Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

3


வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகள் வேலையிலேயே கழிந்துவிட, ஞாயிறுக்காக ஆர்வமாக எதிர்பார்த்திருந்தாள் யமுனா. ஆறு மணிக்கே எழுந்தவள், மூச்சுப்பயிற்சி செய்துவிட்டு, அவர்கள் தெருவைச் சுற்றி இரண்டு முறை ஓடினாள் முழுவேகத்துடன். நாய்கள் துரத்துகின்றனவோ என சில பேப்பர் போடும் பையன்கள் சந்தேகமாகப் பார்த்தாலும், அதைத்தவிர பெரிதாக எந்த அசம்பாவிதமும் இல்லை.

டாண் என்று எட்டு மணிக்கு ட்ராக் பேண்ட்டும் 'சென்னை சூப்பர் கிங்ஸ்' மஞ்சள் ஜெர்சியுமாய் தயாராகி வந்தவள், அம்மாவிடம் லஞ்ச் பேகை வாங்கிக்கொண்டு ஸ்கூட்டியில் கிளம்பினாள் மைதானத்துக்கு. அங்கே பட்டாளமே அவளுக்காகக் காத்திருந்தது, முழுவதும் மஞ்சள் டிஷர்ட்டுகளாக.

"யமுனா!!"

"ஸ்வேதா!!"

"ஹாய் யமுனாக்கா!"

"ஹேய்.. மணி, எப்டிடா இருக்க!?"

"யமுனா!"

"ஓய் பீட்டர்!"

எட்டு ஆண்கள், நான்கு பெண்கள். அவர்கள்தாம் கோபால் நகரின் சாலைக் கிரிக்கெட் அணி. அதில் முக்கிய அங்கத்தினராய் யமுனாவும் அவளது பள்ளித் தோழி ஸ்வேதாவும். அவர்கள் வயதுப் பெண்களில் பெரும்பாலானோர் வாலிபால், டென்னிகாய்ட், பாட்மிண்டன் என்று க்ளப்களில் விளையாடும் மென்மையான விளையாட்டுக்களின் பக்கம் சாய்ந்துவிட, யமுனாவுக்கு ஏனோ புழுதி பறக்கத் தெருவில் இறங்கி ஆடுமிந்த 'ஸ்ட்ரீட் கிரிக்கெட்'மீது அப்படியொரு ஆர்வம்.

ஸ்வேதாவின் தந்தை ஒரு பிரபல பள்ளியில் கிரிக்கெட் கோச்சாக இருப்பது அவளது ஆர்வத்தின் காரணம். ஆரம்பத்தில் வாரந்தோறும் விளையாடிக் கொண்டிருந்தவர்கள், படிப்பு, வேலை, இன்னபிற காரணங்களால் இப்போது என்றோ ஓர்நாள் மட்டும் மட்டை பிடிக்கின்றனர். வயது வேற்றுமையின்றி சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சிலசமயம் வேடிக்கை பார்க்க வந்த நடுத்தர வயதுடைய ஆண்களும்கூட விளையாடுவர் மைதானத்தில்.

உடன் விளையாடும் பள்ளிச் சிறுவர்களுக்கு இணையாக ஓட்டமும் பந்துவீச்சும் கொண்டவர்கள் என்பதால் யமுனாவுக்கும் ஸ்வேதாவுக்கும் காலனிப் பசங்களிடம் நல்ல மரியாதையுண்டு. கூட விளையாடும் மற்ற இரண்டு சிறுமிகள் இப்போதுதான்  பழகுகின்றனர். யமுனாவைக் கேட்டால் அடுத்த வருடத்திற்குள் நன்றாக வந்துவிடுவர் என்பாள்.

எதிர் சாரியில் பக்கத்து ஏரியாவின் அணி. சொல்லிவைத்தாற்போல 'மும்பை இண்டியன்'ஸின் நீல ஜெர்சியுடன்.

உள்ளங்கைகளைத் தேய்த்து சூடுபரப்பிக் கொண்டவள், "ரெடியா?" என்றிட, ஸ்வேதா அவளருகே நின்றாள். டாஸ் போடப்பட்டது.

இவர்களுக்கு பேட்டிங்.

யமுனா தீவிரமாக ஸ்வேதாவிடம் திரும்பினாள்.

"ஓப்பனிங் யாரு?"

ஸ்வேதா சிந்தித்தாள்.
"மணி ஓப்பனிங் ஆடட்டும். எப்பவும் அவன் போனாதான் மேட்ச் ஜெயிப்போம்."

மணி பெருமிதமாகப் பார்க்க, ஸ்வேதா அலட்சியமாக, "டேய், அது உன் ராசி.. அவ்ளோதான். போன மேட்ச்ல டக் அவுட் ஆனவன் தானடா நீ?" என்று அதை உடைத்தாள்.

யமுனா சிரித்தாலும், அவன் தோளைத் தட்டினாள்.
"நீதாண்டா டீமோட அதிர்ஷ்ட மந்திரம்! லக்கி சார்ம். ஆட ரெடியாகு போ!"

"அடுத்தது யாரு?"

"கமலா.. அப்பறம் கலை. அப்பறம் நீ, அப்பறம் நான். பசங்க கடைசியா ஆடட்டும்."

ஸ்வேதாவின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டுத் தலையசைத்தது அணி. மணியை உற்சாகப்படுத்தி அனுப்பினர் முதல் ஆளாக.

யமுனாவிற்கு நீண்டகாலம் கழித்துக் கிடைத்த இந்த உற்சாகம் பிடித்திருந்தது.
"மணி!! யூ கேன் டூ இட்!! வீ வாண்ட் சிக்ஸர்!!" என்றெல்லாம் அவள் ஆர்ப்பரித்துக் கத்த, ஸ்வேதாவும் மற்ற சிலரும் சிரித்தாலும் உடன் சேர்ந்துகொண்டனர்.

மணி நன்றாகவே ஆடினான். முதல் ஓவரில் பத்து ரன்கள். ஒரு பவுண்டரி. கலையும் கமலாவும் ஆளுக்கு நான்கு ரன்கள். சிங்கிள்ஸ். அடுத்து யமுனாவின் முறை. சினிமாவில் வருவதுபோல் மண்ணைத் தொட்டு முத்தமிட்டு அவள் சென்று ஸ்டம்பின் அருகே நிற்க, பந்தோடு நின்றவன் லேசாகத் தயங்கி, "அக்கா.. கண்ணாடி போட்டிருக்கியே அக்கா.. பால் பட்டுடப் போவுது.." என்றான்.

"சேச்சே.. அதெல்லாம் ஒண்ணும் ஆகாது.. நீ பால் போடு தம்பி!"

அவனும் சற்றே சந்தேகமாக முதல் பந்தை தரையோடு வீசினான் ஜாக்கிரதையாக. யமுனா இலகுவாக ஒற்றைக் காலை முன்வைத்து மடக்கி பந்தை இழுத்து அடிக்க, அது சுலபமாகச் சென்றது பவுண்டரியாக. பார்க்கில் இருந்த ஒருசிலர் கைதட்டினர். யமுனா புன்னகைத்தாள் வெளிச்சமாய்.

அடுத்த பால் ஃபுல்டாஸ். முகத்திற்கு நேராகவே வந்தது. யமுனா அதை எதிர்பார்க்கவில்லை. எனினும் முயற்சி செய்வோமென மட்டையை சுழற்றிட, அது ஏனோ அவள் தலைக்குப்பின்னால் காற்றில் சென்றது. 'கேட்ச்' ஆகிவிடுமோ என யமுனா பதற்றமாகப் பார்க்க, நல்லவேளையாக அது மண்ணில் விழுந்தது, ஃபீல்டரின் அருகேயே. சிலர் உச்சுக்கொட்டினர்.

அடுத்தடுத்த பந்துகளில் சிங்கிள்ஸ். மொத்தம் பதினோரு ரன்கள். இரண்டு பவுண்டரி. ஒரு வருடம் கழித்து மட்டையைத் தொட்டதற்கு, இது பரவாயில்லை என்றிருந்தது அவளுக்கு. அடுத்துச் சென்ற ஸ்வேதா இரண்டாம் பந்தில் ஆட்டமிழந்தாள். அவள் சிக்ஸர் என நினைத்து அடிக்க, அதுவோ கடைசி நொடியில் கேட்ச் ஆனது. சோர்வாகத் திரும்பி வந்தவளை ஆறுதல் சொல்லித் தேற்றியவள், அம்மா தந்த பலகாரக் கூடையை எடுத்து நீட்டினாள். ஸ்வேதா சோர்வாகச் சிரித்தாள். யமுனா பதிலுக்குப் புன்னகைத்தாள்.

"விளையாடினா என்ன, வேடிக்கை பாத்தா என்ன? கிரிக்கெட் எப்பவுமே ஜாலி தான்!"

கூடியிருந்தோருக்கும் பலகார வினியோகம் செய்துகொண்டே வந்தவள், எதிரணி வீரர்களுக்கும் நீட்டினாள் பஜ்ஜிகளை. கூச்சமாக மறுத்தனர் அந்த இளைஞர்கள்.

"பரவால்ல வேணாம்க்கா.."

"அட, எடுத்துக்கங்க.. எங்கம்மா பயங்கர டேலண்ட்டட்! எல்லா வகையான பஜ்ஜியும் சுடுவாங்க! செம்ம டேஸ்ட்டா இருக்கும்!"

அவர்கள் சிரிக்க, அவள் விடாமல் நீட்டினாள் பாத்திரத்தை.

"எல்லா பஜ்ஜியும் ஒரே ப்ராசஸ் தான்."
தனக்குப் பின்னால் திடீரென முகுந்தனின் குரல் கேட்டதும், கனவா நனவா எனப் புரியவில்லை அவளுக்கு. திரும்பாமல் ஒருகணம் நன்றாக யோசித்தாள் யமுனா.

'சண்டே. காலைல ஒன்பது மணி. புத்தி சரியா இருக்கற யாராச்சும் சண்டே பத்து மணிக்கு முன்னால எழுவாங்களா? நீ கற்பனை பண்ணிக்கிட்ட யமுனா.. இது அவனில்ல. வேற யாரோ.'

இலகுவாகச் சிரித்தவாறே, "அப்படியா?" என்றவாறு அவள் திரும்ப, அங்கு நின்றிருந்ததோ... முகுந்தனே தான். கையில்லாத காட்டன் டீஷர்ட்டும், முழுங்கால் வரையிலான கால்சட்டையும் அணிந்திருந்தவன், 'ஜாகிங்' செய்வோர் அணியும் ஷூக்களும் அணிந்திருந்தான்.

'இவனா.. இந்தப் பார்க்கில் ஓட்டப் பயிற்சியா? எப்போதிருந்து? ஏன் நமக்குத் தெரியவில்லை?'

அப்போதுதான் 'நாம் எப்போது இதற்கு முன்பு எட்டு மணிக்கெல்லாம் எழுந்து மைதானத்திற்கு வந்திருக்கிறோம்' என்று மனம் கேள்வியெழுப்ப, ஏற்றுக்கொண்டு அமைதியானாள் அவள்.

மறுபடி வார்த்தைகள் வேலைநிறுத்தம் செய்தன யமுனாவின் வாய்க்குள். அவனோ அவளை மேலும் கீழும் ஒருமுறை பார்த்துவிட்டு, கையிலிருந்த பாத்திரத்தை ஆராய்ந்து ஒரு குட்டி பஜ்ஜியை எடுத்துக்கொண்டான்.

மீண்டும், "எல்லா பஜ்ஜிக்கும் செய்முறை ஒண்ணுதான். காயை வெட்டி மாவுல போடணும். அப்புறம் எடுத்து எண்ணெய்ல போடணும். அவ்ளோதான். ஸோ, அது தெரிஞ்சா எத்தனை விதமா வேணாலும் பஜ்ஜி சுடலாம்." என்றான் அவன்.

"ஓ..." என்றுமட்டும் சொன்னாள் யமுனா. அவளிடம் அவன் பேசியதிலேயே இதுதான் நீளமான வாசகம். அதைத்தான் அப்போது எண்ணிப்பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

"பஜ்ஜிக்கு தேங்க்ஸ்" என்றுவிட்டு அவன் விலகிச் செல்ல, யமுனா உள்ளங்கால்கள் குறுகுறுக்க நின்றாள் அங்கேயே.

.

.

"சண்டேன்னாலே, சினிமாவும் பிரியாணியும் தான்ப்பா! கடவுள் படைச்சதுலயே உருப்படியான விஷயம் சண்டே. அதுல மனுஷன் செய்யற உருப்படியான விஷயம் இந்த பிரியாணி!"

அப்பாவிடம் சிலாகித்தவாறு சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டே ஞாயிறு மதியச் சிறப்பு பிரியாணியை ஆசைதீர உண்டுகொண்டிருந்தாள் யமுனா.

"மனுஷன் இல்ல. மனுஷி. இந்த மனுஷி செஞ்சது அந்த பிரியாணி!"
குரல் வந்த திசையில் பார்த்தால் குமுறலுடன் சுமதி வந்துகொண்டிருந்தார்.

"மம்மி செஞ்ச பிரியாணி தான் உலகத்துலயே பெஸ்ட், இல்லப்பா?"

அவள் வெட்கமின்றி அம்மாவுக்கு ஐஸ் வைக்க, மேகநாதனும் அதே செய்தார் கர்மசிரத்தையாக.
"ஆமாமா.. கண்டிப்பா! செஃப் தாமுவுக்கே உங்கம்மாதான் சொல்லித் தரணும் பிரியாணி எப்படி செய்யறதுன்னு! இவளை மாதிரி பிரியாணி செய்ய இந்தத் தமிழ்நாட்டுலயே யாரும் இல்ல!"

சுமதி பூரித்துப்போய்விட, கண்ணால் அப்பாவிற்கு 'சூப்பரா பண்றீங்க' என ஜாடை காட்டினாள் அவள். அவர் கண்ணடித்தார்.

"நல்லா இருக்கா.. இன்னும் கொஞ்சம் வச்சுக்க அம்மு" என்றபடி பிரியாணியை மீட்டி அவள் தட்டில் வைக்கையில், வாசலில் அழைப்புமணி அடித்தது. பிரியாணிப் பாத்திரத்தை அவளது கையில் தந்துவிட்டு சுமதி யாரெனப் பார்க்கச் செல்ல, அதற்குள் கரண்டியால் பாத்திரத்தைக் கிளறி உள்ளே பீஸ் இருக்கிறதா எனத் தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருந்தாள் யமுனா.

"வா முகுந்தா.. உட்காரு, சாப்பிடலாம்"

சாப்பிட்ட பிரியாணி தொண்டையில் புரையேற, சட்டென நிமிர்ந்தாள் அவள்.

வாசலில் அடர்நீல முழுக்கை காட்டன் சட்டையும், கருப்புப் பேண்ட்டும் அணிந்து நின்றிருந்தான் முகுந்தன். கையில் அவனது ஐபேட்.

"இல்ல, பரவால்ல ஆன்ட்டி. நம்ம வீட்டுல இன்னிக்கு நான்தான் சமையல். அங்கேயும் பிரியாணி தான். புதுசா ஒரு ரெசிப்பி ட்ரை பண்ணேன்.
நம்ம அபார்ட்மெண்ட்ல, மெயிண்டெனன்ஸ் வேலைக்கு ஆள் வர்றாங்க. ஸோ எதாவது ப்ராப்ளம் இருந்தா சொல்றீங்களா, நோட் பண்ணிக்கறேன்?"

"இந்த டிவி செட்டாப் பாக்ஸ் தான்ப்பா.. அடிக்கடி சிக்னல் கிடைக்காம நின்னுடுது. அதை பார்ப்பாங்களாப்பா?"

மேகநாதன் தலையிலடித்துக்கொண்டு சுமதியை அதட்டினார்.

"ஏய், செவத்துல ஓட்டை, ஒழுகல் எதாவது இருந்தா சொல்லு. செட்டாப் பாக்ஸை எல்லாமா சொல்லுவாங்க!?"

அப்போது அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தவன், அருகில் அமர்ந்திருந்த யமுனாவையும் பார்த்தான். குளித்து முடித்து ஈரக் கூந்தலைக் கட்டாமல் விரித்துக் காயவைத்தவாறே, ஒரு கையில் தட்டும், மற்றொரு கையில் கரண்டியும் மடியில் பிரியாணிப் பாத்திரமுமாய் அமர்ந்திருந்தவளை, அவனது விழிகள் சில நொடிகளுக்கு மேலேயே கவனித்து விலகின.

மீண்டும சுமதியிடம் திரும்பியவன், "நான் டிஷ் ஆண்ட்டனாவை பார்க்க சொல்றேன் ஆன்ட்டி, வேறெதுவும் இல்லைன்னா நான் வரட்டா?" என்றான்.

"இருப்பா, ஒரு கப்புல எங்க பிரியாணியைப் போட்டுத் தரட்டா, அப்பறமா நீ சாப்பிட்டுப் பாரேன்.."

அவன் மீண்டும் திரும்பி யமுனாவையும் பாத்திரத்தையும் பார்த்துவிட்டு, "எனக்கு அங்க மிச்சமிருக்காதுன்னு நினைக்கறேன் ஆன்ட்டி.." என்று குறும்புப் புன்னகையுடன் சென்றுவிட, சுமதி யமுனாவைத் திரும்பிப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்.

"சட்டியை மடியில வச்சுக்கிட்டு கரண்டில அள்ளித் திங்கற மாதிரி இருக்கு அம்மு, நீ உக்காந்திருக்கறத பாத்தா!"

"ம்மா!!"
ஏற்கனவே பட்ட அவமானம் தாங்காமல் அவன் சிணுங்க, சிரிப்புக் குறையாமல் வந்து பாத்திரத்தை வாங்கிச்சென்றார் அவர்.

வாழ்க்கையில் இனி பிரியாணிப் பாத்திரத்தைக் கையால் தொடுவதில்லை என்று சங்கல்பம் செய்துகொண்டாள் யமுனா.

.
.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro