்பொழுது அவர்கள்,
"எனக்கும் அதே சந்தேகம் தான்" என்ற குரல் கேட்டு திரும்பினார்கள்.
தனது பூங்குழல் காற்றில் ஆட, புன்னகையுடன் நின்றிருந்தாள் பூங்குழலி.
"கெட்டுகெதர் எப்படி இருந்தது?"
"வேற லெவல் பா"
"ஏதாவது சாப்பிட்டியா?"
"எக்கச்சக்கமா சாப்பிட்டேன்..."
"உன்னோட மாமனாரும், மாமியாரும் வந்திருந்தாங்க"
"ஓ..."
"நீ ஏதோ சொல்ல வந்தியே, என்ன அது?" என்றார் தில்லைராஜன்.
"ஆமாம், நம்ம ஜோசியர் சொன்னாரு, எனக்கு வரப்போற புருஷன் ரொம்ப நல்லா படிச்சிருப்பான்... ரொம்ப பொறுப்போடவும் சுயமரியாதையோடயும் இருப்பான்னு சொன்னாரு. ஆனா இந்த குவாலிட்டி எதுவுமே மகிழன் கிட்ட இருக்கிறதா எனக்கு தெரியல..."
"ஜோசியத்தை ரொம்ப நம்பாதே டா"
"ஆனா அவர் சொன்னது எல்லாமே நடந்திருக்கே பா..."
"அதுல ஒன்னு ரெண்டு தப்பா போகவும் வாய்ப்பிருக்கு..."
சிவகாமி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்ததை பார்த்த தில்லைராஜன்,
"என்ன ஆச்சு?" என்றார்.
"ஒன்றுமில்லை" என்று வெறுமையாய் சிரித்தார்.
அவர்களது ஜோசியர் கூறியதில் சில விஷயங்கள் நடக்காமல் போக வேண்டும் என்பது தான் அவருடைய விருப்பமும் கூட. அவர் பூங்குழலிக்கு வரவிருக்கும் கணவனைப் பற்றி மட்டும் கூறவில்லை. சிவகாமியின் கணவனைப் பற்றியும் கூறி இருந்தார். தில்லைராஜனுக்கு இது மிகவும் ஆபத்தான கால கட்டம். அவர் உயிருக்கு கண்டம் இருக்கிறது. ஆறு மாத காலத்தை அவர் கடப்பது என்பது மிகவும் கடினம். அவர் கூறியதற்கு ஏற்றார் போலவே, மிகப்பெரிய பிரச்சனைகளையும் மன அழுத்தத்தையும் தில்லைராஜன் சந்தித்துக் கொண்டிருந்தார். இதிலிருந்து விடுபட அவர் இன்னும் மூன்று மாத காலத்தை கடந்தாக வேண்டும்... இன்னும் மூன்று மாதம்...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro