18 அது வேறு...!
18 அது வேறு
"என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு என் வைஃபா என் கூட லண்டன் வர்றதுல உனக்கு எந்த பிரச்சனையும் இருக்காதுன்னு நினைக்கிறேன். என்ன சொல்ற பூங்குழலி? கல்யாணம் பண்ணிக்கிட்டு நம்ம லண்டனுக்கு போகலாம்ல?" என்று நேரடியாக பூங்குழலியிடமே கேட்டு அவளை திக்குமுக்காட வைத்தான் மலரவன்.
"சொல்லு பூங்குழலி, என்ன முடிவு செய்யப் போற? இந்த முடிவை நீ எடுக்கணும்னு நான் நினைக்கிறேன். கல்யாணத்துக்கு முன்னாடி என் கூட வர உனக்கு சங்கடமா இருந்தா, கல்யாணம் பண்ணிக்கிட்டு போகலாம்"
சிவகாமியை பார்த்தாள் பூங்குழலி. ஆனால் அவரோ, மின்னல்கொடியின் பக்கம் தன் பார்வையை திருப்பிக் கொண்டார். அவருக்கு தெரியும் நிச்சயம் பூங்குழலி தன்னை இதில் இழுத்து விடுவாள் என்று.
"அம்மா..." என்று அவரை அழைத்தாள் பூங்குழலி.
"இல்ல, பூங்குழலி. என் கூட லண்டனுக்கு வர மாட்டேன்னு நீ தான் சொன்ன. அதனால இந்த முடிவை நீ மட்டும் தான் எடுக்கணும்" என்றான் மலரவன் விடாப்பிடியாக.
"அம்மா முடிவு பண்ணுவாங்க" என்றாள் தலை தாழ்த்தி.
"ஏன்? அவங்க ஏன் முடிவு பண்ணனும்? அவங்க முடிவை நீ ஏத்துக்குவேன்னா, எதுக்காக என் கூட லண்டனுக்கு வர மாட்டேன்னு சொன்ன? அவங்க சொல்றதை கேட்டு நடக்க வேண்டியது தானே?" கேள்வி எழுப்பினான் அவன்.
அவன் முன் நிற்கவே தடுமாறினாள் பூங்குழலி. அவன் இந்த அளவிற்கு ஆளுமை படைத்தவன் என்று அவளுக்கு தெரியாது.
"எனக்கு நேரடியான பதில் வேணும் பூங்குழலி. ஒரு விஷயத்தை முதல்ல தெளிவா புரிஞ்சுக்கோ. எது எப்படி இருந்தாலும் நம்ம கல்யாணம் நிச்சயம் நடக்கும். அதை நான் நடத்திக் காட்டுவேன். இப்போ எனக்கு பதில் சொல்லு" என்றான் பிடிவாதமாய்.
சில நொடிகள் எடுத்துக்கொண்டு, ஆழமாய் மூச்சை இழுத்து, திடமாய் அவனை ஏறிட்ட அவள்,
"நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்றாள். அவள் அதை மின்னல்கொடியை பார்த்து தான் கூறினாள் என்றாலும், மலரவனின் முகம் மலர்ந்ததை அவள் உணர்ந்தாள்.
பெரியவர்கள் சந்தோஷத்தில் ஆழ்ந்தார்கள். பூங்குழலி தன் அறைக்கு செல்ல நினைத்த பொழுது, அவளை அழைத்தான் மலரவன். நின்று அவன் பக்கம் திரும்பினாள் அவள்.
"குட் டெஸிஷன்" என்று புன்னகை உதிர்த்தான்.
"உன்னோட ஈவண்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒரு தேதி இருக்கு. அதை ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்" என்றார் மணிமாறன்.
"பண்ணிடுங்க பா"
"நாள் ரொம்ப கம்மியா இருக்கு. நமக்கு ஏத்த மாதிரி சத்திரம் கிடைக்குமான்னு தெரியல" என்றார் மணிமாறன்.
"நம்ம வீடு இருக்கும் போது எதுக்காகப்பா சத்திரம் தேடணும்? நம்ம வீடே போதுமே. அங்கேயே அரேஞ்ச் பண்ணிக்கலாம்" என்றான் மலரவன்.
அவன் கூறியதை ஆமோதித்தார் மணிமாறன்.
"நம்ம எந்த வெட்டிங் டென்ஷனையும் ஏத்திக்க வேண்டாம். நல்ல வெட்டிங் பிளானரா பார்த்து வேலையை கொடுத்துட்டா, அவங்க எல்லாத்தையும் பாத்துக்குவாங்க" என்றார் மணிமாறன்.
"வேண்டாம்பா. எல்லாத்தையும் நம்மளே செஞ்சுக்கலாம்" என்றான் மலரவன்.
அனைவரும் அவனை அதிசயமாய் பார்த்தார்கள்.
"நம்ம வேலையை ஷேர் பண்ணிக்கிட்டு செய்யலாம். ரொம்ப முக்கியமான ஃபிரண்ட்சையும், ரிலேடிவ்ஸையும் மட்டும் கூப்பிடுங்க. நானும், பூங்குழலியும் லண்டன் போயிட்டு வந்த பிறகு, ஒரு கிராண்டான ரிசப்ஷன் அரேஞ்ச் பண்ணி எல்லாரையும் இன்வைட் பண்ணிக்கலாம்" மளமளவென தனது யோசனையை அடுக்கினான் மலரவன்.
மணிமாறனும், மின்னல்கொடியும் ஒருவரை ஒருவர் பார்வை பார்த்துக் கொண்டார்கள். சிவகாமியும், வடிவுக்கரசியும் இந்த உலகத்திலேயே இல்லை. பூங்குழலியோ திகைப்பின் உச்சியில் இருந்தாள்.
"ஏன் எல்லாரும் என்னை அப்படி பாக்குறீங்க?" என்றான் மலரவன்.
"ஒன்னும் இல்ல. நீ சொல்றபடியே செஞ்சிடலாம்" என்றார் மணிமாறன்.
"ஆனா, எது செய்யறதா இருந்தாலும், நாப்பத்தி எட்டு நாள் கழிச்சி தான் செய்ய ஆரம்பிக்கணும்" என்றார் வடிவுக்கரசி.
"அப்படிங்களா அக்கா?" என்றார் மணிமாறன்.
அவர் தன்னை அக்கா என்று அழைத்தது வடிவுக்கரசியை நெகழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆம் என்று தலையசைத்தார்.
"நமக்கு தான் ஒரு வாரம் டைம் இருக்குமே... அப்போ செஞ்சுக்கலாம்" என்றார் மின்னல்கொடி.
"சரி, நாங்க கிளம்பறோம்" என்றார் மணிமாறன்.
"நீங்க கிளம்புங்க. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் அப்புறமா வரேன்" என்றான் மலரவன்.
சரி என்று தலையசைத்தபடி அங்கிருந்து சென்றார் மின்னல்கொடி.
"சிவகாமி, ஒரு நோட்டும் பேனாவும் எடுத்து நான் சொல்றதை எல்லாம் எழுது" தரையில் அமர்ந்து கொண்டார் வடிவுக்கரசி.
"எதுவா இருந்தாலும் நாப்பத்தி எட்டு நாள் கழிச்சு தானே கா செய்யணும்னு சொன்னீங்க?" தன் சந்தேகத்தை எழுப்பினார் சிவகாமி.
"நம்ம செய்யப் போறது என்னமோ நாப்பத்தி எட்டு நாள் கழிச்சு தான். எல்லாத்தையும் ஞாபகம் வச்சுக்க முடியாதுல்ல? எழுதி வைக்கிறதுல ஒன்னும் தப்பு இல்ல. மறந்துடாம இருக்கணும் இல்ல?" என்றார் வடிவுக்கரசி.
"சரிங்க அக்கா" என்று அவரிடம் ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் கொடுத்தார் சிவகாமி.
"நான் பூங்குழலியோட ரூமுக்கு போகலாமில்ல?" என்றான் மலரவன்.
"நீங்க உங்க வேலையை பாருங்க" என்றார் வடிவுக்கரசி.
பூங்குழலி வருகிறாளா இல்லையா என்பதை பற்றி கவலைப்படாமல், அவள் அறைக்குச் சென்றான் மலரவன். அங்கேயே யோசனையுடன் நின்ற அவளை பார்த்து,
"என்ன பொண்ணே யோசிக்கிற? தம்பி வேலை செய்யத் தானே இங்க வந்திருக்கு? போ" என்றார் வடிவுக்கரசி.
தனது அறைக்கு வந்த பூங்குழலி, மலரவன் மடிக்கணினியில் ஏதோ செய்து கொண்டிருப்பதை பார்த்து,
"இங்க என்ன நடக்குது?" என்றாள்.
"ஒன்னும் இல்ல, நம்ம ப்ரோக்ராம் ஸ்ட்ரக்ச்சரை பார்த்துக்கிட்டு இருக்கேன்" என்றான் தனது விழிகளை மடிக்கணினியின் திரையிலிருந்து அகற்றாமல்.
"நான் அதைப் பத்தி கேட்கல"
"வேற எதைப் பத்தி கேட்கிற?" என்று தன் தலையை உயர்த்தினான், அவள் மீது கூறிய பார்வையை வீசிய மலரவன்.
"எதுக்காக இவ்வளவு அவசரமா கல்யாண தேதியை முடிவு பண்ணி இருக்கீங்க?"
"எதுக்குன்னு கேட்டா என்ன சொல்றது? நீ தான் என் கூட லண்டனுக்கு வர தயாரா இல்லையே... அப்புறம் நான் வேற என்ன செய்றது? அதனால தான் கல்யாணத்தை பண்ணிக்கிட்டு புருஷன் பொண்டாட்டியா லண்டனுக்கு போலாம்னு சொல்றேன்"
"எனக்கு டைம் வேணும்னு கேட்டேன்"
"நீ டைம் வேணும்னு கேட்ட. நானும் எடுத்துக்க சொன்னேன். அதைப் பத்தி நீ கவலைப்படாதே"
"நான் லண்டனுக்கு வர்றது அவசியமா?"
"அவசியம் இல்லையா?"
"நீங்க இந்த கம்பெனியோட பாஸ். அதனால நீங்க போக வேண்டியது அவசியம். நான் எதுக்கு வரணும்?"
"உன்னோட பாஸ், நீயும் கூட வரணும்னு நினைக்கிறானே... என்ன செய்றது?"
"எதுக்கு?" என்றாள் கைகளைக் கட்டிக் கொண்டு.
அவன் ஒன்றும் கூறாமல் புன்னகைக்க, கட்டிலின் மீது அமர்ந்து கண்களை மூடினாள் பூங்குழலி.
"நான் என்ன சொல்லணும்னு நினைக்கிற பூங்குழலி?"
"காரணத்தை சொல்லுங்க. சிம்பிள்..."
"அது அவ்வளவு சிம்பிள் இல்ல"
"ஏன்?"
"அதைப் பத்தி நம்ம அப்புறமா டிஸ்கஸ் பண்ணலாம். கல்யாணத்துக்கும், என் கூட லண்டன் வரவும் உன்னை தயார் பண்ணிக்கோ"
"நீங்க என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? நமக்கு கல்யாணம் ஆயிட்டா, நான் உங்க கூட லண்டனுக்கு வந்துடுவேன்னு நினைச்சிங்களா?" என்றாள்.
அவள் என்னமோ முகத்தை சாதாரணமாய் வைத்துக்கொண்டு தான் கேட்டாள். ஆனால் அது மலரவனை வியப்பில் ஆழ்த்தியது.
"வரமாட்டியா?" என்றான் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு.
"வரமாட்டேன்னு சொன்னா என்ன செய்வீங்க?"
"என்ன செய்ய முடியும்? ஈவண்ட்டை கேன்சல் பண்ணிட வேண்டியது தான். சிம்பிள்..." என்றான் தன் தோள்களை குலுக்கியபடி.
திடுக்கிட்டாள் பூங்குழலி. அவள் லண்டனுக்கு வரவில்லை என்றால், அவன் அந்த நிகழ்ச்சியையே ரத்து செய்து விடுவானா? நம்ப முடியவில்லை அவளால்.
"உங்களுக்கு என்ன பைத்தியமா?" அவள் யோசிக்காமல் கேட்க,
தன் உதடுகளை அழுத்தி, ஆம் என்று தலையசைத்தான்.
"சுத்த பைத்தியக்காரத்தனமா இருக்கு"
"பைத்தியக்காரன் தான்... நான் எவ்வளவு பெரிய பைத்தியக்காரன்னு எதிர்காலத்துல நீயே தெரிஞ்சுக்குவ" என்று சிரித்தான்.
அவன் மடியில் இருந்த மடிக்கணினியை பார்த்தபடி அமர்ந்தாள் பூங்குழலி.
"இது தான் நம்ம அடுத்த ப்ரோக்ராமோட ஃபுல் ஸ்ட்ரக்ச்சர்"
பூங்குழலியின் கண்கள் என்னவோ மடிக்கணினியின் திரையில் தான் இருந்தது. ஆனால், அவளது மனம் முழுமையாய் அதில் லயித்தது என்று கூறுவதற்கு இல்லை. மலரவன் உதிர்த்த வார்த்தைகளிலேயே அவளது மனம் நிலைத்து நின்றது. ஏன் இந்த மனிதன் சிறுபிள்ளை போல் அனைத்திற்கும் அடம் பிடிக்கிறான்? திருமணத்திற்கு பிறகும் அவன் இப்படியே நடந்து கொண்டால், அவள் கதி என்னவாவது? அனைத்தையும், அவன் விருப்பப்படி தான் அவள் செய்ய வேண்டும் என்று அவன் எதிர்பார்த்தால் என்ன செய்வது?
"ரொம்ப யோசிக்காத பூங்குழலி. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் நடக்காது" என்றான் மலரவன்.
"நான் என்ன யோசிக்கிறேன்?"
"நீ என்ன யோசிக்கிறேன்னு எனக்கு தெரியும். கல்யாணத்துக்கு அப்புறம் என்னை எப்படி சமாளிக்கிறதுன்னு தானே யோசிக்கிற?" என்றான் தட்டச்சு செய்த படி.
தட்டச்சு செய்வதை நிறுத்திவிட்டு, வாயடைத்து அமர்ந்திருந்த பூங்குழலியை புன்னகையுடன் பார்த்தான்.
"நான் சொன்னது சரி தானே?"
பதில் கூறாமல் வேறு பக்கம் பார்வையை திருப்பினாள் பூங்குழலி.
"கல்யாணத்துக்கு பிறகும், இதே மாதிரி பதில் சொல்லாம தப்பிச்சுக்கலாம்னு நினைக்காத"
திடுக்கிட்டு அவனை ஏறிட்டாள். அவன் கூறியதற்கு என்ன அர்த்தம்?
"ரொம்ப யோசிக்காதேன்னு நான் தான் சொன்னேனே. பயப்படாத... நான் கேட்கிற கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுன்னு மட்டும் தான் சொல்லுவேன்" என்றான் தன் சிரிப்பை அடக்கியபடி.
*முடியலடா சாமி* என்பது போல் தன் தலையை இடவலமாய் அசைத்தாள் பூங்குழலி. அதை பார்த்த மலரவன் வாய்விட்டு சிரித்தான்.
அவன் ஏன் அவளிடம் இப்படி எல்லாம் பேசுகிறான் என்று புரியவில்லை அவளுக்கு. அவளிடம் அவன் ஊடல் ஆடுகிறான் என்பது வெட்ட வெளிச்சமாய் தெரிந்தது. ஆம் அவன் அவளிடம் ஊடல் ஆடத்தான் செய்தான். ஏனென்றால், மகிழன் செய்த தவறை தானும் செய்ய அவன் விரும்பவில்லை. மகிழனை தவிர்த்தது போல் பூங்குழலி தன்னை தவிர்க்க கூடாது... திருத்தம், அவளை தன்னை தவிர்க்க விடக்கூடாது என்பதில் தெளிவாய் இருந்தான் மலரவன். அவனை தவிர்ப்பதற்கான சந்தர்ப்பத்தை அவளுக்கு வழங்க கூடாது என்பதில் முடிவாய் இருந்தான் அவன். தன்னை அவள் மனதார உணராவிட்டாலும், சிறிதளவு நினைக்கவாவது செய்யட்டுமே. 'இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ள தனக்கு கால அவகாசம் வேண்டும்' என்று அவள் கேட்டது என்னவோ உண்மை தான். 'வேண்டிய கால அவகாசத்தை எடுத்துக் கொள்' என்று அவனும் கூறினான் தான். ஆனால் அவளிடம் ஊடலாட மாட்டேன் என்று அவன் கூறவில்லையே...! அது வேறு, இது வேறு, அல்லவா?
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro