Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தண்ணீர் மனிதரை கண்ணீர் விடவைத்த வைகை.


கண்ணுக்கு எட்டிய துாரம் வரை வைகை வறண்டு கிடக்கிறது.

எவ்வித கூச்சமும் அச்சமும் இல்லாமல் மக்கள் திறந்துவிட்ட கழிவு நீர் சாக்டையாக நதியில் கலந்து கொண்டிருக்கிறது. 
அந்த நீரிலும் நிலத்திலும் எருமை மாடுகள் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கின்றன.

மணல் பரப்பு மறைந்து கற்கள் மட்டுமே துருத்திக்கொண்டு இருக்கின்றது.

இரு கரைகளையும் இணைக்கும் வகையில் வாகனங்கள் போய்வரும் தடங்கள் வைகை நதிக்கு போடப்பட்ட சூடு போல வரி வரியாக காட்சி தருகிறது.

எங்கே வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் குப்பை என்ற பெயரில் கொட்டலாம் கேட்பாருமில்லை அதை வாருவாருமில்லை.

பவுர்ணமி நிலவின் வெளிச்சத்தில் கரை தொட்டு ஒடும் பன்னீர் போன்ற நீரில் கோவலன் கண்ணகியுடன் படகில் மகிழ்ந்து பாடி பயணம் செய்ததாக சிலப்பதிகாரத்தில் புகழ்ந்து பாடிய வைகை நதியின் இன்றைய பரிதாபமான நிலை கண்களில் கண்ணீர் வரவழைக்க மையமண்டபம் நோக்கி சென்றேன்.

அங்கே இருபது முப்பது பேர் இருந்தனர். எல்லோரும் சேர்ந்து கையை உயர்த்தி காப்போம் காப்போம் வைகை நதியினை காப்போம்.  வளமையான வைகையை மீட்டெடுப்போம் என்று சத்தமாக கோஷமிட்டனர். இவர்களுக்கு மத்தியில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். அவர்தான் இந்தியாவின் தண்ணீர் மனிதர் என்று போற்றப்படும் டாக்டர் ராஜேந்திரசிங்.

யார் இவர்?

  

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் உள்ள தவுலா கிராமத்தில் ஜமீன் குடும்பத்தில் (1959) பிறந்தவர். தந்தை விவசாயி. ஆயுர்வேத மருத்துவராக கிடைத்த அரசுப்பணியை துறந்து மக்களின் முதல் தேவை தண்ணீர் என உணர்ந்து நீர் மேலாண்மையை கற்றார் பின் ராஜஸ்தான் சென்று தனது சொந்த முயற்சியால் 7 நதிகளை அழிவில் இருந்து மீட்டு வளமான நதியாக ஒடவிட்டார்.

மழைநீர் சேகரிப்புக்காக நாடு முழுவதும் 850 கிராமங்களில் 4,500 தடுப்பணைகளை கட்டியுள்ளார். 1,200 கிராமங்களை தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத பகுதிகளாக மாற்றி உள்ளார். இவரது வழிகாட்டுதலால் பல மாநிலங்களில் தண்ணீர் புரட்சி ஏற்பட்டு வறட்சி காணமால் போயுள்ளது.

இந்தியாவின் பாரம்பரிய நீர் சேகரிப்பு முறைகளை நவீன முறையில் செயல்படுத்தி சுமார் ஆயிரம் கிராமங்கள் பயன்படும் வகையில் குளங்களை சீரமைத்தார். நீர் வளத்தை இழந்து மடிந்து கொண்டிருந்த பல ஆறுகள் இவரது தீவிர முயற்சியால் புத்துயிர் பெற்றன. இதன் காரணமாக ராமன் மகசேசே விருது, ஜம்னாலால் பஜாஜ் விருது, நீர் மேலாண்மைக்கான நோபல் என குறிப்பிடப்படும் ஸ்டாக்ஹோம் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். தற்போது தேசிய கங்கைப் படுகை ஆணையத்தின் உறுப்பினராக செயல்படுகிறார்.

நீர் வளத்தைக் காக்கவும் மேம்படுத்தவும் ராஜேந்திர சிங் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கிறது. மண்வளத்தை மேம்படுத்துகிறது. நதிகளை அழிவில் இருந்து காப்பாற்றுகிறது.வன விலங்குகள் வாழ வழி செய்கிறது, வழிமுறைகள் எளிமையானது, சிக்கனமானது என்று புகழாரம் சூட்டி உலகை காப்பாற்றும் ஐம்பது மனிதர்களில் இவரும் ஒருவர் என 'தி கார்டியன்' பத்திரிகை இவரை தேர்வு செய்து பெருமைப் படுத்தியுள்ளது.



இத்தகைய பெருமைக்குரியவரான ராஜேந்திர சிங் எவ்வித அரசியல் ஆடம்பர அடையாளங்கள் இல்லாமல் மிக எளிமையாக சமூக நல ஆர்வலர்களுடன் கைகோர்த்துக் கொண்டு கோஷம் போட்டுக் கொண்டு இருந்தார்.

அவர் பேசுகையில்

இருபது சதவீதம் மழை பெய்யும் ராஜஸ்தானில் ஆறுகளில் தண்ணீரை ஒடவிடும்போது எண்பது சதவீதம் மழை பெய்யும் தமிழகத்தின் ஆறுகள் வறண்டு கிடப்பது வியப்பாகவும் வேதனையாகவும் கண்ணீரை வரவழைப்பதாகவும் இருக்கிறது.

ஆறு குளங்கள் போன்ற நீர் நிலைகள் தாய்க்கும் மேலாக போற்றப்படவேண்டும் கடவுளுக்கும் மேலாக வணங்கப்பட வேண்டும். ஆனால் இங்குள்ள நீர் நிலைகளின் நிலமை நேர்மாறாக இருக்கிறது.எத்தனையோ தலைமுறையை வாழவைத்த நீர் நிலைகள் இன்னும் பல தலைமுறையை வாழவைக்கவேண்டாமா.

இது எந்த தனிமனிதராலும் சாத்தியமாகாது ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும். ஒரே இரவில் மாறிவிடாது குறைந்தது 12 ஆண்டுகள் அனைவரும் ஒன்று கூடி உழைத்தால் ஒத்துழைத்தால் நிச்சயம் நீங்கள் உங்கள் பழமையான பராம்பரியமான வைகையை மீட்டெடுக்க முடியும் உங்கள் தாயும் தந்தையும் தாத்தாவும் பாட்டியும் குளித்து குதுாகலித்தது போல நீங்களும் குளித்து மகிழலாம். எங்கேயோ பிறந்து இங்கே இருக்கும் நமக்காக நமது தலைமுறைக்காக நீர் நிலைகளை மேம்படுத்த வேண்டும் என்று சுருக்கமாகவும் உருக்கமாகவும் பேசி அனைவருடனும் சேர்ந்து உறுதி மொழி எடுத்து ஒரு உத்வேகத்தை தந்துவிட்டு சென்றுள்ளார் ராஜேந்திரசிங்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro