12 அணுகுமுறை
12 அணுகுமுறை
"ஒத்தையா ரெட்டையா பிடிக்க நான் ஒன்னும் சாய்ஸ் இல்ல தயவுசெஞ்சி புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க" என்ற பூங்குழலி, திடுக்கிட்டு நின்றாள், மலரவன் வாசற்படியில் நின்றபடி, அவளை ஊன்றி பார்த்துக் கொண்டிருந்ததை கண்டு.
அவள் பேசியதை அவன் கேட்டிருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை. உள்ளே வந்தான் மலரவன். தன்னை யாரும் வரவேற்க வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. சங்கடத்துடன் அவனைப் பார்த்து சிரித்த சிவகாமியை பார்த்து சகஜமாய் புன்னகைத்தான் மலரவன்.
அங்கிருந்து செல்ல ஒரு அடி எடுத்து வைத்த பூங்குழலி, அவன் கூறியதைக் கேட்டு நின்றாள்.
"அவ பயப்படுறா ஆன்ட்டி" என்ற அவனை குழப்பத்துடன் பார்த்தாள் பூங்குழலி.
"அவளுக்கு இருக்கிற பயம் சகஜமானது தானே...! என்ன இருந்தாலும் அவ ஒரு பொம்பள பொண்ணு இல்லையா...?"
"நான் ஒன்னும் பயப்படல. எதுக்காக நான் பயப்படனணும்? பொண்ணுங்கன்னா பயப்படத் தான் செய்வாங்கன்னு நீங்க சொன்ன வார்த்தையை நான் கடுமையா எதிர்க்கிறேன். பொம்பள பசங்களை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? ஹாங்? பொம்பளைங்கள டீகிரேட் பண்றதை நிறுத்துங்க" அவளது குரல் அமைதியாய், ஆனால் அதே நேரம் உறுதியாய் ஒலித்தது.
"பொம்பள பசங்கள நான் டீகிரேட் பண்ணல. நீ தான் அதை செய்யற. பிரச்சனையை எதிர்த்து நின்னு ஃபேஸ் பண்ண பயந்துகிட்டு, நீ தான் ஓடி ஒளியுற. ஒவ்வொரு நாளும், ஒரே வீட்ல மகிழினை ஃபேஸ் பண்ண நீ பயப்படுற. அதுக்காகத் தான் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்ற"
திகைத்து நின்றாள் பூங்குழலி.
"இதுல அதிர்ச்சி அடைய ஒன்னும் இல்ல. நல்லவங்க தோத்து போறது இப்படித் தான். தினம் தினம் உன்னை ஃபேஸ் பண்ண பயப்பட வேண்டியவன் மகிழன் தான். ஆனா அவனுக்கு பதிலா அதை நீ செய்ற. ஏன்? இதுல உன்னோட தப்பு என்ன இருக்கு? எதுக்காக நீ தயங்குற? உன்னை மாதிரி ஒருத்தியை இழந்ததுக்காக அவனை வருத்தப்பட வைக்கணும்னு உனக்கு தோணலையா? இப்படித் தான் அமைதியா தோல்வியை ஏத்துக்கிட்டு ஒதுங்க போறியா? ஒருவேளை ஆமாம்னு சொன்னா, பொம்பள பசங்க தைரியம் இல்லாத கோழைங்கன்னு நான் சொல்லுவேன். என்னை நீ எந்த கேள்வியும் கேட்கக் கூடாது. என்னை கேள்வி கேக்க உனக்கு எந்த ரைட்ஸும் இல்ல. வெட்டியா கோபப்படுறதுனால எந்த பிரயோஜனமும் இல்ல. அதுக்கு பதில், உண்மையிலேயே நீ எவ்வளவு ஸ்ட்ராங்கானவன்னு உலகத்துக்கு காட்டு. பொம்பளைங்க ரொம்ப தைரியமானவங்கன்னு
வாதம் பண்றதை விட்டுட்டு, அதை உன் செயல்ல காட்டு... ஒரு பொண்ணுன்னா இப்படித் தான் இருக்கணும்னு எடுத்துக்காட்டா நில்லு"
வாயடைத்துப் போனாள் பூங்குழலி. அவளுக்கு என்ன கூறுவது என்றே புரியவில்லை.
"இல்ல, நான் இப்படித்தான் இருப்பேன்னு, உதவாத முற்போக்கு பேச்சால, உன் கோழைதனத்தை நீ மூடி மறைக்க நினைச்சா, நான் சும்மா இருக்க மாட்டேன்" தகிக்கும் பார்வையை அவள் மீது வீசினான் மலரவன்.
சிவகாமியும் வடிவக்கரசியும் மலரவனின் ரசிகைகள் ஆகி போனார்கள். அவனுக்கு பதில் கூற முடியாமல் தவிப்புடன் நின்றிருந்த பூங்குழலியின் பக்கம் அவர்களது பார்வை திரும்பியது.
"அவங்க அப்பா இறந்ததிலிருந்து அவ தன்னுடைய தைரியத்தை இழந்துட்டா" என்றார் சிவகாமி, எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல.
"நான் ஒன்னும் என் தைரியத்தை இழக்கல" குரல் எழுப்பினாள் பூங்குழலி.
"அப்போ என்னை கல்யாணம் பண்ணிக்கோ" என்று திடமாய் வந்தது மலரவனின் வார்த்தை.
மலைத்துப் போனாள் பூங்குழலி.
"உண்மையிலேயே உனக்கு தைரியம் இருந்தா, உண்மையிலேயே உன்னோட வார்த்தையெல்லாம் வெறும் வார்த்தை இல்லைனா, என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு, உன்னோட கூட்டை உடைச்சிக்கிட்டு வெளியில் வா" சவால் என எழுந்தது அவனது வார்த்தைகள்.
"அவளோட வார்த்தைகள் நிச்சயம் வெறும் வார்த்தைகள் கிடையாது" என்றார் சிவகாமி.
அப்படியா? என்பது போல் புருவம் உயர்த்தினான் மலரவன்.
"குழலி, அவர்கிட்ட சொல்லு, நீ எல்லாத்தையும் எதிர்த்து நிற்பேன்னு சொல்லு" என்றார் சிவகாமி.
தவிப்புடன் கண்களை மூடினாள் பூங்குழலி.
"நீ தைரியசாலியான பொண்ணுன்னு நினைச்சேனே..." என்ற சிவகாமியின் பேச்சை வெட்டி
"நான் ரெடி... நான் எதையும் ஃபேஸ் பண்ண தயார்... அவரை கல்யாணம் பண்ணிக்க தயார்" என்றாள் நேர் கொண்ட பார்வையுடன்.
மலரவனின் முகத்தில் வெற்றி புன்னகை மலர்ந்தது. இந்த மனிதன் தான் எவ்வளவு அழகு! வெளித்தோற்றத்தில் மட்டுமல்ல, உள்ளத்தாலும்! ஒரு பெண்ணின் திறமையையும், அவளது உணர்வுகளையும் மதிக்கும் போதும், அவள் யார் என்று அவளுக்கே உணர்த்தும் போதும், அவளால் எந்த அளவிற்கு சாதிக்க முடியும் என்று அவளுக்கு புரிய வைக்கும் போதும் ஒரு ஆண்மகன் அழகாகிறான். அப்படி என்றால், மலரவன் அழகானவன் தானே?
"நான் அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றாள் பூங்குழலி.
சிவகாமி மலரவனை பார்க்க, அவன், நான் பார்த்துக் கொள்கிறேன் என்பது போல கண்சிமிட்டினான்.
"நான் உங்களுக்கு காபி கொண்டு வரேன்" என்று சிவகாமி நடக்க, அவரை பின்தொடர்ந்து சமையலறைக்கு சென்றார் வடிவுக்கரசி.
தன் கைகளை கட்டிக்கொண்டு, பூங்குழியை பார்த்தபடி நின்றான் மலரவன், *ஆரம்பி* என்பது போல்.
"எனக்கு... எனக்கு கொஞ்சம்..."
அவளது பேச்சின் உள்ளே புகுந்த அவன்,
"டைம் வேணும்..." என்றான்.
அவனை வியப்புடன் பார்த்தாள் பூங்குழலி.
"இந்த ரிலேஷன்ஷிப்பை ஏத்துக்கு உனக்கு டைம் வேணும். அதானே? எடுத்துக்கோ"
பூங்குழலியின் சங்கடம் அதிகரித்தது.
"நான் என்ன சொல்ல வரேன்னா..."
தன் உள் உதட்டை கடித்து சிரிப்பை அடக்கினான் மலரவன்.
"நீ ரொம்ப அதிகமா யோசிக்கிறேன்னு நினைக்கிறேன்"
தன் பார்வையை இங்கும் அங்கும் ஓடவிட்ட அவள், அவனை பார்த்த போது, தன் முகத்தில் புன்னகை மாறாமல் நின்றிருந்தான் மலரவன்.
"என்னை கொஞ்சம் பேச விடுறீங்களா?"
"சரி சொல்லு"
"எனக்கு பயம் இல்ல... ஆனா ரொம்ப சங்கடமா இருக்கு. உங்களுக்கும் அந்த சங்கடத்தை கொடுக்க வேண்டாம்னு நினைத்தேன். நான் அங்கிள் ஆன்டியை பத்தி தான் கவலைப்பட்டேன். அதனால தான், நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கல"
"மகிழன் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதால, அவங்க குற்ற உணர்ச்சியில் இருக்காங்க. நீ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கணும் அப்படிங்கிறது தான் அவங்களோட விருப்பம். அதை புரிஞ்சுக்கோ"
அமைதியானாள் பூங்குழலி.
"நீ எதைப் பத்தியும் கவலைப்பட வேண்டாம். ஒருவேளை, இங்க சூழ்நிலை உன்னை மறுபடியும் மறுபடியும் சங்கடப்படுத்திக்கிட்டே இருந்தா, நம்ம லண்டனுக்கு போயிடலாம்"
அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் பூங்குழலி.
"சிவகாமி ஆன்டியையும் சேர்த்து தான் சொல்றேன். அது உனக்கு ஓகே தானே?"
மென்று விழுங்கினாள் பூங்குழலி.
"மேரேஜ் அப்படிங்கிறது லைஃப் டைம் கமிட்மென்ட். உங்க அப்பா அம்மா வாக்கு கொடுத்துட்டாங்க அப்படிங்கிறதுக்காக, எதுக்காக உங்களை நீங்களே பலிகடாவா ஆக்கிக்கிறீங்க?" என்றாள் பூங்குழலி.
தன் தொண்டையில் இருந்து எதிரி குதிக்க நினைத்த சிரிப்பை அடக்கி கொண்டான் மலரவன்.
"பலிகடாவா? நானா?" பதில் கேள்வி கேட்டான்.
முகம் சுருக்கினாள் பூங்குழலி. இதில் சிரிக்க என்ன இருக்கிறது?
"அப்படியெல்லாம் யாரும் என் தலையை எடுத்துட முடியாது. ஏன்னா, நான் ஒன்னும் ஆடு இல்ல" புன்னகைத்தான் மலரவன்.
"நீங்க லண்டனுக்கு போய், நிறைய பேச கத்துக்கிட்டீங்கன்னு தோணுது"
அதைக் கேட்டு சிரித்த அவன்,
"லண்டன்ல, நான் பேச கத்துக்க கோர்ஸ்க்கு போனேன்னு நினைக்கிறியா? எனக்கு நல்லாவே பேச வரும். அதிகமா மத்தவங்க கூட பேசி பழகுனது இல்ல. எங்க அம்மா அப்பாவோட வெட்டிங் ஆனிவர்சரி அன்னைக்கு, உன்கிட்ட நான் நல்லா தானே பேசினேன்? என்னைப் பத்தின உங்க அப்பாவோட கணிப்பு தப்பா போனதா, நீ கூட என்கிட்ட சொன்ன"
ஆம் என்று தலையசைத்தாள்.
"நான் கேட்டதை நீங்க மறக்கலன்னு நினைக்கிறேன்"
"மறக்கல"
"என்னது?"
"ஜாப்" புன்னகைத்தான் மலரவன்.
ஆம் என்று தலையசைத்தாள் பூங்குழலி.
"கல்யாணத்துக்கு அப்புறம் வேலையில் சேர போறியா? இல்ல, முன்னாடியே சேரப் போறியா?"
"கல்யாண தேதியை குறைச்சிட்டிங்களா என்ன?"
வாய்விட்டு சிரித்த மலரவன்,
"ஃபிக்ஸ் பண்ண போறேன். நாளைக்கு, இல்லன்னா, நாளன்னைக்கு நம்ம கல்யாணம் இருக்கும்"
அதைக் கேட்ட அவளது விழிகள் அகலமாயின. அது அவனை மேலும் சிரிக்க வைத்தது. அவன் இவ்வளவு சகஜமாய் இருந்ததை பூங்குழலியால் நம்ப முடியவில்லை.
"அப்பா..." என்று அவள் ஏதோ சொல்ல முயல,
"தெரியும். நான் அம்மா கிட்ட சொல்லி, ஐயர் கிட்ட அதை பத்தி கேக்க சொல்றேன். அவர் சொல்றதுக்கு தகுந்த மாதிரி டேட் ஃபிக்ஸ் பண்ணிக்கலாம். ஓகேவா?"
சரி என தலையசைத்தாள்.
அப்பொழுது காப்பியுடனும் வடிவுக்கரசியுடனும் வந்தார் சிவகாமி. அதை பெற்று பருகினான் மலரவன்.
"ரொம்ப நல்ல காபி, ஆன்ட்டி"
இதமாய் புன்னகைத்தார் சிவகாமி.
"இந்த ஒரு விஷயத்தை தான் நான் லண்டனில் ரொம்ப மிஸ் பண்ணேன். நல்ல காபி கிடைக்காம நான் ரொம்பவே வெறுத்துப் போனேன். நீங்க மட்டும் லண்டன்ல ஒரு காபி ஷாப் ஓபன் பண்ணீங்கன்னா, சில வருஷத்திலேயே பெரிய மில்லியனர் ஆயிடுவீங்க" மீண்டும் காப்பியை பருகினான் அவன்.
"மறுபடியும் நீங்க லண்டனுக்கு போறதை பத்தி எண்ணம் இருக்கா?" என்றார் சிவகாமி.
"அது என் கையில் இல்லையே ஆன்ட்டி" என்றான் பூங்குழலியை பார்த்தபடி.
"அப்படின்னா?" என சிவகாமி கேள்வி எழுப்ப, அவன் கூறியதை புரிந்து கொண்ட வடிவுக்கரசி புன்னகை புரிந்தார்.
"கல்யாணத்துக்கு பிறகு அவர் தனிப்பட்ட முறையில முடிவெடுக்க முடியாது இல்ல? அவரோட திருமதியும் சேர்ந்து தானே அந்த முடிவை எடுக்கணும்" என்றார் வடிவுக்கரசி.
அவன் கூறியதன் அர்த்தத்தை புரிந்து கொண்ட சிவகாமி, பூங்குழலியை பார்த்தபடி தலையசைக்க, சங்கடத்தில் ஆழ்ந்தாள் பூங்குழலி.
புன்னகை மாறாமல் காப்பியை பருகினான் மலரவன்.
அன்பு இல்லம்
"என்ன யோசிச்சிகிட்டு இருக்க மின்னல்?" என்றார் மணிமாறன்.
"குழலியை பத்தி தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன்"
"நானும் அவ முடிவை நினைச்சு தான் டென்ஷனா இருக்கேன். அவளை நிச்சயம் சம்மதிக்க வச்சிடுவேன்னு எப்படி மலரவன் அவ்வளவு நம்பிக்கையோட சொன்னான்னு எனக்கு புரியல"
"நான் ஒரு விஷயத்தை கவனிச்சேன்" என்றார் மின்னல்கொடி யோசனையுடன்.
"என்ன?"
"குழலி ஹாஸ்பிடலுக்கு போயிட்டு வீட்டுக்கு திரும்பி வந்த போது, அவகிட்ட ஒரு பெரிய மாற்றத்தை நான் கவனிச்சேன்"
"அதுக்கு?"
"மலரவன் தான் அவளை ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்தான்"
"அப்படின்னா அவளோட மாற்றத்துக்கு மலர் தான் காரணம்னு சொல்றியா?"
"ஆமாம். ஹாஸ்பிடலுக்கு போறதுக்கு முன்னாடி, அவ ரொம்பவே உடஞ்சி போயிருந்தா"
"அவ பல தடவை மயங்கி விழுந்தது எனக்கு கூட நல்லா ஞாபகம் இருக்கு"
"அப்படி இருக்கும் போது, அவளுக்கு அப்படி ஒரு தன்னம்பிக்கை திடீர்னு எங்கிருந்து வந்தது?" கேள்வி எழுப்பினார் மின்னல்கொடி.
ஆம் என்று யோசனையுடன் தலையசைத்தார் மணிமாறன்.
"மலரவன் தான் அவகிட்ட பேசி இருக்கணும்னு நான் நினைக்கிறேன்"
"ஆனா அவன் சொன்னதை எப்படி அவ கேட்டா?"
"நம்ம வெட்டிங் ஆனிவர்சரி பார்ட்டியில கூட, அவன் அவ கிட்ட பேசிகிட்டு இருந்தான்"
"ஒரு வருஷத்துக்கு முன்னாடி நடந்த நம்ம கல்யாண நாள் பார்ட்டியையா சொல்ற?"
"ஆமாம்..."
"நீ தேவையில்லாம எதை எதையோ யோசிக்கிறேன்னு எனக்கு தோணுது"
அமைதியாய் இருந்தார் மின்னல்கொடி, மணிமாறன் கூறுவது உண்மையாக இருக்கலாம் என்று எண்ணியபடி.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro