5
"ப்ச்.. ஸொமாட்டோ... என் சாமி... பசிக்குதுய்யா... எங்கய்யா இருக்க, யப்பா..?"
கைபேசித் திரையைப் பார்த்துப் புலம்பிக் கொண்டிருந்தாள் யமுனா.
இன்னும் 'அரைவல் டைம்' முப்பது நிமிடமென்றே காட்டியது கைபேசி. பத்து நிமிடமாக அது முப்பதிலேயே தங்கியிருக்க, யமுனாவின் வயிறோ பசியில் பிசைந்து படுத்தியெடுத்தது.
"ஆறு வேளை சோறு தின்னாலும் மேற்கொண்டு நொறுக்குத்தீனி வேற திங்கற பரம்பரைடா நாங்க... என் சோத்துல இப்டி மண்ணள்ளி போடறீங்களே... என் பசியோட பாவம் உங்கள--"
அவளது புலம்பலை இடைநிறுத்தி ஒலித்தது அழைப்புமணி.
"அட, அதுக்குள்ளாரவா வந்துடுச்சு?" ஆச்சரியமாக கைபேசியையும் கதவையும் மாறிமாறிப் பார்த்தவாறே சென்று கதவைத் திறக்க... அங்கோ மீண்டும் முகுந்தன். இம்முறை அரைக்கை காட்டன் சட்டையும், சற்றே பழைய கால்சட்டையும். இயல்பாகக் கலைந்திருந்த கேசம், நெரித்த புருவங்கள்.
"ரசம் வெச்சாச்சா?"
அவள் சோர்வாக ஆமெனத் தலையசைத்தாள்.
"வீடியோவைப் பார்த்து அப்படியே தான் செஞ்சேன்.. எங்கப்பா என்னன்னா, ரசமா வெசமான்னு கேட்டு சிரிக்கறாரு! இருந்தாலும் குடிச்சிட்டாரு, மிச்சம் வைக்காம. குட் அப்பா.
நான்தான் பாவம், தெரியுமா? மதியமும் சாப்பிடல, சாயங்காலம் அம்மா தர்ற ஸ்நாக்சும் மிஸ்ஸிங். செம்ம பசி. இந்த ஸோமாட்டோ வேற சமயம் பாத்து காலை வாருது.."
"மதியம் சாப்பிடலையா? ஏன்?"
"நான் என்ன செஃப் தாமுவையா வேலைக்கு வச்சிருக்கேன், எனக்கு நேரத்துக்கு வகைவகையா சமைச்சுப் போடறதுக்கு. எனக்குன்னு இருந்தது எங்க மம்மி.. அவங்களும் ஃபீவர்ல இருக்காங்க.. அப்பறம் நான் என்னத்த சாப்பிடுவேன்?"
பசி வந்தால் பத்தும் பறந்துவிடுமென்பது உண்மைதான் போல. யமுனாவின் தயக்கம், நடுக்கமெல்லாம் எந்த மூலைக்குச் சென்றதோ தெரியவில்லை. அவள்பாட்டில் தன் சோகங்களை மடைதிறந்த வெள்ளமாகக் கொட்டிக்கொண்டிருந்தாள் அவனிடம்.
அவன் சிலகணங்கள் அவளையே ஆழமாகப் பார்த்தான்.
"எங்க வீட்டுல சாப்பிட்டிருக்கலாம்ல?"
அவள் தோளைக் குலுக்கினாள்.
"ஏகப்பட்ட உதவி ஏற்கனவே செஞ்சிட்டீங்க நீங்க. எவ்ளோ தான் நானும் கேப்பேன்.. அட்வாண்டேஜ் எடுத்துக்க கூடாதுல்ல..?"
அவன் முதன்முறையாக, அவளைக் கோபமாகப் பார்த்தான்.
"அதுக்காக.. பசியிலயே இருப்பியா?"
அவளுக்கு இந்தக் கரிசனம் புரியவே இல்லை. என்ன சொல்வதென யோசிப்பதற்குள் உள்ளறையில் அப்பாவின் குரல் கேட்க, அவசரமாக ஓடினாள் அவள். அவனும் பின்தொடர்ந்து வந்தான்.
"அம்மு, ரிசல்ட் வந்துடுச்சு. ரெண்டு பேருக்கும் நெகட்டிவ் தான்!" காய்ச்சலைத் தாண்டிய உற்சாகத்தோடு அவர் கூக்குரலிட, யமுனா உணர்ச்சிப் பெருக்கில் அழுதேவிட்டாள். ஓடிச்சென்று இருவரையும் அணைத்துக்கொண்டவள் சத்தமாக அழத் தொடங்க, அவளைத் தேற்றிக்கொண்டே, "ஹேய்.. என்னடா.. இதுக்கெல்லாமா எமோஷனல் ஆவாங்க? அங்க பாரு, முகுந்தன் சிரிக்கறான் பாரு.." என சீண்டினார் மேகநாதன்.
அவளும் நிஜமாகவே அவன் சிரிக்கிறானோ என நினைத்துத் திரும்பிப் பார்த்தாள் வெடுக்கென. அவனோ நிலைப்படியில் சாய்ந்து, ஒருவித வாஞ்சையான முகபாவத்தோடு மூவரையும் பார்த்துக்கொண்டிருந்தான்.
.
.
"ஐம் சாரி சார்.. வீட்ல ரெண்டு நாளா பேரண்ட்ஸுக்கு உடம்பு சரியில்ல, அதான் வொர்க் கொஞ்சம் தடைப்பட்டுருச்சு. இனிமே அப்படி ஆகாது சார்.."
கூடத்து சோபாவில் அமர்ந்து கூகுள் மீட்டில் அவள் தனது மேலாளரிடம் விளக்கமளித்துக் கொண்டிருக்க, அப்போதென கைபேசி வேறு அலாரம் என்று அலறியது.
'இரவு காய்ச்சல் மாத்திரை'
"ஒன் மொமண்ட் சார்.. மெடிசன் குடுத்துட்டு வந்துடறேன்"
அவரது பதிலுக்குக் காத்திராமல் அவள் எழுந்து ஓட, மறுமுனை கோபமாக ஆங்கிலத்தில் கத்தியது.
இரண்டே நிமிடத்தில் திரும்பி வந்துவிட்டாலும் அடுத்த பதினைந்து நிமிடங்களுக்கு 'தொழில் தர்மம், வேலை விசுவாசம்' போன்ற தலைப்புகளில் மேலாளர் தந்த சொற்பொழிவுகளைத் தான் கேட்க நேர்ந்தது யமுனாவிற்கு. எங்கோ பார்த்தபடி மவுசில் கை வைத்து, தெரியாமல் செய்ததுபோல அழைப்பைத் துண்டித்துவிட்டாள் அவள்.
"ப்ராஜெக்ட் மேனேஜர்ங்க எல்லாருமே கழுதைங்க! புத்தியில்லாத மலைமாடுங்க! அட்டைப் பூச்சிங்க! சே!"
ஓங்கிக் காலால் சோபாவை உதைத்தவாறு அவள் கத்த, வாசலில் ஏதோ செருமிய சத்தம் கேட்டது. யாரென்று பார்க்கத் தேவையில்லை யமுனா.
"சாரி முகுந்தன்.. நான் எங்க மேனேஜரைத் தான்--"
பேசிக்கொண்டே நிமிர்ந்தவள், வாசலில் அவன் நின்ற கோலத்தைப் பார்த்து அப்படியே உறைந்துபோனாள்.
வெள்ளை வேஷ்டி, வெள்ளைச் சட்டை, கையிலொரு தங்கநிற வாட்ச். இடப்புறம் வகிடெடுத்து வாரிய கேசம்.
திறந்த வாயை மூடாமல் நின்றவள், அவன் உள்ளே நுழையவும் சுதாரித்துக் கண்ணாடியை சரிசெய்வதுபோல் குனிந்துகொண்டாள்.
"அப்ப நீ வரலையா?"
அவள் ஒன்றும் புரியாமல் குழப்பமாக விழிக்க, முகுந்தன் தன் கையிலிருந்த அழைப்பிதழ் அட்டையை நீட்டினான்.
'மார்கழி உற்சவம்'
"அபார்ட்மெண்ட் செக்ரெட்டரியோட அக்கா பையன் பாடறாராம். எல்லாரையும் வரச் சொன்னார் அவரு. அங்கிள் சொல்லலையா?"
இல்லையெனத் தலையாட்டினாள் அவள்.
"நான் கச்சேரி, ம்யூசிக் ஃபெஸ்டிவலுக்கு எல்லாம் போகறதில்ல"
முகுந்தன் தலையை சாய்த்து சந்தேகமாகப் பார்த்தான் அவளை.
"நீ சின்ன வயசுல பாட்டு க்ளாஸ் போனல்ல?"
அவள் ஒருகணம் அதிசயமாகப் பார்த்தாள் அவனை.
'இவனுக்கெப்படித் தெரியும்?'
அவனும் அதையறிந்தவன்போல, "எங்கம்மா சொன்னாங்க" என்றான்.
"ஓ.."
"ஸோ...?"
யமுனா தயங்கினாள்.
"ரெண்டு பேருக்கும் காய்ச்சல் இன்னும் இருக்கு. தனியா விட்டுட்டு வர்றது... சரியா படல.."
"என்னது சரியா படல?" எனக் கேட்டவாறு சுமதி எழுந்து வந்தார் வெளியே.
"ம்மா!? .. உடம்பு எப்படி இருக்கு?"
"எனக்கென்ன அம்மு, கல்லு மாதிரி இருக்கேன். காய்ச்சல் எல்லாம் எப்பவோ போயாச்சு!"
சந்தேகமாக அவரது நெற்றி, கழுத்து, முதுகு, கைகள் என்று எல்லா இடமும் கைவைத்துப் பார்த்தாள் அவள். போதாக்குறைக்கு முகுந்தனிடமும், "செக் பண்ணுங்களேன்" என்றிட, லேசான புன்னகையோடு சுமதியின் நெற்றியில் கைவைத்துப் பார்த்துவிட்டு, "ஆன்ட்டி, நீங்க கம்ப்ளீட்லி ஆல்ரைட்!" எனச் சான்றளித்தான் அவன்.
"ம்ம், சரி சொல்லு, எது சரியா படல?"
"செக்ரெட்டரி வீட்டு கச்சேரி.. அதுக்கு போறதை பத்தி பேசிட்டு இருந்தோம்."
"அட, ஆமா.. சுந்தரி அன்னிக்கே சொன்னா என்கிட்ட. அம்மு.. நானும் அப்பாவும் வர முடியாதுல்ல, நம்ம வீடு சார்பா நீ போயிட்டு வந்துடுடா.. மிஞ்சி மிஞ்சி போனா ஒருமணி நேரம்.. போயிட்டு வாங்க... அப்பறம் செக்ரட்டரி அங்கிள் கோவிச்சுக்குவாரு.."
யமுனா இருகணங்கள் யோசித்தாள். முகுந்தன் அவளுக்காகக் காத்திருந்ததுபோல நின்றான்.
.
.
புடவை கட்டத் தெரியும் அவளுக்கு.
கல்லூரியில் கலைவிழாவுக்குக் கட்டியிருக்கிறாள்; அலுவலக பங்ஷன்களுக்கு கட்டியிருக்கிறாள்; ஏன், உறவினர் வீட்டு விசேஷங்களுக்குக் கூட கட்டியிருக்கிறாள்.
ஆனால் இன்று ஏனோ புடவையில் மடிப்புகள் எடுக்க முயன்றபோது விரல்கள் அநியாயமாக சிக்கிக்கொண்டன. முந்தானையைத் தோளில் நிற்கவைத்து பின் குத்த முடியாமல் மடிப்புகள் நழுவின. பதற்றத்தோடு புடவை கட்ட முயன்று பரிதாபமாகத் தோற்றுக் கொண்டிருந்தாள் அவள்.
ட்ரெஸ்ஸிங் டேபில் நிலைக்கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தை மீண்டும் ஒருமுறை சோர்வாகப் பார்த்தாள் யமுனா.
"ஃபோக்கஸ் யமுனா... ஃபோக்கஸ்!"
ஏனோ மனத்திரையில் புத்தம் புதிதாய் வேஷ்டியெல்லாம் கட்டுகின்ற முகுந்தனே அடிக்கடி வந்துபோனான்.
ஏதோ பழைய தமிழ்ப்பாடலில் வருமே.. உன்னை நினைத்தால் புடவை மடிப்புக்கூட நழுவுதே என்று... விரசமென நினைத்தாள் அன்று... இன்றேனோ நிஜம்தானோ எனத் தோன்றியது.
எப்படியோ பதினைந்து நிமிடங்கள் கழித்து அந்த செண்பகப் பூ போட்ட புடவையைக் கட்டி முடித்து, தலைமுடியைப் பின்னலிட்டு, கண்ணுக்கு மையிட்டு கண்ணாடியும் போட்டு, கண்ணாடி மறைக்காத மூக்குத் தண்டில் சின்னதாய்க் கருப்புப் பொட்டு ஒன்றும் இட்டு, கைக்கு சத்தமெழும்பாத ஒற்றை வளையல்களை மாட்டிக்கொண்டு அவள் கிளம்ப, சோபாவில் காத்திருந்த முகுந்தன் எழுந்தான். சுமதி அவளை ஆதுரமாகப் பார்த்து, முகத்தை வழித்துத் திருஷ்டி கழித்தார்.
"நீ புடவை கட்டி எத்தனை மாசமாச்சு... உன் கல்யாணத்துல தான் அடுத்துக் கட்டுவியோன்னு நினைச்சேன்.."
" ம்மா!!"
அவள் பற்களைக் கடித்துச் சீற, சுமதி அமைதியானார்.
"போலாமா?" முகுந்தனிடம் கேட்டாள் அவள்.
"ஓ... வரோம் ஆன்ட்டி"
சுமதிக்குக் கையசைத்துவிட்டு அவள்பின்னால் நடந்தான் அவன். தரைத்தளத்தில் இருந்த குடியிருப்புப் பொதுக்கூடத்தை அடைந்தபோது, அது பாதி நிரம்பியிருந்தது. யமுனா சோர்வாக முனகிக்கொண்டே உள்ளே நடந்தாள்.
பின்சீட்டுகளில் அவளைப் போலவே வரப்பிடிக்காத குழந்தைகளெல்லாம் அமர்ந்திருக்க, அவளும் சென்று அந்த வரிசையிலேயே அமர்ந்துகொண்டாள். முகுந்தன் முன்பக்கம் சென்றுவிடுவானெத் தெரியும் அவளுக்கு.
ஆனால் தனது அருகிலேயே அவனும் அமர, யமுனா வினோதமாகப் பார்த்தாள் அவனை.
"ஷ்யூரா? இங்க தான் உக்காரணுமா நீங்க?"
அவன் தலையை சரித்தான் குறும்பாக.
"ம்யூசிக் தெரிஞ்சவங்களே இந்த ரோவுல தான் உட்கார்ந்திருக்காங்க. நான் முன்னால போனா மரியாதையா இருக்குமா என்ன?"
அவளுக்கு சிரிப்பு வந்தது. ஆனாலும் அதைக்காட்டிலும் வெட்கமும் வந்தது. தலையை மறுபுறம் திருப்பிக்கொண்டாள் அவள். அங்கிருந்த சிறுவன் பரிதாபமாக அவளைப் பார்த்தான். அவனைப் பார்த்தவள், "நானும் உன் கேசு தான்" என்றாள் உதட்டை பிதுக்கி.
பத்து நிமிடம் 'யமுனா கல்யாணி' ராகத்தில் 'மார்கழித் திங்கள்' பாடலைப் பாடி அவர் பக்தியை ஊட்ட முயற்சிக்க, யமுனாவோ போரடித்து அமர்ந்திருந்தாள்.
பாடகர் பாட்டை முடிக்கும்போது யமுனா பலமாகக் கைதட்ட, அரங்கமும் அதையே செய்தது. அவர் உற்சாகமாக அடுத்த பாட்டை ஆரம்பித்தார்.
"போச்சுடா.."
"கிருஷ்ணா முகுந்தா முராரி - ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரி.."
"அடேடே.. உங்க பேரை வச்சுத்தான் பாடறாரு!" அவள் குறும்பாக சிரிக்க, அவர் உடனே அடுத்த வரிக்குச் சென்றார்.
"யமுனானு நதிரேயி... தாக்கிதி வந்த்தா..
யமுனானு நதிரேயி... தாக்கிதி வந்த்தா...
கிருஷ்ணா முகுந்தா முராரி..."
"அக்கா உங்க பேரும் வருது பாருங்க!!" பக்கத்திலிருந்த வாண்டு சரியாகக் கவனித்துச் சொல்ல, அவள் தலையாட்டினாள் ஆயாசமாக.
"முகுந்தன் இருந்தா யமுனா இல்லாமப் போகுமா?"
சட்டென்று நாக்கைக் கடித்துக்கொண்டவள் முகுந்தனைத் திரும்பிப் பார்த்தாள். அவனும் அவளைத் திரும்பிப் பார்த்துக்கொண்டிருக்க, குழந்தையின் முதுகுக்குப் பின்னால் மறைந்துகொண்டாள் அவள்.
"ஹிஹி.. பாட்டுல..." என சமாளிக்க, அவனோ இம்மியும் திரும்பிடவில்லை அவளை விட்டு.
"முகுந்தன் இருக்கற இடமெல்லாம் யமுனா இருப்பாளா?"
"ஹஹ.. ஆக்சுவலா, யமுனா இருக்கற இடத்துல தான், முகுந்தன் எப்பவும் இருப்பான்.. நதிதீரத்துல புல்லாங்குழல் வாசிச்சதால அவன் முரளிதரன்; நதியில பாம்பு மேல நடனமாடினதால அவன் காளிங்க நர்த்தனன்; ஏன், அதிகமாத் தெரியாத இன்னொரு பேரும் இருக்கு முகுந்தனுக்கு... யமுனா புலின விஹாரன். அப்படின்னா யமுனைக் கரையில் குடியிருக்கறவன்னு அர்த்தம்.."
அவள் நிதானமாக சொல்ல, புருவத்தை சற்றே உயர்த்திப் புதிதாகக் கேட்பதுபோல் கேட்டுக்கொண்டான் அவன்.
"அப்ப கிருஷ்ணனும் யமுனாவும் லவ்வர்ஸா அக்கா?" என்றான் அருகிலிருந்தவன்.
"கல்யாணமே பண்ணிக்கிட்டார் குட்டி! ருக்மிணி சத்யபாமாவையெல்லாம் அவருக்கு விபரம் தெரிஞ்ச பின்னால தான் லவ் பண்ணினார்.. ஆனா, பொறந்ததுல இருந்து, அவரோடவே வந்த ஒரே மனைவி யமுனா தான். சின்ன வயசுல அவரோடவே துள்ளிக் குதிச்சு, தாவி சிரிச்சு, ஓடி ஒளிஞ்சு விளையாடினா யமுனாவும்.. அவர்தான் கவனிக்கல.."
"ம்ப்ச்.. பாவம்ல.."
"ஹ்ம்ம்"
பாடகர் பாட்டை முடித்துவிட, கைதட்டல்கள் அரங்கத்தை நிறைத்தன. அத்தோடு கச்சேரி முடிந்துவிட, "அப்பாடா!" என்றவாறு எழுந்தாள் யமுனா.
"டின்னர் ஏற்பாடு பண்ணியிருக்காங்க. சாப்பிட்டுப் போலாம்" என முகுந்தன் சொல்ல, அவளும், "தாராளமா!" என்றாள் உற்சாகமாக.
பாக்குமட்டை தட்டுக்களில் புளியோதரையும் தயிர்சாதமும் தரப்பட, ஆளுக்கொரு தட்டில் வாங்கிவந்து, க்ரானைட் கல் பெஞ்ச் ஒன்றிற்கு வந்தனர்
"வெள்ளை வேஷ்டி.. அழுக்காகிடும்"
யமுனா கவலையாக சொல்ல, முகுந்தன் நின்றான்.
"அதுக்கு என்ன பண்றது?"
யமுனா ஒருகணம் யோசித்துவிட்டு, தோளில் தொங்கிய புடவையின் முந்தானையால் தூசியைத் துடைத்துவிட்டாள் அவள்.
"அந்த சேலை அழுக்கானா மட்டும் பரவால்லயா?"
"ஆக்சுவலி, வெள்ளை ட்ரெஸ்ஸுக்கு பதிலா வேற எந்த ட்ரெஸ்ல அழுக்கானாலும் பெட்டர் தான்."
அவன் தலையசைத்துவிட்டுத் திரும்பிக்கொள்ள, யமுனா தனக்குள் புன்னகைத்தாள்.
சாப்பிட்டுக் கையலம்பி இருவரும் எழுந்து நடந்து படிக்கட்டுக்கு வந்தபோது, கூட்டமெல்லாம் வீட்டுக்குப் போயிருந்தது. இருவர் மட்டும் நின்றனர் பாதையில்.
.
.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro