Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மரங்களின் காதலர் முல்லைவனம்.


சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியின் ஒரு இடத்தில் சில மரங்கள் இலைகள், கிளைகள் வெட்டப்பட்ட நிலையில் தரையில் கிடத்திவைக்கப்பட்டு இருந்தது. அதனருகே ஒருவர் ஒரு பெரிய சட்டியை வைத்துக்கொண்டு உட்காருகிறார்.

அவர் கேட்க கேட்க, அவரது உதவியாளர் ஒவ்வொரு பொருளாக கொண்டுவந்து தருகிறார். முதலில் மஞ்சள் கிழங்கு துாள், அடுத்து வேப்பிலை துாள் இப்படி பல இயற்கை மருத்துவ குணம் நிறைந்த துாள்கள் அடுத்து அடுத்து அணி வகுக்கின்றன.  



அனைத்தையும் சட்டியில் கொட்டி அதில் பாலைவிட்டு கலக்குகிறார், மஞ்சள் பெயிண்ட் போன்ற கலவை ரெடியாகிறது.

பிறகு கிழே போட்டு வைத்துள்ள மரத்தில் ஏதாவது ஆனி அடிக்கப்பட்டு இருக்கிறதா? என்று கைகளால் ஒரு முறைக்கு இருமுறை தடவிப்பார்த்து, அப்படி ஏதும் ஆனி அடித்து மரத்தை காயப்படுத்தவில்லை என்பதை உறுதி செய்தகொள்கிறார்.பின்னர் மரத்தின் வெட்டி விடப்பட்ட பகுதியில் தயார் செய்து வைத்த மருந்து கலவையை நன்றாக பூசுகிறார். பூசிய இடத்தில் மஞ்சளில் தோய்த்த புதுத்துணி கொண்டு கட்டி மூடி மறைக்கிறார். உதவியாளர் துணையுடன் மரத்தை நிமிர்த்தி ஏற்கனவே தோண்டி வைக்கப்பட்டுள்ள குழியில் இறக்குகிறார். மரத்தை சுற்றி இயற்கை உரங்கள் கலந்த மண்ணைப் போட்டு மூடுகிறார்.

பின்னர் நிமிர்ந்து தான் செய்த வேலை சரியாக இருக்கிறதா என பார்க்கிறார், சரி என்று மனதிற்கு பட்டதும் கைஎடுத்து அந்த மரத்தை வணங்கி 'நீயும் வாழ்ந்து எங்களையும் வாழவைக்கணும்' என்று மனமுருக பிரார்த்திக்கொள்கிறார்.நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்தபடி அடுத்த குழியில் மரத்தை நடச்செல்கிறார். யார் இவர்?

பெயர் முல்லைவனம் சென்னை விருகம்பாக்கம் பெருமாள் கோவில் தெரு பிளாட்பாரம்தான் இவரது குடியிருப்பு.சொந்த வீடு கிடையாது, வாடகை கொடுக்கும் அளவிற்கு வசதி கிடையாது, ஆகவே ஒதுக்குப்புறமான இடத்தில் நாலு கம்புகளை நட்டு அதற்குள் வசித்து வருகிறார்.

ஸ்ரீபெரும்புதுாரில் இருந்த போது இவரது தாத்தா சித்திரை விவசாயத்திற்கு போகும்போது முல்லைவனத்தையும் கூடவே அழைத்துப் போய் மரம் செடி கொடிகள் பற்றி நிறைய சொல்வராம். அப்படி அவர் சொன்ன விஷயங்கள் இவரது மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.
எட்டாவதிற்கு மேல் படிப்பு வராத நிலையில் தனக்கு பிடித்த தோட்ட வேலைக்கு போக ஆரம்பித்தார்.அதில் தேர்ச்சி பெற்று யாராவது வீட்டு தோட்டம் , மாடி தோட்டம் அமைக்க கூப்பிட்டால் போய் அமைத்து கொடுத்து அதில் வரும் வருமானத்தில் குடும்பம் நடத்திவருகிறார்.

இப்படி இளம் பிராயம் முதலே மரம் செடி கொடிகளுடனேயே வளர்ந்ததால் அவைகளின் குணாதிசயங்கள் பற்றி நன்கு தெரியும். எல்லோரையும் மரம் வளர்க்கவைக்க வேண்டும் என்பதற்காக, வரக்கூடிய வருமானத்தில் தன் தேவைக்கு கூட எடுக்காமல் மரக்கன்றுகளை இலவசமாக வாங்கி கொடுக்க ஆரம்பித்தார்.
இந்த சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள எந்த பள்ளிக்குழந்தையாக இருந்தாலும் முல்லைவனத்திடம் மரக்கன்றுகள் வாங்காமல் இருக்கமாட்டார்கள். பள்ளிக்கூடங்களுக்கு தானே வலியச் சென்று மாணவர்களிடம் மரம் வளர்ப்பது எவ்வளவு எளிது என்று பேசி மரக்கன்றுகள் வழங்குவார்.

இந்த நிலையில்தான் சென்னைக்கு அடுத்தடுத்த வந்த புயலால் மரங்கள் பல விழுந்துவிடவே இந்த மரங்களையே நடுவது அல்லது அது இருந்த இடத்தில் வேறு மரங்களை நடுவது என்று முடிவு செய்தார். குளு குளு அறையில் உட்கார்ந்து புயலில் விழுந்த மரங்களை மீண்டும் நட்டால் வளருமா? வளராதா? என்று பட்டிமன்றம் நடத்தாமல் நம்மால் முடிந்த வரை விழுந்த மரங்களை எழுந்து நிறுத்துவோம் என்ற களப்பணியில் கடந்த சில நாளாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்.

விழுந்த மரம் எல்லாமே இறந்துவிடுவதில்லை, சில மரங்கள் ஒரு வருடம் ஆனால் கூட உயிரைவிடாமல் துடித்துக்கொண்டு இருக்கும் அந்த மரங்களை அடையாளம் கண்டு அவைகளுக்கு மருந்து சாத்தி உரிய இயற்கை உரங்களுடன் குழியில் நட்டால் மாண்டு போனதாக கருதப்படும் மரங்கள் நிச்சயம் மீண்டுவிடும். இதோ இந்த பெண்கள் பள்ளியில் புயலால் விழுந்த மரங்களை இரு வாரகாலத்திற்கு பிறகு இப்போது நட்டுள்ளேன். நீங்கள் இருபது நாள் கழித்துவந்து பாருங்கள் இந்த மரத்தில் சர்வ நிச்சயமாக இலைகள் துளிர்த்து மரம் உயிரத்து உங்களை வரவேற்கும் என்கிறார். 

இன்னமும் பூங்காக்களுக்குள்,அரசு அலுவலகத்திற்குள்,பொது வளாகத்திற்குள் விழுந்து கிடக்கும் மரங்களில் பல உயிரை பிடித்துக்கொண்டு இருக்கலாம், எனக்கு அனுமதி கிடைத்தால் அந்த மரங்களை எல்லாம் உயிர்பித்துவிடுவேன். ஆமாம் நீங்களே நடைபாதை வாசியாச்சே எப்படி இந்த மரத்திற்கான மருந்து மற்ற செலவுகளுக்கு சமாளிக்கிறீர்கள் என்ற போது என் தாயார் பாப்பாத்தி இந்த பகுதியில் வீடு வீடாக போய் பால் பாக்கெட் போடுகிறவர் எப்படியும்சிலர் பால் பாக்கெட் வேண்டாம் என்று சொல்லிவிடுவர் அந்த பாலை மருந்துக்கு பயன்படுத்திக்கொள்கிறேன்.

அதே போல என்னிடம் இலவசமாக மரக்கன்றுகள் வாங்கிக்கொண்டு போய் விளையாட்டாக வளர்க்க ஆரம்பித்து இப்போது அது வளர்ந்து தரும் சந்தோஷம் காரணமாக உனக்கு என்ன வேண்டும் என்று கேட்பார்கள். நான் மரம் வளர்க்க தேவையான மருந்து பொருளாக வாங்கிக்கொடுத்துவிடுங்கள் என்பேன் ஆகவே மரத்திற்கு தேவையான மருந்து செலவு இப்படித்தான் கிடைக்கிறது என்றார். என் மனைவி இருந்தவரை இலவச மரக்கன்றுகளை அவர்தான் தண்ணீர் ஊற்றி பராமரித்தார். இப்போது என் குழந்தைகள் தங்களுடைய இளைய குழந்தைகளாக எண்ணி மரக்கன்றுகளை வளர்த்து வருகின்றனர்.

ஏழை எளிய மக்கள் கூடுமிடமான அரசு பொது மருத்துவமனை, அரசுப்பள்ளி, பூங்கா போன்ற இடங்களில் மரங்களை மீண்டும் நடுவதற்கு கூப்பிடுங்கள் நான் வந்து சரி செய்துதருகிறேன், மரங்களை அறுப்பதற்கான ரம்பம் போன்றவைகளை வாடகைக்கு எடுக்க வேண்டியிருக்கிறது அந்த செலவுதான் சமாளிக்க முடிவதில்லை.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro