17 மலரவனின் பிடிவாதம்
17 மலரவனின் பிடிவாதம்
தவறான நேரத்தில் குமரேசன் தங்கள் வீட்டுக்கு வந்தால், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் மணிமாறனும் மின்னல்கொடியும். ஆனால், எவ்வளவு நாளைக்குத் தான் மலரவனுக்கும் பூங்குழலிக்கும் நடக்கவிருக்கும் திருமணத்தை அவர்கள் மற்றவர்களிடமிருந்து மறைத்து வைக்க முடியும்? இன்னும் சில நாட்களில் எல்லோருக்கும் தெரிய தானே போகிறது?
"நீ எங்க இங்க?" என்றார் மணிமாறன் சாதாரணமாய்.
"டென்னிஸ் விளையாட கிளம்பினேன். போற வழியில அப்படியே உன்னையும் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்"
"ஓஹோ..."
"மகிழனோட கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சா?"
"இல்ல, இன்னும் ஆகல"
"கல்யாண தேதியை முடிவு பண்ணணும்னு பேசிகிட்டு இருந்தீங்களே...?"
"ஆமாம். ஆனா, நிச்சயமானது மகிழனோட கல்யாணம் இல்ல, மலரவனோட கல்யாணம்" அதைக் கூற மணிமாறன் தயங்கவில்லை.
"என்ன்ன்னனது?" அதிர்ச்சி அடைந்தார் குமரேசன்.
"ஆமாம்"
"பொண்ணு யாரு?" என்றார் பெருமளவு எதிர்பார்ப்பை மனதில் தேக்கி.
"தில்லைராஜனோட மகள் பூங்குழலி"
"பூங்குழலியா? என்ன சொல்ற? ஆனா, நீயும், தில்லையும், மகிழன் தானே அவளை கல்யாணம் பண்ணிக்கணும்னு விருப்பப்பட்டீங்க?"
"மகிழன் அவளை கல்யாணம் பண்ணிக்க விரும்பலைனு சொல்லிட்டான்"
"ஏன்?"
"அதை விடு. அதை பத்தி பேசி எந்த பிரயோஜனமும் இல்ல"
"அதுக்காக மலரவனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி நீ கட்டாயப்படுத்தினியா?" என்றார் கனல் பறக்க.
"கட்டாயப்படுத்துறதா? நீ என்ன ஜோக் அடிக்கிறியா? உனக்கு மலரவனை பத்தி தெரியாது? அவனை யாராவது கட்டாயப்படுத்த முடியுமா?" என்றார் கிண்டலாய்.
"அப்புறம் எப்படி இந்த கல்யாணம் நடக்குது?"
"மலரவன் அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டான்" என்றார் சாதாரணமாய்.
குமரேசனுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு அளவே இல்லை. தன் அன்பு மகளை விட்டுவிட்டு, மலரவன் வேறொருத்தியை திருமணம் செய்து கொள்ள சம்மதித்து விட்டான் என்பதை அவரால் நம்ப முடியவில்லை.
"அப்போ என் பொண்ணோட கதி என்ன ஆகிறது?" என்றார் அடக்க மாட்டாமல்.
"என்ன பேசுற நீ? என்னமோ உன் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு மலரவன் சத்தியம் பண்ணி கொடுத்த மாதிரி இல்ல பேசுற?"
"ஆனா, மலரவன் எதுக்காக பூங்குழலியை கல்யாணம் பண்ணிக்கிறான்?"
"அவன் இஷ்டம். அவன் பண்ணிக்கிறான்"
முகம் சுருக்கினார் குமரேசன்.
"நாங்க தில்லை வீட்டுக்கு போறோம். நான் உன்னை அப்புறம் பாக்குறேன். வா மின்னல் போகலாம்"
மின்னல்கொடியுடன் அங்கிருந்து சென்றார் மணிமாறன், குமரேசனை பற்றி கவலைப்படாமல்.
தில்லை இல்லம்
மலரவனின் அழைப்பிற்காக காத்திருந்தாள் பூங்குழலி. அவன் தான் இன்னும் அரை மணி நேரத்தில், அவளது மற்ற சந்தேகங்களை தீர்த்து வைக்கிறேன் என்று கூறி இருந்தானே? அழைப்பு மணியின் ஓசையை கேட்டு அவள் திடுக்கிட்டாள். ஒருவேளை, மலரவன் நேரிலேயே வந்து விட்டானோ? தனது யூகம் சரி தானா என்று பார்க்க வெளியே ஓடி வந்தாள். அவள் எண்ணியபடியே மலரவன் உள்ளே நுழைந்தான்.
"என்ன அத்தை, இன்னைக்கு நீங்க எந்த சீரியலும் பாக்கலையா?" என்றான் வடிவுக்கரசியிடம்.
அவர் சிரித்தபடி இல்லை என்று தலையசைத்தார்.
"அப்படின்னா நாங்க இங்கேயே உட்கார்ந்துக்கலாமா?"
"தாராளமா..."
அவன் சோபாவில் அமர்ந்து கொள்ள, எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் பூங்குழலி.
"நீ நிறைய சந்தேகம் கேட்டதா ஸ்டீவ் சொன்னான்" என்று சாதாரணமாகப் பேச துவங்கினான்.
அவள் ஆம் என்று தலையசைக்க, சிவகாமியும், வடிவக்கரசியும் ஆச்சரியமடைந்தார்கள். அது எப்பொழுது நடந்தது என்று அவர்களுக்கு தெரியவில்லை.
"உன்னோட சந்தேகத்தை எல்லாம் நீ என்கிட்ட ஏன் கேட்கலை பூங்குழலி?" என்றான் அவன், அதற்கான காரணத்தை ஸ்டீவ் அவனிடம் ஏற்கனவே கூறிவிட்ட போதிலும்.
"நீங்க தூங்கியிருப்பீங்கன்னு நினைச்சேன்"
"அது ஒரு விஷயமே இல்ல. தேவைப்பட்டா, நான் பகல்ல கூட தூங்கிக்குவேன். ஆனா ஸ்டீவ் ஆபீசுக்கு போகணும். பாவம் அவன், தூங்காம முழிச்சுக்கிட்டு இருந்திருக்கான்" என்றான் கள்ள சிரிப்போடு.
அது அவளுக்கு சங்கடத்தை தந்தது.
"நெக்ஸ்ட் டைம், எந்த சந்தேகமா இருந்தாலும் ஸ்டீவுக்கு பதிலா என்கிட்ட கேளு"
சரி என்று தலையசைத்தாள்.
"உன்னை ஸ்டீவ் வாயார புகழ்ந்தான். உன்னோட இன்ட்ரஸ்ட்டை பார்த்து அவன் அசந்து போயிட்டான்" என்றான் மேலும் அவளை சங்கடத்திற்கு ஆளாக்கி.
"நீ ஏதோ லைட்டிங் டெக்னிக்ஸ் பத்தி சொன்னதா ஸ்டீவ் சொன்னான். நம்மளோட அடுத்த ப்ரோக்ராம்ல நிச்சயம் அதை யூஸ் பண்ணலாம்"
அவளுடைய ஆலோசனையை அவன் உண்மையாகவே ஏற்றுக் கொண்டு விட்டான் என்பதை அவளால் நம்ப முடியவில்லை.
"உனக்கு என்ன சந்தேகம்? இப்போ கேளு" என்றான்.
மடிக்கணினியை திறந்து, அவளது சந்தேகங்களை கேட்க துவங்கினாள்.
"ஸ்டீவ் உன்னை பத்தி சொன்னது எதுவும் மிகையில்ல..." குருநகை புரிந்தான்.
அமைதியாய் இருந்தாள் பூங்குழலி.
"நான் உன்கிட்ட ஒன்னு கேட்கலாமா, பூங்குழலி?"
*என்ன கேட்கப் போகிறாய்?* என்பது போல் அவனை ஏறிட்டாள் பூங்குழலி.
"தயவுசெய்து கொஞ்சம் சிரி. நீ சிரிக்கும் போது இன்னும் கூட ரொம்ப அழகா இருப்ப" அவள் எதிர்பார்க்காத ஒன்றை அவளிடம் கேட்டான் மலரவன்.
அவள் சிவகாமியையும், வடிவுக்கரசியையும் பார்க்க, அவர்கள் வேறு எங்கோ பார்த்தபடி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் வரவேற்பு அறையில் அமர்ந்து கொண்டது தவறோ என்று தோன்றியது பூங்குழலிக்கு. முந்தைய நாளைப் போலவே, அவளது அறைக்கு சென்றிருக்க வேண்டும். அவள் தவிப்பதை பார்த்து புன்னகைத்தான் மலரவன்.
"எங்க அம்மா அப்பாவோட வெட்டிங் டே அன்னைக்கு நீ ரொம்ப கலகலன்னு சிரிச்சுக்கிட்டு இருந்த. இல்லன்னு சொல்லு?"
"அன்னைக்கு இருந்த நிலைமையே வேற..." என்றாள் அவனை பார்க்காமல்.
"ஒவ்வொரு நாள் இருக்கிற நிலைமையும் வித்தியாசமானது தான். எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்கணும்னு நம்ம எதிர் பார்க்க முடியாது, இல்லையா ஆன்ட்டி?" என்றான் சிவகாமியிடம்.
அவர் ஆம் என்று சிரித்தபடி தலையசைத்தார்.
"பாரு, ஆன்ட்டி எவ்வளவு அழகா சிரிக்கிறாங்க... நீ மட்டும் தான் அங்கிளை மிஸ் பண்றியா? அவங்க மிஸ் பண்ணலையா?" நேரடியாகவே கேட்டு விட்டான்.
"அவங்களுக்கு நான் இருக்கேன்" என்றாள் யோசிக்காமல் பூங்குழலி.
"உனக்கு நான் இருக்கேன்" வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் வந்தது அவனது பதில்.
பூங்குழலி திகைத்து நிற்க, சிவகாமியின் புன்னகை மேலும் பிரகாசம் அடைந்தது.
"உனக்கு உங்க அம்மாவும் இருக்காங்க" என்றான் சமாளித்துக் கொண்டு.
"அது தான் அவளோட கவலைக்கு காரணம்" என்றார் சிவகாமி.
"நீ அவங்களை பத்தி கவலைப்பட வேண்டாம்"
"நான் எப்படி அவங்களை பத்தி கவலைப்படாம இருக்க முடியும்?" என்ற கேள்வி சிறிது கோபத்துடன் வந்தது.
"அவங்களைப் பத்தி கவலைப்பட்டு நீ என்ன செய்யப் போற? அந்த கவலைக்காக உனக்கு யாராவது சம்பளம் கொடுக்கப் போறாங்களா?"
அவனைப் பார்த்து முறைத்தாள் பூங்குழலி.
"போதும், முறைக்கிறதை நிறுத்து. உன்னை சிரிக்க சொன்னதுக்காக இவ்வளவு பெரிய ஆர்கியூமென்ட் பண்றது உனக்கே ஓவரா தெரியலையா?" என்றான் மாறாத புன்னகையுடன்.
அப்பொழுது கார் ஹாரன் சத்தம் கேட்டது. தனது பெற்றோர்கள் வந்துவிட்டதை உணர்ந்தான் மலரவன்.
மணிமாறனையும் மின்னல்கொடியையும் பார்த்த சிவகாமியின் முகம் மலர்ந்தது.
"வாங்கண்ணா, வா மின்னல்..." அவர்களை வரவேற்றார்.
தில்லைராஜனின் புகைப்படத்திற்கு முன்னால், பெரிய விளக்கு எரிந்து கொண்டிருந்ததை கவனித்தார் மின்னல்கொடி. நாப்பத்தி எட்டு நாட்களுக்கு சாந்தி தீபம் ஏற்ற வேண்டும் என்று ஜோசியர் கூறியதை கடைப்பிடித்து வந்தார் சிவகாமி.
மலரவனை பார்த்த மணிமாறன்,
"என்ன மலரா, டிஸ்கஷன் முடிஞ்சுதா?" என்றார்.
"இன்னும் இல்லப்பா" என்றான்.
மலரவன் தங்கள் வீட்டுக்கு வந்து செல்வது, அவனது பெற்றோருக்கு தெரிந்திருக்கிறது என்று புரிந்து கொண்டாள் பூங்குழலி.
"பூங்குழலி எல்லாத்தையும் புரிஞ்சுக்கிறா. ஆனா, அதை செயல்படுத்தனும்னு வரும் போது தான் தயங்குறா" என்றான் இரட்டை அர்த்தத்தில்.
பூங்குழலிக்கு சங்கடமாய் போனது.
"சீக்கிரமே அவ உன் கூட சகஜமா பழக ஆரம்பிச்சிடுவா" என்றார் மின்னல்கொடி.
"நாங்க கல்யாண தேதியை நிச்சயம் பண்ணிக்கிட்டு வந்திருக்கோம்" என்றார் மணிமாறன்.
அவ்வளவு நேரம் தலைகுனிந்து நின்ற பூங்குழலி, சட்டென்று நிமிர்த்தாள்.
"நாப்பத்தி எட்டு நாள் விளக்கேத்தி, கோவிலில் நைட் தங்கினத்துக்கு பிறகு, கல்யாணம் பண்ணலாம்னு ஜோசியர் சொன்னதா நீ சொன்ன இல்லமா? அதை கால்குலேட் பண்ணி,
நாலு தேதி குறிச்சி வாங்கிட்டு வந்திருக்கோம். நமக்கு எது வசதியோ, அந்த தேதியில் கல்யாணத்தை வச்சுக்கலாம்" என்று அவர் கொண்டு வந்த துண்டு சீட்டை சிவகாமியிடம் கொடுத்தார் மணிமாறன்.
அதை வாங்கி, அந்த தேதிகளை ஆராய்ந்தார் சிவகாமி. திருமணம் சீக்கிரமே நடக்க இருப்பதில் அவருக்கு பரம திருப்தி. இந்த நாற்பத்தி எட்டு நாளும் கண்ணை மூடி திறப்பதற்குள் ஓடிவிட வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார் அவர்.
"அப்பா, தேதியை ஃபிக்ஸ் பண்றதுக்கு முன்னாடி, நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்ல நினைக்கிறேன்" என்றான் மலரவன்.
அனைவரும் அவனைக் கேள்வியோடு பார்த்தார்கள், பூங்குழலி உட்பட.
"லண்டன்ல எனக்கு ஒரு ஈவென்ட் இருக்கு"
"ஆமாம், எனக்கு தெரியுமே. ரெண்டு தேதி, ஈவண்டுக்கு முன்னாடியும், இரண்டு தேதி ஈவண்டக்கு அப்புறமாவும் வருது. உனக்கு எது வேணுமோ அதை நம்ம ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்"
"அந்த ஈவன்ட்க்கு நான் பூங்குழலியை என்னோட கூட்டிகிட்டு போக போறேன்" என்றான் உரிமையோடு.
அனைவரும் திகைத்து போனார்கள். அவன் அவர்களது அனுமதியை கோரவில்லை... ஆலோசனை கேட்கவில்லை... அவனுடைய முடிவை அவர்களிடம் கூறினான், பூங்குழலியையும் சேர்த்து.
"ஓ..." என்று மணிமாறன் ஏதோ கூறப்போக,
"இல்ல, நான் லண்டனுக்கு வரல" என்றாள் பூங்குழலி தயக்கத்துடன்.
அவள் இப்படித் தான் கூறுவாள் என்று மலரவன் எதிர் பார்த்திருக்கலாம். ஆனால் மலரவன் அடுத்து கூறியது, யாரும் எதிர்பாராதது, முக்கியமாய் பூங்குழலி.
"அப்படின்னா, என்னோட ஈவண்டுக்கு முன்னாடி கல்யாண தேதியை ஃபிக்ஸ் பண்ணுங்க. கல்யாணம் பண்ணிக்கிட்டு ஹஸ்பண்ட் அண்ட் வைஃபா நாங்க லண்டனுக்கு போறோம்" என்றான் திடமாய், தனது விழிகளை பூங்குழலியின் மீது கூர்மையாய் நிலைநிறுத்தி.
பூங்குழலி அதிர்ச்சிக்கு ஆளானாள். அவள் இப்படி ஒரு பிடிவாதத்தை அவனிடம் எதிர்பார்க்கவில்லை. அவனைப் பற்றி அவள் கேள்விப்பட்டது இதுவல்ல. அவளது தந்தை, அவளிடம் அவனைப் பற்றி கூறியிருந்ததற்கு எதிர்மாராக அல்லவா நடந்து கொள்கிறான்? அல்லது, ஒருவேளை, இது தான் அவனது உண்மையான சுபாவமா? நம்ப முடியாமல் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் பூங்குழலி.
"என்ன சொல்ற? கல்யாணத்துக்கு அப்புறம், என்னோட வைஃபா என்கூட லண்டனுக்கு வர்றதுல உனக்கு எந்த பிரச்சனையும் இருக்காதுன்னு நினைக்கிறேன். ஈவன்ட்க்கு முன்னாடி கல்யாணம் பண்ணிக்கலாம்" நேரடியாக அவளிடமே கேட்டு, அவளை திக்குமுக்காடச் செய்தான். அவனது ஒன்றன்பின் ஒன்றான தாக்குதல்களால் திணறி போனாள் பூங்குழலி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro