மதுரையில் ஒரு சின்ன (ட்ரம்ஸ்) சிவமணி
மழை பெய்யலாமா?வேண்டாமா?என யோசித்துக்கொண்டிருந்த ஒரு மாலை வேளை. மதுரை புத்தக திருவிழா மேடையில் ஸ்நார் ட்ரம்ஸ்,பேஸ் ட்ரம்ஸ்,கிம்பல்ஸ் என்று இருபத்தைந்திற்கும் மேற்பட்ட ட்ரம்ஸ் வாசிக்க தேவைப்படும் இசைக்கருவிகளை கொண்டுவந்து அடுக்கிக்கொண்டு இருந்தார்கள்.
சரி யாரோ ஒரு பெரிய ட்ரம்ஸ் இசைக் கலைஞர் ஒருவர் மேடை ஏறப்போகிறார் என்று ஆர்வத்தோடு ரசிகர்கள் எதிர்பார்த்து உட்கார்ந்தனர்.
ஆனால் வந்தது பெரியவரல்ல ஒரு சிறியவர், ஆம் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுவன் தீபக் ராம்ஜிதான் கையில் ட்ரம்ஸ் வாசிக்கும் ஸ்டிக்குகளுடன் வந்தார்.
சின்னதாய் அனைவருக்கும் ஒரு வணக்கம் போட்டுவிட்டு ட்ரம்ஸ் வாசிக்க இறங்கியவர் கேட்பவர்கள் அனைவரும் தாளமிட்டு கிறங்கிப்போய் கேட்குமளவிற்கு பிரமாதமாய் தொடர்ந்து 48 நிமிடங்கள் உற்சாகமாய் வாசித்தார்.
இது ராம்ஜிக்கு 75வது மேடை என்ற போது இன்னும் ஆச்சரியம் ஏற்பட்டது சமீபத்தில் மதுரை வந்திருந்த ட்ரம்ஸ் சிவமணி சிறுவன் ராம்ஜியை பாராட்டி நீ என்னைவிட பெரிய ஆளாய் வருவாய் என்று வாழ்த்தியிருக்கிறார்.
இந்த சின்ன வயதில் இந்த அளவு ட்ரம்ஸ் இசை வாசிப்பில் புகழ்பெற மிக முக்கிய காரணம் இவரது தந்தை ராமமூர்த்திதான். மகனுக்கு ட்ரம்ஸ் இசை வாசிப்பில் ஆர்வம் இருக்கிறது என்பது தெரிந்தத நாள் முதல் மகனுக்கு தோழனாய் துணை நிற்கிறார் கடந்த நான்கு வருடங்களாக தனது சக்திக்கு மீறி உழைப்பையும் பணத்தையும் செலவழித்து வருகிறார் காரணம் மகன் நாடு போற்றும் நல்லதொரு இசைக்கலைஞனாய் வரவேண்டும் என்பதற்காக.
மதுரையின் புகழ்பெற்ற ட்ரம்மரான மாஸ்டர் ராஜாவிடம் கடந்த நான்கு வருடங்களாக ட்ரம்ஸ் வாசிக்கப் பழகிவருகிறார் (லண்டன்)டிரினிடி இசையில் ஆறாவது கிரேடு தேர்வாகியுள்ளார் படிப்பு(மகாத்மா மாண்டிசெரிபள்ளி) பாதிக்க வகையில் தனியாகவும் குழுவாகவும் இதுவரை 75 முறை மேடைக் கச்சேரி வழங்கியுள்ளார் இந்த வருடத்திற்கான கலை இளமணி விருதிற்கு தேர்வாகியுள்ளார் மதுரை வந்த ட்ரம்மர் சிவமணி முன் வாசித்து பாராட்டைப் பெற்றது போல இசைப்புயல் ரஹமான் மற்றும் இசைஞானி இளையராஜா முன் வாசித்து பாராட்டுப் பெறவேண்டும் என்று விருப்பம் கொண்டுள்ளார் இவரது இசை தொடர்பான அனைத்து கனவுகளும் நனவாகட்டும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro