1
"யமுனா... உன்னைப் பார்க்க ஒருத்தங்க வந்திருக்காங்க.. கொஞ்சம் வர்றியா?"
கதவைத் தாண்டி ஒலித்த அன்னையின் குரல்கேட்டு, கணினியிலிருந்து கண்களை விலக்கி எழுந்து சென்றாள் அவள். கதவை மூன்று இன்ச் அகலத்துக்கு மட்டும் திறந்து, தலையை நீட்டினாள் கொக்குபோல.
"யார் மா? என்ன வேணுமாம்?"
அவளது அம்மா சுமதி அசட்டுச் சிரிப்பாக, "வந்துதான் பாரேன்.." என்றார், காலால் கதவைத் தள்ள முயன்றபடி.
"ப்ச்.. ப்ராஜெக்ட் வேலை இன்னும் பாக்கி இருக்கு.. இன்னும் மூணு மணி நேரத்துல முடிக்கணும்--"
"அடேடே.. யமுனாவா இது!? எப்படி வளர்ந்துட்டா!!"
பின்னணியில் குரல் கேட்க, அன்னையைத் தாண்டி முன்னறையைப் பார்த்தாள் அவள்.
"அத்தையும் நவீனும் வந்திருக்காங்க யமுனா.."
காலாவதியான தகவலை அவர் தர, ஆயாசமாகத் தலையைச் சரித்துக் கூரையைப் பார்த்தாள்.
"வேலையா இருக்கேன்னு சொல்லு" எனக் கதவை மூடப் போனவளை சட்டெனத் தடுத்தார் அவளது அம்மா. "அது நல்லவா இருக்கும்? சும்மா பேருக்கு ரெண்டு வார்த்தை பேசிட்டுப் போம்மா.."
"அவங்க என்ன கேப்பாங்கனு தெரியுமா? ப்ச், உனக்குத் தெரியும். அதனால தான் என்னைப் பிடிச்சு இழுக்கற நீ! எனக்கென்னவோ நீதான் அவங்களை வரச் சொன்னயோன்னு டவுட்டா இருக்கு."
மறுக்கவில்லை சுமதியும்.
"ரெண்டே வார்த்தைடா.. அவங்க கோவிச்சுக்காம இருக்கணும்ல?"
கண்ணாடியை சரிசெய்தவாறு அம்மாவைப் பின்தொடர்ந்தாள் அவளும். அத்தை அவளைப் பார்த்ததும் எழுந்து வந்து முகத்தை வழித்து திருஷ்டி எடுத்தார். கன்னத்தைக் கிள்ளினார். நவீன் வழிந்து சிரித்தான்.
இவளோ உம்மென்றே நின்றாள்.
"என்ன யமுனா.. ஒண்ணுமே பேச மாட்டேங்கற?"
"சொல்லுங்க அத்தை, எப்படி இருக்கீங்க, எப்ப வந்தீங்க?"
இயந்திர கதியில் அவள் கேட்க, அதுவே போதுமென அவரும் தனது பழமையை கூறத் தொடங்க, யமுனா அம்மாவை முறைத்தவாறே சோபாவில் அமர்ந்து, தட்டிலிருந்ந பிஸ்கட்டை எடுத்துக் கடித்தாள், சற்று கடினமாகவே.
நவீன் அவளைக் கண்ணாலேயே கல்யாணம் செய்துகொண்டிருக்க, ஓரமாக அவனை நிற்கவைத்து நான்கைந்து முறை மண்ணெண்ணெயை ஊற்றிக் கொளுத்த மனதுக்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தாள் அவளும்.
".. அதான், நவீனும் வேலைல செட்டில் ஆகிட்டான். கார், வீடு, எல்லாமே லோன் போட்டு வாங்கியாச்சு. அடுத்துக் கல்யாணம்தான். அதான்.. இந்த வருஷமே பண்ணிடலாம்னு எனக்கு ஆசை.."
யமுனா திரும்பி அம்மாவை முறைக்க, அவர் கெஞ்சுதலாகப் பார்த்தார்.
"யமுனாவுக்கும் இருபத்தஞ்சு ஆகப்போகுது.. இனி வர்ற மாப்பிள்ளையெல்லாம் முப்பதும் நாப்பதுமா வருவாங்க.. அதெல்லாம் என்னத்துக்கு, பேசாம நவீனுக்கே--"
"அத்தை, வந்ததுல இருந்து நானே சாப்பிட்டுக்கிட்டு இருக்கேனே.. நீங்களும் எடுத்துக்கங்க, பட்டர் பிஸ்கட் சூப்பரா இருக்கு. ரோஸ்லின் பேக்கரில வாங்குனதுதான்.. இந்தாங்க, ஒண்ணு சாப்பிட்டுப் பாருங்க" என்றவாறு ஒரு துண்டு பிஸ்கட்டை எடுத்து அவர் வாயில் திணித்து வாயை அடைத்துவிட்டு, "உனக்கும் வேணுமா? இந்த பிஸ்கட்டா, இல்ல எலி பிஸ்கட்டா?" என்றாள் அவளது அத்தை பெத்த ரத்தினத்திடம்.
அவசர அவசரமாக பிஸ்கட்டை விழுங்கிவிட்டு நெகிழிச் சிரிப்புச் சிரித்தார் அவர்.
"இன்னும் விளையாட்டுப் பிள்ளையாவே இருக்கா.. அப்றம், வர்ற மாசி மாசம் நல்ல முகூர்த்தம்--"
அடுத்த பிஸ்கட்டை அவள் எடுக்கப் போக, சுமதி வேகமாக அவளது கையைத் தடுத்தார்.
"இல்ல.. யமுனாவுக்கு... இன்னும் கல்யாணத்துல எந்த ஆர்வமும் இல்லையாமா.. இன்னும் கொஞ்ச வருஷம் வேலை பாத்துட்டு பண்ணிக்கறேன்னு சொல்றா.."
முடிந்தவரை பதவிசாக அவர் விளக்க, அத்தைக்கோ முகம் மாறியது.
"முடிவா என்ன சொல்ல வரீங்க?"
யமுனா உற்சாகமானாள்.
"அப்பாடா.. கேட்கவே மாட்டீங்களோன்னு நினைச்சேன். எப்படிடா இவங்களுக்குப் புரியற மாதிரி சொல்றதுன்னு நானே ரொம்ப யோசிச்சேன். அதுக்குள்ள கரெக்டா நீங்களே கேட்டுட்டீங்க! முடிவா நாங்க சொல்றது இதுதான்: எனக்கு கல்யாணத்துல இன்ட்ரெஸ்ட் இல்ல அத்தை. ரொம்ப சாரி. நவீனுக்கு வேற நல்ல பொண்ணா கிடைப்பா. அவ்ளோதான்"
அத்தையின் முகம் அஷ்டகோணலாக, நவீனோ பாவமாகப் பார்த்தான் அவளை. அவள் தலையைத் திருப்பிக்கொண்டாள்.
"நம்ம கசின்ஸ் நவீன். கண்டபடி யோசிக்காத. அத்தைக்குப் புரியும்படியா சொல்லு. தயவுசெஞ்சு ஆபிஸ்ல யாரையாச்சும் இழுத்துட்டுப் போயி கல்யாணம் பண்ணிக்கோ.."
அவள் தோளைக் குலுக்கிவிட்டு எழுந்து அறைக்குச் செல்ல, பின்னணியில் அத்தையும் அம்மாவும் கத்தும் சத்தம் கேட்டது.
.
கதவை மூடிவிட்டு வந்து சோர்வாகக் கட்டிலில் விழுந்தாள் அவள். கைபேசி குறுஞ்செய்திக்காகக் கூக்குரலிட்டு அவளை அழைத்தது.
கட்டிலில் புரண்டு மேசையில் வைத்திருந்த கைபேசியை எடுத்துப் பார்த்தாள் அவள்.
'டீம் மீட்டிங், 2.00'
மணியைப் பார்த்தாள். பதினொன்று. வீட்டிலிருந்தே வேலை பார்க்கும்படியாக 'வொர்க் ஃப்ரம் ஹோம்' வேலையைக் கேட்டு வாங்கியபோது, நினைத்த நேரத்திற்கு எழலாம், நன்றாக உண்டு, உறங்கி, ஓய்வெடுக்கலாம் என்றெல்லாம் மனக்கோட்டை கட்டியிருந்தாள் அவள். நிஜத்திலோ, உறங்கும் நேரம் தவிர மற்ற பொழுதெல்லாம் கணினியில் கண்பதித்தபடியே செலவிட வேண்டியிருந்தது. ஒருகட்டத்தில் கணினித் திரைக்கே வாழ்க்கைப்பட்டுவிட்டோமோ என்றுகூடத் தோன்றியது.
அதெல்லாம் இன்னும் ஒரு மாதத்திற்குத் தான் என்பது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அடுத்த மாசம்தான் 'ஆன் சைட்' என்று அமெரிக்கா அனுப்புகிறார்களே அவளை!
"நெக்ஸட் மந்த் கிளம்பியாகணும்ல நீ? இருக்கற ஒரு மாசத்துக்கு wfh வாங்குடா கண்ணா.. நானும் அம்மாவும் உன்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணியே வருஷக் கணக்காச்சு" என்று சென்டிமெண்ட்டாகப் பேசி அவளைக் கவிழ்த்த தந்தை மேகநாதனும், அதைச் செய்தது என்னவோ அமெரிக்கா கிளம்புமுன் அவளுக்குக் கால்கட்டுப் போடத்தான். அது இன்னும் யமுனாவுக்குத் தெரியாது. பாசத்தால் கேட்டாரென்றுதான் இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கிறாள்.
ஆனால் அம்மா சுமதியை நன்கறிவாள் அவள். நவீன் இவளைப் பெண்கேட்டு வரும் முதல் ஆள்கூட இல்லை. இதுவரை இந்த வாரத்திலேயே நான்கு பெயர் அடிபட்டது.
"ஹிஹி.. நம்ம பாக்யா அத்தையோட ஃப்ரெண்டு பையனாம்.. சொந்தமா பிஸினஸ் இருக்காம்.."
"ஹிஹி... இஸ்திரிக் கடை அண்ணன் சொன்னாருல்ல, மன்னார்குடி வரனாம்.. தோட்டம் துரவெல்லாம் இருக்குதாம்..."
"ஹிஹி... நம்ம பாஸ்கர் வீட்டுல குடியிருக்கற பேமிலியாம்.. பையன் துபாய்ல வேலை பாக்கறானாம்.."
"அம்மா!!"
சுமதிக்கு யமுனாவை அதட்டிப் பழக்கமில்லை. அதிர்ந்து பேசிக்கூடப் பழக்கமில்லை. எனவே செய்வதெல்லாம் இதுபோன்ற குறுக்குவழி வேலைகள்தாம்.
"கல்யாணம் செஞ்சுக்கோ யமுனா.. வாழ்க்கை சந்தோஷமா இருக்கும். நாங்களும் நிம்மதியா இருப்போம். அப்பா ரிடையராகி நாலு வருஷம் ஆகுது.."
பால் பாயாசத்தை ஊட்டிவிட்டவாறே யமுனாவிடம் கெஞ்சினார் அவர். அத்தையும் நவீனும் கிளம்பிச் சென்றிருக்க, யமுனாவும் மீட்டிங்கிற்கு முன்னால் சாப்பிட்டுவிடலாமென வெளியே வந்திருக்க, இதுதான் சமயமெனப் பாயாசத்தைப் போட்டு யமுனாவைப் பிடிக்கப் பார்த்தார் சுமதி.
வழக்கப்போலவே சலிப்பாகத் தோளைக் குலுக்கியவள், "என்ன அவசரம்? இன்னும் கொஞ்சநாள் போகட்டும்" என்றாள் விட்டேத்தியாக.
"எப்பதான் பண்ணிப்ப? முப்பதுலயா? யார் கிடைப்பா அப்போ?"
"கிடைக்கறவன் கிடைக்காம போகமாட்டான்; கிடைக்காம போறவன் கிடைக்கமாட்டான்."
ரஜினி டயலாக்கை அவளது பாணியில் சொன்னாள் அவள். சுமதி தலையிலடித்துக்கொள்ளாத குறையாகப் பார்த்தார். யமுனா எழுந்து கூகுள் மீட்டைத் திறக்கச் சென்றாள்.
கணினித் திரையில் கருப்பு வட்டம் சுற்றிக்கொண்டிருக்க, வைஃபை கருவியை இரண்டொரு முறை அணைத்து அணைத்துப் போட்டுப் பார்த்தாள் அவள்.
வேலைக்காகவில்லை.
மடிக்கணினியைத் தூக்கிக்கொண்டு வந்தவள், "நெட்டு தீர்ந்துடுச்சா என்ன? ஏன் ரவுட்டர் வேலை செய்யல?" என்றாள் அம்மாவிடம்.
அவர் தேமே என விழித்தார்.
"அதானே.. உங்கிட்ட கேட்டேன் பாரு. நான் ஒரு மீட்டிங் அட்டெண்ட் பண்ணணும். கீழ்வீட்டுல இருக்கேன். சரியா?"
படிக்கட்டில் இறங்கிச்சென்று அவர்களது அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல் தளத்தில் இருந்த மூன்றாம் நம்பர் வீட்டின் கதவைத் தட்டினாள் இருமுறை.
"ஆன்ட்டி!!"
"யமுனா!? என்னம்மா வேணும்?"
"எங்க வீட்டுல வைஃபை ரவுட்டர் வேலை செய்யல ஆன்ட்டி. அபார்ட்மெண்ட்லயே ரவுட்டர் இருக்கறது நம்ம ரெண்டு வீட்ல தான். அதான், உங்க வைஃபையை கொஞ்சம் திருட வந்தேன்.."
அவர் வாய்விட்டுச் சிரித்தவண்ணம் அவளுக்காகக் கதவைத் திறந்துவிட்டார்.
"உட்காருடா. சாப்பிட்டாச்சா? லஞ்ச் இன்னிக்கு பூசணிக்கா கூட்டு, ஒருவாய் சாப்பிடேன்.."
"அச்சோ ஆன்ட்டி! இப்பதான் மூக்குப் பிடிக்க சாப்பிட்டு, ரெண்டு கப்பு பாயாசம் வேற குடிச்சேன்.. போற போக்கைப் பாத்தா அமெரிக்கா போக சிங்கிள் டிக்கெட் பத்தாது போல, டபுளா தான் வாங்கவேண்டி இருக்கும்!"
வயிற்றை லேசாகத் தடவியவாறு அவள் சொல்ல, அவர் சிரித்துவிட்டு உள்ளே சென்றார்.
"ஆன்ட்டி.. வைஃபை பாஸ்வேர்ட் மாத்திட்டீங்களா என்ன? கனெக்ட் ஆக மாட்டேங்குது?"
உள்ளறையை நோக்கி அவள் உரக்கக் கேட்க, வாசலிலிருந்து, "முகுந்தன்1209. ஆல் கேப்ஸ்" என்றொரு குரல் வர, யமுனாவின் இதயம் இருகணங்கள் துடிக்க மறந்தது. நிமிர்ந்து பார்க்காமலேயே அக்குரலுக்குச் சொந்தமானவனை மனப்பாடமாக விவரிக்க முடியும் அவளால்.
ஆறடி இரண்டு அங்குலம். அடர்ந்த கருமையான, அலையலையான கேசம். அடர்த்தியான புருவங்கள். சற்றே கரும்பச்சை நிறம்கொண்ட ஆழமான விழிகள். கூரான நாசி. எலுமிச்சை நிறத்தில் கன்னக் கதுப்புகள். மேலுதட்டின் நீளத்துக்கு மீசை. சவரம் செய்து மழித்த சுத்தமான முகம். கல்லூரியில் கடைசி வருடம் படித்தபோது மட்டும் தாடியோடு இருந்தான்.
முகுந்தனைப் பதினாறு வயதிலிருந்து தெரியும் அவளுக்கு. செங்கல்பட்டிலிருந்து மாற்றலாகி வந்த மின்சார வாரிய ஊழியரான முகுந்தனின் தந்தை, இவளது தந்தை மேகநாதனின் ஆப்த நண்பராகிப் போனார். இல்லதரசியான இவனது அன்னையும், சுமதிக்கு உடன்பிறவா சகோதரியாகவே மாறினார். ஆனால் ஏனோ அம்மாதிரி நெருக்கமான உறவு யமுனாவுக்குக் கிடைக்கவில்லை அவனிடம்.
அவளைவிட இரண்டு வயது அதிகம். அவள் பதினோராம் வகுப்புப் படித்தபோது, அவன் கல்லூரியில் சேர்ந்திருந்தான். எனவே படிப்புக்காகவென அவனிடம் பேச வாய்ப்பில்லை. இரண்டு வருடங்கள் கழித்து அவனது கல்லூரியிலேயே ஒருவழியாக அவளும் சேர்ந்தபோதும் கூட, அவ்வப்போது எங்கேனும் பார்த்தால் புன்னகைத்துக் குசலம் விசாரிப்பதைத் தவிர வேறெதுவும் பேசமாட்டான். அவளிடம் மட்டுமின்றி, யாரிடமுமே தேவைக்கு மேல் ஒருசொல் அதிகம் பேசாத அமைதியின் சிகரம் அவன்.
யமுனா... யமுனாவைத் தான் தெரியுமே நமக்கு. திறந்தவாய் மூடாமல் நாளெல்லாம் பேசும் ரகம். கல்லூரியில் அவளது நண்பர்வட்டம் மட்டும், சீனியர், ஜூனியர், லெக்சரர், வாட்ச்மேன்கள் என எவ்வித பேதமும் இன்றிப் பரந்து விரிந்தது. இப்போது அலுவலக நண்பர்கள் வேறு. அது போதாதெனக் குடியிருப்பிலும் அதைச் சுற்றிலும் இருக்கும் முப்பது,நாற்பது குடும்பங்களிலும் யமுனாவின் பெயர் பிரபலம்தான்.
ஊரெல்லாம் வாயாடினாலும், ஏனோ முகுந்தனிடம் மட்டும் கோர்வையாக இரண்டு வார்த்தைகளுக்கு மேல் பேசமுடிவதில்லை அவளால். கல்லூரியில் ஏனோ அனைவருக்குமே அப்பட்டமாகத் தெரிந்த அவளது உணர்ச்சிகள், முகுந்தனுக்குத் தெரியவே இல்லை கடைசிவரை. இன்றுவரையிலும் கல்யாணப் பேச்சிற்கு அவள் மறுப்புச் சொல்வதன் காரணம் முகுந்தன் மட்டும்தான்.
தோளிலிருந்த கருப்பு லெதர் பையைக் கழற்றி சோபாவில் அவளருகே வைத்தவாறு, "மீட்டிங்கா?" என்றான் அவன்.
அவன் அப்படித்தான்.
ஒரு வார்த்தை. மிஞ்சி மிஞ்சிப் போனால் சின்னதென ஒரு சிரிப்பு. அதற்குமேல் அவனிடமிருந்து ஒன்றும் வாங்கமுடியாது. குடியிருப்பின் சார்பாக ஏகப்பட்ட விழாக்கள் நடத்தி எத்தனையோ சிடுமூஞ்சி மாமாக்களை 'ச்சில்' அங்கிள்களாக மாற்றிய பெருமை யமுனாவைச் சேரும். ஆனால் அவளது சாமர்த்தியமெல்லாம் முகுந்தனைப் பார்த்ததும் சாம்பிராணிபோல கரைந்து போய்விடும்.
"அ.. ஆ.. ஆமா.." கண்ணாடியை மீண்டுமொருமுறை சரிசெய்துகொண்டவள், தயங்கித் தயங்கி அவனது திசையில் விழிகளை உயர்த்தினாள்.
கருநிற காட்டன் சட்டையின் கைகளை முழங்கை வரை மடக்கி விட்டிருந்தான் அவன். சற்றே வெளுத்துப் போன ஜீன்ஸ் அணிந்திருந்ததைக் கவனித்தவள், ஒற்றைப் புருவத்தை அனிச்சையாகவே உயர்த்தினாள்.
'கேஷுவல் ட்ரெஸ்? ப்ராஜெக்ட் மேனேஜர்னா ஆபிசுக்கு ஜீன்ஸ்ல கூட போலாமா?'
"என்ன?"
அவன் சட்டெனக் கேட்டதும் திகைத்தவள், தன் முகமாற்றத்தை கவனித்துக் கேட்கிறான் எனப் புரிந்ததும் சமனாகி, ஒன்றுமில்லையெனத் தலையாட்டினாள். அவன் சொன்ன கடவுச்சொல்லைக் கணினியில் தட்டச்சு செய்து வைஃபை பெற்றவள், அவசரமாய் கூகுள் மீட்டில் நுழைந்து காதில் வயர்லெஸ் ஒலியூட்டியை மாட்டிக்கொண்டாள்.
சுமார் இரண்டு மணிநேரம் நீடித்த செயற்கூட்டத்தின் இறுதியில், யமுனாவுக்கு மூன்று புதிய ப்ராஜெக்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதனோடு நில்லாமல் ஏழெட்டு துணை அசைன்மெண்ட்டுகள் வேறு இரக்கமின்றிக் குவிக்கப்பட்டிருந்தன தலைமேல்.
".. Ok sir.. I'll do my best. Ok.. ok.. thanks.. thank you sir. Yes sir, I'll see to it.. Ok sir. Tomorrow? Sure sir. I will get back to you asap.."
எப்படியோ இழுத்து இழுத்து மீட்டிங்கை முடித்துவிட்டவள், அப்படியே சோபாவில் சாய்ந்தாள் ஆயாசமாக. காதில் ஹெட்போன் அணிந்திருந்ததால் சுற்றியுள்ள எதுவும் கேட்காத நிலையில் இருந்தவள், "ஆண்டவா... ஏன் தான் இந்த ப்ராஜெக்ட் மேனேஜர்ங்க எல்லாம் மாங்கா மடையன்களா இருக்காங்களோ! எல்லாம் நேரம்!" என சத்தமாகவே முணுமுணுத்தாள்.
அப்போது கண்ணோரம் ஏதோ அசைவு தெரிய, திரும்பிப் பார்த்தால் முகுந்தன் நின்றிருந்தான் சமையலறை வாசலில், அதாவது அவளுக்குப் பத்தடி தூரத்தில்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro