6
தரைத் தளத்திலிருந்து முதல்தளம் செல்ல மொத்தம் இருபது படிகள். ஒரு படிக்கு இரண்டு நொடிகள் என்றாலும், மிஞ்சிமிஞ்சிப் போனால் அறுபது நொடிகள் ஏறலாம்.
அந்த ஒரு நிமிடம் ஏனோ யுகம்போல இருந்தது அவளுக்கு. புடவையின் மடிப்பை ஒற்றைக் கையால் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு படியாக அவள் ஏற, அவளது வேகத்திற்கு இணையாகவே அவனும் மெதுவாய் ஏறினான் படியில்.
"அப்பறம்..." என அவள் இழுக்க, கடைசிப் படி வந்துவிட, அவன் நின்று திரும்பிப் பார்த்தான் அவளை.
"வேஷ்டி சட்டை ரொம்ப நல்லா இருக்கு உங்களுக்கு.."
எப்படியோ குழறாமல் சொல்லிவிட்டு, தயக்கமாக அவனைப் பார்த்தாள் யமுனா.
அவன் சலனமின்றி, "உன் ஸேரியும் நல்லா இருக்கு யமுனா. குட்நைட்" என்றுவிட்டு விலகி நடந்து சென்றுவிட, யமுனா பூரிப்புக் குறையாமல் வீடு சென்றாள்.
.
.
வியாழக்கிழமைகளில் சுமதியும் சுந்தரியும் பக்கத்து ஏரியாவில் இருந்த சாய்பாபா கோயிலுக்குச் சென்று வருவது வழக்கம். அப்போதெல்லாம் வீடே ஜவ்வாதாய் மணப்பதும் வழக்கம்.
அன்றும் அவர் வந்து விபூதியோ ஜவ்வாதோ எதையோ யமுனாவின் அறைக்குள் தெளிக்க, கணினியிலிருந்து நிமிர்ந்து புன்னகைத்தாள் யமுனா.
"வரம் வாங்கிட்டு வர்றியோ இல்லையோ, வாசம் நல்லா வாங்கிட்டு வர்றம்மா நீ!"
"அம்மு.. உனக்குக் கல்யாணம் சீக்கிரமே நடந்துடுமாம்.. பாபா அருள் சொல்லிட்டாரு.. நானும் நேர்த்திக்கடன் வேண்டியிருக்கேன், உன் கல்யாணம் நல்லபடியா நடந்தா, நூறு பேருக்கு அன்னதானம் பண்றேன்னு!"
"உன் ஸ்பெஷாலிட்டியில வேண்டுதல் செஞ்சிருக்க, நீ அறிவாளி தான் அம்மா! ஆனா கல்யாணம் இப்ப கிடையாது."
"பாக்கலாம் பாக்கலாம்.."
அவரது தொனியில் ஆயாசமாகி அவள் தலையசைத்துவிட்டு வேலையில் கண்ணானாள்.
மதிய உணவுக்கு வெளியே வந்தபோது, மேகநாதன் டிவியில் ஹாலிவுட் அதிரடி ஆக்சன் திரைப்படம் ஒன்றை மும்முரமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.
"என்ன புரியுதுன்னு பாக்கறீங்க நீங்க?"
"வசனமா அம்மு முக்கியம்? அந்த சண்டைய பாரு, சும்மா சுழண்டு சுழண்டு அடிக்கறான் பார் என் தலைவன் ப்ரூஸ்லீ!"
"ப்ரூஸ்லியா ஜெட்லியா, கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்?"
அவள் குறுநகையோடு வினவ, மேகநாதன் யோசித்தார்.
"ஹ்ம்ம்...."
"அட, ரெண்டும் கிடையாது, இது கொரியன் படம், போங்கப்பா நீங்களும் உங்க சினிமா ஞானமும்!"
சிரித்துக்கொண்டே அவரும் எழுந்து வர, சுடச்சுட சாதமும் வத்தக்குழம்பும் தட்டில் இட்டு, கூடவே பொரித்த அப்பளமும் வைத்தார் சுமதி.
"ஆஹ்.. இதையெல்லாம் விட்டுட்டு அமெரிக்காவுல இருக்கணும்னு நினைக்கும் போதே கஷ்டமா இருக்கேம்மா.. பேசாம உன்னையும் பார்சல் பண்ணி என் கூடவே கூட்டிப் போகட்டா?"
"நான் எதுக்கு, நல்லா சமைக்கத் தெரிஞ்ச பையனா பார்த்துக் கல்யாணம் பண்ணி, அவனைக் கூட்டிட்டுப் போயேன் கூடவே?"
லேசாகப் புரையேறியது அவளுக்கு. தலையில் தட்டிக்கொண்டே பலமாகச் சிரித்தாள் அவள்.
"இது நல்லா இருக்கே.. மாடு பிடிக்கற மாதிரி மாப்பிள்ளைய பிடிச்சு இழுத்துட்டுப் போகவா நானு? எனக்கு சமைச்சுப் போடறதுக்குன்னே ஒருத்தன் வருவானா என்ன?"
"நீ மட்டும் சரின்னு சொல்லு, நீ கேக்கற மாதிரியே எல்லா குவாலிட்டியோடவும் மாப்பிள்ளைய கொண்டு வந்து நிறுத்துவார் உங்கப்பா!"
இப்போது புரையேறுவது மேகநாதனின் முறை.
"ஏய்.. நீ பாட்டுக்கு என்னைய ஏன் கோர்த்து விடற? பார் அம்மு, கல்யாணமெல்லாம் நம்ம இஷ்டத்துக்கு நடந்துறாது. நிறைய அட்ஜஸ்ட் பண்ணிக்கணும், நிறைய மாத்திக்கணும், நிறைய விஷயம் புதுசா கத்துக்கணும். உறுதியான கமிட்மெண்ட் இருக்கணும். அப்ப தான் கல்யாணம் பண்ண முடியும்."
"ஹ்ம், அதெல்லாம் எனக்கு சுத்தமா இல்லாதப்போ, கல்யாணத்தைப் பத்தி பேசி என்ன பயன்?"
.
.
வழக்கமான நடைப்பயிற்சியை மாடியில் முடித்துவிட்டு, வேர்க்க விறுவிறுக்க அவள் படியிறங்கியபோது, முகுந்தனும் மாடிப்படி ஏறி அவர்களது தளத்துக்கு வந்தான். அவள் லேசாக சிரித்தாள். பேசலாமென்றால் எந்த டாபிக்கும் கிடைக்கவில்லை.
சரியெனப் புன்னகைத்துத் தலையசைத்துவிட்டுத் தங்கள் வீட்டுக் கதவைத் திறந்தபோது, முகுந்தனும் உள்ளே வர, அவள் கேள்வியாகத் திரும்பிப் பார்த்தாள்.
"ஆன்ட்டி சொன்னாங்களே.. செட்டாப் பாக்ஸ், ரவுட்டர் எல்லாம் அடிக்கடி மக்கர் பண்ணுதுன்னு... அதான், வயர் எல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணனும்"
"ஓ.. அம்மாவும் அப்பாவும் ஒரு கல்யாணத்துக்குப் போயிருக்காங்க. நீங்க பாருங்க, நான் குளிச்சிட்டு வர்றேன்"
அவள்பாட்டிற்கு வீட்டை அவன்பொறுப்பில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள்.
குளித்துவிட்டு, தளர்வான டீஷர்ட்டும் முழங்கால் வரை வரும் ஷார்ட்ஸும் அணிந்து அவள் வர, அவர்கள் வீட்டு டிவியின் அருகே மண்டியிட்டு, அடியில் இருந்த வயர்களை ஆராய்ந்துகொண்டிருந்தான் அவன். அவள் வந்த அரவத்தில் நிமிர்ந்து பார்த்தவன், "வயர்ல எந்தப் பிரச்னையும் இல்ல. எல்லாம் இன்டாக்ட்டா இருக்கு. ரவுட்டர் எங்கே?" என வினவினான்.
அவள் வலதுபுறம் கைகாட்டினாள், அவளது அறையை நோக்கி.
"மே ஐ?"
"ம்ம், நோ ப்ராப்ளம்"
அவளும் கைபேசியைப் பார்த்தவண்ணம் அறைவாசலில் நிற்க, சுவற்றில் மாட்டியிருந்த வைஃபை ரவுட்டரை ஆராய்ந்தான் அவன். கண்கள் அறையை அனிச்சையாகவே நோட்டமிட்டதை யமுனாவுமே கவனித்தாள்.
சுவரில் ஜேம்ஸ் பாண்ட், டைட்டானிக், ஹாரி பாட்டர் பட போஸ்டர்கள். சிற்சில ப்ளாஸ்டிக் பட்டாம்பூச்சிகள். மூலையில் ஒரு மர போர்டில் சில கல்லூரிக் காலப் புகைப்படங்களும், அலுவலக புகைப்படங்களும், குடியிருப்புப் புகைப்படங்களும் கூட. அதிலொன்றில் அவனும்கூட இருந்தான், ஓரமாக. குவியத்தில் வராமல்.
யமுனா யதார்த்தமாக செய்வதுபோல அந்தப் புகைப்படத்தை மறைத்து நின்றுகொண்டாள்.
அவன் ரவுட்டரை மீண்டும் உயிர்ப்பித்துவிட்டு விலகினான்.
"அதுல கனெக்சன் லூசா இருந்தது. மறுபடி நின்னுபோனா சொல்லு"
"ஹ்ம்"
வாசல் வரை சென்றுவிட்டவன், எதையோ மறந்தது போல நின்றான்.
"மணி ஏழு ஆகப் போகுது.. ஆன்ட்டி எப்ப வருவாங்க?"
தோளைக் குலுக்கினாள் யமுனா.
"ரொம்பத் தெரிஞ்சவங்க வீட்டு விசேஷம். ஸோ எப்படியும் ஒன்பது, பத்து மணியாச்சும் ஆகிடும். ஏன்?"
ஐந்து விரல்களையும் மடக்கி உதட்டினருகே வைத்து சைகையால் வினவினான் அவன்.
"அதுவா.. இருக்கவே இருக்கு ஸொமாட்டோ! ஆர்டர் பண்ணிட்டா போச்சு.."
அவன் அதிருப்தியாக தலையை ஆட்டினான்.
"கொரோனா இன்னும் முழுசா போகல. ஆனா ஹோட்டல்ல எல்லாம் இப்ப யாருமே மாஸ்க் போடறதில்ல. எப்படி உன் சாப்பாடு ஹைஜீனிக்கா இருக்கும்னு நம்புவ?"
"அ..அது.."
"யாரையும் டிபெண்ட் பண்ணாம வாழறதுக்கு, ஒண்ணு ரெண்டு விஷயம் கண்டிப்பா தெரிஞ்சு வெச்சிருக்கணும். அதுல முதலாவது, சமையல்."
யமுனா சோர்வாகத் தலையை பின்னால் சரித்தாள்.
"அச்சோ! என்னவோ நான் தான் கத்துக்க மாட்டேன்னு சொல்ற மாதிரி! யூட்யூப்ல பாத்து எதாவது பண்ணலாம்னு போவேன். ஆனா என்னதான் கரெக்டா ஃபாலோ பண்ணி அப்படியே செஞ்சாலும், எப்பவுமே சொதப்பிடறதுதான் வழக்கம்! மேனுஃபாக்ச்சரிங் டிஃபெக்ட்."
அவளைத் தாண்டிக்கொண்டு சென்று சமையலறைக் குழல்விளக்கைப் போட்டான் அவன்.
"மனசார செஞ்சா, எந்த விஷயமும் நல்லா வரும். செய்யலாம், வா."
மறுக்கத் தோன்றாமல் யமுனாவும் கிச்சனுக்குள் நுழைந்து அவனருகே நின்றாள்.
ப்ரிட்ஜைத் துழவி சில காய்களை எடுத்துக்கொண்டவன், அலமாரிகளை அலசி மற்ற பொருட்களையும் எடுத்து மேடையில் அடுக்கினான்.
"சமையலுக்கு முதல் ஸ்டெப். தேவையான பொருட்களை எல்லாம் கரெக்டா எடுத்து வெச்சுக்கணும். பின்னால தேடக்கூடாது. டைம் சேவ் ஆகும், டென்ஷனும் இருக்காது."
கேரட்டை துண்டுகளாக நறுக்கி வைத்துவிட்டு, வெங்காயத்தை அவன் உரிக்க, கேரட் துண்டுகளில் ஒன்றிரண்டைத் திருடிக்கொண்டு வெங்காயத்தின் காட்டம் எட்டாத அளவு தள்ளி நின்றுகொண்டாள் யமுனா. அவனோ இலகுவாக இரண்டே நொடிகளில் சடசடவென வெங்காயத்தை நறுக்கிவிட்டான், ஒருசொட்டுக் கண்ணீர் விடாமல்.
பூண்டு, இஞ்சி, வெங்காயத்தாள், கொத்தமல்லி முதலியவற்றையும் பொடிப்பொடியாக நறுக்கியவன், அவற்றைத் தனியாக எடுத்து வைத்துவிட்டுக் கத்தியைக் கழுவி வைத்தான்.
"எடுக்கற சாமானை உடனுக்குடனே கழுவி வெச்சிட்டா, சமையலை முடிச்சிட்டு மொத்தமா கழுவிக் கஷ்டப்பட அவசியமிருக்காது."
ஒவ்வொன்றாக அவளுக்கு அறிவுரை தந்துகொண்டே அவனும் செய்ய, யமுனாவோ தன்பாட்டில் கேரட்டைக் கடித்தவாறு அவன் முகத்தைப் பார்த்துப் பகல்கனவில் இருந்தாள்.
அவள் முகத்தின் எதிரே சொடக்கிட்டான் முகுந்தான்.
"என்ன ஆச்சு?"
ஒன்றுமில்லையென அவசரமாகத் தலையாட்டினாள் அவள்.
"அடுத்தது என்ன?"
"அடுத்தது, நீ தான் செய்யணும். சொல்லித் தந்த மாதிரி அடுப்பை பத்த வெச்சு காயை 'ஸாடே' பண்ணு."
"அ..அப்படியா..? நானா? ஷ்யூரா?"
"யாருக்கு சமையல் கத்துக்கணும், உனக்கா எனக்கா?"
வாய்பேசாமல் அடுப்பைப் பற்ற வைத்து அகன்ற வாணலியை அடுப்பில் வைத்தாள் அவள்.
"ரெண்டு ஸ்பூன் எண்ணெய்"
அவன் சொல்ல, அவளும் அளந்து ஊற்றினாள் வாணலியில். மறுநொடியே காயை அள்ளி அதில் போட எத்தனிக்க, முகுந்தன் தடுத்தான்.
"எண்ணெய் காயுறவரை பொறுமையா இருக்கணும். காயாத எண்ணெய்ல சமையல் பண்ணினா, எந்த ஃப்ளேவரும் வெளிய வராது"
"ஓ.."
எண்ணெய் காய்ந்து புகையத் தொடங்க, அடுப்பைக் குறைத்துவிட்டு வெங்காயத்தை இடுமாறு கண்காட்டினான் அவன். வெங்காயத்தைப் போட்டதும் புஸ்ஸென்று எண்ணெய் சீற, அவள் இரண்டடி பின்னால் நகர்ந்து அவன் மார்பில் மோதி நின்றாள்.
"ஒண்ணும் ஆகாது. வெங்காயத்தை கருக விடாம வேகமா கிளறிட்டே இரு"
அவள் கையைப் பிடித்து அவனே கிளறினான் வாணலியை. வெங்காயம் வதங்கியபோது எழுந்த இனிய மணம் யமுனாவை அதிசயிக்கச் செய்தது.
"கார்லிக், ஜிஞ்சர்"
இரண்டையும் கையில் எடுத்து அவள் வாணலியில் தூவினாள். இன்னும் அவள் கையை விடாமல் கிளறிக்கொண்டிருந்தான் முகுந்தன்.
"கேரட், கேப்சிகம்"
பாதிக் கேரட்டை அவளே தின்று தீர்த்திருக்க, மீதியுள்ளவற்றை மட்டும் அசட்டுச் சிரிப்போடு அடுப்பில் சேர்ப்பித்தாள் அவள்.
அதற்குள் பக்கத்து அடுப்பில் மூடி வைத்திருந்த பாத்திரம் கொதிக்கத் தொடங்கிட, "துண்டைப் போட்டு அதைத் திற" என்றான் அவன்.
அவளும் விரலில் சுட்டுவிடாமல் துண்டால் பிடித்து மூடியைத் திறக்க, உள்ளிருந்து எழுந்த நீராவி முகத்தில் அடித்து அவளது கண்ணாடியில் மூடுபனியாகப் படிந்தது. என்ன செய்யவெனத் தெரியாமல் அவள் தடுமாறித் திரும்பிட, முகுந்தன் ஒற்றைக் கையால் அவளை ஆடாமல் நிலையாக நிறுத்தி, மறுகையால் அவளது கண்ணாடியைக் கழற்றி மடக்கி வைத்தான்.
அவனது அருகாமை இப்போது இன்னும் அழுத்தமாக உறைத்தது. வழக்கம்போல யமுனாவின் இதயமும் இரட்டிப்பாகத் துடித்தது. முகுந்தனின் பார்வையும் அவளது முகத்தில் தான் இருந்தது. மெதுவாக மூக்குத் தண்டில் இருந்த கண்ணாடித் தழும்பை ஒற்றை விரலால் தொட்டான் அவன். அவளது உள்ளங்கால்கள் சில்லிட்டன. இதழ்கள் அனிச்சையாக விரிந்தன அரை மில்லிமீட்டர் தூரத்துக்கு.
சட்டென அடுப்பில் ஏதோ கருகும் வாடை இருவரையும் தாக்க, திகைத்துத் திரும்பி அடுப்பைக் கவனித்தனர் இருவருமே. முகுந்தன் காய்களைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்க, யமுனா தண்ணீரில் நீந்திக்கொண்டிருந்த நூடுல்ஸ் திரிகளை சல்லடையால் மீட்டெடுத்தாள்.
"வெரி குட். ஒரு தடவை இதை பச்சைதண்ணில கழுவிட்டு வடிகட்டணும்."
அவனது குரல் லேசாக மாறியிருந்தது. தொண்டையில் எதுவோ சிக்கிக்கொண்டதைப் போல சற்றுச் சிரமப்பட்டு பேசினான் அவன். யமுனா எதுவும் கேட்காமல் அவன் சொன்னதைச் செய்தாள்.
வடிகட்டிய அந்த வெள்ளைத் திரிகளை வாணலியில் அவள் கொட்ட, அவன் திரும்பி ஏற்கனவே வறுத்து வைத்திருந்த முட்டையை அதனுள் போட்டுவிட்டு, உப்பு, மிளகுத்தூள் எடுத்து இரண்டு சிட்டிகை சேர்த்துவிட்டு மீண்டும் கிளறினான். மூன்று நிமிடத்தில் அடுப்பை நிறுத்திவிட்டு, வாணலியை இறக்கி வைத்தான்.
"டேஸ்ட் பாரு"
முள்கரண்டி ஒன்றால் நூடுல்ஸை மீட்டி எடுத்தவன், ஒரிருமுறை ஊதிவிட்டு அவள்புறம் நீட்ட, அவனைக் கண்ணிமைக்காமல் பார்த்தவாறே வாங்கிக்கொண்டாள் அவளும். நாக்கில் உணவு பட்டதுமே கண்கள் அதன் சுவையில் விரிந்தன. நிஜமான ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள் அவள்.
"அதெப்படி? எந்த ஸ்பெஷல் டேஸ்ட்மேக்கரும் சேர்க்கலை.. ஜஸ்ட் உப்பும் காரமும் தான்.. அதுவே எப்டி இவ்ளோ சூப்பரான டேஸ்ட்ல வந்திருக்கு?"
அவன் சிரித்தான்.
"வேற எதுவும் தேவையில்ல. உப்பு, காரம், காதல் எல்லாம் கரெக்டான அளவுல இருந்தாலே போதும்."
அவளுக்கு ஒருநொடி தலைசுற்றியது. அவன் சொன்னது சரியாகத்தான் காதில் விழுந்ததா என சந்தேகமாக இருந்தது.
"எ-- என்னது? என்ன சொன்னீங்க?"
அவன் தோளைக் குலுக்கினான் சாதாரணமாக.
"உப்பு, காரமெல்லாம் கரெக்டா இருந்தாலே சாப்பாடு நல்லா இருக்கும்னு சொன்னேன்.."
"ஓ.."
அவன் தட்டுகளைத் தேடத் திரும்ப, யமுனா தலையில் தன்னைத் தானே தட்டிக்கொண்டாள் சத்தமின்றி.
.
.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro