Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

2

கையில் சுருட்டிப் பிடித்த சாப்பாத்தியுடன் நின்றவன் அவளை வினோதமான பார்வை பார்க்க, சட்டெனக் காதிலிருந்து ஹெட்போன்களைக் கழற்றினாள் அவள். விர்ரென்று அறையின் மற்ற சத்தங்கள் காதைத் தாக்கின. சீலிங் ஃபேனின் சன்னமான மோட்டார் சத்தம், ஜன்னல் வழியே ஏதோ குல்பி ஐஸின் மணிச்சத்தம், அனிச்சையாகக் காலாட்டிக் கொண்டிருந்ததால் தன்னிடமிருந்தே எழுந்த கொலுசுச் சத்தம் என மொத்தமாகக் கேட்டது. தான் பேசிய ஓசையும் நிச்சயமாக அவனுக்கும் கேட்டிருக்கும் என்று புரிந்தபோது, தன்னை எதைக்கொண்டு அடித்தால் தகுமென அவளே கணக்கிடத் தொடங்கியிருந்தாள்.

அசட்டுச் சிரிப்போடு, "ஹிஹி.. நான் பொதுவா தான் சொன்னேன்-- ஐ மீன்-- பொதுவான்னா, எங்க ஆபிஸ் மேனேஜரை சொன்னேன்-- எங்க ஆபிஸ்ல பொதுவா-- அதாவது-- என்னோட மேனேஜரை நான்-- சும்மா-- ஏன்னா--" என்று அவள உளறிக்கொட்ட, அவனோ சப்பாத்தியைக் கடித்துக்கொண்டே அவளைப் பாராமல் கடந்துசென்றுவிட்டான்.

நிஜமாகவே தலையில் கொட்டிக்கொண்டாள் அவள்.
"யமுனா பைத்தியமே! உன் வாய் சரியான ஓட்டை வாய்!"

வைஃபையைத் துண்டித்துக்கொண்டு அவள் எழுந்து வெளியேறிப் படியேறினாள் தங்கள் வீட்டுக்கு. சுமதி அவளைப் பார்த்ததும் முகமலர்ந்து எழுந்து வந்தார்.

"வெங்காய பஜ்ஜி செய்யட்டுமா அம்மு? இல்ல பக்கோடா மாதிரி போடட்டுமா? நீயும் கிச்சனுக்கு வாயேன்.. பேசிட்டே செய்யலாம்.."

"என்ன, கல்யாணத்துக்கு ட்ரெய்னிங்கா? ஏன்மா இப்படி அப்பட்டமா ப்ளான் பண்ற?"

"யமுனா.. வயசாகுதுடா.."

அவள் கண்ணை விரித்துக் கோபமாக முறைக்க, அவசரமாக, "உங்கப்பாவுக்கு வயசாகுதுடா" எனச் சேர்த்துக்கொண்டார் அவர்.

"ஆபிஸ்ல யாராவது... பையன் பிடித்திருந்தா கூட சொல்லுடா.. அப்பாவை பேச சொல்லி--"

"ப்ளீஸ்மா.  விடு."

முகம் கழுவிக்கொண்டு பால்கனியில் அமர்ந்து காற்று வாங்கியவளை, அறைக்குள் வைத்திருந்த கைபேசி அழைத்தது. திரையைப் பார்த்து முறுவலித்தவாறே அதை ஏற்றுக் காதில் வைத்தாள் அவள்.

"ஹலோ, சொல்லு ஸ்வேதா.."

"என்ன யமுனா மேடம்... ஆளே பாக்க முடியறதில்ல? ரொம்ப பிஸியோ?"

"ஹே, அதெல்லாம் ஒண்ணுமில்ல. கொஞ்சம் வொர்க்.. அவ்ளோதான். எதாச்சும் புது மேட்ச் இருக்கா?"

"ஆமாடா.. அடுத்த சண்டே. நம்ம காந்தி பார்க் க்ரவுண்ட் இருக்கில்ல, அங்கதான். நீ வர்ற தானே?"

"ம்ம், சண்டே தான.. எனக்கும் கொஞ்சம் சேஞ்ச் கிடைச்ச மாதிரி இருக்கும். வர்றேன்.. வேற யாரெல்லாம் வர்றாங்க?"

"வழக்கமான டீம் தான். மறக்காம எட்டு மணிக்கு வந்துடு.. அம்மாவை கேட்டதா சொல்லு, முடிஞ்சா பஜ்ஜி சொஜ்ஜி எதாச்சும் பண்ணித்தர சொல்லு!"

சிரித்தாள் யமுனா. இன்னொரு பதினைந்து நிமிடங்கள் பேசிவிட்டு அவள் அழைப்பை வைக்க, எழுந்து அம்மாவிடம் சென்றாள் அவள். முன்னர் போட்ட சண்டைக்காக முகத்தைக் கோணிக்கொண்டு அமர்ந்திருந்தார் சுமதி.

இவள் சென்று மெல்லக் கொஞ்சினாள்.
"மம்மி... என் செல்ல அம்மாவே.. இங்க பாருங்க... நான் சண்டே கிரிக்கெட் மேட்ச் விளையாடப் போகணும்..  ஸ்வேதாவுக்கு உங்க கையால பஜ்ஜி சாப்பிடணுமாம்.. சண்டே எனக்காக செஞ்சு குடுப்பீங்களா? ப்ளீஸ்..?"

அவர் கோபத்தை விடுத்து சிரிக்காமலிருக்க முயன்று தோற்றுப்போனார் சிலநொடிகளிலேயே.

"எதுக்குடா வெய்யில்ல போய் ஆம்பளை பிள்ளைங்க விளையாட்டயெல்லாம் விளையாடிட்டு..? தூசியும் புழுதியுமா மட்டையைத் தூக்கி விசிறிட்டு--"

"ம்மா... என்னை என்னவேணா சொல்லு, ஆனா கிரிக்கெட்டை தப்பா பேசாத! என்னைக் கேட்டா, நாட்டோட கவுரவ தேசிய விளையாட்டா கிரிக்கெட்டை சேர்த்துக்கலாம்னு சொல்லுவேன்! கிரிக்கெட் வெறும் விளையாட்டு இல்லம்மா.. அது கலை! தவம்! எப்பேர்பட்ட மகான்கள் எல்லாம் கிரிக்கெட்ல இருக்காங்க தெரியுமா... சச்சின்.. தோனி.. ரெய்னா--"
அருள் வந்ததுபோல சிலிர்த்துக் கன்னத்தில் பயபக்தியுடன் தட்டிக்கொண்டாள் அவள்.
"ஓம் கவாஸ்கராய  நமஹ"

சுமதி சிரித்துவிட, "செல்ல மம்மி.. ஸ்வேதாவுக்கு ஸ்நாக்ஸ் மட்டும்... ப்ளீஸ்.." என்றுவிட்டு வெளியே மொட்டைமாடிக்குச் சென்றாள் அவளது தினசரி நடைப்பயிற்சிக்காக.

ஐந்து முதல் ஆறு வரை கைவீசி நடப்பாள் நேர்கோட்டில் முன்னும் பின்னுமாய். அம்மாவின் கைப்பக்குவத்தில் தினமும் லயித்தாலும் இன்னும் சிற்றிடை கொண்டிருப்பதன் ரகசியம் இதுவே. அதுவும் காதில் ஒலியூட்டியில் வேகமான பாப் இசைப் பாடல்களைப் போட்டு பரந்து விரிந்த அந்த மாடியில் அவள் நடக்கத் தொடங்கினால், சுற்றியும் உலகமிருப்பதே மறந்துவிடும் அவளுக்கு.

ஒருசிலர் அவ்வப்போது கொடிகளில் துணி காயப்போடவோ, காய்ந்த துணிகளை எடுக்கவோ வருவர். சில நாட்களில் எதிர்வீட்டு சீமா ரகசியமான அழைப்புகள் பேச வருவாள். மற்றபடி எவரும் எட்டிப்பார்க்காத யமுனாவின் தனிப்பிரதேசம் இந்த மொட்டைமாடி. ஆறு மணிக்கு, அந்தி சாயும் பொழுதில் வானத்தின் நிறமாற்றங்களை எல்லாம் கண்ணிமைக்காமல் பார்த்து மனம் நெகிழ்ந்து, இருட்டிய பிறகுதான் மீண்டும் இறங்கி வீட்டுக்கு வருவாள்.

அன்றும் அதுபோலவே நடைப்பயிற்சியைத் தொடங்க, கொடிகளில் ஏகப்பட்ட போர்வைகளும் துணிகளும் போட்டு மறைத்திருக்க, மறுபுறம் யாரும் இருக்கிறாரா எனக்கூடத் தெரியவில்லை.  யமுனா அதைக் கண்டுகொள்ளாமல் தன்பாட்டில் நடந்துகொண்டிருந்தாள். மூச்சுவாங்க நடந்தவள், ஒருகட்டத்தில் நிறுத்திவிட்டு மணி பார்த்தாள் கைபேசியில். ஐந்து நாற்பது.

"இன்னும் ட்வென்டி மினிட்ஸ்... கமான் யமுனா.. யூ கேன் டூ இட்!"
தனக்குத் தானே உற்சாக வசனம் பேசிக்கொண்டவள், கைகளை இருமுறை தட்டிக்கொண்டு நடையைத் தொடர்ந்தாள்.

கூடவே காதில் ஒலித்த பாடலையும் வாயில் முணுமுணுத்தாள் உற்சாகமாக. மார்கழி மாதமென்பதால் சீக்கிரமே கதிரவன் மேற்கில் இறங்கிட, வானம் இளஞ்சிவப்பு நிறத்தைப் பூசிக்கொண்டு வெட்கச் சிரிப்பு சிரித்தது. கைப்பிடிச் சுவரில் கைவைத்து நின்றவள், மறையும் மஞ்சள் கோளத்தை ஏதோ சிந்தனையோடு பார்த்திருக்க, பின்னால் யாரோ வந்து நிற்பதுபோலத் தோன்றவும் திரும்பினாள்.

யாரும் இல்லை. சுற்றுமுற்றும் கண்களால் தேடினாள்.

மாடியின் மறுபுறம் துணிக்கொடிகளுக்கு அப்பால் யாரோ கைபேசியில் பேசிக்கொண்டு நடப்பது தெரிந்தது. யாரென்று பார்க்க முடியவில்லை துணிகளினூடே.

"நமக்கெதுக்கு வம்பு.. நாம கிளம்புவோம்.."
தோளைக் குலுக்கிவிட்டு வீட்டுக்குச் சென்றாள் அவள்.

அப்பா அவரது பென்ஷன் பொதுக்கூட்டத்திற்குச் சென்று திரும்பியிருந்தார்.
"யமுனாக் குட்டி.. அத்தை வந்திருந்தாங்களாமே?"

சாதாரண தொனியில்தான் கேட்டார் அவர். அவள் சுமதியைத் திரும்பிப் பார்க்க, அவரும், "உங்கப்பாகிட்ட நீயே சொல்லு!" என்றிட, உதட்டை சுழித்துவிட்டு அப்பாவின் அருகே அமர்ந்தாள் அவள்.

"அத்தை சொன்னது புடிக்கலப்பா. நவீன் யாரு... என் கசின்.. சின்ன வயசுல இருந்து அண்ணன் தங்கச்சி மாதிரி வளர்ந்தவங்க.. அவனைப் போய்... நீங்க என்ன சொன்னீங்க, இன்னும் ஒரு வருஷத்துக்கு கல்யாணப் பேச்சை எடுக்கமாட்டேன்னு சொன்னீங்கள்ல? அதை அம்மாகிட்ட ஒருதரம் சொல்லுங்க!"

"சரி, நவீன் வேணாம். வேற யாரு?"

வாய்வரை ஒரு பெயர் வந்தது. சலிப்பாக அதைப் புறந்தள்ளிவிட்டவள், " மொதல்ல அமெரிக்கா போவோம்.. அங்க ரயன் காஸ்லிங் வீட்ல போய் மாப்பிள்ள கேப்போம், முடியாதுன்னாங்கனா, இருக்கவே இருக்காங்க டேனியல் ராட்க்ளிஃப், ஜேடன் ஸ்மித், க்ரிஸ் இவான்ஸ்... இவங்கள்லாம் இல்லைன்னு ஆன பிறகு வந்து இங்க தேடலாம், ஓகேவா?" என்றிட, மேகநாதன் போலியாக முறைத்தார்.

சுமதி அவசரமாக இடையிட்டு, "எல்லாம் கிரிஸ்டியன் பசங்களா இருக்காங்க.. யாரு அதெல்லாம்?" என்றார் கரிசனமாக.

யமுனா வெடித்துச் சிரித்தாள்.
"உன் வருங்கால மாப்பிள்ளைங்க! ஒண்ணு போதுமா, இல்ல எல்லாரையும் கூட்டிட்டு வரவா?"

விளையாட்டெனப் புரிந்ததும் மோவாயைத் தோளில் இடித்துக்கொண்டு, "போடி.. உனக்கு வேற வேலையில்ல!" என உள்ளே செல்ல, சிரித்தவாறே எழுந்து குளிக்கச் சென்றாள் அவள்.
.
.

இரவு உணவிற்குப் பிறகு குடியிருப்பின் முன்பக்கம் இருந்த பூந்தோட்டத்தில் தந்தையுடன் அமர்ந்திருந்தாள் யமுனா. தெருவிளக்கின் வெளிச்சம் மட்டும் இருந்ததால் சில குழந்தைகள் மட்டும் இருந்தனர் இன்னும். குளிர்ந்த காற்று உடலைத் தழுவிச்சென்று மார்கழி மாதமென்று நினைவூட்டிச் சென்றது மறுபடியும். தந்தையின் கம்பளி சால்வையை மீண்டும் ஒருமுறை சரியாகப் போர்த்திவிட்டவள், தனது கண்ணாடியைக் கழற்றி சுடிதாரின் முனையில் துடைத்து மாட்டிக்கொண்டாள்.

பேச்சுக்களின்றி, கைபேசியின் நச்சரிப்புமின்றி, இப்படி அமைதியாக அமர்ந்திருப்பது அவளுக்கு மிகவும் பிடிக்கும். அதிசயம்தான். பேசப் பிடிக்கும் அதே அளவுக்கு அமைதியும் பிடிக்கும்.

"என்ன சார்.. மார்கழிக் குளிர்ல மப்ளர் இல்லாம உக்காந்துருக்கீங்க..?" என்று சற்றுத் தூரத்தில் குரல் வர, மேகநாதன் திரும்பினார். உடன் யமுனாவும்.

முகுந்தனின் தந்தை சால்வையும் குல்லாவும் மப்ளரும் அணிந்து இரண்டு சுற்றுப் பெருத்ததுபோல வந்துகொண்டிருந்தார்.

"ஹாய் அங்கிள்" எனப் புன்னகைத்தாள் யமுனாவும்.

"ஹாய் மா. மார்கழிக் குளிர்ல உக்காந்துருக்க, அமெரிக்காவுக்கு ப்ராக்டிஸா? இந்தப் பனியை மட்டும் லேசா எடுத்துடக்கூடாது... மண்டைக்கு ஏறிடுச்சுன்னா அவ்ளோதான்! அப்பாவுக்கு சால்வை கொண்டு வந்தியே.. உனக்கு ஜலதோஷம் புடிக்காதா என்ன?"

அவர் மிரட்டவும் சற்றே பயந்தவள், "இருங்கப்பா, எதுக்கும் நான் போய் ஸ்கார்ஃப் இருந்தா எடுத்துட்டு வரேன்" என எழுந்தாள்.

"இரும்மா.. முகுந்தன்கிட்ட ஸ்கார்ஃப் இருக்கு. இப்ப அவன் படிக்கட்டுக் கிட்டதான் இருப்பான், நீ கூப்பிட்டா அவனே தருவான். எதுக்கு ரெண்டு மாடி ஏறிட்டு?"
அவர் சொல்லவும், சரியெனத் தலையசைத்துவிட்டுப் படிக்கட்டின் அடியில் நின்றவள் தலையை உயர்த்திப் பார்த்தாள். அவர் சொன்னதுபோல படிக்கட்டின் முதல் தளத்தில் முகுந்தன் இருந்தான். இன்னும் சில நொடிகளில் தளத்தினுள் சென்று மறைந்துவிடும் நிலையில் இருந்தவனை, பெயர் சொல்லிக் கத்தியழைக்க நினைத்தபோது மூளை ஏனோ ஒத்துழைக்க மறுத்தது.

வாயைத் திறந்தபோது காற்றுதான் வந்தது.

'ஐயோ.. போகிறானே.. போய்விடுவானே... ஐயோ... போயே விட்டானே..'

தன்னையே நொந்துகொண்டவள் வேகமாகப் படிகளில் இரண்டிரண்டாகக் கால்வைத்து ஏறத் தொடங்கினாள். பாதியில் அட்ரினலின் தந்த அசட்டுத் தைரியத்தில், "முகுந்தன்!! ஸ்கார்ஃப்!! நில்லுங்க!!" எனக் கூச்சலிட்டவாறு ஓட, முகுந்தனும் என்னவோ எனப் பதறித் திரும்பி அவள்புறம் வர, மார்பிள் தரையில் தன் வேகத்தை மட்டுப்படுத்த முடியாமல் அவன்மீது மோதி நின்றாள் யமுனா.

பழுப்பு நிறத்தில் முழுக்கை ஸ்வெட்டர் அணிந்திருந்தவனின் மீது, கதகதப்பான அந்த இளம்சூடு இதமாய் யமுனாவைத் தீண்டியது. இரண்டு கைகளாலும் அவளை விழாமல் பிடித்திருந்தான் அவன். அருகிலிருந்து பார்த்தபோது அவனது உதடுகளின் சுருக்கங்கள் கூட ஏதோ ஹெச்.டி. தெளிவுடன் தெரிய, படபடவென இதயம் துடித்தது அவளுக்கு.

அவனோ நெற்றியில் கரிசனம் சுருக்கங்களாகப் படர, "என்ன ஆச்சு?" என வினவ, மிடறு விழுங்கியவள் சற்றே விலகிக்கொண்டாள். கன்னங்களில் ஜிவ்வென ஏறிய செந்நிறத்தைக் கண்ணாடியை பிடிப்பதுபோலக் கையால் சற்றே மறைக்க முயன்றவாறு, "அ.. ஸ்கார்ஃப்.. எனக்கு.. வேணும்" என்றாள் தரையைப் பார்த்தபடி.

"இதோ" என அந்த சிவப்பு ஸ்கார்ஃபைத் தன் கழுத்திலிருந்து கழற்றி நீட்டினான் அவன்.

ஆம். கேள்விகளே கேட்கவில்லை.
கேட்டதும் எடுத்து நீட்டிவிட்டான்.

"தேங்க்ஸ்"
அதைக் கையில் வாங்கிக்கொண்டு திரும்பிப் பாராமல் படியிறங்கிச் சென்றாள் யமுனா. கையிலிருந்த அந்த கம்பளித் துணியை அனிச்சையாகவே முகத்தினருகே கொண்டுசென்றாள்.

முகுந்தனின் வாசம் வீசியது அதில்.

ஆம். அவனது மணம். மழையின் முன் வரும் மண்வாசமும், புத்தம்புதிய புத்தகத்தைத் திறக்கையில் வரும் ஒருவித காகித வாசமும், வெட்டிய புல்தரையைத் தொட்டு முகர்ந்தால் வரும் வாசமும், நெடுஞ்சாலையில் நூறைத் தூண்டிய வேகத்தில் செல்லும்போது வரும் ஒருவித வாசமும் போல... ஏதோ இதமான வாசனை.

கழுத்தில் ஸ்கார்ஃபை மாட்டியவள், இன்னும் அதை முகர்வதை நிறுத்தாமல் நடந்து பூங்காவுக்கு வந்தாள்.

மேகநாதனும் முகுந்தனின் தந்தையும் ஏதோ பேசிச் சிரித்துக்கொண்டிருக்க, "என்ன, என்ன? என்ன காமெடி.. சொன்னா நானும் சிரிப்பேன்ல?" என்றவாறு அப்பாவின் அருகே சென்று அமர்ந்தாள் அவள்.

"அட, ஒண்ணுமில்ல மா.. குமார் சார் அவரோட ஆபிஸ் கதையை சொல்லிட்டு இருந்தார்.."

"ஓ.. இந்த வருஷம் ரிடையர்மெண்ட் இல்ல அங்கிள்?"

குமாரின் முகம் சற்றே வாடியது. "ஆமாம்மா. ரிடையராகும் முன்ன முகுந்தனுக்கு கல்யாணத்தை பண்ணிடணும்னு ஆசை... அதுதான் நடக்க மாட்டேங்குது"

"ஏன் அங்கிள்?"
அவளது ஆர்வம் அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. எதை எதிர்பார்த்து அக்கேள்வியைக் கேட்டாள் எனவும் புரியவில்லை அவளுக்கே.

அவரோ நெற்றியைத் தேய்த்தவாறு, "ஜாதகத்துல தோஷம்னு ஜோசியர் சொன்னார். நிறைய பரிகாரம் பண்ணனுமாம்" என்க, அவள் முகம் தொங்கிப்போனது.

"ஹ்ம்.."

வராத கொட்டாவியை அவளாக வரவழைத்துக்கொண்டு, "ஹான்.. தூக்கம் வந்துடுச்சு அங்கிள்.. அப்பா, நீங்க பேசிட்டு வாங்க. நான் வீட்டுக்குப் போறேன்" என எழுந்தாள் அவள்.

கழுத்தில் சுற்றியிருந்த ஸ்கார்ஃபை, மறந்தாற்போல மாடிக்குக் கடத்திச் சென்றுவிட்டவள், தன்னறைக்குச் சென்று அதைக் கட்டியணைத்தவாறே தூங்கிப் போனாள்.

.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro